அ.யேசுராசா

 

அ. யேசுராசா (1946, டிசம்பர் 30, குருநகர், யாழ்ப்பாணம்) ஈழத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் ஆவார். 1968 முதல் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்துக்கள், விமர்சனம் போன்ற பல தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் இவர் ஓர் ஓய்வுபெற்ற அஞ்சல்துறை அதிகாரி. இவர் கலை, இலக்கியம், ஏனைய பொது அறிவுத்துறைகளில் ஈடுபாடு கொண்டவர். கலை, இலக்கியங்கள் அனுபவ வெளிப்பாடாய் அமைய வேண்டுமென்பதிலும், கலை இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு பேணப்பட வேண்டுமென்பதிலும் உறுதிகொண்டவர். யாழ். திரைப்பட வட்டம், யாழ். பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகின் திரைப்பட வட்டம் என்பவற்றில் தீவிரச் செயற்பாட்டாளராக இருந்தவர்.

பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், மரணத்துள் வாழ்வோம், தேடலும் படைப்புலகமும் ஆகிய நூல்களின் தொகுப்பாளர்களில் ஒருவர். காலம் எழுதிய வரிகள் கவிதைத் தொகுதியின் தொகுப்பாளர். அலை சிற்றேட்டில் முதலில் ஆசிரியர் குழுவிலும் – நிர்வாக ஆசிரியராகவும் பின்னர் 25ஆவது இதழிலிருந்து ஆசிரியராகவும் இருந்தவர். இளைய தலைமுறையினரின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கவிதை, தெரிதல் ஆகிய இதழ்களை வெளியிட்டு அவற்றின் ஆசிரியராகவும் பணியாற்றியவர். மாற்றுப் பத்திரிகையாக யாழ்ப்பாணத்தில் வெளிவந்த திசை வார ஏட்டின் (1989 – 1990) ஒரே துணை ஆசிரியராகவும் இருந்தவர்.

இவர் கல்விப் பொதுத்தராதரப்பத்திர சாதாரண தரம் வரை, ஊரிலுள்ள சென். ஜேம்ஸ் ஆண்கள் பாடசாலையிலும், உயர்தரக் கல்வியை கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலயத்திலும் கற்றவர். அஞ்சல் அதிபர், தந்தியாளர் சேவையில் இணைந்து பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

திரைப்படங்கள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர் 1979 – 1981 காலப்பகுதியில் யாழ். திரைப்பட வட்டத்தின் செயற்பாடுகளில் முக்கிய பங்காற்றினார். தற்போது யாழ். பல்கலைக்கழக திரைப்பட வட்டத்தின் திரைப்படக் காட்சிகளில் பங்கெடுத்து வருகிறார்.

1975 இல் தொடங்கப்பட்ட அலை இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவரான யேசுராசா 1990 வரை தொடர்ந்து செயற்பட்டு 35 இதழ்களை வெளியிட்டார். 1994 – 1995 காலப்பகுதியில் இளங்கவிஞர்களுக்கான இருமாத இதழான கவிதை இதழை வெளியிட்டார். 2003 மார்கழி முதல் தெரிதல் என்ற சிற்றிதழை வெளியிட்டு வருகிறார்.

அலை வெளியீடு மூலம் இதுவரை ஒன்பது நூல்களையும் வெளியிட்டுள்ளார்.

இவரது நூல்கள்

தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் – (சிறுகதை, மார்கழி 1974. மார்கழி 1989)
அறியப்படாதவர்கள் நினைவாக – (கவிதை, 1984)
பதினொரு ஈழத்துக் கவிஞர்கள்” – (கவிதை, 1984, 2003)
மரணத்துள் வாழ்வோம்” – (கவிதை, 1985, 1996)
காலம் எழுதிய வரிகள்” – (கவிதை, 1994)
தூவானம் – (பத்தி, 2001)
பனிமழை” – (மொழிபெயர்ப்புக் கவிதைகள், 2002)
பதிவுகள்” – (பத்தி, 2003)
குறிப்பேட்டிலிருந்து” – (கட்டுரைகள், 2007)
திரையும் அரங்கும் – கலைவெளியில் ஒரு பயணம் (கட்டுரைகள் 2013)


என்னுரை – தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 1974, ஆசிரியரால் வெளியிடப்படுவது.

பொதுவாகவே எழுத்தாளர், கவிஞர் என்று சொல்லிக் கொள்ளுகிறதில் பலருக்கும் பெருமிதமாகப் படுகிறது; எனக்கொன்றும் அப்படியிலை. மனிதனை விடவும் ‘லேபல்கள்’ முதன்மையானதாக இல்லை. உரத்து முழக்கப்படுகின்ற கோஷங்களெல்லாம் இலக்கியத்திற்கான வெறும் சப்ஜெக்ற்றுகளாக மட்டுமே நின்று யதார்தத்தில் அர்த்தமிழந்துபோக, பெரிதும் வெற்றுமனிதர்களாகவேயுள்ள இக்கூட்டத்தில் இணைகிறதிற் பெருமிதமென்ன? கேவலங்கள் நிறைந்த இச்சூழ்நிலையில் எம்மையும் எழுத்தாளர்களெனச் சொல்லிக்கொள்ள வெட்கப்படுவோமென தளையசிங்கம் தான் ஒருமுறை, சொன்னாரென்று நினைக்கின்றேன். எழுத்தாளவென்று சொல்வதைவிடவும் நல்ல இரசிகனெனச் சொல்லிக் கொள்ளுகிறதில், நான் பெருமிதம் அடையக்கூடும். 

‘கதைகள் தயாரிக்கும்’ பலரை நானும் அறிவேன். இத்தகைய தயாரிப்பு ‘அந்தாமெதுவும்’ எனக்கு இல்லை. சில அனுபவங்களையும் உணர்வுகளையும் பகிர்ந்துகொள்ள எண்ணினேன். எழுதவேண்டும் போலிருந்ததால் எழுதினேன்; எழுத வேண்டுமென்பதற்காக எழுதியதில்லை. 

1966 -1974க்குமிடைப்பட்ட காலத்தில் பதினொரு சிறுகதைகளை மட்டுமே எழுதினேன். ‘கோடை இடிகள்’ என்ற முதலாவது கதை தவிர்ந்த ஏனையவை, இத்தொழுதியில் இடம் பெறுகின்றன. இதுவரை நான்கு கதைகள் மட்டும்தான் சஞ்சிகைகளில் பிரசுரமாகின. தேசிய இலக்கியத்தைக் கட்டிவளர்க்கிறதாய்ச் சொல்லிக் கொண்டு வங்கத்தை ளத்தையும் நோக்கி (தமிழ் நாட்டினை நோக்கி அல்லவாம்)ச் செல்லுகிறவர்கள்’, போகிற அவசரத்தில் ‘நீட்டிய மணிக்கரத்தினரையும்’ ‘புகழ்வழிபாடு செய்கிறவர்களையும்’ அரவணைத்தபடி, பாராமுகங்காட்டிச் சென்ற கதைகளும் இதில் உள்ளன; இரண்டு பிரபல பத்திரிகைகளினால் ஏற்றுக் கொள்ளப்படாதவையும் உண்டு. 

எழுத்திற் சிறைப்பிடித்த அனுபவஉணர்வுகளை மற்றவர்க்கும் வெளிப்படுத்தவேண்டுமென்ற முனைப்பின் வெளிப் பாடாய்ப், புத்தகமும் வருகிறது. உண்மையான இலக்கிய இரசவையோ அடிப்படை நேர்மை உணர்வுகளோ இல்லாத, வேறெவெற்றெவற்றினாலோ இலக்கியக் கரையொதுங்கிய பலர் விமர்சகர்களெனத் தடியுடன் குந்தியிருக்கவும் காண்கிறோம். ‘நேர்மையீனக் குழறுபடிகள் மலிந்துள்ள ஈழத்து இலக்கிய உலகு’ எனக் குறைப்பட்டுக்கொண்டே, ஓரே இலக்கியப் படைப்பினைப் பற்றிப் பேராதனையிலொன்றும் கொழும்பில் வேறொன்றுமாகச் சொல்கிற பெரியவரிகள்; ஈங்களின் அணியில் நில்லாததாற் போதும் மஹாகவி போன்ற ஆற்றல்களையே இருட்டடிப்புச் செய்ய முயல்கின்ற. ‘கடல்கடந்த பிரபலக்காரர்கள்’; ஆறாவது தசாப்தத்தின் குறிப்பிடத் தகுந்த மூன்று இலங்கைப் புதுக்கவிதையாளர்களில் ஒருவரெனத், தானே எழுதிய ஒருவருக்குச், ‘சுட்டுப்போட்டாலும் கவிதை எழுதவராதென்ற ஞானோதயத்தினைச் சொந்தக் காழ்ப்புகளினடியாகத் தீடீரெனப் பெற்றுக்கொள்கின்ற, ‘புதுக்கவிதைக்காகவே பிறவி எடுத்துள்ளதுபோற் பாவனைகாட்டுகின்ற இளைய விமர்ச்கர் எனப்படுபவர்’ போன்ற, ‘விமர்சகர்களிடமிருந்தா நாம் அபிப்பிராயங்களினை எதிர்பார்க்கின்றோம்?; நிச்சயமாக இல்லை. எந்தப் படைப்பாளனையும் நிலைநிறுத்துவதும், அழிப்பதும் தமது கைகளிற்றான் தங்கியுள்ளதென்பதுபோன்ற இவர்களின் இவ் விமர்சக இறுமாப்பை, தமிழ்நாட்டிலும் “இந்த நாவலை விமர்சிக்காமல் விட்டதற்கே அவர் எனக்கு நன்றி சொல்லவேண்டும்” என்ற (சா.கந்தசாமியின் சாயாவனம் நாவல் பற்றிய வே.சாமிநாதனின்) கூற்றில் நிலையில் வெளிப்படும் விமர்சக ஆணவத்தினை, ஆளுமையுள்ள எந்தப் படைப்பாளனுமே பொறுக்கமாட்டான். 

இலக்கிய ஆர்வமும், நேர்மையுணர்வுகளும் நிரம்பிய சில விமர்சகர்கள், பிரக்ஞையுள்ள ‘உள்வட்ட’ இரசிகர்களிடமிருந்துதான் அபிப்பிராயங்கள் எதிர்பார்க்கப்படுகின்றதேயொழிய, ‘பிரபல விமர்சகர்கள்’ பரந்துட்ட வாசகர்களிடமிருந்து எதிர்பார்த்து ஏமாறுவதொன்றும் எம்முடைய விதியாக இல்லை. 

இத் தொகுப்பிற்கு திரு. சண்முகம் சிவலிங்கம் அவர்கள் முன்னுரை எழுதியுள்ளார். எனக்கு நன்கு பிடிங்கின்ற கவிஞர், நல்ல விமர்சகராகவும் இருந்து அவரிடமே முன்னுரையும் பெற்றுக்கொள்ள முடிந்ததில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. நேரடிப் பழக்கமோ கடிதத் தொடர்புகளோ கொண்டிருக்காதவனா இருந்தபோதும், விடுத்த வேண்டுகோளினை ஏற்று எதிர்பாராத சிரமங்களின் மத்தியிலும் விரிவானதொரு முன்னுரையினை எழுதி உதவிய அவரது நேசபாவத்திற்கு, என்றும் கடப்பாடுடையேன். முன்னுரை கேட்டுவிட்டார்களே என்பதற்காக ஒரேயடியாய்ப் புகழுகிற சில, ‘பிரபலர்களை’ப் போலல்லாமல் கருத்து, படைப்பியல் அம்சங்களென்ற இரு பக்கங்களையும் தன்னுடைய தளத்தில் நின்றும், நேர்மையாக அணுகியுள்ளார். சில அபிப்பிராய பேதங்களுமுள்ளன; அது, அவருடைய தர்மம். இப் பேதங்களை இங்கு பெரிதாகக் கதைப்பது என்னுடைய நோக்கமல்ல. எனினும் ஒரு சிறு குறிப்பு. ‘இருப்பு’ கதைபற்றி காதல், நட்பு என்பவை புறநிலைகளாற் பாதிக்கப் படாதவை யென ஆசிரியர் கருதுகின்றார் போல’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இவைகளின் மீதான புறநிலைகளின் பொதுவான பாதிப்புக்களைப் பற்றிய பிரக்ஞை அக் கதையின் பாத்திரத்துக்கும் எழுதியவனுக்கும் இல்லாமலில்லை. எனினும் இப்புறநிலைகளின் பாதிப்புக்களையும் மீறி வாழ்ந்து காட்டுகிறவர்களை யதார்த்தத்திலும் கண்டிருப்பதில், (அத்தகையவர்கள் சிறுதொகையினர் என்பது வேறு விடயம்) அத்தகையவர்களென விசுவசிக்கப்பட்டவர்கள் மாறிப் போவதே அப்பாத்திரத்தின் தவிப்பாகவும், விளங்க முடியாமையாகவுமுள்ளது. 

புத்தகத்தின் சமகாலத்தன்மை தெரியும்படியாக பொருத்தமான நவீன ஓவியம் வரைந்து தந்த நண்பர் சௌவுக்கும், மஹாகவியின் உருவத்தை வரைந்துதவிய நண்பர் முறுதலா விற்கும் எனது நன்றிகள். 

இப் புத்தக வெளியீட்டு முயற்சியில் ஆரம்பத்திலிருந்தே தன் நேரச்சிதைவையும் பொருட்படுத்தாமல் பல்வேறு வகையில் உதவிய திரு.செ.குணசிங்கம் M.A. அவர்களுக்கும், அக்குறணை அச்சகத்தினருக்கும் நன்றி சொல்ல விழைகையில், கையெழுத்தில் கிடந்த கதைப்பிரதிகளை எப்போதோ எப்போதோவெல்லாம் தட்டெழுத்தில் பொறித்துத்தந்த எனது நண்பர்களின் நட்பும், நெஞ்சில் நிழலாடுகிறது. 

அ.யேசுராசா,
குருநகர், யாழ்ப்பாணம்.
17-12-74.