அ.செ.மு. என்ற அ.செ. முருகானந்தன் ஈழத்துச் சிறுகதை இலக்கியத்திற்கு பெருமை கூட்டிய எழுத்தாளர். இரண்டாம் பரம்பரை எழுத்தாளர். ஈழகேசரி பண்ணையைச் சேர்ந்தவர். ஈழகேசரியின் ஆசிரியராகப் பணியாற்றியவர். மறு மலர்ச்சி இயக்கத்தை ஆரம்பித்தவர்களில் ஒருவர். மறுமலர்ச்சியின் இணை யாசிரியராகவும் எரிமலை என்ற சஞ்சிகையின் ஆசிரியராகவும் விளங்கியவர். வீரகேசரி, ஈழநாடு ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியப்பீடங்களில் பணியாற்றி யவர். பல்வேறு புனைபெயர்களில் நிறைய எழுதியவர். அவரது சிறுகதைகள் யாழ்ப்பாண சமூககளத்தில் மட்டுமன்றி மலையக்திலும் மண் வாசனையோடு வரையப்பட்டிருக்கின்றன. இவர் எழுதிய “புகையில் தெரிந்த முகம்” நூல் உருவில் வெளிவந்தது. காளி முத்துவின் “பிரஜாவுரிமை” என்ற சிறுகதை துரைவி வெளியீடான “உழைக்கப் பிறந்தவர்கள்” என்ற பெரும் சிறுகதைத் தொகுப்பில் வெளிவந்துள்ளது. அவரது பல சிறுகதைகளைத் தொகுத்து யாழ். மாவட்ட கலாசாரப் பேரவை “மனித மாடு” என்ற தொகுதியை வெளியிட்டிருக்கிறது. இவர் அமரராகிவிட்டார்.
தமிழ் இலக்கிய வரலாற்றில் எழுத்தாளர் அ.செ.முருகானந்தனுக்கு முக்கியமானதோரிடமுண்டு. அவரது படைப்புகளில் சிறுகதைகள் சில விடுதலைப் புலிகளின் கலைப் பண்பாட்டுக் கழகத்தினரால் தொகுக்கப்பட்டு ‘மனிதமாடு’ என்னும் தலைப்பில் வெளியிடப்பட்டன. யாழ் மாவட்டக் கலாச்சாரப் பேரவையினரும் அ.செ.மு.வின் சிறுகதைகளைத் தொகுத்து ‘மனிதமாடு’ என்னும் தலைப்பில் வெளியிட்டிருக்கின்றார்கள். குறுநாவல்கள், நாவல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் அவர் எழுதியிருந்தபோதும் அவை இதுவரை நூலுருப் பெறவில்லை. ஈழநாடு பத்திரிகையில் அவர் பல்வேறு புனைபெயர்களில் கட்டுரைகள், தொடர்கட்டுரைகள் ஆகியவற்றைப் பல்வேறு விடயங்களை மையமாக வைத்து எழுதியிருக்கின்றார். ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றில் ‘மறுமலர்ச்சிக்’காலம் முக்கியத்துவம் வாய்ந்ததொரு காலகட்டம். எழுத்தாளர் அ.செ.மு அக்காலகட்டத்துடன் பின்னிப் பிணைந்தவர். பலவேறு பத்திரிகைகள், சஞ்சிகைகளின் ஆசிரியப் பீடத்தினை அலங்கரித்தவர் அ.செ.மு.
‘எவ்வளவோ எழுதிக் குவித்தேன். ஆயினும் எனக்கு பூரணதிருப்திதரக்கூடிய எதையும் இன்னும் நான சிருட்டித்து விடவில்லை’ – என உயர்வான கலைஞர்களுக்கே இயல்பாக ஏற்படும் மனக்குறையை, நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளையும், நாவல, நாடகம், கட்டுரை, வரலாறு, விமர்சனம், மொழிபெயர்ப்பு, செய்திக் கடிதம் என எழுதி, எழுத்தாலேயே முப்பதினாயிரம் ரூபாவரை சம்பாதித்துள்ள ஈழத்து எழுத்தாளர் ஒருவர் கூறினார். அவர் தான் அழகு, செல்வ, முருகானந்தம்.
முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ஈழத்து இலக்கிய உலகிலே பீடுநடைபோட்டுவரும் அ.செ.மு. அதிக விளம்பரம் பெற்றவரல்லர். அவரது இயல்பான அமைதியான போக்கினாலும், அவரது படைப்புக்களில் எதுவுமே முறையாக நூலுருவம் பெற்று வெளிவராததாலும், தனது இலக்கியச் செல்வாக்குப் பெற்ற ‘அ.செ.மு.’ பெயரை அடிக்கடி மறந்துவிட்டு, பீஸ்மன், யாழ்ப்பாடி, யாழ்தேவி, முருகு, நீலாம்பரி, காங்கேயன், கதிரவன், மயிப்புறவம், சோபனா, இளவேனில், பூராடன், தனுசு, மேகலை, சத்தரிக்குறளி, போர்வீரன், வள்ளிகாந்தன் முதலிய புனைபெயர்களில் எழுதுவதாலும், இவரைச் சரியான முறையில் இனம் காணமுடியாதவாறு இன்றைய வாசகர்கள் இடர்ப்படுகின்றனர். ‘புகையில் தெறிந்த முகம்’ – என்ற இவரது புகழ்வாய்ந்த நீண்ட சிறுகதை நூல்கூட (அதைக் குறுநாவல் எனச்சிலர் கணிக்கின்றனர்) ஒரு பத்திரிகையில் தொடராக வெளிவந்தபோது ‘ஓஃவ் பிறின்ற்’ ஆக எடுத்துத் தொகுத்த தொன்றாகும்.
சிறுகதை மன்னன்
‘இது புகையுண்ட ஓவியமல்ல, யாழ்ப்பாணத்தின் உண்மைச் சித்திரம்’ (ஆனந்தவிகடன்), ‘கதை விறுவிறுப்பாக நல்லமுறையில் எழுதப்பட்டிருக்கிறது. புதிது புதிதாக வெளிவரும் வதைத் தொகுதியில் இதுவும் வரவேற்கத்தக்கதே’ -, (தினமணி), ‘கதையை ஆசிரியர் நல்ல தமிழ் நடையில் எழுதியுள்ளார். கதையைத் தொடங்கி வளர்த்து முடித்திருக்கும் முறை அழகாக உள்ளது. படிக்க நல்ல சிறுகதை’ (சுதேசமித்திரன்) – என தமிழகத்துப் பத்திரிகைகளாலும் ஈழத்துப் பத்திரிகைகளாலும், சிறுகதையுலகில் பெயர் வாங்கியவர் அ.செ.மு. அவர்கள். இவரது ‘மனிதமாடு’ என்னும் கதை முன்பு அல்லையன்ஸ் கொம்பனியார் வெளியிட்ட ‘கதைக்கோவை’யில் இடம் பெற்ற சிறப்பும் இவருக்குண்டு.
இலக்கியப் பின்னணி
1920ஆம் ஆண்டளவுகளில் தமிழிலக்கியம் என்பது பெரிய புராண வசனங்களிலும், இராமாயணம், பாரதம் முதலிய இதிகாசங்களிலுமே அடங்கியிருந்தன. புதிதாக எழும் நவீன இலக்கியவகைகளிலே பரிச்சயமின்மையுடன். அவற்றை இலக்கிய வடிவங்களாக ஏற்காத மனநிலை நிறைந்த காலம். கதை என்றால் அதற்கு ஒரு தலை, வால் நீண்ட வரலாற்றுக் காலம் – என்பனவற்றையும், வீர, தீர, சூர, அதி பராக்கிரமச் செயல்களைக் கொண்டதாகவும் இருக்கவேண்டும் எனக் கருதப்பட்டு, அத்தகைய நூல்களையே ‘வாசிப்பு’ நடாத்தி இரசித்த காலம்.
படித்த மத்தியதர வகுப்பினர்கூட சேக்ஸ்பியருக்கும், ஷெல்லி’க்குமிடையே முடங்கி பரீட்சை எழுதி பட்டம் பதவி பெற்ற மமதையில் – ‘தமிழா தமிழில் இலக்கியமா?’ -எனப் போலி வியப்பை ஏந்தி நின்ற காலத்திலேதான், அ. செ. மு.-வின் இலக்கியப் பயிற்சி ஆரம்பமாகியது.
தேசியக் கலைஞன்
ஒரு கலைஞன் உருவாகின்ற சூழலின் தன்மைகளுக்கமையவே, அவனின் ஆத்மபலமும், இலக்கிய நேசிப்பும் அமைகின்றன. சீர்கேடான, தமிழின் மறுமலர்ச்சிக்குப் பொருத்தமற்ற சூழலில் அச்சூழலின் தாக்கத்தையும் முறியடித்துக்கொண்டு அவனது மொழிவழி இலககிய வேட்கை சீறி எழும்போது, அவனது பணியில் த்ம சுத்தியே பளீரிடும். அத்தகைய கலைஞன் நிச்சயம் வாசகரையோ, தன்னினத்தையோ ஏமாற்றவோ, தவறான பாதைக்கு இட்டுச் செல்லவோ மாட்டான். அவனது எழுத்தில் தன் நாடு, தன் மொழி, தன் இனம் என்கின்ற தேசிய நேசிப்பே மிஞ்சி நிற்கும். இததகைய நேசிப்பு மிகுந்த ஒரு தேசியக் கலைஞன் தான் அ.செ.மு.
அமபுலிப் பருவம்
இவரது இலக்கியக்களமாக அமைந்தது இவரது வீடேயாகும். இவரது குடும்பமே ஒரு கலைக்குடும்பம்தான். அக்காலங்களில் இவரது வீட்டு முன்றலில் பழையபுராண, இதிகாசக் கதைகளும் – ஆனந்த விகடன், ஈழகேசரி போன்ற அக்காலச் சஞ்சிகைகளும் ‘வாசிப்பு’ முறைமூலம் படிக்கட்டு வந்தன. (வாசிப்பு) என்பது ஒருவர் மையமாக அமர்ந்து நூலைக் கையிலெடுத்து உரத்த குரலில் சப்தமிட்டுப் படிப்பார். மற்றவர்கள் அவரைச்சூழ அமர்ந்திருந்து அமைதியாகக் கேட்டுக்கொண்டிருப்பர். இதற்கு இன்னுமொரு காரணம் அக்காலத்தில் மத்தியதர வகுப்பினரின் பெரும்பான்மையோர் எழுத்தறிவு அற்றிருந்தமையேயாகும். இவரது தாய் மாமனார்கள் இலக்கியம் என்ற உணர்வில்லாமலே, உற்சாகமாக மனதுக்குகந்த பொழுதுபோக்கு என்ற நிலையில் மேற்படி நூல்களை உரத்துப் படித்துவர அதனைச் செவிமடுத்திருக்கும் சிறுவன் ‘அ.செ.மு’ -வின் குழந்தை உள்ளம் கற்பனாலோகத்தில். அந்தந்தப் பாத்திரங்களாக மாறி சஞ்சரித்துக் கொண்டிருக்கும். இதுவே, பிற்காலத்தில் பல்வகைப் பாத்திரங்களின் குணாதிசயங்களைச் சித்தரித்த இவருக்கு உதவியது எனலாம்.
அன்னை மொழி
பாடசாலை மாணவனாக இருந்த காலத்திலேயே, தன் மனதிலே அவ்வப்போது எழும் சிந்தனைகளை சிறு சிறு துண்டுக்காகிதங்களில் எழுதிப் பொறுப்பற்ற முறையில் போட்டுவிடும் பழக்கம் அ.செ.மு.விடம் இருந்தது. இந்தத் துணுக்குகளை எல்லாம் இவரது தாயார் வீடு பெருக்கும்போது கண்டெடுத்துப் படித்துப் பார்த்துவிட்டு வியந்து நிற்பதுடன் மட்டுமல்லாமல் ‘இவற்றையெல்லாம் கண்டபடி போடாதே. நன்றாக எழுதுகிறாய். இவற்றைப் பத்திரப்படுத்திவை, மிக உயர்ந்தவை’ – எனக் கூறி உற்சாகப்படுத்துவார். இதனால் அ.செ.மு. பெற்ற ஊக்கமும் உற்சாகமும் அளப்பரியது. அன்னையின் மொழிகள் இவரது இலக்கியம் என்னும் மல்லிகைச் செடிக்கு வார்த்த நன்னீராகி, மலர்களைப் பூத்துச் சொரிய வைத்தது. இதனால், இவர் பாடசாலையில், இலக்கிய வகுப்புக் கட்டுரைகளிலும் உயர்ந்த புள்ளிகளைப் பெறவே, ஆசிரியர்களின் பாராட்டும் இவரை மேன்மேலும் ஊக்கப்படுத்துவதாயிற்று.
இலக்கிய கேசரி
‘ஈழகேசரி கல்வி அனுபந்தம்’- என்ற ஒரு புதுப் பகுதி 1938ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பின்னர் மாணவ இளம் எழுத்தாளர்களைத் தோற்றுவிப்பதற்காக தமிழ்ப் பத்திரிகை உலகிலே முதன் முதலாக இளைஞர் சங்கம் ஒன்றை நடாத்தி வருட மகாநாடு ஒன்றையும், கல்வி விசேட மலர் ஒன்றையும் வெளியிட்டது. இந்த இளைஞர் சங்கத்தில் பல பாடசாலைகளில் படித்த மாணவர்கள் உற்சாகத்தோடு சேர்ந்தார்கள். போட்டிகளிற் பங்குபற்றினார்கள். 125, 154, 181 – ஆகிய பதிவு எண்களைக் கொண்ட மூன்று ஆரம்ப எழுத்தாளர்கள் அடிக்கடி பரிசைத் தட்டிச் சென்றனர். அப்போது ஈழகேசரி ஆசிரியராக இருந்த திரு. சோ. சிவபாத சுந்தரம் அவர்கள் இந்த மாணவ எழுத்தாளர்களை உற்சாகப்படுத்தி வந்தனர். அவரின் இலக்குத் தவறவில்லை. 125ஆம் எண்ணில் முளைவிட்டுக்கொண்டிருந்தவர் தெல்லிப்பளை மகாஜனக்கல்லூரி மாணவர்தான் இன்று புகழ்வீசி நிழல் பரப்பிக் குளிர்மை தரும் கதை மன்னனாகத் திகழும் அ.செ.முருகானந்தன் அவர்கள்’ – என ‘ஈழத்துப் பேனா மன்னர்கள்’ வரிசையில் 1955ஆம் ஆண்டு ‘கரவைக் கவிகந்தப்பனார்’ எழுதிச் செல்கின்றார்.
பத்திரிகைப் பணி
1938ஆம் ஆண்டில் ‘ஈழகேசரி கல்வி அனுபந்’ தத்தில் எழுத ஆரம்பித்த அ.செ.மு. 1941ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் ஈழகேசரி வாரப் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் ஒருவரானார். இதே ஆண்டு இதே மாதத்தில்தான் தென்னகத்துப் பிரபல பத்திரிகையான ஆனந்த விகடனில் இருந்து விலகிய ‘கல்கி’யின் பத்திரிகையான கல்கியின் முதலிதழ் வெளிவந்ததும் குறிப்பிடத்தக்க வரலாற்றாச் சம்பவமாகும். இக்காலத்தில்தான் அ.செ.மு. அவர்கள் ஸ்ரீ ராமானுஜம், வெறுப்பும் வெற்றியும், எச்சில் இலை, காப்பிரி, பரிசு, மனிதமாடு, வண்டிற் சவாரி கிழவி, விடியுமா? – முதலிய கதைகளை எழுதினார்.
இக்காலவேளையில் தன்னோடொத்த பல இலக்கிய எழுத்தாள நண்பர்களின் நட்பும் ஏற்பட்டது. இந்த நண்பர்களிடையே நேரடித் தொடர்பும் கடிதத் தொடர்பும் நிலவிவந்தன. இவருக்கும், இன்றைய பிரபல எழுத்தாளர்களில் ஒருவருமான ‘வரதர்’ அவர்களுக்கும் ஏற்பட்ட கடிதத் தொடர்பே ஈழத்தின் மணிக்கொடிக்காலம் என இலக்கிய வரலாற்றில் பேசப்படும் ‘மறுமலர்ச்சி’ச் சங்கமும், பத்திரிகையும் தோன்றக் காலாயிற்று.
‘மறுமலர்ச்சி’ச் சங்கமும், பத்திரிகையும் ஈழத்து இலக்கியம் பற்றிய விழிப்புணர்ச்சியை மக்களிடையே ஏற்படுத்திற்று. நல்ல பல எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியது. இதனால் அப்போது தென்னகத்தில் சிறந்த இலக்கியத் தொண்டாற்றி வந்த, ‘கிராம ஊழியன்’, ‘கிராம மோஹினி’ முதலிய பத்திரிகைகளில் ஈழத்து எழுத்தாளர்களின் படைப்பும் சரியாசனம் பெற்றன. இரு நாட்டு எழுத்தாளர்களிடையேயும் மரியாதை நிறைந்த நட்பு ஏற்பட்டது. கிராம ஊழியன் ஒருமுறை விசேட மலர் ஒன்றினை வெளியிட்டபோது முதல் விடயமாக ஈழத்து எழுத்தாளரான சோ. சிவபாதசுந்தரத்தின் கட்டுரையைப் பிரசுரத்தது. ‘ஒரு மந்திரியின் ஆசியுரையைப் பிரசுரிக்காமல், ஈழத்தவர் ஒருவரின் விடயத்தை முதலாவதாகப் பிரசுரித்தது. ஆச்சரியமான விடயம்’ – என அப்போது இன்னொரு பத்திரிகை மதிப்புரையில் எழுதிப் பொறாமைப்பட்டது. அது மட்டுமல்லாமல் மறுமலர்ச்சிச் சங்கம் கு.ப.ரா. வின் மறைவின் பின் அவரது குடும்ப நலனுக்காக நிதி திரட்டி நூற்றியொரு ரூபாய்களையும் அனுப்பிவைத்தது. இக்காலங்களி; இச்சஙகத்தின் தலைவராகக் கடையாற்றியவர். அ.செ.மு. அவர்களாகும்.
சக்கரதாரி
ஈழகேசரி பத்திரிகையில் கடமையாற்றிய பின்னர், மறுமலர்ச்சிப் பத்திரிகையில் வரதருடன் கூடிப்பணிபுரிந்தார். இதன் பின்னர் திருகோணமலை சென்று இன்னொரு பிரபல எழுத்தாளரான தாளையடி சபாரத்தினத்தின் துணையுடன் ‘எரிமலை’ என்னும் மாத சஞ்சிகையை வெளியிட்டு நட்டமடைந்தார். அடுத்த கொழும்பு நகர் சென்று ‘சுதந்திரன்’, ‘வீரகேசரி’ ஆகிய பத்திரிகையில் பணிபுரிந்துவிட்டு, மீண்டும் யாழ்நகர் வந்து காங்கேசன் துறையில் அமைதியாக வாழ்ந்து வந்தார். ஆனால், ஈழநாட்டில் பணிபுரியும் .இலக்கிய அன்பரான சு. சபாரத்தினம் (சசி பாரதி) அவர்களின் பெருமுயற்சியால் ‘ஈழநாடு’ வாரப் பதிப்பில் பணிபுரிந்து வருகிறார்.
எழுத்தின் நோக்கம்
அ.செ.மு.அவர்கள் எழுத்துலகில் கால்வைக்கும்போது எழுத்தின் நோக்கம் பற்றி ஒரு திடமான கரு;ததைக் கொண்டிருந்தது மட்டுமன்றி, தற்கால உலகத்துக்கு வேண்டியது எது? என்பதனையும் நன்குணர்ந்திருந்தார். நச்சு இலக்கியம் எது? நசிவு இலக்கியம் எது? என்ற வேறுபாட்டினையும் தௌ;ளத் தெளியத் தெரிந்திருந்தார்.
‘தமிழில் தற்போது வெளியாகிக் கொண்டிருக்கும் அநேக கதைகளைப் பார்த்தால் தமிழ் நாட்டில் இருப்பவர்கள் எல்லாரும் காதலர்கள். அவர்கள் காதலித்து ஏமாற்றமும், துயருமடைந்து இறந்து போவதைத் தவிர வேறு தொழில்கள் அவர்களுக்கில்லை.
தமிழிர் லட்சியக் கதைகள், – சீர்திருத்தக் கதைகள் மிகவும் குறைவு. அத்தியாவசியமாக வேண்டப்படுவதும் அவை தான்.’- என அவர் ‘தமிழில் கதை இலக்கியம்’ என்று அப்போதே எழுதினார்.
நூறு கதைகள்
அ.செ.மு.-அவர்கள் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக நூற்றிற்கு மேற்பட்ட சிறுகதைகளைப் படைத்துள்ளார். இக்கதைகளிடையே காலவித்தியாசம் முப்பது வருடங்களாக இருந்த போதிலும், எழுத்தின் தன்மையிலும், கொள்கையிலும், தரத்திடையேயும் அதிக வேறுபாடில்லை. இவரது புகழ் பெற்ற சிறுகதைகளாக ‘ஈழகேசரி’யிரும் ‘மறுமலர்ச்சி’யிலும் எழுதிய காப்பிரி, ஏழை அழுத கண்ணீர், வண்டிச்சவாரி, மனித மாடு, முதலிய கதைகளையே வாசகர் அறிந்துள்ளனர். ஆனால் அவற்றைவிட, தாம் சமீபத்தில் எழுதிய கதைகளே தரத்தில் உயர்ந்தன எனக் கருதுகின்றார்.
இவரின் கதைகள் இலட்சிய அடிப்படையில் அமைந்தாலும், அவற்றின் கதாபாத்திரங்களோ, குணாதிசயங்களோ போலித்தனமாக விளங்காமல், மனிதாபிமானத்தின் உயிர் நாடியை உணர்த்துவதாக விளங்குவதால் – நல்ல நோக்கும், கலையம்சமும் நிறைந்தனவாக விளங்குகின்றன.
இவரின் கதைகள் அனைத்தும் உயர்வான யதார்த்தச் சித்திரங்களேயாகும். இந்த யதார்த்தச் சூழல் தான் வாழும் கிராமத்துடன் மட்டும் நின்றுவிடாது. திருகோணமலை, மலைநாடு, கொழும்பு என ஈழம் முழுவதும் பரவிய தேசியக் கண்ணோட்டமாக விளங்குகின்றது. இதனால் இக்கதைகள் பல்வகை மனிதர்களையும், வேறுபட்ட வாழ்வுச் சிக்கல்களையும் கொண்டு ஒவ்வொன்றும் ஒவ்வொரு கலைப் படைப்புகளாக மிளிர்கின்றன. ஏன்? இந்தத் தேசியம் – உலகப் பொதுமையான சர்வதேசியமாகவும் மாறிவிடுகின்ற வளர்ச்சிப் பாதையையும் காணமுடிகின்றது. ‘காப்பீரி’ என்ற கதையில் இந்த உண்மை சிறப்பாக வெளிப்படுகின்றது. இரண்டாம் உலக மகாயுத்தத்தின்போது இலங்கைக்கு வந்த நீகுரோவின் அன்னைப் பாசம், நாடு, மொழி, மதம், இனம் என்பனவற்றிற்கு அப்பாற்பட்டு வெளிப்படுவதை காணலாம்.
‘வண்டிச்சவாரி’ என்னும் கதை யாழ்ப்பாணப் பண்பாட்டினை அழகாகச் சித்தரித்தது. பெரும்பாராட்டைப் பெறவே, அதனை விரித்து-, வண்டிற்சவாரி, திருவிழா, மழை, புகையிலைத் தோட்டம், தேர்தல் – என்பனவற்றையெல்லாம் இணைத்து தனது புகழ் பெற்ற ‘புகையில் தெரிந்த முகம்’ – என்ற நீண்ட சிறுகதையை எழுதினார். இச் சிறுகதையைப் படித்த பின்னர் தான் – யாழ்ப்பாணக் கமக்காரனின் புகையிலைத் Nதூட்டம் எப்படிப் பிற்காலக் கதைகளிலும் சித்தரிப்பது ஒரு எழுத்தாள நாகரிகமாக மாறியது என்பது புலனாகியது. இக் காலத்தில் மீனவர் வாழ்க்கையைச் சித்தரிப்பதுபோல், இவர்கால எழுத்தாளர்கள் ஆளுக்கு ஒன்றாகவென்றாலும் ‘புகையிலைத் தோட்டக் கதைகளைப்’ படைத்துள்ளனர்.
இவர் எந்தக் கதையை, எப்படிப்பட்ட சூழலிலும் எழுதினாலும், அவற்றின் ஒரு சமுதாயப் போராட்டம், பணிகலந்தே கிடக்கின்றன. ஆனால் அந்தப் போராட்டம் வெளிப்படையாக நிற்காது ஒவ்வொரு கதையினுள்யும் ஜீவநாதமாக ஒலித்துக் கொண்டிருக்கும். இந்தப் பணி ஒன்றினை முன்வைத்தே தனது இலக்கிய யாத்திரையை இவர் நடாத்துகின்றார் எனலாம். ‘எழுத்தாளனும் போர்வீரன்தான். அவனது வாழ்வும் பணியும் இரண்டுமே போரும், வீரமும் தான்’ எனக் கூறும் இவர் தனது பேனாவால் ஈழம் முழுவதையும் தரிசித்தார் எனக் கூறலாம்.
கதை உருவம்
சிறுகதை என்னும் கலைவடிவம் இவரது படைப்புகளில் சிறப்பாக அமைந்துள்ளது. சிறுகதைக்கு முடிந்த முடிபான இலக்கணம் இல்லாவிட்டாலும், இவைதான் நல்ல சிறுகதைகளுக்கு அடையாளம் என்ற மனநிறைவை ஏற்படுத்தும் பெற்றியன. இவர் சிறுகதைகளை சிறுகதைகளாகவே எழுதினார். இவர் காலத்திய ஏனைய பெரிய எழுத்தாளர்கள் கூட பல சமயங்களில் சிறுகதைமரபை மீறி எழுதியுள்ளனர். ஆனால், இவரது ‘புகையில் தெரிந்த முகம்’ – என்ற நீண்ட கதைகூட இந்த எல்லையை மீறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனாற்றான் இவரை ‘தமிழ்நாட்டு எட்கார் அவன் போ’ என அழைக்கின்றனர்.
நேற்றும், இன்றும்
இவரது படைப்புகள் புதுமையை நேசித்தாலும், பழமையை முற்றாக நிராகரிக்கவில்லை. ‘பழமையை அத்திவாரமாகக் கொண்டு புதுமையை எழுப்ப வேண்டும். பழமையைக் கரைத்துக் குடித்த பண்டிதர்கள் பழமையிலுள்ள அழுக்குகளைப் புதிய முறையில் – புதிய மெருகு பூசி எல்லாரும் அறியக் கூடிய முறையில் எடுத்துக்காட்ட வேண்டும்’- என்ற எண்ணத்தில் இவரின் படைப்புகள் எழுந்துள்ளன.
உயிர் நடை
இவரின் உரைநடை தான் எடுத்துக்கொண்ட விடயத்தோடு நெருங்கி நேராக உறவாடும் பெற்றியது. சிக்கலற்றது. இலகுவானது. ஆடம்பரமான கருத்தையும், கருவையும் விழுங்கிவிடும் சொற்களைக் காணலரிது. ஏன் இவரின் படைப்புகளில் உவமை, உருவகங்கள் கூடக் காணமுடியாது. ஈழகேசரிக் கதைகளில் கிராமியச் சொற்கள் அதிகம் இடம் பெற்றன. ஆனால், தற்கால ஈழநாட்டுக் கதைகளில் அவையும் அருகி முற்றாக இல்லாதொழிந்துவிட்டன. நல்ல தூய, தமிழ் நடையில் இவருக்கு இயல்பாக எத்தகைய உணர்ச்சியனுபவங்களையும் வெளிப்படுத்தும் ஆற்றல் இருப்பதால்தான் இவரை ‘சரளநடை எழுத்தாளன்’ – எனவும் அழைக்கின்றனர்.
முற்றுப்புள்ளி
இவரது கதைகளைக் கொண்டு பத்துக் கதைக்கோவைகள் வரை போடலாம். அனால், ஒன்றுகூட இதுவரை வெளிவரவில்லை. இவை வெளிவரும்போது தரமான சிறுகதைக் கோவைகள் நமது இலக்கியத்தில் இடம் பெறக்கூடும். அ.செ.மு.வின் கதைகளை வெளியிட எழுத்தாளர் மன்றங்களோ, பதிப்பகங்களோ முன்வரவேண்டும்.
அ.செ.மு.வின் நூலுருப்பெற்ற படைப்புகள்:
அ.செ.மு.வின் ‘மனிதமாடு’ சிறுகதைத் தொகுதி:
http://noolaham.net/project/16/1533/1533.pdf
அ.செ.மு.வின் குறுநாவல்: புகையில் தெரிந்த முகம்
http://www.noolaham.net/project/02/168/168.pdf