கரிமீனும் கம்யூனிசமும்…
கதையாசிரியர்: யுவராஜ் சம்பத்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: December 22, 2025
பார்வையிட்டோர்: 194

அஜிதா ஜன்னலோர இருக்கையைத் தேர்ந்தெடுத்ததில் மகிழ்ச்சி கொண்டாள். உப்புக்காற்று சுமந்து வந்த மணல் துகள்கள் அவள் கன்னத்தை வருட முடியாமல், முகத்தை மூடியிருந்த துப்பட்டாவில் பட்டு விலகிச் சென்றன. அஜிதா, தோழர் கண்ணனின் ஒரே மகள். ஓடத்தீவு என்கிற மீனவர் கிராமத்தில் இருந்து நிர்வாக மேலாண்மை படிப்பதற்காக சென்னை சென்ற மீனவப் பெண். தென் தமிழகத்தின் முதல் பெண் போராளியின் நினைவாக , தனக்கு இந்த பெயர் இட்டதாக,தன் தந்தை சொல்வதை பெருமிதத்தோடு ஏற்றுக்கொள்வாள் அஜிதா. கேரளாவின் முதல் நக்செலைட் என்று அறியப்பட்ட குன்னிக்கல் நாராயணனின் மகள் தான் அஜிதா.. அவரும் குறைந்த காலம் தீவிரவாதியாக இருந்து பின்னர் இன்றுவரை கேரள மலைவாழ் மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு சமூக அறக்கட்டளைகளை ஏற்படுத்தி போராடி வருகிறவர். எழுபதுகளில் கேரளத்தின் வயநாடு பகுதியில் மலைவாழ் மக்களுடைய உரிமைகளுக்காகப் போராடி சிறை சென்றவர் அவர்.பெயர் பொருத்தம் காரணமாகவோ என்னவோ, அஜிதாவிற்கு இயற்கையிலேயே ‘ஏன்?’ என்று கேள்வி கேட்கும் போர்க்குணம் ரத்தத்தில் ஊறி இருந்தது. இந்தக் குணம் தான் அவரை இன்று கல்லூரி மாணவர் பேரவையின் செயலாளராக உயர்த்தி இருக்கிறது என்பதிலும் மிகுந்த பெருமகிழ்ச்சி கொள்பவள் அஜிதா.நெடுந்தொலைவு பயணத்தின் சோர்வும், பேருந்தின் உள்ளே மிதந்து வந்த இளையராஜாவின் ‘போவோமா ஊர்கோலம்’ பாடலும் அவளைக் கண்ணயரச் செய்தது.
“ஐஸ் ஃபேக்டரி! ஐஸ் ஃபேக்டரி!” என்கிற பேருந்து நடத்துநரின் குரலும், நெத்திலி கருவாடு வாசனையும் அவளைத் தூக்கத்திலிருந்து எழுப்பி விட்டது. எட்டிப் பார்த்தால், புல்லட் மேல் சாய்ந்து தோழர் கண்ணன் இவளுக்காகக் காத்துக் கொண்டிருப்பது தெரிந்தது. இறங்கியவுடன் தந்தையைக் கட்டிப்பிடித்து, வழக்கம் போல் காது மடலைச் செல்லமாகக் கடித்து, தான் கல்லூரி மாணவர் பேரவைச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தபடியே பேருந்திலிருந்து கீழே இறங்கினாள்.
“என்ன பார்வதி, மீன் குழம்பு வாசம் தூக்கலா இருக்குது, என்ன விசேஷம்?” என்றபடியே பக்கத்து வீட்டு அருள் மேரி, பார்வதி அம்மாவிடம் வம்பு இழுத்தவாறே வந்தாள். “என் மக வரா இல்ல, அவளுக்குப் பிடிச்ச உழுவை மீன் குழம்பு தான். அவளையும் பார்த்துட்டு சாப்பிட்டுப் போ,” என்றபடியே அடுப்பு வேலைகளை கவனிக்க ஆரம்பித்தாள் பார்வதி அம்மா.”இப்பொழுதெல்லாம் நல்ல மீன்கள் கிடைப்பதில்லை. எல்லாவற்றையும் கம்பெனிக்காரர்கள் ஏமாற்றி வாங்கிக்கொண்டு போய் விடுகிறார்கள். கிடைக்க மாட்டேங்குது. இந்தக் கொடுமையை எங்கே போய் சொல்றது? இதுக்கு ஒரு வழி பிறக்காதா இயேசப்பா?” என்றபடியே ஊற வைத்த மீன் துண்டுகளைக் குழம்பில் இட்டு கொதிக்க வைத்தார். இரண்டும் கொதித்தன, அவள் மனசும், மீனும்.”ஐயோ! நீ குழம்பு வச்சா ஓடத்தீவு ஊர் முழுக்க மணக்கும் இல்ல? அதான் பாத்துட்டு போலாம்னு வந்தேன்,” என்றபடியே அருள் மேரி கிளம்பிப் போனாள்.
ஓடத்தீவுக்குப் புதிதாய் வருபவர்களுக்குப் பெயர் காரணம் தேவையில்லை. கரை வரை நிறைந்திருக்கும் மீன்பிடி படகுகள், கடல் மாதாவை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் பல நூறு குடும்பங்கள். வைகறையில் பறவைகளின் ரீங்காரத்தைக் கேட்டுப் பழகியவர்களுக்கு இங்கே மழை தூறலும், வல்லம் தள்ளும் சத்தமும் புது அனுபவத்தைத் தரும். கடல் மாதாவின் கருணையினால் தினம் தினம் செத்துப் பிழைப்பவர்கள் இந்த மீனவர்கள். இந்த கிராமம் குறிப்பாக, கறி மீன் பிடிப்பதில் தேர்ச்சி பெற்ற கிராமம்.
கறி மீன்..மலையாள நாட்டில் கிடைக்கும் அதி அற்புதமான உணவு அது. மீன் பொளிச்சது, கொஞ்சம் போல மட்டன் ரைஸ் கிடைத்தால் அதுவே சொர்க்கம் என்பார்கள். கரிமீன் சாப்பிடுவதற்காகவே, கோவையில் இருந்து வாரா வாரம் கேரளா செல்கிறவர்கள் இருக்கிறார்கள் என்றாள் அஜிதா.”என்னது பொளிச்சதா? அப்படின்னா?” கண்களை சுருக்கியபடி விடை தெரியாமல் வினவினான் சஞ்சய். சென்னையில் பிறந்து வளர்ந்த வகுப்பு தோழன்..
“கரிமீனை எடுத்து சுத்தம் செய்து, மேலேயும் கீழேயும் ரெண்டு கீறல் போட்டு, வீடே மணக்க, வீட்டிலேயே அரைத்த மசாலாவை அதில் தடவி, ஒரு பெரிய வாழை இலை விரித்து, தேங்காய் எண்ணெய் தடவி, இந்த மீனை நடுவில் வைத்து மூடி, வாழை நார் கொண்டு கட்டி, தவாவில் வைத்து அப்படியே பொரிக்கணும். முடிஞ்சதும் அதை பீங்கான் தட்டுக்கு மாற்றி, நாரை பிரிக்கும் போது மீன் உங்களை சந்திர மண்டலத்துக்கு கூட்டிட்டு போயிடும். அதற்கப்புறம் சாப்பிட்டு, கடைசியில் ஒரு கட்டன் சாயா குடிச்சா அடடா, சொர்க்கம் அதுதான்” என்றாள் அஜிதா.
இன்னும் சஞ்சயின் சுருங்கிய கண் விரியவில்லை.
கரிமீன் ஒரு சுவையான மற்றும் பல நன்மைகளை அளிக்கும் மீன் வகை. இது புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தது. குறிப்பாக, இது நல்ல கொழுப்பு அமிலங்களான ஒமேகா-3 களைக் கொண்டுள்ளது, இது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. கரிமீன் சமைக்கும்போது, கேரளாவில் பாரம்பரிய சமையல் முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. வாழை இலையில் மீன் சமைப்பது, மண் பாத்திரங்களில் மீன் குழம்பு தயாரிப்பது போன்ற சமையல் முறைகள் மீனுக்கு ஒரு சிறப்பு சுவையை சேர்க்கின்றன. கரிமீன் கேரளாவில் ஒரு பாரம்பரிய உணவாகும். இது ஒரு தனித்துவமான கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக உள்ளது” என்று சொல்லிக் கொண்டே போனாள் அஜிதா. சஞ்சையின் சுருங்கிய கண்கள் விரிந்தன.
“அம்மா, உங்க கையால மீன் குழம்பு சாப்பிடுவது… அடடா, அது சுவையே தனி! சென்னையில என் நண்பர்கள் வீட்ல சாப்பிட்டாலும், இந்தச் சுவைக்கு ஈடு இணையே இல்லை,” அஜிதா பேசிக்கொண்டே உண்ணத் தொடங்கினாள்.
“இன்னொரு துண்டு வறுத்த மீன் வையி,” தோழர் கண்ணன் குரல் கொடுத்தார்.
“ஆமா, ஆமா. மகள் வந்திருக்கிறாள், ஒரு கறிமீன் சமைச்சுப் போட்டா திருப்தியா இருக்கும். அதுக்கு எனக்கு கொடுத்து வைக்கல. இருக்கிறதைத்தான் செஞ்சு போட வேண்டி இருக்கு,” முந்தானையால் முகத்தைத் துடைத்தபடி அம்மா எழுந்து சமையலறைக்குள் சென்றாள். இதைக் கேட்டதும் தோழர் கண்ணனின் முகம் சுருங்கியது. அஜிதா இதைக் கவனிக்கக்கூடாது என்று முகத்தைத் திருப்பிக்கொண்டார். ஆனாலும், அம்மாவின் கோபம் சமையலறையில் இருந்து வெளிவந்தது.”நாம சொன்னா யாரு கேக்குறாங்க? இதோ இந்த முதலாளி இல்லன்னா நம்ம எல்லாம் செத்துருவோம்னு நினைச்சுட்டு இருக்காங்க. இயேசப்பா, எப்ப எங்களுக்கு வழி பிறக்கும்?” மீன் குழம்பு கொதித்த சட்டியின் விறகு அடுப்பில் இருந்த புகையை விட, அம்மாவின் குரலில் புகைச்சல் அதிகமாகத் தெரிந்தது.
“என்னப்பா பிரச்சனை?”
அப்பாவும் மகளும் கைகளின் விரல்களைக் கோர்த்தபடியே கடற்கரை மணலில் நடந்து கொண்டிருந்தனர். உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரை விவாதிப்பது அவர்களுக்கு வழக்கம். தோழர் கண்ணனின் அரசியல் ஈடுபாடு அஜிதாவுக்கு மிகவும் பிடித்திருந்தது. இன்று நேற்றல்ல, பிறந்தது முதல் தன் அப்பாவின் மார்க்சியப் பார்வையைத் தெளிவாகப் புரிந்து கொண்டவள் அஜிதா. கடந்த மூன்று மாதமாக அந்தக் கிராமத்தில் நடந்த பல்வேறு நிகழ்வுகளையும், தொடர்ந்து நடந்த உரையாடல்களையும் தோழர் கண்ணன் சுருக்கமாகச் சொல்லியபடியே நடந்து வந்தார்.
“இல்லம்மா, இன்றைய இளைஞர்களுடைய பார்வை வேறு ஆக இருக்கிறது. நம்முடைய பார்வை வேறாக இருக்கிறது. காரணம், ஐம்பது வருடங்களுக்கு முன்னால் எங்களுக்கு வாழ்வாதாரம் கேள்விக்குறியாக இருந்தபோது, பொருளாதார வசதிகள் இல்லாதபோது இந்த முதலாளிகள்தான் எங்களைத் தத்தெடுத்துக் கொண்டார்கள். அது இன்று வரை தொடர்கிறது. வெறும் வல்லம் மட்டுமே வைத்திருந்த எங்களுக்கு ஐஸ்கட்டி வாங்க பணமேது? அல்லது போட்டுக்கு மாறிய பின்னால் டீசலுக்குப் பணமேது? இரண்டு மாத கால மீன்பிடி விடுமுறையில் சோற்றுக்குத்தான் பணம் ஏது? இதையெல்லாம் தந்தவர்கள் அந்த முதலாளிகள் என்பதால் அவர்களுக்கு நாங்கள் சாதகமாகத்தான் இருக்க வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. இதை இன்றைய இளைஞர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.”
“அப்படியாப்பா? என்ன சொல்றாங்க இளைஞர்கள்?”
“இல்லம்மா, ‘பிடிக்கிற மீனெல்லாம் கொண்டு போய் முதலாளிக்கு குறைந்த விலைக்குக் கொடுத்துட்டு அன்றாட வாழ்க்கையை மட்டும் நடத்திக் கொண்டிருந்தால் நாம் எப்படி முன்னேறுவது? நாம் எப்படி குடும்பத்தை பெரிய அளவில் விருத்தி செய்வது?’ என்று கேட்கிறார்கள். நான் சொல்லும் நியாயங்கள் அவர்களுக்குப் புரிவதில்லை. யார் கையில் மீன்பிடி துறைமுகம் இருக்கிறதோ, அவர்களை நம்பி தானே நம் வாழ்வே இருக்கிறது . அவர்களை மீறி வேறு ஏதாவது ஒரு மீன்பிடி முதலாளி இந்தத் துறைமுகம் போட்டு விடுவானா? அப்படிப் போட்டால் அரசும் அரசு அதிகாரிகளும் விட்டுவிடுவார்களா? ஒன்றுக்கொன்று அனுசரணையாக நடந்து வாழ்க்கை நடத்துவதுதானே நல்ல வாழ்க்கை முறை? இதைச் சொன்னால் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். அதுதான் பிரச்சனை,” என்றார் தோழர் கண்ணன்.. முதலாளி ஒன்னும் அநியாயமான விலை தரவில்லையே. என்ன சைஸ் மீன் பிடிச்சாலும் ஒரு குறிப்பிட்ட வகைக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை தருவாரே. மீன் கசாப்பு கடைக்கு போனாலும் கருவாட்டுக்கு போனாலும் அதற்கு அவர் பொறுப்பு எடுத்துக் கொள்கிறாரே! 40 வருட காலமாக நம்மையெல்லாம் வாழ வைத்தாரே! இதை யோசித்துப் பார்க்க மாட்டார்களா அந்த இளைஞர்கள் என்று தோழர் கண்ணன் ஆதங்கப்பட்டார்.
சரி விடுங்க அதுக்கு ஏன் நீங்க முகத்தை நெத்திலிக் கருவாடு மாதிரி வச்சிட்டு சுத்துறீங்க? இன்னும் ஒரு வாரம் நான் இங்க இருக்கேன் இல்ல.. அந்த இளைஞர்களை சந்தித்து பேசலாம் .வழி பிறக்காமலா இருக்க போகிறது ,தட்டுங்கள் திறக்கப்படும் என்கிற தேவன் இருக்கும் வரை.. தோழர் கண்ணனின் கருப்பு நிற புல்லட் இரு குடம் நீரை சுமந்து கொண்டு, ஆடி அசைந்து வரும் இளம் பெண்ணை போல் , வீடுகள் நிறைந்த குறுகளான ,நெருங்கிய சாலைகள் வழியாக வீடு வந்து சேர்ந்தது..
அடுத்த நாள் ..சூரியன் கிழக்கில் மெதுவாக எழும்பும் போது, கடல் நீரில் சிவப்பு, ஆரஞ்சு நிறங்கள் பளபளத்தன. கடல் அலைகள் மெதுவாக வந்து கரையைத் தொட்டு, “வாருங்கள், வாருங்கள்!” என்று மீன்பிடி இளைஞர்களுக்குக் கட்டியம் கூறுவது போல் இருந்தது. கிராமத்து மீனவர்கள் தங்கள் வலைகளும், குட்டைப் பைகளும், கொம்பும் எடுத்துக்கொண்டு கடற்கரையில் கூடினார்கள். அவர்கள் முகங்களில் உற்சாகம், சிலருக்குத் தூக்கமின்மை, சிலருக்கு எதிர்பார்ப்பு… இன்னும் என்னவெல்லாமோ சிலருக்கு! படகுகளைச் சரிபார்க்கும் பணியில் சிலரும், உணவுப் பண்டங்களை எடுத்து வைப்பதில் சிலரும், டீசல், ஐஸ் கட்டியைச் சோதிப்பதில் சிலரும் சுறுசுறுப்பாகத் தங்கள் வேலையைத் தொடங்கினார்கள்.
கடற்கரை மணலில் காலடித் தடங்கள், சில இடங்களில் பழைய மீன் எச்சங்கள், வெறும் பாட்டில்கள், பிளாஸ்டிக் துண்டுகள். காற்றில் மீன் வாசனையும், உப்பு வாசனையும் கலந்திருந்தன. “அப்பா, நீங்க போங்க. நான் நாலு மணிக்கு நீங்க திரும்புவதற்கு முன்னால் வந்துவிடுகிறேன்,” என்று சொல்லிவிட்டு, அஜிதா மீண்டும் சென்றாள்.
அப்பா ஏற்கனவே சொல்லியிருந்ததால், மீன் பிடித்த சோர்வையும் மறந்து காத்திருந்தார்கள், அப்பா குறிப்பிட்ட இளைஞர்கள். அஜிதாவுக்கு நன்கு பழக்கமான அலெக்ஸ், செபாஸ்டின், முருகன் மற்றும் இன்னும் பலரும் அவர்களில் இருந்தார்கள். அஜிதாதான் பேச்சைத் தொடங்கினாள். “கடல் நம் வயிற்றைக் காப்பது மட்டுமல்ல; நம் தலைவனாகவும் மாறிவிடக்கூடும். அரசியல் கூட அது போலத்தான்.”
அலெக்சின் குரலில் ஒரு வன்மம் தெரிந்தது. “இல்லக்கா, பசி மட்டும்தான் எனக்கு முக்கியம். நமக்குக் கடல் வேண்டும், ஆனால் கட்சி வேண்டாம். நாங்களாவது இந்தக் கிராமத்தில் தான் இருக்கிறோம். உங்களை மாதிரி அதிகம் படிச்சவங்க இதை ஊர்ப் பெரியவங்ககிட்ட எடுத்துச் சொல்லணும்,” என்றான் முருகன்.
உரையாடல் இரண்டு மணி நேரம் தொடர்ந்தது. ஊர் இளைஞர்களின் நடப்பு அரசியல் பற்றிய புதிய பரிணாமம் அஜிதாவுக்குப் புரிந்தது. அவர்கள் ஏதோ ஒன்றை நம்பி, ஏதோ ஒன்றை இழந்திருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிந்தது. அவர்களை மேலும் மேலும் பேசுவதற்கு அனுமதித்து, அவர்களை இலகுவாக்கினாள் அஜிதா. அஜிதாவை விட தோழி வைஜெயந்திதான் மிகவும் ஆர்வமாக, உன்னிப்பாகக் கவனித்து, குறிப்பெடுத்துக் கொண்டாள். “ஓகே ஃபிரண்ட்ஸ், நாளைக்கு மீண்டும் சந்திப்போம்,” என்று விடை பெற்றாள் அஜிதா.
இரவு உணவு உண்ணும் போது உரையாடல் தொடர்ந்தது. அஜிதாதான் அதிக நேரம் பேசினாள். “அவங்க சொல்றதுல ஒரு நியாயம் இருக்குப்பா. என்னைப் படிக்க வைக்கிறதுக்கு நீங்க எவ்வளவு கஷ்டப்படுறீங்கங்கிறது எனக்குத் தெரிஞ்ச மாதிரி உங்களுக்குத் தெரியல. ஏன்னா, நீங்க படுற கஷ்டத்துக்குப் பேரு ‘வாரி அனைத்து தோளில் போட்டுக் கொண்ட அன்பு.’ ஆனா, இந்தக் கஷ்டப்பாடு வரும் காலத்துல இன்னும் ரொம்ப பெருசா இருக்கும். அந்த இளைஞர்கள் அனுபவிக்கப் போற வேதனை இன்னும் அதிகமாக இருக்கும். அதனால நாங்க ஒரு முடிவுக்கு வந்திருக்கிறோம். என்னன்னா… இந்த கடலும் கடல் சார்ந்த மண்ணும், கடல் வளமும் நமக்கானது. எல்லோருக்கும் பொதுவானது. அதனால நம்ம எல்லாரும் சேர்ந்து ஒரு கூட்டுறவு முறையில நமக்குத் தேவையான எல்லாவற்றையும் நாமே ஏற்படுத்திகிட்டா? இடைத்தரகர் என்கிற அந்த முதலாளி தேவை இல்லைதானே! நாளை காலை நானும் வைஜெயந்தியும் இதைப்பற்றி கலந்து ஆலோசித்துவிட்டு உங்களுக்கு ஒரு தீர்வைச் சொல்லுகிறேன். நீங்க போய் தூங்குங்க, குட் நைட்,” என்றாள் அஜிதா.
“நாம உருவாக்கும் மீன்பிடி துறைக்கு என்னென்ன தேவை என்பதை யோசிக்க வேண்டும். நூறு போட்டு நிற்கணும். பிடிக்கிற மீனை வியாபாரிகளுக்குக் காட்சிப்படுத்தி ஏலம் கூறுவதற்கு வசதியா போதுமான இடம் இருக்கணும். நமக்குத் தேவையான ஐஸ் உற்பத்தி செய்யறதுக்கு நம்மகிட்டயே ஃபேக்டரி இருக்கணும். முடிஞ்சா நமக்குன்னு ஒரு பெட்ரோல் பம்பு… படகு பழுது பார்க்கும் கூடம்… வலைக் களஞ்சியம்… வேற என்ன வேணும்?”
“ஒரு ஓய்வுக் கூடம். ஒரு சின்ன கேன்டீன்.””அடடே! இதை நான் மறந்துட்டேனே.”
“நீ எப்பொழுதுமே ஸ்மார்ட் அஜிதா,” என்றாள், சக தோழியும், மேலாண்மை ஆலோசகருமான வைஜெயந்தி.
“அப்ப என்ன செலவாகும் என்று நினைக்கிறாய்?”
“இந்தக் கிராமத்தைப் பொறுத்தவரை ஒரு மிகச் சிறந்த கட்டமைப்பை உருவாக்குவதற்கு இருபத்தி ஐந்து லட்சம் ரூபாய் அதிக முதலீடு தேவைப்படும். இதில் நாற்பது சதவீதம் அரசாங்க மானியம் கிடைக்கும். மீதி அறுபது சதவீதத்தில் ஐம்பது சதவீதம் வங்கிகளில், குறிப்பாக கூட்டுறவு வங்கிகளில் குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும். ஆக, இந்தக் கிராமத்தினுடைய குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் இரண்டாயிரம் ரூபாய் மட்டுமே செலுத்தி உறுப்பினராகத் தங்களை இணைத்துக் கொண்டால், அந்த இரண்டு லட்ச ரூபாயை அவர்களுடைய முதலீடாக வைத்துத் திட்டத்தை மிகச் சிறப்பாக நடத்த முடியும்.”
மூன்று நாட்கள் மிகவும் பரபரப்பாகக் காணப்பட்டது அந்தக் கிராமம்.
“தோழர்களே! ஓடத்தீவு கிராமம் மீனவர் முன்னேற்ற சங்கம் என்கிற அமைப்பு பதிவு செய்யப்பட்டு, ஊர்த் தலைவர்கள் கூடி முடிவெடுத்ததன் படி, எதிர்வரும் வைகாசி மாதம் இருபதாம் நாள் நம்முடைய கூட்டுறவு மீன்பிடித் துறையை, மாண்புமிகு அமைச்சர் அவர்கள் திறப்பு விழா செய்யவும், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் முன்னிலை வகிக்கவும் இசைவு தந்துள்ளார்கள். ஆகவே கிராம மக்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பிக்க வேண்டுகிறோம். உங்கள் வருகையை எதிர் நோக்கும் ஓடத்தீவு கிராமத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள். நமக்காக நாம்… நாமே நாம்… வருக வருக!”
தோழர் கணேசனின் கைகளில் தங்கத் துகள்களில் அச்சிடப்பட்ட அழைப்பிதழ், மாலை வெயிலில் பளபளத்தது.
“கடலோடியும் கம்யூனிசமும், கடலோடு பிணைந்த ஒரு கிராமத்தின் இரு திசைகள். ஒருவேளை அவை மீண்டும் சந்திக்கலாம்…”