கறிவேப்பிலை
கதையாசிரியர்: மேலாண்மை பொன்னுச்சாமி
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: February 22, 2026
பார்வையிட்டோர்: 492
(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
லாரியை செட்டில் நிறுத்தியாயிற்று. சம்பளம் வாங்க வேண்டும். முதலாளி வரும் வரை காத்திருக்க வேண்டும். பசிக்கிறது. குழந்தைகளைப் பார்க்க மனசு ஏங்கித் தவிக்கிறது. ஏழு நாட்களாகி விட்டது. நிறை மாதமாயிருந்த மங்களம் எப்படியிருக்கிறாளோ… பக்கத்திலிருந்து கவனித்துக் கொள்ளக் கூட பொழுதில்லை. மனசு வீட்டிற்கு சிறகு விரித்து விடத் துடித்தாலும், சம்பளத்தை வாங்கணும் என்கிற பிரக்ஞை காலைப் பிடித்திழுத்தது.
‘இன்னா சம்பளம்… பொல்லாத சம்பளம்… ‘ என்று சலித்துக் கொள்கிறபோது மனசை ஒரு சோகம் அழுத்திப் பிசைந்தது.
அரசாங்கப் பேருந்தில் டிரைவராக பணியாற்றிய போது, முதல் தேதியில் கௌரவத்துடன் வாங்கிய கை நிறைந்த அந்த சம்பளம் எங்கே? இவன் பணிந்து குழைந்து, கெஞ்சிக் கூத்தாடி வாங்குகிற இந்தப் பிச்சைச் சம்பளம் எங்கே? ச்சே!
லொடலொடத்த இரண்டு லாரிகளை வைத்துக் கொண்டு மல்லாடும் இந்த முதலாளிக்கு உலகமே உள்ளங்கைக்குள் சுழல்வதாக நினைப்பு. அதிகாரம் பண்ண ஆசைப்படும் கர்வம்…
காக்கிச் சட்டைக்குள் கைவிட்டு பீடியை எடுத்தான். நுனிப் பல்லில் வைத்து, பீடி நுனியை கொறித்துத் துப்பிவிட்டு பற்ற வைத்து புகையை உள்ளுக்குள் இழுத்தபோது… நெஞ்சு எரிந்தது.
காய்ந்து பரட்டையாகியப் போன முடியை சுய பரிதாபத்துடன் கோதிக் கொண்டான். வேர்வையும் எண்ணெய்ப் பிசுக்குமாய் அழுக்காகி கனத்துப்போன சட்டையையும், நிறத்தையே இடிந்து போன கைலியையும் பார்த்துக் கொண்டபோது, மனசுக்குள் ஒரு கசப்பான உணர்வு கசிந்தது.
“என்ன மலைச்சாமி, இப்பத்தானே எறங்குனே, வீட்டுக்குப் போகலே?”
என்ற விசாரிப்பில் நிமிர்ந்தான். லோடுமேன் ராமசாமி தான் கேட்டது. “போவணும்” என்று சலிப்புடன் எதிரொலித்தான்.
“சம்பளம் வாங்கணுமில்லே… முதலாளியை இன்னும் காணலே” என்று விருப்பமின்றி பதிலளித்தான்.
மலைச்சாமி புக்கிங் ஆபீஸில் கிடந்த பார்சல்கள் மீது உட்கார்ந்திருநதான். அதோ, முதலாளி அறை. மேஜை, நாற்காலி, பேப்பர், பேனா. சுவரில் படங்கள். பெரிய சைஸ்களில் ஸ்வாமி படங்கள்.
இவர் எந்த ஆட்சிக் காலத்தில் சம்பாதித்து, லாரி வாங்கினார் என்பதை மவுனமாய் அம்பலப்படுத்தும் ஒரு தலைவரின் படங்கள்.
அந்தப் படத்தில் மிக சிறுசான எழுத்துக்கள். கூர்ந்து பார்த்த மலைச்சாமி, அந்தக் கடுகு எழுத்துக்களைக்கூட வாசிக்கிறான்.
இவ்வளவு கூர்மையான பார்வையுள்ள தனக்குத் தான் அப்படிப்பட்ட தண்டனை கிடைத்தது என்று நினைத்த போது, அவன் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்.
பார்வையில் யாருக்கு கோளாறு? டாக்டருக்கா? பேருந்து நிர்வாகத்திற்கா?
மனம் கசந்து சிரித்தது. நேரம் நகர்ந்தது. அவனுக்குப் புளித்துப் போயிற்று. வீட்டுக்குப் போகணும்.
ஆபீஸ் பாயைக் கூப்பிட்டான்.
“தம்பி, நாளைச் சாயங்காலம் வந்து சம்பளம் வாங்கிக்கிறேன். முதலாளி வந்தாச் சொல்லிடு.”
***
நகரமே வெறிச்சோடிப் போய் கிடந்ததை மலைச்சாமியின் டிரைவர் மனம் உணர்ந்தது.
பரபரத்து அடர்ந்து காணப்படும் மனிதர்களும் கூடுத லாக ஆட்டோக்களும், லாரிகளும், கார்களும், சைக்கிள் களும், வண்டிகளும் நகரத்தையே அதிர வைத்துத்தான் ஓடிக் கொண்டிருக்கிறது.
கூட்டத்துக்கும் குறைவில்லை, நெரிசலுக்கும் குறைய வில்லை. ஆர்ப்பாட்டமாய் சப்த பெரு வெள்ளமாய் நகரம் கொந்தளித்த போதிலும் டிரைவருக்குரிய உள்ளுணர்வு துல்லியமாய் உணர்ந்தது, வெறிச் சோடிக் கிடப்பதை!
ஆமாம், பேருந்துகள் ஓடவில்லை. சிட்டி பஸ்கள் கூட தென்படவில்லை. தெருவின் சுவர்களில், தட்டிகளில் நீள நீளமான வால்போஸ்டர்கள்.
ஸ்டிரைக்கைச் சொல்கிற போஸ்டர்கள். மக்களின் தார்மீக ஆதரவை அன்புடன் கோருகிற போஸ்டர்கள்.
மலைச்சாமியின் கண்கள் போஸ்டரிலிருந்து. வன்மத்துடன் விலகிக் கொண்டன.
வேலையிலிருந்து என்னைப் பிடரியைப் பிடித்து தள்ளியபோது இந்தப் போராட்டப் புலிகள் என்ன கிழித் தார்கள்? தட்டிப் போர்டுகளில் வெறும் கண்டனத்தைத் தெரிவித்துவிட்டு தட்டிக் கழித்தனரே… இப்போது மட்டும் போராட்டமாக்கும்?
இவங்க லட்சணம் தெரிஞ்சுதானே… எந்தப்பய சங்கத்துக்கும் அஞ்சு பைசாகூட தரமாட்டேனே! வேலையிலே இருக்கிற காலத்துலே சம்பளம் வாங்கிட்டு வெளியே வந்தபோதும் ஒவ்வொரு சங்கத்துக்காரனும் ‘சந்தா,’ ‘நன்கொடை’ என்று கலெக்ஷனில் நிப்பானுக. நா எந்தப் பயக்கிட்டேயும் சிக்க மாட்டேன். ஒரு பைசா தரமாட்டேன். எதுக்குத் தரணும்? இவங்களாலே என்ன ஆகும்?
மலைச்சாமிக்கு ஒரு டீ சாப்பிடணும் போலிருந்தது. மனசுக்குள் அப்படியோர் தாகம். வறட்சி.
டீக்கடைக்குள் நுழைந்தான். ஆர்டர் தந்தான். பக்கத்தில் ஒருவர் மாலைப் பத்திரிகையை அகலமாக விரித்துக் கொண்டு சூடாக மேய்ந்தார். மலைச்சாமி அசிரத்தையுடன் கழுத்தை நீட்டினான்.
சகஜ வாழ்வை சீர்குலைக்கும்
பஸ் தொழிலாளர்
போராட்டத்துக்கு
அரசு பணியப்போவதில்லை
முழு பலத்துடன் சந்திக்கும்!
மந்திரி ஆவேசம்.
என்ற கொட்டை எழுத்துக்கள் மலைச்சாமிக்கு குதூகலத்தை அளித்தன. ஒரு டீ குடித்த உற்சாகம் உடம்பெங்கும் பரவியது. மனம் துள்ளியது.
“இந்தாங்கண்ணே டீ” என்றான் கடைப்பையன்.
குழந்தைகளுக்கு வேண்டிய பிஸ்கட் மற்றும் தின்பண்டங்கள் வாங்கிக் கொண்டு வீட்டுக்குக் கிளம்புகிறான். திருப்தியின் நிம்மதியில் மனம் இலேசாகி விட்டது.
வன்மம் கொண்டு தாக்குவதைப் போல வெய்யில் உஷ்ணத்தைப் பொழிந்தது. உடம்பு அழுது வியர்வையைப் பெருக்கியது. நடையை எட்டிப் போட்டான். இதோ நம்ம சந்து. அதோ நம்ம வீடு…
***
நீரை ஊற்றித் துவட்டியதில் உடம்பின் சுமையெல்லாம் விலகி, ஒரு சுகம் தெரிந்தது. மனதில் தெம்பும், புதிதாய் பிறப்பெடுத்துவிட்ட உணர்ச்சியும் உண்டாகியிருந்தது.
மங்களம் சாப்பாடு போட்டுவிட்டு, விசிறி எடுத்து வந்தாள். மலைச்சாமி சோற்றைப் பிசைந்து உண்ண ஆரம்பித்தான்.
நாக்கு ஏதோ அபிப்ராயம் சொல்ல, அது அவனுக்குப் புரிய மறுக்க, மனைவியை நிமிர்ந்து பார்த்தான். மங்களம் உப்பிய வயிறுடன் உட்கார முடியாமல் நின்றவாறே விசிறிக் கொண்டிருந்தாள்.
“என்னங்க… நல்லால்லியா?”
“நல்லாதானிருக்கு. உப்பு, புளிப்பு, காரம் எல்லாம் சரிதான். ஆனா, என்னவோ… ஒரு குறை தெரியுது. என்னென்னு புரியலே?”
மங்களத்தைப் பார்க்க அவனுக்குப் பொங்கியது. வயிற்றில் உயிர்ச்சுமையையும், உடம்பில் சோர்வையும் சுமந்து கொண்டு புகையோடு மல்லாடி சமைத்து வைத்த சமையலில் குற்றம் காண அவன் மனம் கூசியது. ஆனால், அதை அவள் இலேசாக எடுத்துக் கொண்டு மெலிதாக சிரித்தாள்.
“ஓ… அதுவா? என்னவோ பஸ் ஸ்டிரைக்காமே. கடைகள்லே கருவேப்பிலை வரலை. அதான் அப்படியிருக்கு.”
“சாப்பிடறப்போ பல்லிலே சிக்கினா உருவி கீழே தூக்கிப் போடுற கருவேப்பிலைக்கு, இத்தனை வாசமா? அட.”
“அதென்ன, அப்படி லேசாச் சொல்லிட்டீக? மனுஷன்தான் மனுஷனா இருக்க மாட்டான். மத்தது கள்ளாம் அததுக்குரிய பலனை குடுக்கத்தான் செய்யும்.”
அவன் மனம் வியப்பில் விம்மியது. கருவேப்பிலையின் அற்பமும், பயன்பாட்டு அற்புதமும் அவனை நுட்பமாக பாதித்து பிரமிக்க வைத்தது.
காம்பவுண்டுக்கு முன் ஒரு ஜீப் வந்து உறுமிவிட்டு நின்றது. அவனுள் திகைப்பு. இந்த ஜீப் ஏன் இங்கு வர வேண்டும்?
அரசுப் பேருந்து நிர்வாக ஜீப். கேட்டுக் கேட்டுப் பழகிப் போய்விட்ட அதே சப்தம்.
எதிரும் புதிருமாய் இரண்டு வரிசையில் அணி வகுத்திருந்த வீடுகளில் இவன் வீடு மையத்திலிருந்தது. சாப்பிட்ட கையோடு எழுந்து எட்டிப் பார்த்தான். மனம் திக்கென்றது. அதே மேனேஜர்!
ஜீப்பை விட்டு இறங்கி காம்பவுண்டுக்குள் வருகிறார். நீரும் சாக்கடையுமாக ஒழுங்கில்லாமல் கிடக்கும் பாதையில் முகச்சுழிப்புடன் நடந்து வருகிறார். ஏன் வருகிறார்? எதற்கு?
***
ஒரு நாள் மலைப்பொழுதில் அழைத்து, “நாளைக் காலையிலே மெடிக்கல் செக்கப்புக்கு போய்ட்டு வாங்க.”
“ஏன் சார், பத்து வருஷ சர்வீசுக்குப் பிறகு எதுக்கு சார் மெடிக்கல் செக்கப்?”
“சும்மா ஒரு ஃபார்மாலிட்டிக்குத்தான். பயப்படாதீங்க. போய்ட்டு வாங்க.”-
என்று நயம்பட இனிப்பான வார்த்தைகளுடன் அனுப்பி வைத்த அதே மேனேஜர்-
மறு வாரத்தில் அழைத்து டாக்டர் சர்டிபிகேட்டை காட்டி “உங்களுக்கு கண் பார்வையிலே கோளாறு இருக்குன்னு டாக்டர் சர்டிபிகேட் வந்திருக்கு… அதனாலே நீங்க டிஸ்மிஸ்.”
என்று மிகச் சாதாரணமாக நெஞ்சில் வேலைப் பாய்ச்சிய அதே குரூரக் கொலைகாரன்-
ஆணிவேரில் வெட்டுண்டவனைப் போல அதிர்ந்து உள்ளுக்குள் நொறுங்கிச் சிதைந்து, “இதென்ன சார் அக்கிரமமாயிருக்கு? கண்லே கோளாறுன்னா ஆஸ்பத்திரிக்குப் போகணும். வேலையை விட்டுட்டு வீட்டுக்குப் போன்னு சொன்னா, என்ன சார் அர்த்தம்?” என்று அக்கினிப் பிழம்பாய் கேட்ட போது-
“சர்க்கார் உத்தரவுக்கு அர்த்தம் சொல்ல எங்களால் முடியாது. அமுல்படுத்தத்தான் முடியும்.”
“பொழைப்புலே தீயள்ளிப் போடுறீர்களே சார்… இது நியாயமா?”
“நியாயத்தைப்பற்றி ஆராய்ச்சி நடத்த எனக்கு நேர மில்லை. ப்ளீஸ். கெட் அவுட்…”
பின்னும் தயங்கி தேம்பி நின்றபோது ராட்சஸ குரலில்-
“ஐ ஸே… யு கெட் அவுட்,” என்று நெருப்பாகச் சீறி விரட்டினானே, அதே ராட்சஸ மேனேஜர்!
***
இப்ப எதுக்கு இங்கே வர்றான்? என்ன காரணத்துக்காக வர்றான்? இதோ… வந்து விட்டான்!
“வாங்க சார்…”
“என்ன மலைச்சாமி, சௌகரியமாயிருக்கிறீர்களா.”
“பயிரைப் பிடுங்கி எறிஞ்ச மாதிரி பாதியிலே தூக்கி எறிஞ்சிட்டீங்க. எப்படி சார் சௌகரியமாயிருக்க முடியும்?”
“சரிசரி… பழசையே நெனைச்சுக்கிட்டிருந்தா எப்படி? நாட்டுலே தெனம் ஆயிரம் புதுசு நடக்குது… உள்ளே வரலாமா…?”
வீடு நிமிஷத்திலே பரபரப்படைந்தது. மலைச்சாமி அவசரமாகக் கையைக் கழுவ- மங்களம் அவசரமாக உணவுத் தட்டுகளை ஒதுக்கி வைத்து… தூசி படிந்து பழைய நாற்காலியை தூக்கிப் போட்டு துணியால் துடைத்தாள். அவளுக்கு மூச்சிரைத்தது.
“உட்காருங்க சார்…” உள்ளே வன்மம் அக்னியாய் ஜவாலை வீசினாலும்… வெளியே ரொம்பக் குழைந்தான்; குளிர்ச்சியாகப் பணிந்தான்.
அந்நேரம் தான் மூத்த பையன் நுழைந்தான்.
“டேய், கரிகாலன் கடையில் ஒரு கலர் வாங்கிட்டு வா… ஓடு…”
அவன் வீசிய பந்து போல மோதிய வேகத்தில் பாய்ந்து ஓடினான்.
மேனேஜர் வீட்டைச்சுற்றி பார்வையிட்டார், மூலை முடுக்கெல்லாம் பரவிக் கிடந்த வறுமையின் தடயங்கள்.
ஓட்டுவீடு. ரொம்பப் புழுக்கமாயிருந்தது. ஏ.ஸி.க்குப் பழகிப் போன உடம்பு வியர்த்துக் கொட்டியது. உள்ளுக்குள் துரிதமானார்.
“மலைச்சாமி… ஃபஸ்ட்லே நா வந்த விஷயத்தைச் சொல்லிடுகிறேன்.”
“சொல்லுங்க சார்!”
“ஒன்னோடொன்று சண்டை போட்டுக்கிட்டு, நியாய மில்லாத டிமாண்ட்ஸை வைச்சு ஸ்ட்ரைக் பண்றாங்க. எவ்வளவோ பேசிப் பார்த்தாச்சு, ரொம்ப அடம் பண்றாங்க..”
“இந்த யூனியன்காரங்களே இப்படித்தான் சார். ஏமாளி ஒர்க்கர்ஸை வைச்சுப் பொளப்பு நடத்து வாங்க, அதுலே லேசா தளர்ச்சி கண்டா, அப்ப முறுக்கேத்தி வைக்கிறதுக்காக… காரணமில்லாம ஸ்டிரைக் பண்ணி ரொம்ப வீரமா பேசிக்கிட்டு இருப்பாங்க.”
“யெஸ். யு ஆர் வெரி கரெக்ட், வண்டிகள் எல்லாம் அப்படியே டிப்போவிலே கெடக்கு. ஜனங்க பஸ் போக்குவரத்து இல்லாம ரொம்ப அவஸ்தைப் படுறாங்க. சர்க்கார் எப்படியும் ஜனங்களுக்கு உதவி செய்ய ஆசைப்படுது. அதனாலே எப்படியாச்சும் ஒர்க்கர்ஸை கன்வின்ஸ் பண்ணி, மொபலைஸ் பண்ணி, ஒரு சில ரூட்ஸ்லேயாவது வண்டிகளை விடணும்னு முடிவு.”
“பேஷாச் செய்யலாம் சார்.”
“இந்த முயற்சிக்கு ஒத்துழைக்குற ஒர்க்கர்ஸை பர்மனன்ட் பன்றதா சர்க்கார் உறுதி சொல்லியிருக்கு… நீங்களும் வரணும். வர்ரீங்களா?”
“ஓஹோ.. அப்படியா சங்கதி! யானைக்கு வந்த காலம் முடிந்து, இப்போது பூனைக்குக் காலம் வந்திருக்காக்கும்? ஊஹும்… இப்பத்தான் இந்த மலைச்சாமி உங்க கண்ணுக்குத் தைரிய வந்தானாக்கும்…?”
“என்ன சொல்றீங்க, மலைச்சாமி?’
“சார் எனக்கு கண்பார்வை சரியில்லைன்னு நீங்க தானே சொல்லி வீட்டுக்கு அனுப்பினீங்க.”
“அதையே திரும்பித் திரும்பி சொன்னா, எப்படி மலைச்சாமி? நானே உங்க வீடு தேடி வந்து கேட்டப் புறமும் நீங்க அதைச் சொல்லலாமா…? ஒரு கேரண்டி சொல்றேன்… ஸ்டிரைக் முடிஞ்ச பிறகு உங்க வேலையை பர்மனன்ட் பண்றதுக்கு நா சொந்த முறையிலே பொறுப்பு எடுத்துக்கறேன்… என்ன சொல்றீங்க?”
“சார், இப்போ தனியார் லாரியிலே ஓடிக்கிட்டிருக்கிறேன். இந்த வேலையை எப்படி சார் விடுறது? அப்புறம் வவுத்துப் புள்ளையை நம்பி, மாடு மேய்ச்சிக்கிட்டிருந்த பையனைக் கொன்ன கதையாப் போயிடுமோன்னு பயமாயிருக்கு.”
“வீணா பயப்படாதீங்க. என்னை நம்புங்க. உங்க வேலையை பர்மனன்ட் பண்றதுக்கு நான் பொறுப்பு. உங்க
வீட்லே பழைய வெளிச்சம் வர்ரதுக்கு, நா ஏற்பாடு பண்றேன். சரின்னு சொல்லுங்க.”
“யோசிச்சிச் சொல்றேன் சார்…”
”ஓ.கே. நாளைக் காலையே ஜீப் அனுப்பறேன். அதுக்குள்ளே யோசிச்சி ஒரு முடிவுக்கு வாங்க. அது நல்ல முடிவாயிருக்கட்டும்… வர்றேன் மலைச்சாமி..”
அவர் புறப்பட்டுப் போய்விட்ட பின், மூத்த பையன் கலருடன் வந்து சேர்ந்தான்.
***
மலைச்சாமி வசந்தமாயிருந்த பழைய நாட்களின் போதையில் ஆழ்ந்தான். டெரிக்காட்டான் காக்கி ஸர்ட் உடலை மென்மையாய் கவ்வ… என்ன கம்பீரமாய் வண்டியில் ஏறுவான்.
வெளிச்சத்தில் நிரம்பிய வீட்டில் குழந்தைகள் சிட்டுகளாக என்ன குதூகலமாக இருந்தனர். மங்களம் அப்போது என்னமாய் இருந்தாள்…
இப்போது-
நல்ல சேலையில்லை. நல்ல சோறு இல்லை. கைக்கு எட்டினால் வாய்க்கு எட்டமாட்டேன் என்கிறது. ‘வாழ்க்கையின் நல்ல நிலையில் இருக்கிறோம்’ என்கிற அந்த மனநிறைவு சரிந்து… இப்போது அவலமாய்… தாழ்மையாய்… நிம்மதியின்மையாய்… கனத்த சுமையேறிய ஊனப்பட்ட மனசாய்… பிச்சுப்பிடுங்கும் வறுமையாய்…
இந்த அவலத்திற்கு ஒரு முடிவு வருகிறதா? இந்த மானேஜர், சொன்னபடி நடந்து கொள்வானா?
அவன் நாற்காலியில் அமர்ந்தான். மனசில் அலைபாயும் நினைவுகள். ஒன்றன் பின் ஒன்றாய்த் தோன்றித் தொடரும் நினைவுகள். நிஜத்தின் கரையைத் தொட்டுத் தொட்டு திரும்பி உள்வாங்கும் நினைவுகள்… பின்னும் ஏதோ ஒரு புதிய எல்லையைத் தொட்டுவிடப் போகிற ஆவேசத்தில் பாய்ந்து வரும் நினைவுகள்…
“என்ன யோசிக்கிறீக…”- மங்களம்தான் கேட்டாள். அவள் முகத்தில் ஒரு நிழல் படிந்திருந்தது. சம்மதமின்மை யில் மனசுக்குள் புழுங்கிக் கொண்டிருந்தாள். சம்பவிக்க இருக்கிற உடன்பாடற்ற காரியத்தை தடுக்க முடியாத தர்மசங்கடமும், வருத்தமும் அவள் முகத்தில் தெரிந்தது.
“என்ன செய்யறதா உத்தேசம்?” மீண்டும் கேட்டாள். குரலில் உயிரில்லாமல்… ஒரு திகில்தான் இருந்தது.
“வீட்டுக்கு வர்ர வெளிச்சத்தை வேண்டாம்னு எதுக்குச் சொல்லணும்?” கனவு நிலையில் பேசுகிறவனைப் போல எங்கோ பார்த்துக் கொண்டு கூறினான்.
“அதுக்கா… கருங்காலியாவா மாறுகிறது?”
“கருங்காலி செங்காலிங்கிறதெல்லாம் அர்த்தமில்லாத பினாத்தல். அவனவன் பொழைக்கிறதுக்கு வழியைப் பார்க்கணும். வாய்ச்ச வழியை கச்சுன்னு பிடிச்சிக்கணும்…”
“அதுலே நியாய அநியாயம் பார்த்துதானே செய்யணும்?”
“ஸ்டிரைக் பண்றவங்க ஞாயமாவா போறாங்க? வம்புதானே பண்றாங்க?”
“ஸ்டிரைக்குங்கிறது விளையாட்டா? பொழைப்பை பணயம் வைக்கிற சமாச்சாரமாச்சே. அப்பேர்பட்ட காரியத்தை வம்புக்கு பண்ணமாட்டாங்க. வேற வழியில்லாமத்தான் செய்வாங்க.”
“என்னை அநியாயமா டிஸ்மிஸ் செஞ்சாங்களே, அப்ப இந்த வில்லாதி வில்லன்ங்க… வீரப்பத்திரன் பேரனங்க எங்க போனாங்களாம்…? என்ன செஞ்சாங்களாம்?”
“நீங்க அவங்களைப் பொருட்படுத்தலே; நம்பலே. அலட்சியம் பண்ணுனீங்க… அவங்களும் உங்களை காப்பாத்த நினைக்கலே…”
“என்ன இது… நீ என்னையே குத்தம் சொல்லிப் பேசிக்கிட்டிருக்கே? நீ எனக்கு பெண்டாட்டியா, இல்லை…”
பொறுமையிழந்து போன ஆத்திரத்தில் வார்த்தைகள் நெருப்பாய் சீறின.
அவள் பெரிய மனுஷித்தனமாக சிரித்தாள். தாய்மை நிறைந்த சிரிப்பு; சீண்டல்களை மவுனமாக உள்வாங்கிக் கொண்டு மென்மையாய் வெடித்த சிரிப்பு.
***
சொன்னபடி ‘மொபலைஸ்’ பண்ண மேனேஜரால் முடியவில்லை. இருபது பேர்கள் தான் தயாராகி யிருந்தனர். அதில் மலைச்சாமிதான் கொஞ்சம் இளவயசு. மீதியெல்லாம் கிழட்டுக்கட்டைகள். மாஜி ராணுவத்தினர், ரிட்டையர்டான டிரைவர்கள்.
மேனேஜர் மிகவும் தைரியம் சொல்லி டிப்போவுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்தார். அவரிடமிருந்த ஒரே மந்திரச் சொல் ‘பெர்மனன்ட் பண்ண நா உத்தரவாதம்.”
‘பெர்மனன்ட்’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு சக்தி அதிகம்தான். தயக்கத்தை துரத்தியது. அச்சத்தைப் போக்கியது.
டிப்போவுக்கு வர நெருங்கினர். அங்கே வெள்ளைப் பிசாசுகளாக போலீஸ் வேன்கள் நின்றன. காக்கி மரங்களாக இரும்புத் தொப்பிகளின் வரிசை…
இடது பக்கத்தில் போராடும் தொழிலாளிகளின் வீட்டுப் பெண்கள்… குழந்தைகள்… நிறைய. சில பெண்கள் முறைப்படி கோஷமிட்டனர். மற்றவர்கள் மனசின் அக்கினியை அப்படியே துப்பினர்.
“அடப்பாவிகளா… நாசமாய்ப்… போய்டுவீக…”
“எங்க பொழைப்புல மண்ணள்ளிப் போட வந்த பாவிகளா… நீங்க ஒரு நாள் பேதியிலே ஒரு சேரப் போயிடுவீக…”
“உங்க பொண்டாட்டி புள்ளைக வௌங்காமப் போக..”
“பாவிகளா… உங்க பரம்பரையிலே இடி விழுந்து பொசுங்கிப் போவீக…”
தொழிலாளர் குடும்பப் பெண்களின் ஆவேசச் சொற்கள், அடிவயிற்றிலிருந்து பீறிட்டெழுந்த ஜ்வாலை களாகச் சுட்டன. பதற்றமும் கோபமுமாக அப்பெண்கள் உணர்ச்சிப் பிழம்பாக கொந்தளித்துக் காணப்பட்டனர்.
மலைச்சாமிக்கு மனசில் ஒரு கூச்சம். மலத்தை மிதித்து விட்ட அசூயை.
பெண்களை அடுத்து தொழிலாளர்களின் கூட்டம். காக்கி மதில்களுக்கு அப்பால், கொதி நிலையில் கோஷங்கள் உணர்ச்சி முழக்கங்களாக ஒலித்தன. வானத்தில் எதிரொலித்தன.
“சட்ட விரோதமாக கருங்காலிகளைப் பயன்படுத்தாதே..”
“கூட்டுப்பேர உரிமையை அவமதிக்காதே…”
“அதிகாரிகளின் ஆணவப் போக்கு ஒழிக…”
“அரசே, தலையிட்டு தீர்வு காணுக!”
தர்மத்தின் குரலாக கோஷங்கள் உயர்ந்து ஒலித்தன… போலீஸ் அதிகாரிகள் அங்கும் இங்குமாக உலவினர்.
‘ஏதோ நடக்கப் போகுது’ என்கிற திகிலான எதிர்பார்ப்பு களுடன் திரண்டு நின்ற பொது ஜனக் கூட்டம். வேலைக்குப் போகும் இந்த இருபது பேரை ஏதோ அதிசயப் பிராணிகளைப் போல பார்த்தனர்.
வண்டியில் ஏறினர். மலைச்சாமிக்குத்தான் முதல் வண்டி. ஸ்டீயரிங்கைப் பிடிக்கிறபோது மனசும், கையும் நடுங்கின, அச்சமும், கூச்சமும் மனசைப் பிசைந்தன.
தூரத்தில் ஜீப்பிலிருந்து மேனேஜர் கண்ணசைக்க, மலைச்சாமி சங்கடத்துடன் ஸ்டார்ட் செய்தான்.
பெண்களில் சிலரும், தொழிலாளர்கள் சிலரும் வண்டியின் முன் வரிசையாகக் கைகோர்த்து குறுக்காக நின்றனர். அதில் ஒரு பெண், நிறைமாதக் கர்ப்பிணி. மங்களத்தின் வயதுதானிருக்கும்’ என்று ஏனோ அவன் மனம் யோசித்தது.
ஸ்டீயரிங்கைப் பிடித்திருந்த உள்ளங்கைகள் புழுங்கின. மனசும்தான். மேனேஜர் மறுபடியும் கண்ணசைக்க… மனசு ஊசலாட வண்டியை நகர்த்தினான்.
போலீசார் விரைந்தனர். குறுக்காக நின்ற மனித வரிசையை அப்புறப்படுத்த முயன்றனர்.
“மறியல் பேராட்டம் வாழ்க.”
“ஒன்றுபடுவோம், போராடுவோம்.”
“போராடுவோம், வெற்றி பெறுவோம்.”
“மறியல் போராட்டம் வெல்க.”
கோஷங்கள் பூமியை அதிரச் செய்தன.
போலீஸ் அதிகாரி முன்னுக்கு ஓடி வந்தார்.
“வாட் இஸ் திஸ்?”
குறுக்காக நின்ற வரிசை தைரியமாகக் கூறியது. பிசிரற்ற குரலில் ஒலித்தது. “நாங்கள் மறிக்கிறோம்…”
“ஐஸீ… அப்போ அரஸ்ட் பண்ணுேவாம்…”
“நாங்க தயார்…”
தொழிலாளர்களும், பெண்களும் ஒரே குரலில் உரத்துக் கோஷமிட, மறியல் வீரர்கள் வெள்ளைப் பிசாசில் ஏற்றப்பட்டனர்.
***
பதினைந்து நாட்கள் பறந்தன. பேராட்டம் மென்மேலும் உக்கிரமடைய சிறைக்கூடம் நிரம்ப, மலைச்சாமியின் வீட்டிலும் புழுக்கமும் இறுக்கமும் நிலவ… தொழிலாளிகள் சரித்திரத்தை எழுதிக் கொண்டிருந்தனர்.
பேச்சு வார்த்தையில் தீர்வு காண… தொழிலாளர்களின் கோரிக்கைகள் சிலவற்றை நிர்வாகம் ஏற்றுக் கொள்ள, போராட்டம் வாபஸ் பெறப்பட்டு… நாளை தொழிலாளர் கள் பணிக்குத் திரும்ப இருக்கின்றனர்.
மலைச்சாமி ஆபீசிற்குள் நுழைந்தான். மேனேஜர் இருந்தார்.
“சார்… சார்…”
நிமிர்ந்தார்.
“என்ன மலைச்சாமி?”
“நாளைக்கு வேலைக்கு வரலாமா சார்?’
“அதெப்படி முடியும்? ஸ்டிரைக் முடிஞ்சு போச்சே.. ஒர்க்கர்ஸ் வேலைக்குத் திரும்பப் போறாங்களே.”
‘என்ன சார் இப்படி சொல்றீக? பெர்மனன்ட் பண்றேன்னு சொன்னீக…”
“சொன்னோம். இல்லேங்கலே. ஆனா… இப்ப சர்க்கார் உத்தரவு வேற மாதிரியிருக்கே. நா என்ன செய்றது?”
“என்ன சார், இப்படி அநியாயமா கைவிரிக்கிறீக?”
“நான் சொல்றதை புரிஞ்சுக்கிட மாட்டேங்கறீகளே! ஸ்டிரைக்கை ஒடைச்சிடலாம். சில பேரை பழி வாங்கிட லாம்னு நாங்க நெனைச்சோம். சில பேரை டிஸ்மிஸ் பண்ணிட்டு, அந்த இடத்துலே உங்களை அப்பாயிண்ட் மென்ட் செய்ய நெனைச்சிருந்தோம். அதுதான் முடியாம போயிடுச்சே…”
“உங்க பேச்சை நம்பி இருந்த வேலையும் விட்டுட்டேனே சார்…”
“எனக்காகவா விட்டீங்க?”
மலைச்சாமிக்கு நெஞ்சுக்குள் தேள் கொட்டியது போலிருந்தது.
நெஞ்சு ‘கபகபா’ வென்று தகித்தது. மேனேஜரை கூர்ந்து பார்த்தான். பாய்ந்து கடித்துக் குதறிவிட மனம் ஆசைப்பட்டது. மனசுக்குள் குமைந்த கோப மெல்லாம் திரண்டு வார்த்தைகளாகி…
“அடப்பாவி, நீ… உருப்படுவியா…?”
“நாகரீகமா நடந்துக்க படிக்கணும். முதல்லே வெளியே போங்க.”
அவனுக்கு சர்வாங்கமும் கோபத்தில் அதிர்ந்து நடுங்கியது. மேனேஜரின் குரல் செருப்படியாய் செவியில் மோதி, நெஞ்சில் நெருப்பைக் கொட்டியது.
“சார், இது ரொம்ப அநியாயம் சார்… தெய்வத்துக்கே பொறுக்காது சார்….”
“தெய்வத்துக்கிட்டே சம்பளம் வாங்கலே… சர்க்கார் சொல்றபடிதான் நாங்க நடக்க முடியும் வெளியே போங்க… எனக்கு வொர்க் இருக்கு.”
“சார்…”
“நீ…போறீயா. ப்யூனைக் கூப்பிடவா…?” மேனேஜரின் குரல் உறுதியுடன் ஒலித்தது.
குப்பையில் வீசப்பட்டட பழஞ்செருப்பாக வீதிக்கு வந்தான் மலைச்சாமி.
***
அதே வீடு அதே இருட்டு. மூலைமுடுக் கெல்லாம் பதுங்கி இருக்கும் வறுமை இருட்டு. அதே மங்களம்… அதே சாப்பாடு…
“சாப்பிடுங்க…” வேதனையோடு சொன்னாள் மங்களம்.
சாப்பிட மனமில்லாமல் சோற்றைக் கிளறிக் கொண்டிருந்தான். குழம்பில் வெந்து கருகிக் கிடந்த கருவேப்பிலையை பிரக்ஞையற்ற வெறுமையுடன் எடுத்துக் கீழே போட்டான்.
– போக்குவரத்து தொழிலாளி, 1984.
– விரல் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: மே 1995, கங்கை புத்தக நிலையம், சென்னை.
![]() |
மேலாண்மை பொன்னுச்சாமி (செ. பொன்னுச்சாமி; கலைக்கண்ணன்; அன்னபாக்கியன்; அன்னபாக்கியச் செல்வன்; ஆமர்நாட்டான்) (1951- அக்டோபர் 30, 2017) எழுத்தாளர். வட்டார வழக்கில் பல சிறுகதைகளையும், புதினங்களையும் படைத்தார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்து செயல்பட்டார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார். மேலாண்மை பொன்னுச்சாமி படிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். கல்வி தடைப்பட்டதால் நாளிதழ்கள், நூல்கள் வாசித்து தனது வாசிப்பார்வத்தை வளர்த்துக் கொண்டார். வாசித்த ஜெயகாந்தனின் நூல்கள் இவருள்…மேலும் படிக்க... |
