கிறுக்கன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 2, 2024
பார்வையிட்டோர்: 116 
 
 

(1961ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

எம்.ஏ.படித்திருந்தால் மட்டும் என்ன? ஊர்க்காரர்கள் கிறுக்கன் கிறுக்கன் என்று ஓர் இளைஞனை விமர்சனம் செய்துவிட்டார்கள். 

‘ஏன் தம்பீ! ஏதாவது வேலைக்குப் போகவில்லையா?’

‘எதற்காக?’ 

‘வேலை பார்க்கத்தான்.’ 

‘பார்த்து என்ன ஆகவேண்டும்? எனக்குச் சம்பாதித் துத்தான் ஆகவேண்டுமா?’ 

‘வேண்டியதில்லை. மெய்தான். இருந்தாலும் சம் பாதித்து நல்ல காரியத்திற்குச் செலவழித்தால் எவ்வளவு பெருமையாக இருக்கும்!’ 

‘வாஸ்தவம்தான். ஆனால் நல்லது எது பொல்லாதது எது என்று இப்பொழுதெல்லாம் புரியவில்லையே! இந்த ஓணானை இவர் பச்சை என்கிறார். அதன் வாயைப் பிளந்து மூக்குப் பொடியைப் போட்டுவிட்டுப் பார்; சிகப்பா இல் லையா என்று அவர் கேட்கிறார். இரண்டும் இல்லை ஊதா என்று அவர் பிற்பாடு காட்டுகிறார். ஓணான் கண்ணை முடிக்கொண்டு எல்லாவற்றிற்கும் தலையை ஆட்டுகிறது. கருங்கல்லை உடைத்து இவர்கள் ரோடு போடுகிறார்கள். அங்கே செதுக்கி லிங்கமாக்குகிறார்கள். சாமி நெஞ்சில் இருக்கிறதா? கல்லில் இருக்கிறதா? இதைத்தான் கண்டு பிடிக்க வேண்டும். 

‘அப்பொழுது கொட்டை கட்டிச் சாமியாராய்ப் போய்விடலாமே!’ 

‘ஐயாவுக்கு நான் ஒரு மகன் தானே! நிலம் நீச்சுக் கிடக்கிறது. வீட்டிலே இருந்துகொண்டே சிந்தித்தால், கைவல்யம் கிட்டாதா?’ 

இப்படிச் சம்பாஷணை நடந்தால் சாதாரண மக்கள் சிவலிங்கத்தினிடம் எப்படி மேலே பேச முடியும்? இந்த திரி ஒரு கிறுக்கன் பெற்றோர்களுக்கு வாய்த்தானே என்று ஒளிவு மறைவாய்ப் பேசுவார்கள். 

பெண்களிடத்திலாவது சகஜமாகப் பேசுவதுண்டா என்றால், அதுவும் கிடையாது. 

பக்கத்து வீட்டுக் கிழவி ஒரு நாள் வந்திருந்தாள். வந்தவள் வந்த காரியத்தைப் பார்த்துக்கொண்டுதான் போகமாட்டாளே! ‘என்ன தம்பீ! வேலைக்குப் போகல்லே இன்னு சொல்லீட்டியாமே?” என்றாள். 

‘ஆமாம்.’ 

‘நானே சொல்லணுமின்னு நெனைச்சேன். வேலைக்குப் போனால் பண்ணை கேட்பாரத்துப் போகும். ராசாத்தி மாதிரி ஒத்தியைக் கட்டிக்கிட்டு, வீட்டோடெ வாச லோடெ பெரியவங்க பெயரை எடுத்துக்கிட்டு இருந்தாலே போதுமே. ஆமாம்; ஒன் மாமன் மவள் செவப்பாயிதான் இருக்குதே. ஒங்க ஐயா ஏன் சும்மா இருக்கிறாரு?’ 

‘பின்னே ஆடுவாரா?’ 

‘அதென்ன தம்பி அப்பிடிப் பேசறே? ஐயாவுக்குத் தெரியாட்டி, ஆயாகிட்டெச் சொல்றது. முருகனை ஒண் ணுக்கு ரெண்டாக வச்சுக் கும்பிடாமெ இருந்தா என்னன்னு கேளேன்.’ 

‘அவுங்களுக்குத்தான் தெரியுமே.’ 

‘என்னத்தை?’ 

‘நான் கல்யாணம் பண்ணிக்கொள்ள மாட்டேன் என்று.’ 

‘ஏன்?’ 

‘கல்யாணம் என்றால், ஒரு பெண்பிள்ளையோடு எத்தனை துன்பப்பட வேண்டி இருக்கிறது! உங்க வீட்டு ஐயா இருந்தாங்களே—’ 

‘இந்தா, அந்தப் பேச்சை எடுக்காதே!’ 

‘பெண்பிள்ளை உங்களுக்கே இவ்வளவு வயசுக்குப் பிறகும் நெனைச்சாலே கசப்பாக இருக்குதே. இதை எல் லாம் நினைத்துச் சும்மா இருக்கலாம் என்று பார்க்கிறேன்.

‘கொட்டை கட்டிச் சாமியாராய்ப் போயிடு.ஒங்க குடும்பம் இந்தத் தலைமுறையோடு முடிஞ்சு போயி றட்டும்.. நல்ல கிறுக்கு.. ஆண்டிப் பண்டாரமாய்ப் போயிடு’ என்று ஆசீர்வாதம் செய்துவிட்டுக் கிழவியும் போய்விட்டாள். 

இப்படி எல்லாம் பல சேர்ந்து சிவலிங்கத்திற்குக் கிறுக்குப் பட்டத்தைச் சம்பாதித்துக் கொடுத்துவிட்டன. 

அதுவரை மின்சாரம் வராமலிருந்த ஊருக்கு மின்சாரம் வந்து சேர்ந்தது. வந்த ஒரு வாரத்திற்குள், ஒரு நாள் காலை தெருவில் எதிர்பாராத விதமாக ஜன நட மாட்டம் கண்டது. 

ஆளோடிக்கு வந்த சிவலிங்கத்திற்கு இது புதுமை யாக இருந்தது. எல்லோரும் ஒரு பக்கமாகவே போய்க் கொண்டிருந்தனர். சிவலிங்கமும் ஆளோடியை விட்டு இறங்கிப் பின்புறமாகக் கையைக் கட்டிக்கொண்டு எல்லோரையும்போல் சென்றார். தெருக்கோடியில் ஒரே கும்பல்! காரணத்தை அறிய வெகு நேரம் ஆகவில்லை. மின்சாரக் கம்பத்து நுனியில் ஒரு குரங்கு விறைத்துப் போய்த் தொங்கிக்கொண் டிருந்தது! 

சிவலிங்கத்துக்குப் பக்கத்திலிருந்த ஒரு பெரியவர், ‘பாவம்! வாயில்லாச் சீவன் ஏதோ எசகேடாக மாட்டிக் கிட்டுப் போயிடுச்சு. அதை மரியாதையாய் அடக்கம் செய்யணுமே! எப்படி எடுப்பாங்களோ!’ என்று அங்கலாய்த்துக்கொண் டிருந்தார். 

இதற்குள் யாரோ ஒரு வாலிபன் கையில் ரப்பர் உறைகளைப் போட்டுக்கொண்டு மின்சாரக் கம்பத்தில் ஏறினான். குரங்கை எடுத்து இடுப்பில் ஒரு கயிற்றைக் கட்டிக் கீழேவிட்டான். 

உடனே கூட்டத்தில் ஒரு புது விதமான பரபரப்புத் தென்பட்டது. பழக்கடை ராஜூ எங்கிருந்தோ ஒரு ரோஜா மாலையை அவசர அவசரமாகக் கொண்டுவந்து, குரங்கின் கழுத்தில் மாட்டினான். குங்குமத்தை எடுத்துப் பட்டையாக ஒரு நாமத்தை நெற்றியில் தீட்டினான். அதற்குப் பிறகு யாரோ இரண்டு பேர் இரண்டு தட்டுகளை எடுத்துக்கொண்டு, கும்பலுக்கிடையே புகுந்து புகுந்து புறப்படத் தலைப்பட்டனர். டொப் டொப் பென்று காசுகள் தட்டில் விழுந்தன. சிவலிங்கத்துக்கு அருகில் வந்ததும், அவர்களுக்கு ஒரு தயக்கம் வந்துவிட்டது. அவர் கிறுக்கு ஊரறிந்த விஷயந்தானே! ஆனாலும், அவரை ஒதுக்கிவிட்டுப் போக முடியவில்லை. பெரிய மனுஷர் வீட்டுப் பிள்ளையை அவமானப்படுத்துவதுபோல் விடாதா? என்வே, ஒருவர் தட்டைக் கொணர்ந்து நீட்டினார். சிவலிங்கமாவது சும்மா இருந்திருக்கலாம். அப்படித்தான் இருக்கமாட்டாரே! 

‘ஏனய்யா! நான் ஒரு ஒத்தாசை செய்தால், நீ அதை நினைத்துக்கொள்ள வேண்டாமா?’ என்றார். 

‘நல்லா நெனைக்கணும்.’ 

‘உங்களுக்குத்தான் ராமாயணம் தெரியுமே!” 

‘நல்லா இருக்கு! அஞ்சு வயசுலே இருந்து தெருக் கூத்து ராம நாடகம் ஆடி இருக்கோமே!’ 

‘சடாயு செத்தபொழுது ராமர் சடங்கு செய்தா ரென்று அதில் வருதல்லவா?’ 

‘ஆமாம்.’ 

‘தெற்கே தூக்கிக்கொண்டு போனார் என்று சொன்ன தற்காக ராமர் சடாயுவுக்குச் சடங்கு செய்தாரே! இலங் கைக்குப் போகப் பாலம் கட்டிக்கொடுத்தவர்கள் குடும் பத்தில் நல்லது பொல்லாதது என்றால், கவனிக்க வேண் டாம்! ராமரை அழைத்து வைத்து, ஹநுமாரை அவரிடத் திலே சிவனே என்று ஒப்படைத்துவிட்டுப் போவீர்களா, பிரமாதமாகத் தடடைத் தூக்கிக்கொண்டு வந்துவிட்டீர்களே!’ 

இதற்குப் பிறகு தட்டுக்காரர் அங்கேன் நிற்கிறார்? சிவலிங்கத்திற்கும்தான் பிறகு அங்கு என்ன வேலை?திரும்பி வீட்டு ஆளோடிக்கு வந்து சிந்தனையில் ஆழ்ந்து விட்டார். 

அன்று சாயங்காலம் பண்ணையாள் கறுப்பன் வெகு உத்சாகமாக வீட்டுக்கு வந்தான்; ஹனுமாரைக் கௌரவமான முறையில் ஊர் திரண்டு தங்கள் மணல் மேட்டு வயலுக்கருகில் சமாதி வைத்து விட்டார்கள் என்ற செய்தியைத் தெரிவித்தான்.சிவலிங்கம் தனக்குத்தானே சிரித்துக்கொண்டார். 

ஒரு வாரம் கழிந்தது. பழக்கடை சோமுவும் தெருக் கூத்துத் தட்டுக்காரரும் குளத்தங்கரையில் பல் துலக்கிக் கொண்டிருந்தார்கள். 

‘ஏன் அண்ணே!’ 

‘மணல் மேட்டு வயல்கிட்டே சிவலிங்கம் கருங்கல் லாலே என்னவோ கட்டிடம் கட்டறாரே எதுக்குத் தெரியுமா? 

‘அதுதான் கிறுக்காச்சே!’ 

‘கிறுக்குத்தான். இருந்தாலும் கட்டறது பிள்ளையார் கோவில் மாதிரி அல்லவா இருக்குது?’ 

‘ஆமாம் ஆமாம்! இவரு கோவில் கட்டிப் பிள்ளை யாரை முளைக்க வைத்துக் கும்பாபிஷேகம் பண்ணப் போகிறார்!’ 

‘பின் எதற்காக?’ 

‘அது கிறுக்குக்குத்தான் புரியும்’ என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். 

மற்றவர்களுக்கும் இதுதான் பேச்சு. எப்படித் திடீ ரென்று சமய உணர்வு முளைத்து, கோவில் கட்டும் அள வுக்குத் தழைத்துவிட்டது என்பதுதான் அவர்களுக் குப் புதிராக இருந்தது. கிறுக்கு நல்ல வழியில் திரும் பிற்றே என்று ஒருவாறு ஆறுதல். 

பின்னொரு பத்து நாள் ஆயிற்று. ஒரு நாள் ஊரி லிருந்த பிரமுகர்களுக்கெல்லாம் அழைப்பொன்று வந்தது. நாளும் தேதியும் நேரமும் குறிப்பிடப்பட்டிருந்தது. மணல் மேட்டில் ஹனுமார் நிலைநாட்டப்பட்டுக் கோயில் திறந்து வைக்கப்படும்’ என்று பத்திரிகை கூறிற்று. எல் லோரும் பயனடைய வேண்டும் என்று சிவலிங்கம் விழைவதாகக் கண்டிருந்தது. இந்த அழைப்பு, பெருத்த பரபரப்பை உண்டாக்கிவிட்டது. 

குறித்த தினத்தில் மணல்மேட்டில் ஒரே கூட்டம். ஈ புகுந்தால் இறகு ஓடியும்’ என்று நாட்டுக் கவி கூறுவதுபோல் இருந்தது. காலை வெயிலில் அழகாகக் கோயில் மின்னிற்று. காற்று லேசாகக் கோவிலை வலம் வந்துகொண்டிருந்தது. 

சிவலிங்கம் அடக்கமாக ஓரிடத்தில் நின்றுகொண் டிருந்தார். சில நிமிஷங்களுக்குப் பிறகு கூட்டத்தை ஒரு தரம் சுற்றி நோட்டம் பார்த்தார்.எல்லாம் சரியாக இருந்தது. 

அடுத்த நிமிஷம் சிவலிங்கம் கையைத் தட்டினார். இரண்டு பேர் துணியால் மூடிய ஒரு சிறிய பொருளைத் க்கிக்கொண்டு கோவிலுக்குள் சென்றனர். இரண்டு கொத்தனார்கள் கூடவே கையும் கரணையுமாக நுழைந்து கோயில் கதவைச் சாத்திக்கொண்டார்கள். 

கோவில் முகப்பில் ஒரு நெற்றிக் கல் பதிக்கப்பட் டிருந்தது. துணி போர்த்தப்பட்டிருந்ததால், அதில் என்ன இருக்கிறதென்பது தெரியவில்லை. யார் பூசாரி? என்ன கோவில் என்பதும் மர்மமாகவே இருந்தது. 

அரை மணி ஆயிற்று. சிவலிங்கம் மறுபடி கையைத் தட்டினார். மூடி இருந்த கதவுகள் திறக்கப்பட்டன. சிவ லிங்கம் சூடத்தை ஏற்றி, சிலைக்கு முன் காட்டினார். கர்ப் பக் கிரகத்தில் கூப்பிய கைகளுடன் ஒரு ஹனுமார் சிலை நின்றுகொண் டிருந்தது. ஜனங்கள் எல்லோருக்கும் தாங்கமாட்டாத மகிழ்ச்சி. ‘குரங்கு இறந்ததற்கு நாலணா கொடுக்கமாட்டேன்’ என்று சொன்ன மகாராஜன், இப்பொழுது ஹனுமாருக்குக் கோவிலே கட்டி வைத்து விட்டார்! உண்மையில் பக்தி அவருக்கதிகமா தங்களுக்கா என்ற சந்தேகமே வந்துவிட்டது. 

சந்தேகத்துடன் சந்தோஷமும் பொங்கிற்று. ‘வீர ஆஞ்சனேயருக்கு ஜே!’ என்று யாரோ ஒரு பக்தர் குரல் கொடுத்தார். ‘ஜே!’ என்ற கோஷம் வானைப் பிளந்தது. 

அதற்குப் பிறகு நடந்த சம்பவந்தான் எல்லாவற்றிற் கும் சிகரமாய் அமைந்தன. கோவிலின் நெற்றிக் கல்லை மூடி இருந்த துணியைச் சிவலிங்கம் களைந்தெறிந்தார். கறுப்புப் பளிங்குக் கல்லில் பொன் எழுத்தில் ‘டார்வினா லயம்’ என்று பொறிக்கப்பட் டிருந்தது! புரிந்து கொண்ட பேர் புரிந்துகொண்டார்கள். பெரும்பாலோர் பேந்தப் பேந்து விழித்தனர், ஒன்றுமே புரியவில்லையே என்று, கொடுத்த வெற்றிலை பாக்கு, பழத்தை வாங்கிக்கொள்ளாமல் இருக்கலாமா? வாங்கிக்கொண்டார்கள். டார்வினா லயம் என்றால்? 

– மாங்காய்த் தலை (சிறுகதைத் தொகுதி), முதல் பதிப்பு: டிசம்பர் 1961, கலைமகள் காரியாலயம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *