கனோ மித்ர





(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
மங்களலேதியா என்று ஒரு மராட்டிய ஊர். அநேக மகான்கள் பிறந்து மக்களை உன்மத்தமாக்கிய ஊர், அங்கே அவள் ஒரு தாசி மகள், பெயர் கனோபத்ரா, சிறுமிப் பருவம் தாண்டிக் குமரியாக வடிந்திருத்தாள். நீல விழிகள்; நிலாப் போல் மேனி, பருவத்தின் பக்குவங்கள் அத்தனையும் அவள் மேனி மீது. ஊரில் மட்டும் அழகியல்ல அவள். அந்தப் பிரதேசத்திலேயே அவள்தான் அழகுராணி என்று பெயர் எடுத்தாள்.

அவளைப் பார்ப்பதற்காகவே பலர் வந்தார்கள். தெருவில் காணமாட்டோமா என்று ஏங்கினார்கள். அவளைத் தூர நின்று பார்த்துத் தங்கள் வேட்கைகளைத் தணித்துக் கொண்டவர்கள் பலர்.
அந்த இளங்குமரி தன் அபார அழகை நன்கு உணர்ந்திருந்தாள். அந்த நினைவே அவ மேலும் நளினம் ஆக்கியது. நடந்தால் நாட்டியமாக நடந்தாள். விழித்தால் கடைக் கண்களால் விழித்தாள். பேசினால் சங்கீதமாகப் பேசினாள்.
இந்த இளம் பெண்ணை எந்த ஆடவன் அடையப் போகிறான் என்று எல்லோருக்கும் பொருமல் இருந்தது.
அந்தப் பாக்கியம் யாருக்குக் கிட்டும்?
ஊரிலும் சுற்று வட்டாரத்திலும் உள்ள செல்வந்தர்கள் போட்டி போட்டு முந்திக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் கனோபத்ராவின் மனம் உலக சுகங்களில் விழவில்லை. பொய்யும் பொருளும் புகழ் மாலைகளும் அவளைச் சுற்றிக் குவிந்திருக்கும்போது, அவற்றின் மீது அவளுக்கு நாட்டம் விழவில்லை. ஒரு வெறுப்பே ஏற்பட்டது.
“இவையெல்லாம் நிலையில்லை. கடவுளுக்குத்தானே நான் அடிமைப் பெண்! அவரையல்லவா நான் நினைக்க வேண்டும். அவர் அல்லவா என் சுகம்!” என்று எண்ணினாள்.
இந்த நிலையில் அவள் அழகின் பிரசித்தம் விதர்ப்ப தேசத்து அரச சபை வரை பரவி விட்டது.
வெறும் செவிக் கேள்வியிலேயே அரசருக்கு அவள் மீது அபார மோகம் ஏற்பட்டது.
அவளை எப்படியும் பிடித்து, தமது அந்தப்புரத்தில் அடைத்து விட வேண்டும் என்று நினைத்தார். தமது ஆசை நாயகிகளுக்குத் தலைமையான ஸ்தானத்தை அந்தப் பெண்ணுக்கு அளிக்க வேண்டும் என்று நினைத்தார்.
ஒரு பல்லக்கில் பொன், மணி, திரவியங்கள், வஸ்திரங்கள் எல்லாவற்றையும் வைத்துத் தகுந்த பரிவாரங்களுடன் மங்கள வேத்யாவுக்கு அனுப்பினார்.
ஊர் கொள்ளாத ராஜ பரிவாரம் கனோ பத்ராவின் வாசலில் வந்து நின்றது. உள்ளே ராஜ அதிகாரி தமது மன்னனின் விருப்பத்தைப் போய்த் தெரிவித்தார்.
“ஐயா: இந்தப் பொருளும் ஆடம்பரமும் எனக்கு வேண்டாம். என்னை விட்டுவிடுங்கள்” என்றாள் கனோபத்ரா,
ராஜ அதிகாரி பல வேண்டுகோள் விடுத்தார். நைச்சியமாக மிரட்டினார். ஆனால் பத்ரா இசையவில்லை.
ராஜ பரிவாரம் எல்லாம் வெறுங் கையுடன் திரும்பியது.
அப்போது பண்டரிப்பூரில் ஏகாதசி நாள் வந்தது. அது அந்தப் பிரதேசத்துக்கே பெரும் விழா.
கூட்டம் கூட்டமாக யாத்ரிகர்கள் பண்டரிபுரம் நோக்கிச் சென்றார்கள்.
போகும் வழியெல்லாம் விட்டலரின் நாமாவளிகளை இறைத்துச் சென்றார்கள்.
கிராமங்களும் நகரங்களும் பக்தி ஓசையில் உன்மத்தமாயின.
ஒவ்வொருவரும் கடவுளின் நினைவில் போதையானார்கள்.
யாத்ரிகர்கள் கூட்டம் ஒன்று மங்கள் வேத்யா தெருக்கள் வழியாக பஜனை பாடிக் கொண்டு சென்றது.
பத்ரா வெளியே ஓடிவந்து அவர்களைப் பார்த்தாள்.
“யாத்ரீகர்களே! எங்கே போகிறீர்கள்?” என்று கேட்டாள்
“தெரியாதா உனக்கு? பண்டரிபுரம்” என்றார்கள்.
‘”அங்கே எதற்கு?” என்றாள் பத்ரா.
“நல்ல கேள்வி கேட்டாய் பெண்ணே; விட்டலரின் பொற் பாதங்களைப் பார்க்கவே போகிறோம்” என்றார்கள் யாத்ரீகர்கள்.
“நானும் வரலாமா?” என்றாள் அவள்.
“ஆகா! இதற்கு என்ன தடை? அவசியம் வா! அவன் நாமாவைப் பாடு”.
“உங்கள் பாண்டுரங்கள் என்னை ஏற்றுக் கொள்வாரா?”
“நிச்சயம் செய்வார். ஏனெனில் எங்கள் பாண்டுரங்கன் தூய பக்திக்கு எப்போதும் தாகமாயிருப்பவர், அவர் தாகம் என்றும் தணிவதில்லை. ஆகவே நீயும் உன் பக்திப் பிரவாகத்தை அவரது தாகத்துக்கு ஈடாக அளிப்பாய்!”
“இருங்கள்! நான் ஏதாவது எடுத்து வருகிறேன்”.
“ஒன்றே ஒன்றை மட்டும் எடுத்து வா பெண்ணே! வழிக்கு அது போதும்”.
“என்னது?”
“பாண்டுரங்க நாமம்.”
பத்ராவின் மெய் சிலிர்த்தது. அவசரமாக உள்ளே போனாள். கண்ணீர் பெருகத் தாயாரிடம் வற்புறுத்தினாள்.
அவளையும் அழைத்துக் கொண்டு அந்த யாத்திரைக் கோஷ்டியில் கலந்து கொண்டாள்.
பண்டரிபுரம் போனதும் பத்ரா நீராக உருகினாள். பாண்டுரங்கனைப் பார்த்ததும் இனிமையான அதிர்ச்சி மேனியில் ஓடியது.
மயிர்க்கூச்செறிய அந்தக் கணமே அவள் பாட ஆரம்பித்தாள்.
இனிமையான பாடல்கள் அவை.
எளிதில் மனத்தின் பாறைகளை இளக வைக்கக் கூடியவை.
விட்டலரின் அருமையான பக்தையாக மாறினாள் பத்ரா.
சதா சர்வ காலமும் கோவில்தான் அவள் வாசம். விட்டலர்தான் அவள் நேயம்! உலகத்தை மறந்து பக்தி ரசத்தில் ஆனந்தமாக நீந்தினாள். பத்ராவின் பக்திப் பாடல்களும் அவள் அழகும் எங்கும் பரவிட விதர்ப்ப அரசருக்கும் செய்தி போயிற்று.
பத்ரா பண்டரிபுரத்தில் இருக்கிறாள் என்ற செய்தி! ஏற்கனவே ஒரு முறை ஏமாந்தவர் அவர். இப்போது மீண்டும் பழைய ஆசை கிளம்பியது. அவளை எப்படியும் அடைந்து விடவேண்டும் என்று எண்ணினார்.
பரிவாரங்களைப் பண்டரிபுரம் அனுப்பினார்.
ஒருநாள் அலைமோதிக் கொண்டு அவை பண்டரிபுரம் நகரில் துழைந்தன.
பத்ரா அதைக் கேள்விப்பட்டாள். பண்டர்நாதர் கோயிலுக்கு ஓடினாள்.
சேவகர்கள் அங்கே விரைந்து சென்று அவளை நிறுத்தினார்கள்.
“நீ உடளே எங்களுடன் வரவேண்டும். இது ராஜ கட்டளை!” என்றார் அதிகாரி.
பத்ரா திகைத்தாள்.
“வராவிட்டால்?” என்றாள்.
“உன்னைத் தூக்கி வரும்படி உத்தரவு, அதனால் மரியாதையுடன் எங்களுடன் வந்து விடவும்.”
தயங்கினாள் பத்ரா.
“இதோ இருங்கள்! பண்டரி நாதனிடம் விடை பெற்று வருகிறேன்” என்றாள்.
அதிகாரி சம்மதித்தார்,
பத்ரா கோவிலுக்குள் போய் சன்னதியில் நுழைந்தாள். விட்டலரின் பாதங்களைப் பற்றிக்கொண்டு மனம் உருகிப் பாட ஆரம்பித்தாள்.
”விட்டலரே! உன் பக்தைக்கு இந்தச சோதனையா? உன் நாமம்தான் என் உயிர். இவர்கள் என்னைக் கொண்டு போக வந்திருக்கிறார்கள். ஒரு சிங்கத்துக்கு அர்ப்பணிக்கப் பட்ட உணவை ஒரு ஓநாய் அடையலாமா? கூடாது.”
கண்ணீராக மல்கி, அகம் புறம் இரண்டையும் விட்டலரோடு ஐக்கியப்படுத்தி பக்திப் பெருவெளியில் பாய்ந்தாள் அவள்.
அவள் ஜீவன் அவளது உடலை விட்டு விட்டலருடன் ஒன்றாகக் கலந்தது.
வெளியே வெகுநேரம் காத்திருந்த அதிகாரி உள்ளே வந்து பார்த்தார்.
அவர் பார்த்தது பத்ராலின் ஜீவனற்ற உடலைத்தான்.
ஜீவன் போய்விட்டது.
ஆனால் அவள் முகத்தில் ஜீவகளை இருந்தது. ஓர் அமானுஷ்யப் புன்னகை அதில் மிக அழகாகப் பரவியிருந்தது.
அவளது உடலைக் கோவிலின் தெற்கு வாயில் பக்கம் புதைத்தார்கள்.
வெகு சீக்கிரம் அவளைப் புதைத்த இடத்தில் ஒரு விசித்திரமான மரம் வளர்ந்தது.
யாரும் அதுவரை பார்த்திராத விநோத மரம் என்று எல்லோரும் கூறினார்கள்.
அந்தப் புண்ணிய மரம் இன்னும் விட்டலரின் கோவில் வாயிலில் இருந்து வருகிறது.
இன்றும் பத்ரா பாடிச் சென்ற பாடல்கள் பக்தர்களின் நாவுகளில் உலாவி வருகிறது.
– பக்தவிஜயக்கதைகள், மங்கையர் மலர், மார்ச் 1981.