கிளி மைனாக் கதை
கதையாசிரியர்: அரு.ராமநாதன்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 2, 2026
பார்வையிட்டோர்: 621
(1958ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
இரண்டாம் பகுதி: 32 பதுமைகள் சொல்லிய கதைகள்
2-வது மதனாபிஷேகவல்லிப் பதுமை சொல்லிய வேதாளக் கதைகள்
வேதாளம் சொல்லிய புதிர் கதைகள்
5. மதன சுந்தரி கதை | 6. கிளி மைனாக் கதை | 7. வீரவரன் கதை
விக்கிரமாதித்தன் மறுபடியும் வேதாளத்தை முருங்க மரத்திலிருந்து பிடித்து வரும்போது வேதாளம் பின்வரும் கதையைச் சொன்னது:
இந்தப் பூமியிலே பாடலிபுத்திரம் என்று புகழ்பெற்ற நகரம் ஒன்று இருக்கிறது. அதிலே முன்னொரு சமயம் விக்கிரமகேசரி என்ற அரசன் ஆண்டு வந்தான். தெய்வ கடாக்ஷத்தில் சகல தர்மங்களுக்கும், தவபணிக்கும் ஓர் இருப்பிடமாக அவன் விளங்கினான். அவனிடம் பஞ்சவர்ணக் கிளி இருந்தது. அதன் பெயர் விதக்தசூடாமணி என்பது ஆகும். அதற்கு எல்லா சாஸ்திரங்களும். திரிகால ஞானமும் தெரியும; அதனால் அது நல்ல அறிவும் கூரிய புத்தியும் கொண்டிருந்தது.
அந்தக் கிளியின் யோசனைப்படியே அவ்வரசன் தனக்குச் சரிசமானமான அந்தஸ்துடைய மகத நாட்டு ராஜ குடும்பத்தைச் சேர்ந்த சந்திரபிரபை என்பவளை மணந்து கொண்டான். அரசியும் ஒரு நாகண வாய்ப் புள் (மைனா) ஒன்றை வளர்த்து வந்தாள். சோமிகை என்ற பெயர் கொண்ட அந்த மைனா கிளியைப் போலவே அறிவும் விவேகமும் வாய்ந்திருந்தது.
இவ்விடம் வந்த பிறகு கிளியும் மைனாவும் ஒரு கூட்டில் சேர்ந்து வாழ்ந்து, தங்கள் விவேக புத்தியில் அரசனையும், அரசியையும் களிப்பித்து வந்தன. ஒருநாள் கிளி தன் சகாவான மைனாவிடம் ஆசைகொண்டு, அதைப் பார்த்து, “நாம் இருவரும் ஒரே கூண்டில் இருந்து சாப்பிட்டுத் தூங்குகின்றோம். ஆகவே நீ என்னை மணந்து விடு,” என்று கேட்டது. அதற்கு மைனா, “எல்லா ஆண்களுமே நன்றி கெட்டவர்கள்; கொடூர சித்தம் படைத்தவர்கள். ஆகவே, நான் எந்த ஆணையும் மணக்க விரும்பவில்லை.” என்று பதில் சொல்லிவிட்டது. கிளியோ, “எல்லா ஆண்களும் கொடியவர் என்று கூறுவது உண்மையல்ல. பெண்களே கொடிய குணமும், குரூர மனமும் உடையவர்கள்” என்று சுடச்சுடப் பதில் அளித்தது.
இரண்டுக்கும் இடையே பெருத்த விவாதம் மூண்டு விட்டது. கடைசியில் இரண்டும் ஓர் ஒப்பந்தத்துக்கு வந்தன. தங்களுக்கிடையே உள்ள விவாதத்தை அரசனிடம் தெரிவித்து, அவன் தீர்ப்புக்கு விட்டுவிடவேண்டும். கிளி ஜெயித்து விட்டால், மைனா உடனே கிளியை மணந்து கொள்ள வேண்டும். மைனா ஜெயித்து விட்டாலோ கிளி அதற்கு அடிமையாகி விடவேண்டும்.
ஆஸ்தான மண்டபத்தில் இருந்த அரசன் அவ்விரு பறவைகளின் விவாதத்தைக் கேட்டான். உடனே மைனாவை நோக்கி, “ஆண்கள் எப்படி நன்றி கெட்டவர்களாவார்கள்? சொல்” என்று வினவினான். “கேளுங்கள் அரசே!” என்று மைனா சொல்லி ஆண்களின் குற்றங்களை எடுத்துக் காட்டி தன் கட்சியை நிரூபிக்கப் பின்வரும் கதையைக் கூறியது.
“காமாந்தகி என்ற பெயர் கொண்ட புராதன நகரம் ஒன்று இருக்கிறது. அங்கே அர்த்ததத்தன் என்னும் வியாபாரி ஒருவன் இருந்தான். அவன் மிக்க பணக்காரன். அவனுக்கு ஒரு மகன் உண்டு. அவன் பெயர் தனதத்தன் என்பது. காலக்கிரமத்தில் தந்தை இறந்த பிறகு, மகன் ஊதாரித்தனமாகச் செலவு செய்து வந்தான். தூர்த்தர்கள் சூழ்ந்து கொண்டு அவனை சூதாட்டத்திலும், வேறு துன்மார்க்கங்களிலும் அமிழ்த்தி விட்டார்கள். கெட்ட நடத்தை என்னும் மரத்துக்குத் துஷ்ட சகவாசமே வேராகும் அன்றோ? சிறிது காலத்திலே அவன் செல்வம் முழுவதும் கரைந்து விட்டது. தன் ஏழ்மையைக் கண்டு வெட்கி, சொந்த நாட்டிலே இருக்கப் பிடிக்காமல், அவன் வெளி நாடுகளிலே சஞ்சாரம் செய்ய புறப்பட்டு விட்டான்.
“அவ்விதம் அவன் சுற்றி வரும்போது ஒரு சமயம் சந்தனபுரம் என்னும் நகரத்தை அடைந்தான். அங்கே சாப்பாட்டை வேண்டி ஒரு வியாபாரியின் வீட்டுக்குள் அவன் நுழைந்தான். தெய்வ சமாக அந்த வியாபாரி அவனுடைய அழகையும் இளமையையும் கண்டு உள்ளம் பூரித்து அவனைப்பற்றி விசாரித்தார். அவன் நல்ல குடியில் பிறந்தவன் என்பதையறிந்து வியாபாரி தனதத்தனை உபசரித்துத் தம் பராமரிப்பிலே வைத்துக் கொண்டார்; ஏராளமான சீதனத்துடன் தம் மகள் இரத்தினாவளியையும் அவனுக்கு மணம் செய்து கொடுத்தார். அதற்குப் பிறகு தனதத்தன் தன் மாமனார் வீட்டோடு சௌக்கியமாக இருந்து வந்தான்.
“சில நாட்களிலே அவன் தனக்கு ஏற்பட்டிருந்த இந்தச் சந்தோஷத்தில் பழைய கஷ்டங்களையெல்லாம் மறந்து விட்டான். செல்வம் மறுபடியும் ‘சேரவே, பழையபடியே அவன் ஊதாரித்தனமாகச் செலவு செய்ய ஆசை கொண்டான். அதனால் ஊருக்கே போய்விட அவன் திரும்பவும் தன் சொந்த விரும்பினான். அந்த தூர்த்தன் தன் மாமனாரைத் தொந்திரவு செய்ய ஆரம்பித்தான். மாமனாருக்கு அந்தப் பெண்தான் ஒரு குழந்தை. எனினும் தொந்திரவு தாங்காமல் கடைசியில் மாமனாரும் ஒப்புக் கொண்டார். அவர் தம் பெண்ணுக்கு எல்லாவி த நகைகளையும் போட்டு அலங்கரித்து ஏராளமான சீதனத்தோடு அவளை மாப்பிள்ளையுடன் அனுப்பினார். கூடவே அவர்களுக்கு உதவியாக ஒரு கிழவியையும் அனுப்பி வைத்தார். மூவரும் கிளம்பிச் சென்றார்கள்.
“நெடுந்தூரம் நடந்து அவர்கள் வழியிலே ஒரு காட்டை அடைந்தார்கள். அங்கே திருடர் பயம் உண்டு என்று சாக்குக்கூறி தனதத்தன் தன் மனைவியின் நகைகளையெல்லாம் கழற்றிவிடச் சொல்லி அவற்றைத் தன் வசப்படுத்திக் கொண்டான். சூதாடுவது கள்ளக்காதல் புரிவது முதலிய தொழில்களில் ஈடுபட்ட ஆண்கள், மனம் இரும்பு போல இறுகி, நன்றி கெட்டு, எவ்வளவு கேவலமான நடத்தைக்கும் இழிந்து விடுவார்கள் என்பது இதனால் விளங்கவில்லையா?
“அந்த நீசன். தன் மனைவி எவ்வளவோ சீலவதியாக இருந்தும் அவளுடைய செல்வத்துக்கு ஆசைப்பட்டு, அவளைக் கொன்றுவிட முடிவு செய்தான். அதே போலத் தன் மனைவி யையும் கிழவியையும் பாதாளமான ஒரு படுகுழியில் தள்ளி விட்டுத் தன் வழியே அவன் போய்விட்டான். விழுந்த வேகத்தில் கிழவி இறந்துவிட்டாள். ஆயினும் அவன் மனைவி கொடிகளில் சிக்கியதால் உயிர் துறக்கவில்லை. அவளுக்கு விதித்திருந்த காலம் முடியவில்லை. துக்கம் தாளாமல் அழுது கொண்டே அவள் கோரைகளையும், கொடிகளையும் பிடித்துக்கொண்டு மெதுவாகக் கரையேறினாள். அங்கங்கே விசாரித்து வழிகேட்டுக் கொண்டு அவள் தன் பிறந்தகம் வந்து சேர்ந்தாள்.
“திடீரென்று அவள் இந்த நிலையில் திரும்பி வந்ததைக் கண்ட அவளுடைய பெற்றோர்கள் நடந்ததைப் பற்றி ஆவலோடு விசாரித்தார்கள். சீலவதியான அவள், தன் புருஷனுடைய குற்றத்தை வெளியிட விரும்பவில்லை. ஆகவே அவள் பின்வருமாறு தெரிவித்தாள். “வழியில் கொள்ளைக்காரர் எங்களைத் தாக்கி, என் புருஷனை கட்டிப்பிடித்து இழுத்துச் சென்றுவிட்டனர். கிழவி இறந்து விட்டாள். நான் ஒரு பகுதியில் விழுந்ததால் உயிர் தப்பினேன். அந்த வழியாகச் சென்ற வழிப்போக்கன் ஒருவன் என்மீது தயை கூர்ந்து என்னைப் பள்ளத்திலிருந்து கரையேற்றி விட்டான். நான் உயிருடன் இருக்க வேண்டுமென்று என் தலையில் எழுதியிருக்கிறது. பிழைத்து இவ்விடம் வந்து சேர்ந்தேன்.”
“அவள் வார்த்தைகளைக் கேட்ட அவளுடைய பெற்றோர்கள் அவளைப் பெரிதும் தேற்றினர். அவளும் ஓடிப்போன தன் கணவன் நினைவாகவே பிறந்தகத்தில் தங்கியிருந்தாள்.
“சொந்த ஊர் திரும்பிய தனதத்தன் கொஞ்ச காலத்தில் தான் கொணர்ந்த செல்வம் முழுவதையும் சூதாடித் தொலைத்து விட்டான். ஆகவே அவன் மறுபடியும் தன் மாமனாரிடம் சென்று அவரிடத்திலிருந்து பணத்தை பெற்றுவர நினைத்தான். அவர் தம் பெண்ணைப் பற்றி விசாரிக்கும் போது அவளை ஊரிலே விட்டு வந்திருப்பதாகக் கூறிவிடலாம் என்றும் அவன் தீர்மானித்தான். இவ்விதம் முடிவு செய்து அவன் மாமனார் வீட்டை நோக்கி வந்தான்.
“அவன் தூரத்தில் வருவதைக் கண்ட அவன் மனைவி ஓடி வந்தாள். கணவன் எவ்வளவு கொடியவனாக இருந்தாலும் மனைவிக்கு அவனிடம் உள்ள அன்பும் பாசமும் குறையவே குறையாது. ஆகவே தன் கணவன் பெரிய துரோகியாக இருந்தும் அவள் அதைப் பொருட்படுத்தாது, அவன் கால்களில் விழுந்தாள்.
“தன் மனைவியைக் கண்டதும் அவன் மிரண்டு விட்டான். தன் கொடுமை வெளிப்பட்டு விட்டதோ என்று பயந்தான். ஆனால், அவன் மனைவியோ, தன்னுடைய தந்தையாரிடம் கூறியது அனைத்தையும் தெரிவித்து, அவனுடைய பயத்தை போக்கித் தைரியம் ஊட்டினாள். அவனும் பயமில்லாமல் மாமனார் வீடு வந்தான். அவனைக் கண்டதும் மாமனாரும். மாமியாரும் நிரம்பவும் சந்தோஷமடைந்து அவனை வரவேற்றார்கள். பெரிதும் மனமகிழ்ந்து உற்றார் உறவினர், எல்லோரையும் அழைத்துப் பெரும் விருந்து வைத்து, அந்த வைபவத்தைக் கொண்டாடினார். அதிர்ஷ்டவசமாகத் திருடர்கள் கையில் சிக்கிய தம்முடைய மாப்பிள்ளை மீண்டும் உயிருடன் திரும்பி வந்தான் என்று அவர் எண்ணினார்.
“அதற்குப் பிறகு. தனதத்தன் தன் மனைவியான இரத்தினாவளியுடன் மாமனார் வீட்டிலேயே சௌக்கியமாக வாழ்ந்து வந்தான். ஆயினும் அவனால் சும்மாயிருக்க முடிய வில்லை. ஒருநாள் இரவு, அவன் நன்றிகெட்டு செய்ததைச் சொல்லவும் கூசுகிறது. இருந்தாலும் சொல்லத்தானே வேண்டியிருக்கிறது? தன்னையணைத்துப் படுத்திருந்த மனைவியையே அவன் ஒருநாள் இரவு கொன்றுபோட்டு அவள் ஆபரணங்களையெல்லாம் கழற்றிக் கொண்டு ஓடிப்போய் விட்டான். இப்படிப்பட்ட கொடிய சித்தம் படைத்தவர் ஆண்கள்.”
இவ்விதம் மைனா தன் கதையைக் கூறி முடித்ததும் அரசன் கிளியைப் பார்த்து, “நீ என்ன சொல்கிறாய்?” என்று கேட்டான்.
உடனே கிளி மன்னனைப் பார்த்து, ‘அரசே பெண்கள் தாங்கமுடியாத துடுக்குத்தனம், துணிவு. சோரத்தனம், கொடுமை. ஆகியவை வாய்ந்தவர்கள். இதை விளக்கும் பின்வரும் கதையைக் கேளுங்கள்” என்று ஆரம்பித்தது:
“ஹர்ஷவதி என்ற நகரம் ஒன்று இருக்கிறது. அந்நகரிலே தர்மதத்தன் என்னும் பிரபல வியாபாரி ஒருவர் இருந்தார். அவருக்குக் கோடிக்கணக்காகச் சொத்துகள் இருந்தன. அவருக்கு வசுதத்தை என்ற பெண்ணொருத்தி இருந்தாள். அவர் அவளைத் தம் உயிரினும் அதிகமாக நேசித்தார். தங்களுக்கு சரிசமமான அந்தஸ்துள்ள சமுத்திரதத்தன் என்பவனுக்கு அவளை மணம் செய்து கொடுத்தார் தகப்பனார். “மணமகன் தாம்பரலிப்தி என்னும் நகரத்தைச் சேர்ந்தவன்; இளமையும் செல்வமும் ஒருங்கே சேரப்பெற்றவன். கண்டோர் காமுறும் வண்ணம் கண்ணுக்கு ஒரு விருந்தாக அவன் நல்ல அழகு வாய்ந்தவன்.
“ஒரு சமயம் அவள் புருஷன் தன் சொந்த நாட்டில் இருக்க, வசுதத்தை பிறந்தகம் வந்திருந்தாள். அப்போது ஒருநாள் அவள் நல்ல அழகுடன் கட்டிளங் காளையான இளைஞன் ஒருவனைத் தூரத்திலிருந்து பார்த்தாள். உடனே மாரன் கணை அவளைத் தாக்கியது. ஆகவே. அவள் தாதி ஒருத்தி மூலம் அந்த இளைஞனைத் தன் கள்ளக் காதலனாக ஏற்பாடு செய்து கொண்டாள். அது முதல் அவள் ஒவ்வோர் இரவையும் அவனுடன் கழித்து வந்தாள்.
”ஆனால் திடீரென்று அவள் கணவன் ஒருநாள் அவ்விடம் வந்து சேர்ந்தான். அவனுடைய பெற்றோர்கள் அவன் வரவைக் கண்டு நிரம்பவும் சந்தோஷம் கொண்டார்கள். தங்கள் பெண்ணை நன்றாக ஆடையாபரணங்களால் அலங்கரித்தார்கள். தன் தாய் எவ்வளவோ நல்ல வார்த்தைகள் சொல்லியும், வசுதத்தை தன் புருஷன் மனசைக் களிப்பிக்க ஒரு வார்த்தையும் பேசவில்லை. புருஷனே வலுவில் வந்து பேச முயன்ற போதும். அவள் மனம் வேறு ஒருவன் மீது இருந்ததால், தான் தூங்குவது போலப் பாசாங்கு செய்தாள். பாவம்; அவள் புருஷனும் வழிநடைக் களைப்பாலும். சாப்பாட்டு மயக்கத்தாலும் கண்சுழலச் சீக்கிரமாகவே தூங்கிப்போய் விட்டான்.
“இதற்கிடையில், அந்த வீட்டில் உள்ளவர்கள் யாவரும் சாப்பிட்டுப் படுத்துத் தூங்கி விட்டதையறிந்த ஒரு திருடன் சுவரில் கன்னம் வைத்து வழியுண்டாக்கி, வசுதத்தையும், அவள் கணவனும் படுத்துத் தூங்கும் அறையுள் நுழைந்தான். அதே சமயம் அவள் படுக்கையை விட்டு எழுந்து, திருடன் வந்திருப்பதைக் கவனிக்காமல் வெளியே கிளம்பினாள். தன் காதலனை அடைவதற்காகத்தான் அவள் அவ்விதம் புறப்பட்டாள்.
“திருடனுக்கோ இதைக் கண்டவுடன் முதலில் பயமும் பின்னால் ஏமாற்றமும் ஏற்பட்டன. அவன் திருட வந்த நகைகளை யெல்லாம் அவள், புருஷன் வந்ததையொட்டி, தன் உடலிலே அணிந்திருந்தாள்.
‘ஆகவே, அவன் “நான் திருட வந்த நகைகளை அவள் அணிந்து கொண்டு, சர்வாபரண பூஷிதையாக இந்த நள்ளிரவில் எங்கேயோ கிளம்பிவிட்டாளே. அவள் எங்கே போகிறாள் என்பதைக் கவனிக்க வேண்டும்” என்று நினைத்துக் கொண்டான். உடனே திருடனும் தன்னைப் பிறர் கவனியாதபடி வசுதத்தையை அவள் அறியாமல் பின் தொடர்ந்தான்.
வசுதத்தையோ, மலர் போன்ற பொருள்களை எடுத்துக் கொண்டு தன் கள்ளக் காதல் ரகசியத்தையறிந்த தாதி ஒருத்தி பின் தொடர, நகர்ப்புறத்தை அடைந்து அங்கிருந்த ஒரு தோட்டத்திற்குள் நுழைந்தாள். அங்கே அவளை அடைவதற்காகத் தோட்டத்துக்கு வந்திருந்த அவளுடைய கள்ளக் காதலன் கழுத்திலே கயிற்றுடன் மரத்திலே பிணமாகத் தொங்கிக் கொண்டிருந்தான். நள்ளிரவில் பிறர் அறியாமல் ரகசியமாக நடமாடிய அவனைத் திருடன் என்று நகர காவலாளிகள் சந்தேகப்பட்டுப் பிடித்துத் தூக்கிலிட்டு விட்டார்கள்.
அதைக் கண்ட வசுதத்தை துயரம் தாங்காமல் கீழே விழுந்து புரண்டு அழுது புலம்பினாள். அப்பால் தன் காதலன் உடலை மரத்திலிருந்து இறக்கிப் பக்கத்தில் சார்த்தி, தான் கொணர்ந்திருந்த சந்தன புஷ்பங்களாலும், மாலைகளாலும் பிரேதத்தை அலங்கரித்தாள். அவள் உள்ளத்தில் அடங்கிக் கிடந்த ஆசையையும் துக்கத்தையும் கொட்டித் தன் காதலன் உடலைத் தழுவி முத்தமிட்டாள். அந்தச் சமயம் அவன் உடலில் புகுந்திருந்த வேதாளம் ஒன்று. சட்டென்று அவள் மூக்கைக் கடித்துத் துண்டித்து விட்டது. அவள் கலவரம் அடைந்து வலி பொறுக்காமல் அவ்விடத்தை விட்டுப் போய்விட்டாள். ஆயினும் அவள் ஆசை குறையவில்லை. உயிரோடு இருக்கிறானா, அவனைப் பிழைக்க வைக்க முடியுமா என்று கவனித்துப் பார்த்தாள்: அந்த உடலில் புகுந்திருந்த வேதாளம் வெளியேறிவிட்டது. ஆகவே அந்த உடல் விறைத்துக் கிடந்தது. தனக்கு நேர்ந்த துக்கத்தையும், அவமானத்தையும் நினைத்து மனம் தாளாமல் அழுது கொண்டே வசுதத்தை தன் வீடு திரும்பினாள்.
“இவைகளை எல்லாம் மறைந்து கொண்டே பார்த்திருந்த திருடன், ஐயோ இந்தப் பாதகி என்ன காரியம் செய்தாள்? பெண் மனத்தின் ஆழத்தைக் காண முடியாது என்று சொல்வார்களே, அது முற்றிலும் உண்மையே. அவள் இன்னமும் என்ன செய்யப் போகிறாளோ?” என்று தனக்குத் தானே எண்ணிக் கொண்டான். மேலே அவள் என்ன செய்யப் போகிறாள் என்பதை அறிய ஆவல் உள்ளவனாகத் திருடன் மறுபடியும் சிறிது எட்டியே அவளைப் பின் தொடர்ந்து சென்றான்.
“வீட்டில் தன் படுக்கை அறையை அடைந்ததும் தன் கணவன் ஆழ்ந்த நித்திரையில் இருப்பதைக் கண்டாள் வசுதத்தை. உடனே அவள். ‘ஐயோ! நான் ஒன்றும் செய்யாமல் இருக்கையிலேயே என் புருஷன் என்று சொல்லிக் கொள்ளும் இந்த மகா பாவி பாக்கு வெட்டியில் என் மூக்கை அறுத்து விட்டானே!” என்று ஓலமிட்டுப் பெருங்கூச்சலைக் கிளப்பினாள். இந்த சத்தத்தைக் கேட்டு அவளுடைய கணவனும் தாய் தந்தையரும் வேலைக்காரர்களும் திடுக்கிட்டு எழுந்தனர். வசுதத்தையோ அலறிக்கொண்டே இருந்தாள். இதைக் கேட்ட அவர்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை. திக்பிரமை பிடித்தவர்களைப் போல சிறிது நேரம் நின்றார்கள். இதற்குள் அவளுடைய மூக்கு அறுபட்டு அதிலிருந்து ரத்தம் ஒழுகுவதைக் கண்ட அவள் தகப்பனார் தன் மகள் போட்ட கூச்சல் உண்மையானது என்றே நம்பி விட்டார். உடனே அவர் தம் மாப்பிள்ளையைப் பிடித்துக் கயிறு கொண்டு கட்டித் துன்புறுத்த ஆரம்பித்தார். அவ்விடம் கூடியிருந்தவர்கள் எல்லோரும் மாப்பிள்ளை தீங்கிழைத்தவன் என்றே கருதி விட்டார்கள். அதனால் அவனும் வாயைத் திறக்காமல் மௌனமாகவே அவ்வளவிற்கும் உட்பட்டிருந்தான்.
“இவைகளையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த திருடன் சந்தடி செய்யாமல் நழுவி விட்டான். இரவுப் பொழுதும் இந்த அமளியிலேயே கழிந்தது. மறுநாள் பொழுது விடிந்ததும். பெண்ணின் தகப்பனார் மூக்கறுக்கப்பட்ட தம் பெண்ணையும் மாப்பிள்ளையையும் மற்றவர்களையும் ராஜசபைக்கு அழைத்துச்சென்று மன்னனிடம் முறையிட்டார். அரசனும் அதை விசாரித்தான். மாப்பிள்ளை கூறியதை மன்னன் நம்பவில்லை; அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமலே தள்ளி விட்டான். மற்றவர்கள் கூறியதைக் கேட்டு அவனே குற்றவாளியென்று நீதியின் காவலன் தீர்மானித்தான். யாதும் அறியாத மனைவியின் மூக்கை அறுக்கத் துணிந்த அவனுக்கு மரண தண்டனையே ஏற்றது என்று விதிக்கப்பட்டது.
“நகர வீதிகளில் தண்டோராப் போட்டு மாப்பிள்ளையைக் கொலைகளத்திற்கு இட்டுச் செல்லும்போது. அங்கே வந்திருந்த திருடன் ராஜ சேவகர்களை அணுகி ‘அகாரணமாக இந்த நிரபராதியை கொலையை செய்யாதீர்கள். இந்த வழக்கின் விபரம் முழுவதையும் நான் அறிவேன். என்னை அரசனிடம் அழைத்துச் செல்லுங்கள். எல்லாவற்றையும் நான் அவரிடம் எடுத்துச் சொல்லுகிறேன்” என்று தெரிவித்துக் கொண்டான்.
“உடனே சேவகர்கள் திருடனை ராஜனிடம் அழைத்துச் சென்றார்கள். திருடன் முதலிலே அரசனிடம் தன்னுடைய குற்றத்திற்கு மன்னிப்பைப் பெற்று கொண்டான். பிறகு முதல் நாள் இரவு நடந்ததனைத்தையும். திருடன் ஒன்று விடாமல் சொன்னான். “என் வார்த்தைகளில் நம்பிக்கை இல்லையானாலும், இந்தப் பெண்ணின் அறுபட்ட மூக்கு அந்தப் பிணத்தின் வாய்க்குள் இருப்பதை பார்த்தாலாவது, விளங்காதா?” என்று வேண்டினான். அரசனும் அதே போல் ஆட்களை அனுப்பி சோதிக்கச் செய்தான். திருடன் கூறியது உண்மையாகவே இருந்தது. உடனே மாப்பிள்ளையை விடுதலை செய்து விட்டு அவனுடைய பத்தினியின் காதுகளையும் அறுத்து அவளை நாட்டை விட்டுத் துரத்தி விட்டான். அவளுடைய பெற்றோர்களின் சொத்துகளையும் பறிமுதல் செய்தான். திருடனுடைய நடத்தைக்கு மெச்சி. அவனை நகரக் கொத்தவாலாகவும் நியமித்தான்.”
இவ்வாறு கதையைக் கூறிய கிளி, மன்னனைப் பார்த்து, “இதிலிருந்து பெண்கள் வஞ்சகமும் கொடுமையும் வாய்ந்தவர்கள் என்பது விளங்கவில்லையா?” என்று கேட்டது.
கிளி இவ்விதம் கதையைக் கூறி முடித்தவுடன் அதற்கு இந்திரனால் ஏற்பட்டிருந்த சாபம் நீங்கிவிட்டது. சித்திரரதன் என்னும் கந்தர்வனே சாபத்தால் அவ்விதம் வந்திருந்தான். அவன் பழைய கந்தர்வ உருவத்தைப் பெற்றுப் பறந்து போய் விட்டான். அதே சமயம் மைனாவாக வந்த திலோத்தமையும் தன் சாபம் நீங்கி அப்சரஸாக மாறி வானுலகம் சென்றுவிட்டாள். இதனால் வழக்கு முடிவு ஏற்படாமலே போயிற்று.
வேதாளம் இந்தக் கதையைக் கூறி முடித்து “பூலோக மகாராஜரே! மேற்கூறிய இரண்டு கதைகளில் வரும் புருஷன் மனைவியான ஆண், பெண் ஆகிய இருவருள் யார் அதிகம் மோசமானவர் என்பதை நீர்தான் முடிவு செய்ய வேண்டும். தெரிந்து கொண்டே சொல்லாவிட்டால் உம் தலை நூறு சுக்கலாக வெடித்துவிடும்!” என்றது.
தன் தோளில் சுமந்து வந்த வேதாளம், இந்தக் கேள்வியை கேட்டவுடனே விக்கிரமாதித்தனும், “மந்திரவாதிகளுக்குள் சிரேஷ்டமான வேதாளமே! பெண் தான் மோசமானவள். மனைவியை புருஷன் கொடுமைப்படுத்துவதை விட, புருஷனை மனைவி கொடுமைப்படுத்தும் செயல்தான் மிகவும் அதர்மமானது. ஆண்களில் சிலர் ஏதோ ஒரு சமயம் கொடிய சித்தம் படைத்தவர்களாக இருப்பார்கள். ஆயினும் பெண்கள் பொதுவாக எங்கேயும் அப்படித்தான் இருப்பார்கள்!” என்று பதில் கூறினான்.
இதைக் கேட்ட வேதாளம் விக்கிரமாதித்தன் தோளிலிருந்து முன்போலவே மறைந்து விட்டது. அரசனும் அதைப் பிடித்துவர முருங்கமரத்திற்கு திரும்பினான்.
(தமிழ்ப் பாடத்தில் இந்தக் கதை சிறு மாறுதல்களுடன் காணப்படுகிறது. கிளி, மைனா என்பதற்குப் பதிலாக, ஆண் கிளி. பெண் கிளி என்றும், சந்திரபிரபை என்பதற்கு வீர இராக்கசி எனவும், காமாந்தகி என்பதற்கு அபயஸ்தம் எனவும், அர்த்ததத்தன் என்பதற்கு தார்மீகஞ் செட்டியார் எனவும். தனதத்தன் என்பதற்கு தர்க்கசேகன் எனவும், சந்தனபுரம் என்பதற்கு அழகாபுரம் எனவும். இரத்தினாவளி என்பதற்கு அலங்காரி எனவும், ஹர்ஷவதி என்பதற்கு அரிஷ்டாபுரம் எனவும், தர்மதத்தன் என்பதற்கு கனவர்த்தன் எனவும் மாறுபாடுகள் உள்ளன.)
– தொடரும்…
– விக்கிரமாதித்தன் கதைகள், வடமொழி மூலங்களைப் பரிசோதித்து எழுதியவர்: ராசு, தமிழ்ப் பாடங்களைப் பரிசோதித்து எழுதிவர்: அரு.ராமநாதன், முதற்பதிப்பு: ஜனவரி 1958, பிரேமா பிரசுரம், சென்னை