காவியமானான்
கதையாசிரியர்: நீர்வை பொன்னையன்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: February 1, 2026
பார்வையிட்டோர்: 238
(2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
‘எங்களுக்கும் காலம் வரும். காலம் வந்தால் வாழ்வு வரும்’ எந்த நேரமும் பாட்டுத்தான்.
‘காடுவிளைஞ்சென்னமச்சான். நமக்குக் கையும் காலும்தானே மிச்சம் ‘
இன்னும் எத்தனையோ பாட்டுக்கள். இயக்கப் பாட்டுகளும் தான்.
இயக்கக்கூட்ட மேடைகளில் சாந்தன் குழுவினரும், தமிழ் நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட தேனிசைச் செல்லப்பாகுழுவினரும் பாடிய பாட்டுக்களை அப்படியே, அதே ரியூன்களில் ‘பாடினான் அவன்.
அவனுக்கு மதுரக்குரல். எங்களுக்கு வியப்பு.
நித்திரை செய்கின்ற நேரத்தையும் சாப்பிடுகின்ற நேரத்தையும் தவிர மற்றெல்லா நேரங்களிலும்பாட்டுத்தான்.
சில சந்தர்ப்பங்களில் அவனுடைய பாட்டுக்கள் எங்களுக்கு எரிச்சலைத் தரத்தான் செய்யும்.
ஆனால் என்ன செய்வது?
அவனுக்கு அது ஆத்மதிருப்தி.
அவன் சோம்பேறியல்ல.
அவன் எந்த நேரமும் ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டேயிருப்பான்.
வேலை செய்து கொண்டே பாடுவான்.
ஒரு பாட்டை அவன் ஒரு முறை கேட்டால் போதும். அந்தப் பாட்டை அவன் அதே ‘மெட்டில் ‘அப்படியே பாடிவிடுவான்.
அது அவனுக்கு கைவந்த கலை, ஒரு கொடை அவன் பிறவிக் கலைஞனா? யாருக்குத் தெரியும்?
பிற்காலத்தில் அவன் ஒரு சிறந்த பாடகனாய் வந்துவிடுவானோ?
அவனுக்கு வயது பதின்நான்கு அல்லது பதினைஞ்சிருக்கும்.
அவனுடைய சரியான வயது என்ன என்று எங்களுக்குத் தெரியாது.
அவனுடைய பாட்டானரும் உத்தேசமாகக் கூறியதும் அதே வயதுதான்.
அவனுடைய பெயர்கூட என்னவோ சுப்ரமணி என்று தான் பாட்டனார் சொன்னார்.
மலையகத் தோட்டங்களில் குழந்தைகள் பிறந்தவுடன், அவர்களது பிறந்த திகதியையும் பெயரையும் பதிவு செய்வது அரிது. அதற்கான வாய்ப்பு வசதிகள் அவர்களுக்கு மறுக்கப் பட்டுள்ளது. அதைப்பற்றி அவர்களுக்கும் அக்கறையில்லை.
கூப்பிடுவதற்கு இதமாகவும் சுலபமாகவும் இருக்க வேண்டும் என்ற வகையில் வசந்தன் என்ற பெயரில் அவனை அழைத்தோம்.
அவனும் அந்தப் பெயரை விரும்பினான். ஏற்றுக் கொண்டான்.
அவனை வசந்தன் என்ற பெயரில்தான் எல்லோரும் அழைத்தனர். அதுவே அவனுக்கு நிரந்தரப் பெயராகிவிட்டது.
ஆனால் அவனுக்கு இன்னொரு பெயருமுண்டு.
சின்னப் புயல்.
வேலை.வேலை. வேலை. எந்த நேரமும் அவனுக்கு வேலைதான்.
அவன் ஒரு பொழுதும் சும்மா இருந்ததில்லை. இருக்கவும் மாட்டான்.
அவன் உழைக்கப் பிறந்தவனாச்சே.
அவனென்ன அவனது சமூகமும் உழைக்கப் பிறந்தவர்கள்தான்.
அவன் எவரைக் கண்டாலும் கேலியும் கிண்டலும் செய்வான். ஆரம்பத்தில் அவர்களுக்குக் கோபம் வரத்தான் செய்தது. காலகெதியில் அவனது நல்ல குணத்தையும், மற்றவர் களுக்கு உதவி செய்யும் பண்பையும் கண்டு அவனை எல் லோரும் நேசிக்கத்தான் செய்தனர்.
அவன் ஒரு அலாதிப் பேர்வழி
அவன் அற்புதமானவன்.
அவனுக்கு வேலையும் பாட்டும், கிண்டலும் கேலியும்தான்.
எங்கள் அயல்வீட்டு அன்னம்மாவை சும்மா விடமாட்டான்.
அன்னம்மா அக்காவிற்கு உடல் பருமன். அசைந்தசைந்து தான் நடப்பா.
‘அடைக்கோழி’, ‘குண்டம்மா’, ‘தாரா’ என்று வசந்தன் அன்னம்மா அக்காவைக் கிண்டல் செய்வான்.
தோட்டக்காட்டான் நட்டாமுட்டி அழிவான் ‘, நாசமாப் போவான் ‘என்று அன்னம்மா அக்கா கோபாவேசமாய் திட்டுவா. அது அந்த நேரம் மட்டும் தான்.
அன்னம்மா அக்கா எல்லாவற்றையும் உடனே மறந்து விடுவா.
‘வசந்தன் குட்டி’, ‘செல்லக்குட்டி’, ‘ராசா ‘ என்று பாசமாய் வசந்தனை செல்லமாய் அழைப்பா.
அன்னம்மா அக்கா ஏதாவது உதவி கேட்டால் உடனே வசந்தன் எதுவித தயக்கமுமின்றி முழு மனத்துடன் அந்த வேலையைச் செய்து கொடுப்பான்.
இருவர் மத்தியிலும ஒரு வித பிடிப்பு, பாசம்.
சாப்பாட்டில் வசந்தன் அதிக கவனம் செலுத்துவதில்லை. காலைச் சாப்பாடு பத்து பத்தரை மணிக்கு. மதியச் சாப்பாடு மூண்டு மணிக்கு மேலைதான். அதுவும் நிற்பந்தத்தின் நிமித்தம்தான். எல்லா வேலைகளையும் முடித்த பின்தான் சாப்பாட்டை நாடுவான்.
அவன் சாப்பாட்டுப் பிரியனல்ல.
மரக்கறிச்சாப்பாடுதான்.
எங்களுடைய சாப்பாடு தான் அவனுக்கும்.
வசந்தனுக்கு எதிரிகள் எவருமில்லை. எல்லோரும் அவனுக்கு நெருக்கமான நண்பர்கள்தான்.
அவனுடைய நண்பர்களில் சிலர் இயக்கங்களைப் பற்றி சில வேளைகளில் கதைப்பார்கள்.
இயக்கங்களுக்குகிடையிலுள்ள வேறுபாடுகளை பேதங் கள் பற்றியோ அவனுக்கு எதுவும் தெரியாது.
எல்லா இயக்கங்களும் ஆமிக்கு எதிராய் சண்டை போடுகின்றன என்பது மட்டும்தான அவனுக்குத் ெதரியும். இதனால் எல்லா இயக்கங்களும் ஒன்றுதான் என்று ஆரம் பத்தில் நினைத்தான்.
ஏதாவது ஒரு இயக்கத்தைச் சேர்ந்த போராளி வந்து விட்டால் போதும். உடனே அந்தப் போராளியுடன் அவன் நேசபூர்வமாய்ப் பேசுவான். அந்தப் போராளியின் தோளிலுள்ள துப்பாக்கியை ஆதாரத்துடன் தடவுவான். ஒரு தாய் தன் குழந்தையை செல்லமாகத் தடவிக் கொடுப்பது போல் அந்தத் துப்பாக்கியைத் தடவுவான்.
அந்தப் போராளியின் மோட்டார் சைக்கிளை ஆவலுடன் தொட்டுத் தடவிக் கொடுப்பான்.
அந்த மோட்டார் சைக்கிளில் தானும் ஏறி ஓட வேண்டும் என்ற பேராவல் அவனுக்கு. அது நிறைவேறுமா என்ற ஏக்கம் அவன் மனதில்.
இயக்கங்கள் நடத்துகின்ற ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள், கண்டனக் கூட்டங்கள் எல்லாவற்றிலும் அவன் ஆர்வத்துடன் பங்குபற்றுவான், முன்னணியில் நிற்பான்.
மூன்று மாணவர்களை பேரினவாத இராணுவம் சுட்டுக் கொண்டுவிட்டது.
‘பெரிசு ‘ என்று அழைக்கப்படும் இயக்கம் எல்லாப் கண்டன மூடிவிட்டு பகிஷ்கரித்து, பாடசாலைகளையும்
ஊர்வலத்துக்கும் கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்தது.
எல்லா பாடசாலைகளும் கல்லூரிகளும் மூடப்பட்டன. எங்கள் ஊரிலுள்ள ஒரே ஒரு பள்ளிக்கூடம் மட்டும்தான் மூடப்படவில்லை. அந்தப் பாடசாலையின் அதிபர் மாற்று இயக்கத்தைச் சேர்ந்தவர்.
அவர் தண்ணிவண்டி, எந்த நேரத்திலும், பாடசாலை நேரத்திலும்கூட அவர் ‘கிராணத்தில் ‘, சில வேளை முழுக் கிராணத்திலிருப்பார்.
எங்கள் ஊரிலுள்ள ‘பிரமுகர்கள் பாடசாலையை மூடி, பகிஸ்கரிப்பில் பங்குபற்றும்படி அவரை விநயமாகக் கேட்கின் றனர். அவர் ‘மசியவில்லை ‘மறுக்கிறார்.
வசந்தன் சைக்கிளில் சென்று அந்தப் பாடசாலை அதிபர் முன்திடீரெனக் குதிக்கின்றான்.
‘ஓய் மாஸ்ரர் பள்ளிக்கூடத்தை உடனே மூடு. இல்லாட்டி நான் இந்த கிறனேற்றை உன்மேலை சார்ச் பண்ணுவன்
அவனது இடுப்பில் பொங்கிமிதப்பாயிருந்த பகுதியைத் தடவியபடியே கர்ச்சிக்கின்றான் வசந்தன்.
அதிபர்திகிலடைகின்றார்.
தம்பி நான் பள்ளிக்கூடத்தை இப்பவே மூடிறன். என்னை ஒண்டும் செய்துவிடாதை.
பதறிப்போய் அதிபர் கூறுகின்றார்.
உடனே பாடசாலை மணி அடிக்கின்றது.
பாடசாலை மூடப்படுகின்றது.
அதிபரும், ஆசிரியர்களும் பாடசாலைப் பிள்ளைகளும் கண்டன ஊர்வலத்திலும் பங்குபற்றுகின்றார்கள்.
வசந்தனுடைய இடுப்புப் பகுதியில் கட்டப்பட்டிருந்தது ‘கிறனைற் ‘அல்ல, அது ஓர் மாங்காய்தான்.
பின்னர் இதை அறிந்த அதிபர் எங்கள் வீட்டிற்கு வந்து முறையிடுகின்றார்.
ஒரு நாள் எங்கள் வீட்டிற்கு முன்னாலுள்ள வீதியால் ராணுவம் அணிவகுத்துச் சென்று கொண்டிருக்கின்றது.
வசந்தன் எங்கள் வீட்டிற்கு முன்னாலுள்ள கிடுகுவேலி மறைவில் குப்புறப்படுத்துக் கிடக்கின்றான்.
வீதியால் சென்று கொண்டிருந்த ராணுவத்தினரைக் குறிபார்த்தபடியே படுத்துக் கிடக்கின்றான்.
அவனுடைய கைகளில் ‘உரபாக்கினால் ‘சுற்றப்பட்ட மண்வெட்டிப் பிடி.
எங்கள் எல்லோருக்கும் பெரும் பதட்டம்.
ராணுவ அணி சென்றபின் வசந்தனுக்கு நல்ல ‘சாத்து’
வசந்தன் திடீரெனக் காணாமல் போய்விடுகின்றான்.
அயலவர்களையும் அவனுடைய நண்பர்களையும் நாம் விசாரிக்கின்றோம்.
‘எங்களுக்கு ஒண்டும் தெரியாது’.
இதுதான் எல்லோருடைய பதில். நாங்கள் தேடாத இடமில்லை.
எங்கள் ஊரிலும், அயல் ஊர்களிலுமுள்ள எல்லா இயக்கங்களின் முகாம்களிலும் விசாரிக்கின்றோம்.
“அப்படி ஒருதரும் இஞ்சை வரேல்லை. அவனைப்பற்றி எங்களுக்கு ஒண்டும் தெரியாது.’
இதே பதிலைத்தான். நான்கு இயக்கங்களின் முகாம் பொறுப்பாளர்கள் சொல்கின்றனர்.
எங்கடை ஊரைச் சேர்ந்த பாடசாலைக்குச் சென்ற மூன்று இளைஞர்களைக் காணவில்லை. மூன்று நாட்களாக அவர்கள் வீடு திரும்பவில்லை.
எங்கள் வீட்டிலுள்ள எல்லாருக்கும் பெரும் கவலை. அயலட்டைக்காரர்களுக்கும் தான்.
இரண்டு வருடங்களின் பின் ஒரு நாள் எங்கள் வீட்டின் முன் ஒரு மோட்டார் சைக்கிள் வந்து நிற்கின்றது.
இளைஞர்கள் இரண்டு பேர் இறங்குகின்றனர். அவர்களுடைய தோள்களில் ஏ.கே.போட்டி செவிண் துப்பாக்கிகள்.
‘யார் இவர்கள்?‘
‘இஞ்சை இவை ஏன் வந்திருக்கினம்?
எங்கள் மனதில் கேள்விகள்.
நன்றாக உயர்ந்து வளர்ந்த ஒருவன். அவன்தான் மோட் டார் சைக்கிள் ஓடிவந்தவன். மற்றவன் குள்ளமானவன், குண்டன்.
உயர்ந்து வளர்ந்தவனுக்கு வாட்டசாட்டமான உடல் வாகு.
அரும்பு மீசை.
மெல்லிதாக முறுவலிக்கின்றான்.
அவன் முகத்தில் மகிழ்ச்சி.
‘ஆர் இவன்?’
‘ஏன் சிரிக்கின்றான்?’
‘ஐயா என்னைத் தெரியேல்லையா? ‘
அவனது கேள்வி.
அவனுடைய குரலில் ஒருவித கரகரப்பு. அது பருவமாற்றத்தால் ஏற்பட்டிருக்கலாம்.
‘கேட்ட குரல் மாதிரிக் கிடக்கு எனக்கு.‘
‘நான்தான் உங்கடை வசந்தன்’
எங்களுக்கு ஒரே வியப்பு. ஆச்சரியம்.
இதை எங்களால் நம்பமுடியேல்லை. நம்பாமலும் இருக்கேலாமல் கிடக்கு.
‘உங்கடை வசந்தன்தான் நான். ‘
‘வசந்தன்!
ஏககாலத்தில் நாங்கள் எல்லாரும் கத்துகின்றோம்.
எங்களுக்கு பேராச்சரியம். பெரு மகிழ்ச்சி.
தான் எப்படி இயக்கத்துக்குப் போனது, எப்படி ரெயினிங் எடுத்தது, எங்கை எங்கை ஆமியோடை தாங்கள் மோதியது என்பது பற்றி விபரமாக கூறிக் கொண்டிருக்கின்றான்.
நாங்கள் ஆச்சரியத்துடன் அவன் சொல்லிக் கொண்டிருப் பதை ஆவலுடன் கேட்டுக் கொண்டிருக்கின்றோம்.
‘ஒரு மோதலில் எங்கடை உக்கிரமான தாக்குதலுக்கு ஆமிக்காறர் நிண்டுபிடிக்க முடியாமல் தங்கடை துப்பாக்கி களையும் எறிஞ்சுபோட்டு பின்வாங்கி ஓடிவிட்டாங்கள். பெருமையுடன் அவன் சொல்லிக் கொள்கின்றான். ‘இண்டைக்கு நீங்கள் எங்கடை வீட்டிலை சாப் பிட்டிட்டுத்தான் போகவேணும்.
தங்கச்சியின் அன்புக் கட்டளை. அவர்கள் உடன்படுகின்றனர்.
தங்களுடைய அனுபவங்களை வசந்தன் விபரமாகக் கூறிக் கொண்டிருக்கின்றான்.
அங்கு கூடி நின்றவர்கள் ஆவலுடன் கேட்டுக் கொண்டிருக்கின்றோம்.
போராளிகளது வீரதீரத் தாக்குதல்களையும் சாதனைகளையும் கேட்டுக் கொண்டிருக்கின்ற எங்களுக்கு பேராச் சரியம்.
சாப்பாட்டிற்கு தங்கச்சி அவர்களை அழைக்கின்றாள்.
அவர்கள் வயிறாரச் சாப்பிடுகின்றார்கள்.
‘கனநாளைக்குப் பிறகு இண்டைக்குத்தான் நல்ல உரிசையான வீட்டுச் சாப்பாடு’
பூரண திருப்தியுடன் கூறுகின்றான் வசந்தன்.
பயிற்சியின் பின் வசந்தன் சென்றியில் சிறிது காலம் கடமை.
சென்றிக் கடமையை அடுத்து களத் தாக்குதலுக்குச் செல்கின்றான்.
கப்ரின் புயல் தலைமையில்தான் களத் தாக்குதல். முதல் களத் தாக்குதலிலேயே வசந்தனின் வீராவேசத் தாக்குதல் திறன்புலப்படுகின்றது.
வசந்தனின் மின்வெட்டுத் தாக்குதல் திறனைப் பார்த்த கப்ரின் புயலுக்கு வியப்பு.
வசந்தனின் ஆற்றலைப் பாராட்டுகின்றான் கப்ரின் புயல். கப்ரின் புயலின் பாராட்டு ஒப்புக்குத்தானா?
களத் தாக்குதல்களில் வசந்தன் ஆர்வத்துடன் தொடர்ச்சி யாக ஈடுபட்டு வருகின்றான்.
களத் தாக்குதல்களில் வசந்தன் சாதனைகளை நிலை நாட்டிக் கொண்டே செல்கின்றான்.
சக போராளிகள் மத்தியில் வசந்தனுக்கு செல்வாக்கும் மதிப்பும் பெருகி வருகின்றது.
‘சின்னப்புயல்’ என்று போராளிகள் வசந்தனை அழைக் கத் தொடங்கினர்.
சின்னப்புயல் என்று இயக்கப் பெயர் வசந்தனுக்கு நிரந்தரமாகிவிட்டது.
சின்னப்புயலின் துரித வளர்ச்சி கப்ரின் புயலுக்கு கிலேசத்தை ஏற்படுத்துகின்றது. ஆனால் அவன் அதை வெளிக் காட்டவில்லை.
கப்ரின் புயல், சின்னப்புயலின் திறனைப் பாராட்டி அவனைத் தட்டிக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றான்.
களத்தில் வீராவேச மின்வெட்டுத் தாக்குதல்களை நடத்தி ஆக்கிரமிப்புப் படையினரை விரட்டி அடிப்பதில் சின்னப் புயல் போராளிகள் மத்தியில் முன்னணியில் நிற்கின்றான்.
பல சமர்களின்போது ஆக்கிரமிப்பு ராணுவத்தின் இரும் புக் கழுகுகள் கண்மூடித்தனமான வான் தாக்குதல்களை நடத்துகின்றன.
வான் தாக்குதல்களில் போராளிகள் காயமடைகின்றனர். சிலர் வீரமரணமெய்துகின்றனர்.
கடுமையான குண்டுத்தாக்குதல்கள் மத்தியில் காய மடைந்த போராளிகளை துணிகரமாக மீட்டு வருகின்றான் சின்னப்புயல். அத்துடன் மரணமடைந்த வீரத் தியாகிகளின் உடல்களையும் மீட்கத் தவறவில்லை சின்னப்புயல்.
சக போராளிகள் மத்தியில் சின்னப்புயலின் செல்வாக்கு மென்மேலும் அதிகரித்து வருகின்றது.
சின்னப்புயலின் துரித வளர்ச்சி கப்ரின் புயலுக்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்துகின்றது.
கப்ரின் புயல் விழிப்படைகின்றான். ஆனால் அவன் தனது அச்சத்தை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
சின்னப்புயலின் சாதனைகளை அவன் பாராட்டவே செய்தான். இப்பாராட்டுக்கள் உதட்டளவில்லதான் என்பது யாருக்குத் தெரியும்?
சின்னப்புயலை மேலும் மேலும் பாராட்டி, அவனைக் களத்தாக்குதல்களுக்கு அடுத்தடுத்து ஈடுபடுத்திக் கொண்டே யிருக்கின்றான் கப்ரின் புயல்.
தொடர்ச்சியாக களத்தாக்குதல்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதினால் சின்னப்புயலின் உடல் நிலை நலிவடைகின்றது.
தனது உடல் தளர்வின் காரணமாக சின்னப்புயல் களத்திற்கு செல்லத் தயங்குகின்றான்.
கப்ரின் புயல் அவனை நிற்பந்தித்து களத்தாக்குதலில் ஈடுபடுத்துகின்றான்.
சின்னப்புயல் ஆக்கிரமிப்புப் படையினரை மின் வெட்டுத் தாக்குதலினால் விரட்டி அடித்துக் கொண்டிருக்கிறான்.
சின்னப்புயலின் பின்னால் சற்றுத் தூரத்தில் கப்ரின் புயலும் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கின்றான்.
ஆக்கிரமிப்புப்படையினரைத் துரத்தியடித்துக் கொண்டிருக்கின்ற சின்னப்புயல் திடீரென தரையில் சாய்கின்றான்.
அவனுடை தலையின் பின்புறத்தில் படுகாயம்.
துப்பாக்கிக் ‘குண்டு துளைத்த படுகாயத்திலிருந்து சின்னப்புயலின் செங்குருதி பீறிட்டுப் பாய்கின்றது.
அவனுடைய செங்குருதி தாயக மண்ணைக் குளிப்பாட்டுகின்றது.
ஏ.கே.போட்டி செவிணை சின்னப்புயலின் கரங்கள் இறுகப்பற்றிப் பிடித்துக் கொண்டே இருக்கின்றன.
சின்னப்புயலின் சக போராளிகள் சோக சாகரத்தில்.
கப்ரின் புயலின் மனதில் ஒருவித பதகளிப்பு.
சின்னப்புயலின் முகத்தைப் பார்த்த அவனுடைய மனதில் பயபீதி. அதை வெளிக்காட்டாமலிருக்க அவன் முயல்கின்றான்.
வசந்தனின் உடல் எங்கள் ஊருக்குக் கொண்டு வரப் படுகின்றது.
மக்கள் அலை அலையாக வந்து குவிகின்றனர். ஊரே சோகமயம்.
தங்கள் உறவுகளில் ஒன்றை இழந்துவிட்டதான துயரம் அனைவருக்கும்.
வசந்தனுக்காக உருகுகின்றனர் மக்கள்.
‘எனக்குப் போட்டியாய் கிளம்பிய இவன் துலைஞ்சான். கப்ரின் புயலின் உள்ளத்தில் உவகை.
‘இனி எனக்கு எவனும் போட்டியாக இல்லை’. புயலுக்கு மகிழ்ச்சிப் பூரிப்பு.
வசந்தன் மக்களின் இதயங்களில் அழியா ஓவியமானான்.
– காலவெள்ளம் (சிறுகதைகள்), முதற்பதிப்பு: செப்டம்பர் 2010, இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம், இலங்கை.
| நீர்வை பொன்னையன் (மார்ச் 24, 1930 - மார்ச் 26, 2020) ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, நாட்டார் கதை, இலக்கியக் கட்டுரைகள் எனப் பல எழுதியவர். ஐம்பது ஆண்டுகளாக இடதுசாரி அரசியலில் உறுதியாக நின்றவர். தனது கடைசிக் காலம் வரை எழுதிக் கொண்டிருந்தவர். வாழ்க்கைக் குறிப்பு யாழ்ப்பாணம் நீர்வேலியில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் தொடக்கக் கல்வி கற்று பின்னர் 1951…மேலும் படிக்க... |