கருப்பாச்சி காவியம்





இதுவரைக்கும் யார்கிட்டயும் சொல்லல. இதுவரைக்கும் யாரும்கூட இதைப்
பத்தி சொல்லல. இருந்தாலும் சொல்றேன்!
என்னோட அவரு… எனக்கே சொந்தமான அவரு…
என்னப் பொறுத்தவரைக்கும் தொர மவராசா!
அவரு நின்னா அளகு… நடந்தா பேரளகு!
சோடியா நடக்கும்போதெல்லாம் எனக்குத் தலைக்கு மேல பௌர்ணமி கணக்கா பிரகாசமா இருக்கும்!
அம்புட்டு சந்தோசம் மனசுல!
ஆனா, யாருக்குந் தெரியாத ரகசியமாத்தேன் இருக்கு எங்க வொறவு!
இஷடப்பட்டுத்தேன் அவரோட ஒட்டிக்கிட்டேன்.
இன்னாரு… இப்படின்னு ஊர்க்காரங்ககிட்ட என்னப்பத்தி சொல்லணும்னு நான் கேக்கல. அது அவருக்குக் கவுரவக்குறைச்சலாக்கூட இருக்கும்.
ஆனா, என்னச் சட்ட பண்ணலாமில்ல?
‘எப்படி இருக்கேன்’னு கேக்க வேண்டாம்.
‘எப்படி இருக்கேன்’னு பாக்கலாமில்ல?
வெளிய தெருவுக்குப் போனா, சும்மா விருட்டு விருட்டுன்னு கடப்பாரு… பெரிய ரசனிகாந்து கணக்கா!
ஈடு குடுத்து நானும் ஓடணும்.
இந்தா… இந்த மாதிரி மழ நாள்ல இன்னும் மோசம். குண்டுங்குழியுமாக் கிடக்கிற வீதியில அவரு பாட்டுக்கு எகிறிக் குதிச்சி அங்கிட்டுப் போயிடுவாரு.
அந்தச் சேத்துல நானு விளுந்து வாரி, எளுந்து ஓடுவேன் பின்னாலயே. அது அவருக்குத் தெரியாது.
மனுசன் காருல ஏறி கதவ ‘டொக்’குனு மொகத்துல அடிச்ச மாதிரி நேரத்துல அப்படி அடிச்சும் கதவப் பூட்றது உண்டு.
கூடவே நானும் வர்றேனே… கை நசுங்கிச்சா,கால்ல பட்டுச்சாங்குற கரிசனம் கடுகளவும் இருக்காது. அது மனசோ? இல்லை… மயானமோ? வேணாஞ்சாமி இந்த பொளப்புன்னு தோணும் எனக்கு!
‘வேணாம்னுட்டு ஏன் இருக்கணும் கூடவே?’ன்னு கேப்பீக…
எனக்கு வேற போக்கிடம் ஏது?
இருக்கிற வரைக்கும் கூடவே இருந்துட்டு, போகும்-போது ‘உடங்கட்ட’ ஏறிட வேண்டியது-தேன்!
சிரிக்காதீங்க… ஏன் முடியாதாக்கும்? போன வாரம் வடக்க ‘சத்தீஸ்கார்’ங்கிற இடத்துல லால் மதின்னு 75 வயசுக் கிளவி உடங்கட்ட ஏறல? அந்த மாதிரிதேன். ஆமா!
ஒரு தடவ அப்படித்தேன்… வியாபாரத்துல நட்டம் வந்து சாதி சனமெல்லாம் தனிமரமா அவர விட்டுட்டுப் போயிட்டாய்ங்க. துக்கத்துல நான் படுத்தே கெடந்தாலும். அவரு கால்-மாட்டுலயே பழியாக் கெடந்தேன். ஒத்தாசையா இருக்-கேனேன்னு ஒரு சிரிப்பு… ம்ஹ¨ம்!
நான் மூக்கும் முளியுமா இல்லாம மொளுக்கடீன்னு கருகருன்னு கரிச்சட்டி கணக்கா இருக்குறதுதான் அவரு கவனம் எம் மேல விளாததுக்குக் கார-ணமோ என்னமோ?
நான் நெட்டையோ, குட்டையோ… ஆனா, இம்-புட்டு -நாளா வாயத் தொறந்து அவரு என்னைவிட்டுப் போயிருன்னு மட்டுஞ் சொன்னதில்லை. அந்த மட்டி-லும் குடுப்பன எனக்கு!
‘விசய்’ டீ.வி-யில் காட்ற மாதிரி உலகத்துலேயே ‘சோடி நம்பர் ஒண்ணு’ நாங்கதேன்னு அடிச்சுச் சொல்லுவேன். எங்க பொருத்தம் ஆருக்கும் வராது!
அவரு நிமிந்தா நிமிந்து, குனிஞ்சா குனிஞ்சி, இருக்க எனக்குன்னு தனியா சாகை கேக்காம (பேச்சுகூட மனசோடதான்) வாயத் தொறந்து நாலு வார்த்தைக்கு ஒரு வார்த்தை பேசியிருப்-பேன்?
ஆரு இருப்பா அப்படி?
இன்னும் கூரப்பொடவகூட முளுசாக் கசங்-காத அவரோட புதூப் பொஞ்சாதி மூக்குத்தி நனைய குறைபட்டுக்குறாளாம்… இந்த மனுசனப் புரிஞ்சுக்க முடியலன்னு. நேத்து கூத்துக் கட்னவளுக்கே அப்படி -இருந்தா, எனக்கு எப்படியிருக்கும்?
இப்படியே விட்டா விசும்பலாட்-டம் விட்டு விட்டு நா பொலம்பிக்-கிட்டே இருப்பேன்.
இந்தா… என் மாப்பிள்ளை, வெளக்கு வெளிச்சத்துல எதையோ படிச்சுக்கிட்ருக்காரு, நானும் தரையோட தரையா அவரையே கவனிச்சுக்கிட்டிருக்கேன்.
தடக்குன்னு தாப்பாளப் போட்டு கதவ மூடிட்டா மவராசி. மட்டுமரியாத இல்லாம என்ன ஏறி மிதிச்-சுக்கிட்டே அவருகிட்ட போறா. என்னமோ குசுகுசுங்குறா… நடுவுல எனக்கோ கூச்சமாயிருக்கு!
பல்ல கடிச்சுக்கிட்டு கொஞ்சநேரம் இருந்தாப்-போதும்…
வெளக்க அமித்திடுவா… பொறவு, நான் எங்க அங்க… மறுநாள் விடிஞ்சாதான் எனக்கு உசுரே வரும்.
அறையில் இருள் படர மறைந்தது அது!
தூரத்துப் பச்சையா நாம் விரும்பிப் பாக்குற விஷயங்கள் நம்மகூட எவ்வளவோ இருக்கு. அல்லது அதைக் கண்கள் தேடும். நம்ம கூடவே நடக்குற நம்மோட நிழலுக்கு நாம எப்பவாவது ‘ஹாய்’ சொல்லியிருக்-கோமா?.
– 05th நவம்பர் 2008
கிராமிய வழக்கு அழகு. நம் கூட வார நிழல் எப்பவும் நமக்கு மறந்து போகுது. ஆனால் இருட்டுல எதையோ தேடிக்கிட்டு இருக்கோம்.
அருமையான கதை…