கற்பனை ஊற்றெடுக்கும் – சாகசங்கள் பிறக்கும்
சிறுவர்களுக்கான புதிய வாசிப்பு முறையை அறிமுகப்படுத்திய அணில் அண்ணா புவிவேந்தன் புதுச்சேரியைச் சேர்ந்தவர். இவரது இயற்பெயர் விநாயகம். கடந்த 2009ம் ஜனவரி 14ந் தேதி காலமானார். அப்போது அவருக்கு வயது 60. புற்றுநோய் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது மரணம் சம்பவித்தது. சிறுவயதில் சிறுகதைகள் பல எழுதியுள்ளார். மளிகைக்கடை நடத்திக் கொண்டிருந்த இவர் சினிமாவுக்கு கதை எழுதவேண்டும் என்ற ஆர்வத்தில் சென்னைக்குச் சென்றார். அங்கிருந்து பல பத்திரிகைகளில் பணியாற்றிக் கொண்டே சிறுகதைகளை எழுதிக் கொண்டிந்தார். அப்போது உதயமான எண்ணம் தான் அணில். அணில் பத்திரிகையை 1985 வரை சென்னையிலேயே பிரிண்ட் செய்து, அதற்குபின்னர் புதுச்சேரிக்கு வந்து அணில் அச்சகம் என்ற ஒரு அச்சுக்கூடத்தை துவக்கி அதில் அணிலை பிரிண்ட் செய்து 1992 வரை நடத்தியுள்ளார்.
பின்னாளில் புதுச்சேரி உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவராகவும், புதுச்சேரி கூட்டுறவு வீடுகட்டும் சங்க இயக்குநராகவும், புதுவை தமிழ்ச்சங்கத்தின் பொருளாளராகவும் பதவி வகித்த அணில் அண்ணா புவிவேந்தன், அ.தி.மு.க., வின் புதுச்சேரி மாநில இணைச்செயலாளராகவும் இருந்துள்ளார். மாலைபூமி என்ற நாளிதழையும், ஓம் விநாயகவிஜயம் என்ற ஆன்மீக மாத இதழையும் நடத்தியவர். அணில் பதிப்பத்தின் சார்பில் பல்வேறு ஜோதிட நு£ல்களை பிரசுரித்துள்ளார்.
அவருடைய மரணம் நிகழ்வதற்கு சில மாதங்களுக்கு முன்பு அணில் பத்திரிகை பற்றி அவர் என்னிடம் சொன்னது:
சென்னையில் நான் தங்கியிருந்த போது, பல பத்திரிகைகளுக்கு கதை எழுதி அனுப்புவேன். சிறுவர் கதைகளையும் எழுதுவேன். அப்போது தோன்றிய யோசனை தான் மாயாஜால கதைகள். திருவல்லிக்கேணி பக்கம் செல்வேன். அங்கு தெரு ஓரங்களில் விற்கும் ஆங்கில புத்தகங்களை பார்ப்பேன். ஓவியங்கள் அதிகமுள்ள புத்தகங்களை 10 பைசா, 20 பைசா கொடுத்து வாங்குவேன். உதாரணமாக ஒரு அட்டையில் ஒரு இளவரசி குதிரையில் வருவது போன்று ஒரு படம் இருக்கும். அந்த படத்தை பார்க்கும் போதே என் மனதில் கற்பனை ஊற்றெடுக்கும். அந்த குதிரைக்கு பதில் ஒரு ஆட்டின் மீது இளவரசி அமர்ந்திருந்தால் எப்படி இருக்கும் என்று நினைப்பேன். சாகசங்கள் பிறக்கும். கதைக்கு தலைப்பை வைத்து விடுவேன். ஆட்டுக்கிடா இளவரசி. ஓவியர் ரமணியிடம் எடுத்துச் சென்று ஆட்டுக்கிடா இளவரசியை வரையச் சொல்வேன். அற்புதமாக ஓவியம் போட்டுத் தருவார். பின்னர் அந்த ஓவியத்தை பார்த்துக் கொண்டே கதையை எழுதத் தொடங்குவேன். அதில் ஒரு சித்திர குள்ளன் இருப்பான். எறும்பு சாகசம் செய்யும். கோழி பறந்து, பறந்து சண்டை போடும். கற்பனை சிறகடித்து பறக்கும்.
ஓவியர் உபால்டு வரைந்த படக்கதைகளை சிறுவர்கள் விரும்பி வாசித்துள்ளனர். என்னைப் பார்ப்பதற்காகவே ஒவ்வொரு நாளும் மழலைப்பட்டாளம் என் ஆபிஸ் தேடி வரும். பல பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களை அழைத்து வந்து என்னை சந்தித்து உரையாடி விட்டு போவார்கள். நான் அவர்களுக்கு பரிசளிப்பேன். அவர்களும் எனக்கு பழம், புத்தகம் வாங்கி வந்து தருவார்கள். முதலில் அச்சுக்கோர்த்து அச்சடித்தும், பின்னர் சிலிண்டர் பிரிண்டில் அச்சடித்தும், ஒரு கட்டத்தில் ஆப்செட் பிரிண்டில் 50 ஆயிரம் பிரதிகளை அச்சடித்து அணில் சாதனை புரிந்து இருக்கிறது.
இப்போது வெளிநாட்டு காமிக்ஸ்களை காப்பியடித்து விற்கிறார்கள். அதில் நம் நாட்டு கலாச்சாரம் இல்லை. மது குடிப்பது போன்ற படங்கள் பிரசுரிக்கப்படுகின்றன. துப்பாக்கியால் சுடும் கதைகள் வன்முறையை சிறுவர்கள் மத்தியில் ஏற்படுத்தும். என்னுடைய கதைகளில் சாகசங்களும், நீதி போதனைகளும் மட்டுமே உண்டு.
அணில்; மிகை கற்பனை கதைகளின் முன்னோடி
தமிழகத்தில் குறிப்பிட்டு சொல்லும்படியான சிறுவர் பத்திரிகைகளில் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வந்த ‘அணில்’ இதழும் ஒன்றாகும். 1968ம் ஆண்டு முதல் சிறுவர்களின் ரசனைக்கேற்றபடி சித்திரங்கள், மாயாஜாலக்கதைகளை தாங்கி வெளிவந்த அணில் பத்திரிகை ஒவ்வொரு மாதமும், முதல் தேதியன்றும், 15ந் தேதியன்றும் மாதம் இருமுறை கடைகளில் கிடைக்கும். அப்போதெல்லாம் அணில் பத்திரிகையை சிறுவர்கள் போட்டிப்போட்டுக் கொண்டு வாங்கிச் செல்வர். தமிழகம்-புதுச்சேரி மட்டுமல்லாமல் சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளிலும் விநியேகிக்கப்பட்டு வந்த அணில் அந்தக்கால கட்டத்தில் குழந்தைகளிடையே படிக்கும் ஆர்வத்தை து£ண்டியது.
புதுச்சேரியைச் சேர்ந்த புவிவேந்தன் என்பவரால் தொடங்கப்பட்ட அணில் மாதமிருமுறை இதழ் சென்னையில் அச்சடிக்கப்பட்டு வெளியானது. 1960களில் வெளியான டமாரம், மிட்டாய், கண்ணன் போன்ற குழந்தைகள் பத்திரிகைகள் போல் அல்லாமல் மாயாஜாலத்தையும், படக்கதைகளையும் வெளியிட்டதால் சிறுவர்களிடையே அணிலுக்கு வரவேற்பு கூடியது. வண்ண அட்டைகளில் கதைகளின் தலைப்புக்கு ஏற்றபடி ஓவியங்கள் வரையப்பட்டிருப்பது அதன் தனிச்சிறப்பு. உதாரணமாக ‘மூன்று தலை மாயாவி’ என்பது கதையின் தலைப்பு என்றால் அட்டையில் மூன்று தலைகளுடன் கூடிய கொடூரமான முகங்களுடன் பூதம் ஒன்றின் படம் வரையப்பட்டிருக்கும். இந்த அட்டை காண்பவரை கவர்ந்திருக்கும். அட்டையை பார்த்த உடன் வாங்கி படித்திடத் து£ண்டும் ஆவலை சிறுவர்களிடம் உருவாக்கும் விதமாக அணில் இதழின் அட்டைப்படங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன. மேல் அட்டையுடன் சேர்த்து 16 பக்க அளவில் அணில் வெளிவந்தது.
தமிழகத்தின் அனைத்துப்பகுதிகளிலும், சிங்கப்பூர்-மலேசியா ஆகிய நாடுகளிலும் அணில் இதழ் விற்பனையில் சிறப்பிடம் பெற்றிருந்தது. வெளிநாடுகளுக்கு கப்பல் மூலமாக இதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதழின் விலை தொடக்கத்தில் 15 பைசாவாகவும், பின்னர் 25 பைசாவாகவும் இருந்துள்ளது. இதில் சிறப்பு என்னவென்றால் அணில் இதழ் சார்பில் தீபாவளி மலர் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த தீபாவளி மலரின் விலை 50 காசுகளாகும். 26 பக்கங்கள் கொண்ட அந்த மலரின் அட்டை வார்னிஷ் அட்டையாக பளிச்சென்று வெளியிடப்பட்டுள்ளது. வழக்கமாக வெளியாகும் அணில் இதழில் அட்டை வண்ணமாகவும், உள்ளே கருப்பு-வெள்ளையிலும் அச்சிடப்பட்டிருக்கும். ஆனால் அணில் தீபாவளி மலர் அட்டை மல்டிக்கலரிலும், உட்புறம் இரு வண்ணத்திலும் அச்சிடப்பட்டது.
பக்க அமைப்பும்- உள்ளடக்கமும்
அணில் இதழின் முதல்பக்கத்தில் வேல் போன்ற அமைப்புடைய வடிவத்தின் உள்ளே அணில் ஒன்று கனியை கையில் வைத்திருப்பது போன்ற சித்திரம் இடம் பெற்றுள்ளது. இந்த சித்திரமே அணில் பத்திரிகையின் லிளிநிளி ஆகும்.
‘நீ படி, நீ உழை, நீ பிழை நன்றாய்
நீ பிறர்க்குதவி செய் நற்குணக்குன்றாய்!’
– என்ற பாவேந்தர் வரிகள் ஒவ்வொரு அணில் இதழின் முதல் பக்கத்திலும் அச்சிடப்பட்டிருக்கும். இது பத்திரிகையின் முழக்கமாக இருந்துள்ளது. முதல் பக்கத்திலேயே இதழ் வெளியிடப்பட்ட தேதி மற்றும் அடுத்த இதழ் பற்றிய விளம்பரமும் இடம் பெற்றுள்ளது. மேலும், குழந்தைகளுக்கான அணில் அண்ணாவின் கடிதமும் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த இதழ் பற்றிய அறிவிப்பு, போட்டி விவரங்கள், புதிய அறிவிப்புக்களை அணில் அண்ணா குழந்தைகளுக்கு கடித வடிவில் அணில் அண்ணா தெரிவித்துள்ளார். இந்தக்கடிதம் சிறுவர்களுக்கு அணில் உடனான தொடர்பை பலப்படுத்த உதவியிருப்பது புலனாகிறது.
நடுப்பக்கத்தில் சித்திரக்கதை ஒன்றும் வெளிவந்துள்ளது. நீண்ட காலமாக தவளைத்தீவு என்ற படக்கதை அனைவரையும் கவர்ந்தகதையாக வெளிவந்துள்ளது. இந்தக்கதையை எழுதியவர் அணில் அண்ணா புவிவேந்தன். இதில் கார்ட்டூன் படங்களை வரைந்தவர் உபால்டு என்பவர். இவர் பிற்காலத்தில் சினிமா டிசைனராக நீண்டகாலம் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. விசித்திரமான சாபம் ஒன்றைப் பெற்ற மந்திரவாதி கபாலகண்டன் பலரை தவளைகளாக மாற்றி விடுகிறான். கதாநாயகன் கலைவாணன் மந்திரவாதியால் தவளையாக மாற்றப்பட்டு, பின்னர் எப்படி மனிதனாக உருவாகிறான் என்பதையும், மந்திரவாதியை எப்படி அழிக்கிறான் என்பதையும் தொடர்கதையாக வெளியிட்டுள்ளார். இந்த படக்கதை விறுவிறுப்பும், வேகமும் கொண்டது.
இதைப்போன்று மேலட்டை ஓவியங்களையும், உள்ளே மற்ற கதைகளுக்கான படங்களையும் பிரபலமான ஓவியர் ரமணி, உபால்டு மற்றும் கிட்டு ஆகியோர் வரைந்துள்ளனர். கதைகளுக்கேற்ப கதைமாந்தர்கள், அவர்களின் உடைகள், குதிரைகள், மாளிகைகள், கதாநாயகர்கள் எதிர்கொள்ளும் வில்லன்களின் கொடிய முகங்களை கற்பனைக்கு எட்டாதவாறு விசித்திரமாக வரைந்துள்ளனர் இந்த ஓவியர்கள். (உதாரணம்: ஐந்து தலைநாகம், புதையல் காக்கும் பாம்பு, அதிசய ஆடு.)
ஒரு பக்க அளவிலான தொடர்கதையையும் அணில் வெளியிட்டு வந்துள்ளது. ‘மந்திர சாவி’, ‘பூங்காட்டுப்புதையல்’ ஆகிய தொடர்கதைகளை சிறுவர்கள் விரும்பிப்படித்திருக்கிறார்கள் என்பது ஆசிரியருக்கு வந்த வாசகர் கடிதங்களில் இருந்து தெரிகிறது. நன்னெறிக் கதைகள், நீதி போதனைக்கதைகளும் வாசகர்களால் எழுதப்பட்டு பிரசுரிக்கப்பட்டுள்ளது. மேலும், வாசகர்கள் எழுதிய ‘அணில் முத்திரைக் கதைகள்’ தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வந்துள்ளன.
ஒரு பக்க அளவில் ‘உங்கள் கடிதம்’ பகுதி வெளியாகி உள்ளது. இதில் ஆசிரியருக்கு சிறுவர்கள் எழுதும் கடிதங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. இதைப் போன்று ஒரு பக்க அளவில் ‘அணில் அண்ணா பதில்கள்’ வெளியாகி உள்ளது. அணிலில் ஒரே ஒரு வர்த்தக விளம்பரம் மட்டுமே தொடர்ச்சியாக மூன்றாவது அட்டை அல்லது பின் அட்டையில் பிரசுரிக்கப்பட்டு வந்துள்ளது. ‘வி.ஜி.பன்னீர்தாஸ் அண்ட் கோ’ என்ற பெயரில் வெளியான மின்சாதன பொருள் விற்பனையாளரின் விளம்பரம் இதழுக்கு பொருளாதார அளவில் உதவி செய்திருக்கிறது. மற்ற காமிக்ஸ் விளம்பரங்களும் அணிலில் பிரசுரமாகி உள்ளன. ‘வாண்டு மாமா’, ‘வேங்கை’ போன்ற சிறுவர் இதழ்களின் விளம்பரங்ளும் அணிலில் இடம் பிடித்துள்ளன. ஞானி பதிப்பகம், கலை பிரசுரம் ஆகிய பதிப்பகங்களின் விளம்பரங்களும் அணிலில் வந்துள்ளன.
அணில் அண்ணாவின் கதாநாயகன்
தமிழில் சித்திரக் கதைகளையும், மாயாஜாலக்கதைகளையும் வெளியிட்ட இதழ்களின் முன்னோடியாக அணில் இதழை கருதலாம். அணில் இதழில் வெளியாகியுள்ள கதைக்களங்கள் தமிழ் மண்சார்ந்தவையாக இருந்துள்ளன. மேலும், கற்பனையாக உருவகம் செய்யப்பட்டுள்ள இடங்களும் தமிழ் பெயரையே கொண்டுள்ளன. உதாரணமாக, மகேந்திரபுரி, மதனபுரி, மங்கலபுரி போன்ற பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதைப்போன்று கதைமாந்தர்களின் பெயர்களும் தமிழில் இடப்பட்டுள்ளன. வெளிநாட்டுக்கதைகளை தழுவி எழுதாமல், சுயகற்பனை கதைகளாக அணிலில் வந்த கதைகள் உள்ளது தனிச்சிறப்பு. வெளிநாட்டுக் கதைகள் சில மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.
அணில் இதழின் அட்டைப்படத்தில் பெயரிட்டு வரும் கதையே இதழின் முக்கிய கதையாக இடம் பெற்றிருக்கிறது. இதுபோன்ற கதைகளின் கதாநாயகன் ‘வீரப்பிரதாபன்’.
வீரப்பிரதாபன் என்ற கற்பனைக்கதாநாயகனை அறிமுகப்படுத்தும் போது, வீரப்பிரதாபன் தேவலோகம், பூலோகம், பாதாள மேலோகம் ஆகிய மூவுலகிலும் புகழ்பெற்றவன். ஆயிரம் ஆண்டுகள் உயிர்வாழும் அற்புத சக்தியை பெற்றவன் என்று சோதிட வல்லுநர்கள் இவனுடைய ஜாதகத்தை கணித்திருந்தனர். ஆனால் தேவலோகம் சென்று அங்கே அமிர்தத்தைக் குடித்து ஆயிரமாண்டுகளுக்குப் பிறகு தனக்கு வரவேண்டிய இறப்பையும் வென்று விட்டான். வீரப்பிரதாபன் இறவாவரம் பெற்றுவிட்டான் என்று யாராலும் வெல்ல முடியாத கதாநாயகனாக வீரப்பிரதாபனைப்பற்றி கதையாசிரியர் குறிப்பிட்டு உள்ளார்.
மேலும், வீரப்பிரதாபன் கதைகளை எழுதியவர் அணில் இதழின் ஆசிரியர் புவிவேந்தன். வாண்டு மாமா போன்று இவர் தனக்கு, அணில் அண்ணா என்று பெயர் வைத்துக் கொண்டார். வீரப்பிரதாபன் கதைகளை அணில் அண்ணா என்ற பெயரிலேயே எழுதியுள்ளார். ஜேம்ஸ்பாண்ட், மாண்ட்ரேக், இரும்புக்கை மாயாவி, ஸ்பைடர் மேன், காரிகள், பிலிப், பிரின்ஸ் போன்ற வெளிநாட்டு கற்பனை சாகச மன்னர்கள் போன்று, தமிழில் சாகச மன்னன் வீரப்பிரதாபனை உருவாக்கியவர் அணில் அண்ணா.
வீரப்பிரதாபனைக் கதாநாயகனாகக் கொண்டு தொடர்ச்சியாக நு£ற்றுக்கும் கதைகள் அணில் இதழில் வெளியாகி உள்ளன. வீரப்பிரதாபனைப் பற்றிச் சொல்லும் போது அவனிடம் மாய மாணிக்கல், பறக்கும் அரக்கி ஒருத்தியின் ரத்தம் அடங்கிய சிமிழ், வானவில்-மின்னல் அம்பு ஆகியவை அவனிடம் இருந்ததாக காட்டப்பட்டுள்ளது. இந்த வில்லும், அம்பும் அவன் தோளிலேயே இருக்கும். யார் கண்ணுக்கும் தெரியாது. ஆனால், மழை பெய்தால் மட்டும் தெரிந்து விடும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதாவது சிறுவர்களுக்கு ஆச்சர்யமும், அதிர்ச்சியும் தரத்தக்க சுவாரசியமான திருப்பங்களுக்காக இந்த விஷயங்களை ஆசிரியர் கதையில் கையாண்டுள்ளது தெரிகிறது.
மேலும், பெரிய மனுஷன் என்ற பெயரில் ‘மாயாஜால குள்ளன்’ ஒருவனும் வீரப்பிரதாபனுடன் இருந்தான். இவன் வீரப்பிரதாபனின் குதிரையிள் காதில் தான் இருப்பான். அவனை கொட்டைப்பாக்கு அளவே உள்ள மனிதன் என்று குறிப்பிடுகிறார் ஆசிரியர். அதாவது ‘லில்லிப்புட்’ எனப்படும் ‘கட்டைவிரல் மனிதன்’ போன்றே கொட்டைப்பாக்கு மனிதன் என்ற ஒரு பாத்திரத்தை கதையில் புகுத்தியுள்ளார் அணில் அண்ணா. இந்த வியக்கத்தகு கற்பனைகள் – ஒவ்வொரு பாத்திரமும் நிகழ்த்தும் அதிசயங்கள் ரசிக்கத்தக்கவை.
சாகசங்களும்- மாயாஜாலங்களும்
சிறுவர்களின் ஆர்வத்திற்கு தீனி போடும் வகையில் கற்பனை சிறகை கட்டிப்பறந்துள்ளது அணில். அணிலில் வெளியான கதைகளில் சாகசங்களுக்கும், மாயாஜாலங்களுக்கும் பஞ்சமே இல்லை.
முனிவரால் சாபம் பெற்ற மணிவண்ணன் என்ற இளைஞன், கண்ணாடி மாளிகையை கண்டால் மட்டுமே சாபவிமோசனம் பெறுவான் என்றும் கூறப்பட்டதால் அவன் காடு மேடுகளை சுற்றி அலைகிறான். பல ஆண்டுகள் கழித்து டொமைங்கா என்ற கட்டைவிரல் மனிதர்களின் எதிரியான பன்றியை கொன்று விட்டு, அந்த மனிதர்கள் தரும் புனித மாலையின் உதவியோடு கண்ணாடி மாளிகை அடைகிறான். அங்கிருக்கும் பூதங்களை கொண்டு அந்த கண்ணாடி மாளிகையில் உள்ள தேன்மொழி என்ற இளவரசியை திருமணம் செய்து கொள்கிறான். (15.07.1974ல் வெளிவந்த அணில் இதழ் கண்ணாடிக் கோட்டை என்ற கதை )
இதில் அதிசய புனித மாலை உதவியுடன் கதாநாயகன் வெற்றி கொள்வதாக கதை அமைக்கப்பட்டுள்ளது. அணில் இதழில் வெளியான அனைத்துக் கதைகளிலும் நன்மையை தீமை வெல்லும். பிறகு தீமையை நன்மை அழிக்கும். முடிவில் சுபம். என்ற கோட்பாட்டின் அடிப்படையிலேயே கதைகள் வெளியாகி உள்ளன. அரக்கனை அழித்தல், சூனியக்காரக்கிழவியின் அட்டகாசத்தை அடக்குதல், இளவரசிகளை கடத்தி வைத்திருக்கும் பூதத்தை அழித்தல் என்பன போன்ற கதைகளே அதிக அளவில் வெளியாகி உள்ளன.இதில் மாயாஜாலங்கள் மட்டுமல்லாமல் கதாநாயகனின் சாகசங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
மாயமயக்கத்தில் மந்திரவாதியின் பிடியில் இருக்கும் தனது நண்பனையும், அவனது சகோதரியையும் காப்பாற்ற மந்திர மாணிக்கங்களை தேடிப் போகும் வீரப்பிரதாபன், மந்திரவாதியை கொல்வதற்கு முன்பாக காந்தர்வ கன்னிகளை காப்பாற்றி, அவர்களை அடைத்து வைத்திருந்த முதலை அரக்கனையும் வென்று, மந்திரக்கோழி மூலமாக புறப்படுவதாக கதை புனையப்பட்டுள்ளது. (மெழுகுக்கோட்டை இளவரசி)
அதாவது, இந்தக் கதையின் கருப்பொருள் மந்திர மாணிக்கங்கள் என்றாலும், அதை அடைய அவன் போராடும் போது, எதிர்படும் பாத்திரங்களை புனையும் கதையாசிரியரின் கற்பனைக்கு எல்லையே இல்லையென்று தெரிகிறது. ஆனால், படிப்பதற்கு சலிப்பு ஏதும் இல்லாமல் ஒவ்வொரு கதையும் நகரும் விதம் தான் அணில் வாசகர்களான சிறுவர்களுக்கு உற்சாகத்தை அளித்திருக்கும் எனத் தெரிகிறது.
போட்டிகளும்-பரிசுகளும்
அணில் தனது வாசகர்களைக் கவர்வதற்காக பல்வேறு வித்தியாசமான போட்டிகளை நடத்தியுள்ளது. அதில் ஒன்று ‘செக் பரிசுத்திட்டம்’. அதாவது ஒரு காசோலையில் எட்டு ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை ஒரு தொகையை வாசகர்கள் குறிப்பிட்டு எழுத வேண்டும். அணில் எழுதி வைத்துள்ள தொகையும் வாசகர் எழுதியுள்ள தொகையும் ஒன்றாக இருந்தால் அந்த வாசகருக்கு ஒரு ரூபாய் பரிசு கிடைக்கும். இந்த போட்டி அதிர்ஷ்டத்தை மையப்படுத்தி இல்லாமல், வாசகர்களை கவர வேண்டும் என்ற அடிப்படையில் நடத்தப்பட்டுள்ளது.
இதைப் போன்று கணக்கு புதிருக்கான போட்டிகளும் நடத்தப்பட்டுள்ளன. எப்படிக்கூட்டினாலும், கூட்டுத்தொகை 15 வரவேண்டும் என்ற ‘கணிதப்புதிர் போட்டி’ நடத்தப்பட்டுள்ளது. இதில் பங்கு பெற்று வெற்றிபெறும் சிறுவர்களுக்கு பத்து ரூபாய் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
‘சிந்தனை போட்டி’ ஒன்றையும் அணில் வெற்றிகரமாக நடத்தி வந்துள்ளது. அதாவது 14 வாக்கியங்கள் வரிசையாக தரப்படும். ஒவ்வொரு வாக்கியத்தின் முக்கிய வார்த்தைகளில் சில எழுத்துக்கள் விடுபட்டு இருக்கும். ( உதாரணம்: இந்தப்பிராணி நன்றாகக் கடிக்கும்: — லி )
விடுபட்ட 14 வார்த்தைகளையும் நிரப்பினால் அந்த வார்த்தைகள் இணைந்து ஒரு வாக்கியமாக தெரியும். அந்த வாக்கியத்தை ஒரு போஸ்ட்கார்டில் எழுதி அனுப்பினால் 25 ரூபாய் பரிசு வழங்கப்படும். பலர் சரியான விடையை எழுதி அனுப்பினால் அவர்களுக்கு பரிசுத்தொகை பகிர்ந்தளிக்கப்படும். இந்த போட்டியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த சிந்தனைப்போட்டி முடிவு குறித்து 15.7.1974ல் வெளியான அணில் இதழில் ஆசிரியர் எழுதியிருப்பது:
“சென்ற இதழில் அறிவித்திருந்த சிந்தனைப் போட்டியில் 5486 தம்பி-தங்கைகள் கலந்து கொண்டிருந்தார்கள். அதில் முற்றிலும் சரியான விடையை எழுதியிருந்தவர்கள் 4447 பேர். பரிசுத்தொகையை எப்படி பங்கிட்டுக் கொடுப்பது என்று எனக்கு பெரும் பிரச்னையாகிவிட்டது. எனவே சரியான விடைகளை எழுதிய தம்பி-தங்கைகளில் 25 பேர்களை குலுக்கித் தேர்ந்தெடுத்து, ஒவ்வொருவருக்கும் ஒரு ரூபாய் பரிசளிப்பதென முடிவு செய்து அவ்வாறே பரிசளிக்கிறேன்…”
சிந்தனைப் போட்டிக்கு இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து விடைகள் எழுதப்பட்டு வந்துள்ளதை கடிதங்களின் முகவரி மூலமாக அறிய முடிகிறது.
இதைப்போன்று அணில் இதழில் வெளியாகும் கூப்பனில் பெயர்-முகவரி எழுதி, அணில் அலுவலகத்திற்கு அனுப்பினால், குலுக்கல் முறையில் அதிஷ்டசாலிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு ‘இலவசமாக பேனா’ ஒன்று அன்பளிப்பாக வழங்கப்படும் திட்டமும் இருந்துள்ளது. ஒவ்வொரு அணிலிலும் 5 பேருக்கு ‘இலவசப்பேனா பரிசு’ என்பது அந்த திட்டத்தின் பெயராக இருந்துள்ளது. உள்ளூர் வாசகர்கள் பெரும்பாலானோருக்கு இந்த பேனா பரிசு வழங்கப்பட்டுள்ளது. பேனா பரிசு போன்றே ‘கலர் பென்சில் பாக்ஸ்’ பரிசுத்திட்டமும் அணிலில் இருந்துள்ளது.
வாசகர் கடிதம் பகுதியில் பிரசுரமாகும் சிறந்த கடிதத்திற்கு ரூ.2 பரிசாக வழங்கப்பட்டு வந்திருக்கிறது. ஒரு ரூபாய் பரிசுத்திட்டம் என்ற திட்டமும் அணிலில் பிரபலமாக இருந்துள்ளது. அதாவது அணிலில் வெளியாகும் ‘ஒரு ரூபாய் பரிசு’ என்ற கூப்பனில் வாசகர்கள் பெயர், முகவரி எழுதி அனுப்பினாலே போதும். குலுக்கல் முறையில் அதிஷ்டசாலிகள் 25 பேர் தேர்ந்தெடுப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
‘சித்திரம் இங்கே.. சிரிப்பு எங்கே?’ என்றத் தலைப்பில் ஒரு போட்டியும் நடத்தப்பட்டுள்ளது. அதாவது, அணிலில் வெளியாகும் இரண்டு கார்ட்டூன்களுக்கு ஏற்றவாறு வாசகர்கள் சிரிப்புத்துணுக்கை எழுதி அனுப்ப வேண்டும். ரசிக்கத்தக்க துணுக்குகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மேற்கண்ட கார்ட்டூன்களுடன் பொருத்தி அடுத்த இதழ்களில் பிரசுரமாகும். வெற்றி பெற்ற வாசகருக்கு ரூ.2 பரிசு கிடைக்கும்.
இதுபோன்று வாசகர்களை கவர்வதற்காகவே, அணில் பல போட்டிகளை நடத்தியுள்ளது தெரியவருகிறது. மேலும், இந்தப் போட்டிகளில் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டது அணிலின் விற்பனையோட்டம் எவ்வளவு சிறப்பாக இருந்துள்ளது என்பதைக் காட்டுகிறது.
அம்புலி மாமாவுக்கு போட்டியாக அணில் மாமா
அணில் இதழ் மாதமிருமுறை வெளியிடப்பட்டாலும், சிறுவர்கள் ஒரு அடர்த்தியான கதை புத்தகத்தை ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர். அதன்பொருட்டே பல ஆண்டுகள் அறிவிக்கப்பட்டு , 1975ம் ஆண்டு முதல் அணில் மாமா என்ற இணைப்பு புத்தகமும் மாதத்திற்கு ஒன்று என்ற அளவில் அணில் சார்பில் வெளிவந்துள்ளது. இதில் அணில் அண்ணாவின் கதைகள் தொடர்ச்சியாக வெளிவந்துள்ளன. வாசகர்களின் சிறந்த கதைகளும் பிரசுரமாகி உள்ளன. இந்த அணில் மாமாவின் விலை தொடக்கத்தில் 20 பைசாவாக இருந்துள்ளது. இதில் அட்டையில் மட்டும் சித்திரம் வரையப்பட்டிருக்கும். முழுக்க, முழுக்க மாயாஜாலக்கதைகள் மட்டுமே இருக்கும். சாகசங்கள் நிறைந்த சுவாரசியமான அணில் மாமா கதைகளுக்கு ரசிகர்கள் அதிக அளவில் இருந்துள்ளனர். இந்த அணில் மாமா, அம்புலி மாமாவுக்கு போட்டியாக இருந்துள்ளார்.
அனைவரையும் கவர்ந்த அணில்
அணில்- அணில் மாமா சிறுவர் இதழ்களில் கதைகளை வெளியிட்டு சிறுவர்களுக்கான சிறந்த பொழுதுபோக்கை உருவாக்கியவர் அணில் அண்ணா. இவர் தனது கதைகளில் கையாளும் மொழி சிறுவர்களை கவரக்கூடியது. இதில் இலக்கியம் இல்லாவிட்டாலும், இலக்கணபிழை எங்கேயும் இல்லை. அணில் அண்ணா உருவாக்கிய வீரப்பிரதாபன் வீரத்திற்கும், விவேகத்திற்குமான அம்சம். நீதி போதனைகளை மட்டுமே அணில் அண்ணா போதித்துள்ளார். இவர் கதைகளில் டும்..டும்… டுஷ்யூம்.. டுஷ்யூம் என்ற வன்முறை எங்கும் இல்லை. எதிரிகளை வேட்டையாடும் போது கூட, அவர்களின் சாபவிமோசனத்தை நீங்கும் பரோபகாரியாகவே தனது கதாநாயகன் பாத்திரங்களை படைத்துள்ளார் அணில் அண்ணா.
‘டிராகுலாக்கள்’ பற்றிய ஆராய்ச்சிகள் நடந்து வந்த நேரத்தில், டிராகுலாக்கள் பற்றிய திரைப்படங்கள் வெளிநாடுகளில் வந்த காலத்தில் அணில் அண்ணா ‘வெளவால்கோட்டை அரக்கன்’ என்ற பெயரில் டிராகுலாவை தமிழில் சிறுவர்களிடம் அறிமுகப்படுத்தியவர் அணில் அண்ணா. இதில் ரத்தக்காட்டேரிகளை வீரப்பிரதாபன் ஒழிப்பதாக கதை இருக்கும். அணில் அண்ணாவின் மொழி நடை சிறுவர், சிறுமியரை வெகுவாக கவர்ந்திருக்கிறது. அன்பான ‘தம்பி-தங்கைகளே!’ என்று எழுதத் தொடங்கும் அணில் அண்ணாவுடன் சகோதர பாசத்துடன் வாசகர்கள் பழகியுள்ளதை வாசகர் கடிதங்களில் காணமுடிகிறது.
1968 முதல் 1992 வரை, ஏறத்தாழ 25 ஆண்டுகள் வெளிவந்துள்ள அணில் பத்திரிகையை சிறுவர்கள் மட்டுமல்லாமல் வயதான ‘தாத்தா-பாட்டிகள்’ கூட தொடர்ச்சியாக வாசித்து வந்துள்ளனர். தனக்கென தனி வாசகர் வட்டத்தை அமைத்துக் கொண்ட அணில் இதழை, மிகை கதைகளின் முன்னோடி என்றால் அது மிகையாகாது. சிறுவர்களின் மனதை ஊடுருவி அவர்களின் அறிவுக்கு கற்பனை தீனி போட்ட அணில், சிறுவர் பத்திரிகை உலகில் கொடி கட்டிப்பறந்த சாகச இளவரசன் தான்.
கட்டுரையாளர் குறிப்பு:-
கட்டுரையாளர் பி.என்.எஸ்.பாண்டியன். புதுச்சேரியைச் சேர்ந்த பத்திரிகையாளர். அகவிழி என்ற ஆவணப்படத்தை இயக்கியவர். இவருடைய கட்டுரைகள்- சிறுகதைகள் பல்வேறு இதழ்களில் வெளியாகி உள்ளன. அணில் பத்திரிகையின் தீவிர வாசகர். தற்போது, புதுச்சேரி தற்கால அரசியல் வரலாற்று ஆய்வு செய்து வருகிறார்.
– பி.என்.எஸ்.பாண்டியன் (29th ஜனவரி 2012)
குழந்தைகள் தேடிய அணில் அண்ணா
அம்புலி மாமா தெரியும். அணில் அண்ணாவைத் தெரியுமா?
1970 -90-கள் வரை இருபது ஆண்டுகளுக்குக் குழந்தைகளின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட ஒரு எழுத்தாளர் இருந்தார் என்றால், அவர் அணில் அண்ணாதான்.
புதுச்சேரியில் பிறந்த வி. உமாபதி புவிவேந்தன், ஜோக்கர் மணி என்ற பெயர்களில் நிறைய எழுதியிருக்கிறார். ஆனால், அணில் அண்ணா என்று சொன்னால்தான் எல்லோருக்கும் தெரியும். அம்புலிமாமா சிறுவர் இதழை விரும்பிப் படித்த அவர், 13-வது வயதிலேயே கதைகள் எழுத ஆரம்பித்துவிட்டார்.
விளையாடிய அணில்
தீப்பெட்டியைவிட சற்றே பெரிய அளவில் ‘ஒரு நாள் ராஜா’ போன்ற பல குட்டிப் புத்தகங்களை இவர் வெளியிட்டிருக்கிறார். அவை பெரும் வரவேற்பைப் பெற்றன. 1969-ம் ஆண்டு புதுவையில் இருந்து அணில் என்ற பெயரில் சிறுவர் இதழை ஆரம்பித்தார். இந்தச் சிறுவர் இதழ் தமிழகம், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் என பல நாடுகளிலும் விற்பனைக்கு அனுப்பப்பட்டது. வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் முதலில் அறிந்த சிறுவர் இதழ் இதுதான். ரமணி என்ற சுப்ரமணிதான் அணிலின் ஆஸ்தான ஓவியர். அணில் மாமா என்ற மாத இதழும் (1975), அணில் காமிக்ஸ் என்று சித்திரக்கதை இதழையும் அணில் அண்ணா நடத்தியிருக்கிறார்.
தேடிவந்த குழந்தைகள்
அந்தக் காலத்தில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அவருடைய அலுவலக முகவரி பள்ளிச் சிறுவர்களிடையே மிகவும் தேடப்பட்ட ஒன்று. தினமும் இவரது அலுவலகத்துக்கு மாணவர்கள் நிறைய பேர் வந்துகொண்டே இருப்பார்கள். அவர்கள் அணில் அண்ணாவுக்குப் பரிசு தந்தார்கள். அணில் அண்ணாவும் அவர்களுக்கு நிறைய பரிசுகளைத் தருவார். இப்படி இதழ் வேலை, குழந்தைகள் சந்திப்பு என 24 மணி நேரமும் அணில் அண்ணாவுக்குப் போதுமானதாக இல்லை.
வீரப் பிரதாபன்
அணில் அண்ணாவின் மிகப் பிரபலமான கதாபாத்திரம் வீரப்பிரதாபன். இந்தத் தொடரில் 60 கதைகளுக்கு மேல் வெளிவந்துள்ளன. புகழ்பெற்ற வீரப்பிரதாபன் பல சாகசங்களைச் செய்வார். யார் கண்ணுக்கும் தெரியாத மின்னல் அம்பு (மழை பெய்தால் மட்டும் தெரியும்), பறக்கும் அரக்கியின் ரத்தம் அடங்கிய சிமிழ், மாய மாணிக்க கல், கட்டைவிரல் அளவு உள்ள மாயாஜாலக் குள்ளனுடன் அவர் பல சாகசங்களைச் செய்தார். ஒரு காலத்தில் வீரப்பிரதாபன் கதைகள் மாதந்தோறும் ஒரு லட்சத்துக்கும் மேல் விற்பனை ஆகின.
நடுவில் பலமுறை நின்று போனாலும், தொடர்ந்து 23 ஆண்டுகள் துள்ளி விளையாடிய அணில் 1992-ம் ஆண்டில் தன்னுடைய ஓட்டத்தை நிறுத்திக்கொண்டது.
ரகசியம்
அணில் அண்ணாவைப் பற்றிய விவரங்களோ, படங்களோ வாசகர்களுக்கு நீண்டகாலம் தெரியாமலேயே இருந்தது. சில முறை மட்டும் தனது புகைப்படத்தை இதழில் வெளியிட்டிருக்கிறார். வாண்டுமாமா, பூவண்ணன், ரேவதி போன்று மக்கள் விரும்பும் இதழ்களில் எழுதாததால், இவரைப் பலருக்கும் தெரியாமலேயே போனது.
2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ம் தேதியன்று அவர் காலமானார். ஆனால், அவரால் உருவாக்கப்பட்ட கதாபாத்திரங்கள் என்றும் கம்பீரமாக நிலைத் திருக்கும் இல்லையா?
நன்றி: https://www.hindutamil.in/