கலாட்டா கல்யாணம்




கோடை விடுமுறை விட்டாயிற்று. ஒவ்வொரு விடுமுறையிலும் சென்னை செல்வது ஸுஜிதாவின் வீட்டில் வழக்கம். ஆனால் கடந்த சில வருடங்களாக அவள் செல்லவில்லை. அவளுடைய இரு வழி தாத்தா பாட்டிகள் அங்கு தான் உள்ளனர். ரயிலில் போவது அவளுக்கு மிகவும் பிடிக்கும். கடைசி நாளில் பள்ளிக்கூடம் விட்டு வரும்போதே ரொம்ப நினைவாக கன்ஸெஷன் ஃபார்ம் தனக்கும் தன் தம்பிகளுக்கும் வாங்கி வந்திருந்தாள். டிக்கெட்டும் வாங்கியாச்சு. ஊருக்குப் போகும் நாளை குதூகலத்தோடு எதிர் நோக்கிக் காத்து இருந்தாள்.

அன்று காலையிலிருந்தே ஸுஜிதா மிகவும் பரபரப்பாய் காணப்பட்டாள். அம்மா பயணத்துக்கு வேண்டிய சாப்பாடு தயாரிப்பதில் மும்முரமாய் இருந்தாள். ஈயம் பூசிய பெரிய பித்தளை டிஃபன் காரியரில் புளியஞ்சாதம், மிளகாய் பொடி தடவிய இட்லி, தயிர் சாதம், வடகம், உருளைகிழங்கு வதக்கல் எல்லாம் நிரப்பி வைத்தாள். தண்ணீருக்கு இரண்டு பெரிய கூஜா, ஒரு ப்ளாஸ்டிக் கூடையில் சாப்பிட தட்டு, ஸ்பூன், ஊரில் கொடுப்பதற்கு பாதாம் ஹல்வா, மிக்ஸ்சர் அடங்கிய டப்பா, ஃப்ளாஸ்கில் வெந்நீர், பால் பவுடர், சர்க்கரை, காஃபி டிகாக்ஷன் எல்லாம் எடுத்து அடுக்கி வைக்கப்பட்டன. அப்பா ஹோல்டாலில் படுக்கை, விரிப்புகள், எல்லாம் வைத்துக் கட்டிக் கொண்டிருந்தார். ஹோல்டால் அதாவது ஹோல்ட்-ஆல், பெயருக்கேற்றபடி எல்லாவற்றையும் அடக்கிக் கொள்ளும். இன்றைய கால கட்டத்தில் மறைந்து போன பொருட்களில். கூஜா, டிஃபன் காரியர், ஹோல்டால் ஆகியவைகளும் உண்டு.
டாக்ஸி வந்தது. எல்லோரும் ஸ்டேஷன் வந்தனர். அம்மாவின் பக்கத்தில் இரு தம்பிகள் வர, அவள் இன்னொரு தம்பியை இடுப்பிலும் வைத்து வந்து கொண்டிருந்தாள். ஸுஜிதா இரு கைகளிலும் இரு கூஜாக்கள், அப்பா டிஃபன் காரியர்,. பிளாஸ்டிக் கூடையை எடுத்துக் கொண்டாலும், ஹோல்டாலும் ஸூட் கேஸும் வேறு உள்ளனவே. இவர்கள் கம்பார்ட்மெண்ட் வேறு மிகவும் தள்ளி இருந்ததால் போர்ட்டரை வைத்துக் கொண்டார்கள். ஒரு வழியாக ரயிலில் நுழைந்து ஸீட் தேடிக் கண்டு பிடித்து உட்கார்ந்தாச்சு. இதில் ஜன்னல் ஓரம் யார் உட்காருவது என்று குழந்தைகளிடையே சண்டை. ஒரு வழியாக குழந்தைகள் எல்லோரையும் கொஞ்ச நேரம் மாற்றி மாற்றி
உட்காரச் சொல்லி அப்பா சமாதானம் செய்து வைத்தார். அந்த காலத்தில் ஸ்டீம் எஞ்சின் தான் உண்டு. அது நிலக்கரியில் ஓடுவதால் கரித்துண்டு அவ்வப்போது ஜன்னல் ஓரத்தில் இருப்பவர் கண்களில் விழும். இந்த அனுபவத்தினால் குழந்தைகளிடம் அங்கு உட்கார இப்போது போட்டியில்லை.
ஸுஜிதாவுக்கு வழியில் விற்றுக் கொண்டு வருவதெல்லாம் சாப்பிட ஆசை. அம்மாவிடம் கேட்டால் அது எல்லாம் ஒடம்புக்கு கெடுதல். அவன் என்ன எண்ணையில் பண்ணறானோ, அது தான் நான் பிஸ்கெட்டு , ஸ்வீட்டு, காரம் எல்லாம் கொண்டு வந்திருக்கேனே, அது வேணா தரேன், சாப்பிடு என்பாள். ரயிலில் மற்ற குழந்தைகள் சாப்பிடுவதை ஏக்கத்தோடு பார்ப்பாள்.
பெர்த் வெறும் கட்டையால் இருப்பதால் இரவு வந்தால் படுக்கை விரித்துப் போடுவாள் அம்மா. இந்த காலத்தில் தான் எவ்வளவு சௌகரியம். பெர்த் எல்லாம் குஷன், கையில் கூஜா, டிஃபன் காரியர் ,தூக்க வேண்டாம். ஷதாப்தி, வந்தே பாரத் போன்றவைகளில் தண்ணீரோ, சாப்பாடோ எல்லாம் நாம் இருக்கும் இடத்துக்கே வரும்.
ரயில் சென்னை ஜங்ஷனுக்குள் நுழைந்தவுடன் ப்ளாட்பாரத்தில் தாத்தா நிற்பது தெரிந்தது. அவர்களைக் கோவிந்தன் குதிரை வண்டியில் ஏற்றி விட்டு, தாத்தா பின்னால் ஸைக்கிளில் வந்து கொண்டிருந்தார். ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தாச்சு. பாட்டிக்கு அவர்கள் எல்லோரையும் பார்த்து ரொம்ப மகிழ்ச்சி. எல்லோருக்கும் பாட்டி காஃபி போடப் போனாள். ஸுஜிதா பின்னாடியே போனாள். பாட்டி தண்ணீரைக் கொதிக்க விட்டு அதில் காஃபிப் பொடியைப் போட்டு மூடி வைத்தாள். பிறகு அதைத் துணியில் வடிகட்டி பால், சர்க்கரை சேர்த்தாள். ஸுஜிதா அம்மாவிடம், ”அம்மா, ஃபில்டர் இல்லாம பாட்டி எப்படி காஃபி போடறா பாரு, நீ காஃபி ஃபில்டரில பொடி போட்டு தண்ணி ஊத்தி இறங்கறதுக்கு காத்திண்டிருப்பாயே” என்றாள். அம்மா அதுக்கு, “ பாட்டி எனக்கு முந்தின காலம். அப்போ எல்லாம் இப்படித் தான் காஃபி போடுவா” என்றாள். மண்ணால் ஆன கொடி அடுப்பு,. விறகு வைத்து பற்ற வைப்பது ஸுஜிதாவுக்கு ஆச்சரியமாக இருந்தது ஏனென்றால் அவள் விவரம் தெரிந்து இப்பொழுது தான் பார்க்கிறாள். அம்மா பம்ப் ஸ்டவ் மற்றும் சூலா என்னும் வாளி போல் இருக்கும் மண் அடுப்பை உபயோகிப்பதைத் தான் அவள் இருக்கும் கல்கத்தாவில் பார்த்திருக்கிறாள்.
பாட்டி வீடு ஸ்டோர் மாதிரி. சுற்றி வர நிறைய குடும்பங்கள் இருக்கும். பாட்டி குளிக்காமல் அடுப்பைத் தொட மாட்டாள். அவ்வளவு குடித்தனங்களுக்கு ஒரே ஒரு குழாய் தான். பாட்டி அதி காலையில் எழுந்து, குளித்து, மடி தண்ணி ரொப்பின அப்புறம் தான் பால், காஃபி எல்லாம். குழந்தைகளுக்கு காலை டிஃபன், குடித்தனக்காரர்களில் யாரையாவது ஒருத்தரை அனுப்பி வாங்கி வரச் செய்து கொடுப்பாள். பாட்டி சமைத்து முடிப்பதற்குள் வெந்நீர் உள் காலியாகி விடும். அப்பொழுது ஸுஜிதா குடும்பம் குளிக்கச் சரியாக இருக்கும். ஸுஜிதா அம்மா எல்லோருடைய துணி மணிகளையும் எடுத்துக்கொண்டு புழக்கடைக்குப் போய் துவைக்கும் கல்லில் தோய்த்து அங்கிருக்கும் கிணற்றில் தண்ணீர் இறைத்து நன்கு அலசி, உதறி உலர்த்துவாள். பிறகு சாப்பிட்டு முடித்து சிறிது நேரம் கண்ணயர்வார்கள். ஃபேன் கிடையாது. விசிறி தான். பெரியவர்கள் கட்டாந்தரையில் பலகையின் மேல் தலை வைத்து படுப்பார்கள். ஸுஜிதாவுக்குத் தூக்கம் வராது. பக்கத்து வீட்டு மைதிலியுடன் விளையாடப் போவாள்.
மாலையில் வெறும் காஃபி, பால் தான். ஸுஜிதாவின் தாத்தா, குழந்தைகளுக்கு பேரீச்சம்பழம், முந்திரி, கல்கண்டை கிண்ணத்தில் போட்டுக் கொடுப்பார். வீட்டில் வெளிச்சத்துக்கு டங்ஸ்டன் 40 வாட்ஸ் பல்ப் தான். கல்கத்தாவில் ட்யூப் லைட்டைப் பார்த்த கண்ணுக்கு இது மங்கலாகவும், மஞ்சளாகவும் இருக்கும். கோவிலுக்குப் போய் வந்து இரவில் சீக்கிரமே சாப்பட்டிற்குப் பதில் டிஃபன் செய்து சாப்பிடுவார்கள். தாத்தா கதை சொல்லுவார். அதைக் கேட்டுக் கொண்டே தூக்கம் வந்து விடும். கொசுக் கடியோ, ஃபேன் இல்லாததோ எதுவும் தெரியாது. தாத்தா தூக்கம் வரும் வரை விசிறிக் கொண்டு இருப்பார்.
காலையில் எழுந்து சிறுநீர் கழிக்க வெந்நீர் உள் தான் போக வேண்டும். இருந்தது ஒரே ஒரு டாய்லெட். ஆகவே சிறு குழந்தைகளை வீட்டை ஒட்டி உள்ள பாதையில் மலம் கழிக்கச் சொல்வார்கள். குளிப்பது கூட குழந்தைகள் வெளியே தான். பெரிய குழந்தைகள் வெந்நீர் உள்ளில் தான் குளிப்பார்கள் அதுவும். அது ஒரே இருட்டாக இருக்கும். ஒரு அழுது வடியற பல்ப் இருக்கும். சமயத்தில் தேள், பூரான் கூட இருக்கும். இவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் சென்னை போவதென்றால் ஸுஜிதாவுக்கு குஷி தான். அதுவும் அம்மா வழி தாத்தா வீடென்றால் அவளுக்கு இரட்டை மகிழ்ச்சி. அவர்களுக்குச் சொந்த வீடு. இரண்டு கட்டு வீடு. பெரியதாக இருக்கும். வீட்டில் தோட்டம் தொறவு இருக்கும். நாட்டுக்கொய்யா, ஒட்டுக் கொய்யா, காசிக் கொய்யா, மாம்பழம், மாதுளை, வாழைப்பழம், எலந்தைப்பழம் எல்லாம் பறித்துச் சாப்பிடலாம். வீட்டில் மாடு. கன்று இருக்கும். கட்டித் தயிர், கடைந்த மோர், பந்து போல் வெண்ணெய், நெய். எல்லாம் அருமையாக வீட்டிலேயே செய்வார்கள். இந்தக் காலத்து கலப்படப் பால், தயிர் , வெண்ணெய் மாதிரி இல்லை. வீட்டிலேயே சித்தி பெரிய மத்து வைத்துத் தயிர் கடைவாள். அதில் திரண்டு வரும் வெண்ணெய் வாஸனையாக இருக்கும். பக்கத்தில் இருந்தால் குழதைகளுக்கு சிறிய உருண்டை வெண்ணெய் தருவாள்.
எல்லாவற்றிற்கும் மேலே, ஜட்கா, அது தான் குதிரை வண்டி, சவாரி அவளுக்கு ரொம்பப் பிடிக்கும். பிடிக்காத ஒன்று அங்கு பீங்கான் டாய்லெட் இல்லாதது தான். தரையிலிருந்து ஒரு அடி உயரத்துக்கு ’ப’ வடிவத்தில் நடுவில் துளையுடன் கட்டி இருக்கும். படி ஏறிப் போய், அதன் மேல் உட்கார்ந்து கொண்டு தான் மலம் கழிக்க வேண்டும். சில சமயங்களில் கீழே பண்றிகள் வந்து, ‘டுர்..டுர்..’ என்று உறுமி சண்டை போடும் போது பயமாக இருக்கும். அங்கு போவதற்கு அசிங்கமாகவும் இருக்கும். கதவு கிடையாது. வெளியில் தண்ணீர் நிறப்பிய சொம்பை வைக்கா மறந்தால் யாராவது நுழைய சந்த்ர்பம் வேறு உண்டு. காலையில் துப்புரவுப் பெண்மணி மலத்தை முறத்தில் அள்ளி எடுத்து அதன் மேல் சாம்பலைத் தூவி அப்புறப் படுத்தி கழிப்பிடத்தைச் சுத்தம் செய்வார்.
எக்ஸ்பிரஸில் ஏ. ஸி கோச்சில் பயணிக்கும் ஸுஜிதா, தன் குழந்தைப் பருவத்துக்குச் சென்று மனக்கண்ணால் அன்றைய காட்சிகளை ரசித்துக் கொண்டிருந்தாள். அவள் தன் தங்கை, சாந்தாவின் பிள்ளை திருமணத்துக்குச் சென்னை போய்க் கொண்டிருந்தாள். நேரே மண்டபத்துக்குப் போவதாக ஏற்பாடு. அப்பொழுது தான் அவளுக்குத் தோன்றியது. அடடா பத்திரிகை எடுத்து வர மறந்து விட்டோமே, அதில் தானே விலாஸம் உள்ளது. சாந்தாவுக்கு ஃபோன் செய்து குறித்துக் கொண்டாள். மாறி வரும் காலத்தில் தான் எத்தனை சௌகரியம். போகும் இடமெல்லாம், கையோடு ஃபோன். நொடியில் சேதி வந்து சேருகிறது. இதுவே அந்தக் காலமாக இருந்தால் கஷ்டம் தான். பாட்டி, தாத்தா இறந்த செய்தி கூட அத்தைக்கு ட்ரங்காலில் தான் வந்தது. அவர்கள் குடும்பத்தில் அத்தை வீட்டில் மட்டும் தான் ஃபோன் இருந்தது. நவீன யுகத்தில் உலகமே கைபேசியில் என்றாகி விட்டது. ரேடியோ பாட்டு கேட்டு உள்ளுக்குள் உட்கார்ந்து யாராவது பாடுகிறார்களா என்று எட்டிப் பார்த்த காலம் போய் தொலைக்காட்சி பெட்டி வந்தது. கார்டு, கவர், கார்டு, இன்லாண்ட் லெட்டர் தொலைந்தன. நொடியில் ஈ மைல். புறா மூலம் செய்தி அனுப்புவது போல ஈ மூலம் அனுப்புவார்களா என்று எண்ணிய காலம் போய் எங்கும், எதிலும் கணினி மயம். கேட்க எல்லாம் பிரமிப்பாக இருக்கிறது. இவ்வளவு இருந்தும் மக்களுக்குத் தன் சொந்தங்களோடு உறவாட நேரம் என்பது தான் இல்லை. பொருளாதார நிர்பந்தங்களால், கூட்டுக் குடும்பங்கள் மறைந்து எங்கும் ஸாடிலைட் குடும்பங்கள். பொது நலம் மறைந்து சுய நலம் ஓங்கும் காலம். காலச் சக்கரம் போல மக்களின் கால்களில் சக்கரம். கவலைகள் அதிகம். போட்டிகள் நிறைந்த வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற உத்வேகம்.
திடீரென்று பயங்கர வெடிச் சத்தத்தோடு மரம் சாய்வது போன்றதொரு உணர்வினால் ஸுஜிதாவின் நினைவுச் சங்கிலி அறுபட்டது. என்ன ஆச்சு என்று புரியாமல் கூக்குரல்கள். அழுகுரல்கள். ஏதோ அசம்பாவிதம் என்று உணர்வதற்குள்ளேயே யாரோ படுவேகமாகத் தன்னைத் தூக்குவது போல உணர்ந்தாள். பயங்கர ரயில் விபத்து. ஒரிஸ்ஸாவில் பலஸூர் என்ற ஊரில் தான் விபத்து நடந்தது. மூன்று ரயில்கள் மோதி ரயில் பெட்டிகள் ஒன்றன் மீது ஒன்று ஏறி அந்த இடமே திகிலூட்டுவதாக இருந்தது. போலீஸ் , ஹெலிகாப்டர், ஆம்புலன்ஸ் என்று போர்க்களம் போல் காட்சியளித்தது அவரவர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடிக் கொண்டிருந்தனர். இவளும் இவளைப் போலவே ஒரு சிறு பையனும் சிறிய காயத்துடன் அங்கு இருந்த புதரில் தூக்கி எறியப் பட்டிருந்தனர். அந்தப் புதர், வண்டியின் டீஸல் பட்டு பற்றி எரிந்து கொண்டிருந்தது. உடைமைகள் எல்லாம் போயிற்று. நல்லவேளையாக கைபேசியை கழுத்தில் தொங்க விட்டு ஜாக்கெட்டுக்குள் செருகி வைத்திருந்தாள். அவள் திருடர்களுக்குப் பயந்து ஒளித்து வைத்ததும் நல்லதாய் போயிற்று. நெருப்பினூடே அவனையும் காப்பாற்றி, கைபேசிக்கும் எதுவுமாகாமல் வெளியே வருவது மிகவும் சிரமமாக இருந்தது. ஸுஜிதா நல்ல தைரியமானவள். இனி அடுத்து என்ன செய்வது? கை பேசியை எடுத்து நிலவரத்தை விவரித்து தான் எங்கு இருக்கிறோம் என்ற விவரத்தையும் சாந்தாவுக்குச் சொன்னாள். சாந்தா சேதி கேட்ட உடனேயே தன் இரண்டாவது பிள்ளையை விபத்து நடந்த இடத்துக்கு அனுப்பி விட்டதாகக் கூறினாள்.அவன் வந்ததும் ஸுஜிதா தன்னுடன் இருக்கும் பையனுக்கு உறவுக்காரர்கள் எவராவது வரும் வரை நகர முடியாது எனச் சொல்லவே காத்திருந்தார்கள். ஹெல்ப் லைனைத் தொடர்பு கொண்டுஅங்கு வந்த பையனின் உறவுகாரர் நன்றி கூறி கூட்டிப் போனார்.
ஒரு வழியாக எல்லாம் முடிந்து சென்னைக்கு ப்ளேனில் இருவரும் புறப்பட்டார்கள். நல்ல வேளை, சாந்தா மண்டபம் நாலு நாளைக்கு வாடகைக்கு எடுத்திருந்தாள். ஸுஜிதா வந்த அன்று மங்கிலிப் பொண்டுகள். வந்தவுடன் ஸுஜிதாவுக்கு சாந்தா ஆரத்தி எடுத்தாள். “அக்கா இவ்வளவு பெரிய விபத்துலேர்ந்து தப்பி வந்திருக்கே, என் பிள்ளை கல்யாணத்தையும் காப்பாத்திட்டே‘’னு சொல்ல ஸுஜிதா, “என் கையில் என்ன இருக்கு, விதிப்படி என்ன நடக்கணுமோ அது தான் நடந்திருக்கு” என்றாள். அங்கு நடந்த விபத்தின் விவரங்களையும் தான் காப்பாற்றிய குழந்தையையும் பற்றி ஸுஜிதா சொல்ல, சாந்தா “ஆமாம், அந்த பையனுக்கு நெத்தில ஏதாவது தழும்பு இருந்ததா? எவ்வளவு வயசு இருக்கும்”னு கேட்க “ஏன் அந்தப் பையன் சம்பந்தமா ஒனக்கு யாரையாவது தெரியுமா? ” என ஸுஜிதா கேட்க, “எனக்கு வரப் போற சம்மந்தியோட மூத்த பெண் வழிப் பேரன் கொஞ்ச நாளைக்கு முன்னாலே காணாமப் போயிட்டான். அவா போலீஸ் கம்ப்ளைண்ட் குடுத்து தேடாத இடம் இல்லே, ஒரு விவரமும் தெரியலே, அவா பொண்ணு இதை நெனச்சு நெனச்சு உருகிண்டிருக்கா. அதான் கேட்டேன். “அப்படியா, அந்தப் பையனுக்கு நெத்தில தழும்பு இருந்தது வாஸ்தவம் தான் அந்தப் பையனுக்கு 4 வயசு இருக்கும்.. ஆனா, யாரோ அவன் சித்தப்பான்னு சொல்லி ஒரு ஹிந்திக்காரர்னா கூட்டிண்டு போனார். அவர் விலாஸத்தைக் கூட நான் எதுக்கும் இருக்கட்டும்னு வாங்கி வெச்சிருக்கேன்”. ”எல்லாம் சரி, இப்ப கல்யாணத்த வெச்சுண்டு ஒண்ணும் பண்ண முடியாது. நான் என் சம்பந்தியம்மா கிட்டே சொல்லிடறேன். அவா என்ன பண்ணறாளோ பண்ணட்டும், ஆனா பையன் கெடச்சுடுவான்னு நம்பிக்கை வந்திருக்கு. எல்லாம் நல்லதுக்கே” என்ற சாந்தாவிடம் ஸுஜிதா, ”ஆமாம், ஒங்கிட்டே ஒண்ணு கேக்கணும்னு நெனச்சேன். பெண் வீட்டார் தான் மண்டபம் எடுப்பா, இதென்ன அதிசயமா நீ எடுத்திருக்கேன்னு கேட்க, அவள் “ என்ன அக்கா காலம் தெரியாம பேசறே, இப்ப ஆண், பெண் , ரெண்டு பேரும் சமம். அதனால கல்யாணச் செலவைப் பாதி ஏத்துக்கறது தானே முறை? மண்டபச்செலவு எங்களோடது, மத்தது அவாளோடது என்றாள். நியாயம் தான் என்றாள் ஸுஜிதா.
சாந்தா சொன்ன விவரம் கேட்டு சம்பந்தியம்மா வீட்டில் ஒரே ஸந்தோஷம். தன் குழந்தை என நிரூபிக்க அவனது பிறப்புச் சான்றிதழ், மற்றும் அவன் நெற்றியில் இருக்கும் தழும்பின் காரணம், அதற்கான மருத்துவச் சான்றிதழ் எல்லாம் எடுத்துக் கொண்டு அவர்கள் பெண் மாலா கணவனோடு கல்கத்தா புறப்பட்டாள். கையில் இருக்கும் விலாசத்தை வைத்து வீட்டைக் கண்டு பிடித்தார்கள். இவர்கள் தாங்கள் யார், என்ன காரணத்திற்காக, வந்திருக்கிறார்கள் என்பதையும் தெரிவித்தனர். அந்த வீட்டில் இருப்பவர் தன்னை அஷோக் கபூர் என்று அறிமுகம் செய்து கொண்டார். அங்கு வீடு ஒரே சோக மயமாக இருந்தது. விசாரித்ததில் ரயில் விபத்தில் அவர்கள் அண்ணனும் அண்ணியும் இறந்து விட்டதாகத் தெரிவித்தார். அமெரிக்காவில் இருக்கும் அவர்களுக்குக் குழந்தை இல்லை. அவர்கள் இந்தியா வந்திருந்தபோது சென்னையில் திக்கற்றுத் திரியும் குழந்தை ஒன்று அவர்கள் காரில் மோதி விழ, அவனைக் காப்பாற்றி, யாரும் தேடி வராததால் கடவுள் கொடுத்த வரமாக எண்ணி அவனையும் கூட்டிக் கொண்டு அமெரிக்கா திரும்பினர். மீண்டும் கல்கத்தா வந்த அவர்கள், அண்ணியின் அம்மாவுக்கு ரொம்ப ஸீரியஸாக இருக்கிறது என்ற செய்தி கேட்டுச் சென்னை புறப்பட்டார்கள். விமானத்திற்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்பதால் ட்ரெய்னில் போகலாம் என்று கிளம்பியது தான் விதி என்று சொல்லி முடித்த அஷோக் கபூர் குழந்தையைக் கூட்டி வந்தார்.
மாலாவுக்குக் குழந்தையைப் பார்த்தவுடன் சந்தோஷம் தாங்க முடியவில்லை. ”செல்லமே, உன்னைக் காணாம துடிச்சு போயிட்டேண்டா. எனக்கு இப்பத் தாண்டா உசுர் வந்துது”ன்னு சொல்லி முத்தமாரி பொழிந்தாள். மாலாவின் கணவனுக்கோ நன்றிப் பெருக்கால் வார்த்தையே எழவில்லை. அவன் அஷோக் கபூரிடம், “ நீங்கள் செய்த உதவிக்கு என்ன கைம்மாறு செய்ய முடியும்? உங்கள் அண்ணன் அல்லாது வேறு ஏதாவது கயவன் கையில் குழந்தை போய் இருந்தால் என்ன ஆகி இருக்கும். நினைக்கவே பயங்கரமாக இருக்கிறது. உங்கள் அண்ணன், அண்ணி இறப்பு எங்களுக்கும் சோகத்தைத் தருகிறது. உங்களைப் போன்றதொரு நல்ல குடும்பத்தின் நட்பு எங்களுக்கு கிடைத் ததே ஒரு ஆறுதல். நம் நட்பு என்றும் தொடரும்” என்று சொல்லி விடைபெற்றனர்.
மாலா கல்யாணத்தன்று வந்து சேர்ந்தாள். அவள் அம்மா, எல்லோருக்கும் ஆரத்தி எடுத்து, ”அம்மாடி, எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது. போன காரியம் ஜெயிக்கணுமே, அது நம்ம பேரனா இருக்கணுமேன்னு நெனச்சிண்டே இருந்தேன். கல்யாணத்துல மனசு போகல. இப்பத் தான் நிம்மதியா இருக்கு,” என்று சொல்லிய நேரத்தில், ஸுஜிதா சாந்தாவிடம், ”காப்ரா கல்யாணமாக இல்லாமல் கலாட்டா கல்யாணமா முடிஞ்சுது, போ” என்றாள். ”ஆமாம் பெரியம்மா என் கல்யாணம் ஒரு மெமரபிள் கல்யாணம்” னு சேகர் அதாவது,ஸுஜிதா தங்கை பிள்ளை கூறவும் எல்லோரும் சிரிப்பு மழையில் நனைந்தார்கள்.