கந்தர்வன் (க.நாகலிங்கம்) (பெப்ரவரி 3,1944-ஏப்ரல் 22,2004) தமிழ் எழுத்தாளர், முற்போக்கு இலக்கிய அழகியலை சார்ந்து எழுதியவர். இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி (மார்க்ஸிஸ்ட்)யுடன் தொடர்புகொண்டிருந்தார். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலப் பொறுப்பை வகித்தார். தொழிற்சங்கச் செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தார்.
கந்தர்வனின் முதல் சிறுகதை ‘சனிப்பிணம்’ 1970 -ல் தாமரையில் வெளிவந்தது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ஆரம்ப காலத்திலிருந்து அதில் பணியாற்றினார். கண்ணதாசன் இதழில்இலக்கிய விமரிசனங்கள்,சிறுகதைகள், கவிதைகள் எழுதினார். தாமரை, சுபமங்களா, சிகரம், செம்மலர், ஆனந்த விகடன் என்று பல இதழ்களில் அவரது கதைகள் வெளிவந்தன.
மைதானத்து மரங்கள் எனும் சிறுகதையை எழுத்தாளர் ஜெயந்தன் அவர்கள் ‘இலக்கியச் சிந்தனை’யில் மாதத்தின் சிறந்த கதையாகத் தேர்ந்தெடுத்தார், தண்ணீர் சிறுகதை ஒன்பதாம் வகுப்பு தமிழ்பாடப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
சாசனம் சிறுகதை இந்திய தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின்((NFDC) நிதி உதவியோடு இயக்குநர் மகேந்திரனால் படமாக்கப்பட்டு ஜூலை 28, 2006 அன்று வெளியிடப்பட்டது.
சிறுகதைகள்
- சாசனம்
- பூவுக்கு கீழே
- கொம்பன்
- ஒவ்வொரு கல்லாய்
- அப்பாவும் அம்மாவும் (இவை அனைத்தும் சிவகங்கை அன்னம் பதிப்பகம்)
- கந்தர்வன் கதைகள் (தொகுப்பு நூல்)
குறுநாவல்
- காவடி
முன்னுரை – பூவுக்குக் கீழே – டிசம்பர் 1987
சுமார் 17 வருடங்களுக்கு முன்பு ‘சனிப்பிணம்’ என்று ஒரு சிறுகதையைத் ‘தாமரை’ யில் வாசிக்க முடிந்தது. எழுதியது கந்தர்வன் தான், அது இவருடைய முதன் முதல் சிறுகதையாகவோ அல்லது முதல் சிறுகதைகளில் ஒன்றாகவோ இருக்கக்கூடும். அது விஷயமில்லை. ஆனால் அந்தச் சிறுகதை, இன்று தொகுக்கப்படுகிற இந்தத் தொகுப்பிற்கான அருமையான அடையாளங்களுடன் இருந்தது. அந்தக்கதை ‘தாமரை’யில் வந்த நல்ல சிறுகதைகளில் ஒன்றாகவே இன்னும் ஞாபகத்திலிருக்கிறது.
அந்தச் சிறுகதைக்கும் இந்தத் தொகுப்புக்கும் இடையிலான 17 வருடங்களில் எவ்வளவு நிகழ்ந்திருக்கின்றன இந்த ஊர் உலகத்தில்; எவ்வளவு நிகழ்ந்திருக்கிறது இந்த மனித வாழ்வுக்கு; இவற்றை எழுதிய கந்தர்வனுக்குத்தான் எவ்வளவு தீவிரமானவை எல்லாம் நிகழ்ந்திருக்கின்றன. இவ்வளவுக்குப் பிறகும் வாழவேண்டிய திருக்கிறது என்பது அதைவிடவும் கொடுமையானது; இவ்வளவுக்குப் பிறகும், வாழும்படியாக இந்த வாழ்வும் மனிதர்களும் ஜீவனுடையதாக இருக்கிறது. இருக்கிறார்கள் என்பது உண்மையானது. வாழ்ந்து காட்ட வேண்டும் என்று முன் நகர்வது அர்த்தம் நிரம்பியது.
‘அர்த்தம்’ அர்த்தமின்மை, அபத்தம், உன்னதம் என்று ன்னும் சகல பரிமாணங்களுடன் வாழ்க்கை இயங்கிக் கொண்டே இருக்கிறது. இந்த இடைவிடாத, ஒரு வினாடிகூடத் தேங்காத வாழ்வின் ஓட்டத்தில் எத்தனையோ மதிப்பீடுகளும் மரபுகளும் நொறுங்குகின்றன; சிதைகின்றன, சிதைவிலிருந்தும் சிதைவுக்கு மத்தியிலும், இப்படித்தான் என நாம் பூரணமாகத் தெளிவடைந்து கொள்கிற அவகாசத்திற்கு முன், தம்மை மீண்டும் புனரமைத்துக் கொள்கின்றன. மத, இன, கலாச்சார, பொருளாதார, யுத்த, விஞ்ஞான நெருக்கடிகளிலும் நெரிசல்களிலும் சிக்குண்டும் கூட, காலம் தோறும் மனிதனின் முகம் புருவ நெரிப்புக்கிடையில் வலியின் ஒரு சிறு சுளிப்புடன், ஆனால் தீர்க்கமாக ஏறிட்டபடியே சென்று கொண்டிருக்கிறது.
அவரவர்களுக்கு ஈடுபாடுள்ள, அவரவர் தேர்ந்தெடுத்துக் கொண்ட ஊடகத்தின் சுதந்திரத்துடனும் உண்மையுடனும் எந்த ஒரு கலைஞனும் தன் எழுத்தின் மூலமாக, ஓவியம் மூலமாக, இசைமூலமாகச் சித்தரிக்கிற மனிதனின் முகம் இன்னும் கம்பீரமாகவும் பிரிவு நிரம்பிய தாகவுமிருக்கிறது. அதே போல, வாழ்க்கை தன்னுடைய அடிப்படையான அழைப்பை நமக்கு விடுத்துக்கொண்டே தான் இருக்கிறது.
இன்னொரு பக்கத்தில், மனிதன் அடைகிற எல்லா அவஸ்தைகளையும் இயற்கையும் அடைகிறது. நூற்றாண்டுகளின் புழுதிகளுடன், அது தன் ஜீவனை வெவ்வேறு அடையாளங்களுடன் நிரூபித்துக் கொண்டிருக்கிறது. இயற்கையைப் போல மனிதனும், மனிதனைப் போல இயற்கையுமிருக்கிற, இந்த ஜீவன் மிகுந்த ஒத்திசைவும் சிநேகிதமும் இன்னும் விரிசல் விழுந்து பின்னப் பட்டுவிடவில்லை. ஒரு கமலைக் கிணற்றுக்குப் பக்கத்து பூவரச மரம் வெவ்வேறு தலைமுறை விவசாயிகளுடன் தன் பூவால் இன்னும் சம்பந்தப் படுத்திக் கொண்டிருக்கிறது. யுத்த பீதிகளுக்கிடையில் முகாம்களுக்கும் இரவல் தாய்நாடுகளுக்கும் தம்முடைய தட்டுமுட்டுச் சாமான்களுடனும் குடும்பத்துடனும் பதைத்துச் செல்பவர்களின் ஏதாவது ஒரு படகில் வளர்ப்புப் பூனைக் குட்டியும் இருந்திருக்கும். நாட்டர்டேம் கூனனை அவனுடைய நேசிப்புக்குரிய பெண், பறித்துத் தரச் சொல்கிற மதில்சுவர் ஓரத்துச்சின்னஞ்சிறு பூவைப் போல, ஒவ்வொரு கலைஞனும் இந்த வாழ்வின் அங்க ஹீனங்களுக்கும் நேசிப்புக்கும் மத்தியில் சின்னஞ்சிறு பூக்களைப் பறித்து முன்வைக்க வேண்டியதிருக்கிறது. அதுவே உகந்த காரியமென்றும் படுகிறது.
கந்தர்வனுக்கு முன் வைக்கவும் சில பூக்கள்; பூவுக்குக் கீழ் செடிகள். செடிகளுக்குக் கீழ் மனிதர்கள். பூவைப் பார்க்கையில் செடி தெரியாது. செடியைப் பார்க்கையில் நட்டு வளர்த்தவன் தெரியாது. ஒன்றைப் பார்க்கையில் ஒன்று காணரமற் போகிற நேரத்தில் எல்லாவற்றையும் பார்க்கிறதுதான் கலைஞன் காரியம். இந்தக் காரியத்தை, இப்போது வெளிவருகிற இந்தச் சிறுகதைத் தொகுப்பில் மட்டுமல்ல, ஏற்கெனவே வெளிவந்திருக்கிற தன்னுடைய கவிதைத் தொகுப்புக்கள் (கிழிசல்கள்-1981, மீசைகள்-1984) இரண்டிலும் கூடச்செய்திருக்கிறார் கந்தர்வன்.
அவருடைய கவிதைகளில் கூட, சிறுகதையாளனின் அம்சங்களே தென்பட்டு, அப்படியோர் சிறுகதைக் கலைஞனாகவே அவரை அங்கங்கே நிலை நிறுத்துகின்றன. ‘கிழிசல்கள்’ தொகுப்பில் ‘மத்தியதரம்’ என்று ஒரு கவிதை.
வீட்டுப் பிள்ளைகளை
விளையாடச் சொல்லி
வெளியே அனுப்பிவிட்டு
நமக்கு மட்டும்
நல்ல ஆர்லிக்ஸ்
நாளை தருவார்கள்
மீசைகளில், ஆரஞ்சுப் பழத்தோல் உரிந்து கிடக்கிற வாசலைப் பார்த்து விட்டு, யாருக்குக் காய்ச்சல் என்று சக ஆசிரியர் கேட்கிற ‘சத்துணவு’ என்கிற கவிதை ‘பத்தொன்பது மாதங்கள்’ என்ற நீண்ட உண்மையும் அழகும் நிரம்பிய கவிதை – இவையெல்லாம் ஒரு சிறு கதையாளனின் செய்நேர்த்தியுடன் கூடியவை.
இவருக்கு எதையும் லேசில் விட்டுக் கொடுத்து விட முடியாது. அனைத்தின் மீதும் தீராத அக்கறை, சேட்டை பண்ணுகிற குழந்தையை விசாரிக்கிறது மாதிரி, வாழ்க்கையின் ஒழுக்கத்தின் மீது இவரின் விசாரிப்புக்களும் கேள்விகளும் விழுந்து கொண்டே இருந்தாலும், இன்னொரு பக்கத்தில் கண்ணை உற்றுப் பார்க்கத் தயங்குற பையனின் வலது தோளில் தனது இடது கையைப் பதித்து ஆதரவாகப் பற்றிக் கொண்டேதான் இருக்கிறது.
பூவுக்குக் கீழே, மங்கலநாதர், அரண்மனை நாய் ஆகிய மூன்று கதைகளும் இந்தத் தொகுப்பில் அமைதி கூடி நிற்கிற கதைகள். கடைசிவரியில் பாண்டியா பிள்ளை மகன் உடைத்துச் சொன்னாலும் கூட, சீவன் கதையிலும் இந்த அமைதி இருக்கிறது.
பூவுக்குக் கீழே என்றகதையினை வெளியிட்ட பத்திரிகை, அதற்கு ‘அடுத்த விருந்தாளி வந்தாச்சு’ என்று தலைப்பு வைத்திருக்கிறது. அதேபோல சமீபத்திய இலவச இணைப்புக்களில் ஒன்றில் வெளியாகி நினைவில் இருக்கிற ‘தினம் ஒரு பாண்டியன் எக்ஸ்பிரஸ்’ கதையின் உருவத்தைவிட, நேரடியாகப் படிக்கக் கிடைக்கிற அந்தக் கதையின் மூளியாகாத வடிவம் நன்றாக இருக்கிறது. பந்திரிகைகள் தொடர்ந்து இப்படி ஜட்காக் குதிரைக்கு ரோமத்தைக் கத்தரித்து ‘மெலுவி’ விடுவது மாதிரி எதையாவது ஏன் செய்து கொண்டிருக்கிறார்கள்? கழுத்தில் பிடரி புரள பாய்ந்து பாய்ந்து எத்தனை எழுத்துக் களையும் புல்வெளிப் பரப்பையும் இந்த வாசகர்கள் அறியாதிருக்கிறார்கள்.
காதலைப்பற்றிய கதை காதல்கதை எனில், ‘காடுவரை’ யும் கூடக் காதல் கதையே. ஆனால் காதல் கதை மட்டுமல்ல. காதல் என்றைக்குக் காதலுடன் மட்டுமே.நின்றது? பெஞ்சமின் விஜயலெட்சுமியுடன் மட்டுமல்ல, நிறை தூக்கத்திலிருந்து எழுந்து கதவைத் திறக்கிற கிருஷ்ண மூர்த்தியின் அம்மா வரையும் செல்கிறது.
நல்ல எழுத்துக்கள் விசாரணையும் வெளிச்சமும் நிறைந்தது. வெளிச்சத்துடனும் வெளிச்சமூட்டிக் கொண்டும் அது மேற்சென்று கொண்டிருக்கும் இயல் புடையது இந்த வெளிச்சம் மரியம்மா டீச்சர் மேல் விழுகிறது. இளநீர் வாங்குகிற அம்மா மீதும் விற்கிற கிழவன் மீதும் ஒரே நேரத்தில் விழுகிறது. மைதானத்து மரங்களில் விழுகிறது. இந்த வெளிச்சத்தில், ஒரு புதரும் செடியுமான இடத்தில் ஸ்டாண்ட் போட்டு நிறுத்தின சைக்கிள் தெரிகிறது. சில்லறைக் காசுகள் சிதறுண்டு, நிலா மழுங்கலில் மெத்தென்று ஈரவைரத்துடன் மினுங்குகிற புல்தரை தெரிகிறது. துருவ நட்சத் திரம் பளீரென்றிருக்க கையைத் தலைக்கு வைத்து மெல்லச் சாய்கிற மனிதன் தெரிகிறான்.
அந்த மனிதனின் சாயல்
கந்தர்வனைப் போலிருக்கிறது.
என்னைப் போலிருக்கிறது.
உங்களைப்போல, அவர்களைப்
போல இருக்கிறது.
அவ்வளவு ஏன் –
நம்மைப் போலிருக்கிறது.
அம்பாசமுத்திரம்
10-12-87
வண்ணதாசன்
– பூவுக்குக் கீழே (சிறுகதைகள்), முதற்பதிப்பு: டிசம்பர் 1987, அன்னம் (பி) லிட், சிவகங்கை.
கி.ராஜநாராயணன் கடிதம் – பூவுக்குக் கீழே – டிசம்பர் 1987
‘ராஜ பவனம்’
இடை செவல் (தபால்)
627 716
பிரியமுள்ள கந்தர்வனுக்கு,
நலம்.
ஒரு ஒரு கதையாகத்தான் படிக்கணும் என்று நினைத்தது. அதே சோலியாகப் படித்து முடித்து விட்டேன்!
கதையின் முடிவில் – அது எழுதி முடித்த தேதி அல்லது பத்திரிகையில் வந்த தேதியையாவது குறித்திருக்கலாம். (எழுதிய அல்லது வந்த தேதிப் பிரகாரம் கதைகளை வரிசைப் படுத்த வேண்டு மென்று அவசியமில்லை;) யோசிக்கிறவர்களுக்கு, எழுத்தாளனின் வளர்ச்சியைத் தெரிந்து கொள்ள உதவும் இது.
வந்த பத்திரிகையின் பெயரையும் கீழே கொடுப் பதும் நல்லதுதான். கதை கேட்ட பத்திரிகையின் வாசகரை முன்னிறுத்தியும் கதை எழுதப்படுவது உண்டு. இல்லையென்றாலும், எப்படி என்று தெரிந்துகொள்ள உதவும்.
‘பூவுக்குக் கீழே…’ புத்தக அமைப்பு பரவாயில்லை. ஆனாலும் அட்டைப்பட அமைப்பு ஒரு வித மந்த கதியிலான கலர் அமைப்பாக – பார்க்கப் பார்க்க – தெரிகிறது எனக்கு.
வாசகன் புத்தகத்தைக் கையில் எடுத்தவுடன் வாசிக்கத் தொடங்கி விடுவதில்லை. அப்படியும் இப்படியுமாகப் புறட்டிக் கொண்டே இருப்பான். முதல் கதையை வாசிப்பானா கடைசிக் கதையை வாசிப்பானா சொல்ல முடியாது. தலைப்புக் கதையை வாசிப்பானா குறைந்த பக்கங்கள் உள்ள கதையை முதலில்ப் படிப்பானா என்றும் தெரியாது. சிலர் முன்னுரையைக் கடேசில்ப் படிப் பார்கள் இன்னுஞ் சிலர் முன்னுரை முகவுரைகளைத் தொடுவதேயில்லை;
அச்சுக்கு – புத்தகமாக்க – அனுப்பும்போது கதைகளை வரிசைப்படுத்துவதே ஒரு கலை. எனது ‘கதவு’ தொகுப்பில் நான் நினைத்தபடி இப்படி அமைந்தது. நீங்களும் இதில் கவனமாக இருந்திருப்பதாகவே தெரிகிறது. நான் இதில் முதல் கதையைப் படித்தேன்; பிறகு அடுத்ததாக கடேசிக்கதையை படித்து முடித்தேன்; அப்புறம் தலைப்புக் கதையை படித்துப் பார்த்தேன். பிறகு கிடைத்த கதையெல்லாம்…. படிக்கப் படிக்க ஆனந்தமாக இருந்தது. இப்படியும் ஒன்று இருந்திருக்கே நமக்குத் தெரியாமல்! என்றுபட்டது. (ஆக, பன்னிரெண்டு ஆள்வார்களில் நீங்களும் ஒருத்தர் என்றாகிவிட்டது.) எனக்கென்று சில அபிப்ராயங்கள் உண்டு. இது 65 வயதுக்குமேல் அனுபவத்தில் வந்தது. கலையாளியை உண்டாக்க முடியாது. அவனிடம் ஒரு சிறூ, பொறியாவது இருக்கணும்; அதை ஊதிப் பெருக்கலாம், வெறும் வாழைமட்டைகளில் எந்த நல்லதங்காள் வந்தாலும் தீப் பற்றவைக்க முடியாது. பிறவியிலேயேபால் மரங்கள் என்று உண்டு. எல்லாமரங்களிலுமே கீச்சியவுடன் பால் சொட்டுவதில்லை. மனிதர்களிலும் இதேபோல்த்தான். இந்தத் தொகுதியைப் படித்து முடித்ததும் கந்தர்வன் ஒரு பால் மரம் என்று கண்டுகொண்டேன்.
சில இடங்களில் என்னுடைய மனசுக்குச் சமீபம் – மிகச் சமீபம் – வருகிறீர்கள். என்னுடைய சஹிருதயனாக இருக்கிறீர்கள். எனது ஸ்ருதியில் பாடுகிறீர்கள்.
என்னுடைய O குரூப் ரத்தமாக இருக்கிறீர்கள்,
“அடிக்கடி நாம் எதையாவது மேகத்தையோ தண்ணீர் கடகட என்று ஓடுவதையோ பார்த்து சந்தோஷப்பட்டு விடுகிறோம். சில நிமிஷம் பார்த்துக்கொண்டே நின்றுவிடுகி றோம், அப்போது ஒரு பயம்: யாராவது அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் நம்மைப் பார்த்துவிடுவார்களோ என்கிற பயந்தான். யாராவது கிட்டவந்து என்னத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறாய் என்றுகேட்டுவிட்டால் ‘ஒன்று மில்லை, சும்மாதான் நின்று கொண்டிருந்தேன் என்று அசடு வழியச் சொல்லித்தீர்க்கிறது. இந்த லஜ்ஜையையெல்லாம் ஒருவாறு அடக்கிக்கொண்டு வீட்டுக்குப் போகிறோம். தாகூரை ஷெல்பி லிருந்து எ டுத்து வாசிக்கிறோம். அப்போது தெரிகிறது அவர் நம்மைவிட ஏமாளி என்று. நம்மைவிட எத்தனையோமடங்கு மேகத்தையும் தண்ணீர் ஓட்டத்தையும் பார்த்து அனுபவித்ததா கத் தெரிகிறது. பைத்தியத்திலும் நமக்கு ஒரு அண்ணா ஏற்பட்டுவிட்டார் என்று தெரியவருகிறது. எப்படியும் அதுநமக்கு ஒரு பக்கபலந்தானே.” என்கிறார் ரசிகமணி டி.கே.சி. [ரசிகமணி, டி.கேசி.யின் கடிதங்கள்’. பக்கம் 106.]
“பூவுக்குக்கீழே…” கதை படிக்கும் போது, எனக் கும் ஒரு பயித்தியாரத் தம்பி இருக்கார் என்று தோன்றியது: இங்கே கார்த்திகைப்பூ என்று ஒரு பூ உண்டு, 5விரல்கள் கொண்டது. மேல்ப் பகுதி பாதி சிகப்பாகவும் கீழ்ப்பகுதி மஞ்சளாகவும் இருக்கும்; மருதாணி வைத்த பெண் விரல்கள் போல. சங்க இலக்கியத்தில் இந்தப் பூவுக்கு காந்தள் மலர் என்று பேராம். இதை நாங்கள் கரிசல்ச்சீமையின் தேசியமலர்என்று வேடிக்கையாகக் குறிப்பிடுவோம்! இந்தப் பூச்செடிக்கு கிழங்கு உண்டு என்று சொல்லுவார்கள். இலை நுனியில் பற்றிப்படர அல்லது பற்றிக்கொள்ள சிறிய ஸ்பிரிங்போல இருக்கும்.
“சார்வாகன்” என்ற ஹரி.ஸ்ரீனிவாசன் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். புதுக்கவிதைப் பாதையை செப்பனிட்டுக் கொடுத்தவர்களில் இவரும் ஒருவர், இவருடைய மனைவி பத்மா அம்மையாருக்கு இந்த பூக்களின் கொடி செடிகளின் பேரில் நல்லகிறுக்கு. அந்த அம்மையார் வீட்டில் ஷ காந்தள் மலர்ச்செடி இருந்தது. அவர்கள் வீட்டில்த்தான் நான் முதல் முதலில் மஞ்சள் முல்லைப் பூ பார்த்தது
ஒரு கப் அளவுள்ள வெங்கலத் தொட்டி’ யில் சுண்டு விரல் அசலமுள்ள சப்பாத்திக் கள்ளி இலைகள், ரோமம் போன்ற முட்களுடன், பெரிய்ய சப்பாத்திச்செடியை, “பான்ஸாய்” செய்தது போல! அந்த அம்மையாருக்கு தாவரங்கள் பேரில் அப்படி ஒரு மோகம்,
“மரங்கள் செடி கொடிகள் எதுவும் காற்றைத் தவிர வேறு க கழிவுப் பொருள்கள் எதையு வெளியிடுவதில்லை. மனிதர்கள் மிருகங்கள் இந்த விஷயத்தில் ரொம்ப அசிங்கம்….” என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பதை பத்மாவதி அம்மை வாசிக்க நேர்ந்தால் எவ்வளவு குதூகலம் அடைவார் என நினைத்துப்பார்க்கிறேன்.
(ஆனால் அவருக்கு தமிழ் எழுதப்படிக்கத் தெரியாது தாய்மொழி கன்னடம். இருவரும் லண்டனில் வைத்யக்கல்லூரியில் படித்தவர்கள். இஷ்டப்பட்டு மணந்துகொண்டார்கள். தமிழில் நன்றாகப் பேசுவார்கள் இவர்கள் இருவரும் இப்போது வடநாட்டில் எங்கோ தொலைவில் இருக்கிறார்கள்)
விளையாட்டு மைதானத்தை சினிமாக் கொட்டகையாக ஆக்குவது போலவே மரங்களை வெட்டுவதும் ஒரு கொடுமைதான். ஊட்டிக்கு நாங்கள் (மனைவியும் நானும்) போயிருந்தபோது சித்திரங்கள் வரையும் அருமை நண்பர் திரு P.N.ரவிவர்மன் எனக்கு ஒரு இங்கிலீஷ்- வெளிநாட்டுப் பத்திரிகையைக் காட்டினார். அதன் அட்டைப்படத்தில் ஏதோ ஒரு வெளிநாட்டு ஓவியர்- பெயர் ஞாபகமில்லை-வாடிகன் தேவாலயத்திலுள்ள மைக்கல் ஏஞ்சலோவின் சிற்பத்தை அடிப்படையாக வைத்து வரைந்திருந் தார், அந்த ஓவியத்தை பார்த்ததும். கொஞ்ச நேரத்தில் உணர்ச்சிப் பெருக்கினால் நமது கண்கள் பனித்துவிடும். ஏசுகிருஸ்துவை- அவர் ஆவி பிரிந்து விட்டது என்று தெரிந்ததும் சிலுவையிலிருந்து ன்றக்குகிறார்கள். அப்படி இறக்கப்பட்ட அந்த உடம்பை மரியாளின் மடியில் கிடத்துகிறார்கள். இடதுகையினால் ஏசுவின் தலையை ஏந்திப் பிடித்துக் கொண்டு வலதுகை அவரின் துடைகளைத் – தாங்கிக் கொண்டு, தாளமுடியாத துக்கத்துடன் ஏசுவின் முகத்தையே அவள் பார்த்துக் கொண்டிருப்பதாக மைக்கேல் ஏஞ்சலின் சிற்பம் அமைந்திருக்கிறது. இந்த சித்திரத்தில் கன்னி மரியாளின் இடத்தில் வனதேவதை இருக்கிறாள். அவள் மடியில் வெட்டப் பட்ட ஒரு விருட்சத்தின் வேர்-அதன் பாதி உடம்பு ஒருமையாகவும் பாதிக்குக்கீழ் மனிதக் கால்கள் ரண்டு பிரிவதைப்போல் ரண்டு கனத்த வேர்கள் பிரிந்து தொங்குகின்றன. கைகளைப் போல் ரண்டு சில்லு வேர்கள். வனதேவதையின் பின்சுற்றம் (பேக் ரவுண்ட்) அழிந்த காடுகள்.
கந்தர்வனைப் போலவே அந்த ஓவியரும் தனது ஓவியத்தின் மூலம் ஒரு செய்தி சொல்லுகிறார்.
சில கதைகளில் பிரச்சார அழுத்தம் கொடுக்கிறீர்கள் (தனித்தனியாய் தாகம்) இளநீர் கொண்டு வந்தவன் அழுக்குநீரை குடிப்பதற்கு அவ்வளவு அழுத்தம் தேவையில்லை, சாதாரணமாகவே சொன்னால் போதும். உரத்துச் சொன்னால் பிரச்சாரத்துக்கு பலமில்லை. காதுகளில் மெல்லவே கிசுகிசுங்கள் அதுவே அதிவேகமாவும் உரத்தும் பரவி விடும்!
கதையின் சில முடிவுகள் வெகு அழகு, ‘அடுத்தது’ கதையில் வருகிற ‘ஒரு அழகான ஃப்ரிட்ஜ் திரையில்’ என்கிற வாக்கிய முடிவு வெகு அருமை,
‘அரண்மனை நாய்’ யை நான் ஒரு சிம்பாலிக்காகவே பார்த்தேன். ஆகவே அதன் கடைசி முடிவும் வெகு ஜோர்!
மொத்தத்தில் திருப்தியான தொகுதியாக அமைந்து விட்டது.
இன்னும் நீங்கள் கதைகளையே எழுதிக்கொண்டிராமல் (!) பட்டென்று ஒரு நாவலுக்கு அடிப் போட்டு மளமள என்று எழுதி முடியுங்கள். இது தான் சமயம். பேனாமுள்ளின் ஈரத்தைக் காய விடாதீர்கள்.
உங்கள் வீட்டில் அனைவருக்குமே எனது பிரியங்கள்.
கி.ராஜநாராயணன்
17.9.88
– பூவுக்குக் கீழே (சிறுகதைகள்), முதற்பதிப்பு: டிசம்பர் 1987, அன்னம் (பி) லிட், சிவகங்கை.