கருமையின் மௌனம்
கதையாசிரியர்: சு.அப்துல் கரீம்
கதைத்தொகுப்பு:
குடும்பம் 
கதைப்பதிவு: March 28, 2026
பார்வையிட்டோர்: 201

அரங்கின் குளிர் சல்மாவின் தோலில் மெல்லிய நடுக்கமாக ஒட்டிக்கொண்டது. அந்த ஏசி காற்று அவளுக்குள்ளிருந்த மௌனத்தை இன்னும் அடர்த்தியாக்கியது.
“எத்தனை வீடுகள்ல இன்னும் ‘இந்தப் பிள்ளை கொஞ்சம் கருப்புதானே…’ன்னு…”
மேடையில் ஒரு பெண் உரத்த குரலில் பேசிக்கொண்டிருந்தார். பின்னால் இருந்த டிஜிட்டல் திரையில் பெரிய எழுத்துகள் மின்னின: “Skin Color Bias and Women”.
அவளின் குரல் உயர்ந்தபோதெல்லாம், அருகில் இருந்த மைக் ஸ்டாண்ட் லேசாகச் சுழன்று ஒரு கீச்சென்ற சத்தம் எழுப்பியது.
சல்மா திரையைப் பார்க்கவில்லை. தன் மடியில் இருந்த கைகளைப் பார்த்தாள். இடது கையின் பெருவிரல் நகம், வலது கையின் மாநிறத் தோலில் ஒரு பிறையைப் போல அழுத்தித் தடம் பதித்துக் கொண்டிருந்தது.
அவளது ஐடி கார்டு மார்பில் அசைந்தது:
Name: Salma Juvairiya Course: BSc Psychology Year: 2024–2026
வகுப்பறையில் அவள் கேட்ட ‘Internalized Oppression’ மற்றும் ‘Generational Trauma’ போன்ற சில வார்த்தைகள் அவள் மனதில் எங்கோ இருந்தன. ஆனால் இப்போது, அவளது உள்ளங்கையில் ஊறும் வியர்வைக்கு அவை பெயர் சொல்லவில்லை.
திரையில் ஒரு பழைய புகைப்படம்.
ஒரு பெண் — அடர் நிறம், பாதியில் நின்ற புன்னகை.
அம்மா.
திருமண ஆல்பத்தில் ஜுவைரியா எப்போதும் நிழலில்தான் இருப்பாள். அந்தப் பழைய ஸ்டுடியோ புகைப்படங்களில் அவளின் முகம் மட்டும் ஒருவிதமான சாம்பல் நிறத்தில் மின்னும். “என்னவோ தெரியல, ஜுவைரியாவுக்கு மட்டும் மேக்கப் ஒட்டவே இல்லை…” என்று ரஹீமின் உறவினர்கள் ஆல்பத்தைப் புரட்டும்போது சொல்வதை சல்மா கேட்டிருக்கிறாள்.
ஜுவைரியா அப்போது தையல் மெஷினில் வேகம் கூட்டுவாள்.
டக்… டக்… டக்…
அந்தச் சத்தம் எல்லா கேள்விகளையும் அறுத்துவிடும்.
“…’விளையாட்டுக்கு ஒரு காயத்தை உண்டாக்கறோம்.. அதைச் சகிச்சுக்கங்க’ன்னு சொல்றது எவ்வளவு பெரிய சைக்கோத்தனம்?…”
மேடைப்பேச்சாளரின் குரல் அவளை மேலே பார்க்க வைத்தது. அவரின் கருவிழிகளைச் சுற்றிய வெண்படலம் சிவப்பேறியிருந்தது.
சல்மாவின் நினைவுகள் இப்போது அவர்களின் பழைய வீட்டு வரவேற்பறைக்குள் நுழைந்தன.
அப்பா.
ரஹீமின் வீட்டு வரவேற்பறையில் மாட்டியிருந்த பெரிய குடும்பப் புகைப்படத்தில், குடும்பத்தினர் அனைவரும் பால் வெள்ளை நிறத்தில் சிரித்துக் கொண்டிருந்தனர். ஜன்னல் வழி வந்த சூரிய ஒளி அவர்கள் முகங்களில் பட்டுத் தெறித்தது. அந்த வரிசையின் ஓரத்தில் ரஹீம் மட்டும் ஒளியை முழுவதும் உள்வாங்காமல் நின்றார்.
உறவினர்கள் கூடும் விசேஷங்களில் ரஹீமின் நிறம் ஒரு பொதுச்சொத்தாகவே பிய்த்துப் போடப்பட்டது.
“டேய் ரஹீம்…
நீ மட்டும் எப்படிடா தப்பிப் பொறந்த?
ஒருவேளை ஆஸ்பத்திரியில குழந்தையை மாத்தியிருப்பாங்களோ?”
என்று யாராவது சிரிக்கும்போது, ரஹீமும் தன் பற்கள் தெரியச் சிரிப்பார்.
ஆனால், அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்திய மறுநொடி, அந்த முகமூடி ஒரு காய்ந்த காகிதத்தைப் போல உதிர்ந்து தரையில் விழும். மின்விளக்கை அணைத்துவிட்டு, நிலைக்கண்ணாடியின் முன் வந்து நிற்பார். ஜன்னல் வழி கசியும் நிலவொளியில் தன் கைகளைத் திருப்பித் திருப்பிப் பார்ப்பார்.
ஒரு கணம்.
அடுத்த கணமே, அந்தப் பிம்பத்தைத் தாங்க முடியாமல் கட்டிலில் முகம் புதைத்துச் சாய்ந்து விடுவார்.
அவருக்குப் பெண் பார்க்கக் கிளம்பியபோது, அவர் தன் சித்தியிடம் சொன்னது ஒரே ஒரு வரிதான்:
“சித்தி… பொண்ணு நம்ம குடும்பத்துக்கு ஏத்த நிறமா இருக்கணும்.”
பெண் பார்த்துவிட்டு வந்த சித்தி மங்கலான வெளிச்சத்தில் ஜுவைரியாவைப் பார்த்த நினைவில் கண்கள் மின்னச் சொன்னார், “ரஹீம், பொண்ணு அப்படியே தங்கம்டா… நம்ம குடும்பத்துக்கு ஏத்த பொண்ணுதான்…”
அந்த வார்த்தைக்குப் பிறகு,
ரஹீம் வேறு எதுவும் கேட்கவில்லை.
ஆனால், நிக்காஹ் முடிந்து ஜுவைரியா அந்த அறைக்குள் வந்த முதல்நாள் இரவு, ஜன்னல் வழியாகத் தெறித்த நிலவொளி அவளது கைகளை மெதுவாகத் தீண்டியது.
ரஹீம் அவளைப் பார்க்கவில்லை. மாறாக, ஜன்னல் கம்பிகளை பார்த்தபடி வெகுநேரம் நின்றிருந்தார்.
சில நாட்களில் அதே சித்தி,
“நாங்க அன்னைக்கு பாக்கறப்போ, நல்லா சிவப்பாதான் தெரிஞ்சா… மேக்கப்போ என்னவோ…”
என்று ஜுவைரியாவைக் காட்டிச் சொன்னபோது, ரஹீம் எதைக் காப்பாற்ற நினைக்கிறாரோ அது உடைந்திருக்க வேண்டும். அவர் ஜுவைரியாவைப் பார்ப்பதையே தவிர்த்தார்.
சல்மா பிறந்தபோது, ஜுவைரியா அவளை அவரிடம் நீட்டினாள். ரஹீம் பார்த்தார். “பரவாயில்லை… அங்கேயே வை” என்றார்.
வீட்டில் இருந்தவர்கள் குழந்தையின் முகத்தைப் பார்த்தார்கள்.
“அப்பா அம்மாவோட நிறம்தான்… யாரும் குழந்தைய மாத்தி தூக்கிட்டு வந்துட்டாங்கன்னு ஒரு வார்த்தை சொல்ல முடியாது…”
அந்தச் சிரிப்புகளுக்குள், சல்மா அமைதியாக கிடந்தாள்.
அந்த வீட்டில் மனிதர்களைப் பற்றி பேசும்போது இரண்டு வார்த்தைகள்தான் அதிகம் கேட்கும் —
“சிவப்பு” “கருப்பு”
“…அவங்க என்ன தப்பு பண்ணாங்கன்னு யாராவது சொல்ல முடியுமா…?”
மேடைப்பேச்சாளரின் குரல் அரங்கின் சுவர்களில் மோதி எதிரொலித்தது.
அரங்கிற்குள் திடீரென எழுந்த பலத்த கைதட்டல் சல்மாவை நிகழ்காலத்திற்கு இழுத்து வந்தது. அவள் தன் நகத்தை தோலில் இன்னும் ஆழமாக அழுத்தினாள். அவளுக்கு ஒன்றரை வயதிருக்கும்போது நடந்த ஒரு காட்சி அவள் விரல் நுனிகளில் இன்னும் ஒட்டியிருந்தது.
வீட்டில் ஒரு விசேஷம். சிவப்பாக இருந்த அத்தை ஒருத்தி சல்மாவைத் தூக்கிக்கொண்டாள்.
“எங்க கருப்பு தங்கம்… கருவாச்சி… இவளுக்கு திருஷ்டிப் பொட்டே தேவையில்லை…”
அவள் சிரிப்பு நீண்டது. அருகில் நின்றிருந்த அவளது கணவர் தொழுகையை முடித்து ஸலாம் கொடுத்த கையை இன்னும் கீழிறக்காமல், அந்தச் சிரிப்போடு சேர்ந்தார்.
ரஹீமும் சிரித்தார். அந்தச் சிரிப்பு, கொஞ்சம் தாமதமாக வந்தது.
அன்றிரவு ஜுவைரியா சல்மாவை இறுக்க அணைத்துக் கொண்டாள். அவள் கண்கள் கசியவில்லை. மாறாக, அவள் தன் மகளின் மென்மையான கன்னங்களை மெதுவாகத் தடவிக்கொண்டே இருந்தாள்.
அந்தத் தொடுதலில் ஒரு மெல்லிய நடுக்கம் இருந்தது.
ரஹீம் துபாய் சென்றார்.
ஆரம்பத்தில் வந்த கடிதங்களில் சல்மாவின் நலம் இருந்தது. பிறகு ஒரு கடிதத்தில் மட்டும், “எல்லோரும் சேர்ந்து என்ன ஏமாத்திட்டீங்க…” என்று எழுதியிருந்தார்.
அதன் பிறகு கடிதங்கள் வரவில்லை.
அவரும் வரவில்லை.
ஜுவைரியா அழவில்லை.
பிறந்த வீட்டிற்கு திரும்பினாள்.
பகலில் தையல் மெஷினின் சத்தமும், இரவில் கணினி விசைப்பலகையின் தட்டச்சு சத்தமும் அவள் வாழ்வின் தாளமானது. பழைய மெஷினை விற்றுவிட்டு சேர்ந்த பணத்தில் கம்ப்யூட்டர் கிளாஸ் போனாள்.
சென்னையில் ஒரு ஐடி நிறுவனத்தில் டேட்டா என்ட்ரி வேலையில் தொடங்கி, தூக்கமில்லா இரவுகளைத் தொழில்நுட்பக் கற்றலுக்குத் தாரை வார்த்தாள். அதன் பலனாகக் கிடைத்த முதல் மாதச் சம்பளத்தில், ஜுவைரியா செய்த முதல் காரியம், ஐந்து வயது சல்மாவை ஒரு மெட்ரிகுலேஷன் பள்ளியில் சேர்த்ததுதான்.
அன்று சல்மாவுக்குப் பள்ளிச் சீருடையை அணிவித்து, அவளைக் கண்ணாடி முன் நிறுத்தி ரசித்தாள். அந்த நீல நிற யூனிஃபார்மில் சல்மாவின் மாநிறம் ஒரு கம்பீரத்தோடு மின்னியது. அப்போது, ஜுவைரியாவின் முகத்தில் ஒரு முழுமையான புன்னகை பூத்தது.
சல்மாவுக்கு நினைவு தெரிந்த நாள் முதல் அம்மா உழைத்துக்கொண்டேதான் இருக்கிறாள்.
சல்மா அவ்வப்போது தன் தந்தையின் ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்ப்பாள். துபாயின் நள்ளிரவு வானைத் தொடும் கட்டிடங்களுக்கு முன்னால், ரஹீம் நின்றிருந்தார்.
புகைப்படத்தின் ஓரத்தில், நியான் விளக்குகளின் வெளிச்சத்தில் ஜொலிக்கும் அந்நிய முகங்கள் கேமராவுக்குத் தெரியாமல் கடந்து போய்க்கொண்டிருந்தன.
ரஹீமின் முகம் இன்னும் முதிர்ந்து, கருமை அடர்ந்து போயிருந்தது. அந்தப் புகைப்படத்தின் பிரகாசமான பின்னணியில் அவரது கருமை ஒரு ஒட்டாத புள்ளியைப் போல துருத்திக்கொண்டிருந்தது.
அந்தப் படத்திற்கு கீழே அவர் பதிவிட்டிருந்த “New beginnings.” என்ற வரி, சல்மாவின் கண்களில் ஒரு கசப்பான புன்னகையை வரவழைத்தது.
கருத்தரங்கு முடிந்ததும் சல்மா வீட்டுக் கதவைத் திறந்தாள்.
லேப்டாப் திரையின் நீல ஒளி அறையில் படர்ந்திருந்தது. எண்கள் ஒன்றன் பின் ஒன்றாக மாறிக்கொண்டே இருந்தன. ஜுவைரியாவின் விரல்கள் விசைப்பலகையில் தடுமாற்றமின்றி ஓடிக்கொண்டிருந்தன.
லேப்டாப்புக்கு அருகில், ஒரு சிறிய வெள்ளை அட்டை சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. அதில் கருப்பு எழுத்துகளில் பொறிக்கப்பட்டிருந்தது:
Juvairiya Rahmath Senior Delivery Lead
அட்டையின் ஓரம் சற்று மடிந்து, காலத்தின் கையொப்பமாக இருந்தது.
“சாப்பிட்டியா சல்மா?”
“இல்லம்மா.”
“இதோ, கொஞ்ச நேரத்துல ரெடி பண்றேன்.”
அம்மா சமையலறை நோக்கி நடந்தாள்.
அப்போதுதான் சல்மாவின் போன் அடித்தது. துபாயில் இருந்த பெரியப்பா.
“சல்மா… உங்க வாப்பா இறந்துட்டாராம். ஆக்சிடென்ட்.”
சல்மாவுக்கு உலகம் சட்டென மெதுவாக நகர்வது போல் இருந்தது. போன் அவள் விரல்களில் திடீரென்று எடையைப் பெற்றது. அவள் சமையலறைக்குச் சென்றாள். ஜுவைரியா சட்டியில் கரண்டியைச் சுழற்றிக் கொண்டிருந்தாள். சல்மா பெரியப்பா சொன்ன செய்தியைச் சொன்னாள்.
ஜுவைரியா திரும்பிப் பார்க்கவில்லை.
போனை வாங்கி காதில் வைத்தாள். அவள் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை.
“இன்னாலில்லாஹி…”
போன் மெதுவாக மேசையில் வைக்கப்பட்டது.
மீண்டும் –
கரண்டி சட்டிக்குள் சுழன்றது.
அறை அமைதியாகிப் போனது.
சல்மா தயங்கித் தயங்கி அம்மாவின் முதுகைப் பார்த்தாள்.
அந்த முதுகு… எத்தனை ஆண்டுகளாக இப்படி நிமிர்ந்து, தனியாக நின்றுகொண்டிருக்கிறது? ஒரு கணம், அவளுக்கு அம்மாவின் தோள்களில் பழைய தையல் மெஷினின் அந்த அடர்த்தியான அதிர்வு தெரிவது போல இருந்தது — டக்… டக்… டக்… என்று எல்லா வலிகளையும் அறுத்துக்கொண்டே.
“அம்மா… அவரு…”
“அப்பா…”
அந்த வார்த்தை அவள் உதட்டில் நின்றது. அது அவளுக்கே அந்நியமாக, தொண்டையை அடைத்தது.
ஜுவைரியா சட்டியைச் சுழற்றிக்கொண்டிருந்த கரண்டியை திடீரென நிறுத்தினாள். அவளது விரல்கள் கரண்டியை இறுக்கிப் பிடித்திருந்தன.
ஒரு நீண்ட மூச்சு அவள் நெஞ்சுக்குள் சென்று மெதுவாக திரும்பியது.
அவ்வளவுதான்.
பிறகு –
மீண்டும் கரண்டி சுழன்றது.
அடுப்பை அணைத்துவிட்டு, இன்னும் சல்மாவைத் திரும்பிப் பார்க்காமலே சொன்னாள்:
“தெரியும்.”
சட்டியில் இருந்த ஒரு சிறிய குமிழி மெதுவாக உடைந்தது.
![]() |
சு.அப்துல் கரீம் (மே 1979) மதுரையைச் சேர்ந்த எழுத்தாளர். கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் கணிதம் படித்து, பின்னர் கணினி பயன்பாடுகளில் முதுநிலை பெற்றார். தற்போது தகவல் தொழில்நுட்பத் துறையில் மென்பொருள் நிபுணராகப் பணியாற்றி வருகிறார். தொழில், வாசிப்பு, எழுத்து என அனைத்தையும் ஒருங்கே இணைத்து மதுரையில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். சிறுவயதிலிருந்தே புத்தக வாசிப்பில் ஆர்வம் கொண்ட இவருக்கு, அந்த வாசிப்பு தமிழின் மீதான காதலாகவும், பின்னர் எழுத்தின் மீதான…மேலும் படிக்க... |
