சேலை சகதேவ முதலியார் (1874 – ஜூலை 28, 1953) தமிழ்ப் பாடநூல்களை எழுதிய முன்னோடிகளில் ஒருவராக அறியப்படுகிறார்.
திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் பதிப்பாசிரியராகவும், செந்தமிழ்ச்செல்வி இதழின் ஆசிரியராகவும் இருந்த மணி திருநாவுக்கரசு கோரியதற்கு இணங்க பள்ளி மாணவர்களுக்கு எளிதாக புரியும் வண்ணம் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் வெளியீடுகளான கழகத் தமிழ்ப்பாட வரிசையில் ஆறு நூல்களை சேலை சகதேவ முதலியார் செம்மை படுத்திக் கொடுத்தார். அந்நிறுவனம் வெளியிட்ட கழகத் தமிழ் கையகராதியிலும் பணியாற்றினார்.
எழுதிய நூல்கள்
நல்லொழுக்கப்பாடம்
வாஸ்கோடகாமா
பேசாதவர் பேச்சு
மார்க்கண்டேயர்
நந்தனார்
துருவ பிரகலாதர்
தொகுத்த நூல்கள்
கழகத் தமிழ் கையகராதி
தமிழ்ப்பாடத்திரட்டு 1,2
சேலை சகதேவ முதலியார் 28 ஜூலை 1953 அன்று முதுமையின் காரணமாக, உடல் நலங்குன்றி தமது 73-ஆவது வயதில் மறைந்தார்.
முன்னுரை – நல்லொழுக்கப் பாடம் – ஏப்ரல் 1951
அடியேனுக்கு இப்போது அகவை எழுபத்தேழு ஆகின்றது. ஐம்பது ஆண்டுகட்குமுன் யான் உவெஸ்லி கலாசாலையில் கல்வி பயின்று வந்தபோது உடன் மாணாக் கர் ஒருவர் ‘நன்னெறி வகுப்புப் புத்தகம்’ என்னும் ஒரு நூலினை எனக்குக் காண்பித்தனர். அதனை யான் ஒரு முறை படித்துப் பார்த்து அதனிற்கண்ட கருத்துக்களுக் கிணங்க, ‘இங்கு நம்முடைய கடமைகள்’ என்னும் தலைப் பெயர் கொண்ட ஒரு சொற்பொழிவு எழுதி அக்கலாசாலை யின் கல்விக் கழகத்திற் படித்தேன். அஃது அம்மாணவர் களின் மனமுவந்த மதிப்புக்குரியதாயிற்று. அது முதல் அந்நூற் பொருள்களை நந்தந் தமிழ்மொழியில் எழுதி வெளிப்படுத்த வேண்டுமென்கிற ஓரவா எனது மனத்தின் கண் குடிகொண்டிருந்ததே யொழிய, அவ்வெண்ணம் இது வரை நிறைவேறாமலே இருந்துவிட்டது.
சென்ற ஆண்டு அடியேன் கெழுதகை நண்பர், கழகத் தலைவர் திருவாளர் வ. சுப்பையா பிள்ளை அவர்கள் அப் பழைய நூற்படி யொன்றை என் கையில் கொடுத்தனர். அதனைக் கண்ணுற்றபோதே அடியேனுக்குண்டான அகமகிழ்ச்சிக் கோரளவில்லை. உடனே யான் அவ ருக்கு எனது பழைமையான மனக்கருத்தினை வெளியிட்டேன். அப்போது அவர் பழம் நழுவிப் பாலில் விழுந்தது போன்று அதற்கு உடனே இணங்கி விட்டனர்.
மக்களுலகின்கண் இந் நாட்களில் ஒழுக்கநிலை யென் பது பெரும்பான்மையாக இழுக்கமடைந்திருப்பது யாவ ராலும் எதிர்மறுக்கப்படமாட்டாததொன்று. ‘நெஞ்சத்து நல்லம்யா மென்னு நடுவுநிலைமையாற் கல்வியழகே யழகு என நமது நாலடியார் நாட்டுகின்றது. ஆகையின் செம்மைக் கல்வியே ஒருவனுடைய ஒழுக்கம் நல்லதென்றும் தீயதென்றும் தனது மனத்துக்கே தெரிவிக்கும். உலகத் திற் கல்வியோ நிறைந்திருக்கின்றது; அக் கல்வி நிறைய நிறைய ஒழுக்கமோ குறைபாடடைந்து வருகின்றது. கல்வி யறிவின் பயன் ஒழுக்கத்தில் விழுப்பமடைவதே என்று இம்முதல் நூலாசிரியராகிய ஆங்கிலேயரே குறிப்பிட் டிருக்கின்றார்.
உலகின்கண் மக்கள் பற்பல துறைகளிற் புகுந்து பாடு பட்டுழைத்து வருகின்றனர். அத்துறைகளிலெல்லாம் பொதுவாக மக்கள் உடலுக்கும் உயிருக்கும் உயர்வு தரு வது நல்லொழுக்க நிலையே என்பது திண்ணம். இந்நூலிற் கண்ட ஒழுக்கப் பாடங்களை ஒருமுறை கருத்துடன் காண் பவர்கள் அப் பல்வேறுபட்ட துறைகளிற் கைக்கொள்ள வேண்டிய ஒழுக்கமுறைகளைச் செவ்வனே அறிவர் என்பது மிகையாகாது. கண்ணொளியும் உடல் வலியும் சுருங்கி எண்பது நெருங்கும் இவ்வகவையில் இந்நூலை எழுதி முடிக்க எனக்கு வேண்டிய உதவிகளெல்லாம் புரிந்து, இத் தமிழ் நாட்டு மக்களுக்குப் பேருதவியாகச் செய்ய அடியேனை இப்பணியில் ஊக்கி வைத்த சைவசிந்தாந்த நூற்பதிப்புக் கழகத் தலைவருக்கு அடியேனுடைய நன்றி வழி வழி உரித்தாகும்.
இந்நூலைத் தமது மக்களைப் படிக்கச்செய்து நல்வழி யில் நடக்கவைக்கும் பெற்றோருக்கும், அவ்வாறே தமது மாணாக்கர்களை உயர்வடையச் செய்யும் ஆசிரியப் பெருமக் களுக்கும் எனது நன்றி என்றும் உரியதாகும். மேலும் பொதுவாக நந்தம் தமிழுலகு ஒவ்வொருவரையும் இந் நூலைப் படித்துப் பயனடையச் செய்வதே அடியேனுக்குத் தரும் சிறந்த ஊதியமாகும்.
சேலை சகதேவன்.
24-04-51
பதிப்புரை
உலகமும் உயிர்களும் மக்களும் இணக்கத்துடன், நலம்பெற்று இன்பமாக வாழவேண்டும். இது, தடை யின்றி எல்லாராலும் எக்காலத்தும் ஏற்றுக்கொள்ளக் கூடியஒன்று. ஆனால், இதற்கு அடிப்படையாக வேண்டத்தக்கது ‘உயிரினும் சிறந்த ஒழுக்கமே’யாம். அவ்வொழுக்கம் குடும்பவாழ்வில், கல்லூரிகளில், பணித் துறையில், பொதுவாழ்வில், ஆட்சிமுறையில் தலை சிறந்து கைக்கொள்ளப்படல் வேண்டும்.
அப்பொழுதுதான் நாடும், மொழியும், நன்னெறியும் கேடின்றி நலம்பெற்று வாழும். பிறரும் நன்குமதிப்பர். அத்தகைய நல்லொழுக்கத்தை மாணவர்கட்கு இளமையிலேயே எளிதாக இனிதாகப் போதித்தல் வேண்டும். அப்போதனை அவர்கள் வாழ்நாளெல்லாம் துணை நின்று அவர்களை மேன்மேலுயர்த்தி வாழச்செய்யும்.
அந்தமுறையில் இந் ‘நல்லொழுக்கப் பாடம்’ முப்பது பெருந்தலைப்புக்களும், நூற்றுக்கு மேற்பட்ட உள் தலைப்புக்களும் கொண்டு மிளிர்கின்றது. ஒவ்வொரு உள் தலைப்புக்கும் தக்க மெய்வரலாறுகள் காணப்படுகின்றன. அவ்வரலாறுகள் உலகத்தின் எல்லாப்பாகங் களிலும் உள்ளவை. தக்க அகச்சான்றுகள் பொருந் தியவை. ஒவ்வொரு தலைப்பின் கீழும் பலநாட்டு பெரியார்களின் அறிவறவுரைகள் தரப்பட்டுள்ளன.
எங்கள் விருப்பத்திற்கு இணங்கச் செம்மையாகவும் எளிமை இனிமை ஒழுகிசைகள் பெரிதும் பொதுளவும் ஆக்கியமைத்துத் தந்த இதன் ஆசிரியர் திரு. சகதேவ முதலியாரவர்களுக்குக் கழகத்தார் நன்றி உரித்தாகுக. மாணவர்களும் ஆசிரியர்களும் பிறரும் இந்நூலை வாங்கி யும் வாங்குவித்தும் நலன் எய்துவார்களாக.
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.
– நல்லொழுக்கப் பாடம், முதற் பதிப்பு: ஏப்ரல் 1951, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிட், திருநெல்வேலி.