கமலா சித்தி
என்னுடைய கமலா சித்திக்கு கல்யாணமானது அவளின் பதினெட்டாவது வயதில்.
கல்யாணமான பன்னிரெண்டாவது வருடத்தில் அவளின் கணவருக்கு நிமோனியா காய்ச்சல் வந்தது. சிகிச்சைகளால் பலன் இல்லாமல் அவர் இறந்துவிட்டார்.
கமலா சித்திக்கு ஒரு மகன், மூன்று மகள்கள். மகன் ராஜாராமன் மூத்தவன். சித்தியின் கணவர் இறந்து போனபோது பெரிய பணவசதி எதையும் அவளுக்கு விட்டுப் போகவில்லை.
சின்னதாக ஒரே ஒரு வீடும், கொஞ்சம் நிலமுமே இருந்தன. கடைசி ஏழெட்டு வருடங்களில் சித்தப்பாவின் வியாபாரம் சரியில்லாமலேயே இருந்ததால் வீட்டில் பணப் புழக்கம் சொல்லிக்கொள்கிற மாதிரி இல்லை. அதனால் கமலா சித்தியின் வாழ்க்கை கணவர் இறந்தபிறகு மிகவும் சிரம தசைக்கு உள்ளாகிவிட்டது.
வருமானம் எதுவும் இல்லாமல் இருக்கும் சொற்பப் பணத்தில் ஐந்து ஜீவன்கள் கால் வயிறோ அரை வயிறோ தினமும் சாப்பிட்டாக வேண்டும். எதைச் சாப்பிட்டாகளோ, எப்படிச் சாப்பிட்டார்களோ… அவர்களின் வாழ்க்கை பள்ளத்திலும் மேட்டிலும் விழுந்து எழுந்து ஓடிக் கொண்டிருந்தது.
சில வருடங்களில் சித்தியின் பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகி விட்டார்கள். மகள்கள் யாருக்கும் படிப்பு வரவில்லை. மகன் ராஜாராமன் மட்டும் படிப்பில் சூரப்புலியாக இருந்தான். கமலா சித்தி அவனை, இருந்த நிலத்தை எல்லாம் விற்று கஷ்டப்பட்டு டாக்டருக்கு படிக்க வைத்துவிட்டாள். சரியாக தன் இருபத்தி மூன்றாவது வயதில் ராஜாராமன் டாக்டராகிவிட்டான்.
அவன் அவனுடைய டாக்டர் படிப்பை முடிப்பதற்கு ஒரு வருடம் இருந்தபோது கமலா சித்தி அவளுடைய சிறிய வீட்டை விற்று மூத்த மகளின் கல்யாணத்தை படவேண்டிய எல்லாக் கஷ்டங்களையும் பட்டு நடத்திவிட்டாள். அடுத்த இரண்டு மகள்களும் தோளுக்கு மேல் வளர்ந்திருந்தார்கள். ஆனால் ஆயிரம் குட்டிகரணம் அடித்தாலும் அவர்களுக்கு கல்யாணத்தை நடத்திவைக்க கமலா சித்தியால் முடியாது. கையில் காலணா கிடையாது அவளிடம்.
டாக்டராகிவிட்ட ராஜாராமன் சம்பாரித்துக் கொடுப்பதை வைத்தே அடுத்த இரண்டு மகள்களுக்கும் சித்தியால் கல்யாணம் பண்ண முடியும். அதற்கு எவ்வளவு மாதங்களாகுமோ, அதற்கெல்லாம் அப்புறம்தான் ராஜாராமனுக்குப் பெண் பார்க்க முடியும். பிறகு கல்யாணத்தைப் பண்ண முடியும்.
எல்லாவற்றையும் எல்லைத் தெய்வமான முப்பிடாதிதான் பார்த்து நல்ல மாதிரியாக காப்பாற்ற வேண்டும் என்கிற கவலைதான் கமலா சித்திக்கு. அதற்காக ஊர் முப்பிடாதி அம்மன் கோயிலில் எத்தனை வேண்டுதல்கள் பண்ணி வைக்க முடியுமோ அத்தனை வேண்டுதல்களை சித்தி பண்ணியிருந்தாள். கடைசியில் அவளின் வேண்டுதல்கள் வீண் போகவில்லை.
கேரளாவில் இருக்கும் எர்ணாகுளத்தில் தேங்காய் எண்ணெய் வியாபாரத்தில் இருக்கும் நம்பர் ஒன்’ என்று சொல்கிற மாதிரி கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்தவர் வேணுகோபால். என் கமலா சித்தியின் சொந்த ஊரான திம்மராஜபுரம்தான் வேணுகோபாலுக்கும் சொந்த ஊர்.
படிப்பு வராமல் சின்ன வயதிலேயே பிழைப்புக்காக அவர் திம்மராஜ புரத்தில் இருந்து மலையாள தேசத்திற்குப் புறப்பட்டுப் போய்விட்டார். அவர் புறப்பட்டுப்போன நேரத்தில் அவருக்கு செவ்வாய் உச்சம் பெற்றிருந்தது. அதனால் வேணுகோபால் தொட்டதெல்லாமே துலங்கியது. கிடுகிடுவென ரப்பர் மரத்தில் ஏறுவது போல பொருளாதார வளர்ச்சியில் அவர் ரொம்ப வேகமாக உயரத்திற்குப் போய்விட்டார்.
கொஞ்ச நாள்தான், கேரளத்தின் தேங்காய் எண்ணெய் மார்க்கெட் வேணுகோபாலனின் பாக்கெட்டிற்கு வந்துவிட்டது. நதிகள் எல்லாவற்றையும் இணைக்க வேண்டும் என்று இன்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
வேணுகோபாலனின் தேங்காய் எண்ணெய் வியாபாரம் என்கிற நதி கேரளாவிலிருந்து கிளம்பி எத்தனையோ வருடங்களுக்கு முன்பே இந்தியா பூராவும் கிளை கிளையாய் பரவி அணைத்தபடி ஓடிக்கொண்டிருந்தது. அந்த நதி எல்லா மாநிலத்தையும் ஒரு சுற்று சுற்றிவிட்டு திரும்பிவந்து எர்ணாகுளத்தில் இருந்த வேணுகோபாலிடமே பண நதியாக உருமாறி வற்றாமல் பாய்ந்து கொண்டிருந்தது. பண வெள்ளத்தால் ஏற்பட்ட பொருளாதார ஏற்றம் மணிமுத்தாறு அணைக்கட்டின் நீர்மட்டம் போல ஒவ்வொரு நாளும் ஏறிக் கொண்டிருந்தது என்றே சொல்லலாம்.
அதே நேரம் பணச்செழிப்பில் வேணுகோபால் எவ்வளவுக்கு எவ்வளவு கேரளத்து தென்னை மரம்போல் உயரத்தில் நிமிர்ந்து நின்று கொண்டிருந்தாரோ அவ்வளவுக்கு அவ்வளவு தன்னடக்கம், தர்ம சிந்தனை போன்றவற்றிலும் உச்சாணிக் கொம்பில்தான் இருந்தார். அவரால் நல்ல நிலைமைக்கு கைதூக்கி விடப்பட்டவர்கள்தான் எண்ண முடியாத அளவிற்கு இருந்தார்களே தவிர, அவரால் குழி பறிக்கப்பட்டவர்கள் என ஒருத்தர் கூடக் கிடையாது.
அப்படிப்பட்ட வேணுகோபால் ஒரு நல்ல நாளாகப் பார்த்து, ஆவணி மாதத்தில் ஓணம் பண்டிகை எல்லாம் முடிந்தபிறகு எர்ணாகுளத்தில் இருந்து அவருடைய பெரிய படகு போன்ற கறுப்புநிற ‘ஆடி’ காரில் கிளம்பி திம்மராஜபுரத்திற்கு வந்து இறங்கினார். மலையாளத்து மழையில் நனைந்து நனைந்து அவருடைய ஆடி கார் கொஞ்சம்கூட அழுக்கு இல்லாமல் பளபளவென்று இருந்தது.
வேணுகோபால் திம்மராஜபுரத்திற்கு கிளம்பி வந்த நோக்கத்தைத் தெரிந்துகொண்டு விடலாம்.
வேணுகோபாலுக்கு ஐந்து மகள்கள்; மகன் கிடையாது. ஐந்து பெண்கள் இருந்தால் அரசனும் ஆண்டியாவான் என்பது எல்லாம் வேணுகோபாலிடம் செல்லுபடியாகாமல் போன கதை. ஐந்து பெண்ணைப் பெற்றும் அசராத அரசனுக்கு அரசனாக அவர் இருந்தார். இத்தனைக்கும் அவரின் ஐந்து மகள்களும் கடுகளவும் அழகு என்பதே இல்லாதவர்கள். இன்னும் சொல்லப்போனால் அசிங்கம் என்ற வார்த்தையின் அர்த்தம் என்று சொல்கிற மாதிரியான கறுப்பான பெண்கள் என்பது எர்ணாகுளத்தில் இருந்து திம்மராஜபுரம் வரை சின்னப் பிள்ளைகளுக்கும் தெரிந்த விஷயம்.
வருஷம் பூராவும் கருப்பட்டிப் பால் விட்டுப் பிசைந்து உளுந்து சுண்டல் சாப்பிட்டு சாப்பிட்டு வளர்ந்ததைப் போல கருப்பான திரேகக் கட்டு அவர்களுக்கு. ஆனால் நிஜத்தில் அவர்கள் எல்லோருமே வேளா வேளைக்குச் சாப்பிட்டது எல்லாம் ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவாவும், திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வாவும். இருட்டுக்கடை அல்வா மாதா மாதம் கிலோ கணக்கில் வேணுகோபால் பெயருக்கு தவறாது கொரியரில் வந்து இறங்கிவிடும். கூடவே வீட்டில் அடிக்கடி செய்யும் சக்கப்பிரதமன், அக்காரவடிசல். இதற்கு எல்லாம் மேல், தினசரி ராத்திரி படுக்கப் போவதற்குமுன் ஒரு முழு செவ்வாழைப் பழம். ஒரு டம்ளர் நிறைய சுடச்சுட பசும்பால் – இனிக்க இனிக்க சீனி நிறைய போட்டு. (தினசரி ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் அறுபது வயசானாலும் ஒருத்திக்குப் பிள்ளை பிறக்கும் என்பது மலையாள தேசத்து வைத்தியம்).
இப்படி விலை உயர்ந்த பண்டமாய் சாப்பிட்டும் வேணுகோபாலனின் மகள்கள் ‘கருப்படிச் சிப்பம்’ மாதிரி இருந்தார்கள் என்றால் – அது அவர்களுடைய துரதிர்ஷ்டமா, இல்லை அதிர்ஷ்டமா என்பதை அவர்கள்தான் சொல்ல வேண்டும்….