கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 13, 2025
பார்வையிட்டோர்: 5,557 
 
 

(1951ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6

1. கல்யாணப்பித்து

“அப்பா! அப்பா!” என்று அழைத்துக் கொண்டே ஒடிவந்தாள் குந்தளம். அவள் உடலெல்லாம் ஒரே புழுதி. தெருவில் குதித்து விளையாடி புழுதியை வாரிப்பூசிக் கொண்டு வந்திருக்கிறாள். 

‘ஏனம்மா இறைக்க இறைக்க ஓடிவருகிறாய்? இப்பொழுதுதானே குளித்துப் புதுப் பாவாடை கட்டிக் கொண்டு போனாய்? இப்படியா தெருப் புழுதியையெல்லாம் உடம்பில் வாரிப் பூசிக்கொண்டு வருவது?’ 

‘அதெல்லாம் கிடக்கட்டுமப்பா! நான் அத்தான் சுந் தரத்தைக் கல்யாணம் பண்ணிக் கட்டுமாப்பா? சரின்னு சொன்னாத்தான்!’ என்று சிறுமி குந்தளம் தனது தகப் பனார்.பாஸ்கரய்யரின் தோட்களைப் பற்றிக்கொண்டே கொஞ்சிக்கொஞ்சி வினவினாள். 

கல்யாணம் என்ற வார்த்தை அய்யருக்கு தூக்கி வாரிப் போட்ட மாதிரி யிருந்தது. சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த அவர் ஆணி வைத்து அறைந்தது போல அப்படியே ஸ்தம்பித்துப்போனார். விபரம் அறியாக் குழந்தையான குந்தளத்தினிட மிருந்து இத்தகைய வார்த்தையை அவர் எதிர்பார்க்கவேயில்லை. 

‘ஏனப்பா பதில் சொல்லமாட்டேங்கரே! அடுத்தாத்து மாலதிக்கு மட்டும் இன்னிக்கு கல்யாணமாமே! அதோ பார், மேளம் ‘பீப்பீ’ எல்லாம் வாசிக்கிறது! எனக்கும் அது மாதிரி மேளமெல்லாம் கொட்டி கல்யாணம் பண்ணி வைக்கமாட்டியா!’ 

குந்தளத்துக்கு என்ன பதில் சொல்லுவதென்று அய்யருக்குத் தோன்றவில்லை. குழந்தை பார்த்துவிடப் போகிறாளே என்று பயந்து முகத்தை ஒரு பக்கமாகத் திருப்பி கண்ணீரைத் துடைத்துக் கொண்டார். 

ஆனால் குந்தளமா அவரை இலேசில் விடுகிறவள்? 

‘ஏனப்பா ஒண்ணுமே சொல்லமாட்டேங்கரே? மாலதி மட்டும் ஒசத்தியாக்கும்! அவளைப்போலே நானும் நன்ன பாடமாட்டேனோ? கணக்கிலேகூட அவளைவிட நான் தானப்பா ஜாஸ்தி மார்க்கு வாங்கினேன் பள்ளிக்கூடத்தில்! மாலதியை விட நான் இன்னும் நன்னா நலங்கிடுவேனே! எனக்கு ஒண்ணுமே தெரியாதுன்னு நினைச்சுண்டிருக்கா இந்த அசட்டு அப்பா! இதோ இப்ப உனக்கு நலங்கிட்டு காட்டறேன் பார்க்கரையா? நன்னா இட; தெரிஞ்சால் கல்யாணம் பண்ணி வை! இல்லாட்டால் வேண்டாம், சரியாப்பா?’ 

குந்தளத்தின் ஒவ்வொரு வார்த்தையும் கூர்மையான வாள்கொண்டு அறுப்பதுபோல் அய்யரின் நெஞ்சத்தை அறுத்தன. கொலையை விட இன்னும் பெரிய குற்றம் செய்தவரைப்போல சப்த நாடிகளும் ஒடுங்கிப் போனார். குந்தளத்தின் முதுகில் தட்டி கன்னத்தில் ஒரு முத்தமிட்டு ஏதோ சொல்லுவதற்கு வாயெடுத்தார். அதற்குள் குந்தளம் மடமடவென்று பேசிக்கொண்டே போனாள். 

‘போப்பா! உனக்கு முத்தமிடவே தெரியலை! அத்தான் சுந்தரம் கொஞ்சம்கூட குத்தாமே வலிக்காமே எவ்வளவு நன்னா முத்தம் குடுப்பான் தெரியுமா? நான் அவனையே கல்யாணம் பண்ணிக்கட்டுமாப்பா? சரின்னு சொல்றையா, மாட்டியா?’ என்று தொனி மாறிப் பிடிவாதத்தில் ஆரம்பித்தாள் குத்தளம். 

அதற்குமேல் மௌனம் சாதித்தால் என்ன நடக்கு மென்பது அய்யருக்குத் தெரியும். கிராமபோன் பிளேட்டு வைத்தமாதிரி குந்தளம் அழ ஆரம்பித்துவிட்டால் இலேசில் அவளைச் சமாதானப் படுத்த முடியாது. ஷேட்டுக்கடைப் பக்ஷணம் ஒரு செட்டு வரவேண்டும். அதையும் சுந்தரம் கொடுத்து விளையாட்டுக்காட்டி குந்தளத்தின் அழுகையை நிறுத்துவதற்குள் வீட்டில் எல்லோருக்கும் வியர்த்து விறு விறுத்துவிடும். 

‘இருந்தாலும் பெண்ணாய்ப் பிறந்தவளுக்கு இத்தனை பிடிவாதமும் மூர்க்கத்தனமும் கூடவே கூடாது! தங்கப் பவுனைப் பார்த்து அய்யாவுக்கு மோதிரமாகு, சங்கிலியாகு, என்றால் தானே ஆகிவிடுமா? அதை உருக்கி, அடித்து நீட்டி, வளைத்துத்தானே மோதிரமாயும் சங்கிலியாயும் செய்யணும்? பெண்களும் அப்படித்தான்! சிறு வயதிலேயே அடித்து பயமுறுத்தி வளர்க்காமல் தான்றோன்றியாக வளர விட்டால் அடக்கமும் நல்ல குணமும் வயசு காலத்தில் எப்படி திடீரென்று வரும்?’ 

பாஸ்கரய்யர் தங்கை அம்புஜம் பொழுதுபொழுதாக இப்படி சொல்லுவாள். ஆனால், அவள் வார்த்தையை அய்யர் காதில் போட்டுக்கொள்வதேயில்லை. குந்தளத்தைப் பார்க்கும் பொழுதெல்லாம் ஏன், அவளைப்பற்றி நினைக்கும் பொழுதெல்லாம்கூட பயங்கரமான, மன்னிப்பே இல்லாத பெருங் குற்றம் செய்து விட்டவரைப்போல அவர் குன்றிப் போவார். அந்தக் குழந்தையை ‘சீ’ யென்று று ஒரு வார்த்தை அதட்டிப் பேசவும் அவருக்கு தைரியமில்லை ; தைரியமிருந்தாலும் உரிமையிருப்பதாக அவர் நினைக்கவில்லை. 

‘சுந்தரம் அத்தான் இருக்கான் பாரு அப்பா, அவன் எங்கிட்ட எத்தனை பிரியமாயிருக்கான் தெரியுமா ? நேத்திக்கு நீ அவனுக்கு நாலு பிஸ்கோத்து கொடுத்தியே, அதில் மூணு பிஸ்கோத்தை எனக்குக் கொடுத்துட்டானப்பா! நான் அவனையே கல்யாணம் பண்ணிக்கப்படாதா? ஊம்னு சொன்னாத்தான்!’ 

குந்தளம் இப்படிப் பிடிவாதமாக மறுபடி தொந்தரவு செய்யவும் அய்யர் தன்னை சமாதானம் செய்து கொண்டு ‘உனக்கு இனிமே கல்யாணம், கார்த்திகை ஒண்ணுமே கிடையாதம்மா! ஏற்கனவே கல்யாணம் நடந்து உன் புரு ஷன் சுவர்க்கலோகத்துக்குப் போய்விட்டான்!’ என்று தழு தழுத்த தொனியில் சொன்னார். 

‘சொர்க்கலோகத்துக்குப் போய்ட்டானா? அங்கே என்ன ப்பா செய்றான் ? நான் அவனைப் பார்த்ததேயில்லையே ! நாம்ப எல்லோருமா சொர்க்கத்துக்குப்போய் அவனை கூட்டிண்டு வந்திடுவமா? கொஞ்சம் இரு அப்பா, சுந்தரம் அத்தானையும் அழைச்சுண்டு வரேன். எல்லோருமா சேர்ந்துபோகலாம்!’ 

இப்படி சொல்லிவிட்டு குந்தளம் அத்தானை தேடிக் கொண்டு ஒரே ஒட்டமாக மேல்மாடிக்கு ஓடினாள். அப்பொழுது சுந்தரம் பள்ளிக்கூடப் பாடங்களைப் படித்துக்கொண்டிருந்தான். குந்தளம் அவன் கையிலிருந்த புத்தகத்தைப் பிடுங்கி வைத்துக்கொண்டு ‘நாங்களெல்லாம் இப்ப சொர்க்கத்துக்குப் போகப்போறோம் ! நீயும் வரையா இல்லையா?’ என்றாள். 

சுந்தரத்துக்கு தலை கால் புரியவில்லை. 

‘அட அசடே! சொர்க்கத்துக்காவது நாமெல்லாம் போவதாவது! அங்கே ஒருவரும் போகமுடியாது குந்தளம்!” 

‘போ அத்தான் பொய்யும் புளுகும் சொல்றே! ஒத்தருமே போகமுடியாதுன்னா என் புருஷன் மட்டும் எப்படிப் போனானாம்! அவனை அழைச்சுண்டுவர அப்பா, அத்தை, நான் எல்லாரும் போகப்போறோம்! நிஜமாய்த் தான் அத்தான்! அப்பாவை வேணும்னா கேட்டுப்பாரு!’ 

‘சரி நீ போ, நான் பின்னால் வரேன்!’ என்று சொல்லி சுந்தரம் தட்டிக்கழித்துவிட்டான். 

குந்தளம் மறுபடியும் தகப்பனாரிடம் வந்து உடனே சொர்க்கத்துக்குப் புறப்பட்டால்தான் ஆச்சு என்று அரித்துப் பிடுங்க ஆரம்பித்தாள். இந்த அரிப்பு வழக்கம்போல அழுகையில் வந்து முடிந்து, வீடு அல்லோலகல்லோலப் பட்டது. அத்தை தன்னுடைய பழைய புராணத்தைப் படிக்க ஆரம்பித்தாள். சுந்தரம் நயமாகப்பேசி அழுகையை நிறுத்த முயற்சித்தான். 

‘அட அசடே! உனக்கு கல்யாணமும் ஆகலை, உன் அத்துக்காரர் சொர்க்கத்துக்குப் போகவும் இல்லை! அப்பா சும்மா விளையாட்டுக்குன்னா சொன்னார்! அசடுமாதிரி அழறது பார்த்தையா? எங்கே சிரி கொஞ்சம். சிரியேன் பார்க்கலாம்!’ 

‘அப்படின்னா அப்பா சொன்னதெல்லாம் பொய்யா?’ 

‘ஆமாம்! நிஜம்னு நினைச்சுட்டியா என்ன? சொர்க்கம், நரகம் என்று சொல்லுவதெல்லாமே சுத்தப் பொய்தான் குந்தளம்? அப்பா உனக்கு வேடிக்கையாகத்தான் சொன்னார்! அசடுமாதிரி அங்கே போகணும்னு அழக் கிளம்பிட்டையே! எங்கே கொஞ்சம் சிரியேன் பார்க்கலாம்!’ 

விம்மல் நிற்காமலே கன்னங்களின் வழியாகக் கண்ணீர் வழிய மெதுவாகச் சிரித்தாள் குந்தளம். 

‘அழுத பிள்ளை சிரிக்குமாம், கழுதைப்பாலைக் குடிக் குமாம்!’ என்று கேலியாக ராகம் வைத்தவண்ணம் குந்தளத்தைத் தரதரவென்று இழுத்துக்கொண்டு விளையாடப் போய்விட்டான் சுந்தரம். 

இந்தக் காட்சி முழுவதையும் பாஸ்கரய்யர் மௌனமாக, ஆடாமல் அசையாமல் பார்த்துக்கொண்டிருந்தார். அம்புஜமும் பார்த்துக்கொண்டுதானிருந்தாள். ஆனால், இருவர் மனமும் வெவ்வேறு விதமாக வேலை செய்தன. 

இந்தச் சம்பவம் நடந்தபொழுது குந்தளத்துக்கு சுமார் ஏழு வயதிருக்கும். சாதாரண மனித பாஷையிலே அவள் ஒரு விதவை. பட்டர் ஜாதியிலே ஆறேழு வயதுச் சிறுமி விதவையாவதென்பது ஒரு ஆச்சர்ய சம்பவமில்லை. சைவ பட்டர்களிலும் வைஷ்ணவ பட்டாச்சாரியார்களிலும் தொட்டிலில் கிடக்கும் குழந்தைகளுக்குக்கூட கல்யாணம் செய்துவைத் துவிடுவார்கள். கும்பகோணத்தில் ஹரி ஹர பட்டரென்று சொன்னால் சப் கலெக்டர் முதல் மளிகைக் கடைக்காரன் வரையில் அத்தனை பேர்களும் ‘தங்கமான மனுஷன்’ என்று ஒரு முகமாகச் சொல்லுவார்கள். ஸ்வாமி தரிசனத்துக்கு வரும் கிழவிகளை ஒருவிதமாகவும் குமரிகளை இன்னொருவிதமாகவும் நடத்தாமல் எல்லோரையும் ஒரே விதமாக நடத்துவதென்றால் பட்டர், பட்டாச்சாரிகளின் கூட்டத்திற்கே இது ஒரு பெரிய விதிவிலக்கல்லவா? 

ஏழை, பணக்காரன், ஆண், பெண், வயோதிகர், இளை ஞர், பிராமணர், வேறு குலத்தவர். முதலிய எவராயிருந்தாலும் ஆலயத்தில் ஸ்வாமி தரிசனத்துக்கு வருபவர்கள் வரிசைக்கிரமமாகவே கர்ப்பக்கிரகத்துக்கு வந்தாகவேண்டும். ஹரிஹரபட்டர் பிரதம பட்டராயிருக்கும் கோவிலில் சலுகை என்ற வார்த்தைக்கு இடம் கிடையாது. இதனால்தான் பொதுஜனங்களிடையே அவருக்கு அவ்வளவு மதிப்பும் செல்வாக்குமிருந்தது. 

ஹரிஹர பட்டருக்கு 20 வேலிக்குடித்தனம். பரம்பரையாகவே அவர் பெரிய பணக்காரர்; அறிவாளி; சாஸ்திர விற்பன்னர்; அதோடு உலகப்போக்கை ஓரளவு அனுசரித்து நடப்பவருங்கூட. குடும்பத்தில் வம்ச பரம்பரையாக வந்த தொழிலை விட்டுவிடக்கூடா தென்பதற்காகவே அவர் கோவில் பூஜையை வைத்துக் கொண்டிருந்தாரே தவிர வருமானத்தை எண்ணியல்ல. 

‘நான் ஒருவன் மட்டும் இல்லாவிட்டால் இந்தக் கோயில் குட்டிச்சுவராய்ப் போயிருக்கும்!’ என்று அவர் அடிக்கடி பெருமையாகச் சொல்லிக்கொள்ளுவதுண்டு. அது வீண் பெருமையுமில்லை. கோவிலில் உள்ள கடவுளின் நன்மையை யும் அவரை நாடிவரும் பக்தர்களையும் உத்தேசித்தாவது ஹரிஹர பட்டர், நீடூழி வாழவேண்டுமென்று பெரும்பாலோர் பிரார்த்தித்தனர். 

மூப்பும், மரணமும், பிரார்த்தனைகளில் ஏமாந்து விடுவதில்லை.  

ஹரிஹர பட்டருக்கு பக்தகோடிகளின் பிரார்த்தனை பலமும், ஆசீர்வாத பலமும் ஒருபுறமிருக்க, கோவிலில் உள்ள சிலையைக் கண்கண்ட தெய்வமென்று ஜனங்கள் கொண்டாடியதற்கே அவருடைய பரிசுத்த பூஜா நியதிகள்தான் மூலகாரணமாயிருந்தன. அந்த கண்கண்ட தெய்வத்திற் காவது நன்றி இருந்ததா? எல்லா மனிதர்களுக்கும் வரும் சாவு ஹரிஹர பட்டருக்கும் வந்துவிட்டது! 

ஹரிஹரருக்கு ரகுபதி என்று ஒரே பிள்ளை. அப்பொழுது அவனுக்கு ஒன்பது வயதிருக்கும். பட்டர் இறந்ததும் அவருடைய தம்பி சந்தானசர்மா ரகுபதியின் சொத் துக்களை நிர்வகித்துக்கொடுக்க வீட்டோடு வீடாக வந்து சேர்ந்தார். ரகுபதி சிறுவனென்றாலும் தகப்பனாரின் சிட்சையில் பூஜாமந்திரங்களை யெல்லாம் உருப்போட்டுவைத் திருந்தான். ஆயினும் கல்யாணமாகாத பிரம்மச்சாரி கோவில் பூஜைகள் செய்யக்கூடாதென்பது ஒரு கண்டிப்பானவிதி. இதை உத்தேசித்து ரகுபதிக்கு எப்படியாவது ஒரு பெண்ணை முடிச்சுப்போட்டுவிட சந்தான சர்மா முயற்சித்தார். பக்கத்து வீட்டுபாஸ்கரய்யர் பெண் குந்தளத்தின் மீது அவர் திருஷ்டி விழுந்தது. 

‘குழந்தைக்கு நான்கு வயதுகூட சரியாக முடிய வில்லையே அதற்குள்ளாகவா கல்யாணம்! பத்து வயதாவது ஆகட்டும். பிழைத்துக்கிடந்தால் பிறகு பார்த்துக்கொள்ளலாம்’ என்று சொல்லிப்பார்த்தார் பாஸ்கரய்யர். 

‘என்ன ஸ்வாமி விஷயம் தெரியாமல் பேசுகிறீர்! இன்று கோவிலில் வேறொருவனைக் கொண்டுவந்து வைத்து விட்டு ஐந்தாறு வருஷம் கழித்து போ என்றால் போவானா? கோவிலில் தனக்கும் பாத்யதை உண்டென்று வியாஜ்ஜியம் போடுவான். கோர்ட்டில் போய் இழுத்துக்கொண்டு நிற்கவேணும் பிறகு! கோவில் நிலம் ஐந்தாறுவேலியைத் தான் விடுவானேன்? ஒன்றுக்கும் யோசிக்காதேயும்! இப்பவே ஒரு கல்யாணத்தைப்பண்ணி ரகுபதியை கோவிலுக்கும் வாரிசாக்கிவிட்டால் அந்த சொத்தும் பிறகு நம் குழந்தைகளுக்குத்தானே?’ என்று வாதம் செய்தார் சர்மா. 

அது ஒரு விதத்தில் நியாயமாகவே தோன்றியது பாஸ்கரய்யருக்கும. காலதாமதமில்லாமல் அடுத்த முகூர்த்தத்திலேயே ரகுபதிக்கும் குந்தளத்துக்கும் கல்யாணம் நடந்து விட்டது. 

ரகுபதி சம்பந்தப்பட்டவரையில் அந்தக் கல்யாணம் அவனுக்கு காலனை அழைக்கும் சடங்காகவே முடிந்தது. இரண்டு மாதங்களுக்குப்பின் ஆடிமாதம் காவேரிநதி கரை புரண்டோடும்பொழுது பதினெட்டாம் பெருக்குக்கு புளியஞ்சாதம், தயிர்சாதம், பொங்கல் முதலிய பலவகை உண் டிகளுடன் உற்றார் உறவினர்களோடு அவன் நதிக்கரைக் குப் போனான். போனவன் போனவன்தான்; திரும்பவே யில்லை. தகப்பன் பக்திபரவசத்துடன் பல வருடகாலம் செய்த பூஜைகளுக்கு பிரதியுபகாரமாக அந்தக் கோவில் தெய்வம் காவேரியம்மனுடன் ரகுபதியையும் ஐக்கியப்படுத்தி விட்டது! 

ரகுபதியின் அகால மரணத்தைக் கேட்டு ஊரே கண்ணீர் வடித்தது. பாஸ்கரய்யர் புழுவாய்த் துடித்துப்போனார். ‘கோவிலில் இருப்பது கடவுளில்லையடா, கல்லு, வெறும் பாராங்கல்லு’ என்று சபித்தனர் பலர் அனுதாப மேலீட்டினால்! ஆனால் அந்தக் கோவிலில் ஜனங்கள் விளக்கேற்றாம லிருந்துவிட்டார்களா? அல்லது பாஸ்கரய்யர்தான் துக்கத்தில் உயிரை விட்டுவிட்டாரா? இரண்டுமில்லை! 

ரகுபதி அத்தான் விளையாடுவதற்கு வரவில்லையே என்று குந்தளம் ஏங்கிப்போனாள். எப்பொழுதாவது அவளை வெளி யில் கண்டால் ‘இதோ இந்த மூதேவியின் கிரஹதோஷம் தான் ஹரிஹர பட்டரின் குடும்பத்தையே நிர்மூலமாக்கி விட்டது!’ என்று தெருவிலுள்ளவர்கள் ஏச ஆரம்பித்தனர். ‘சின்னஞ்சிறு குழந்தை விதவையாகிவிட்டதே’ என்று அனுதாபப்படுவார் ஒருவருமில்லை. குந்தளத்தின் வாழ்க் கையில் இப்படிப் பெரிய இடி விழுமென்று தெரிந்துதானோ என்னவோ அவள் பிறந்த எட்டாவது மாதத்திலேயே தாயார் பரலோகப்பிராப்தியடைந்து விட்டாள். ஊராரின் ஏச்சையும் பேச்சையும் பொறுக்கமுடியாமலும் குந்தளத்தின் வாழ்க்கையையே அடியோடு வேறுதிசையில் திருப்ப வேண்டு மென்பதற்காகவும் பாஸ்கரய்யர் கும்பகோணத்துக்கு ஒரு முழுக்குப்போட்டுவிட்டு திருச்சினாப்பள்ளியில் குடியேறினார். அவருடைய தங்கை அம்புஜம் ஒரு பால்ய விதவை. தன் ஒரே குழந்தை சுந்தரத்துடன் விளநகர் கிராமத்தில் அவள் வசித்துவந்தாள். அவளையும். பாஸ்கரய்யர் திருச்சிக்கு அழைத்து வைத்துக்கொண்டார். 

ரகுபதி அத்தானை இழந்தது குந்தளத்துக்கு முதலில் ஒரு மாதிரியாயிருந்த தென்றாலும் சுந்தரம் வந்தது முதல் ரகுபதியை அடியோடு அவள் மறந்துவிட்டாள். அவர்களிருவரும் சேர்ந்து ஓடியாடி விளையாடுவதைப் பார்க்கும் பொழுதெல்லாம் பாஸ்கரய்யர் மனம் வெதும்பும். சிற்சில சமயங்களில் குந்தளம் விஷயமறியாமல் கேட்கும் கேள்வி கள் ‘அடபாபி! என்வாழ்வைப் பாழ்படுத்திவிட்டாயே!’ என்று சபிப்பதுபோலவுமிருக்கும். 

இப்படி யே மேலும் இரண்டு வருடங்கள் கழிந்தன. இதற்கிடையில் அம்புஜத்தின் தூண்டுதலின் பேரில் சந்தான சர்மா மீது வியாஜ்ஜியம் போட்டு ரகுபதியின் சகல சொத்துக்களையும் குந்தளத்துக்காக ஐயர் ஸ்வீகரித்துக் கொண்டார். ரொக்கமாக பத்து லட்ச ரூபாயும் 20 வேலி நிலமும் மூன்று தலைமுறைகளுக்குப் போதும்படியான வெள்ளி, பித்தளைப் பாத்திரங்களும் கிடைத்தன. ஐயர் தம்முடைய சொந்த சொத்துக்களையெல்லாம் சுந்தரத்துக்கு எழுதி வைத்தார். இதில் அம்புஜத்திற்கு பரம திருப்தி. இப்படி ஏராளப் பணமிருந்தும் சீரழிந்து லக்ஷ்மி கடாக்ஷமின்றி நடந்தது அந்தக்குடும்பம். 

நிற்க, அடுத்தவீட்டுப்பெண் மாலதிக்குக் கல்யாணம் வந்தாலும் வந்தது குந்தளத்துக்கு கல்யாணப்பித்து தலைக் கேறிவிட்டது. கல்யாணமென்றால் என்ன? எதற்காக கல்யாணம் செய்துகொள்ளவேண்டும்? என்பதைப்பற்றியெல்லாம் அவளுக்குக் கவலையில்லை. மாலதி மாலையிட்ட மாதிரி தானும் மாலையிடவேண்டும்; அவளைப்போலவே தானும் நலங்கிடவேண்டும்; அவள் ஒருவனுடைய கையைப் பிடித்துக்கொண்டு அக்னிகுண்டத்தைச் சுற்றிவந்தது போலவே தானும் சுந்தரத்தின் கையைப்பிடித்துக்கொண்டு சுற்றிவரவேண்டும். அவளுடைய கற்பனையில் கல்யாணம் இந்த இரண்டு மூன்று விஷயங்களில் அடங்கிவிட்டது! 

அன்றிரவு சாப்பாடு முடிந்து படுக்கப்போவதன் முன்னால் குந்தளம் கேட்டாள்: ‘ஏன் அப்பா எனக்கும் சுந்தரத்துக்கும் மாலதியாத்திலே நடந்த மாதிரி கல்யாணம் பண்ணிவைக்க மாட்டேங்கறே! அத்தான் ரொம்ப நல்லவன்! என்னை அடிக்கவே அடிக்கமாட்டான்!’ 

குந்தளம் மறுபடியும் பிடிவாதத்தில் இறங்கிவிடுவாளோ என்று பயந்த பாஸ்கரய்யர் ‘ஆகட்டும் அம்மா; பொழுது விடியட்டும், கல்யாணம் பண்ணிவைச்சுட்றேன். இப்ப தூங்கு!’ என்று ஒருவிதமாக சமாதானப்படுத்தி உறங்க வைத்தார். 

விடியற்காலை நான்கு மணியிருக்கும். குந்தளம் குய்யோ முறையோ என்று அலறிக்கொண்டு எழுந்தாள். பூச்சி ஏதாவது கடித்திருக்குமோ என்று பயந்து ஐயரும் அம்புஜமும் அலறிப் புடைத்துக்கொண்டு ஓடிவந்தார்கள். குந்தளம் போட்ட சப்தத்தில் அயர்ந்து உறங்கிய சுந்தரம்கூட விழித்துக்கொண்டுவிட்டான். 

ஐயர் குந்தளத்தைத் ‘தூக்கி மடியில் வைத்துக்கொண்டு அழாதேயம்மா! ஏதாவது கெட்ட சொப்பனம் கண்டாயா? ஐயோ பாவமே! இப்படி கேவிக்கேவி அழறதே, குழந்தை! பிஸ்கோத்து கொண்டுவரச் சொல்லட்டுமா? அம் புஜம், நீ தான் போய் அலமாரியைத் திறந்து இரண்டு பிஸ்கோத்து கோண்டுவாயேன்!’ என்று என்னென்னவோ சொல்லி சமாதானப்படுத்த முயற்சித்தார். 

‘பிஸ்கோத்தும் வேணாம்; ஒண்ணும் வேணாம் போ! ஊம்….. ஹும்……..!’ 

‘பின்னே என்ன வேணும்? சொல்லாமல் அழுதால் எனக்கு எப்படியம்மா தெரியும்?’ 

‘அப்படின்னா நீ ஏன் மாட்டவே மாட்டேன்னியாம்!’

‘நீ என்ன கேட்டாய், நான் என்ன தரமாட்டேன்னு சொன்னேன்?’ 

‘நான் சுந்தரம் அத்தானை ஏன் கல்யாணம் பண்ணிக் கக்கூடாதுன்னே?’ 

‘அட கடவுளே! சொப்பனத்திலும் இந்த ஞாபகம் தானா என்ன சோதனை இது! குந்தளம், நீ சமத்தோனோ, அழாமே படுத்துக்கோ பொழுது விடிஞ்ச உடனே கல்யாணம் பண்ணி வைச்சுட்டு மறுவேலை பார்க்கிறேன்!.’ 

‘ஊஹும், முடியாது. இப்பவே பண்ணால்தான்!’

‘ரொம்ப அழகாயிருக்கு நீயும் உன் குழந்தையும்! யாரு காதிலேயாவது விழுந்தால் சிரிக்கப்போறா! பொண்ணாம் பொண்ணு, நல்ல பொண்ணு! முதுகிலே நாலு வைச்சு படுக்கச் சொல்றதைவிட்டு கொஞ்சு கொஞ்சுன்னு கொஞ்சுரான் பாரு! பாஸ்கரா ! முளையிலே அடக்கி வளர்க் காவிட்டால் பிறகு என்ன ஆகிவிடும் தெரியுமோன்னா? அதைத்தான் நான் சொல்லுவானேன்; அருமைப் பெண்ணைக் கண்டால் கரிக்கிறாளென்று நீ நினைத்துக் கொள்ளுவானேன்?’ என்று முணுமுணுத்தாள் அம்புஜம். 

அத்தையின் கண்டிப்பு குந்தளத்தின் அழுகையை மேலும் அதிகரித்தது. இந்த அமர்க்களத்தில் சுந்தரமும் அங்கு வந்து குந்தளத்தை சமாதானப்படுத்த முயற்சித்தான். ஊஹும்! குந்தளத்தின் அழுகை ஸ்தாயி உயர்ந்து கொண்டே போயிற்றே தவிர குறைவதாகக் காணோம். 

‘உடம்பெல்லாம் வியர்த்துத் தண்ணியாய் ஒட்ரதே யம்மா! இப்ப என்னதான் செய்யணும்னு சொல்லேன்!’ என்று அழாக் குறையாகக் கேட்டார் ஐயர். 

‘இப்பவே இங்கேயே கல்யாணம் பண்ணிவை!’ 

‘சரி ஆகட்டும்! அழுகையை நிறுத்து! டேய் சுந்த ரம், அந்தப் படத்திலே போட்டிருக்கு பார் கடுதாசி ரோஜாப் பூமாலை, அதையும் பக்கத்து படத்திலிருப்பதையும் கழட்டிக்கொண்டுவா! நீ எழுந்து இப்படி கீழே உட்கார் குந்தளம்!’ 

‘மேளமும் பீப்பீயும் எங்கேயாம்! அது இல்லாமலே எப்படி கல்யாணம் ஆகும்?’ 

‘அட பாழாய்ப்போற தெய்வமே ஏண்டாப்டா இப்படிப் போட்டு வதைக்கிறாய்? இந்த நேரத்தில் மேளத்துக்கு எங்கேயம்மா போவது?’ 

‘நான் மேளம் நாயனம் எல்லாம் கொண்டுவாரேன் எசமான்! அடுத்த ரூமிலே மேளம் வாசிப்பாங்க இங்கே கல்யாணம் நடக்கட்டும்!’ என்று வீட்டு வேலைக்காரன் முனிசாமி சொல்லிவிட்டு ஐயர் காதில் என்னவோ ரகசியமாகக் கூறினான். பிறகு அவன் பக்கத்து அறைக்குப் போய் நாயனக்கச்சேரி கிராமபோன் பிளேட் ஒன்றை வைத்ததும் குந்தளத்தின் முகம் மலர்ந்தது. பாஸ்கரய்யர் சுந்தரத்தை யும் குந்தளத்தையும் உட்காரவைத்து மாலை மாற்றச் சொன்னார். அந்தக் காட்சியைப்பார்த்து அம்புஜம் சொல்ல முடியாமல் தனக்குள் முணுமுணுத்துக்கொண்டாள். சுந்தரமும் குந்தளமும் சிறிதுநேரம் கல்யாண விளையாட்டு விளையாடி விட்டு மாலையோடு அப்படியே தரையில் படுத்து தூங்கி விட்டார்கள். பாஸ்கரய்யர் அவர்கள்மீது வைத்த கண்ணை எடுக்காமல் பிரமை பிடித்தவர் மாதிரி பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார். பின் கட்டில் வேலைக்கார முனிசாமியும் பாக்கிநேரத்தை தூங்காமலே கழித்தான். 

பாஸ்கரய்யருக்கு மறுநாள் காலை ஒன்பது மணிக்குத் தான் பொழுது விடிந்தது. ‘ஏண்டாப்பா இப்படிப் பேயடித்தவன் மாதிரி பிரமை பிடித்து படுத்திருக்கே! பல் தேய்த்து காப்பி கீப்பி சாப்பிடவேண்டாமா?’ என்று அம்புஜம் வந்து கேட்டபொழுதுதான் பொழுது விடிந்துவிட்டதை அவர் அறிந்தார். முந்திய நாள் சம்பவம் அவருக்கு ஒரு பயங்கரமான உண்மையை உணர்த்தியது. குந்தளதுக்கும் சுந்தரத்துக்குமிடையில் வளர்ந்து வரும் பரஸ்பர பாசத்தை இப்பொழுதே கிள்ளி எறிந்துவிடாவிட்டால் பிறகு விபரீதமாகி விடுமென்ற எண்ணம் அவருக்கு உதயமாயிற்று. 

அம்புஜமும் இப்படியே நினைத்தாள். இருவர் மனதிலும் ஒரு புதிய கவலை தோன்றி படிப்படியாக வளரத் தொடங்கியது. அதற்கு இருவரும் இரண்டு விதமான பரிகாரங்களைத் தேட தனித்தனியே தீர்மானித்துக்கொண்டனர். பிறகு நடந்த சில சம்பவங்கள் அவர்களுடைய கவலையைப் பீதியாக மாற்றிவிட்டன. அய்யர் மூளை அதி தீவிரமாக வேலைசெய்ய ஆரம்பித்தது. 

சில தினங்களுக்குப் பிறகு ஒருநாள் மாலை சுந்தரம் புஸ்தகமும் கையுமாக பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பி வீட்டில் நுழைந்தான். அவன் பாடம் படிக்கும் அறையில் குந்தளம் வெகு சுறுசுறுப்பாக ஒரு மூலையில் உட்கார்ந்து வேலை செய்துகொண்டிருந்தாள். சப்தம் செய்யாமல் அவன் பின்னால் போய் நின்று கவனித்தான். இரண்டு முழுச் செங்கல்கள் அடுப்புமாதிரி வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் மேல் சமையல் பானை மாதிரியுள்ள ஒரு மரச்செப்பு இருந்தது. விறகுக்குப் பதிலாக கந்தைக் காகிதங்கள் நீளமாகச் சுருட்டி அடுப்பில் வைக்கப்பட்டிருந்தன. பக்கத்தில் ஒரு டம்ளர் நிறைய ஜலம். இன்னொரு மரச் செப்பில் ஒரு பிடி அரிசி. அடுப்பிற்கு முன்னால் ஒரு பலகையைப் போட்டு அதில் உட்கார்ந்திருந்தாள் குந்தளம். 

இதைப் பார்த்துவிட்டு ‘சமையலா பண்றே குந்தளம்?’ என்றான் சுந்தரம். 

‘ஐயையோ!…அதுக்குள்ளேயா நீ வந்துட்டே! இப்ப வரக்கூடாது அத்தான்; நீ செருப்புப் போட்டிண்டு குடை பிடுச்சிண்டு ஆபீஸுக்குப் போயுட்டு வருவையாம்! நீ வருவதுக்குள்ளே நான் சமையல் பண்ணி வைப்பேனாம்! சரியா? ஆபீஸுக்குப்போ அத்தான்! போயேன்!’ இப்படி மடமடவென்று சொல்லியபடி சுந்தரம் கையிலிருந்த புத்தகக் கட்டைப் பிடுங்கி ஒரு மூலையில் எறிந்தாள் குந்தளம். வெளியில் கிடந்த அவன் செருப்பைக் கொண்டு வந்து வைத்து ‘ஊம்….இதைப் போட்டுக்கோ! ஆபீ ஸுக்கு நாழியாச்சு! சீக்கிரம் அத்தான்!…’ எனறு துரிதப்படுத்தினாள். சுந்தரம் செருப்பை மாட்டிக்கொண்டு சிறிய குடையையும் கையிலெடுத்துக்கொண்டு ‘ஆமாம், இதெல்லாம் என்ன குந்தளம்?’ என்று ஒன்றும் புரியாமல் கேட்டான். 

‘இது ஒரு புதிய விளையாட்டு அத்தானுக்கு இது கூடத் தெரியலை!’ 

‘புது விளையாட்டுன்னா என்ன விளையாட்டாம் இது!’

‘ஆம்படையான் பெண்டாட்டி விளையாட்டு; நீ போயேன் ஆபீஸுக்கு. நான் வரலாம்னு சொல்லுவேன், அப்புறம்தான் வரணும் தெரியுமா?’ 

‘சரி!’ 

சுந்தரம் குடை செருப்புடன் அடுத்த அறையில் போய் உட்கார்ந்து ‘வரலாமா, வரலாமா?’ என்று கேட்டுக்கொண்டே யிருந்தான். ‘கூடாது, கூடாது’ என்று பதில் வந்தது. கடைசியில் ‘வரலாம்’ என்றாள் குந்தளம். அசடு மாப்பிள்ளை மாதிரி நடை போட்டுக்கொண்டு உள்ளே நுழைந்தான் சுந்தரம். 

‘இப்படி மக்குபிளாஸ்திரி மாதிரி நிற்கப்படாது அத்தான். “ஊம் இன்னும் சமையல் ஆகலையா? எனக்கு சாப்பாடு வேணாம் ஒண்ணும் வேணாம்! ஆபீஸுக்கு நாழியாச்சு, நான் போறேன் போ” இப்படி நீ இரைஞ்சு கேட்கணும். எங்கே கேளு!’ 

சுந்தரம் அதுமாதிரி கேட்டான். 

‘இல்லை! இதோ சமையல் ஆய்டுக்கே உட்காரு சாதம் போட்றேன்!’ என்றாள் குந்தளம். சுந்தரம் உட்கார்ந்தான். அவனுக்கு முன் ஒரு காகிதத்தை விரித்துப் போட்டு இரண்டு மூன்று அரிசி, இரண்டு துண்டு வாழைக்காய்த் தோல், இரண்டு கத்தரிக்காய் காம்பு இவற்றை குந்தளம் வைத்தாள். 

‘இதையெல்லாம் நான் சாப்பிடமாட்டேம்மா’ 

சுந்தரம் முகத்தைச் சுளித்துக்கொண்டு பின்னால் நகர்ந்தான். 

‘நிஜம் நிஜம்மா சாப்பிடவேணாம் அத்தான். பொய்யாப் பொய்யான்னு சாப்பிட்றாபோலே வாயில் வைச்சுக்கணும்!’ என்றாள் குந்தளம். 

இந்த ரசமான சம்பாஷணையையும் விளையாட்டையும் ஐயர் ஜன்னல் வழியாக அடுத்த அறையிலிருந்து கவனித்துக் கொண்டிருந்தார். 

வேறொரு இடத்தில் நின்று பார்த்துக்கொண்டிருந்த அம்புஜம் சுந்தரத்தை சமிக்கை காட்டி அழைக்கவே ‘அம்மா கூப்பிட்றா? கேட்டுட்டு வரேன்!’ என்று சொல்லி எழுந்து போனான். 

‘சீக்கிரம் வந்துடணும், சரியா?’ என்று கேட்டுக் கொண்டே குந்தளம் “எச்சில் இலையை” எடுக்க ஆரம்பித்தாள். 

‘ஐயோ! இல்லை, இல்லை இனிமே இல்லவேயில்லை அம்மா! ஊம்…ஊம்…ஹூ..!’ 

சுந்தரம் திடீரென்று இப்படி அழும் குரல் பாஸ்கரய்யருக்குக் கேட்டது. ‘குழந்தைங்க என்னத்தைக் கண்டுதுங்க அம்மா! அதுக்கு இப்படியா கன்னத்தைக் கிள்ளுவாங்க குழந்தையை?’ என்று முனிசாமி சமாதானம் செய்யும் சப்தத்தையும் அய்யர் கேட்டார். அடித்தால் பாஸ்கரய்யர் காதில் விழுந்துவிடுமோ என்று நினைத்தே சப்தமில்லாமல் கன்னத்தை நிமிண்டினாள் அம்புஜம். வலி பொறுக்காவிட்டால் சுந்தரம் அழாமல் என்ன செய்வான்? சுந்தரம் செய்த குற்றமென்ன? அவனுக்கு ஏன் இந்த தண்டனை? குழந்தைகள் மெய்மறந்து விளையாட்டில் லயித்திருந்தது குற்றமா ? 

அம்புஜத்தின் மனப்போக்கை அன்றுதான் தெளிவாகத் தெரிந்துகொண்டார் பாஸ்கரய்யர். தாங்க முடியாத வேதனையுடன் குந்தளத்தின் அறையில் நுழைந்து குழந்தையை அணைத்துக்கொண்டு இரண்டு சொட்டு கண்ணீர் வடித்தார். 

‘அத்தான் எங்கேப்பா! அழறாப்லே இருக்கே ?’

‘ஒண்ணுமில்லேயம்மா ! உன் அத்தை மருந்து கொடுக்கிறாள். சாப்பிடமாட்டேன்னு அழறான். இதோ வந்துவிடுவான்!’ என்று சமாதானம் கூறியபொழுது அவர் நெஞ்சம் வெடித்துவிடும்போலிருந்தது. 

சிறிது நேரம் கழித்து அம்புஜம் அறையில் நுழைந்து ‘ஏண்டியம்மா குந்தளம்! காப்பி கீப்பி ஒண்ணும் குடிக்க வேண்டாமா? அப்பா பாஸ்கரா, நீயும் காலாகாலத்திலே காப்பி குடித்துட்டு வந்தா சமையல்காரிக்கு ஒரு வேலை முடியுமில்லையா?’ என்று அனுசரணையாகக் கேட்டாள். 

‘அத்தை! சுந்தரம் அத்தான் ஏன் அழறான்! மருந்து கொடுத்தையா?’ 

“மருந்தும் கொடுக்கலை மாயமும் கொடுக்கலை! குழந்தைகள் பள்ளிக்கூடத்திலேயிருந்து வந்தால் கைகால் கழுவி காப்பியைக் குடித்து தலை வாரிக்கொள்ளும்னு கேள்விப் பட்டிருக்கேன்! இப்படியா வந்ததும் வராததுமா ஒரு விளையாட்டு? சமையல்காரியான அரைமணி நேரமா காப்பியை ஆற்றிவைச்சுண்டு நிற்கிறாள்! நீங்கள் பண்றது அதிசயமாய்த்தானிருக்கு அம்மா! சின்ன வயசிலே இப்படி விளையாட்டு புத்தியாயிருந்தால் எப்பதான் உங்க அத்தான் படிச்சுக் குட்டிச்சுவராய்ப் போறது!…”

“அம்புஜம்! எதையாவது மனதில் வைத்துக்கொண்டு என்னவாவது சொல்லாதே! குழந்தையை ஏன் குட்டிச் சுவராய்ப் போகணும்னு சாபமிட்றே!” 

“அட பாவமே! உன் பொண்ணையா சொன்னேன்! எனக்கேண்டாப்பா அந்தப் பொல்லாப்பு!” 

உன் குழந்தையானாலென்ன என் குழந்தையானாலென்ன? இரண்டு பேரும் எனக்கு ஒரே மாதிரிதான்! சமையல்காரியை இங்கு காப்பி கொண்டுவரச்சொல்லு போ!” 

அம்புஜம் பதில் பேசாமல் போய்விட்டாள். 

2. குடும்பம் சிதைந்தது 

முந்திய அத்தியாயத்தில் குறிப்பிட்ட உருக்கமான சம்பவம் நிகழ்ந்த தினத்தன்று இரவு ஐயருக்கு வெகு நேரம் வரை உறக்கம் வரவில்லை. நெஞ்சில் வஞ்சனையில்லாத இயற் கையுடன் லயித்திருக்க அவர் மனம் விரும்பியது. தோட்டத்தின் பக்கம் சென்று ஒரு மேடையில் உட்கார்ந்தார். அவருடைய இதயத் துடிப்பை காற்றில் அசைந்தாடும் மாந்துளிர்கள் எடுத்துக் காட்டின வென்றால் மிகவும் பொருத்தமாயிருக்கும். 

சோவென்று முன்பனி பெய்துகொண்டிருந்தது. அதை யும் பொருட்படுத்தாமல் ஐயர் ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபட்டிருந்தார். 

“இன்னும் படுக்கப் போகலீங்களா? மணி பத்தடிக்கப் போவுது! பனி வேறே மழை கொட்றாப்பலே கொட்டுது! இப்படி தோட்டத்திலே உட்கார்ந்திருக்கீங்களே, எசமான்! உடம்புக்கு ஆவுங்களா?” என்றான் முனிசாமி அங்குவந்து. 

“பாதகமில்லை முனிசாமி! மணி பத்தாகிறதா? நேரம் போனதே தெரியவில்லை!” 

“நீங்க கேக்கிறதைப் பார்த்தா ரொம்ப நேரமா இங்கேயே இருக்கிறாப்லே தோணுதே! பனி பெய்யறதைப் பாத்தீங்களில்லையா! எதிரே நிற்கும் மரம்கூடக் கண்ணுக்குத் தெரியலை!” 

“ஆமாம், ஆமாம்!” என்று பொம்மை மாதிரி அய்யர் தலையசைத்தார். 

“ஒரு மாதிரி இருக்கிறீங்களே எசமான். உடம்புக்கு என்ன மாச்சும்….”

“அப்படியெல்லாம் ஒன்றுமில்லை முனிசாமி! மனசு ஒருமாதிரி வேதனையாயிருந்தது. கொஞ்சம் தனியாயிருப்போமென்று வந்தேன். எல்லாம் குழந்தையைப்பற்றித் தான் முனிசாமி!” 

“சாயங்காலம் குழந்தைகள் விளையாடிக்கிட்டு இருந்துச்சே அதை நினைத்தா இப்படி மனசை அலைய விட்றீங்க? சுந்தரத்தை அம்மா கண்டிச்சது எனக்கும் ரொம்ப வருத்தமாய்த்தான் இருந்திச்சு! இருந்தாலும்…”

“அதையெல்லாம் நீயும் பார்த்துக்கொண்டிருந்தாயா என்ன?” 

“ஜன்னல்களை துடைக்க வந்தேன். குளந்தைங்கள் விளையாட்டு வேடிக்கையாயிருந்துச்சு. கொஞ்சம் பார்த்துக் கிட்டு நின்னேன்!” என்று ஏதோ குற்றம் செய்துவிட்டு குற்றத்தை ஒப்புக்கொள்ளுகிறவன்போல தலையைச் சொறிந்து கொண்டான் முனிசாமி. 

“உன்னிடம் சொல்லுவதற்கென்ன முனிசாமி! நீ அம்மாள் காலத்திலிருந்து வீட்டில் வேலை செய்பவன். மரணத்தறுவாயில்கூட ‘முனிசாமி குழந்தையைப் பார்த் குழந்தையைப் பார்த்துக்கோ’ என்றுதான் அம்மாள் சொல்லிவிட்டுப் போனாள்…”

“அந்தக் கண்றாவியையெல்லாம் இப்ப ஏன் நினைக்கிறீங்க எசமான்…” 

“இல்லை, அவள்மட்டுமிருந்தால் குந்தளத்தின் கதி இப்படி ஆகியிருக்குமா?” 

“விதியை யாரு கையிலே பிடிச்சு வைச்சுக்கிட முடியுங்க! சாயங்காலம் நடந்ததை அம்மாமட்டும் பார்த்திருந்தா…!” 

என்னவோ சொல்ல வாயெடுத்து சட்டென்று நிறுத்திக்கொண்டுவிட்டான் முனிசாமி. 

பாஸ்கரய்யர் சிறிது நேரம் மௌனத்தில் ஆழ்ந்திருந்த பிறகு சொன்னார், ‘தவறு முழுவதும் என்பேரில்தான் முனிசாமி! அம்புஜத்தையும் சுந்தரத்தையும் பட்டணத்துக்கு அனுப்பிவிடப்போகிறேன்… ஏன் ஒரு மாதிரி பார்க்கிறாய்?’ 

‘இல்லீங்க! குழந்தை ஏங்கிப்போய்டுங்களேன்னு நினைச்சேன்!’  

‘ஆமாம்! அதற்கென்ன செய்வது? மேலும் அவர்கள் இங்கிருந்தால் விபரீதமாகிவிடும்போலிருக்கிறது, அம்புஜத்துக்கு நல்ல வார்த்தை சொல்லி பட்டணத்துக்கு அனுப்பி விடுவதுதான் நல்லது. குந்தளத்தை கவனித்துக்கொள்வது இனி உன்பொறுப்பு!’ 

‘சரிதானுங்க! ஒரு வாத்திபாரம்மாளைப்போட்டு குழந்தையின் மனசை படிப்பிலே திருப்பினால் எல்லாம் சரியாய்ப் போயிடும்’ 

மறுநாள் காலை காப்பி சாப்பிடும்பொழுது பட்டணத்துப் பேச்சை பாஸ்கரய்யர் தனது தங்கையிடம் ஆரம்பித்தார். பட்டணத்துக்குப் போவதை அம்புஜம் ஆட்சேபிக்க வில்லை. உண்மையில் அவளுக்கும் அது நல்ல யோசனை யாகப்பட்டது. சுந்தரத்துக்கு கிட்டத்தட்ட ஐம்பதினாயிரம் ரூபாய் வரையில் அய்யர் எழுதி வைத்திருந்தார். ஆகையால் பட்டணத்துக்குப் போனால் சாப்பாட்டுக்குத் திண்டாடவேண்டுமேயென்ற கவலையில்லை. தொடர்பை அறுத்துக்கொண்டு போய்விட்டால் குந்தளத்தின் சொத்துகள் என்ன ஆகும்? பாஸ்கரய்யர் உயிருடனிருக்கும்வரையில் வேண்டுமானால் சொத்துகளின் நிர்வாகத்தை அவர் கவனிப்பார். பிறகு எப்படியும் சுந்தரம்தானே சகல விஷயங்களையும் கவனிக்கவேண்டியவன்? இப்பொழுது அவன் பட்டணத்திலிருந்தாலென்ன பம்பாயில் இருந்தாலென்ன? எல்லாம் ஒன்றுதான்! 

இப்படி நினைத்தாள் அம்புஜம். “பிறகு நாலுபேர் நாலுமாதிரி பேசுவதற்கு இடம் வைக்காமல் இப்பொழுதே குந்தளத்தையும் சுந்தரத்தையும் பிரித்து விடுவதுதான் நல்லது! நீ நினைக்கிறபடியே செய்துவிடுவோம்!’ என்று ஆமோதித்தாள். 

பாஸ்கரய்யர் பதிலே சொல்லவில்லை. எதையோ பறி கொடுத்தவர் போல முகத்தைத் தொங்க விட்டுக் கொண்டு வெளியே வந்துவிட்டார். அடுத்த வாரமே அவர் சென்னைக்குச் சென்று மயிலாப்பூரில் ஒரு சிறிய வீட்டை கிரயத்துக்கு வாங்கினார். சுந்தரத்தை பக்கத்திலுள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதற்கு ஏற்பாடு செய்துவிட்டு வந்தார். நான்கைந்து தினங்களுக்குப்பிறகு வீட்டுக் கணக்கப்பிள்ளை அம்புஜத்தையும் சுந்தரத்தையும் அழைத்துக் கொண்டுபோய் சென்னையில் குடியேற்றிவிட்டு வந்தான். 

சுந்தரம் போன இரண்டு மூன்று வாரங்கள் வரையில் குந்தளம் சோறு தண்ணீர் இல்லாமல் அழுதுகொண்டே யிருந்தாள். அவளைச் சமாதானப்படுத்துவதில் அய்யருக்கும் முனிசாமிக்கும் நாடி தளர்ந்துபோய்விட்டது. குந்தளத்துக்குப் பாடம் சொல்லி வைக்க ஒரு உபாத்தியாயினியை அய்யர் ஏற்பாடு செய்தார். அந்த ஆசிரியைக்கு வஸுமதி என்று ஒன்பது வயதுப் பெண் குழந்தையொன் றிருந்தது. குந்தளத்தின் விளையாட்டுப் புத்தி தெரிந்து ஆசிரியை தினசரி வரும்பொழுது தனது பெண் மதியையும் அழைத்து வருவாள். வஸுமதியின் வரத்துப் போக்கு அதிகரித்த பிறகுதான் குந்தளத்தின் குழந்தை மனது மெதுவாக சுந்தரத்தையும் மறக்க ஆரம்பித்தது. 

குந்தளத்தை திருப்திப்படுத்துவதற்காக சில தினங் களில் வஸுமதியை அவளுடனேயே விட்டுச்செல்லுவாள் ஆசிரியை சங்கரி. வீட்டில் குந்தளத்துக்கு நடக்கும் மரியாதைகளெல்லரம் வஸுமதிக்கும் நடந்தாகவேண்டும். குந்தளத்துக்கு ஒரு புதுச்சட்டை வாங்கினால் அதேமாதிரி வஸுமதிக்கும் வாங்கித்தான் தீரவேண்டும். சங்கரியின் கணவன் ஒரு கோர்ட்டு குமாஸ்தா. சொற்ப சம்பளத்தில் காலம் கழித்து வந்தவன். சங்கரிக்கு இரண்டு பெரிய மனுஷர்கள் வீட்டில் பாடம் சொல்லிக்கொடுப்பதில் இருபது ரூபாய்வரையில் கிடைத்தது. குந்தளத்துக்கு சங்கரி பாடம் சொல்லிக்கொடுக்க ஆரம்பித்த நாள்முதல் அந்தக் குடும்பத்தின் தரித்திரம் நீங்கிவிட்டது. பாஸ்கரய்யர் தம் வீட்டின் பக்கத்திலேயே ஒரு சிறிய மனையை வாங்கி அதில் சங்கரி குடும்பத்தை குடியேற்றினார். சங்கரியின் கணவனுக்கும் ஒரு சம்பளத்தைப்போட்டு நிலங்களின் ஒரு பகுதியை அவனுடைய மேற்பார்வையில் வைத்தார். 

சங்கரியும் வஸுமதியும் வந்த நாள் முதல் பாஸ்கரய்யர் வீட்டுக்கே ஒரு புதிய லக்ஷிமி கடாக்ஷம் ஏற்பட்டது போலாயிற்று, வஸுமதியும் குந்தளமும் ஒருதாய் வயிற்றுக் குழந்தைகளைப்போல சில தினங்களுக்குள் அந்நியோன்யமாகி விட்டனர். எப்பொழுது பார்த்தாலும் வீட்டில் சிறுமிகளின் கலகலத்த சிரிப்பும், ஒட்டமும், பாட்டும், விளையாட்டுமே ஒலித்துக்கொண்டிருந்தது. அவர்களை அடக்க ஒரு அத்தையில்லை. அதட்டிப் பயமுறுத்த யாருமில்லை. முனிசாமியும் தன்னுடைய வயதை மறந்து குழந்தைகளோடு குழந்தையாகச் சேர்ந்து விளையாடுவான். தோட்டத்தில் கொட்டியிருந்த மணலிலே அவர்களுடன் சேர்ந்து அவனும் வீடு கட்டுவான்! மாக்கல்லை வைத்துக்கொண்டு அவர்களைப்போல அவனும் தரை முழுவதும் காக்காயும் குருவியும் போடுவான். சிட்டுக்குருவிபோல கவலையின்றி குந்தளத்தின் வாழ்க்கை கழியத்தொடங்கியது. பாஸ்கரய்யருக்கு தலையிலிருந்து ஒரு பெரிய பாரக்கல்லை இறக்கி வைத்தாற்போலிருந்தது. அவரைவிட அதிகத் திருப்தியடைந்தவன் முனிசாமிதான்! 

வஸுமதியின் தொடர்பு ஏற்பட்டதில் இன்னும் ஒரு முக்கியமான மாறுதல் குந்தளத்திடம் தோன்றலாயிற்று. வஸு மதி ஒரு படித்த பெண்ணின், அதிலும் ஆசிரியைத் தொழிலில் இருப்பவளின் புதல்வியல்லவா? தாயைப் போலவே பெண்ணிடமும் படிப்பில் அலாதியான ஊக்கம் தென்பட்டது இயற்கைதானே? வஸுமதி சிறிய கதைப் புத்தகங்களை வைத்துக்கொண்டு குந்தளத்திற்கு படித்துக் காட்டுவாள். குந்தளம் சுவாரஸ்யமாகக் கேட்டுக்கொண்டே பிறகு அதை முனிசாமிக்குச் சொல்லுவாள். நாளடைவில் வஸுமதியைப் போலவே தானும் படிக்க வேண்டுமென்ற ஆசை குந்தளத்துக்கு ஏற்பட்டது. அதை சங்கரி சரியான முறையில் பயன்படுத்தினாள். அவளுடைய திறமையான சிக்ஷை வெகு சீக்கிரத்தில் பலனளித்தது. மூன்று வருடங்களுக்குள் ஆறாவது வகுப்பு பாடங்களை குந்தளம் கரைத்து குடித்துவிட்டாள். 

சங்கரியின் வேலை அத்துடன் முடிந்துவிட்டது. அதற்குமேல் அவள் சொல்லிக் கொடுப்பதற்கில்லை. கோஷா பள்ளிக்கூடத்து துரைஸாணியம்மா ஒருவளை அமர்த்தினால் நல்லதென்று அய்யரிடம் யோசனை சொன்னாள். 

‘குந்தளத்துக்கும் வஸுவுக்கும் சொல்லிக்கொடுக்க நீயே ஏற்பாடு செய்துவிடு!’ என்றார் அய்யர். 

சங்கரி இதை எதிர்பார்க்கவில்லை. அய்யர் குடும்பத்தில் தனக்கும் வஸுமதிக்கும் இனிச் செல்வாக்கு இருக்காதென்றே அவள் எண்ணினாள். ‘தாயில்லாக் குழந்தைக்கு நீதான் தாயார் மாதிரி இருந்து கவனித்துக் கொள்ள வேண்டும்’ என்று அய்யர் அடிக்கடி சொல்லியதுண்டு. ஆனால் காரியம் ஆகவேண்டியவரையில் பக்குவமாகப்பேசி காலையும் பிடிப்பவர்கள் பலபேர். அவர்களுடைய ஜாபிதாவில் ஒருவராகவே அய்யரையும் வைத்திருந்தாள். சங்கரி வந்த நாள் முதல் குந்தளத்தின் வாழ்க்கையிலே தோன்றிய ஆச்சர்யகரமான மாறுதலைக்கண்ட அய்யர் சங்கரியைத் தம் குடும்பத்தில் ஒருவளாக மதித்தார். அவள் சம்பளத்துக்கு வேலைசெய்யும் ஒரு ஆசிரியை என்ற எண்ணமே அவருக்கு இல்லை. 

‘வாத்தியாரம்மா தங்கமானவங்க! அந்த அம்மா வந்தது குழந்தைக்கு மறுஜன்மம் கொடுத்தமாதிரி ஆய்டுச்சு!’ என்று முனிசாமிகூட அய்யரிடம் அடிக்கடி சொல்லுவான். சங்கரியின் புருஷன் சிவராமன் புகாருக்கு இடம் வைக்காமல் விசுவாசத்துடன் நிலங்களைக் கவனித்துக்கொண்டு வந்தது வேறு அய்யருக்கு பெரிய உதவியாகவிருந்தது. நில விஷயங்களில் அய்யர் தலையிடுவதேயில்லை. பூராவேலை களையும் சிவராமனே திறமையாக நடத்திக்கொண்டுவந்தான். 

இதையெல்லாம் நினைத்துப்பாராமல் ‘இனி குந்தளத்துக்கு வேறு ஆசிரியை வந்துவிட்டால் நமக்கு செல்வாக்கு இராது!’ என்று சங்கரி வியாகூலமடைந்து வந்தது அவள் தவறே தவிர அய்யர் குற்றமல்லவே? 

‘வஸுமதியும் குந்தளத்துடன் உயர் வகுப்புப் பாடங்களைப் படிக்கட்டும். சம்பளத்தைப்பற்றி யோசிக்காமல் அடக்கமாயும் யோக்கியதையுடனும் கூடிய ஒரு நல்ல ஆசிரியையை நீயே பேசி அமர்த்திவிடு!’ என்று அய்யர் சொல்லவும் அன்று மாலையே சங்கரி கோஷா பள்ளிக் கூடத்துக்குச் சென்றாள். 

கோஷா பள்ளிக்கூட துரைஸாணியம்மாக்களைக் கண்டு பேசியபின் பீ. ஏ. பட்டம்பெற்ற ஒரு ஆங்கிலோ இந்தியப்பெண்ணை தேர்ந்தெடுத்தாள் சங்கரி. தினசரி காலையில் ஒரு மணியும் மாலையில் இரண்டு மணியும் வீட்டுக்கு வந்து பாடம் சொல்லிக்கொடுக்கவேண்டும். மாதம் 75 ரூபாய் சம்பளம். வருஷத்துக்கு இலவசமாக இரண்டு செட் உடுப்புகள். இதுதான் சங்கரி பேசிமுடித்துக்கொண்டுவந்த நிபந்தனை. 

‘ரொம்பச்சரி! நன்றாய்ச் சொல்லிக்கொடுத்து குழந்தைகளும் திருப்தியடைந்தால் பிறகு 100 ரூபாயாக சம்பளத்தை உயர்த்திக்கொடுப்போம். காலையிலும் மாலையிலும் அவள் நடந்து வரவேண்டாம். நம் காரை அனுப்பி அழைத்துவரச் சொல்லு’ என்று அய்யர் சொல்லிவிட்டார். 

அடுத்த வாரத்திலிருந்து அந்த ஆங்கிலோ இந்தியப் பெண் பாடம் சொல்லிவைக்க ஆரம்பித்தாள். அவள் பீ. ஏ. படித்தவளென்பதோடு ஆசிரியத் தொழிலில் பயிற்சியடைந்தவளும் கூட. மாணவிகளைப் போகிற போக்கிலேயே விட்டு பக்குவமாக கல்வியில் கவனத்தைத் திருப்ப ஆசிரியைகளுக்கு சொல்லியா தரவேண்டும்? 

இப்படியே வருடங்கள் சிறகுகளைக் கட்டிக்கொண்டு பறந்தன. வாழ்க்கையில் இனித் தனக்கு ஒரு சுகமும் கிடையாதென்பது தெரிந்துதானோ என்னவோ குந்தளத்துக்கு படிப்பில் அபாரமான ஊக்கம் ஏற்பட்டது. பள்ளிக்கூடத்தில் சேர்ந்து ஒழுங்காக திட்டப்படி கல்வி பயிலும் மாணவ மாணவிகளிடம்கூட இவ்வளவு துரிதமான முன்னேற்றம் ஏற்பட மாட்டாது எந்த நேரமும் குந்தளம் ஏதாவது படித்துக் கொண்டோ அல்லது எழுதிக் கொண்டோதானிருப்பாள். ‘இப்படிப் படித்தால் உடம்புக்கு ஒத்துக்கொள்ளுமா அம்மா!’ என்று அய்யர் அடிக்கடி சொல்லுவார். 

ஆங்கில நூல்களையெல்லாம் கரைத்துக் குடித்தபிறகு தமிழ் இலக்கியங்களில் குந்தளத்துக்கு சிரத்தை யேற்படச் செய்ய தற்செயலாக ஒரு சம்பவம் நிகழ்ந்தது. வஸமதிக்கு பதினைந்து வயது பூர்த்தி யாகியவுடன் அவள் கல்யாணத்தைப் பற்றி சங்கரி பிரஸ்தாபித்தாள். பட்டணத்தில் ஒரு பிரபல புத்தகப் பிரசுராலயத்தின் சொந்தக்காரர் பிள்ளையான கேசவன் என்பவனுக்கும் வஸூம திக்கும் திருமணம் நடத்த அய்யர் ஏற்பாடு செய்து தம்முடைய செலவிலேயே கல்யாணத்தையும் நடத்தி வைத்தார். கேசவன் வஸுமதிக்கு நவீன தமிழ்ப் புத்தகங்கள் பல அனுப்புவான். அவைகளைக் குந்தளமும் படிப்பாள். அவற்றைப் பற்றி குந்தளமும் வஸுவும் விடிய விடிய விவாதிப்பார்கள். இதிலிருந்து தமிழ் நூல்களைப் படிப்பதில் அவ்விருவருக்குமே ஒரு புதிய ஊக்கம் ஏற்படலாயிற்று. 

‘இதென்ன புத்தகம்? நடையில் உயிர் இருக்கிறதா? அல்லது உயரிய கருத்துத்தானிருக்கிறதா? ஒரு புத்தகம் என்றால் அதற்கு ஒரு இலட்சியம் வேண்டாமா?’ என்பாள் குந்தளம். 

‘இலட்சியத்துடன் நீ தான் ஒரு புத்தகம் எழுதேன்! என் கணவர் கம்பெனியிலேயே பிரசுரிக்க ஏற்பாடு செய்வோம்!’ என்பாள் வஸு. 

‘நான் எழுத ஆரம்பித்துவிட்டால் பாவம் இந்த எழுத்தாளர்கள் வயிற்றில் மண் விழுந்துவிடுமே! பிறகு அந்தப் பாவத்தை எங்குபோய்த் தொலைப்பது?’ என்பாள் குந்தளம். 

இப்படி பிரசுரமாகும் ஒவ்வொரு புதுப் புத்தகத்தையும் படித்து அவர்கள் விவாதித்து அலசிவிடுவார்கள். வஸுமதி வெறும் பேச்சோடு நிற்பதில்லை. இந்த விவாதங்களின் சாராம்சத்தை தன் கணவனுக்கு எழுதுவாள். ‘உன் சினேகிதையை ஒரு புத்தகமாவது எழுதச்சொல்லக் கூடாதா? நீ எழுதி வாங்கி அனுப்பு. நான் பிரசுரிக்கிறேன்!’ என்று கட்டாயப்படுத்துவான் கேசவன். 

இந்த வற்புறுத்தல் எவ்வளவு தூரம் பலனளித்த தென்பது நமக்குத் தெரியாது. ஆனால் இது குந்தளத்தின் வாழ்க்கையிலே ஒரு பாரதூரமான, ஏன், எதிர்பாராத மாறுதலை உண்டு பண்ணியது என்னமோ உண்மை. இந்த மாறுதல் குந்தளத்தின் வருங்காலத் தலைவிதியை நிர்ணயிப்பதாகவுமிருந்தது. 

வஸுமதியும் கணவன் வீட்டுக்குப் போய்விட்டாள். அவள் புறப்பட்ட தினத்தன்று குந்தளம் உறங்கவேயில்லை. உடன் பிறந்த சகோதரிகளுக்கிடையில்கூட அத்தனை பாசமிருக்காது. வஸுமதியின் பிரிவு ஓரிரண்டு வாரங்களுக்கு கஷ்டமாகத்தானிருந்தது குந்தளத்திற்கு. ஆனாலும் என்ன செய்வது? ‘உலகில் கஷ்டப்படுவதற்காகவே நாம் பிறந்தோம். இதில் ஒன்று வஸுமதியின் பிரிவும்’ என்று தன்னைத் தேற்றிக் கொண்டாள். வஸுமதி சென்றபிறகு பேச்சுத் துணைக்குக்கூட ஆள் இல்லை. பொழுதைக் கழிப்பது ஒரு பெரிய பிரச்சனையாகிவிட்டது. வஸுமதியிடமிருந்து என்றைக்காவது கடிதம் வந்தால் அதைப் படித்து பதில் எழுதுவதில் சிறிது பொழுது கழியும். மற்ற நேரங்களில் ஏதாவது எழுதிக்கொண்டேயிருப்பாள் குந்தளம். 

இடற்கிடையில் சுந்தரத்தின் வாழ்க்கையில் எவ்வளவோ மாறுதல்கள் ஏற்பட்டுவிட்டன. சென்னைக்குச் சென்றபிறகு அம்புஜம் மட்டும் ஒரிரண்டுமுறை திருச்சிக்கு வந்துவிட்டுப் போனாள். தன் ஸ்தானத்தில் சங்கரி இருப்பதைக்காண அவளுக்குப் பிடிக்கவில்லை. தான் வந்துபோவதுகூட தன் தமையனுக்குப் பிடிக்கவில்லையென்பதை ஜாடையாகத் தெரிந்துகொண்டதும் திருச்சிக்கு வருவதையே அவள் நிறுத்திவிட்டாள். ஆடிக்கு ஒருநாள் ஆவணிக்கு ஒருநாள் ‘அம்மா சொல்படி சுந்தரம்’ என்று கையெழுத்துப்போட்டு மாமாவுக்கு சுந்தரம் கடிதம் எழுதுவான். நான்கைந்து வருடங்களுக்குப்பின் அதுவும் நின்றுவிட்டது. 

வஸுமதி தன் கணவன் வீட்டுக்குச் சென்றபொழுது சுந்தரம் பி. ஏ. வகுப்பில் படித்துக்கொண்டிருந்தான். வஸூ சுந்தரத்தைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாள். சுந்தரத்துடன் சிறுவயதில் விளையாடியதைப் பற்றி யெல்லாம் குந்தளம் வஸ மதியிடம் கதைகதையாகச் சொல்லியதுண்டு. இதைக் கேசவனிடம் தற்செயலாக வஸு ஒருநாள் பிரஸ்தாபித்தாள். இரண்டு தினங்களுக்குப்பிறகு அந்த சுந்தரத்தையே கொண்டு வந்துவிட்டான் கேசவன். வஸுமதி இதை எதிர்பார்க்கவில்லை. அம்புஜத்துக்கும் பாஸ்கரய்யருக்கும் உள்ள மனத்தாங்கலை அறிந்திருந்த வஸு சுந்தரம் வந்துவிட்டுப்போனது தெரிந்தால் அய்யர் மனவருத்தப் படுவாரோ என்று பயந்தாள். தன் தாயாரிடத்தில் அம்புஜத்துக்கு அசூயை இருப்பதையும் அவள் அறிவாள். ஆகையால் தன் கணவனிடம் சுந்தரத்தைப்பற்றி ஏன் சொன்னோமென்று தன்னைத்தானே சபித்துக்கொண்டாள் வஸு. 

சுந்தரம் வந்துவிட்டுப் போன துமுதல் வஸுமதியிடம் ஒரு மாறுதல் ஏற்பட்டதை கேசவன் கவனிக்காமலில்லை. ஒருநாள் இதை அவன் தெளிவாகக் கேட்டுவிட்டான். 

‘அப்படியொன்றும் நான் கவலைப்படவில்லையே! பிரசுராலயத்துக்கு தினசரி எவ்வளவோ பேர் வருவார்கள், போவார்கள். அவர்களை நான் கட்டுப்படுத்த முடியுமா?’ என்று கவலையற்றவளைப் போல பதிலளித்தாள் வஸூ கேசவன் வற்புறுத்தவும் தன் மனதிலுள்ள கவலையை மறைக்காமல் சொன்னாள். 

‘அட பாவமே! இதற்குத்தான ஒரு வாரமாக விளக்கெண்ணை சாப்பிட்டமாதிரி இருக்கிறாய்? சுந்தரத்துக்கு நீயும் நானும் யாரென்பது தெரியாது. நீ பார்க்கவேண்டு மென்பதற்காக ஒரு சாக்குச் சொல்லி அழைத்து வந்தேன்.’ 

‘என்ன சொன்னீர்களோ?’ 

‘காலேஜில் அவனைப்பற்றி விசாரித்தேன். ரொம்ப கெட்டிக்காரப் பையனென்றும் பத்திரிகைகளுக்கெல்லாம் என்னென்னவோ கதை, கட்டுரைகள் எழுதுகிறானென்றும் சொன்னார்கள். அவனை அழைத்துவர அது ஒரு நல்ல காரணமாக உதவியது. அவனைக்கொண்டு ஒரு நாவல் பழுதச்சொல்லி பிரசுரிக்க விரும்புவதாயும், அதைப்பற்றி தனிமையில் பேசவேண்டுமென்றும் தெரிவித்து அழைத்து வந்தேன். பையன் உண்மையிலேயே சரளமாக எழுதுவான் போலிருக்கிறது. அவனுக்கும் ஒரு சான்ஸ் கொடுத்துப் எார்க்கலாமென்று உத்தேசம் உனக்கு இஷ்டமில்லாவிட்டால் வேண்டாம்!’ 

கேசவன் இப்படிச் சொல்லவும் வஸுமதிக்கு ஒரு பெரிய சுமை தலையைவிட்டு இறங்கியது போலிருந்தது. ‘அப்பாடா! தப்பினேன்! இந்த ஆண்பிள்ளைகளிடம் ஒரு ரகசியமும் வெளியிடக்கூடாதென்பது இப்பொழுது சரியாய்விட்டது!’ என்று சொல்லி பெருமூச்சு விட்டாள். 

‘உன் ரகசியங்களை நான் வெளியிட்டுவிடவில்லையே இப்படி கசந்துகொள்ள!’ 

‘போதும் போதும்! இனிமேல் உங்களிடம் பிறர் ரகசியங்களைப்பற்றி நான் ஏன் பேசுகிறேன்! நல்ல மாட்டுக்கு ஒரு சூடு!’ 

இப்படியெல்லாம் சபதம் போட்டால் இதோ இப்பொழுதே சுந்தரத்தின் வீட்டுக்குப்போய் நீ சொல்லியதை யெல்லாம் அப்படியே ஒப்புவித்துவிடுவேன்! போகட்டுமா?’

‘ஊம்! போவீர்கள்! திரும்பி வந்தால் உங்கள் வஸு இங்கிருக்கமாட்டாள். கிணற்றுக்குள் தேடிப்பார்க்க வேண்டியிருக்கும். போகும்பொழுது இதையும் ஞாபகத்தில் வைத்துக்கொண்டு போங்கள்!’ 

ஒரு மாதத்துக்குப்பிறகு கேசவன் ஒருநாள் சொன்னான் ‘வஸு! இன்று சுந்தரம் பிரசுராலயத்துக்கு வந்து விட்டுப்போனான்!’ என்று. 

‘எதற்காக வந்தார்?’ என்றாள் வஸு ஆவலுடன். 

‘புத்தகம்போடும் கிறுக்கு சரியாகப் பிடித்துவிட்டது. தன் சுய சரித்திரத்தையே எழுதியிருப்பதாயும் அதைப் புத்தகமாகப் போடவேண்டுமென்றும் சொல்லிக்கொண்டு வந்தான்!’ 

‘அதைப் பார்த்தீர்களா?’

‘அவசரப்படாமல் கேளேன்! இரண்டு பெரிய நோட் டுப் புத்தகங்கள் நிறைய நெருக்கி நெருக்கி எழுதிக்கொண்டு வந்திருந்தான். அதன் தலைபைப் பார்த்ததும் எனக்குத் தூக்கிவாரிப்போட்டது!’ 

‘அது எங்கே ஓடிப்போகிறது? சுந்தரம் ஒரு பெரிய இடத்தில் கல்யாணம் செய்துகொண்டால். அந்தச் செல்வாக்கு வேறு இருக்கும். சுய ஜாதிஜனங்களின் மதிப்பையும் இழக்காமலிருக்கலாம். அய்யரின் காலத்துக்குப்பிறகு சொத்து நிர்வாகத்தை சுந்தரம் தானே கவனிக்கவேண்டி யிருக்கும்? குந்தளம் வேறு எவர் உதவியை நாடுவாள்?’ 

‘ஏன் அவளே துணிந்து வேறு கல்யாணம் செய்து கொண்டுவிட்டால்?’ 

‘அவளுக்கு அவ்வளவு துணிவு ஏற்படாது. பாஸ்கரய்யரும் சம்மதிக்கமாட்டார் என்பதுதான் அம்புஜம்மாள் திட்டம்!’ 

‘நீ நினைக்கின்றாய். நாளை. நடப்பது இன்று யாருக்குத் தெரியும்!’ 

அன்றிரவு வஸு வெகுநேரம் உறங்கவேயில்லை. கேசவனும் சுந்தரமும் பேசியதை அப்படியே குந்தளத்துக்கு எழுதிவிடவேண்டுமென்று அவள் மனம் துடித்தது. ஒரு சமயம் அந்தக் கடிதம் அய்யர் கையில் அகப்பட்டுவிட்டால்? தன் தாயாருக்கு எழுதி அதற்குள் குந்தளத்தின் கடிதத்தை வைத்து ரகசியமாகக் கொடுக்கச் செய்தாலென்னவென் வஸ நினைத்தாள். குந்தளம் என்ன நினைத்துக்கொள் வாளோ? சுந்தரத்தைப்பற்றி அவள் அதிருப்தியாக எப் பொழுதும் பேசியதில்லையென்பது என்னவோ வாஸ்தவம். அய்யர் தானென்ன? சுந்தரத்திடம் அவருக்கும் வெறுப் பில்லையே! ‘அவன் சம்பந்தப்பட்டவரையில் நல்ல பையன் தான்!’ என்று அடிக்கடி அய்யரே சொல்லியிருக்கிறார். இருந்தாலும் சுந்தரத்தைப்பற்றி அதிலும் அவன் குந்தளப் பிரேமா என்ற பெயருடன் ஒரு கதையெழுதிக்கொண்டு வந்ததைப்பற்றிக் குந்தளத்துக்கு எழுதுவது முறையா? 

இப்படி தனக்குள் தர்க்கம் செய்துகொண்டே படுத்துப் புரண்டாள் வஸு. குந்தளத்துக்கு எழுதினால்தான் மனநிம்மதியேற்படும் போலத் தோன்றியது அவளுக்கு. இரவு மணி இரண்டடித்தது. தூக்கம் வருவதாயில்லை. 

‘என்ன ஆனாலும் ஆகட்டும்; எழுதுவதை எழுதி விடுகிறேன்!’ என்று தீர்மானித்துக்கொண்டு எழுந்து உட்கார்ந்தாள் வஸு, கடிதத்தை எழுதி முடித்துவிட்டு மறுபடி படுக்கச் சென்றபோது நான்கு மணியாகி விட்டது. 

மறுநாட்காலை கடிதத்தைத் தபாலில் சேர்க்க கேசவனிடம் கொடுத்தபொழுது ‘நேற்றைய சம்பவங்களையெல்லாம் எழுதிவிட்டாயோ? ஏதாவது அசட்டுத்தனம் செய்து விடாதே!’ என்று அவன் எச்சரித்தான். 

‘அதெல்லாம் ஒன்றுமில்லை. அம்மாவுக்கு இதையெல்லாம் ஏன் எழுதப்போகிறேன்!’ என்று வஸு மழுப்பி விட்டாள். 

கடிதம் தன்கையைவிட்டுப் போன துமுதல் வஸ ஸவின் மனவேதனை மேலும் அதிகரித்தது. குந்தளம் என்ன நினைப்பாள்? பதில் எழுதுவாளா? அல்லது கிழித்துப் போட்டுவிட்டு பேசாமலிருந்துவிடுவாளா? அய்யருக்குத் தெரியாமல் ரகசியமாகக் கடிதம் எழுதியதைப்பற்றி எவ்வளவு மோசமாக நினைப்பாள்? குந்தளத்தின் பதில் வருமளவும் வஸுவிற்கு நிம்மதியேயில்லை.  

3. அவசர அழைப்பு 

இயற்கையென்ற மகாசக்தி சமூகத்தின் சட்ட திட் டங்களையும் சம்பிரதாயங்களையும் லக்ஷ்க்ஷியம் செய்வதேயில்லை. ஒருவள் விதவையானாலும்சரி, அல்லது அரைவயிற்றுக் கஞ்சிக்கே பறப்பவளாயிருந்தாலும் சரி அதைப்பற்றி இயற்கை தேவிக்குக் கவலைகிடையாது. ஒருவருக்கும் உதவாமல் உள்ளே அடைந்து கிடக்கும் கைம்பெண்ணிடம் அழகைக் கொட்டி வியர்த்தமாக்குகிறோமேயென்று அவள் நினைக்கி றாளா? அதுவுமில்லை. குந்தளம் யெளவனப்பருவத்தையடைந் தவுடன் இயற்கையென்ற இந்த மகாசக்தி தனது மந்திரக்கோ லைச்சுழற்றி பற்பல அற்புதங்களை அள்ளி வீசினாள் அவளிடம். பருவகாலத்தில் ஏற்படும் தேகமனே மாறுதல்களைத் தடுக் கும் வல்லமை மனிதன் இயற்றும் சட்டதிட்டங்களுக்குக் கிடையாதென அகில உலகிற்கும் விளம்பரப்படுத்துவதைப் போலிருந்தது குந்தளத்தினிடம் இயற்கையன்னை காண் பித்த மந்திர ஜாலங்கள். அவளுடைய பரிபூரண கடாக்ஷத் தில் எவ்வளவு வர்ணித்தாலும் தீராதுபோலிருந்தது யுவதி குந்தளத்தின் எழில் உருவம்! 

ஆனால் இந்தப் பெருமையை குந்தளம் உணரவில்லை; ரஸிக்கவுமில்லை. வயது செல்லச்செல்ல தான் ஒரு விதவை என்பதையும், உறங்குவதையும் உண்பதையும் தவிர வாழ்க் கையில் இனித் தனக்கு ஒன்றுமில்லை என்ற பயங்கரமான உண்மை அவள் மனதைச் சூழ்ந்துகொண்டது. வேளா வேளைகளில் வயிறாரச் சாப்பிடலாம்; பொழுது சாயும்வரை யில் புத்தகங்களைப் படிக்கலாம்; இஷ்டப்பட்ட பொழுதெல் லாம் படுத்து உறங்கலாம்; முதுமை வந்தவுடன் மரணத்தை வரவேற்று மண்ணுடன் மண்ணாக மறைந்துவிடலாம். வாழ்க் கையில் தனக்குக் கொடுத்துவைத்தது அவ்வளவுதான் என்பதை குந்தளம் நன்கு உணர்ந்திருந்தாள். 

உயர்தரக்கல்வி. பயின்ற ஒரு பெண், நாகரீக உலகின் முற்போக்கான கொள்கைகளை படித்தறிந்த ஒரு பெண், பிறர் தயவை நாடியிராமல் பல தலைமுறைகளுக்கு சொந்த சொத்துக்களை வைத்துக்கொண்டே சாலக்ஷேபம் செய்யும் சீமான் வீட்டில் வளரும் ஒரு பெண், பழைய சம்பிர தாயங்களையும் சமூகக் கட்டுப்பாடுகளையும் ஏன் அனுஷ்டிக்க வேண்டும்? தகப்பனாருக்கு அவள் அஞ்சினாளா? அப்படிச் சொல்லி விடுவதற்குமில்லை. மறுமணம் செய்துகொள்ள விரும்புவதாகஜாடையாக அவள் பிரஸ்தாபித்தது கூடக் கிடையாது; இதை தகப்பனார் விரும்புவாரோ அல்லது மாட்டாரோ என்ற சந்தே கம் குந்தளத்துக்கு இருந்ததாகவும் தெரியவில்லை. சுருங்கச் சொல் வதாயின் அவள் மனதை அறிந்தவர் ஒருவருமில்லை. 

ஒருநாள் மாதர் மறுமண சகாய சங்கத்தின் வருடாந்த விழாவில் சில தலைவர்கள் செய்த பிரசங்கங்களை குந்தளம்பத்திரிகையில் படித்துக்கொண்டிருந்தாள். அப்பொழுது அவள் மனதை அறிய சங்கரி ஜாடையாகப் பேச்சை ஆரம் பித்தாள். 

‘நம் சமூகத்தில் இது ஒரு பெரிய அநியாயம் குந்தளம்! ஆண்பிள்ளைகள் எத்தனை வயதானாலும் எவ்வளவு கல்யாணங்கள் வேண்டுமாயினும் செய்துகொள்ளலாமாம். பெண்ணாய்ப் பிறந்துவிட்டால் புருஷன் இறந்தபிறகு மறு மணம் செய்துகொள்வது பாபமாம்! இதில் என்ன நியாய மிருக்கிறதோ தெரியவில்லை’ என்றாள் சங்கரி. 

‘என்ன செய்யலாம்! அதுதான் சமூகக் கட்டுப்பாடு!’ என்று பட்டுக்கொள்ளாமல் பதில் சொன்னாள் குந்தளம்.

‘சட்டத்துக்கு சமூகமா அல்லது சமூகத்துக்குச் சட்டமா?’ 

‘சமூகத்துக்கு சில சட்டதிட்டங்கள் அவசியம்தான். சமூகம் லட்சியம் செய்யாத சட்டதிட்டங்களுக்கு மதிப்பு ஏது? 

சமூகத்தில் ஒரு கோஷ்டியாரை அடக்கி ஒடுக்கி வைத்திருக்கும் சட்டத்தை தர்ம நியாயமுள்ளதென்று எப்படிச் சொல்லமுடியும்? அப்படிப்பட்ட சட்டத்துக்கு மதிப்பு தான் ஏது?’ 

‘எது. தர்மம், எது நியாயம் என்பதை நிர்ணயிப்ப தும் அதே சட்டங்கள்தானே? இந்த நிர்ணய அதிகாரம் சமூகத்துக்கு அளிக்கப்படவில்லையே!’ 

‘பகுத்தறிவு என்று ஒன்றிருக்கிறதல்லவா? அதைப் புறக்கணித்து விடலாமா?’ 

‘இந்தக் கேள்விக்கே இடமில்லை. அனுஷ்டானத்திலிருந்து வரும் இந்துமதம் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டது!’ 

இந்த சம்பாஷணை வேதாந்தத்தின் எல்லையை எட்டிப் பிடிக்க முயற்சித்ததேதவிர சங்கரியின் நோக்கம் நிறைவேற வில்லை. அன்று மாலையில்தான் வஸுமதியிடமிருந்து சங் கரிக்குக் கடிதம் வந்தது. தன் தாயாருக்கு சுந்தரத்தைப் பற்றி வஸ ஒன்றுமே எழுதவில்லை. வழக்கமாக எழுதும் க்ஷேம சமாச்சாரங்களைக்கூடக் காணோம். ‘இத்துட னிருக்கும் கடிதத்தை குந்தளத்தினிடம் கொடுத்துவிடு. அய்யருக்குத் தெரியவேண்டாம் – வஸு’ என்று இரண்டே வரிகளுள்ள ஒரு சிறு துண்டுக் கடிதமும் குந்தளத்துக்கு விலாசமிட்ட ஒரு கவரும்தானிருந்தன. அய்யருக்குத் தெரியாமல் குந்தளத்தின் கடிதத்தையும், அதை அவளிடம் கொடுக்கும்படி வஸு எழுதிய துண்டுக் கடிதத்தையும் குந்தளத்திடம் சங்கரி சேர்த்துவிட்டாள். 

வஸுவின் கடிதம், குந்தளத்தைக் குழப்பத்திற்கு உள்ளாக்கியது. கழிந்துபோன பழையகால சம்பவங்கள் ஒவ்வொன்றாக அவள்முன் நாடகத்தைப்போல தோன்றி மறைந்தன. அவள் திருஷ்டியில் அந்தக்காலத்திலே தலை வாரிப் பின்னலிட்டுக்கொண்டு புத்தகமும் கையுமாகப் பள்ளிக்கூடத்திலிருந்து வரும் சுந்தரத்தையே கற்பனை செய்ய முடிந்தது. சுந்தரமும் அத்தையும் ஏன் சென்னைக்குப் போனார்கள்? நெருங்கிய பந்துக்களாயிருந்தும் அவர்கள் ஏன் திருச்சிக்கு வருவதேயில்லை? இந்தக் குடும்ப ரகசியங்களை அறிந்துகொள்ள குந்தளம் முயற்சித்ததில்லை. தந்தைக்கும் அத்தைக்கும் ஏதோ விரோதமிருப்பது மட்டும் அவளுக்குத் தெரியும். இரண்டொரு சந்தர்ப்பங்களில் அத்தையைப் பற்றி பேச்செடுத்தபொழுது அதைத் தனது தந்தை விரும்பவில்லை யென்பதை ஜாடையாக குந்தளம் தெரிந்து கொண்டாள். அதன்பின் அத்தையைப்பற்றி அவள் பிரஸ்தாபிப்பதேயில்லை. அத்தையைப் பிடிக்கவில்லையென்றால் அதற்கு அத்தான் சுந்தரம் என்ன செய்வார்? அவரும் ஏன் வருவது கிடையாது? இந்தக் கேள்விகளுக்கு குந்தளம் பதில் அறிய முயற்சித்திருந்தால் தெரிந்து கொண்டிருக்கலாம். ஆனால் தந்தைக்கு விருப்பமில்லாத விஷயங்களை அவரிடமிருந்து கிரகிக்கும் சுபாவம் அவளுக்கில்லை. 

வஸுவின் கடிதத்திலடங்கியிருந்த ‘எல்லா விஷயங்களையும்விட, “குந்தளப்பிரேமா” என்ற கதையைப்பற்றி எழுதிய குறிப்புகளே குந்தளத்தை ஆழ்ந்து சிந்திக்கச் செய்தன. அந்தக் கதையில் என்ன எழுதியிருந்தாரென்பதையாவது கேசவன் படித்திருக்கக்கூடாதா? உண்மையில் அவர் படித்திருந்து வஸுவிற்குச் சொல்லாமலிருந்திருப்பாரா? அல்லது வேண்டுமென்றே வஸுமதி தான் மறைக்கிறாளா? இதைத் தெளிவாக எழுதிக் கேட்டுவிட்டா லென்ன? கேட்டால் வஸுவும் கேசவனும் என்ன நினைப்பார்கள்? கதைக்கு குந்தளப்பிரேமா என்று பெயர் கொடுத்து அதை சுயசரித்திரமென்று சுந்தரம் வர்ணிப்பானேன்? இதெல்லாம் எப்படியாவது இருக்கட்டும்; வஸுமதிக்கு என்ன பதில் எழுதுவது? சுந்தரத்தைப் பற்றி குறிப்பிடாமலே பதில் எழுதிவிடுவதா? குறிப்பிடாமல் பதில் எழுதினாலும் அவள் கடிதம் என் மனதைப் புண்படுத்தி விட்டதாக வஸு நினைத்துக் கவலைப்படுவாள். சுந்தரத்தைப்பற்றி நான் பிரஸ்தாபித்தாலும் விகற்பமான அபிப்பிராயம் கொள்ளுவதற்கு இட மேற்படும். இது தர்ம சங்கடமான நிலைமையல்லவா? 

இப்படி வெகு நேரம் வரையில் மூளையைக் குழப் பிக்கொண்டாள் குந்தளம். கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தவளைப்போல பின்வருமாறு வஸுமதிக்கு எழுதினாள். 

அன்புள்ள வஸு, 

உன் கடிதம் கிடைத்தது. பத்துப் பக்கம் எழுத உனக்கு எப்படிப் பொறுமையிருந்ததென்பதுதான் ஆச்சரியமாயிருக்கிறது. ‘அன்புள்ள அக்கா’ என்று எழுதியிருக்கிறாய். உண்மையில் உனக்கு அன்பு கொஞ்சமாவது என்னிடமிருக்குமானால், இப்படி ஒன்பது மாத காலமாக திருச்சினாப்பள்ளியை எட்டிப் பார்க்காமலே இருப்பாயா? 

அத்தான் சுந்தரத்தைப்பற்றி நீ எழுதியிருந்ததைக் கவனித்தேன். அவர் கொண்டு வந்த கதையை நீயோ அல்லது உன் கணவரோ படித்துப் பார்த்திருக்க வேண்டு மென்றே எனக்குத் தோன்றுகிறது. படிக்கவில்லையென்று சொல்லி வேண்டுமென்றே என்னிடமிருந்து மறைக்கிறா யென்று நினைக்கிறேன். எப்படியானாலென்ன? நீயாக எழுதாத விஷயங்களை கட்டாயப்படுத்தித் தெரிந்துகொள்ள நான் விரும்பவில்லை. அத்தானைப்பற்றி மேலும் ஏதாவது எழுதுவதாயிருந்தால் அதை உன் அம்மாவின் கடிதத்துடன் வைத்து அனுப்புவதே நல்லது. உனக்கும் எனக்குமுள்ள உறவு அத்தானுக்குத் தெரியாமலிருப்பதுதான் உசிதமென்று நினைக்கிறேன்! 

உன் அன்புள்ள, 
குந்தளம். 

‘இதோ பார்த்தீர்களா குந்தளத்தின் கடிதத்தை! நான் நினைத்தபடியே ஆயிற்று!’ என்று சொல்லி குந்தளத்தினிடமிருந்து வந்த கடிதத்தைக் கேசவனிடம் கொடுத்தாள் வஸுமதி. கேசவன் அதைப் படித்துவிட்டு, ‘குந்தளத்திற்கு ஒன்றுமே எழுதவில்லை யென்றாயே! இப்பொழுது பார்த்தாயா ரகசியத்தைக் காப்பாற்றுவது ஆண்களா அல்லது பெண்களா என்பதை’ என்றான். 

‘சுந்தரத்தின் ‘குந்தளப்பிரேமா’வில் அவர் என்ன எழுதியிருக்கிறார் என்பது எப்படியாவது தெரியவேண்டும். அதை அறிய குந்தளம் விரும்புவது கடிதத்தில் தொனிக்க வில்லையா?’ 

‘எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. ஆனால் அந்தக் கதையைத்தான் திருப்பிக் கொண்டுபோய் விட்டானே!’ 

‘மறுபடியும் கேட்டுப்பாருங்களேன்.’ 

‘அவன் பேசியதைப் பார்த்தால் பிரசுரிக்க உடன் படுவானென்று தோன்றவில்லை. அப்படியே உடன்பட்டாலும் அதைப் பிரசுரிக்க முடியுமா? அய்யருக்கு விஷயம் தெரியாமற்போய்விடாதே?’ 

‘பெயர்களையும், சிற்சில இடங்களையும் மாற்றிப் பிரசுரிப்பதாகச் சொல்லிப்பாருங்கள். நாம் படித்துப் பார்த்து விட்டு மாற்றிப் பிரசுரிக்க முடியவில்லையென்று சொல்லி விடலாம்!’ 

‘சம்மதிப்பானென்று எனக்கு என்னவோ நம்பிக்கையில்லை!’ 

‘முயற்சி செய்து பார்ப்பதில் நஷ்டமில்லையே!’ 

‘சரி, பார்க்கிறேன்’ என்று சொல்லிப் புறப்பட்டான் கேசவன். 

குந்தளப்பிரேமாவை வாங்க கேசவன் எவ்வளவோ தந்திரங்களை யெல்லாம் அனுஷ்டித்துப் பார்த்தான். ஆனால் அவை பலிக்கவில்லை. 

‘இன்னும் நல்ல கதையாக வேறு எழுதிக்கொடுக்கிறேன்!’ என்றான் சுந்தரம் பிடிவாதமாக. 

“கொடுக்கமாட்டீர்களென்பதற்காக இல்லை. என்ன இருந்தாலும் புதிய கதை எழுதி முடிக்க ஒரு மாதமாவது பிடிக்கும். அதுவரையில் குந்தளப்பிரேமா அச்சாகட்டுமே. என்று பார்த்தேன். அச்சாபீஸில் கைவசம் ஒரு வேலையுமில்லை. குந்தளப்பிரேமாவைக் கொடுத்தால் பெயர்களையும், வேண்டுமானால் சிற்சில சம்பவங்களையுங்கூட மாற்றி வேலையை ஆரம்பித்துவிடலாம். பணத்தைப்பற்றி யோசிக்காதீர்கள். நீங்கள் கேட்பதைக் கொடுக்கிறேன்!’ என்றான் கேசவன். 

‘குந்தளப்பிரேமாவின் பேச்சை விட்டுவிடுங்கள். அதைப் பற்றி நினைப்பதிலேயே பிரயோசனமில்லை!’ 

‘வேண்டாம். படித்தாவது பார்க்கலாமா? உங்கள் நடையின் போக்கை கவனித்துவிட்டுக் கொடுத்துவிடுகிறேன். பிறகு ஒரு ஒப்பந்தம் செய்துகொள்வோம்!’ 

‘என் நடை தெரியவேண்டுமானால் நான் எழுதிய வேறு பல கதைகளிருக்கின்றன, தருகிறேன். எல்லாம் ஒன்றுதானே?’ 

இதன்பிறகு என்ன செய்வான் கேசவன் ? வஸுமதியிடம் தன் தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டியதாயிற்று. இதற்கிடையில் குந்தளத்தினிடமிருந்து இரண்டு கடிதங்கள் வந்துவிட்டன. அவற்றில் சுந்தரத்தைப் பற்றி ஸ்பஷ்டமாக அவள் ஒன்றும் கேட்கவில்லை. சுந்தரத்தின் பெயரைக்கூட பிரஸ்தாபிக்கவில்லை. ஆனால் வஸுவும் கேசவனும் ஏதோ சில விஷயங்களைத் தன்னிடமிருந்து மறைக்க முயற்சிக்கிறார்களெனப் புகார்செய்யும் தொனியிலிருந்தன குந்தளத்தின் கடிதங்கள். 

சுந்தரத்தைப்பற்றி ஆரம்பத்திலேயே எழுதாமலிருந்தால் இவ்வளவு தொந்தரவுமில்லையென்றுகூட நினைக்க ஆரம்பித்து விட்டாள் வஸு. 

இந்த நிலைமையில் ஒரு வாரம் கழித்து குந்தளத்தினிடமிருந்து சுருக்கமாக ஒரு கடிதம் வந்தது. 

‘அந்தரங்கமாகவும் மிகமிக அவசரமாகவும் சில விஷயங்கள் பேசவேண்டியிருக்கிறது. அத்தானைப்பற்றியல்ல. முடியுமானால் உன் கணவரின் அனுமதியைக் கேட்டுக் கொண்டு புறப்பட்டு வா!’ என்று எழுதியிருந்தாள் குந்தளம். 

‘அத்தானைப்பற்றியல்லவாம். பிறகு அந்தரங்கமான விஷயம் என்னவோ? அவசரமில்லாவிட்டால் குந்தளம் இப்படி எழுதமாட்டாளே!’ என்றாள் வஸு. 

‘எனக்கு எப்படித் தெரியும்? பெண்கள் விஷபமே விசித்திரமானது’ என்று பட்டுக்கொள்ளாமல் பதில் சொன்னான் கேசவன். 

‘உங்கள் யோசனை என்ன?’ 

‘போகவேண்டுமென்று நீ தீர்மானித்து விட்டாய். அதற்கு அப்பீல் ஏது?’ 

‘உங்களுக்குப் பிரியமில்லாவிட்டால் போகவில்லை!’

‘சிவசிவா! என் மேல் பழியைப் போடாதே. தாராளமாகப் போய்வா! சீக்கிரத்தில் திரும்பிவிட்டால் நல்லது!’

‘அப்படியானால் அங்கே போய் உட்கார்ந்து விடுவேனா என்ன?’ 

சுந்தரத்தைப்பற்றி நீ எழுதியிருக்கவேகூடாது. இதனால் என்னென்ன விபரீதங்கள் ஏற்படுமோ தெரியவில்லை!’ 

‘மூலகாரணம் நீங்கள்தானே? அவசரக் குடுக்கை மாதிரி எதற்காக ஊரெல்லாம் விசாரித்து அவரைத்தேடி அழைத்துவந்தீர்களாம்!’ 

‘சுந்தரத்தைப்பற்றி என்னிடம் ஒன்றுமே சொல்லாமலிருந்தால் நான் அவனைப்பற்றி விசாரிக்கப்போவது மில்லை அழைத்து வந்திருக்கவுமாட்டேன். குற்றம் என்மேலில்லையே!’ 

‘தவறு என்மீதுதான். அதன் பலனை உங்களுக்குப் பங்கில்லாமல் நானே தனியாக அனுபவிக்கிறேன். இப்பொழுது திருப்திதானா?’

அன்றிரவு வண்டியிலேயே வஸுமதி திருச்சினாப்பள்ளிக்குப் புறப்பட்டாள். திருச்சி வந்தபிறகுதான் குந்தளம் அழைத்தது உண்மையில் சுந்தரத்தைப்பற்றி விசாரிப்பதற்கல்ல வென்பது வஸுமதிக்குத் தெரிந்தது.

– தொடரும்…

– குந்தளப் பிரேமா, முதற் பதிப்பு: 1951, வீரகேசரி பிரசுரம், கொழும்பு.

2 thoughts on “குந்தளப் பிரேமா

    1. We are publishing 3 episodes every other day, please subscribe to our social media to get notified. Thanks.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *