கோவி.மணிசேகரன்

 

கோவி. மணிசேகரன் (கே.சுப்பிரமணியன்( 2 மே 1927 – நவம்பர் 18, 2021) சிறுகதை, நாவல், கட்டுரை என பொது வாசிப்புக்குரிய நூற்றுக்கணக்கான படைப்புகளை எழுதியவர். திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். தனது ‘குற்றாலக் குறிஞ்சி’ நாவலுக்காக சாகித்ய அகாதமி பரிசு பெற்றார்.

கோவி மணிசேகரன் கல்கி மற்றும் டாக்டர் மு.வ.வின் எழுத்துக்களால் ஈர்ப்படைந்தவர். தொடக்கத்தில் கவிதைகள் எழுதியவர் பின்னர் நாவல்களை எழுதலானார்.

கோவி மணிசேகரன் 1954-ல் ‘கலைமன்றம்’ என்ற இதழின் துணை ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். அவ்விதழில் தான் கோவி. மணிசேகரனின் முதல் வரலாற்று நாவலான ‘அக்கினிக் கோபம்’ வெளியானது. அடுத்து ‘கலை அரங்கம்’ என்ற மாத இதழின் ஆசிரியராகப் பணி புரிந்தார். ‘முருகு’ மற்றும் ‘மங்களம்’ போன்ற இதழ்களின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

வயது மூப்பால் கோவி. மணிசேகரன் நவம்பர் 18, 2021-ல் காலமானார்.

சிறுகதைத் தொகுப்புகள்

  • தாயும் சேயும்
  • வாழ்வின் விளக்குகள்
  • பூந்தாது
  • தாகத் தேர்
  • காலம் சொல்லும் கதை
  • உயிரும் ஒளியும்
  • சரித்திரக் கதைக் களஞ்சியம்
  • காளையார் கோயில் ரதம்
  • மஞ்சள் குங்குமம் கதைகள்
  • இதயங்கள்
  • நீலாம்பரி
  • கல்லுளிமங்கன்
  • தொட்டில் பழக்கம்
  • இரவின் இளநகை
  • வெறும் வயிறு
  • சிறுகதைச் செல்வம்
  • கொடுத்துச் சிவந்த கைகள்
  • கோவியின் கதைகள்
  • அரண்மனை ராகங்கள்
  • பொன் விளக்கு எரிகிறது
  • செந்தமிழ்ச் செல்வர்கள்
  • மகுடங்கள்
  • கழுவேறி மேடு
  • செங்கோலின் சங்கீதங்கள்

சமூக நாவல்கள்

  • பனிரோஜா
  • தேன் நிலவு
  • கங்கையம்மன் திருவிழா
  • நீலமல்லிகை
  • தென்னங்கீற்று
  • ஒரு கொடியில் இருமலர்கள்
  • பூங்குயில்
  • வலம்புரிமுத்து
  • வாழ்விக்க வந்த தெய்வம்
  • தவமோ! தத்துவமோ
  • நேற்றுப் பெய்த மழையில்
  • ஜயஜய சங்கரி
  • காக்கைச் சிறகு
  • மனோரஞ்சிதம்
  • வாழ்க்கை ஒரு விளையாட்டு
  • நிலாச்சோறு
  • அகிலா
  • ஆத்மா
  • முள்
  • ஒரு தீபம் ஐந்து திரிகள்
  • காவிய மனைவி
  • யாகசாலை
  • சூரியன் மேற்கே உதிக்கிறான்
  • திரிசூலி
  • இதழ்கள்
  • வேரில் மலரும் பூக்கள்
  • மிதக்கும் திமிங்கிலங்கள்
  • மூங்கில் இலை மேல்
  • சொல்லித் தெரிவதில்லை

வரலாற்று நாவல்கள்

  • அக்கினிக் கோபம்
  • குறவன் குழலி
  • ஆதித்த கரிகாலன் கொலை
  • முகிலில் முளைத்த முகம்
  • செம்பியன் செல்வி
  • காந்தருவதத்தை
  • சேரன் குலக்கொடி
  • சீவக சிந்தாமணி
  • ராஜசிம்மன் காதலி
  • கங்கை நாச்சியார்
  • ஹைதர் அலி
  • இளவரசி மோகனாங்கி
  • கவிஞனின் காதலி
  • கானல் கானம்
  • மாவீரன் காதலி
  • மகுடங்கள்
  • மலையமாருதம்
  • தம்பூர்
  • மாலிக்காபூர்
  • மாண்புமிகு முதலமைச்சர்
  • மணிமண்டபம்
  • மனோரஞ்சிதம்
  • மயிலிறகு
  • மேவார் ராணா
  • நாகநந்தினி
  • நந்திவர்மன்
  • ராஜமாதா
  • நாயகன் நாயகி
  • நாயக்க மாதேவிகள்
  • மேவார் ராணி
  • நிலாக்கனவு
  • பத்தாயிரம் பொன் பரிசு
  • பெண்மணீயம்
  • தேவ தேவி
  • அக்கினி வீணை
  • அஜாதசத்ரு
  • முதல் உரிமைப் புரட்சி
  • முடிசூட்டுவிழா
  • காவிய ஓவியம்
  • கொல்லிப்பாவை
  • குடவாயில்கோட்டம்
  • குமரி
  • குற்றாலக் குறிஞ்சி
  • மேகலை
  • இந்திர விஹாரை
  • பொன் வேய்ந்த பெருமாள்
  • பூங்குழலி
  • தட்சிண பயங்கரன்
  • பொற்கிழி
  • அச்சுத ரங்கம்மா
  • பொற்காலப் பூம்பாவை
  • மறவர் குல மாணிக்கம்
  • அழகுநிலா
  • தென்றல் காற்று
  • சித்ராங்கி
  • சோழதீபம்
  • தேவதேவி
  • எரிமலை
  • காந்தருவதத்தை
  • காஞ்சிக் கதிரவன்
  • ராஜராகம்
  • ராஜசிம்ம பல்லவன்
  • ராஜசிம்மன் காதலி
  • ராஜதரங்கனி
  • செம்பியன் செல்வி
  • தூது நீ சொல்லிவாராய்
  • வாதாபி வல்லபி
  • வராகநதிக் கரையில்
  • வீணாதேவி
  • வேங்கைவனம்
  • பேய்மகள் இளவெயினி
  • ராஜாளிப் பறவை
  • ரத்த ஞாயிறு
  • சாம்ராட் அசோகன்
  • சமுத்திர முழக்கம்
  • ராஜ கர்ஜனை
  • ராஜ மோகினி
  • ராஜ நந்தி
  • காந்தாரி
  • செஞ்சி அபரஞ்சி
  • செஞ்சிச் செல்வன்
  • சேர சூரியன்
  • சந்திரோதயம்
  • சேரன் குலக்கொடி
  • சுதந்திரத்தீவில் வெள்ளை நாரைகள்
  • ராணி வேலுநாச்சியார்
  • தலைவன் தலைவி
  • தென்னவன்பிராட்டி
  • தேரோடும் வீதியிலே
  • திருமேனித் திருநாள்
  • தியாகத் தேர்
  • தோகை மயில்
  • வெற்றித் திருமகன்

விருதுகள்

  • தமிழ் வளர்ச்சித்துறை விருது 1972,1984
  • தமிழக அரசின் ராஜராஜன் விருது 1984
  • தமிழக அரசின் திரு.வி.க. விருது 1984
  • சாகித்ய அகாதமி விருது 1992
  • தினத்தந்தி , சி. பா. ஆதித்தனார் விருது 2008
  • ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் பரிசு (யாகசாலை 1980)
  • குழந்தை எழுத்தாளர் சங்க விருது
  • காஞ்சி காமகோடி பீட விருது
  • முகம் மாமணி விருது
  • புதுவை வ.உ.சி. விருது
  • வேலூர் தமிழிசைச் சங்கம் வழங்கிய இசைச்செல்வம் பட்டம்
  • லில்லி தேவசிகாமணிப் பரிசு 1992
  • கலைமாமணி விருது 2019

அரங்கம் – குற்றாலக் குறிஞ்சி (நாவல்)

1947-ஆம் ஆண்டு… 

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படிக்கிறபோது ‘எங்கள் நாடு’ என்கிறதினச் செய்தித்தாளின் ஞாயிறு மலரில் ‘புரட்சிப் புலவன் அம்பிகாபதி எனும் தொடர் நாடகத்தை எழுதி வந்தேன். அப்போது இசைக் கல்லூரித் தலைவராக இருந்த இசைமாமேதை சுருதிலயச் சக்கரவர்த்தி திரு.சித்தூர் சுப்பிரமணியப்பிள்ளை அவர்களிடம் குருகுல வாசமிருந்தும், இசைக்கல்லூரியில் பயின்றும் வந்தேன். அங்கே எனக்குத் தமிழறிவூட்டிய ஆசான்கள், பேராசிரியர் அ. சிதம்பரநாதன் செட்டியார் அவர்களும், பேராசிரியர் லெ.ப.கரு. இராமநாதன் செட்டியார் அவர்களும், பேரா சிரியர் சிந்தாமணி நாயுடு அவர்களுமாவர். 

எனது தொடர் நாடகத்தைப் படித்துவந்த சித்தூர்ப் பிள்ளை “ஏன்டா, இந்தச் சங்கீதத்தை மையமா வச்சு ஒரு கதை எழுதேன்” என்றார். 

என் குருநாதர் ஆசையைப் பூர்த்தி செய்ய இத்தனை ஆண்டுகள் பிடித்தன. அன்று தரித்த கதைக்கர்ப்பம் 1987-இல் வெடித்துப் பிரசவமானது. 

‘இதயம் பேசுகிறது ஆசிரியரும் என்னரும் நண்பருமான திரு.மணியன், இதற்கு ஆதரவு தந்து 1989-இல் தொடராக வெளியிட்டார். எனது இசைப் புலமையை உலகுக்கு எடுத்துச் சொன்ன நண்பருக்கு முதல் நன்றியை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

நான் அந்தக் காலத்திலேயே அபூர்வ ராகப் பயிற்சியில் ஆனந்தம் கொள்வேன். இவ்விதம் ஆனந்தம் கொள்ள உறுதுணையாக நின்றவன் என் குருகுல நண்பன் சுருதிலயச் சக்கரவர்த்தி மதுரை சோமு என அன்புடன் அழைக்கப் பெறும் மதுரை சோமசுந்தரம். 

நானும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இசைக் கல்லூரியில் ‘சங்கீதபூஷணம்’ வகுப்பில் படிக்கிற போது. இறுதியாண்டு தேர்வில் 4-களை சவுக்கத்தில் மிஸ்ர சாதித் திரிபடைத் தாளத்தில் ‘பல்லவி’ (‘பல்லவி'” என்பது தமிழில் தொல்காப்பியம் படித்த நிலை போன்றது) பாடி, நீதிபதிகளாய் அமர்ந்திருந்த மகாவித்துவான்கள் புல்லாங்குழல் புருஷோத்தமர், திருப்பாம்புரம் டி.என். சுவாமிநாதப் பிள்ளை, இசைப் பேராசிரியர் சாம்ப மூர்த்தி ஐயர் போன்றோர் (அயர்ந்து போகுமளவிற்குப் பைரவி ராகத்தில் பாடி) பாராட்டினைப் பெற்று முதல்தரச் சிறப்புத் (நான் ஒருவன் மட்டுமே) தேர்வடைந்து நிறுவனர் விருது பெற்றேன். அன்றே எனது ஆரம்பமே விருதுதான்! இவ்விதமான பல்லவியை அக்கல்லூரியில் முன்னும் எவரும் பாடியதில்லை; இன்னும் எவரும் பாடியதாக எனக்குத் தெரியவில்லை. 

முழுக்க முழுக்க இசைக்கருவூலப் புதினமாக எழுத விழைந்ததால், தஞ்சையின் பிற்கால வேந்தனும், கலை வேந்தனுமான சரபோஜி அரசனே என்முன் காட்சி தந்து கரம் கூப்பினான். இவனது காலமே தென்னிசையின் பொற்காலம் என்றால் ‘மிகையாகாது. 

இசையென்பது உயர்ந்தவர்களிடமே இருக்க வேண்டுமா என்று எண்ணிப் பார்த்தேன். நான் தாழ்ந்தோரை மதிக்கும் தன்மை கொண்டவன். எனவேதான் எனது கதாநாயகி குறிஞ் சியைத் தாழ்த்தப்பட்ட குலத்திலிருந்து தேர்ந்தெடுத்தேன். அவள் ஒரு புலைச்சி. அவளைச் சந்திப்பவர்களோ… புதினம் புரிய வைக்கும். 

*ரகுநாத நாயக்களையும் மறந்துவிட முடியாது. அவனையும் புதினமாக எழுதி இருக்கிறேன் 

இப்புதினம் 1992-ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் சாகித்திய அகாடமி விருது பெற்றது. எத்தனையோ மாபெரும் மாநில விருதுகளைப் பெற்ற எனக்கு, இது காலம் கடந்த விருதுவானாலும் அகாடமி தன்னைக் கவுரவித்துக் கொள்ளத் தவறவில்லை என்று எண்ணுகிற போது மாமன்னன் ராசராசனும், தமிழ்த்தென்றல் திரு.வி.க.வும், ராஜா சர் அண்ணாமலைச் செட்டியாரும் மகிழ்ந்துகொள்ளத்தான் செய்கிறார்கள். 

நான் சாகித்திய அகாடமி விருதுபெற்ற போது ஆயிரமாயிரம் வாசக நெஞ்சங்கள் நேரிலும் தந்திகள் மூலமாகவும் கடிதங்கள் மூலமாகவும் என்னை அரவணைத்து, மகிழ்ந்து பாராட்டி, வாழ்த்துத் தெரிவித்தனர். இவர்கள் மட்டுமா? தவத்திரு குன்றக்குடி அடிகளார், பேராசிரியப் பெரும்புலவர் பா. நமசிவாயம், பேராசிரியர் டாக்டர் மணவாளன், பேராசிரியர் டாக்டர் பூ.சொல்விளங்கும் பெருமாள், பேராசிரியை டாக்டர் சக்திப் பெருமாள், பெரும் விமர்சகரும் பேராசிரியருமான டாக்டர் தா.வே. வீராசாமி போன்ற பலப்பல பேராசிரியர்களும் எனக்குக் கடிதங்கள் மூலமும், நேரிலும் உற்சாகமூட்டும் வகையில் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனர். இவ்வளவு ஏன்? 

குங்குமம் இதழில் பராசக்தி கேள்வி பதிலில் கலைஞர் அவர்கள் பதில் சொல்லுவார்: 

“இது நான் பெற்ற விருது போன்றது.” – என்று.

பேராசிரியப் பெரும்புலவர் பா.நமசிவாயம் எழுதுகிறார்; 

“மொழிந்த நும் பாடல் குற்றம் குற்றமே” என்ற பரம்பரையில் இன்று உங்களை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள்? 

சாகித்திய அகாடமி உங்கள் சாதனையின் அங்கீ காரம். முதுகில் குத்தும் கல்லாப் புல்லர்களை மன்னிக்கலாம்; கற்ற புல்லர்களை இனம் கண்டு ஞான உழவாரத்தால் செதுக்கித்தள்ள உங்களை விட்டால் வேறு ஒருவம் இல்லை. எப்படி இந்த ஆற்றலனைத்தும் உங்களை யடைந்து பெருமையடைகின்றன?’ 

இப்படியான பெருமைகள் அன்றும் சரி; இன்றும் சரி; என்றும் எனக்குண்டு. அகாடமி குழுவினர்க்கு, குற்றாலக் குறிஞ்சி கரம்கூப்பி நன்றி கூறுகிறாள். 

குறிஞ்சியை ஆங்கிலம், இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் சந்தித்து (மொழிபெயர்ப்பு – Translation) அரிய பெரிய பாராட்டுகளை வழங்கி இருக்கின்றன. 

இந்தப் புதினத்துக்கு நாதசுரச் சக்கரவர்த்தி அணிந்துரை வழங்கி இருக்கிறார். இது இசையிலக்கியம், எனவே இந்த மகானிடம் அணிந்துரை பெற்று மகிழ்ந்தேன். நாமகிரியாருக்கு எனது நன்றி. 

பதிப்புலகில் ‘பூம்புகார் பதிப்பகம்’ சோழப் பேரரசுக்கு ஒப்பானது. தொடக்க கால முதல் என் நூல்களை வெளியிட்டு வருகிறவர்கள். இனியும் வெளியிடுவர். பூம்புகார் பதிப்பகத்தைப் புனித நெஞ்சுடன் வாழ்த்துகிறேன்; நன்றி கூறுகிறேன். 

எனது மகோன்னத வளர்ச்சியைப் பாராட்டி வாழ்த்தும் என்னரும் வாசக நெஞ்சங்களை வணங்குகிறேன்; வாழ்த்துகிறேன். 

மிக்க அன்புடன் 
கோவி. மணிசேகரன்
12/11, பீட்டர்ஸ் காலனி, 
சென்னை – 600 014.
தொ.பே.: 044 – 28518787 

– குற்றாலக் குறிஞ்சி (நாவல்), முதல் பதிப்பு: செப்டம்பர் 2012, பூம்புகார் பதிப்பகம், சென்னை.