சு. சமுத்திரம், திருநெல்வேலி மாவட்டம், திப்பனம்பட்டியில் 1941-ம் ஆண்டு பிறந்தார். இள வயதிலேயே தந்தையை இழந்தார். கடையத்தில் ஆரம்பக்கல்வியை முடித்து பாளையங்கோட்டையில் கல்லூரிப் படிப்பை முடித்தார்.
சு. சமுத்திரம் செங்கல்பட்டு அருகிலுள்ள காட்டுக்கரணை என்ற கிராமத்தில் ஆரம்பப் பள்ளி ஆசிரியராக அலுவலக வாழ்க்கையைத் தொடங்கினார். தமிழக அரசில் கூட்டுறவுத் துறை ஆய்வாளர், ஊராட்சி வளர்ச்சி அதிகாரி ஆகிய பதவிகளை ஏற்றுப் பணியாற்றினார். ஸ்ரீபெரும்புதூரில் பணியாற்றுகையில் அதிகாரிகளுடன் முரண்பாடு ஏற்படவே பணியைத் துறந்து மத்திய அரசின் அகில இந்திய வானொலியின் தமிழ் சேவைப் பிரிவில் பணியில் சேர்ந்தார். பின் மத்திய அரசின் செய்தி- விளம்பரத் துறையில் பணிபுரிந்தார்.சென்னை தொலைக்காட்சியில் செய்தி ஆசிரியர், வானொலியில் செய்தி ஆசிரியர், களவிளம்பரத் துறை இணை இயக்குநர் அகிய பதவிகளில் இருந்தார்.
சு. சமுத்திரம் கே.சி.எஸ். அருணாசலம் கே.முத்தையா சிகரம் செந்தில்நாதன் ஆகியோரின் தொடர்பால் இடதுசாரிச் சிந்தனைகளால் கவரப்பட்டார்.
1973-ல் தில்லியில் இருந்த போது அவரது அங்கே கல்யாணம், இங்கே கலாட்டா’, ‘கலெக்டர் வருகிறார்’ ஆகிய இரு கதைகளும் ‘கடல்மணி’ என்ற பேரில் குமுதம் , ஆனந்த விகடன் இதழ்களி வெளிவந்தன. தன் அரசுப்பணி அனுபவங்களை கருவாக்கி ‘சத்திய ஆவேசம்’ என்ற முதல் நாவலை எழுதினார். அது செம்மலர் இதழில் தொடராக வெளி வந்ததுது. இவரது ‘வாடாமல்லி’ நாவல் திருநங்கையரின் வாழ்வைப் பற்றிப் பேசிய முதல் தமிழ் நாவல்.
கிறிஸ்தவ இலக்கிய சங்கத்தின் கருத்தரங்குகளில் அவரது ‘ஊருக்குள் புரட்சி’, ‘சோத்துப் பட்டாளம்’ ஆகிய நாவல்கள் வெளியிடப்பட்டன. சு.சமுத்திரம் , லியோ டால்ஸ்டாயின் வாழ்க்கை வரலாற்றை நாடகமாக எழுதி மேடை ஏற்றினார்.
சு. சமுத்திரம், 14 புதினங்கள், 4 குறுநாவல்கள், 2 கட்டுரைத் தொகுப்புகள், ஒரு நாடகம், 300-க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். அவரது சிறுகதைகள் 22 தொகுப்புகளாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளன அவரது பல படைப்புகள் தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. 1990-ல் சு. சமுத்திரம் எழுதிய ‘நாவலுக்கு 1990-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது.
சு. சமுத்திரம் ஏப்ரல் 3, 2003-ல்சென்னையில் ஒருசாலை விபத்தில் உயிரிழந்தார்.
விருதுகள்
சாகித்திய அகாதமி விருது -1990. (வேரில் பழுத்த பலா)
தமிழ் அன்னை பரிசு – தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகம்
இலக்கியச் சிந்தனை – சிறுகதைப் பரிசு.
கலைஞர் விருது – முரசொலி அறக்கட்டளை (மறைவுக்குப்பின்)
தமிழக அரசால் 2008-ல் சு. சமுத்திரம் எழுதிய கீழ்காணும் நூல்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டன.
ஆகாயமும் பூமியுமாய்….
இல்லந்தோறும் இதயங்கள்
இன்னொரு உரிமை
ஈச்சம்பாய்
ஊருக்குள் ஒரு புரட்சி
என் பார்வையில் கலைஞர்
எனது கதைகளின் கதைகள்
ஒத்தைவீடு
ஒரு கோட்டுக்கு வெளியே
ஒரு சத்தியத்தின் அழுகை
ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்
கடித உறவுகள்
காகித உறவு
குற்றம் பார்க்கில்
சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்
சத்திய ஆவேசம்
சமுத்திரக் கதைகள்
சமுத்திரம் கட்டுரைகள்
சாமியாடிகள்
சிக்கிமுக்கிக் கற்கள்
சோற்றுப்பட்டாளம்
தாய்மைக்கு வறட்சி இல்லை
தராசு
தலைப்பாகை
தாழம்பூநிழல் முகங்கள்
நெருப்பு தடயங்கள்
பாலைப்புறா
புதிய திரிபுரங்கள்
பூ நாகம்
மண்சுமை
மூட்டம்
லியோ டால்ஸ்டாய் (நாடகம்)
வளர்ப்பு மகள்
வாடாமல்லி
வெளிச்சத்தை நோக்கி
வேரில் பழுத்த பலா
என்னுரை – தலைப்பாகை (சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர், 2001, திருவரசு புத்தக நிலையம், சென்னை
இந்தத் தொகுப்பு உள்ளடக்கிய 16 சிறுகதைகளில், தலைப்புக் கதையான தலைப்பாகை தவிர்த்து அனைத்துமே பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டவை. அதுவும், எழுதப்பட்ட காலத்திற்கு முன்னால், பத்தாண்டு காலத்திற்குள் நடைபெற்ற நிகழ்வுகளை, அனுபவங்களை மையமாகக் கொண்டவை. இந்த வகையில் இந்தத் தொகுப்பு, கடந்த கால மக்கள் வரலாற்றின் இலக்கிய பதிவாகும். தலைப்பாகை, நவீன சிறுகதை என்றாலும், அதுவும் பத்தென்பதாம் நூற்றாண்டில் அப்போதைய திருவாங்கூர் சமஸ்தானத்தில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் அவல வாழ்க்கையை பதிவு செய்கிறது.
இந்த வகையில்தான் எனது அத்தனை சிறுகதைகளும், தமிழ் சமூகத்தின் அனைத்து பிரிவுகளின் இலக்கிய ஆவணங்களாக பதிவு செய்யப்பட்டிருப்பதாக கருதுகிறேன். இந்தத் தொகுப்பிற்கு ஒரு சிறப்பு… பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட கதைகள், இப்போதுதான் நூல் வடிவத்தில் அச்சேருகின்றன. ஏற்கனவே வெளியாகி உள்ள எனது இருபது சிறுகதைத் தொகுப்புகள், 1945-ஆம் ஆண்டில் இருந்து இன்றைய காலக்கட்டம் வரையான, சமூக-அரசியல்-பொருளாதார பதிவுகள்தான். இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகள், முன்னர் வெளியான தொகுப்புகளில் எப்படியோ விடுப்பட்டு போயின.
இப்படி விடுப்பட்டுபோன கதைகளை, பழைய இதழ்களில் இருந்து தேடிப்பிடித்து, அவை வேறு தொகுப்புகளில் வந்துள்ளனவா என்பதை சரிப் பார்த்து சேர்த்திருக்கிறேன். உணர்வு ரீதியாகவும், இந்தத் தொகுப்பிற்கும், இதே மாதிரியான முன்னைய தொகுப்புகளுக்கும், வித்தியாசம் உள்ளது. முன்னைய தொகுப்புகள் அந்தந்த காலக்கட்டங்களில் வெளியானதால், அவை என்னுள், ஒரு யதார்த்த உணர்வை மட்டும் ஏற்படுத்தியதே அன்றி, வரலாற்று உணர்வை ஏற்படுத்தவில்லை. ஆனால், இந்தத் தொகுப்பின் நிகழ்வுகளை பின்நோக்கி பார்க்கும்போது, நான் மெய் சிலிர்த்து போகிறேன்.
இப்போதும், எனது இலக்கிய நோக்கும், போக்கும் மாறுபடவில்லை. ஆனாலும், மொழி நடையும், கதை சொல்லித் தனமும், கட்டமைப்பும் காலத்திற்கேற்ப மாறி உள்ளன. இந்தப் பின்னணியில், இந்த பழைய கதைகளை படிக்கும்போது, என்னை நானே வியந்து கொள்கிறேன். அதே சமயம், சிறிது நிரடலாகவும் உணர்கிறேன். இதே கதைகளை, இப்போது எழுதினால், உள்ளடக்கங்கள் மாறாமல், உருவங்கள் மாறி இருக்கும்.
இந்த கதைகளில் சில மாற்றங்கள் தேவை என்று நான் நினைத்தாலும், அந்த மாற்றங்களை செய்யவில்லை. ஆங்காங்கே, பழைய கட்டிடத்திற்கு வெள்ளை அடித்ததுபோல, சில மேல் பூச்சிகளை பூசியிருக்கிறேனே தவிர கட்டிடத்தை புதுபிக்க எந்த முயற்சியும் செய்யவில்லை. அதே சமயம், இந்த கட்டிடம் பாழடைந்துபோகவில்லை என்பதிலும், இதில் இன்னும் மனிதர்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதிலும் ஒரு ஆறுதல்.
ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பே, இந்த பழங்கதைகளை பத்திரிகைகளில் இருந்து எடுத்து படித்தபோது, எனக்கே ஒரு ஆச்சரியம்-நான் நல்ல எழுத்தாளன்தான் என்று. பெரியவர்வல்லி க்கண்ணன் அவர்களிடம்கூட, ஒரு தடவை, இந்த வாசிப்பை சுட்டிக்காட்டி ‘அண்ணாச்சி அப்போவே நான் நல்ல எழுத்தாளனாகதான் இருந்திருக்கிறேன்’ என்று சொன்னபோது, அவரும் ‘சந்தேகமில்லாமல் நீங்கள் நல்ல எழுத்தாளர்தான்’ என்று கூறியதை நினைத்துப் பார்க்கிறேன். பொதுவாக இப்போது எனது கதைகளில் யதார்த்தமான வர்ணணைகளோ, பாத்திரங்களின் உருவப் பதிவுகளோ அதிகமாக இல்லை. இவை இரண்டும் இடம்பெற்ற இந்த பழம்பெரும் கதைகள், என்னுள் வெங்காய வாசனைபோல், ஒரு மண் வாசனையை தோற்றுவிக்கின்றன.
இப்படிக் குறிப்பிடுவதால், நான் பாமரத்தனமான கதைகள் எழுதவில்லை என்று பொருளல்ல. அப்படிப்பட்ட ஒரு சில கதைகளை படித்துவிட்டு, தலையிலேயே குட்டிக்கொண்டேன். எந்தத் தொகுப்பிலும் அவை இடம்பெறக் கூடாது என்பதிலும் முனைப்பாக இருக்கிறேன். ஆனாலும், இந்தத் தொகுப்பில் தூக்கலாக தோன்றும் உபதேசங்கள், பாமரதனமானவை அல்ல என்று தி மாக நம்புகிறேன்.
நாம் எந்த வாசக தளத்தை நினைத்து எழுதுகிறோமோ, அந்த தளத்திற்கேற்பதான், கருப்பொருள் ஒன்றானாலும், உருவமும், மொழிநடையும் தீர்மானிக்கப்படுகின்றன. இது, வலிந்து எழுததாத என்னை போன்ற தோழமை எழுத்தாளர்கள் கு. சின்னப்பபாரதி, டி.செல்வராஜ், பொன்னீலன், தனுஷ்கோடி ராமசாமி, மேலாண்மை பொன்னுசாமி போன்றோருக்கும் பொருந்தும். எங்களின் இன்றைய தலைமுறை எழுத்தாளர்களான ஜனநேசன், ப.ஜீவகாருண்யன், டி.ஆர்.ராஜாமணி, தேனி சீருடையான், அல்லி உதயன், ஷாஜகான், தி.சு. வேலாயுதம் போன்றவர்கள், நாங்கள் கையாண்ட கருப்பொருளின் இயல்பு மாறாமல், அதை இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப, எங்களைவிட சிறப்பாக எழுதி வருகிறார்.
தலைப்பு கதையான தலைப்பாகை போன்ற சிறுகதைகளை எழுதுவதற்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் சாமிதோப்பில் வசிக்கும் பிரபல தமிழ் அறிஞர் புலவர் பச்சையம்மால் அவர்களே முழுமுதற் காரணம். இலக்கிய பத்திரிகையான ‘சதங்கை’ ஆசிரியர் வனமாளிகை அவர்களுடன் திரு. பச்சையம்மாலை சந்தித்தபோது வைகுண்டர் எப்படி ஒரு ஆன்மீக போராளியாக விளங்கினார் என்பதை வரலாற்று பூர்வமாக விளக்கினார். வள்ளலாருக்கு முன்பே, ஒரு ஆன்மீக போராளியாக வாழ்ந்த வைகுண்டர் மீது எனக்கு ஒரு பிடிப்பு ஏற்பட்டது. இதனாலயே, திருவாங்கூர் சமஸ்தான பல்வேறு பிரிவு மக்களின் வாழ்க்கை முறைகளை விளக்கும் தோள்சீலை போராட்டங்கள் பற்றிய நூல்களையும், ஆங்கில பாதிரிமார்கள் எழுதிய நூல்களையும் கிட்டதட்ட கரைத்துக் குடித்துவிட்டேன். இதன் அடிப்படையில், தோள்சீலை என்று தலைப்பில் நீண்டதொரு நாவல் எழுத திட்டமிட்டு இருக்கிறேன். இதைத்தான் தோழர். அகத்தியலிங்கம் அவர்கள் கோடிகாட்டிருக்கிறார். இந்த சிறுகதைக்கு சில அரிய தகவல்களை தந்த அய்யாவழி இயக்கப் பிரமுகர் மணிபாரதி அவர்களுக்கு நன்றி கடன் பட்டுள்ளேன்.
இந்தத் தொகுப்பில் வரும் இருவேறு கண்கள், நான் அறிந்த ஒரு தாயின் பாச வெளிபாட்டு உளைச்சல்கள்… இந்தத் தாய், நமது தாய்மார்களை பொதுமைப்படுத்துகிறாள். நாணமும், பெண்மையும் சிறிது தூக்கலான கதை. அந்தக் காலகட்டத்தில், ஒரு மணப்பெண் அப்படி நடந்திருப்பாளா என்பது சந்தேகமே. நடக்க வேண்டும் என்ற ஆசையில் நடப்பது மாதிரி யதார்த்தமாக எழுதப்பட்ட கதை.
இப்போதும், சுயமரியாதை இல்லாத சுதந்திரத்தை அடிதள மக்கள் இன்னும் அனுபவித்து வருகிறார்கள் என்பதை சொல்ல வேண்டியதில்லை. கதைக்க முடியாத கதை, இலங்கை தமிழர்களுக்காக, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற தமிழகக் கொந்தளிப்பே ஒரு இலங்கை தமிழ் பெண்ணுக்கு ஏற்பட்ட ஆற்றுப்படுத்தலை பதிவு செய்கிறது. சென்னை, வானொலி நிலையத்தில் செய்தி ஆசிரியராக இருந்து, இந்த பாவப்பட்ட இலங்கை தமிழ்பெண்களில் ஒரு சிலருக்கு நான் தாற்காலிக வேலை வாய்ப்புகளை கொடுத்திருக்கிறேன். ஒரு தமயனிடம் சொல்லுவதைப்போல, இந்தப் பெண்கள், என்னோடு பகிர்ந்துக் கொண்ட இலங்கை கொடூரங்கள், இன்றுகூட என்னை பயமுறுத்துகின்றன.
நிர்வாகிகள், ப()ேல வேசம், அபத்தங்கள், முள் மேல் நடை, போக்கிடம் இல்லாத பொழுது, சொற்பிடி ஆகிய சிறுகதைகள் என்னுடைய அலுவலக அனுபவங்கள். இந்த அலுவலகங்கள் வெளியில் நின்று பார்த்தால் ஒரு கரையான் புற்றாகத் தோன்றும். ஆனால், உள்ளே நுழைந்து பார்த்தாலோ, அதற்குள் கருநாகங்களும், நச்சுப் பூச்சிகளும் இருப்பதைப் பார்க்கலாம். இவைகளால் கடிப்பட்டும், திருப்பித் தாக்கியும் அலுவலக வாசியாக செயல்பட்ட எனது அனுபவப் பகிர்வுகளே இந்தக் கதைகள். குறிப்பாக ப(லே) வேசத்தில் வரும் பலவேசம்தான், அன்றாடம் ஒரு மணிநேரம் யோகாசனம் செய்து உடலை ஓம்பிய எனக்கு ரத்த அழுத்ததையும், நீரழிவையும் கொடுத்தவர்.
பாசப்பாவம், நிறைகாக்கும் கற்பு, முதல் இல்லாத இரவு ஆகிய கதைகள், ஒரு நல்ல மனதின் உணர்வு வடிவங்களேயன்றி நடந்தவை அல்ல. ஆனாலும், நடக்கக்கூடியவை. சேரிடம் இப்போதும், நேர்மையான அதிகாரிகள் எதிர்நோக்கும் குடும்ப விவகாரம்தான். அலுவலகப் பணி நேர்மைக்கும், குடும்ப சுயநலத்திற்கும் இடையிலே அல்லாடும் பல அலுவலர்களை நான் பார்த்திருக்கிறேன். இவர்களை பற்றிய முக்கியமான பதிவுதான் இந்த சேரிடம்.
இந்தக் காலக்கட்டத்தில் சிறுகதைத் தொகுப்பை பெரும் பாலான பதிப்பகங்கள், கையை கடிக்கும் என்பதால் வெளியிடத் தயங்குகின்றன. ஆனால், பெரியவர் திருநாவுகரசும், அவரது அருமை மகன் ராமுவும், இந்த பழைய கதைகளையும் கொண்டுவர திட்டமிட்டது, என் மீது அவர்கள் கொண்ட அளப்பரிய அன்பிற்கும், இலக்கியத்தை வியாபார ரீதியில் அணுகாத சமூக நோக்கிற்கும் எடுத்துக்காட்டு. சிறியன சிந்தியாத பெரியவர் திருநாவுகரசு அவர்களுக்கு நன்றி கடன் பட்டுள்ளேன்.
இந்தத் தொகுப்பிற்கு முன்னுரை கொடுத்திருக்கும் தோழர். அகத்தியலிங்கம் அவர்கள் என்னுடைய நீண்டகால நண்பர். பொதுவாக எங்களை போன்ற ஒத்த கருத்துள்ளவர்களின் உறவு, சமூக அளவில் மட்டுமே நிற்கும். ஆனால், அவருக்கும், எனக்கும் உள்ள உறவு, குடும்ப அளவிலும் நிலைத்து நிற்கிறது. தீக்கதிர் பொறுப்பாசிரியரான தோழர், அகத்தியலிங்கம் இந்திய விடுதலைப் போராட்டத்தில் அதிகமாக நினைக்கப்படாத அல்லது மறக்கப்பட்ட வீரர்களைப் பற்றி விடுதலைத் தழும்புகள் என்ற அற்புதமான நூலை எழுதியவர். சமூக நீதியை நூல் வடிவமாக்கியவர். பல சந்தர்பங்களில் நான் எழுத முற்படும் சிறுகதைகளில் யதார்த்த சிக்கல் வரும்போது, நான் அறிவுரை கேட்கும் ஒரு சில தோழர்களில் இவரும் ஒருவர். மிக சிறந்த முன்னுரையை கொடுத்தற்காக மட்டும் அல்லாமல் என்னைப் பற்றிய அவர் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நான் எழுத வேண்டும் என்றும் கங்கணம் கட்டியுள்ளேன்.
இந்த சிறுகதைகளை பிரகரித்த அத்தனை பத்திரிகைகளுக்கும் நன்றியுடையேன். ஒரு சில பத்திரிகைகளின் பெயர்கள் தெரியவில்லை. அந்த முகமறியா பத்திரிகைகளுக்கு என் நன்றி உரித்தாகும்.
வழக்கம்போல், இந்தத் தொகுப்பிற்கு வாசகர்கள் தங்களது மேலான கருத்துகளை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
என்னுரை – குற்றம் பார்க்கில் (சிறுகதைத் தொகுதி), முதல் பதிப்பு: நவம்பர் 1980, மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
இந்தச் சிறுகதைத் தொகுப்பு பத்திரிகைகளும் படைப்புக்களும் புனிதமாகக் கருதப்படவில்லையென்றாலும், போற்றுதற்குரியவை யாகக் கருதப்பட்ட ஆண்டில் வெளியானது. இதுதான் எனது முதல் படைப்பு. ஆனந்தவிகடன். குமுதம், தாமரை ஆகிய பத்திரிகைகளில் வெளியானவை இந்தக் கதைகள். ஒரு புத்தக வடிவில் இந்தத் தொகுப்பை நான் பார்த்த போது புல்லரித்துப் போனேன்; புளகாங்கிதமடைந்தேன். சென்னை நூலகக் கட்டி டத்தில் எனது இனிய நண்பரும், செங்கை மாவட்ட அப்போதைய ஆட்சித் தலைவருமான மறைந்த திரு. திவான்முகம்மது தலைமையில், அப்போது காங்கிரஸ் செயலாளராய், பிரபலமாக விளங்கியவரும் என்றுமே என் இனிய தோழருமான திரு. ஏ.கே.சண்முகசுந்தரம் இந்த நூலை வெளியிட்டார். பிரபல நாவலாசிரியர் அகிலன் எனது குடும்பத் தோழர் திரு.கே.சி.எஸ். அருணாசலம், நாவலாசிரியர் திரு. நா. பார்த்தசாரதி போன்ற ஆன்றோர்களும் சான்றோர்களும் வாழ்த்தியருளினார்கள். திரு. நா.பா. அவர்கள் தனது தீபம் பத்திரிகையில் இந்தச் சிறுகதைத் தொகுப்பின் வெளியீட்டுவிழா ஒரு மாநாடு போல் நடந்தது என்று குறிப்பிட்டார்.
இந்தப் படைப்புக்குத் தமிழக அரசின் முதல் பரிசும் கிடைத்தது. அப்போதைய முதல்வர் திரு. எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்கள் 1981-ஆம் திருவள்ளுவர் திருவிழா ஆண்டு இந்தத் தொகுப்புக் கும் ‘ஊருக்குள் ஒரு புரட்சி’ என்ற நாவலுக்கும் இரண்டு பரிசுகளை வழங்கினார். தமிழக அரசின் செய்தித்துறை நான் அவரிடம் பரிசு வாங்கிய புகைப்படத்தையும், சாலை இளந்திரையன் சார்பில் அவரது தங்கை வாங்கிய புகைப்படத்தை யும் ஆகிய இரண்டை மட்டுமே வெளியிட்டது. அப்படியும் மக்களின் வரிப்பணத்தில் வாங்கிய பணம் என்று மட்டுமே நான் குறிப்பிட்டேன். சம்பந்தப்பட்ட பத்திரிகைப் பேட்டியில் திரு. எம்.ஜி.ஆர். அவர்களை நான் குறிப்பிடாதது பலருக்கு வருத்தத்தைக் கொடுத்தது. திரு. எம்.ஜி.ஆர். அவர்கள் மீது மனிதர் என்ற முறையில் ஒரு மகத்தான மரியாதை உண்டு என்றாலும், எழுத்தாளன் பேனா தனிநபர் வழிபாட்டிற்குத் தாராளம் காட்டக்கூடாது என்ற கருத்தே அகற்குக்காரணம். இன்றளவும் அதே கருத்தைக் கொண்டிருக்கிறேன்.
இந்தத் தொகுப்பிலுள்ள அத்தனைக் கதைகளும் இதன் வெளியீட்டு விழாவில் திரு. அகிலன், ‘இவரைப் போல் எழுதியிருக்கிறார். அவரைப்போல் எழுதியிருக்கிறார் என்று கூறமுடியாத ‘ஒரிஜினல்கள்’ என்று கூறினார். ‘மருந்தைக் குடிக்கும் போது குரங்கை நினைக்காதே’ என்ற உபதேசத்தின் அடிப்படையில் இலக்கியமாக எழுதவேண்டுமென்று நினைத்து அதற்கு எதிர்மாறாக எழுத்தில் அடிப்பட்டுப்போகாத சிறுகதைகள், இந்தத் தொகுப்பிலுள்ள துணிச்சலான கதைகளை வெளியிட்ட தோடு என்னை அவ்வப்போது உற்சாகப்படுத்தியதுடன் தாமரையில் வெளியிட்ட கவிஞர் கே.சி.எஸ். அருணாசலம் அவர்களையும்,ஆனந்த விகடன், குமுதம் போன்ற பத்திரிகை களையும், இதனை அப்போது வெளியிட்ட ‘கல்வி வெளியீடு’ என்ற சின்னஞ்சிறு பதிப்பகத்தின் உரிமையாளர், புலவர் அன்பரசனையும் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன். இந்தச் சிறுகதைத் தொகுப்புக்கும், ‘ஊருக்குள் ஒரு புரட்சி’ என்ற நாவலுக்கும் தமிழக அரசின் பரிசு கிடைத்த அப்போது வாழ்த்துக் கள் வந்தாலும் அவை குவியவில்லை. ஆனால் ‘மண்சுமை’ என் சிறுகதைத் தொகுப்புக்கு முதல் பரிசு கிடைத்த இப்போது வாழ்த்துக்கள் இன்னும்கூட குவிந்து கொண்டே இருக்கின்றன. அந்த அளவிற்கு இலக்கிய உலகில் நான் வளர்வதற்குக் காரண மானவர்களில் ஒருவரான மணிவாசகர் பதிப்பக உரிமையாள ரான பேராசிரியர் டாக்டர் ச.மெய்யப்பன் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எல்லாவற்றிக்கும் மேலாக ஆரம்ப எழுத்தாளனாக இருந்த என்னை நாடறிந்த எழுத்தாளனாக மாற்றிய அனைத்துப் பத்திரிகைகளுக்கும், ஆழமாக எழுத வைத்த ‘செம்மலர்’ ‘தாமரை’ ஆகிய பத்திரிகைகளுக்கும் வாசகப் பெருமக்களுக்கும் மனம் நெகிழ நன்றி செலுத்துகிறேன். இவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இன்னும் ஆழமாகவும், பரவலாகவும், மனித நேயத்தோடும் எழுதவேண்டுமென்று உறுதி பூணுகிறேன்.
அலைவீச்சு – சிக்கிமுக்கிக் கற்கள் (சிறுகதைத் தொகுப்பு), முதல் பதிப்பு: டிசம்பர் 1999, ஏகலைவன் பதிப்பகம், சென்னை.
இந்த நூல், எனது பத்தொன்பதாவது சிறுகதைத் தொகுப்பாகும். முன்னைய தொகுப்புகள், இந்த நூற்றாண்டின் அறுபதுகளிலும், எழுபதுகளிலும் நிகழ்ந்த அரசியல், சமூக, பொருளாதார இலக்கிய இயல்புகளை ஆவணப்படுத்தியவை. இந்தத் தொகுப்போ எண்பதுகளில் படிப் படியாகவும், தொன்னூறுகளில் படிதாண்டியும் ஏற்பட்ட மாற்றங்களை காலக்கணக்கில் தீர்மானிக்கும் இலக்கிய ஆவணந்தான்.
இந்தத் தொகுப்பிற்காக கடந்த எண்பதுகளில் எழுதிய கதைகளையும், இப்போது எழுதிய கதைகளையும் படிக்கும் போது, என்னுள்ளேயே இந்தச் சமூகத்தை போல, ஒரு மாறுதல் ஏற்பட்டிருப்பதை உணர்கிறேன். கிராமிய சொல்வடைகளை, திரைப்பட வசனங்களும், விவசாய கமலை இறைத்தலை, பம்பு செட்டுகளும், உழவு மாடுகளை, டிராக்டர்களும், துரத்திவிட்டக் காலம் இது. இந்த மாற்றத்தைப்போல், மொழி மாற்றம், நல்லதும் கெட்டதுமாக ஏற்பட்டுள்ளது. என்னைப் பொறுத்த அளவில், தமிழ் வழி கல்விப் போராட்டத்தின் தாக்கத்தால் ஆங்கில வார்த்தைகளை கூடியவரையில் தவிர்த்து, அதேசமயம் இயல்பான பேச்சுத் தமிழை கொண்டு வருவதில் கவனம் செலுத்துகிறேன். அதுபோல் புதிய சக்திகளான அறிவொளி இயக்கம், வீதி நாடகங்கள், தலித் இயக்கம், பெண்ணியம் போன்றவற்றை எனது இலக்கியக் கணக்கில் எடுத்துக் கொண்டிருக்கிறேன்.
இந்தப் பின்னணியில்தான், இந்தத் தொகுப்பை கொண்டு வருகிறேன். இதிலுள்ள 16 கதைகளில் கடைசி ஏழு கதைகள் அண்மைக் காலத்தில் எழுதப்பட்டவை. இந்த இரண்டு வகைக் கதைகளிலும் உள்ளடக்கம் மாறவில்லை. என்றாலும் உருவம் ஓரளவு மாறியிருக்கிறது. இந்த உருவமாற்றம், எனது இலக்கிய வளர்ச்சியா அல்லது தளர்ச்சியா என்பதை வாசகர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
நவீனத்துவம், பின்நவீனத்துவம், அமைப்பியல், மேஜிக்கள் ரியலிசம் போன்ற புதைமண்ணில் நான் காலூன்றவில்லை. இந்த இசங்களிலும், சில பயன்பாட்டுப் புதுமைகள் இருந்தாலும், என் ஏழை-எளிய மக்களை, சமூகப் பார்வையில் வைத்து, இயல்பு நிலையை, யதார்த்தமாக மாற்றி எழுதுவதில் இருக்கும் நிறைவு இந்த இலக்கிய இசங்களில் எனக்கு இல்லை.
இந்தத் தொகுப்பிற்கு எனது இலக்கிய முன்னோடியான தோழர் கு.சின்னப்பபாரதி அணிந்துரை வழங்கியிருப்பது எனக்குக் கிடைத்த மிகப்பெரியதோர் சிறப்பு மிக்க இலக்கியக் கௌரவம். இந்த அணிந்துரை, இன்றைய சமூகத் தேவைக்கான ஒரு இலக்கியப் பிரகடனம் ஆகும். மக்களின் கூட்டுப் போராட்டத்தை, சிறுகதையாக்கும்படி என்னை அவர் பணித்ததை, சிரமேல் கொண்டிருக்கிறேன். இதன் விளைவுதான் “வைராக்கிய வைரி”யும், “சிக்கிமுக்கிக் கற்களு”ம்.
இந்தப் பின்னணியில், மக்கள் எழுத்தாளர்களைப் பற்றி, புதிய பதிவை உருவாக்க, நானும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவரான தோழர் ச. செந்தில்நாதனும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் டாக்டர். இராம. இளங்கோவும், மக்கள் எழுத்தாளர் பா. செயப்பிரகாசமும் ஒன்று பட்டு செயலாற்றுகிறோம். இதுவரை, முதல் கட்டமாக இலக்கிய வாணர்களான தி.க.சி., கு. சின்னப்பபாரதி, டி. செல்வராஜ், கூடவே இந்த அலைவீச்சாளன் ஆகியோரின் இலக்கிய அனுபவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த முயற்சிக்கு உறுதுணையாக, முற்போக்கு எழுத்தாளர் இயக்கத் தோழர்களும் நிற்கிறார்கள்.
தோழர்களான கு. சின்னப்பபாரதி, டி. செல்வராஜ், பொன்னீலன், மேலாண்மை பொன்னுச்சாமி, பா.செயப் பிரகாசம், தனுஷ்கோடி ராமசாமி, காசியபன், தேனீ சீருடையான் உள்ளிட்ட எழுத்தாளர்களாகிய நாங்களும், எங்கள் வழி இளம் படைப்பாளிகளும் பயன்பாட்டு இலக்கியத்தைப் படைக்கிறோம். என் வாடாமல்லி நாவலை சரியாகப் புரிந்துகொள்ளாத இலக்கிய வேதாந்தவெத்து வேட்டுக்களுக்குப் பதிலாக, என்னைத் தந்தையாக அனுமானிக்கும் ஒரு அலிமகளின் கடிதத்தை அப்படியே பிரசுரித்திருக்கிறேன். இந்த நாவலுக்குப் பிறகுதான் திரைப்பட – தொலைக்காட்சித் துறையினருக்கு, அலிகளை, மனித நேயத்துடன் சித்தரிக்க வேண்டும் என்ற “ஞானோதயம்” ஏற்பட்டிருக்கிறது. இது பயன்பாட்டு இலக்கியயத்திற்குக் கிடைத்த வெற்றி.
இந்த நூலுக்கு செம்மையாக முகப்போவியம் தீட்டிய தோழர் ஜமால், அச்சிட்டுக்கொடுத்த மணிவாசக நூலகப் பேராசிரியர் முனைவர் ச.மெய்யப்பன், தோழர்கள் சோமு, குருமூர்த்தி ஆகியோருக்கும், எனது படைப்புகளை மக்களுக்கு கொண்டு செல்லும் சகோதரர் மூவேந்தர் முத்துவுக்கும், என்னை முப்பதாண்டு காலமாக இலக்கிய உலகில் நிலைநிறுத்தி வரும் வாசகப் பெருமக்களுக்கும் மனமார்ந்த என் நன்றி. தோழமையுடன்,
– சு.சமுத்திரம்