பொள்ளாச்சியில் பிறந்து இன்ஜினீரிங் பட்டம் பெற்று தற்போது அமெரிக்காவில் வடக்கு கரோலினாவில் ஒரு வங்கியில் வேலை செய்து வருகிறார். எழுத ஆரம்பித்தது கோவிட் சமயத்தில் ஒரு வாரம் வீட்டில் முடங்கிக் கிடந்த போது. முதலில் எழுதியது ஆங்கிலத்தில் தான். அமெரிக்காவில் குடியேறி இருபத்தைந்து வருடங்கள் எந்த தமிழ் வாசனையும் இல்லாத ஒருவரால் தமிழில் எப்படி எழுத முடியம்? சிறுகதைகள்.காம் தளத்தைப் பற்றி அறிந்த போது இவருக்கும் தமிழில் எழுத வேண்டும் என்ற ஆசை வந்தது. அப்போது இவருக்கு கை கொடுத்தது Google Translate. இவர் எழுதிய கதைகளை Google உதவியுடன் தமிழில் மொழி பெயர்க்க ஆரம்பித்தார். மொத்தக் கதையையும் தமிழில் எழுவதை விட, Google Translate செய்யும் தவறுகளை திருத்துவது சுலபமாக இருந்தது.
இவருடைய ஸ்பெஷாலிட்டி Flash Fiction என்று அறியப்படும் 500 – 800 சொற்களுக்குள் அடங்கும் மிகச் சிறிய கதைகளை எழுதுவது. அவைகளை இவர் பஸ் ஸ்டாப்புக் கதைகள் என்று அழைக்கிறார் – அதாவது டவுன் பஸ் ஒரு ஸ்டாப்பிலிருந்து இன்னொரு ஸ்டாப் போவதற்குள் படித்து முடித்து விடக் கூடிய கதைகள். சடக்கென்று திடீர் திருப்பத்துடன் முடிந்து வாசகர்களை ‘அட, இதை நாம் எதிர்பார்க்கவில்லையே!” என்று ஒரு விநோதமான மகிழ்ச்சியுடன் வியக்க வைக்கும் கதைகள். சம்பிரயமான குடும்பம், சமூக நீதி வகைகளிலிருந்து விலகி அறிவியலை புகுத்தி கொஞ்சம் புதுமையாக எழுத முயற்சிக்கிறார். இவர் எழுதிய 250ம் மேற்பட்ட கதைகளில் ரோபோக்களும், தானியங்கி கார்களும், ஏலியன்களும், காலப் பயணம் செய்பவர்களும் அடிக்கடி வந்து போகிறார்கள். சில சமயம் கடவுள் கூட எட்டிப் பார்க்கிறார்!
பெரும் காவியம் படைக்க வேண்டும் என்றெல்லாம் எந்த விதமான இலக்கிய நோக்கமும் இவருக்கில்லை. இவருடைய நோக்கமெல்லாம் வாசகர்களை திருப்திப் படுத்துவது. கூடவே கொஞ்சம் யோசிக்க வைப்பது.
ஆங்கிலக் கதைகள்: https://medium.com/@nanjierode
Email: nanji200@gmail.com