நடராஜன் கல்பட்டு

 

என்னைப் பற்றி சில (பல?) வரிகள்:

எழுதும்படியாக ஒன்றுமே இல்லை. இருப்பினும் எழுதுகிறேன்.

பிறந்தது சிதம்பரத்தில், 1929 ஜூன் 15 அன்று. தந்தை தென் இந்திய ரயில்வேயில் அதிகாரியாக இருந்தார். நான்கு அண்ணன்கள். நால்வரும் இன்று இல்லை. மூன்று தங்கைகளில் இருவர் இன்று இல்லை.

பெற்றோர்கள் நரசிம்மன், ராஜலக்ஷ்மி – படம் கீழே

சாந்த ஸ்வ்ரூபிகள். சுற்றத்தாரையும் அரவணைத்துக் கொண்டு, குழந்தைகளையும் வளர்த்து முன்னுக்குக் கொண்டுவர தனக்கென ஒரு சுகமும் வாழ்க்கையில் அனுபவிக்காமல் பாடுபட்ட தியாகிகள்.

படித்தது ரயில்வே எலிமெண்டரி ஸ்கூல், ஈ.ஆர். ஹைஸ்கூல் மற்றும் செயின்ட் ஜோஸப்ஸ் காலேஜ் இவற்றில் படித்தது முடித்தது பி.எஸ்.ஸி. ரஸாயனம். பிடித்தது சயனம். என்றுமே தீராத ஆசை எஞ்சினியரிங் படிக்கவேண்டும் என்பது. முடியாமல் போனதன் காரணம் கணிதம் படிக்காதது.

மனைவி சாந்தா. பெயருக்கேற்ற சாந்த குணம். அவள் பிறந்த தேதி ஜூன் 2, 1939. மணமான தினம் ஜூன் 8, 1961. எங்கள் படம் கீழே.

தொழில்: கான்பூரில் ஐந்து வருடம் டிஃபென்ஸ் ரிசர்ச் லேபரெடரியில் (DRDL) பெட்ரோலியப் பிரிவில். பின்னர் பர்மா ஷெல்/ பாரத் பெட்ரோலியத்தில் 31 வருடம், பல ஊர்களில், பல பதவிகளில்.

ரசித்து அனுபவித்து வாழ்ந்த நாட்களில் என்றும் மனதில் பசுமையாய் இருப்பது, பொன்மலை வாசம், கான்பூர் வாசம், பர்மா ஷெல் / பாரத் பெட்ரோலியம் இவற்றில் எண்ணை / எரி வாயு உபயோகிக்கும் தொழில் நிறுவனங்களில் சில சமயங்களில் ஏற்படும் சிக்கல்களின் காரணங்களை ஆராய்ந்து சிக்கல்களை நீக்கிய சமயங்கள், 1964 முதல் 1974 வரை இயற்கையின் எழிலை படம் பிடிக்க காட்டிலும் மேட்டிலும் சுற்றித் திரிந்த நாட்கள், திருச்சியில் வனவிலங்குப் பாதுகாபு சங்கம் துவக்கி அதற்காக உழைத்த நாட்கள் இவை.

படைப்புகள்: இலக்கியத்தில் பூஜ்யம். ஆத்ம விசாரத்தில் பூஜ்யம். மனித இயல்பில் மூன்று. மூன்றுமே பெண்கள்.

முதல் பெண் பங்களூரில். அடுத்தவள் அமெரிக்கா, பீனிக்ஸ், அரிசோனாவில். மூன்றாமவள் வசிப்பது மெல்போர்ன், ஆஸ்திரேலியாவில். மூவருமே மென்பொருள் விற்பன்னர்கள்.

பேரன்கள் நான்கு. பேத்தி ஒருத்தி.

பொழுது போக்கு: ஒரு காலத்தில் புழு, பூச்சி, பறவைகள், விலங்குகள் இவற்றைத் தேடிச் சென்று புகைப் படம் பிடித்தல். இப்போது: இயற்கையில் நான் கண்ட இறைவனின் காட்சிகளை பிறருடன் எழுத்து மூலம் பகிர்ந்து கொள்வது. நகைச்சுவை என்று நினைப்பவற்றைப் பற்றி எழுத முயல்வது.

மொத்தத்தில் நான் அறிஞர்கள் நிறைந்த குழுவிலே சர்கஸ்ஸில் தோன்றும் கோமாளியின் உதவியாளன்.

– நடராஜன் கல்பட் (17 நவம்பர் 2016 அன்று அனுப்பியது).