க‌ர‌ப்பான் பூச்சிக‌ள்

0
கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 15, 2025
பார்வையிட்டோர்: 33,949 
 
 

ச‌மைய‌ல‌றையில் காலைக் காஃபி த‌யாரித்துக்கொண்டிருக்கையில்தான் அவ‌ள் பார்த்தாள். க‌ர‌ப்பான் பூச்சிக‌ள். மேஜையின் ஒரு விளிம்பில் ச‌ற்று நேர‌ம் கிருகிரு ச‌ப்த‌ம் உண்டாக்கிக்கொண்டு அவ‌ளை ப‌ய‌ப்ப‌டுத்தும் வித‌த்தில் உற்று நோக்கின‌. பிற‌கு மேஜையின் ம‌று ப‌க்க‌த்தில் அவை ம‌றைந்துபோயின‌.

அவ‌ள் காஃபியை எடுத்துக்கொண்டு ப‌டுக்கைய‌றைக்குச் சென்றாள். க‌ண‌வ‌ன் ப‌டுக்கையிலிருந்து எழுந்திருக்க‌வில்லை.ஸ்விட்சைப் போட்ட‌போது க‌ண்ணுக்கு இத‌ம் த‌ரும் மிருதுவான‌ ஒளி அறை முழுதும் நிறைந்து ஒழுக‌த் தொட‌ங்கிய‌து.க‌ட்டிலில் அம‌ர்ந்து காஃபிக்காக‌க் கையை நீட்டிக்கொன்டு அவ‌ளை நோக்கிப் புன்சிரிப்பு சிரித்தான்.

உண‌ர்ச்சியற்ற‌ முக‌த்துட‌ன் அவ‌ன் காஃபி குடிப்ப‌தை அவ‌ள் பார்த்த‌வாறு நின்றிருந்தாள். ‘இந்த‌ ந‌டைமுறை என‌க்கு அலுத்துப்போக‌த் தொட‌ங்கியிருக்கிற‌து’ அவ‌ள் நினைத்தாள். க‌ண‌வ‌னின் வெளிறிப்போன‌ முக‌த்தையும், ந‌ரைக்க‌த் தொட‌ங்கிவிட்ட‌ ம‌யிர்க‌ளையும் காண்கையிலெல்லாம் அவ‌ளுக்குப் ப‌ச்சாத்தாப‌-முண்டாயிற்று. இந்த‌ப் ப‌ரிதாப‌ம் ம‌ட்டுமே அவ‌ளை ஒரு ச‌ண்டைக்காரியாக்காம‌ல் அட‌க்கி நிறுத்தியிருந்த‌து.

கூட‌ம் வ‌ழியாக‌, காலிக் க‌ப்பை எடுத்துக்கொண்டு திரும்புகையில் டிஸ்டெம்ப‌ர் பூசிய‌ சுவ‌ரில் க‌ருப்பான‌ சிறிய‌ ஒரு ஜ‌ந்து ஊர்வ‌தாக‌ அவ‌ளுக்குத் தோன்றிய‌து. அதைப் பார்க்க‌ வேண்டுமென்றிருந்த‌ போதிலும். ஒரு இய‌ல்பான‌ உந்துத‌லினால் அவ‌ள் ந‌க‌ர்ந்தாள்; நிற்க‌வில்லை.

ச‌மைய‌ல‌றையில் இப்போது நிறைய‌க் க‌ர‌ப்பான் பூச்சிக‌ள் இருந்த‌ன‌. அவை க‌ர‌க‌ர‌வென‌ ச‌ப்த‌முண்டாக்கி மேஜை மேலும் சுவ‌ர்மேலும் ஊர்ந்த‌ன‌. அடுக்க‌ளைக்குள் நுழைய‌ முற்ப‌ட்ட‌போது ஒன்றிர‌ண்டு க‌ர‌ப்பான் பூச்சிக‌ள் ப‌ற‌ந்து வ‌ந்து அவ‌ளுடைய‌ த‌லையில் அம‌ர்ந்த‌ன‌. கையை வீசி அவைக‌ளை அக‌ற்ற‌ அவ‌ள் முய‌ன்றாள்.ஆனால், க‌ர‌ப்பான் பூச்சிக‌ள் மிக‌ அதிக‌மாக‌ இருந்த‌தினால், அவ‌ள் இறுதியில் பின்வாங்க‌ வேண்டி வந்தது. இதைப்பற்றி புருஷனிடம் சொல்ல வேண்டுமென்று அவளுக்குத் தோன்றியது.

ஆனால் படுக்கையறையில் கணவன் எதனோடோ யுத்தம் செய்து கொண்டிருந்தான். அவன் யுத்தத்திற்கு நடுவில் வாய் திறந்து ‘கரப்பான் பூச்சி’ என்ற வார்த்தையை உச்சரித்தபோதுதான் எதனோடு என்று புரிந்தது. அவன் கரப்பான் பூச்சியை, ஒரு நியூஸ் பேப்பரை மடக்கி அடித்துக்கொண்டிருந்தான். கரப்பான் பூச்சி அவனை ஏமாற்றிப் பறந்தது. அவனுக்கு ஓரளவு வட்டம் சுற்றவேண்டி வந்தது.

“இதனால் ஒரு பலனுமில்லை.” அவள் சொல்ல நினைத்தாள். “அடுக்களையில் ஒரு நூறாவது இருக்கும்.” ஆனால் அவள் ஒன்றும் சொல்லாமல் புருஷன், செத்த பூச்சியைக் காகிதத்தில் அள்ளியெடுத்து ஜன்னல் வழியாக வெளியே எறிவதைப் பார்த்துக்கொண்டு நின்றாள்.

“நல்ல இடம் இது!” அவன் மூச்சு வாங்கச் சொன்னான். “இல்லியா? இந்த ஃப்ளாட்டில் ஒரு கரப்பான் பூச்சிகூட இல்லாமலிருந்துச்சு!”

ஆனால், தங்களுடைய ஃப்ளாட்டில் இதுவரை ஒரு கரப்பான் பூச்சி கூட இல்லாமலிருந்தது என்பதை அவள் இதுவரை நினைத்துப் பார்த்ததில்லை. அந்தச் சுற்றுப்புறத்தில் அவனுக்குச் சற்று அதிகமாகத் தெரிந்தவர்களுண்டு. யாரும் இதுவரை கரப்பான் பூச்சிகளைப்பற்றிக் குறை சொன்னதில்லை.

அவள் சமையலறைக்குத் திரும்பினாள். கணவனுக்குக் காலைச் சிற்றுண்டி எட்டு மணிக்குள் தயாராக வேண்டும். அப்படியானால்தான் அவனுக்கு எட்டரைக்குள் ட்ராம் கிடைக்கும். டல்ஹௌஸி ஸ்கொயரில் இருந்த ஆஃபீஸில் ஒன்பதுக்கு இருக்கவேண்டும். இந்தப் பிரச்னையை நான் தீர்த்துக்கொள்கிறேன்! அவள் நினைத்துக் கொண்டாள்: மார்க்கெட்டுக்குப் போகும்போது கொஞ்சம் கரப்பான் பூச்சி விஷம் வாங்கணும்!

மார்க்கெட்டுக்கு அதிக தூரமில்லை. ஸதர்ன் அவென்யு வழியாக நடக்கையில் கரப்பான் பூச்சிகள் அவளைக் கொஞ்சமும் அலட்டவில்லை

அவள் வேறொரு முக்கியமான விஷயத்தைக் குறித்து யோசித்துக் கொண்டிருந்தாள். மாலையில் டாக்டரைப் பார்ப்பதைப் பற்றி.

“இது ரொம்பச் சின்ன விஷயம்” கணவன் தயங்கியவாறு கூறியதை அவள் நினைவுகூர்ந்தாள். “ரொம்பச் சின்ன விஷயம். ஒரே ஒரு இஞ்செக்ஷன். கொஞ்சங்கூட வலியெடுக்காது. நம்பு, கொஞ்சங்கூட வலி?__ “

ஆரம்பத்திலெல்லாம் அவள் எதிர்த்தாள்: சக்தியோடு எதிர்த்தாள். இனிமையான அந்தச் சுமையைத் தாங்கும் சுய உரிமையை வீறாப்புடன் காப்பாற்றும் ஆவேசத்தோடு.

அப்போது, அவன், அந்தத் தீர்மானத்தை எடுக்க வேண்டியதற்கான வருமான விவரங்களைப்பற்றிச் சொன்னான். இரண்டு குழந்தைகளை வளர்த்து ஆளாக்க வேண்டும். அவர்களைப் படிக்க வைக்க வேண்டும். மூத்தவள் பெண் குழந்தை. அவளுக்கு ஒரு சாதாரணப் படிப்புப் போதும். ஆனால் மகனுக்கு நல்ல தொழில்நுட்பக் கல்வியே கொடுக்க வேண்டும். “வேலையின் மார்க்கெட் ரொம்ப டைட்.” அவன் சொன்னான். “அவனை நல்லாப் படிக்க வைக்கலைன்னா அவன் சீரழிஞ்சுப் போவான். ” இதைத் தவிர வேறு செலவுகளும் இருந்தன. வீட்டு வாடகை, எலெக்டிரிஸிட்டி, சலவைக்கூலி முதலானவை. வேலைக்காரக் கிழவிக்குச் சம்பளமும் கொடுக்க வேண்டும். கல்கத்தாவைப் போன்ற ஒரு நகரத்தில் வாழ்க்கை நடத்துவது கஷ்டம்தான். தான் பணியவேண்டி வருமென்று அவளுக்குப் புரிந்தது. ஆனால், அது மனம் குமட்டச் செய்வதாயிருந்தது.

தன் வயிற்றில் வளர்ந்துவரும் ஜீவனைப்பற்றி அவளுக்குத் துக்கம் தோன்றியது. இது வாழ்க்கைப் பிரச்னை. வாழ சந்தர்ப்பம் கிட்டியவர்களின் நிலைநிற்பு. அதைக் கடந்து வருபவர்களைத் தடுக்கும் இந்தக் கீழ்த்தரமான் மனப்போக்கு மனத்தைப் புரட்டுவதாயிருந்தது. ஆனால், அதைப் பொறுத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

அவள் குழந்தைகளைப்பற்றி நினைத்தாள்.அவர்களைக் கோடை விடுமுறைக்கு அனுப்பியது நல்லதாயிற்று. அவர்கள் இல்லாததில் அவளுக்கு மன உலைவு உண்டு. ஆனால், அதுதான் சற்று நல்லது. அவர்களை இப்போது இங்கே அழைத்துவர அவள் இஷ்டப்படவில்லை. அவர்களுடைய மாமா பக்கத்தில் அவர்களுக்குக் கூடுதல் மகிழ்ச்சியாக இருக்கும்.

மார்க்கெட்டில் அதிகக் கூட்டமில்லை. புதிய பச்சைக் காய்களின் வாசனை காற்றில் தங்கி நின்றிருந்தது. ஆனால் அவள் தனது குழந்தைகளைப் பற்றியும் மாலையில் டாக்டரைப் பார்க்க வேண்டியதைக் குறித்தும் யோசித்தாள்.

வெளியே வந்தபோது தெருவில் நிறைய ஆட்கள் இருந்தனர். தெரு தூசி நிறைந்துமிருந்தது. சிலர் நீண்ட சிவப்பு பானர்களைத் தூக்கிக் கொண்டு போய்க்கொண்டிருந்தனர். பானர்களெல்லாம் வங்காள மொழியில் இருந்ததினால் அவளுக்குப் புரியவில்லை. அவர்கள் உரக்கக் கோஷங்கள் எழுப்பியும் முஷ்டிகளை ஆகாயத்தை நோக்கி உயர்த்துவதுமாக இருந்தார்கள். சட்டென்று அவள் தன் சமையலறையில் நுழைந்துவிட்ட கரப்பான் பூச்சிகளை நினைத்துக் கொண்டாள்.

“இப்பத்தான் மறந்துபோயிருந்தது!”

மருந்துக்கடை பக்கத்திலேயே இருந்தது. கௌன்டரில் இருந்த சோம்பேறிபோலத் தோன்றிய ஒரு பையனிடம் அவள் கரப்பான் பூச்சிப் பொடி இருக்கிறதா என்று கேட்டாள். இங்கிலீஷில் கேட்டதினால் அவனுக்குப் புரியவில்லை யென்று தெளிவாயிற்று. “இல்லை” என்றான் அவன். “இங்கே இல்லை,” பிறகு அவள் முகத்தில் ஆச்சர்யம் படர்வதைக் கண்டபோது அவன் சொன்னான். “இருங்க.”

அவள் நின்றாள். பையன் காஷ் கௌன்ட்டருக்குப் போய், உயர்ந்து மெலிந்த ஒருவனிடம் தாழ்ந்த குரலில் பேசினான். உயரமான மனிதன் கௌன்ட்டருக்கு வந்து அவளுக்குக் ‘காக்ரோச் பௌடர்’ தானே வேண்டுமெனக் கேட்டான்.

அவள் தலையாட்டினாள். அவன் கண்ணாடியலமாரிகளில் ஒன்றிலிருந்து ஒரு சிவப்புப் பாக்கெட்டை எடுத்து அவளிடம் கொடுத்தான். கூடவே அது உபயோகிக்கப்பட வேண்டிய விவரங்களடங்கிய குறிப்புகளும். தனக்கு அது தெரியுமெனக் கூறி அவள் அவனுடைய நாவை அடக்கினாள். ஆனால் அவன் அதை கவனிக்காமல் மீண்டும் முதலிலிருந்து கடைசிவரை தொடங்குவானெனத் தோன்றியபோது அவள் சொன்னாள்: “நன்றி.”

அவன் தன் சொல்வீச்சை நிறுத்தினான், ஒரு எச்சரிக்கையுடன்.

“இது விஷமாக்கும், தெரியுமா? பயங்கரமான விஷம்!”

மாலையில் டாக்டர் இஞ்செக்ஷன் கொடுத்தபோது இதே வார்த்தைகளை ஒரு மன உளைச்சலுடன் அவள் மீண்டும் நினைவுகூர்ந்தாள். டாக்டர் ஒரு பருமனான பெண்மணி. அவள் அவளுடைய குழந்தைகளைப் பற்றி விசாரித்தாள்.

“ரெண்டுபேரும் ஸ்கூலுக்குப் போறாங்கன்னு சொன்னீங்கல்லே?”

“ஆமாம்.” பட்டென்று குத்திய ஊசி அவளுடைய உடம்பினுள்ளே இறங்குவதை அவள் உணர்ந்தாள்.

“ஸு, பரவாயில்லை” லேடி டாக்டர் சொன்னாள். “மனசைக் குழப்பிக்க ஒண்ணுமில்லை.”

டாக்சியில் அவர்கள் வீடு திரும்பினார்கள். பிரயாணம் சுகமாக இருந்தது. ஆனால் அவள் மிகவும் மனக்கஷ்டப்பட்டாள். நடுங்கும் கைகளால் அவள் தனது அடி வயிற்றைத் தடவினாள். பட்டென்று சக்தி வாய்ந்த தேம்பல்கள் மார்பில் நிறைந்தன. அவளுக்கு மூச்சு முட்டியது. தனிமையில் அமர்ந்து போதுமென்கிற வரா அழ வேண்டுமென்று அவளுக்குத் தோன்றியது. இப்போதாவது கணவன் பச்சாத்தாபமுற்றால் எவ்வளவு நன்றாயிருக்குமென்று அவள் ஆசைப் பட்டாள். ஆனால் அவனுடைய முகத்தில் பச்சாத்தாபத்தின் துணுக்கு கூட இல்லை. அவன் வெளியே உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தான்.

படுக்கையறையின் தெளிவான வெளிச்சத்தில் அவளது முகம் வெளிறி சோர்வுற்றுக் காணப்பட்டது. புருஷன் கேட்டான்:

“ஒனக்கென்ன ஆச்சு?”

“எனக்கொண்ணுமில்லை” என்றாள்

”ஒரு சின்னத் தலைவலி, ஸாரிடான் போட்டுக்கறேன், ஒரு மாத்திரை இருக்கா?”?

அவள் கட்டிலில் படுத்தாள், கணவன் மிகவும் கலவரமுற்றிருந்தான். ”மனச் சாட்சி தான் என்னைத் தொந்தரவு பண்ணுகிறது” அவள் நினைத்துக் கொண்டாள். இப்போது எனக்கு ஒரு குற்ற உணர்ச்சி உண்டாகிறது. ஆனால் அப்படிச் செய்யாமல் நிவர்த்தி யில்லை. வேறு வழியொன்றுமில்லை. இக்காலத்தில் சந்தோஷத்துடன் வாழ வேண்டு மானால் இந்தப் படபடப்பைக் கொஞ்சமும் கேட்கவில்லையென நடிக்கத் தான் வேண்டும். நாளை இந்த பயக்கனவின் நினைவுகள் மாய்ந்து போகும்போது சுகமாக வாழலாம்.

“குழந்தைகளைத் திரும்பியழைத்து வர வேண்டும்.” அவள் நினைத்துக் கொண்டாள். “எனக்கு அவர்களைப் பார்க்காமல் இருக்க முடியாது. பதினைந்து நாட்கள் மிகவும் அதிகம். இந்த ஏகாந்தத்தை என்னால் கொஞ்சமும் சகிக்க முடியாது. எனக்கு “என் குழந்தைகளை என்னைச் சுற்றிப் பார்க்கவேண்டும்!”

அவர்கள் டாக்டரிடம் போவதற்கு முன்பே உணவு தயாராக்கியிருந்தாள். அதனால் அதைப் பரிமாறிக் கொண்டு சாப்பிடமட்டுமே வேண்டியிருந்தது. சாப்பிட்டதும் அவளுக்குச் சற்று குணம் தோன்றியது. புருஷன் அந்தச் சிவப்புப் பொடியை அட்டைத் துண்டுகளில் சிறிய குவியல்களாக எடுத்து ஒவ்வொரு மூலையிலும் வைப்பதை அவள் பார்த்துக்கொண்டிருந்தாள். சமையலறையில் கரப்பான் பூச்சிகள் டின்களின் மூடிகளில் கரகரவென்ற சப்தம் செய்து பறந்து சுவரில் சென்று மோதும் ஒலி கேட்டது. பறக்கும் பாய்ச்சல் தொடங்கிவிட்டது. மரணப் படபடப்பு. அவள் நினைத்துக் கொண்டாள்.

அவள் படுக்கையறைக்குள் போன போது கணவன் படுத்தாயிற்று. அவள் விளக்கை அணைத்து, கட்டிலில் ஏறிப்படுத்தாள். தெருவிளக்கின் ஒளி ஜன்னல் வழியாக ஊடுறுவி வந்தது. கணவன் உறங்கியிருக்கவில்லை என்று அவளுக்குத் தெரிந்தது. அவன் திரும்பி அவளைக் கையால் வருடினான்.

“இப்போ எப்படியிருக்கு?”

“குணமாயிருக்கு” அவள் சொன்னாள். “எனக்கு இப்போது ஒரு நலக் கேடும் இல்லை.”

அவன் அவளுடைய முதுகில் அன்புடன் தட்டி, கன்னத்தில் முத்தமிட்டான்.

“நாளைக்கு உனக்கு எல்லாம் குணமாயிடும்.”

அப்படியொரு தைர்யம் புருஷனிபமிருந்து கிடைக்க அவள் காத்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு நிம்மதி உண்டாயிற்று. மெல்ல அவனது ஆலிங்கனம் நெருங்கி வருவதை அவள் உணர்ந்தாள். அவனது மூச்சுவிடல் தாளகதியை அடைந்தது.சில நிமிடங்களுள் அவன் ஆழ்ந்த நித்திரையிலானான்.

சற்று நேரத்திற்கு அவள் டைம்பீசில் டிக் டிக் ஒலியையும் வெளியே தெருவில் ஒரு வாகனத்தின் உறுமல் தூரத்தில் கரைவதையும் கவனித்தாள். அப்படியிருக்கையில் அவள் கருத்த ஜீவன்கள் பறந்து வருவதைப் பார்ததாள். கரப்பான் பூச்சிகள். அவை ஆயிரக்கணக்கிலிருந்தன. கரப்பான் பூச்சிகள் ஒரு ஊர்வலம் நடத்துகின்றன. அவளுக்குச் சிரிப்பு வந்தது. கனவில் மட்டுமே அது நிகழும். ஆனால் கரப்பான் பூச்சிகள் அதைத்தான் செய்துகொண்டிருந்தன. ஊர்வலம் தெருவில் பெருகிச் சேர்ந்தது. அவை உரக்கக் கோசங்கள் எழுப்பியும், மேலும் கீழும் கிளர்ச்சியுற்றுப் பறப்பதுமாக இருந்தன. சில கரப்பான் பூச்சிகள் தூக்கிப் பிடித்திருந்த பானர்களைப் பார்த்தபோதுதான் அவளுக்கு மிகவும் ஆச்சரியம் உண்டாயிற்று.

”எனக்குப் பைத்தியம் பிடிச்சிடும்” என்று நினைத்தாள் அவள். ஊர்வலம் பெரும் கொந்தளிப்பை அடைந்தது. சில கரப்பான் பூச்சிகள் விமானத்தாக்குதல் போல அவளை நோக்கிப் பறந்து வந்தன. அவள் ஒரு கூக்குரலுடன் விழித்தாள். அப்போது அது வெறும் கனவு மட்டுமே என்று அவளுக்குப் புரிந்தது. அவள் சந்தோஷமுற்றாள். கணவனை ஒட்டிப் படுத்தாள்.உறக்கம் கண்ணிமைகளை அழுத்துவதைக் கவனித்தாள்.

அவள் வெகுநேரம் உறங்கினாள். எழுந்தபோது, சூரியக்கிரகணங்கள் அறைக்குள் நுழைந்து வரத்தொடங்கியிருந்தன. தரையில் அவள் கரப்பான் பூச்சிகளைக் கண்டாள். செத்து மல்லாந்திருந்த கரப்பான் பூச்சிகள்.அவள் குளிர்காலத்தில் மரங்களிலிருந்து உதிர்ந்துவிம் உலர்ந்த இலைகளைக் குறித்தும், பல வருடங்களுக்கு முன் இறந்துபோன தாயைக் குறித்தும், குழந்தைகளைப்பற்றியும், வாழும் உரிமை தடுக்கப்பட்டுவிட்ட புதிய ஜீவனின் துணுக்கைக் குறித்தும் நினைத்துப் பார்த்தாள். அவள் துயருற்றாள்.

– இ.ஹரிகுமார்

– சமீபத்திய மலையாளச் சிறுகதைகள், முதற் பதிப்பு: 1980, தொகுப்பு: எம்.முகுந்தன், மொழிபெயர்ப்பு: ம.இராஜாராம், நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா.

நன்றி: https://www.projectmadurai.org

இ.ஹரிகுமார்

1943-ல் பிறப்பு. தந்தை பிரபல மலையாளக் கவிஞரான இடச்சேரி கோவிந்தன் நாயர். மெட்ரிகுலேஷன் பாஸான பிறகு உத்யோக‌ நிமித்தமாய் கல்கத்தாவுக்குப் போனார். அங்கே ஓர் கமெர்ஷியல் நிறுவனத்தில் வேலை பார்த்தவாறே மாலை வகுப்புகளில் சேர்ந்து பி.ஏ., பாஸானார். கல்கத்தா, டில்லி, பம்பாய் என்ற இம்மூன்று மாநகரங்களில் வேலை பார்த்தார். சில கதைகளே எழுதியுள்ள போதிலும், கையாளும் விஷயத்தின் ஆழமும், திட்டமான நடையும் அவற்றைக் குறிப்பிடத்தக்கவையாக ஆக்குகின்றன.

நூல்கள்: கரப்பான் பூச்சிகள் (கதைத் தொகுப்பு).

முகவரி: C/o இடச்சேரி கோவிந்தன் நாயர், போஸ்ட் பொன்னாணி, மலபார், கேரளா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *