கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 3, 2025
பார்வையிட்டோர்: 111 
 
 

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆடி மாதமில்லை இது. கார்த்திகை மாதம். இடம் மாறி வந்து விட்ட செம்மறியாட்டுக் குட்டி போல, காலம் மாறி வந்த திகைப்பில் அற்றலைகிறது. காற்று. ஆடி மாதமாகத் தோன்றவைக்கிற காற்றின் வேகம். தென் மேற்குக் காற்று. ஆளையே அள்ளிக் கொண்டு போகிற உக்கிர வெறியில் வந்து மோதுகிற காற்று. 

பழநிச்சாமிக்கு உயிர்வாதை. முக்கி முக்கிப் பெடலை மிதிக்கிறான். அப்பவும் மலைப் பாறையில் முட்டிக்கொண்ட மாதிரி யிருக்கிறது. சைக்கிள், நகர்வேனா என்று மல்லுக்கு நிற்கிறது. 

இவனும் உயிரைக் கொடுத்து மிதிக்கிறான். ஸீட்டை விட்டு எழுந்து எம்பிஎம்பிக் குதிக்கிறான். மிதிக்கிற தொடர்வேகத்தில் நெஞ்சுக்கூடெல்லாம் காந்தல். உள்ளேபோய் அடைக்கிற சூறைக் காற்றில் உலர்ந்து போய்த் திணறுகிறது. 

குறுக்கெலும்பெல்லாம் குத்திக் குடைகிற வலி. தொடையே உருவிக்கொண்டு போகிற மாதிரியோர் ரணம். களைத்துப்போய் ஸீட்டில் உட்கார்ந்தால் போதும்… சைக்கிளும் சக்கென்று நின்றுகொள்ளும். அடிக்கிற காற்றுக்குச் சேட்டை ஜாஸ்தி. முன் வீலையே எற்றி எற்றித் திசை நழுவச் செய்கிற குரூரக் குறும்பு. 

பழநிச்சாமிக்கு உதடு, மூஞ்செல்லாம் உலர்ந்து வறண்டு போய்… முக வியர்வையில் படிந்த காற்றுப் புழுதியின் மொறு மொறுப்பு. இரு தோள்ப்பட்டைகளும் முறுக்கிப் பிழிந்த மாதிரி வலிக்கிறது. குத்திக் குடைகிற உளைச்சல். 

..பழநி சின்ன வயசில் செம்மறியாடு மேய்த்தான். அப்புறம், இளவட்டமானதும் விறகு வெட்டக் கிளம்பினான். அதுவும் அவ்வளவாக நிரந்தரமாகத் தோன்றவில்லை. ஐஸ் வியாபாரம் செய்தான். மழைக்காலம், பனிக்காலம் என்றால் போதும்… ஐஸ்பெட்டித் தூக்க வேண்டிய அவசியமிருக்காது. 

அப்படியே… இந்த வியாபாரத்துக்கு வந்துவிட்டான். ஊர் ஊராக அலைகிற வேலை. கடை கடையாகநின்று வியாபாரம் செய்யணும். ஒரு நாளைக்கு நாற்பது மைல் சைக்கிள் மிதித்துப் போய் வரணும். ஆனால், நிரந்தரத் தொழில் ! 

கல்யாணம் பண்ணுகிறபோது – 

பழநிச்சாமிக்கு இதுதான் தொழில். அப்போது அவனுக்குள் ஒரு கணக்கு, ஓடைத்தண்ணீர் கொக்காக உட்கார்ந்திருந்தது. 

பசையான இடத்தில் பெண் எடுக்கணும். அவர்கள் உதவியால் இதே தொழிலை ஒரு சின்ன நகரத்தில் கடையாகப் போட்டு உட்கார்ந்துவிடணும். நாலைந்து சைக்கிள்காரர்களுக் குச் சரக்குத் தந்து கமிஷன் பார்த்தால் போதும். 

அவனது கணக்கை… அவனது நல்லுணர்வே முறியடித்தது தான், விதிக்கொடுமை. 

உள்ளூரில் தேவானை. கூலிக்காரி. மூக்குத்திக்குக்கூட வழி யில்லாதவள். திடுமென்று அவளது அம்மா மண்டையைப் போட்டாள். ஒரே ஒரு நாதியாக மிச்சமிருந்த ஓர் உயிர், அதுவும் போய்ச் சேர… நாதியற்று நின்ற குமரிப் பெண்ணாக தேவானை!

அவளை என்ன செய்ய… எப்படிப் பாதுகாக்க என்று மொத்தத் தெருவும் கூடி யோசித்து, ஊர்ச் சுமையைச் சுமக்க இயலாமையில், எல்லோரும் கையைப் பிசைந்து விட்டு வெறும் புலம்பலும் அங்கலாய்ப்புமாகக் கூட்டம் கலைய இருந்தபோது – 

அவளைப் பார்த்து ‘ஐயோ பாவம்’ என்று மனம் கலங்கிய இவனது கருணைதான், மலட்டுத் தனமற்ற கருணையாகச் செயல் வடிவம் பெற்றது. 

“அவளை, நா வேணும்னா கல்யாணம் மூய்ச்சுக்கிருதேன். அவகிட்டே சம்மதம் கேளுங்க…” 

-இவனது இளகிப்போன மனித மனசின் நெகிழ்விலிருந்து வெளிப்பட்ட கம்பீரச் சத்தம். அந்தச் சத்தமே, மங்கள இசையாக… கொட்டுமேள நாதஸ்வரமாக ஊரெல்லாம் பரவ… 

கடைக் கனவு, கனவாகவே போய்விட… சைக்கிளில் கிடந்து உதைகிற விதி, அவனைத் தொடர… 

இப்போது – 

அவனது ரெண்டாவது பையன், அஞ்சாங்கிளாஸ் படிக்கிறான். 

…மேற்கு மலை முதுகுக்குள் முகம் மறைக்கிற பொழுதுக்கால். ஒளிச் சந்தனத் தகதகப்பு. சுற்றி நிற்கும் மேகக் கந்தல்களையும் சந்தன வெளிச்சமாக்குகிற அந்தி! 

காற்றே சூரிய வெளிச்சமா? பொழுது அடைந்தவுடன், கப்சிப் என்றாகிவிட்ட காற்று. 

தார் ரோட்டில்ல ப்ரீவீல் இரைச்சலோடு சுலபமாக நகர்கிற சைக்கிள். ஸீட்டில் உட்கார்ந்து மிதித்தான். கேரியரில் சதுரமான மரப்பெட்டி. கேக், கடலை மிட்டாய், பெப்பர் மிட்டாய், பிஸ்கட், ரொட்டி அயிட்டங்கள் இருந்த பெட்டி. எல்லாம் விற்றுத் தீர்ந்து விட்டன. வெறும் பெட்டிக்குள் நாலு பெரிய ராட்சதப் பைகள். அதுவும் வெறும் பைகள். 

எல்லா கடைகளிலும் வசூல் முடித்தாகி விட்டது. இனி, ஊர் போய்ச் சேர்வதற்குள் கறுகறுவென்று மயங்கிவிடும். 

தேவானை தங்கக் கட்டி! போய்ச் சேர்ந்தால், வெந்நீர் தயாராக இருக்கும். குளித்தவுடன் கைலி, பனியன் ரெடியாக இருக்கும். அப்படியே சாப்பாட்டில் உட்காரலாம். எள் என்பதற்குள் எண் ணெய்யாக வந்து நிற்பாள். 

அவளும் சும்மாயிருக்க மாட்டாள். வீட்டு வேலை முடிந்தால்… தீப்பெட்டி அடிப்பெட்டி ஒட்டுவதற்கு உட்கார்ந்து விடுவாள். தாள் கட்டும் அட்டைக் கட்டும் கிடக்கும். பசையுமிருக்கும். 

இவள் கை சுழலும். விரல்கள் விறுவிறுவென்று இயங்கும். மடிப்பும் அட்டையும் ஒட்டும் தாளும் பசையுமாக ஒரு மாயம் போல நிகழும். ஒரு நாளைக்கு இருபத்தைந்து ரூபாய்க்கு ஒட்டிவிடுவாள். சிக்கனக்காரி. வியர்வைச் செலவாளி. 

இன்னும் ரெண்டு மைல்தான். 

மனசுக்குள் ஓர் ஆசுவாசம். சைக்கிள் மிதித்துக்கொண்டே அங்கும் இங்குமாக நகரும் பார்வை. நடந்த வியாபாரத்தில் அலைகிற நினைவு. 

மூன்று கடையில் பணம் தரவில்லை. பாக்கி சொல்லி விட்டார்கள். இருக்கும் பணத்தில் ரொட்டிக் கடைக்கும் மிட்டாய்க் கடைக்கும் பணம் கட்டிவிடலாம். 

தோராயமாக என்ன லாபமிருக்கும் இன்றைய வியாபாரத்தில் என்று நத்தையாக ஊர்கிற மனசு. மனக்கணக்கில் நீள்கிற நம்பர்கள். 

அவன் தலைக்கு மேல் பறந்து போகிற கொக்கு வரிசை, அறுத்தெறிந்த முத்து மாலையாக. ‘விர்ர்’ ரென்று கர்ண கடூரமாகக் கத்திச் செல்கிற பனங்காடை. ரோட்டோர வேலி மரங்களுக்குள் சாவகாசமாக நடந்து இரை கொத்துகிற மயில்கள்! இவை எதையும் பார்க்க முடியாமல் அவன் கவனத்தைப் போட்டு அமுக்குகிற நம்பர்கள்… 

அப்போதுதான்… 

அந்தக் கசப்பான சம்பவம், சுரீரென்று ஞாபகத்துக்குள் சுட்டது. 

“இப்படியும் ஒரு கடைக்காரனா…? ச்சேய்… ஏவாரிகிட்டேயே களவா ? பத்து ரூபா போச்சே… ஏவாரிக்கு ஏவாரி களவு செஞ்சா… நாட்ல யாரைத்தான் நம்புறது? எப்படித்தான் வாழ்றது?” 

அந்த ஊர்தான், இவன் போகிற லைனில் கடைசி ஊர். டவுன் பஸ் பாசையில் சொன்னால்… டெர்மினஸ். 

அதிலும் அந்த வேப்பமரக் கடைதான் கடைசிக் கடை. அவ்வளவாக சரக்கு வாங்க மாட்டார். ஊறுகாய் அட்டை, மசால் பொடியட்டை, பெப்பர் மிட்டாய் பாக்கெட் என்று அவ்வளவாக லாபம் கிடைக்காத சரக்குகள்தான் வாங்குவார். 

அதிலும் ‘வளவளா’ வென்று பேசுவார். படு பயங்கரமாகக் கசறுவார் ! அசல் விலை சொன்னாலும், அதற்கும் கீழே அரை ரூபாய் குறைக்க முடியுமா என்று நச்சரிக்கிற ஆள்! 

பழநிச்சாமிக்கு இப்படிப் பிசினாறி ஆட்களைக் கண்டாலே பிடிக்காது. இவன், சுத்தமானவன். நாணயன். பொய் புரட்டு இருக்காது. 

சரக்குகளைப் போட்டோமா… கணக்கைப் பார்த்தோமா… ரூபாயை வாங்கினோமா என்று எல்லாம் மின்னல் வேகத்தில் காரியம் நடக்கும். அதுதான் நாணயனுக்குப் பிடித்த நாணயம். 

கசறுவது… சந்தேகிப்பது… நச்சரிப்பது… ஒருவரையொருவர் கள்ளத்தனமாக அளக்க முயல்கிற பாசாங்குப் பசப்பு… இதெல்லாம் சுத்தமாகப் பிடிக்காது இவனுக்கு. 

ஊறுகாய் அட்டை, பட்டை ஊறுகாய், மிட்டாய் பாக்கெட்டுகளை எடுத்துப் போட்டான். 

“தேன் மிட்டாய் இருக்கா?” 

”இருக்கு.” 

“கால் ரூவா இருக்கா… அரை ரூவா இருக்கா?”

“ஒங்களுக்கு எது வேணும்?” 

“கால் ரூவாயிலே ரெண்டு பாக்கெட் குடுங்க. பன் இருந்தா… ரெண்டு டஜன்.” 

“எது?” 

“ஒரு ரூவா பன்.” 

“புதுசா கேக் பாக்கெட் வந்துருக்கு. வேணுமா?”

“எது?” 

“அம்பது பைசா விக்கிறது. அதுகூட ஒரு பாக்கெட்தான் கெடக்கு.” 

“எங்கே எடுங்க… என்ன வெலை?” 

“பத்து ரூவா, இருபத்தஞ்சு கேக் இருக்கும்”

“ஒம்பதுனு போடக்கூடாது?” 

“கட்டாது.” 

“ஒம்பதரையாச்சும் போடுங்க…” 

“இல்லே… பத்து ரூவாதான். வித்தா ஒங்களுக்கு ரெண்டரை ரூவா லாபம். எனக்கு பாக்கெட்டுக்கு முப்பது பைசாதான் கமிஷன்.” 

கேக் பாக்கெட்டை எடுத்துப் போட்டான் பழநிச்சாமி. கடைக்காரருக்கு வாங்கவும் ஆசை… அப்புறம் தயக்கம். மருகி மருகி யோசிக்கிறார். 

அப்புறமும் கடைக்காரர், அது என்ன வெலை, இது என்ன வெலை என்று, கொச கொசனு நச்சரித்தார். சங்கரன் கோவில் கடைகளில் என்ன விலை… ராஜபாளையம் கடையில் என்ன விலை… என்று சளசளத்தார். நேரமும் கவனமும் நழுவிக் கொண்டிருந்தது. 

இவனுக்கு எதுவும் ஒவ்வவில்லை ! உயிரில்லாமல் உம்கொட்டினான். பொறுமையில் பல்லைக் கடித்தான். 

உள்ளங்கைக்குள் ஒரு வெள்ளைச் சிட்டை – 

தேன் – 2

அட்டை – 2 

மிட்டாய் – 2

என்ற தினுசில் சிட்டை போட்டு ரேட் போட்டு வந்தான். 

“கேக் சேக்கணுமா?” 

“வேணாம்…” 

கணக்கு முடித்துப் பணத்தை வாங்கினான். பெட்டிக்குள் மிச்சமாகக் கிடந்த சரக்குகளைப் பொறுக்கி, தூக்குப் பைக்குள் போட்டு முடிச்சுப் போட்டு… மரப்பெட்டிக்குள்ளேயே போட்டான். 

ஒத்தக் கடை என்ற ஊரோடு வசூல் முடியும். முடிந்த கையோடு புறப்பட்டான். ரோட்டுக்குத் தெற்கில் ஒரு பம்ப் ஷெட் ரூம். மோட்டார் ஓடியது. குழாயிலிருந்து உருக்கி ஊற்றிய வெள்ளிக் கற்றையாக அள்ளியூற்றிய நீர். 

வண்டியை நிறுத்தினான். வாய்க்கால் தண்ணீர் கண்ணாடியாகப் பளபளத்தது. முகம், கால், கை கழுத்தடி என்று நீரையள்ளிக் கழுவினான். 

துண்டை எடுத்துத் துடைத்தான். கணக்குச் சேர்க்காத கேக் பாக்கெட்டைத் திரும்ப வாங்கினோமா என்று ஒரு சந்தேகம். அவனுள் தேள் கொட்டின மாதிரியிருந்தது. 

அவசர அவசரமாக மரப்பெட்டிக்குள் கிடந்த தூக்குப் பையை அவிழ்த்துத் துழாவினான். கேக் பாக்கெட் மட்டுமில்லை… அப்படீன்னா… அந்த பாக்கெட்டை ஒளிச்சிக்கிட்டாரா? வேண்டாம் என்று சொல்லிவிட்டு… தருவது போலப் பாவனை செய்துவிட்டு… அதை உள்ளே போட்டுக் கொண்டாரா… அடப்பாவி! 

பத்து ரூபாய் போச்சே ! 

ரூபாய் நட்டத்தை விடவும், பழநிச்சாமியை இன்னொரு விஷயம்தான் ரொம்பக் குத்திக் குடைந்தது. 

தான் ஏமாற்றப்பட்ட விதமும் மோசடிக்குள்ளாக்கப்பட்ட விதமும் தான் அவனை ரொம்ப பாதித்தது. அவமானமாக உணர்ந்தான். 

‘ச்சே… அற்பத்தனமான ஓர் ஆள்கிட்டே நாம இளிச்ச வாயனாயிட்டோமே’ என்கிற ஆத்திரம். 

மனசார ஒரு பாக்கெட்டை ஒளித்துக் கொள்கிற அளவுக்கு ஒரு மனிதனிடம் திருட்டுப் புத்தியா? ச்சேய்… என்ன கள்ளம். என்று நினைக்க நினைக்க அவனுக்குள் குமட்டிக் கொண்டு வருகிற அசூயை. 

இதெல்லாம் நடந்து பத்து நாளாயிற்று. 

ஒருநாள் விட்டு ஒருநாள் லைனுக்கு வருவான். மூன்றாம் நாள் வந்து கேட்டான். 

கேக் பாக்கெட்டைத் திரும்பத் தந்துவிட்டதாக ஒரேயடியாகச் சாதித்துவிட்டார் கடைக்காரர். அது மட்டுமில்லை. 

“எம்மேல எப்படிச் சந்தேகப்படலாம்? என்னமாய்க் கேக்கலாம்?” என்று ‘தங்கு, புங்கென்று’ ஆகாயத்துக்கும் பூமிக்குமாகக் குதித்தார். ஏகமாகச் சத்தம் போட்டார், கோபம் கோபமாக. 

பழநிச்சாமிக்குக் கடுப்பு என்றால் கடுப்பு, அம்புட்டுக் கடுப்பு. கடித்துத் துப்பிவிடலாமா என்று கொப்பளித்த ஆத்திரம். 

‘கழுதை ! களவாணிப் பயலாயிருப்பான் போலிருக்கே ! களவும் செஞ்சுட்டு… யோக்கிய வேஷம் வேறயா?’ 

-இவனுக்குள் ரௌத்ரம். சிறுமை கண்டு குமுறும் கோபம். சண்டை போட்டுவிடலாமா என்று துடியாகத் துடித்த மனசு… வாய்க்குள் வந்து முட்டிய கோப வார்த்தைகள்… பல்லைக் கடித்துச் சமாளித்துக் கொண்டான். 

ஏவாரம். தொடர வேண்டிய சங்காத்தம். கடைக்காரங்களைப் பகைச்சுக்கிட்டா… ஏவாரம் படுத்துரும். பொறு பழநி… பல்லைக் கடி… லகான் போடு… வார்த்தையைக் கட்டுப்படுத்து… உன்னை உன் வசப்படுத்து… 

வசப்படுத்திக் கொண்டான். பொறுமையாக. அவரிடம் நல்ல வார்த்தை பேசினான். பேச்சு, பேச்சாக இருந்தாலும், மனசுக்குள் உஷ்ணமாக ஓடிய ஒரு நினைவு… தீ நினைவு… 

இந்த அற்பனிடம் தோற்பது இழிவு. தோற்றதாகப் பேசி விட்டுப் போய் விடணும். ஆனா, ஏதாச்சும் செஞ்சு… அவன் களவாண்ட பத்து ரூபாயைக் கைப்பத்திரணும். ஏதாச்சும்னா…? கோல்மால் செய்யவா? கணக்குலே குண்டக்க மண்டக்க வென்று ஏதாச்சும் செய்யவா? அது, நம்ம பழக்கமில்லியே… நம்ம சுபாவமில்லையே… இவனுக்காக… நம்ம பிறவிச் சுபாவத்தை மாத்தவா? அசிங்கமாகவா ? இவன்கிட்டே மட்டும் மாத்திக்கிட்டா… என்ன தப்பு? 

அவனுக்குள் குழப்பம்… அங்குமிங்குமாக அலைபாய்வு. அவன் நரம்புகளுக்குள் சிலிர்த்தோடுகிற நடுக்கம்… மனசுக்குள் புழுக்கம். முதன் முதலாகத் தப்புச் செய்கிற அச்ச வியர்வை. 

அவனது உள்ளங்கைக்குள் வெள்ளைச் சிட்டை 

தேன் – 3

ஊறுகாய் – 2 

மசாலா  – 3 

பன் – 12 

என்று போட்டுக்கொண்டே வந்தான். கடைக்காரன் கவனிக்கிற முக்கியச் சரக்கை சரியான விலையில் போட்டான். மற்றதில் எட்டணா, முக்கால் ரூபாய் கூடக் கூடப் போட்டான், கடைக் காரன் கவனிக்க முடியாத விதத்தில். 

கணக்கை முடித்து வாங்குகிற போது… பத்து ரூபாயில் ரெண்டே கால் ரூபாய் வசூல் பண்ணியிருந்தான் – ரகசியமாக. இப்படியே மூன்று தடவைகள். பத்து ரூபாய் வசூலாயிற்று. இன்றோடு முடிந்தது. 

ஆனால்… மனசுக்குள் ஒரு முள் குத்தல். முடிந்தது என்ற திருப்திக்குப் பதிலாக நீயுமா இப்படி? என்கிற கேள்வி நமைச்சல். 

என்னதான் நமக்குப் பாத்தியப்பட்ட ரூபாயாக இருந்தாலும்… அதையே திருடி, மொள்ளமாறித்தனம் செய்து கைப்பற்றியது அசிங்கமில்லையா? சாக்கடைக் குள்ளே கெடந்த தங்கத்தையே எடுத்திருந்தாலும்… எடுத்த கையிலே சாக்கடை வழியத்தானே செய்யும் ? 

அவனுக்குள் ரொம்ப உறுத்தல். குத்திக்கொண்ட முள்ளின் ரண அதிர்வு ! 

வீட்டுக்குப்போன பின்பும்கூட… இதே யோசனைக் குழப்பம். குளிக்கச் சொல்லி நச்சரித்த தேவானை. 

“குளிச்சதாலே கழுவ முடியாது இந்த அழுக்கை…” என்றான் ஏதோ ஞாபகமாக. மனசின் உள் ரணம் எப்படியோ உதடுகளின் வழியே கசிந்துவிட்டது. 

சம்பந்தா சம்பந்தமில்லாத அவனது பதில்… குழம்பி குழம்பி மருகிக் கிடக்கும் புருஷனின் முகம். 

தேவானை திகைத்துப் போனாள். 

‘என்ன, ஏது?’ என்று விடாமல் நச்சரித்தாள். 

சாப்பிட உட்கார்ந்தபோது, நடந்ததையெல்லாம் சொன்னான்.

“பத்து ரூவாயை நா வசூல் பண்ணி முடிச்ச கள்ளம் சரி தானா?” 

-அடிபட்டு வந்த பிள்ளை, தாயிடம் சொல்லி ஆறுதல் பெற விரும்புவதைப் போல, தவிப்போடு கேட்டான். 

அவள், புருஷனின் ஈரத்தலையைப் பாசத்துடன் தடவிக் கொடுத்தாள். 

“சரி… செஞ்சுட்டீகள்லே ? அதை விடுங்க.” 

“சரியா… தப்பா ? அதைச் சொல்லு…” 

“நாய் நம்மளைக் கடிச்சா… நாமளும் திருப்பிக் கடிக்கறது ஞாயமா?” 

“அதெப்படி…? எந்த நாய் வேணும்னாலும் ஏமாத்திரலாம்ங்கற மாதிரி… நாம இருக்கலாமா?” 

ரெண்டு பேரும் சண்டை போடவில்லை. ஆனால், ரெண்டு கட்சியாக நின்று விவாதம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். முடிகிற மாதிரித் தெரியவில்லை. நீண்டு கொண்டே போயிற்று… வாழ்க்கையைப் போல. 

– 09.02.97, ஆனந்த விகடன்.

– என் கனா (சிறுகதைகள்), முதற் பதிப்பு: அக்டோபர் 1999, வைகறைப் பதிப்பகம், திண்டுக்கல்.

மேலாண்மை பொன்னுச்சாமி மேலாண்மை பொன்னுச்சாமி (செ. பொன்னுச்சாமி; கலைக்கண்ணன்; அன்னபாக்கியன்; அன்னபாக்கியச் செல்வன்; ஆமர்நாட்டான்) (1951- அக்டோபர் 30, 2017) எழுத்தாளர். வட்டார வழக்கில் பல சிறுகதைகளையும், புதினங்களையும் படைத்தார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்து செயல்பட்டார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார். மேலாண்மை பொன்னுச்சாமி படிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். கல்வி தடைப்பட்டதால் நாளிதழ்கள், நூல்கள் வாசித்து தனது வாசிப்பார்வத்தை வளர்த்துக் கொண்டார். வாசித்த ஜெயகாந்தனின் நூல்கள் இவருள்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *