பண்பாளர் வாழ்வு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 15, 2024
பார்வையிட்டோர்: 3,796 
 

(1990ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இலக்கியம்,சிறுகதை, நாவல், கட்டுரை, வரலாறு, கவிதை இப்படியாகப் பல நூல்கள் அலமாரியில் அடுக்கடுக்காக வைத்திருந்தார். மேசையின் மீது எழுதாத தாட்களும், எழுதிய தாட்களும் நிறைந்து கிடந்தன. பக்கத்திலேயே சில எழுதுகோல்களும் கிடந்தன. எழுதிய வேண்டாத தாட்கள் நிறைந்து வழிந்த நிலையில் ஒரு குப்பைத் தொட்டி இருந்தது.

அந்த அறையின் ஒரு பக்கத்தில் ஒரு கட்டில்; அதில் அழகான ஒரு மெத்தை; புத்தம் புதியன போன்ற இரு தலையணைகள்; நன்கு தோய்க்கப்பட்ட ஒரு போர்வை. அவ்வறையின் மறுபக்கத்தில் ஒரு சிறிய அலமாரி. அதனுள் அவனுக்குப் போதுமான உடைகள். இவைதான் அவனது சொத்துக்கள்.

வேலை முடிந்து வருவான்; வந்ததும் குளிப்பான்; உடைகளை மாற்றுவான்; உடனே தமிழர்களின் கோட்டையான சிராங்கூன் சாலைக் குப் புறப்படுவான். அங்குதான் அவனுக்குப் பிடித்தமான உணவுக்கடை இருக்கிறது. அந்த உணவுக் கடைக்கு உணவுண்ணச் செல்வான்.

பத்து மாதம் சுமந்து பெற்ற தாய் கூட சில வேளைகளில் நன்கு கவனிக்கத் தவறிவிடுவாள், ஆனால் அந்தச் சோற்றுக் கடை சொக்கலிங்கம் அப்படியல்ல. வாங்க! வாங்க! என்று அன்பொழுக அழைப்பார். அமர்வதற்கு நாற்காலியை எடுத்துச் சரியாகப் போடுவார். சுத்தமாக உள்ள மேசையை மேலும் துடைப்பார். ஒருமுறைக்கு இருமுறை தண்ணீர் ஊற்றி அந்த இலையைக் கழுவுவார். இலையைப் போட்டுச் சோற்றை நிரப்பிவிட்டு, இறைச்சியா? கோழியா? மீனா? என்று அடுக்கு வார். ஒருவகையாக கறியை நிறுத்திவிட்டு மேங்கறியைத் தொடங்கு வார். போதும் என்றாலும் விடமாட்டார்; இல்லைங்க தம்பி! இது ரொம்ப நன்றாக இருக்கும். இப்போதுதான் செய்தேன்; சூடாகக்கூட இருக்கிறது. கொஞ்சம் வைக்கட்டுமா? என்று மேலும் கேட்பார்.

எல்லாமே நன்றாகத்தான் இருக்கின்றன. ஆனால் வயிற்றில் தான் இடமில்லை; என்று சொன்னதும் சொக்கலிங்கம் இலேசாகச் சிரிப்பார். ஒரு வகையாக வயிற்றை நிரப்பிக் கொண்டு அவன் தன் அறைக்குத் திரும்புவான். சங்கர்! ஆம்! அதுதான் அவன் பெயர். அறையை அடைந்ததும் தனக்கு வந்துள்ள மடல்களை எடுத்துப் பிரித்துப் படிப்பான். சில கடிதங்களைப் படிக்கும்போது நகைப்பான். சிலவற்றைப் படிக்கும் போது சிந்திப்பான். சில கடிதங்களுக்கு உடனே பதில் எழுதுவான். அவ்வேலை முடிந்ததும் நூல்களைப் புரட்டிப் பார்க்கத் தொடங்கி விடுவான்.

சிந்தனையில் ஏதேனும் பட்டுவிட்டால் எழுதுகோலை எடுத்து எழுதத் தொடங்கி விடுவான். கற்பனை முடியும்வரை எழுதுவான்.

அப்போது அவனுக்குத் தூக்கம் வராது. சோர்வு தென்படாது. அவனுக்கு மணி போவதே தெரியாமல் எழுதிக் கொண்டிருப்பான். அதே வேளையில் வேண்டாத தாள்கள் குப்பைத் தொட்டியில் குவிந்திருக்கும்; மேசை முழுதும் எழுதிய தாட்கள் நிறைந்திருக்கும்.

கற்பனை கலைந்துவிட்டால் அவற்றை அப்படியே போட்டுவிட்டு கட்டிலில் படுத்துப் புரளுவான். அல்லது நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு வெளியே செல்வான். அவர்களுடன் உரையாடி மகிழ்வதிலே அன்றையப் பொழுதைப் போக்குவான்.

சங்கர் தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தான். ஆம்! அது ஒரு ஜப்பானிய கப்பல் கட்டும் நிறுவனம். அந்நிறுவனத்தின் பொறுப்பா ளர்கள் தன்னைக் காக்காய் பிடிப்பவனுக்கோ தன்னைப் புகழ்ந்து வாழ்த் துபவனுக்கோ மதிப்புக் கொடுக்க மாட்டார்கள். மாறாகத் திறமையாளர் களுக்கே வாய்ப்பு வசதிகளைக் கொடுப்பார்கள். அவ்வகையில் சங்க ரின் பொறுப்பும், சுறுசுறுப்பும் வேலையில் கொண்ட பற்றும் முதலாளி யைக் கவர்ந்தது. ஆனால் வேலை செய்த மற்றவர்களுக்கு மட்டும் வருத்தம் தோன்றியது. மற்றவர்களின் வருத்தத்தைப் பற்றியும் பொறா மையைப் பற்றியும் பொருட்படுத்தாத சங்கர் தனது கடமையில் கண் ணாய் இருந்தான். சங்கரைச் சரியாகப் புரிந்துகொண்ட முதலாளி அவனை ஜப்பானுக்கு ஆறுமாதப் பயிற்சிக்காக அனுப்பி வைத்தார். பயிற்சி முடிந்து வந்த சங்கரை அப்பகுதிக்கு மேற்பார்வையாளராக நியமித்தார். பொறாமைப்பட்டோர் வாய் மூடி இருந்தனர். சிலர் வஞ்சகமாகப் புகழ்ந்தனர். சிலர் மனதுக்குள் எரிந்து விழுந்தனர்.

சங்கர் பதவி உயர்ந்ததற்காக இறுமாப்புக் கொள்ளவில்லை. தன் ஊழியர்களிடம் என்றும் போல் அன்பாகவும், பண்பாகவும் பழகி வந் தான். அவனது குறிக்கோள் மூன்றுதான். முதலில் தனது பணியைச் சரியாகச் செய்தல். அடுத்தது எழுத்துலகில் ஈடுபடுதல்; மூன்றாவது நண்பர்களுடனோ அல்லது தனியாகவோ முடிந்த அளவு மன நிறைவு டன் வாழ்க்கையைப் போக்குவது. இக்குறிக்கோள்களுடன் சங்கர் வாழந்து வந்தான்.

கிட்டத்தட்ட முப்பத்துமூன்று வயதை நெருங்கிவிட்ட சங்கர் திரும ணம் செய்யாமல் இருந்தான். திருமணந்தான் செய்யவில்லையே தவிர காதல் கடிதங்கள் மலைபோல் எழுதியிருப்பான். அவரது எழுத்துப் படைப்புக்களைப் பாராட்டி வந்த மடல்களில் பாதிக்கு மேல் காதல் கடிதங்களேயாகும்.

அவற்றில் ஒன்றுகூட கவைக்கு உதவவில்லை எல்லாமே கற்பனைக் காதலுடன் நின்றுவிட்டன.

‘ஆருயிர் சங்கர் அவர்களே! வணக்கம். தங்களின் ‘அன்புடைமை’ என்ற படைப்பை எழுத்துவிடாமல் படித்தேன். என் உள்ளத் தையே கவர்ந்துவிட்டது. அப்படைப்பில் வருகின்ற அன்பரசனைத் தாங்களாகவும், முல்லையே நானாகவும் நினைத்துப் பார்த்தபோது என் மனம் இன்பத்தில் திளைத்தது. ஈடேறுமா என் நினைப்பு?’ இப்படி எத்தனையோ வாசகர்களிடமிருந்து கடிதங்கள் வந்து குவிந்தன. இவர்க ளில் யாரை எப்படித் தேர்ந்தெடுப்பது என்று தெரியாமல் சங்கர் தவித்துக் கொண்டிருந்தான்.

ஒருநாள் சங்கரின் உயிர் நண்பர் வந்தார். அவர் சங்கரின் வாழ்க் கையில் மிகுந்த ஈடுபாடு காட்டுபவர், “உன்னை ஓரிடத்திற்கு அழைத்துப் போக வந்துள்ளேன். புறப்படு சென்று வருவோம்” என்றார். சங்கர் ஏன்? எதற்கு? என்றெல்லாம் கேட்பவன் அன்று ஒன்றுமே கேளாமல் பேசாமடந்தையாகச் சென்றான்.

அவர் ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அந்த வீட்டில் ஏதோ முக்கிய நிகழ்ச்சி நடக்கப் போகிறது என்று தனக்குத்தானே நினைத்துக் கொண்டு இருந்தான். ஆனால் அதிகமான ஆட்களில்லை. ஆடம்பரமும் அதிகமில்லை. பெரிய அளவில் ஏற்பாடுமில்லை. அதனால் சங்கரால் ஒன்றுமே புரிந்துகொள்ள முடியவில்லை.

சங்கரும் அவரை அழைத்துச் சென்றவரும் அவர்களுடன் நடுத்தர வயதுள்ள ஒருவரும் சற்று வயதான ஒருவரும் கூடத்தில் அமர்ந்திருந்த னர். சங்கரை அறிமுகப்படுத்தி வைத்த போதும் சங்கர் அவர்களுடன் அவ்வளவாகப் பேச்சில் கலந்து கொள்ளாமல் மேசையில் இருந்த ‘அகல் விளக்கு’ என்ற நூலைப் புரட்டிக் கொண்டிருந்தான். அப்போது மற்றவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். இடையிடையே சங்கரைப் பற்றிய பேச்சு அடிபட்டது.

அலங்காரம் செய்யப்பட்ட பாவை ஒருத்தி சுவைநீர் கொண்டு வந்தாள். சங்கரை அழைத்துச் சென்றவர் காதருகில் “பெண்ணைப் பார்” என்றார். அதுவரை அந்தப் பெண்ணைப் பார்த்துக் கொண்டிருந்தவன், நண்பர் சொன்னதும் பார்வையை மீட்டுக் கொண்டான். தான் அப்பெண்ணைப் பார்த்ததற்காகத் தான் அப்படிச் சொன்னாரோ என்று எண்ணிக் கொண்டான். அழகாக உடுத்தி அன்ன நடை போட்டு வந்தவள் சுவைநீரை எடுத்து எல்லாருக்கும் கொடுத்தாள். எங்கேயோ பார்த் துக் கொண்டிருந்த சங்கர் அந்தப் பெண்ணின் கையைத் தொட்டுவிட்டான்.

ஏதோ தொடக்கூடாத ஒன்றைத் தொட்டுவிட்டதாகக் கருதிய சங்கர் கையைப் பட்டென எடுத்துக் கொண்டான். அதைவிடப் பன்மடங்கு உணர்ச்சி வயப்பட்ட அவள் சுவைநீரை அச்சிறிய மேசையில் வைத்து விட்டுப் பட்டென சென்று விட்டாள். இந்நிகழ்ச்சியை யாரும் பார்த்து விட்டார்களோ என்று சங்கர் நோட்டமிட்டான்.

இக்காட்சியைக் கண்டுகொண்டிருந்த பெரியவர் அதனால் ஒன்றும் பயப்பட வேண்டாம். எல்லாம் நன்மைக்கே. எப்படிப் பெண் பிடித்திருக்கிறதா? என்று ஒரு போடு போட்டார்.

மின்சாரததால் தாக்குண்டவன் போல் என்ன சொல்வதென்றே புரியாமல் அழைத்து வந்தவரைப் பார்த்தான்! அவரும் பெரியவரைப் போலவே சொல்லத் தொடங்கினார். இதற்கிடையில் பெண்ணுக்குச் சம்மதம் என்ற சொல்கிறாள் அங்கு வந்த பெண்ணின் தோழி கூறினாள்.

அப்போது மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிப்பவரைப் போல் சங்கரின் நிலையிருந்தது. தன் வாழ்வின் இன்ப துன்பத்தில் முழுப்பங்கேற்கும் நண்பன் செய்த இந்தச் செயலை வரவேற்பதா? வெறுத்து ஒதுக்கிவிட்டு வெளியேறுவதா? யாது செய்வது என்று அறியாது திகைத்துக் கொண்டிருந்தான்.

அப்போது பெண்ணின் தகப்பனார் மாப்பிள்ளையின் படிப்பு, பண்பு, பதவி எல்லாமே எங்களுக்குப் பிடித்திருக்கிறது. எங்கள் பெண்ணுக்கு விருப்பம் என்றால் எங்களுக்குச் சம்மதமே என்றவர் மனைவி பக்கம் திரும்பினார். பெண்ணின் தாயார் கணவர் கூற்றை ஆமோதிப்பது போல் தலையை அசைத்தார்.

பதினைந்து வயதிலேயே பெண்ணுக்குத் திருமணத்தைச் செய்து ஒரு கணவனோடு பெண்ணை அன்று வாழ விட்டார்கள். இன்று இருபது, முப்பது, நாற்பது வயதைக் கடந்தும் பெண்களுக்குத் திருமணத்தை நடத்தி வைக்காமல் இருக்கிறார்கள். வாழ வேண்டிய வயதில் பெண்களால் சிவனே என்று இருக்க முடியுமா? இந்த உண்மையை உணர்ந்த அந்தப் பெண்ணின் பெற்றோர் மிக்க மனநிறைவு கொண்டனர்.

சங்கர் மௌனமாக இருப்பது சம்மதத்திற்கு அறிகுறி. ஆகவே எங்களுக்கு முழுத்திருப்தியே என்று சங்கருக்குப் பேச இடமில்லாமல் முடித்துவிட்டார். நண்பரின் பேச்சைச் சங்கர் கேட்டுக் கொண்டிருந் தான். இப்போது நடப்பதெல்லாம் கனவா? அல்லது நனவா ஒன்றுமே புரியவில்லையே என்று முடிவெடுக்க முடியாமல் இருந்தான் சங்கர்.

ஒரு வகையாக எல்லாம் பேசி முடித்துவிட்டு வந்தவர்கள் புறப்பட்டனர். சங்கர் நண்பன் பின்னே பேசாமல் சென்றான். சற்று தூரம் சென்ற தும் என்னிடம் ஒரு வார்த்தைகூட சொல்லாமல் இப்படித் திடீர் என்று அழைத்து வந்து ஒரு பெண்ணைக் காட்டி முடிவெடுத்தது சரியா? நீதியா? அவள் நல்லவளா? பண்புள்ளவளா? என்று தெரிந்துகொள்ள வேண்டாமா? நான் இதற்குச் சம்மதிக்க முடியாது என்றான்.

சங்கர் நீ வேண்டாம் என்றால்; இந்தப் பெண்ணை மணக்க முடியாதென்றால், நான் கட்டாயப்படுத்த மாட்டேன். ஆனால் நீ நன்கு சிந்தித்துப்பார். ஒரு நல்ல, உண்மையான நண்பனின் கடமை என்ன?

”நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு”

என்கிறார் வள்ளுவர். இதன் பொருள் என்ன? சிரித்து மிகழ்வதற்கு மட்டுமா நட்பு? நன்றாக உடுத்திக் கொண்டு ஊர் சுற்றுவதற்கு மட்டுமா நட்பு? இல்லை நண்பா. இல்லை. நண்பன் அறிந்தோ அறியாமலோ தவறு செய்துவிட்டால் அத்தவற்றைச் சுட்டிக்காட்டி, எடுத்துக்கூறி, இடித்துப் பேசிக் கண்டிப்பதும் உண்மை நண்பனின் கடமை என்கிறார்.

நான் எப்படிப்பட்ட நண்பனாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறாய்? உனக்கு எத்தனை வயதாகிறது? இவ்வளவு வயதான பிறகும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழலாம் என்று நினைக்கிறாயா?

அல்லது காலமெல்லாம் சாமியாராக வாழத் திட்டமிட்டுள்ளாயா? அல்லது என்னிடத்தில் உண்மையைச் சொல் உனக்கு ஆண்மையில்லையா? சொல் நண்பா, சொல்.

இனிமேல் நீ திருமணம் செய்து, பிள்ளை பெற்று அந்தப் பிள்ளைகளைப் படிக்க வைத்து ஆளாக்குவது எப்போது? அவர்களுக்குக் கல்யாணம் செய்து பேரப் பிள்ளைகளைத் தூக்கி மகிழ்வது எப்போது? இவற்றை எல்லாம் எண்ணிப் பார். என்னை முகநக நகும் நண்பனாக மட்டும் எண்ணிவிடாதே. நான் அப்படி நினைக்கவில்லை. இதற்குமேல் நான் உனக்கு ஒன்றும் கூறவிரும்பவில்லை. இனி நீயே முடிவு செய் என்று சற்று கோபத்துடன் கூறி முடித்தான்.

சங்கர் எண்ணிப் பார்த்தான். சிந்தித்துப் பார்த்தான். தன் தவற்றை உணர்ந்தான். தன்னை ஆண்மை இல்லாதவன் என்று நினைக்கும் அளவிற்குக் காலம் கடத்தியது தவறு என்பதை உணர்ந்தான். தன் நண்பனின் உண்மையான நட்பைப் பற்றி எண்ணிப்பார்த்தான். மனம் மகிழ்ந்த சங்கர் நண்பரிடத்தில் முழு மனதுடன் சம்மதம் தெரிவித்தான்.

எல்லா ஏற்பாடுகளும் எளிமையாக, ஆனால் அதே வேளையில் செம்மையாக நடந்துகொண்டு வந்தது. திருமண நாளும் வந்தது. ஒரு பேச்சாளரும், பகுத்தறிவுடன் நடத்தி வைப்பவரும் மேடைக்கு வந்த னர். இப்போது மணமக்கள் மேடைக்கு வருவார்கள் என்றதும் மணமக்களை வருக! வருக என்ற வாழ்த்துப்பாடல் முழங்கியது. மணமக்கள் மண்டபத்தில் நுழைந்ததும் விருந்தினர்கள் எழுந்து கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

மணமக்கள் மணமேடையில் அமர்ந்ததும் பெற்றோர்கள் மலர்மாலையைத் தங்கள் பிள்ளைகளின் கழுத்தில் போட்டனர். திருமணத்தை நடத்தி வைப்பவர் இப்போது மணமக்கள் மாலை மாற்றிக் கொள்வார்கள் என்றதும் மணமக்கள் மாலை மாற்றிக் கொண்டனர். திருமணம் ஆன பெண் என்பதற்கு அடையாளமாக இப்போது மணமகன் தாலியைக் கட்டுவார் என்றார். அவ்வாறே மங்கலநாண் மணமகளின் கழுத்தை அழகு செய்தது.

மணமக்களை வாழ்த்தி அன்பரசன் பேசுவார் என்றதும் மணமக்களுக்கும் வந்திருந்த விருந்தினர்களுக்கும் வணக்கம் கூறிய அன்பரசன், தற்போது சூட்டப்பட்ட தாலி மணமகள் மணமகனுக்கு அடிமை என்ப தற்கு அடையாளமல்ல. அவர் ஒருவருக்கு உரிமையானவர். இனிமேல் மண மான ஆண்களும், ஆண்களும், தாலி சூடிக் கொண்ட பெண்கள் கற்பு என்னும் வேலிக்குள் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளவேண்டும். ஆகவே அதைக் கண்டு ஒதுங்கிப் பண்பாளனாக வாழுங்கள்; என்பதை உணர வேண்டும், உணர்த்த வேண்டும் என்பதற்காகவே தாலி அணியப்படுகிறது.

வாழ்க்கை என்பது எப்போதும் தென்றல் வீசும் பூஞ்சோலை என்று மட்டும் நினைக்கக் கூடாது. சில வேளைகளில் புயல் வீசும்; சூறாவளியா கவும் மாறக்கூடும். அப்போது ஒருவர் பொறை இருவர் நட்பு என்பதை மறக்கக்கூடாது. குழந்தைகளைப் பெறுவது மட்டும் பெரிதல்ல. பெற்ற குழந்தைக்குப் பொருள் தேட வேண்டும் என்பது மட்டும் போதாது. அன்புள்ள, அறிவுள்ள, பண்புள்ள பிள்ளையாக வாழ நல்ல கல்விச் செல்வத்தைக் குறைவில்லாமல் கொடுக்க வேண்டும்.

வாழ்க்கை என்பது ஒருநாள், இரு நாள் பழகும் பழக்கமல்ல. ஆயுள் முழுதும் தொடரும் நெடும் பயணம். இப்பயணத்தில் பல ஏற்ற இறக்கங்களைச் சந்திக்க நேரிடும். அவற்றைச் சந்தித்து எதிர்நீச்சல் போடவேண்டும். அதுதான் வாழ்க்கை என்று- இரத்தின சுருக்கமாகக் கூறி முடித்தார். அதைத் தொடர்ந்து மணமகனும் மணமகளும் நன்றியுரை கூறியதோடு வாழ்நாள் முழுதும் என்ன, இன்ப துன்பங்கள் ஏற்பட்டாலும் இணைந்தே வாழ்வோம் என்று உறுதிகூற மணவிழா இனிதே நடந்தேறியது.

சங்கர் தன் கதைகளில் கண்ட கற்பனை நாயகியைப் போல் மனைவியை நடத்தி வந்தான். இல்லாளுடன் இணைந்து இனிதே இல்லறத்தை நடத்தி வந்தான்.

அலமாரியில் இருந்த நூல்களை எடுத்துப் படித்துத் தனிமையைப் போக்கி வந்தாள் லதா. ஒருநாள் அவள் படித்த நூலினுள் சங்கருக்கு வந்த காதல் மடல் ஒன்று இருந்தது. அதைப்படித்த அவளது உள்ளம் துடித்தது. சினத்தை அடக்கிக் கொண்டு மற்ற புத்தகங்களைப் பார்த்தாள். சங்கர் எழுதிய காதல் மடல் ஒன்று கண்ணில் பட்டது. அதற்கு மேலும் அவளால் சும்மா இருக்க முடியவில்லை. விம்மி விம்மி அழுதாள். கண்கள் சிவந்து முகம் வீங்கிய போதும் அழுதுகொண்டே இருந்தாள்.

சங்கரின் பதவி உயர்வைப் பொறுத்துக் கொள்ள முடியாத திருமாள், ஜாடைமாடையாகப் பேசி வந்தான். அன்று சங்கரின் முன்னாலேயே தன் வயிற்றெரிச்சலைக் கொட்டித் தீர்த்தான். பல இன மக்கள் சேர்ந்து வேலை செய்கின்ற இடத்தில் இந்தத் திருமாள் மட்டும் இவ்வ ளவு பொறாமை உள்ளவனாக இருக்கிறானே; எவ்வளவு உதவி செய்தா லும் இவ்வளவு கெட்டவனாக இருக்கிறானே என்று எண்ணி வருந்திய வண்ணம் வீட்டிற்கு வந்தான் சங்கர்.

லதா சீறினாள்; பாய்ந்தாள்; அழுதாள்; அடித்துக் கொண்டாள்; ஆடாத ஆட்டம் ஆடினாள். ஒரு நாளும் இல்லாமல் இன்று ஏன் இப்படி பேசுகிறாள்? இவளுக்கு என்ன நேர்ந்தது? சங்கருக்குப் புரியவில்லை. தனது துன்பத்தைப் பொறுத்துக் கொண்டு அமைதியோடு ‘ஏன் கோபமாகப் பேசுகிறாய்?” என்று கேட்டான். ஆனால் அவள் பதிலளிக்காமல் ஆவேசமாகப் பேசினாள்.

பொறுமையிழந்த சங்கர் பொங்கி எழுந்தான். ‘பளார்’ ‘பளார்’ என்று நான்கு கொடுத்தான். அடியை வாங்கிக் கொண்ட லதா, கடிதத்தை நீட்டினாள். கடிதத்தைக் கண்டதும் சங்கருக்கு எல்லாம் புரிந்துவிட்டது. இதற்காகவா இப்படி வேதனைப்படுகிறாய்? கவலையை விடு. எல்லாவற்றையும் பிற்பாடு விளக்கமாகக் கூறுகிறேன். இப்போது அமைதியாக இரு என்று கூறினான்.

ஆனால், லதா உடனே பதில் சொல்ல வேண்டும். இல்லையேல் நான் இப்போதே என் தாய்வீடு செல்லப் போகிறேன்; என்று படபடப்பு டன் சொன்னாள். சங்கர் லதாவின் விருப்பப்படி கடந்த கால நிகழ்ச்சி களை விளக்கிக் கூறி இம்மடல் உன்னை மணப்பதற்கு முன் வந்தது. இது வந்த மடலுக்குப் பதில் எழுதியது என்று பக்குவமாகச் சொன்னான். ஆனாலும் லதா நம்பவோ சங்கரின் கூற்றை ஏற்கவோ மறுத்துக் கத்திக் கொண்டிருந்தாள்.

அவ்வேளையில் சங்கரின் நண்பன் அங்கே வந்ததும், லதா, நல்ல நேரத்தில் வந்தீர்கள். அண்ணா, நீங்களே சொல்லுங்கள் என்று ஆரம்பித்தாள். கதையைக் கேட்டு முடித்த இளங்கோவன், புரியாத் திருமணம் செய்து கொண்டவர்கள் இப்படிப் பொங்கி எழுந்தால் அதில் பொருள் இருக்கிறது. பகுத்தறிவோடு, சுய உணர்வோடு, நல்லவர்கள் நாலு வார்த்தை பேசியதைக் கேட்டு அறிந்து கொண்ட நீ, கணவரின் வாழ்க்கையில் ஏற்படும் இன்ப துன்பங்களில் பங்கெடுத்து இணைபிரியாது வாழ்வேன் என்று பேசிய நீ, இப்போது இப்படிப் பேசுவது சரியா? குடும்பம் என்றால் நல்லது கெட்டது இருக்கத்தான் செய்யும். அதற்காக ‘நான் உடனே தாய் வீடு போய்விடுவேன்’ என்று மிரட்டுவதா?

சரி, போனால் போ, நான் வேறு ஒருத்தியை மணந்து கொள்கிறேன் என்று சங்கர் சொல்லிவிட்டால்… அப்படிச் சொல்லிவிடமாட்டான். அப்படி விட்டுவிடுவதாக வைத்துக்கொள். நீ என்ன செய்யப்போகிறாய்? சங்கர் நீண்ட காலமாக எழுதிக் கொண்டு வருகிறான். உன்னை மணம் முடிக்காத காலத்தில் யாரோ ஒரு பெண்ணுக்கு எழுதிய கடிதத்தை வைத்துக் கொண்டு இப்படி ஆடலாமா?

அதைச் செய்யக்கூடாது. இதைச் செய்யக்கூடாது என்று கட்டுப் பாடு போட்டுக் கணவனைத் திருத்த முடியாது. அச்செயல் வெற்றி அளிக்காது. நல்ல பெற்றோர்களாக இருந்தால் நீ கணவனோடு கோபித்து வருவதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதற்குத்தான் வள்ளுவர்.

“தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலான்க்ஷள் பெண்”

என்று கூறியுள்ளார்.

கற்பு நெறியில் உன்னையும் காத்துக் கொண்டு, உன் கணவனையும் காப்பாற்ற வேண்டும். குடும்பத்திற்குத் தகுந்த புகழையும் காத்து உறுதி தளராமல் வாழ வேண்டும் என்கிறார் வள்ளுவர். அதுதான் பெண்மைக்கு அழகு, உன் குடும்பத்திற்கு அழகு என்று கூறியபோது, தன் தவற்றை உணர்ந்து லதா சிந்திக்கத் தொடங்கினாள்.

உனக்குத் திருமணம் நடைபெறாது இருந்த காலத்தில் உன் பெற் றோர் உற்ற வேதனையை நீ அறியவில்லையா? உனக்குத் தெரியாதா? திருமணத்திற்காக எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது? அவற்றை எல்லாம் மறந்துவிட்டாயா? இழந்து விடுவது எளிது; வேண் டாம் என்று ஒதுக்கி விடுவது சுலபம்; ஆனால், கிடைத்த வாழ்வை நிலைநிறுத்தி முறையோடு வாழ்வதுதானம்மா பெருமை. அதுதான்

உனக்கும், உனது குடும்பத்திற்கும், நமது இனத்திற்கும் சிறப்பு. இனி நீ தான் ஒரு முடிவு எடுக்க வேண்டும்; என்று உடன் பிறவா அந்தச் சகோதரன் சொல்ல முடித்தான்.

‘அண்ணா, ‘பெண்புத்தி பின்பத்தி’ என்பார்களே, அதைப் போல நான் அவசரப்பட்டுவிட்டேன். வாழ்வோ. தாழ்வோ இனி என்றும் என் கண்வரோடு வாழ்கிறேன். கனவிலும் என் கணவரை விட்டுப் பிரியேன். நட்பிற்காகவும், உடன் பிறவாத ஒரு தங்ககைக்காவும் நீங்கள் காட்டிய பொறுப்பை இந்த உயிர் உள்ளவரை மறவேன். உங்களின் நல்ல மனத் திற்கு நீங்கள் நலமே வாழ்வீர்கள் அண்ணா” என்று லதா கூறியதும், அவள் உண்மையை உணர்ந்ததை அறிந்து வடிவழகனின் உள்ளம் மகிழ்ந்தது.

– தனிமரம் (சிறுகதைகள்), முதல் பதிப்பு: ஏப்ரல் 1990, இந்தியர் பண்பாட்டு நிகழ்ச்சி ஏற்பட்டுக் குழு, சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *