எஸ்பொ என அறியப்படும் ச.பொன்னுத்துரை (24 மே 1932 – 26 நவம்பர் 2014) ஈழத்தின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, புதினம், நாடகம், கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு, அரசியல் என பல பரிமாணங்களிலும் எழுதியவர். 40திற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். 1989 முதல் புலம் பெயர்ந்து ஆத்திரேலியாவின் சிட்னி நகரில் வாழ்ந்து வந்தார். சென்னையில் மித்ர என்ற பதிப்பகத்தை நிறுவி அதன் மூலம் நூல் வெளியீடுகளிலும் ஈடுபட்டிருந்தார்.
பொன்னுத்துரையின் முதலாவது சிறுகதை 1948 ஆம் ஆண்டில் சுதந்திரன் பத்திரிகையில் வெளியானது. தமிழக இதழ்களான காதல், பிரசண்ட விகடன், ஆனந்தபோதினி ஆகிய சஞ்சிகைகளிலும் எழுதினார்.
இவருக்கு தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2010 ஆம் ஆண்டுக்கான வாழ்நாள் இயல் விருது வழங்கப்பட்டது.
எஸ். பொன்னுத்துரை 2014 நவம்பர் 26 அன்று சிட்னி கொன்கோர்ட் மருத்துவமனையில் காலமானார். இவரது ஒரு மகன் ஈழப்போரின் போது 1986 கடற்சமரில் இறந்த ஒரு மூத்த விடுதலைப் புலிப் போராளி ஆவார்.
படைப்புகள்
- வீ (சிறுகதைகள்)
- ஆண்மை (சிறுகதைத் தொகுதி)
- தீ (நாவல்)
- சடங்கு (நாவல்)
- அப்பையா
- எஸ்.பொ கதைகள்
- கீதை நிழலில்
- அப்பாவும் மகனும்
- வலை + முள்
- பூ
- தேடல்
- முறுவல்
- இஸ்லாமும் தமிழும்
- பெருங்காப்பியம் பத்து (தொகுப்பாசிரியர்)
- மத்தாப்பு + சதுரங்கம்
- ?
- நனவிடை தோய்தல்
- நீலாவணன் நினைவுகள்
- இனி ஒரு விதி செய்வோம்
- வரலாற்றில் வாழ்தல் (சுயசரிதை)
- ஈடு (நாடகம்)(அ.சந்திரஹாசனுடன் சேர்ந்து எழுதியது)
- மாயினி
- மணிமகுடம்
- தீதும் நன்றும்
- காந்தீயக் கதைகள்
- காந்தி தரிசனம்
- மகாவம்ச (மொழிபெயர்ப்பு)
ஜெயமோகன் – அஞ்சலி: எஸ்.பொ, November 28, 2014
ஈழ இலக்கியத்தின் முதன்மைப்படைப்பாளிகளில் ஒருவரான எஸ்.பொன்னுத்துரை ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் நவம்பர் 26-ஆம் தேதி இரவு 11 மணிக்கு காலமானார். அவருக்கு என் அஞ்சலி.
ஈழ இலக்கியத்தின் கலகக்குரலாக ஒலித்தவர் எஸ்.பொ. அன்று ஈழ இலக்கியத்தை மூடியிருந்தது கைலாசபதி, சிவத்தம்பி இருவராலும் முன்வைக்கப்பட்ட முற்போக்கு எழுத்தின் முன்வடிவம். அதுவன்றி வேறு எழுத்தே இல்லை என்ற நிலை. அதையொட்டி செய்யப்பட்ட போலி எழுத்துக்களின் பெருக்கத்தை மீறி உண்மையான உணர்ச்சிகள் இலக்கியத்தில் இடம்பெறவே முடியாத சூழல். இடம்பெற்றாலும் அவை ‘அரசியல்சரி’ களைக் கொண்டு அடித்து நொறுக்கப்பட்டன.
மறுபக்கமாக ஒலித்த குரல் மு.தளையசிங்கத்துடையது. ஆனால் அவர் விரைவிலேயே இலக்கியத்தில் இருந்து விலகி சர்வோதயம், தீண்டாமை ஒழிப்பு, ஆன்மீகம் போன்றவற்றில் ஈடுபாடு காட்டத் தொடங்கினார். அத்தருணத்தில் எழுந்த படைப்பாளியின் குரல் என எஸ்.பொவை சொல்லலாம். இடதுசாரிகள் இலக்கியத்தை அரசியல்பிரச்சாரமாக ஆக்க முயன்றதற்கும் அவர்களின் அரசியல்சரி சார்ந்த ‘ரேஷன்கார்டு விமர்சனத்துக்கும்’ எதிராக எஸ்.பொ தீவிரமாகப் பேசினார். புதிய படைப்பாளிகள், வாசகர்கள் நடுவே அலைகளை உருவாக்கினார்.
யாழ்ப்பாணம் அருகே நல்லூரில் பிறந்த எஸ்.பொ சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும், சென்னை கிறித்தவக் கல்லூரியிலும் உயர்கல்வி பயின்றார். இலங்கையிலும் நைஜீரியாவிலும் ஆங்கிலஆசிரியராக வேலைபார்த்தார். அவரது மகன் பொன் அநுர சிட்னியில் புகழ்பெற்ற மருத்துவர். எஸ்.பொ ஆஸ்திரேலியக் குடிமகன்.
எஸ்.பொவின் முதன்மையான ஆக்கம் என்பது மெல்லிய கேலியுடன் யாழ்ப்பாணத்து நடுத்தர வாழ்க்கையைப் பார்க்கும் சடங்கு என்ற குறுநாவல்தான். தீ என்ற குறுநாவலும் முக்கியமானது. ஆண்மை என்ற சிறுகதைத் தொகுதியில் குறிப்பிடத்தக்க சிறுகதைகள் உள்ளன.
எஸ்.பொ செனகல் நாட்டு எழுத்தாளரான செம்பென் ஒஸ்மேனுடைய ஹால [Xala] என்ற குறுநாவலையும் கூகி வா தியோங்கோ என்ற கென்ய நாட்டு எழுத்தாளரின் தேம்பி அழாதே பாப்பா [Weep Not Child] என்ற நாவலையும் தமிழாக்கம் செய்திருக்கிறார்.
எஸ்.பொவின் இரு கட்டுரை நூல்கள் முக்கியமானவை. நனவிடைதோய்தல் என்ற நூல் யாழ்ப்பாணத்தின் அக்கால வாழ்க்கையை நுணுக்கமான தகவல்கள் வழியாக சித்தரிப்பது. ஒட்டுமொத்த ஈழப்போராட்டத்தின் பின்னணியைச் சொல்லும் சுயசரிதையான ‘வரலாற்றில் வாழ்தல்’ ஓர் ஆவணக்களஞ்சியம்.
மித்ர என்ற பதிப்பகம் மூலம் ஏராளமான ஈழப் படைப்புகளை தமிழ்நாட்டில் பிரசுரம் செய்தவர் எஸ்.பொ. கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2010-க்கான வாழ்நாள் இயல் விருது வழங்கப்பட்டபோது நான் கனடா சென்று அப்பரிசை வழங்கினேன்.
எஸ்.பொ என்னுடன் நெருக்கமான தொடர்புள்ளவராக இருந்தார். சென்னையில் இருந்தால் என்னை அழைப்பார். நான் அவரைச் சென்று பார்ப்பதுண்டு. ஈழ இலக்கியப்பூசல்களைப் பற்றியும் அக்கால அரசியல் பற்றியும் ஏராளமான வேடிக்கைக் கதைகளை சொல்லியிருக்கிறார்.
எஸ்.பொ பற்றி நான் எழுதிய ‘யாழ்நிலத்துப்பாணன்’ என்ற கட்டுரை அவருக்கு மிகவும் பிடித்ததாக இருந்தது. இயல் விருது விழாவில் ஏற்புரையில்கூட ‘நான் ஒரு பாணன்’ என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டார்.
எஸ்.பொவின் துடுக்கும் நக்கலும் கலந்த பேச்சு நினைவில் ஒலிக்கிறது.