கண்ணாடி பிம்பம்





(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கண்ணாடியைப் பார்க்கிறேன். முகத்தில் அழகே இல்லை. சிரித்தபடியே பார்க்கிறேன். அப்படியும் அழகாய் இல்லை. அழுதபடி… முறைத்தபடி… பெருமிதமாக… வெட்கப்பட்டுக்கொண்டு… எதுவுமே பிடிக்கவில்லை. கைகள் இரண்டையும் சேர்த்து கும்பிட்டபடி பார்த்தால்… இதென்ன! பாவப்பட்ட பெண்ணாய் பரிதாபமாக தெரிகின்றேனே. ஏழ்மையை பறைசாற்றி யாசிக்கும் பிச்சைக்காரியை போல… ஒன்றும் தேவையில்லை. ஒருபக்கம் உடைந்திருந்த சதுரக்கண்ணாடியை குப்புறத்திருப்பி வைத்துவிட்டு, கோடிப்பக்கம் நொண்டி விளையாடும் சின்னவா, கட்டையா, உக்குலி, பொண்ணுப்புள்ள இவர்களுடன் சேர்ந்து கொள்கிறேன்.
ஏனோ விளையாட்டில் மனம் செல்லவில்லை. கண்ணாடியில் பார்த்த என் பரட்டைத்தலையும், ஒளியிழந்த கண்களும், சாயம்போன சட்டையுமாய் எனக்கே என்னைப் பிடிக்கவில்லை.
ஜோதிகா மாதிரி தோடு போடணும். காருல ஏறி சர்ருன்னு பறக்கணும், அப்புறம் நிறைய ஐஸ்கிறீம், சொக்கலேட், பிஸ்கட் எல்லாம் சாப்பிடணும். புதுசுபுதுசா கலர்கலரா சட்டை வாங்கி…
“அவுட்டு… அவுட்டு கோட்ட மிதிச்சிட்ட”
சின்னவா கத்தியப்படியே தான் விளையாட ஆயத்தமானாள்.
எனது வலதுகால் முழுவதும் மூன்றாம் பெட்டியின் நடுக்கோட்டில் இருந்தது. உண்மையிலேயே அவுட்தான் ஒதுங்கிக் கொண்டேன்.
திரும்பவும் பாவப்பட்ட என் பிம்பமே எனக்குள் நிழலாட, கோபம் அப்பாமேல் திரும்பியது.
அப்பா சுயநினைவோட இருந்து நான் பார்த்தது ரொம்பக்குறைவு. கசிப்பு நாத்தத்தோடவே வாழ்க்கை நடத்துற அதிசய பிறப்பு எங்கப்பாதான்.
மலைமலையா ஏறி, கைகால் தேஞ்சிப்போய், எலும்பும்தோலுமா வரண்டு சோர்ந்து வீட்டுக்கு வரும் அம்மாகிட்ட என்னத்தைத்தான் கேட்க முடியும்?
கடவுளுக்கு என்னைப்பிடிக்கவில்லையோ! பின் ஏன் இந்த வாழ்க்கை? எதுவுமே சரியில்லை. இந்த லயம், மாட்டுப்பட்டி, கோழிக்கூடு, கோடிப்பக்கம், தார்போடாத சின்ன ரோடு. வாழைப்பட்டையில் தண்ணி வரும் பீலிக்கரை எல்லாமே அசிங்கமாக… அசிங்கமாகவே தெரிந்தது. தெரியாமல் கொழும்புக்கு ஓடிப்போய், வேலைசெஞ்சி அழகாயிடலாமான்னு கூட ஒரு ஆசை.
“எல்லாரும் விலகிக்குங்க… பழம் போடப்போறன்”
கட்டையா கத்திக்கொண்டே கொப்பறைக்கல்லை வீச, அது நேரே என் நெற்றியில் பட்டு இரத்தம் பீரிட, அம்மாவும் வேலைவிட்டு வர எல்லாமே ஒன்றாய் ஒரே நிமிடத்தில் நடந்து முடிந்தது. அப்பொழுதுதான் வலியை உணர்ந்தவளாய்…
“அம்மா”
எனக்கத்திக்கொண்டு நெற்றியைக் கைகளால் பொத்திப் பிடிக்கிறேன்.
சின்னவா அலவாங்குப்புல்லை தேடிவர. உக்குலி சுண்ணாம்பு எடுத்துவர பொண்ணுப்புள்ள இரண்டையும் ஒரு கல்லில் வைத்து நய்த்து பசைப்போல காயத்தில் பூசி விட, அம்மா தன் சாரி முந்தானையை கிழிக்க என் தலையில் பெரிய கட்டொன்று போடப்பட்டது.
சோர்ந்து போனவளாய் அவர்களையே பார்த்துக் கொண்டிருக்கிறேன்… அவர்களை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு வலி தெரியவே இல்லை.
எனக்காக துடித்துப்போய் செயற்பட்ட அம்மா, கட்டையா, உக்குலி, சின்னவா, பொண்ணுப்புள்ள எல்லோரும் அழகானவர்களாய்… லயம், கோடிப்பக்கம், நொண்டிப்பெட்டி, எல்லாமே அழகாய்… மிக அழகாய்.. மிக அழகாய் தெரிய, வலி மறந்தவளாய் ஓடிப்போய் கண்ணாடியை எடுத்து, என்னை மீண்டும் பார்க்கிறேன்.
சத்தியமாய் சொல்கிறேன் நான் அழகுதான்.
– தினக்குரல்
– பீலிக்கரை (சிறுகதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 2007, ஞானம் பதிப்பகம்,கொழும்பு.
![]() |
பிரமிளா பிரதீபன் (எ) பிரமிளா செல்வராஜா (26 மார்ச் 1984) இலங்கையைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர். தென்னிலங்கையில் ஆங்கில ஆசிரியராகவும், பட்டப்பின் கல்வி (பட்டயம்) கற்கைநெறியின் நிலைய இணைப்பாளராகவும் பணியாற்றுகிறார். பிரமிளா பிரதீபன் (எ) பிரேமிளா செல்வராஜா (1984.03.26) பதுளை, ஊவாகட்டவளை ஹாலிஎலயில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை செல்வராஜா; தாய் சிவகாமி. ஆரம்ப கல்வியை ஊவாகட்டவளைத் தமிழ் வித்தியாலயத்திலும், இடைநிலை கல்வியை பதுளை தமிழ் மகளிர் மகாவித்தியாலயத்திலும், உயர் கல்வியை…மேலும் படிக்க... |