(1948ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“உன்னைப் போல நல்ல குணமுடையவனை அடைய அவள் கொடுத்து வைக்க வேண்டும். அதனால்தான் சொல்லுகிறேன்” என்ற வார்த்தை அவன் நினைவிலே அப்படியே ஊடாடிக் கொண்டிருந்தது. வேறு யாரும் கூறியிருந்தால் அதை அவன் அவ்வளவு பிரமாதமாகக் கொண்டிருக்கமாட்டான். ஓர் உயர்ந்த குடும்பத்திலே பிறந்த ஒரு இளம் பெண்ணின் வாயிலிருந்துதான் இந்த வார்த்தைகளை அவன் கேட்டான்.
இதைச் சிந்தித்தபடியே அவன் பழக்கடைக்குச் சென்றான். அவனுக்கு இன்று ஒரு ஐந்து ரூபா நோட்டுக் கிடைத்திருந்தது. அதற்குப் பழம் வாங்குவதற்காகவே கடைக்குச் சென்றான். அவனுடைய வயதான தாய் பல தினங்களாகவே படுத்த படுக்கையாக இருக்கிறாள். அவளை இருமலும் பீடித்திருந்தது. பழங்கள் வாங்கிக் கொடுத்தால் நல்லது என்று வைத்தியர் கூறியிருந்தார். சில பழங்கள் வாங்கினான்.
தாய், தந்தையை இழந்துவிட்ட மருமக்கள் – குழந்தைகள் “பாவைப்பிள்ளை” வாங்கித் தரும்படி பல தினங்களாகக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். கையிலே காசிருக்கும்போது அவர்களுக்கும் ஒரு பொம்மையை வாங்கிவிடலாம் என்று யோசித்தான். பாவம், தாயில்லாக் குழந்தைகள் வேறு யாரிடம் கேட்பார்கள்? ஒரு பொம்மையும் வாங்கினான்.
பழக்கூடையை ஒரு கையிற் பிடித்தான். பொம்மையை மற்றக் கையிற் பிடித்துக் கொண்டு தெருவோரமாக நடந்தான். அந்த மாலை வேளையில் தெருவோரத்திலிருக்கும் புல் காலிற்பட ‘ஜில்’ என்றிருந்தது.
தெருவோரமாக இருந்த மரங்களைப் பார்த்தான். அவை மாலைப்பொழுதில் தங்களுக் குரிய கம்பீரத்தோடு காணப்பட்டன. அவற்றின் தளிர்களை அசைத்துக்கொண்டு மெல்லிய காற்று வீசியது. அவற்றிற்கு மேலே வானமும் பொன்மயமாகத் திகழ்ந்தது. மரங்களின் பசு மையை நிமிர்ந்து பார்த்தான். மேற்குப் புறமாக அந்த அழகான வானத்தின் காட்சியையும் பார்த்தான். அவன் உந்தியிலிருந்து ஒரு மூச்சு வெளியேறி வந்தது. ஐயோ, எத்தனை மாலைக் காலம் என் வாழ்க்கையில் வீணாகக்கழிகிறது!” என்று அவன் எண்ணியிருப்பான்!
காலை தொடங்கி மாலை வரை எஜமானரின் மோட்டார் வண்டியை ஓட்டவேண்டும். ஓய்வே கிடையாது. காலையில் எஜமானரைக் கந்தோருக்குக் கொண்டு போக வேண்டும். கமலாசினி – எஜமானர் மகள்; அவளைப் பெண்கள் கலாசாலைக்குக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும். அதுவும் முடிந்தால் எஜமானியின் தொல்லை அவள் அடுத்த வீட்டிற்குச் செல்வதென்றாலும் வண்டி எடுத்தாக வேண்டும். சாயந்தரம் எல்லோரையும் திருப்பி அழைத்தவர வேண்டும். எல்லாம் முடிந்தது என்று வீட்டிற்குச் சென்றால் அங்கே அன்னையின் நோய்க்குப் பரிகாரம் செய்ய வேண்டும். இடையில் குழந்தைகளின் சண
டைக்கு வகை சொல்லியாக வேண்டும். தெருவில் நடந்து செல்லும் போதுதான் சிறிது ஓய்வு. அதையும் தடைசெய்ய ஒரு சிந்தனை அவன் மனத்தில் இன்று இடம்பெற்றுவிட்டது.
கமலாசனியைக் கலாசாலையிலிருந்து அழைத்துக் கொண்டு வரும் போதுதான் அது நடைபெற்றது. சில தினங்களாகக் கமலாசனி அவனுடைய சுகதுக்கங்களைக் கரிசனையாக விசாரித்து வந்தாள். அவனுடைய தாய் நோயாக இருப்பதும் அவளைப் பராமரிக்கப் பணமின்றி இவன் கஷ்டப்படுவதும் அவளுக்குத் தெரியும்.
மோட்டார் வீட்டை நோக்கி வந்துகொண்டிருந்தது. “பாவம் உன் அம்மா கஷ்டப்படுவ தாகச் சொல்லுகிறாள். இந்தா; இதைக் கொண்டு போய் அவளுக்கு ஏதாவது வேண்டியதை வாங்கிக் கொடு” என்று கூறி ஐந்து ரூபா பணம் கொடுத்தாள்.
சிறிது தயக்கத்தின்பின் மிகவும் நன்றியறிதலுடன் அதை வாங்கிக் கொண்டான்.
“உன் அம்மா. இப்படியெல்லாம் நோயால் கஷ்டப்படுவதாகச் சொல்லுகிறாயே, நீ விவா கஞ் செய்து கொண்டால், அவள் அவவைக் கவனித்துக் கொள்ளுவாள். உன் கஷ்டம் குறையும் என்று சிறிது நேரத்தின் பின் கமலாசனி சொன்னாள்.
அவள் அப்படிக் கூறியது அவனுக்கு என்னமோ ஒரு மாதிரி இருந்தது. என்றாலும் அவள் கூறியதற்குப் பதில் கூறவேண்டுமே! “எல்லாவற்றிக்கும் பணமல்லவோ வேண்டும்?” என்றான்.
“அது வேண்டுந்தான். ஆனால் உன்னை மணப்பவள் தன்னளவிலே அதிர்ஷ்டமுடை நானாகவே இருப்பாள்.”
“ஏன் அப்படிச் சொல்லுகிறீர்கள்?”
“உன்னைப் போல நல்லகுணமள்ள ஒருவனை அடைய அவள் கொடுத்து வைக்க வேண்டும்.”
உடனே திரும்பி அவள் முகத்தைப் பார்க்க வேண்டும். அவள் முகத்திலே என்ன பாலை இருக்கிறதென்பதைக் கவனிக்கவேண்டும்” என்ற ஆசை அவன் உள்ளத்தில் எழுந் – ஆனாலும் யோக்கியமான அவன் மனம் அப்படிச் செய்யவிடவில்லை. வண்டி வீட்டு வாயிலுக்கு வந்துவிட்டது. கமலாசனி இறங்கி உள்ளே போய்விட்டாள்.
அதன் பின்புதான் அவனும் பழம் வாங்கிக்கொண்டு வீட்டுக்குப்போனான். பழங்க ளைத் தாயிடம் கொடுத்தான். பொம்மையைக் குழந்தைகள் இருவரும் சண்டையிட்டுக் கொண்டுவந்து பறித்தெடுத்தார்கள். “இந்தப் பழங்களை எதற்காக வாங்கினாய்? எனக்காக என் இப்படிப் பணத்தை வீணாக்கிறாய். இன்னுஞ் சில நாட்கள்தான் நான் உயிருடன் இருப்பேன் என்று நினைக்கிறேன். குழந்தைகளும் நீயும் இன்னும் போன மாதச் சம்பளத் தில் அரைவாசி நாட்களைக் கூடகழிக்கவில்லை. இப்படியாகப் பணத்தைச் செலவு செய்து
விட்டு என்ன செய்வாய்?” என்று தாய் கூறினாள்.
‘எஜமானரின் மகள் கொடுத்தது’ என்று கூற அவனுக்கு மனமில்லை . அப்படிக் கூறி னால் தன்னைப் பற்றித் தாய் ஏதாவது நினைத்துக் கொள்ளுவாளோ என்று அவன் குற்ற முள்ள நெஞ்சு குறுகுறுத்தது.
‘அம்மா, என்ன கஷ்டப்பட்டாவது உனக்கு வேண்டியவற்றை நான் செய்தே கொடுக்க வேண்டியவன். இல்லாவிட்டால் கடவுளுக்குக் கணக்குக் கொடுக்க முடியாது” என்றான்.
அப்போது “மாமா அண்ணா நெடுக வைத்து விளையாடுகிறான் எனக்குத் தருகி றானில்லை” என்று முறைப்பாடு கொண்டு வந்தான் இளையவன்.
“நடராசா! தம்பிக்கும் கொடு; அவனும் வைத்து விளையாடட்டும்” என்று உரக்க கூறி அவனை அனுப்பினான். ‘மாமா’
“இந்தக் குழந்தைகளின் தொல்லை. பொறுக்க முடியவில்லை . பகல் முழுவதுமே சண்டையிட்டுக் கொண்டிருந்ததுகள். இந்த வருத்தத்தோடு அந்தத் தொல்லை ஒருபுறம்”என்றாள் தாய்.
பிறகு தொடர்ந்து அவளே சொன்னாள்.
“அவர்களைக் கவனிக்கவாவது நீ ஒரு கலியாணம் செய்துகொள் என்று எத்தனைதரம் கூறிவிட்டேன். நான் உயிரோடு இருக்கும் போது நீ கலியாணம் செய்து விட்டால். அதைப் பார்த்துக்கொண்டு நான் சந்தோஷமாகச் சாவேன். நான் இந்தப் பொறுப்புக்களையும் உன்னையும் ஒருத்தியிடம் ஒப்படைத்து விட்டு நிம்மதியாகச் செத்துப் போவேன்.”
இதை அவள் கூறி முடிப்பதற்கிடையில் அவன் மனம் பெருஞ் சுற்றுப் பிரயாணம் ஒன்றை முடித்தது.
“அம்மா, உன்னையும் இந்தக் குழந்தைகளையும் காப்பாற்ற என்னால் முடியவில்லை. அப்பாலே இன்னுமொரு சீவனையும் சேர்த்துக் கொண்டால் வேடிக்கையாகத்தான் இருக்கும்” என்றான்.
“நல்லவளாய், கஷ்டமறிந்த குடும்பத்தில் பிறந்தவளாய்ப் பார்த்து மணந்து கொள். அவளும் ஏதோ கால்வயிற்றுக்காவது உண்டு, உன்னுடன் சேர்ந்து இந்தக் குடும்பத்தைக் கொண்டிழுப்பாள்… எத்தனைபேர் இங்கே உனக்கு மணம் பேசி வந்தார்கள். எல்லாரும் நல்லவர்களென்று நான் சொல்லவில்லை. முத்தையா நல்லவன்; அவனுடைய மகளும் தங்கமானவள்…”
அவனுடைய மூளை குழம்பிக் கொண்டிருந்தது. நிம்மதியாக நின்று இவ் விஷ யங்களைக் கேட்க அவன் மனநிலை ஏற்றதாக இல்லை. “எல்லாம் பிறகு யோசித்துச் செய்ய லாம். இப்போது பசிக்கிறது” என்று கூறிக்கொண்டு சமைக்கப் போய்விட்டான்.
எல்லாவற்றையும் முடித்துத் தாய்க்கும் சிறுவர்களுக்கும் உணவு கொடுத்துத் தானும் ஏதோ சாப்பிட்டு விட்டுப் படுக்கப் போனான். சமையல் செய்து கொண்டிருக்கும் போதும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதும் அவன் மனம் பெரும் போராட்டத்திலேயே இருந்தது.
படுத்திருந்தான். நித்திரை வர மறுத்துவிட்டது. எப்படி வரும்? சாயந்தரம் வண்டியிலே நிகழ்ந்த அந்த நிகழ்ச்சி. என் குணத்தைப் புகழ்ந்தாள். எனக்கு வர இருக்கும் மனைவி தன்னளவிலே அதிஷ்டக்காரி என்றாள். எதற்காக இப்படியாக அவள் புகழவேண்டும்?… ஒரு நாளும் இப்படியாகப் பேசாதவள் ஏன் இன்று இப்படிக் கூறினாள். என்னிடத்திலும் அம்மா மீதும் எவ்வளவு இரக்கம்! ஐந்து ரூபா… அவளுக்கு அது அற்பமாக இருக்கலாம். ஆனாலும் வீணாக… ஒரு சமயம் என்னிடத்திலே… இல்லை . அப்படியிருக்க முடியாது என்ன பயித் தியக்காரத்தனமான யோசனை!
பொம்மையை யாருடைய பாயில் கிடத்தி நித்திரையாக்குவது என்ற விஷயத்திலே சிறுவர்களுக்கிடையே சண்டை வந்துவிட்டது. வந்து முறையிட்டார்கள். நடுவிலே பொம் மையை வைத்துக்கொண்டு இருவரையும் இரு பக்கத்திலும் படுக்கும்படி சமாதான ஆலோசனை கூறி அனுப்பினான்.
பழையபடியும் அதே சிந்தனை என்ன நினைத்தேன்…. ஒரு சமயம் அவளுக்கு …. இல்லை . அப்படி இருக்க முடியாது.’
சிறிது நேரஞ் சென்று “ஏன் அப்படி இருக்க முடியாது. எத்தனையோ பெரிய இடத்துப் பெண்கள் டிரைவர்மாரைக் காதலித்து இருக்கிறார்கள். சில இடங்களிலே அது கலியாணத் திலும் வந்து முடிந்திருக்கிறதே…. அவளுக்கு ஒரு வேளை என்னிடம் காதல் இருக்கலாம்” என்று கற்பனை புரண்டது.
இப்பொழுது தாய் அவனை அழைத்தாள். அவன் எழுந்து சென்றான். “எஜமானர் உன்னிடத்திலே எப்படி” என்று கேட்டார்.
“பிழையில்லை ” “எப்பொழுதும் அவர் மனங் கோணாதபடி நடந்து கொள். விசுவாசமாக வும் இருந்துகொள். அப்படி அவருக்குப் பிடித்தமாக நடந்தால் உன் கல்யாணத்திற்கு ஏதாவது ஒத்தாசை செய்வார்.”
“சரி அம்மா! பேசாமல் படுத்துக்கொள். அதெல்லாம் நான் நல்லமாதிரி நடந்து கொள் கிறேன்” என்று கூறிவிட்டு மறுபடியும் படுக்க வந்தான்.
தாயின் உபதேசம் மனத்திலே சுழன்றது. “ஆம் அவள்தான் காதல் வைத்தாலும், நான் அதிலிருந்து விலகி நடந்துகொள்ள வேண்டும். எஜமானர் என்னிடத்தில் வைத்திருக்கும் நம்பிக்கைக்குப் பாதகம் செய்யக் கூடாது.!”
என்றாலும் அந்த விஷயத்தை அவனால் மறக்க முடியவில்லை. மறக்க முயன்றான்; மனக் கண் முன் வந்துகொண்டே இருந்தது. விசுவாசத்தைப் பற்றி யோசித்த போதிலும் பேதை மனம் குறுக்கேதான் இழுத்துக் கொண்டிருந்தது.
எஞ்சினியர் துரையின் மகள் டிரைவரோடு ஓடிப் போனதையும் மரியாதைக்குப் பயந்த எஞ்சினியர் போன கழுதை போகட்டும். அது எக்கேடு கெட்டாலும் காரியமில்லை’ என்று மௌனமாக இருந்துவிட்டதையும் எண்ணும் போது அவனுக்குச் சிறிது சந்தோஷமாக இருந்தது. தொடர்ந்து பிரபல நியாயவாதி சோமநாதருடைய மகள் டிரைவரைக் காதலித்து அவனோடு ஓடியதும் பின்பு அந்த நியாயவாதி பொலிஸ்’ உதவியுடன் அவளை மீட்டு பலாத் காரஞ் செய்ததாக வழக்கு வைத்ததும் அந்தப் பெண் காதலனுக்கு மாறாக சாட்சி சொல்லி அவனைச் சிறைக்கு அனுப்பியதும் அவன் ஞாபகத்தில் வந்த போது ஒருவித அச்சம் கலந்தது.
எப்படித்தான் இருந்த போதிலும் அவளுடைய உருவமும், அழகும் அவள் அன்று கூறிய வார்த்தைகளும், பணம் கொடுத்தாளே, அந்த அன்பும், இவை எல்லாவற்றையும் மறந்துவிட அவன் மனம் அவனுடன் ஒத்துழைக்கவில்லை .
அதிக நேரம் சிந்தித்தபடி நித்திரை இன்றியிருந்துவிட்டான். அவனுக்கு நித்திரை வந்த போது இரண்டுமணி இருக்கும். ஆனால் விடிய வழக்கமாக எழ வேண்டிய நேரத்திற்கு எழுந்துவிட்டான். காலையிலே தான் செய்யவேண்டிய கருமங்களை முடித்துக் குழந்தை களுக்கும் தாய்க்கும் ஏதோ உணவு கொடுத்துத் தானும் உணவருந்திக்கொண்டு புறப்பட்டான்.
வழமைக்கு மாறாக இன்று சிறிது அலங்காரஞ் செய்து கொண்டான். ஏனோ மனம் அப் படித்தான் தூண்டியது. செல்லும் வழியிலே தபாற்கந்தோருக்குச் சென்று எஜமானர் வீட்டு விலாசத்திற்கு வருங் கடிதங்களையும் வாங்கிக் கொண்டு சென்றான்.
– நேரமானதும் மோட்டாரை வெளியில் கொண்டு வந்து நிறுத்தினான். கமலாசினி காரில் ஏறும்போது வழக்கத்திற்கு மாறாக ஒரு மின்வெட்டுப் பார்வையும் கூடவே ஒரு இள முறுவலையும் அவனை நோக்கி வீசிவிட்டாள். மோட்டாரும் வழக்கத்திற்கு மாறாகக் கடு வேகமாகப் பறந்தது.
வழியிலே தற்செயலாக ஒரு முறை பின்னே திரும்பிப் பார்த்தான். அவள் முகத்தில் இன்னும் அதே முறுவல். ‘அம்மாவுக்கு எப்படியிருக்கிறது?’ என்று ஆவலோடு கேட்டாள்.
*அம்மாவுக்குப் பழம் வாங்கிக்கொடுத்தேன். இன்று காலையிலே அவவுக்கு இருமல் தணிந்திருக்கிறது. உங்களுக்குக் கடவுள் நல்ல வாழ்வு கொடுக்க வேண்டும், என்று வாழ்த்தினா” என்று சொன்னான். அவன் அவசியமில்லாமற் பொய் கூறுவதில்லை. பொய் கூற வேண்டி வந்த அவசிய சந்தர்ப்பத்தில் இதுவுமொன்று.
அவள் தாய் கூறிய வாழ்த்திற்கு மகிழ்பவன் போன்று மெல்ல நகைத்தபடி ‘உனக்கு ஏதாவது இப்படி அவசியமான தருணம் வந்தால் என்னிடம் கேள்; நான் பணம் தருகிறேன். உன் தாயை நீகஷ்டப்பட விடுவது நல்லதல்ல” என்றாள்.
அவள் தன்னிடம் காட்டும் அன்பிலே அவன் உள்ளம் குளிர்ந்தது. முகம் மலர்ந்தது. முறுவல் பூத்தது.
இன்னுஞ் சிறிது தூரஞ் சென்ற பின்பு “நீ எனக்கொரு உதவி செய்ய வேண்டும்” என்ற கமலாசனி தாழ்ந்த குரலிலே அவனைக் கேட்டாள்.
“உங்களுக்குச் செய்யாத உதவியை வேறு யாருக்குச் செய்யப் போகிறேன்” என்றான் மிக ஆனந்தமாக.
“உன்னுடைய நல்ல குணத்திலே எனக்கு ஒரு நம்பிக்கை உண்டு. அதனாலேதான் உன்னிடம் கேட்கிறேன். வேறு யாரிடமும் இந்த உதவியை நான் கேட்க மாட்டேன்.”
அவள் பார்த்த அந்தப் பார்வை அவனை என்னவோ செய்தது! அவள் கேட்கப்போகும் உதவியை அறிவதற்கு அவன் மனம் தவித்துக் கொண்டிருந்தது.
“தினமும் காலையில் வரும் போது தபால் வாங்கி வருவாயல்லவா? இனிமேல்… என் பெயருக்கு ஏதாவது தபால் வந்தால் அதை ஒருவரிடமும் கொடுத்துவிடாதே. என்னிடம் கொண்டு வந்து இரகசியமாகத் தந்துவிடு” என்றாள் கமலாசனி!
ஆவலுடன் அவளைப் பார்த்துக் கேட்டவன். ஏமாற்றத்துடன் தெருவைப் பார்க்க முகத்தைத் திருப்பிக் கொண்டு, “அதற்கென்ன அப்படிச் செய்கிறேன்” என்றான். சிறிது தூரம் வண்டி ஓடியபின் நீ வராத நாட்களிலே ஏதாவது கடிதம் வந்தால் தபாற்காரனையே வைத் திருக்கும்படி சொல்லு பின்பு. நீ வரும் நாட் களில் வாங்கி வா. வேண்டுமானால் அவனுக்கும்…ஏதாவது…உதவி செய். நான் பணம் தருகிறேன்” என்றாள்.
ஏமாற்றத்துக்கு அப்பாலே. ஒரு மெல்லிய அருவருப்பும் உண்டாயிற்று. ‘ஆம்’ என்ப தற்கு அடையாளமாக அவன் தலை அசைந்தது. ஆனால் மனம் அசைந்ததோ!
– மறுமலர்ச்சி பங்குனி 1948.
– மறுமலர்ச்சிக்கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 1997, ஈழத்து இலக்கியப் புனைகதைத் துறையின் மறுமலர்ச்சிக் காலகட்டத்துச் சிறுகதைகள் இருபத்தியைந்து 1946 – 1948, தொகுப்பாசிரியர்: செங்கை ஆழியான் சு. குணராசா, வெளியீடு: கல்வி, பண்பாட்டு அலுவல்கள், விளையாட்டுத்துறை அனமச்சு, திருகோணமலை.
– ஈழத்துச் சிறுகதைக் களஞ்சியம், முதற் பதிப்பு: நவம்பர் 2019, பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வடக்கு மாகாணம்.