
லறீனா, அப்துல் ஹக் (1976.05.22) மாத்தளையில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை கலகெதர எம்.எம்.அப்துல் ஹக் (இசையமைப்பாளர்).இவர் கீதா, சுஜீவா, சுனேத்ரா, ஒபய்மமய், சூகிரிகெல்ல) ஆகிய சிங்களத் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்; தாய் பௌசுல் ஹினாயா (எழுத்தாளர் மாத்தளை பர்வீன்). லறீனா அப்துல் ஹக் இரண்டு குழந்தைகளின் தாயாராவார். இவர் மாத்தளை ஆமினா மகளிர் கல்லூரியில் பாலர் வகுப்பு முதல் உயர்தரம் வரை கல்வி கற்றார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைமாணி தமிழ் (சிறப்பு) பட்டத்தையும், முதுதத்துவமானி பட்டத்தையும் பெற்றுள்ளார். மும்மொழித்துறைகளும் இணைந்து நெறிப்படுத்திய மொழிபெயர்ப்புக் கற்கைகளில் சுமார் நான்கு வருடங்கள் விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார். தற்பொழுது விரிவுரையளராக மொழிகள் துறை சமூகவிஞ்ஞான மற்றும் மொழிகள் பீடம் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் கடமையாற்றுகிறார். இவர் ஒரு சிறந்த மும்மொழி மொழிபெயர்ப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தமிழ் வினாப்பத்திரத்தில் எழுதிய கதையை தனது முதலாவது கதையெனத் தெரிவிக்கும் எழுத்தாளர் லறீனா, தனது 12ஆவது வயதில் எழுதிய “ஓ!பஸ்ஸே” என்னும் கவிதை வீரகேசரியில் பத்திரிகையில் பிரசுரமான முதல் கவிதையெனவும் தெரிவிக்கிறார். தமிழ், சிங்கள, ஆங்கில மொழித்தினப் போட்டிகள், மீலாத் விழாப் போட்டிகள் என்பன தனது கலை மற்றும் எழுத்தாற்றல் வளரக் காரணமாக இருந்ததெனத் தெரிவிக்கிறார் எழுத்தாளர் லறீனா. பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தினால் வெளியிடப்படும் மும்மொழி செய்திமடலான பிரவாகினியின் சிங்களச் செய்தி மடலுக்கு ஆசிரியராக 2016ஆம் ஆண்டு பணியாற்றியுள்ளார். மேலும். பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தினால் வெளியிடப்படும் பால்நிலைக் கற்கை நெறிச் சஞ்சிகையின் இதழாசிரியர் குழு அங்கத்தவராகவும் இருந்துள்ளார்.
விருதுகள் பொருள்வெளி நூல் 2012ஆம் ஆண்டு – தேசிய கலை இலக்கியப் பேரவையால் பரிசுக்குரிய ஆய்வு நூலாகத் தெரிவு செய்யப்பட்டது.
தஜ்ஜாலின் சொர்க்கம் சிறுகதைத் தொகுதிக்கான (கையெழுத்துப் பிரதிப் போட்டியில்) 2015ஆம் ஆண்டு சிறந்த சிறுகதைத் தொகுதிக்கான கொடகே விருது.
படைப்புகள்
- எருமை மாடும் துளசிச் செடியும்
- வீசுக புயலே! (கவிதைத் தொகுதி)
- தமிழ்மொழியும் இலக்கியமும்: சில சிந்தனைகள் (ஆய்வுக் கட்டுரைத் தொகுதி)
- ஒரு தீப்பிழம்பும் சில அரும்புகளும் (நாவல்)
- செ. கணேசலிங்கனின் அண்மைக்கால நாவல்களில் பெண் பாத்திரங்கள்: ஒரு பெண்ணிலை நோக்கு (ஆய்வுநூல்)
- மௌனத்தின் ஓசைகள் (மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுதி)
- வார்த்தைகளின் வலி தெரியாமல் … (சமூகவியல் கட்டுரைகள்)
- பொருள் வெளி (ஆய்வுக் கட்டுரைத் தொகுதி)
- நீட்சிபெறும் சொற்கள் (கட்டுரைத் தொகுதி)
- சுயமி (மெல்லிசைப் பாடல்கள் இறுவட்டு)
என்னுரை – எருமை மாடும் துளசிச் செடியும், மார்ச் 2003
“எருமை மாடும் துளசிச் செடியும்” எனும் இச்சிறுகதைத் தொகுதி வெளி வருவதன் மூலம் எனது நீண்டநாள் கனவொன்று நனவாகியுள்ளது; புகழ னைத்தும் இறைவனுக்கே!
சிறுவயதில், என்தாயார், மாத்தளை பர்வீனின் தொடர் கதைகள் பத்திரிகைகளில் பிரசுரமாவதையும் அவற்றை அவர் மிகக் கவனமாகச் சேகரித்து வைப்பதையும் கண்டபோதெல்லாம், ‘நானும் இப்படி நிறைய எழுத வேண்டும் அவை பத்திரிகைகளில் பிரசுரமாக வேண்டும்’ என்ற ஆர்வம் எழுந்தது. எனினும், எனது ஆரம்ப காலப் படைப்புகள் பாடசாலைப் போட்டி நிகழ்ச்சிகள், தமிழ் மொழித்தினப் போட்டி நிகழ்ச்சிகள் என்ற அளவில் மட்டுப் படுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் 15-01-1993 தேன்துளி எனும் சஞ்சிகையில் எனது முதலாவது சிறுகதையான “மீராக்கள்” பிரசுரமானது. அதன்பின் பல சிறுகதைகள், கவிதைகள், தொடர்கதைகள் என என் இலக்கியப் பயணம் தொடர்கிறது.
முதலில் பொழுதுபோக்கு என்ற வகையில் எழுத ஆரம்பித்தாலும், எழுத்தாளர் ஒருவரின் பேனைக்கு இருக்க வேண்டிய சமூகநோக்கு பற்றிய உணர்வையூட்டி, ஏதேனும் ஒரு செய்தியைச் சமூகத்துக்கு விடுப்பதாக என் ஆக்கங்கள் அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தியவர், சகோதரி ஜென்னத் நிஸாம் அவர்களே! பிரசுரமாகும் ஆக்கங்களின் பத்திரிகைப் பிரதியைக் கொண்டு வந்து தருவதோடு, அவை பற்றி முதன்முதலாக விமர்சிப்பவர், என் மாமா மாத்தளை கமால் ஆவார்.
சுமார் பன்னிரண்டு வயதிலிருந்து எழுதியுள்ள சிறுகதை- களுள் பதினைந்தைத் தேர்ந்தெடுத்து இத்தொகுதியில் உள்ளடக்கியுள்ளேன். அவற்றுள் “புள்ளிகள்” சிறுகதையைத் தவிர ஏனையவை மித்திரன், ஜனனி, அல்-ஹஸனாத், இளங்கதிர், அல்-இன்ஷிராஹ், பெண்ணின் குரல், கலைத் தாரகை போன்ற வார, மாத இதழ்களிலும், வருடாந்த சஞ்சிகை- களிலும் பிரசுரமானவையே. எனக்குக் களந்தந்த அவற்றுக்கு, நான் என்றும் கடப்பாடுடையேன்.
அவ்வாறே, என்னுள் உறைந்திருந்த ஆற்றல்களை இனங் கண்டு, அவற்றை வளர்த்தெடுப்பதற்குத் தூண்டுதலளித்த மா/ஆமினா மகளிர் கல்லூரி அதிபரையும், ஆசிரியர்களையும் என் நண்பர்களையும் நன்றியோடு நினைவு கூர்கின்றேன்.
மேலும், இதுவரை காலமும் பிரசுரமாகியுள்ள சிறுகதை- களுள் ஒரு பகுதியையேனும் தொகுதியாக வெளியிட வேண்டு- மென்று அடிக்கடி என்னை ஊக்குவித்த என் மதிப்பிற்குரிய ஆசான் கலாநிதி துரை மனோகரன் அவர்களுக்கும், என்னைச் சந்தித்த போதெல்லாம் அதே விடயத்தில் எனக்கு ஆர்வமூட்டிய பண்ணாமத்துக் கவிராயர் மற்றும் சகோதரர் உக்குவளை அக்ரம் ஆகியோருக்கும் என் விசேட நன்றிகள் உரித்தாகட்டும்.
இலங்கையைப் பொறுத்தவரை ஆக்க இலக்கியம் படைப்பவர்கள் நிறையப்பேர் இருந்தபோதிலும், அவர்தம் படைப்புகளை அச்சில் வெளியிடுவது குதிரைக் கொம்பாக இருந்து வருகிறது. இந்நிலையில், பலரது ஆக்கங்களை நூலாக வெளியிட்டு வைப்பதில் கல்ஹின்னைத் தமிழ் மன்றத்துக்கு நீண்டதொரு பாரம்பரியமுண்டு. அந்தவகையில், என் கன்னி முயற்சியான இத்தொகுதியை வெளியிட்டுத் தர முன்வந்ததோடு, பதிப்புரையொன்றையும் வழங்கி உதவிய அல்ஹாஜ் எஸ்.எம். ஹனிபா அவர்களும், பல்வேறு பணிகளுக்கிடையிலும் நேரமொதுக்கி இந்நூலுக்கு முன்னுரை யொன்றை எழுதித்தந்த என் பேரன்புக்குரிய ஆசான் பேராசிரியர் கலாநிதிட க.அருணாசலம் அவர்களும், என் வேண்டுகோளை ஏற்று வாழ்த்துரையொன்றை மனமுவந்து எழுதித்தந்த என் பெருமதிப்புக்குரிய ஆசானும் தமிழ்த்துறையின் தலைவருமாகிய பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் அவர்களும் என்றென்றும் என் நன்றிக்கு உரியவர்கள்.
இறுதியாக என் சகல செயற்பாடுகளிலும் உறுதுணை- யாய் நின்று பாடுபடும் அன்புக்குரிய தம்பி ஏ.எச்.ஸியா-உல்-ஹக் மற்றும் காத்திரமான பல ஆலோசனைகள் தந்த நண்பன் ச. ஜெகநாதன் ஆகியோருக்கும் இந்நூலை அச்சிடுவதில் முன்னின்று உதவிய திரு. க. குமரன் அவர்களுக்கும் குமரன் பதிப்பக ஊழியர்களுக்கும் என் அன்பும் நன்றியும்.
எனது இம்முதன் முயற்சியிலே குறைகள் இருக்கக்கூடும் எனவே,
“குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்ககொளல்” வேண்டும்.
என வேண்டி விடைபெறுகிறேன்.
லறீனா. ஏ. ஹக்
உதவி விரிவுரையாளர்,
தமிழ்த் துறை,
பேராதனைப் பல்கலைக் கழகம்,
பேராதனை.
10-03-2003