கண்டதும் காணாததும்
(1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
1

சாந்திநிகேதனத்திலிருந்து, அன்றுதான் என் சொந்த ஊருக்குத் திரும்பி வந்திருந்தேன். நான்கு வருஷங்களுக்குள் ஊரில் எத்தகைய மாறுதல்! முன்னால் கூரை வீடு இருந்த இடத்தில் இப்பொழுது காரைவீடும், காரை வீடு இருந்த இடத்தில் மாடிவீடுமாய் இருந்தன. நாங்கள் விளையாடின மைதானங்களில் எல்லாம் இப்பொழுது நெல் குற்றும் யந்திரங்களும், துவரை உடைக்கும் யந்திரங்களும், பஞ்சாலைகளும் நின்றன. அந்த மைதானங்களில் கிளித்தட்டும், நொண்டித்தட்டும் விளையாடிக் களித்த சிறுவர்கள் இப்பொழுது விளையாடுவதற்கு இடம் இல்லாத காரணத்தாலோ என்னவோ, பஞ்சாலைகளுக்குச் சென்றுகொண்டு இருந்தார்கள். ஆம், விருதுநகர் ஒரு பெரிய வியாபாரப் பட்டணமாகிவிட்டது. எல்லாம் நாலே வருஷங்களுக்குள்! நான் விட்டுப்போன ஊர் வேறு; இன்று வந்து காணும் ஊர் வேறு.
ஊர் வளர்வதோடு, அதிலுள்ள ஜனங்களும் வளர்கிறார்கள். ரத்தினம் என்னோடு படித்துக்கொண்டிருந்தவன். நரிபோல் மெலிந்து குள்ளமாயிருந்தான். அன்று அவனைப் பார்க்கும்போது அடையாளமே தெரிய வில்லை. ஆறடி உயரம், அதற்கேற்ற பருமன். அவனுக்குக் கல்யாணமாகி இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனவாம். எல்லாம் சென்ற நாலு வருஷங்களுக்குள்! நான்கு வருஷங்களுக்குள் உலகமே இப்படி மாறியிருக்கிறதா, அல்லது விருதுநகர் மட்டுந்தான் மாறியிருக்கிறதா என்று நான் ஆச்சரியமுற்றேன்.
மாலையில் கடைவீதியைச் சுற்றிப் பார்க்கலாமென்று புறப்பட்டேன். குறுகலான பழைய கடைத்தெருதான். அதில் நடமாடும் ஜனங்களோ, முன்னைவிடப் பன்மடங்கு அதிகம். முன்பு கட்டைவண்டிகளும், ஒரு மணிக்கு ஓரிரண்டு குதிரை வண்டிகளும் அக்கடைத்தெருவில் போய்க் கொண்டிருக்கும். இது தவிர, மனித நாகரிகத்திற்கு மாசெனத் தோன்றும் கைவண்டிகளும் சில இங்குமங்கும் செல்லும். ஆனால் இப்பொழுதோ கார்களும், பஸ்களும், லாரிகளும், சைக்கில்களும் அதே ரஸ்தாவில் பறந்துகொண்டிருக்கின்றன.
கடைவீதியில் ஜனங்கள் அவசர அவசரமாகத் தேனீக்கள் போல் தங்கள் தங்கள் வேலையைக் கருதிப் போய்க் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் அநேகர் எனக்கு முற்றும் புதியவர்கள். எஞ்சிய சிலர் எனக்குத் தெரிந்தவர்கள். காலக்கொற்றன் அவர்களுடைய உருவங்களில் புதுமைச் சாந்து பூசி வைத்திருக்கிறான்: எனினும் அப்பூச்சை ஊடுருவிப் பார்க்கையில், பழைய குப்பனையும், கந்தனையும், ரங்கனையும், ராமனையும் பார்த்தல் கஷ்டமல்ல. சிலர் என்னோடு படித்தவர்கள்; சிலர் என்னோடு விளையாடினவர்கள்; சிலர் எனக்கு அறிமுகமானவர்கள். அவர்கள் அனைவரும் என்னைக் கண்டதும் கட்டித் தழுவி க்ஷேமம் விசாரிப்பார்கள் என்று நினைத்தேன். பெரும் ஏமாற்றம்! சிலர் ஒரு கண் பார்வையால் மட்டும் தங்கள் பழக்கத்தைத் தெரிவித்தார்கள். சிலர் ஒரு புன்சிரிப்பு; சிலர் ஒரு வார்த்தை. நான் அவர்களைக் குறை கூறவில்லை. இருபதாம் நூற்றாண்டின் உலகம் அவசர உலகம். பூமி வேகமாய்ச் சுற்றுகிறதோ என்னவோ, அது வான சாஸ்திரிகளைக் கேட்டால்தான் தெரியும். ஆனால் உலகத்திலுள்ள காரியங்கள் வேகமாய் நடக்கின்றன. அது விருதுநகரில் போய்ப் பார்த்தால் தெரியும்.
ஆனால் இந்த அவசர உலகத்திலுங்கூட இரண்டொருவர் தங்கள் அன்பிற்கும் ஆர்வத்திற்கும் ஆசைக்கும் சிறிது நேரம் கண்டுபிடித்துக் கொள்கிறார்கள். கிடைக்காவிடில் திருடிக்கொள்கிறார்கள்.
“அடே, எப்படா வந்தாய்?” என்பான் ஒருவன். “அடே, கிராப் வைத்திருக்கிறாயே?” என்று இன்னும் ஒருவன் தலைமயிரைப் பிடித்து இழுப்பான். “நீ போட்டிருந்த கடுக்கன் எங்கேடா?” என்று மற்றொருவன் காதைப் பிடிப்பான். “அடே, உனக்குத் தொந்திகூட வைத்திருக்கே?” என்று வேறொருவன் வயிற்றில் ஒரு குத்து வைப்பான். ‘அவசர உலகம் இவர்களையும் அடித்துக்கொண்டு போயிருக்கக் கூடாதா? என் அப்பளாக் குடுமியையும், அழுக்கடைந்த கடுக்கனையும் ஞாபகமூட்ட இவர்களை யார் வரச் சொன்னது?’ என்று நினைப்பேன். இவ்வாறு க்ஷேமம் விசாரித்துவிட்டு, அவர்களும் தங்கள் தங்கள் காரியங்களைப் பார்க்கச் சென்றுவிட்டார்கள். ஆனால், எனக்கு என்ன வேலை? படித்தவர்களுக்குத்தான் இந்தக் காலத்தில் வேலை இல்லையே! என் வழியே நான் சும்மா போய்க்கொண்டிருந்தேன்.
“என் கண்ணு வந்துட்டானே! என் பாப்பா வந்துட்டானே! என் செல்வம் வந்துட்டானே!” என்று பாடிக்கொண்டே என் முன்னால் ஒரு மனிதன் வந்து நின்றான். அவனைக் கண்டதும் நான் திடுக்கிட்டு நின்றேன். “இந்தாப்பா அரையணா; போத்தி ஹோட்டலில் உழுந்து வடை வாங்கிச் சாப்பிடு” என்றான் அம்மனிதன். பின்பு திரு திருவென்று என்னை விழித்துப் பார்த்தான். “இதா என் கண்ணு? இதா என் பாப்பா? இவன் யாரோ பெரியவனாயிருக்கிறானே! இது என் கண்ணும் இல்லை, பாப்பாவும் இல்லை. நான் உனக்கு அரையணாக் கொடுக்கமாட்டேன்” என்று ஓட ஆரம்பித்தான். சிறிது தூரம் ஓடி நின்றான். “தியாகு! ஓரணா கேக்காதே. நான் குடுக்க மாட்டேன். தாத்தா ட்டுவாரப்பா. அரையணா வாங்கிறியா? வாங்கிக்கோ” என்று மீண்டும் என்னிடம் வந்தான். கண்களில் ததும்பிய கண்ணீரை என்னால் அடக்க முடியவில்லை. “கூடலிங்கம்!’ என்றேன். “எனக்குப் பைத்தியம் பிடிச்சிருக்கிண்ணா அழுகிறே? நான் ஒன்னோடே பேச மாட்டேன், போ. எனக்குத்தான் பைத்தியம் பிடிக்கிலியே!” என்று சொல்லிக்கொண்டு ஓடியே போய்விட்டான்.
என்னால் மேலே செல்வதற்கு முடியவில்லை அப்படியே திரும்பினேன். மனம் சிந்தனையில் ஆழ்ந்தது. கால்கள் என்னை வீட்டை நோக்கி இழுத்துச் சென்றன. “எங்கேயப்பா போயிருந்தாய்? உனக்காகச் சேமியாக கேசரி பண்ணியிருக்கேன். கால் கை கழுவு” என்று தண்ணீர் எடுக்கப் போனாள் பாட்டி. “இப்பொழுது வயிறு பசிக்கவில்லை. இன்னும் கொஞ்ச நேரம் கழித்து சாப்பிடுகிறேன், பாட்டி” என்று சொல்லிவிட்டு மாடிக்குச் சென்று மெத்தையில் படுத்துக்கொண்டேன். கூடலிங்கத்தின் முந்திய வாழ்க்கை என் மனத்திரை முன்னால் ஒரு படம்போல் தோன்றியது.
கூடலிங்கம் சிறுவயசு முதல் எங்கள் கடையில் வேலைக்கு இருந்தவன். எட்டு வயசாய் இருக்கும்பொழுது நாலுரூபாய் சம்பளத்திற்கு வந்தான். இருபத்தைந்து வருஷங்கள் எங்கள் கடையிலேயே உண்மையா உழைத்தான். முதுமைப் பருவத்தில் என் தாத்தா கடைக்குப் போவதை நிறுத்திவிட்டார். வேதாந்த விசாரணையில் காலத்தைக் கழிக்க ஆரம்பித்தார். காசுகளை எண்ணின கை கைவல்ய நவநீதத்தைப் பிடிக்க ஆரம்பித்தது. பத்து ரூபாய்க்கும், இருபது ரூபாய்க்கும் கோர்ட்டுகளுக்குச் சென்று வழக்காடிய நா, ஞான வாசிட்டம் படிக்க ஆரம்பித்தது. நானோ சிறுவன்; தந்தையோ தனிக் குடித்தனம் நடத்திக்கொண்டிருந்தார். அக்காலமெல்லாம் எங்கள் கடையை ஒழுங்காய் நடத்தியவன் கூடலிங்கந்தான். அல்லும் பகலும் உழைத்து, எங்களுக்குச் சம்பாதித்துக் கொடுத்தான். இத்தனைக்கும் அவனுக்கு நாங்கள் கொடுத்தது மாதம் நாற்பது ரூபாய் சம்பளந்தான். என்னைச் சிறுபிள்ளையிலிருந்து எடுத்து வளர்த்தவன் அவன் தான். என்னைக் கண்டால் அவனுக்கு உயிர். நான் கடைக்குப் போகும்போதெல்லாம் எனக்குக் காசு கொடுப்பான்.
அவனுக்குக் கல்யாணம் நடந்தது. கல்யாணக் செலவில் பாதி என் தாத்தா ஏற்றுக்கொள்வதாக ஒப்புக்கொண்டார். எங்கள் வீட்டில் எல்லோரும் கல்யாணத்திற்குச் சென்றிருந்தோம். ஆனால் அவனுக்கு ஒரே ஒரு வருத்தந்தான். நாங்கள் அவன் வீட்டில் ஒரு வேளை சாப்பிடவில்லை என்பது. கெஞ்சிக் கூத்தாடினான் தாத்தா கர்நாடக மனுஷர்; சம்மதிக்கவில்லை. “தியாகுவாவது ஒரு வேளை சாப்பிடட்டும்” என்றான். எனக்கு இஷ்டந்தான். அவன் அவ்வளவு கெஞ்சிக் கேட்டு கொள்ளும் பொழுது சாப்பிட்டால் என்ன கெட்டு போகிறது என்று என் குழந்தையுள்ளம் கூறியது. ஆனால் தாத்தாவின் ஆக்ஞைக்கு அஞ்சினேன்.
காலம் சென்றது. அவனுக்குச் சில குழந்தைகளு பிறந்தன. எத்தனை நாள்தான் கூலிக்கு வேலை செய்து கொண்டிருப்பான்? தனிக்கடை வைக்கவேண்டுமென், அவனுக்கு ஆசை தோன்றியது. எனக்கும் என் பாட்டிக்கும் மிகவும் வருத்தம். தாத்தாவுக்கும் வருத்தந் தான். ஆனால் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. “அவன் போவது நியாயந்தானே? அவனுக்கும் பிள்ளை குட்டிகள் பெருகிவிட்டன. சொத்துச் சுகம் வேண்டும் என்று ஆசை இருக்கும் அல்லவா?” என்றார். கூடலிங்கமும் வேறொருவனும் பங்காகக் கடை வைத்தார்கள். அவர்கள் கடை ஆரம்பித்துப் புதுக்கணக்குப் போடும்பொழுது, என் தாத்தாவும் கூட இருந்து, கூடலிங்கத்தின் கணக்கில் இருநூறு ரூபாய் வரவு வைத்து ஆசீர்வதித்து விட்டு வந்தார். அவன் போன பிறகு எங்கள் கடை சரியாய் நடக்கவில்லை. பின்னால் வந்த வேலைக்காரர்கள் அவனைப்போல் நம்பிக்கையாய் வேலை செய்யவில்லை. கையினால் நஷ்டம் ஏற்பட்டது. நாங்கள் கடையை எடுத்துவிட்டோம். கூடலிங்கம் கடை விமரிசையாய் இரண்டு மூன்று வருஷங்கள் நடந்தது. நல்ல லாபம் கிடைத்தது. அதற்கு அப்புறம்… இது நான் சாந்தி நிகே தனத்திற்குப் போனபின் நடந்த விஷயம். என் தாத்தா ஒரு கடிதத்தில், கூடலிங்கத்தின் பங்காளி ஒருநாள் 4000 ரூபாயை எடுத்துக்கொண்டு எங்கோ ஓடி விட்டானென்றும், கூடலிங்கம் கையில் வைத்திருந்த கொஞ்ச நஞ்சம் பணத்தையும் கடன்காரர்கள் பறித்துக் கொண்டார்களென்றும் எழுதியிருந்தார். அப்பொழுது அவனுக்குப் பைத்தியம் பிடிக்கவில்லையோ, அல்லது அது எனக்குத் தெரியக்கூடாதென்று தாத்தா எழுத வில்லையோ, அவ்விஷயம் எனக்கு அன்று மாலை கடை வீதியில்தான் தெரியவந்தது.
என்ன வாழ்க்கை! என்ன உலகம்! பணத்தைத் திருடிக்கொண்டு போனவன் மனைவி மக்களுடன் பினாங்கிலோ சிங்கப்பூரிலோ சுகமாய்க் காலங் கழித்துக் கொண்டிருப்பான். ஆனால் ஒரு பாவமும் அறியாத கூடலிங்கமோ பெண்டு பிள்ளைகளைத் தவிக்கவிட்டுத் தானும் பைத்தியமாய் அலைகிறான். இதற்கு ஏதாவது காரணம் உண்டா? உலகத்தில் நடக்கும் காரியங்களை மேற்பார்த்து, ஒழுங்கு செய்ய ஒரு நாயகன் இருந்தால், இத்தகைய அசம்பாவிதங்கள் சம்பவிக்குமா? நெல் விளைத்தவனுக்குப் புல்லும், புல விளைத்தவனுக்கு நெல்லும் முளைப்பதைத்தான் நாம் கண்கூடாகக் காண்கிறோம். செய்கை ஒன்று இருக்கப் பலன் ஒன்று கிடைக்கிறது. காரியத்திற்குக் காரணத்தையும், காரணத்திற்குக் காரியத்தையும் நாம் காண்பதில்லை.
இத்தகைய எண்ணங்களால் என் மனத்தில் கலவரம் ஏற்பட்டது. உள்ளம் குமுறிக் கொண்டிருந்தேன். பாட்டி சாப்பிடக் கூப்பிட்டாள். பசி இல்லை என்று சொல்லிவிட்டேன். தூங்க யத்தனித்தேன். தூக்கமும் வரவில்லை. வெகுநேரம் வரைக்கும் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தேன். பின்பு எப்பொழுது தூங்கினேனோ தெரியவில்லை.
2
நவராத்திரி உற்சவம் ஆரம்பமாகியது. மைசூரில் நடக்கும் தசராக் கண் காட்சிச் சாலைக்கு என்னுடைய படங்கள் சில அனுப்புமாறு எனக்கு அழைப்பு வந்தது. மைசூரில் தசரா உற்சவத்தை நான் பார்த்திராததால், சில நல்ல படங்களை எடுத்துக்கொண்டு நானே புறப்பட்டேன். வழியில் பங்களூரையும் பார்த்துவிட்டுச் செல்லலாமென்று அங்கு இறங்கி ஒரு ஹோட்டலில் தங்கினேன். டாட்டா விஞ்ஞான ஆராய்ச்சிக் கழகத்தில் என் நண்பர் ஒருவர் இருந்தார். அவரைச் சந்திக்கலாம் என்று நான் அன்று மாலை புறப்பட்டேன். சேஷாத்திரி புரத்தினின்றும் மல்லேசுவரத்திற்குப் போகும் வழியில் ராஜா மில் இருக்கிறது. நான் அந்த ஆலையை அணுகும் பொழுது, ஆலையரக்கன் தனது பயங்கரமான வாயைத் திறந்து கத்துவதுபோல் சங்கு ஊதியது. வேலை முடிந்து விட்டது. அடுத்த நிமிஷம் எனக்கு முன்னால் ஒரு பேரிரைச்சல் கேட்டது. புற்றிலிருந்து ஈசல் கிளம்புவது போல், ஆலை வாசலினின்றும் நூற்றுக்கணக்கான ஜனங்கள் வெளியேறிக்கொண்டிருந்தனர். அவர்களுள் தாய்மாரைப் பார்க்கப்போகும் சிறுவர்கள் எத்தனையோ, பார்க்கச் செல்லும் தாய்மார் குழந்தைகளைப் எத்தனையோ! அவர்களில் ஒருவன் தன்னை ஆவலுடன் எதிர்பார்த்து நின்றுகொண்டிருக்கும் சிறுமியைப் புன்சிரிப்புடன் நெருங்கினான்.
“உனக்கு எத்தனை தடவை சொல்றது, மாரியாயி, இங்கு வரவேண்டாமென்று? நீ வராட்டா, உனக்கு நான் மிட்டாய் வாங்கிட்டு வரமாட்டேனா?”
“நான் அதுக்காக வரல்லே. உன்னை அம்மா சீக்கிரம் கூட்டிகிட்டு வரச் சொன்னா.”
“ஒம்பது மணிக்குத்தானே ரெயில்? அதுக்கு இப்பவே என்ன?” என்று சொல்லிக்கொண்டே மாரியாயியை மிட்டாய்க் கடையண்டை கூட்டிச் சென்றான், அம் மனிதன்.
இதற்குள் ஆலையினின்றும் வெளியேறிய ஜனத்திரள் சிறிது சிறிதாக அநேக சந்துகளிலும் பொந்துகளிலும் போய் மறைந்தது. நான் செல்லும் வழி சரிதானா என்று நிச்சயப்படுத்திக்கொள்வதற்காக, மிட்டாய்க் கடையில் நின்றுகொண்டிருந்த அம்மனிதனைப் பார்த்து, “டாட்டா கழகத்திற்கு எப்படிப் போவது?” என்று கேட்டேன். “இப்படித்தான் போகணும். இருங்க. நானும் இந்தப் பக்கந்தான் போகிறேன்” என்றான்.
முறுக்கு, மிட்டாய் முதலியவைகளை வாங்கிச் சிறுமியின் கையில் கொடுத்து, அவளைக் கூட்டிக்கொண்டு என்னை நோக்கி வந்தான். அவனுக்கு நடுத்தரமான வயசு. கட்டுள்ள உடம்பு. பொலிவுள்ள முகம். சிரித்த வதனத்துடன் அவன் என்னைப் பார்த்து, “உங்களுக்கு எந்த ஊர், ஐயா?” என்றான். முன்பின் அறியாத ஒரு மில் கூலியிடம் என் பூர்வோத்தரமெல்லாம் சொல்ல எனக்கு இஷ்டமில்லை. கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லவேண்டுமே என்று, “திருச்சிராப்பள்ளிப் பக்கம்” என்றேன். “எனக்கும் அந்தப் பக்கந்தான்; லால்குடி. 1924-ஆம் வருஷத்து வெள்ளத்துக்கு அப்புறந்தான் நான் பெங்களூருக்கு வந்தேன்” என்று சொல்லித் தன் விருத்தாந்தம் முழுதும் வெகுநாள் பழகியவன்போல் கூற ஆரம்பித்தான். காவிரிப் பாசனத்தில் அவனுக்கு நாலு காணி வயல் இருந்ததாகவும், வெள்ளத்தில் முழுதும் மணல் மேடிட்டதென்றும், வயலில் மணலைப் போட்ட காவிரி, அவன் வயிற்றிலும் மண்ணைப் போட்டுவிட்ட தென்றும் சொன்னான். “அப்பொழுது என் மனைவி எட்டு மாத கர்ப்பிணி. அவளோடு பெங்களூருக்குப் பிழைக்க வந்தேன். இன்னும் சொந்த ஊருக்குத் திரும்பவில்லை” என்றான்.
“இன்றைக்கு ஊருக்குத்தான் குடும்பத்தோடு போகிறாய் போலும்?” என்றேன்.
“இல்லை. தசராவுக்கு மைசூர் போகவேண்டுமென்று நாலைந்து வருஷமாகப் பெண்டு பிள்ளைகள் தொந்தரவு செய்கிறார்கள். நாலு நாளைக்கு மில்லில் ரஜா. இன்றைக்கு ராத்திரி புறப்படலாமென்று இருக்கிறேன்.”
உடனே மாரியாயி, “இந்த வருஷமும் ஏமாத்தப் படாது பாத்துக்கோ” என்றாள்.
நாலைந்து வருஷங்களாகத் தன்னுடைய இருபத்தைந்து ரூபாய் சம்பளத்தில் இதற்காகப் பணம் சேர்ப்பதற்கு அவன் பட்ட கஷ்டங்களைப்பற்றிக் கூறிக் கொண்டு வந்தான். மாரியாயியோ தான் மைசூரில் பார்க்கப்போகும் எத்தனையோ அதிசயங்களைப்பற்றிச் சொல்லிக்கொண்டு வந்தாள்.
பெங்களூர் நகரம் மைசூர்ப் பீடபூமியிலுள்ளது. சமுத்திர மட்டத்திற்குமேல் சுமார் 2500 அடி உயரத்தில் இருக்கிறது. பெங்களூர்த் தெருக்களில் மேடுபள்ளங்களைப் பார்ப்பது சகஜம். அம்மாதிரி மேடு ஒன்றின்மீது நாங்கள் ஏறிக்கொண்டிருந்தோம். மாரியாயி முன்னால் சென்று கொண்டிருந்தாள். நாங்கள் இருவரும் அவளுக்குப் பின்னால் சென்றோம். சிறுமி மேட்டின் உச்சியை அடைந்தாளோ இல்லையோ, “ஐயோ! கார்!” என்று அலறிக் கொண்டு ஒரு பக்கமாய் விலகி ஓடினாள். நானும் பரபரப் புடன் விலகிவிட்டேன். ஆனால் அத்தொழிலாளி விலகுவதற்குள், கார் அவன மீது ஏறிவிட்டது. நியூ மாடல் சவ்ரலட் காராகையால் சிறிதுகூடச் சத்தங்கேட்கவில்லை. அது மேட்டில் வந்து கொண்டிருந்ததால், அது வருவது ஒருவருக்கும் தெரியவில்லை. காரினுள் ஆங்கில உடை தரித்த இந்தியன் எவனோ உட்கார்ந்திருந்தான். “ஓட்டு விரைவாய்; நில்லாதே” என்று டிரைவருக்கு உத்தர விட்டான். அது வாயுவேகமாய்ப் பறந்தது. ஜனங்க ளெல்லாம், ”நிறுத்து! நிறுத்து!” என்று கூச்ச லிட்டார்கள். ஒரு பயனும் இல்லை.
மாரியாயி துடியாய்த் துடித்தாள். என் மனத்தில் எழுந்த பிரச்னைக்கு இச் சம்பவம் ஓர் உறுதியான பதிலை அளிப்பதுபோல் இருந்தது.
தொழிலாளியின் பிணத்தைச் சுற்றி ஒரு கூட்டம் கூடியது. கூட்டத்தில் ஒருவன் பிணத்தைப் பார்த்ததும், “அட ரெங்கா, உனக்கு இந்தக் கதியா வாய்க்க வேணும்!” என்று பரிதவித்தான். கூட்டத்தில் மற்றொருவன், “எத்தனை நாளைக்குத்தான் கடவுள் பொறுத்துக் கொண்டிருப்பார்? இவன் மேஸ்திரியாயிருந்து பண்ணின அக்கிரமங்கள் கொஞ்சமா? சுப்பு நாய்க்கனை இவன் கொன்று இன்னும் ஒரு மாசங்கூட ஆகவில்லை. அரசநீதிக்குத்தான் தப்பினான்; தெய்வ நீதிக்குத் தப்ப முடிந்ததா?” என்றான்.
நான் மைசூர்க் கண்காட்சியில் வைத்த சித்திரங்கள் வருமாறு:
அருணோதயம். கிழக்கு வானம் லேசாய் வெளுத்திருக்கிறது. அதிகாலையில் பெங்களூர் அளிக்கும் மோகனக் காட்சி. மரக்கிளைகளிலிருந்து பறவைகள் இன்னிசை மீட்டுகின்றன. ஒரு வீட்டுக் கூரையின்மீது நின்றுகொண்டு செங்கதிரோன் வரவைச் சேவல் அறிவிக்கிறது.
வேறொரு பக்கம் ஒரு பெரும்பள்ளத்தில் மில் தொழிலாளிகளின் குடிசைகள். அவைகளுள் இருள் மூண்ட ஒரு குடிசையில் மண்ணெண்ணெய் விளக்கு மினுக்கு மினுக்கென்று எரிந்துகொண்டிருக்கிறது. காமப் பிசாசு உருவெடுத்து வந்ததுபோல் தோன்றும் ஒரு மனிதன். நான் பார்த்த அத்தொழிலாளி! அவன் முகத்தில் காமவெறி கனல்விட்டு எரிகிறது. ஓர் இளம் பெண்ணைக் கற்பழிக்க அவன் முயல்கிறான். கணவன் தடை. காம உன்மத்தன் இடுப்பினின்றும் ஒரு கத்தியை உருவி எதிரியின் மார்பில் புதைக்கிறான். அவன், “ஐயோ” என்று அலறித் தரையில் சாய்கிறான்.
இப்படத்தின் அடியில் ‘முற்பகல்’ என்று எழுதினேன்.
அடுத்த சித்திரம் வருமாறு:
மேற்கு வானம் செம்பரிதியின் செஞ்சோதி வெள்ளம் பாய்ந்து,ஓர் ஒப்பற்ற மோகனத் தோற்றம் அளிக்கிறது. மேகங்களெல்லாம் செம்பஞ்சுத் திரள்களெனப் பரவிக் கிடக்கின்றன. பறவைகளெல்லாம் கூடுகளை நோக்கிப் பறந்து செல்கின்றன. குஞ்சுகள் தாய்ப்பறவைகள் வருகின்றனவா என்று கூடுகளினின்றும் தலைகளை நீட்டி நீட்டிப் பார்க்கின்றன. மேற்கு அடிவானத்தில் சூரியன் மறைந்தும் மறையாமலும் இருக்கிறான். அதே சமயம். மல்லேசுவரம் கடைத்தெரு. சிறிது தூரத்தில் ஒரு மில். புகைக்கூண்டினின்றும் கிளம்பும் கரிய புகை இருளை மேலும் அதிகரிக்கிறது. அதே தொழிலாளி! ஒரு மேடு ஏறிக்கொண்டிருக்கிறான். ஓர் அழகிய கார் வேகமாய் வந்து அவன் மீது ஏறுகிறது!
இதன் அடியில் ‘பிற்பகல்’ என்று எழுதினேன்.
விழித்துக்கொண்டேன். நான் நேரில் கண்டதற்கும் காணாது கண்டதற்கும் என்ன சம்பந்தமென்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
– வாடா விளக்கு முதலிய கதைகள், முதற் பதிப்பு: 1944, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.
![]() |
சு.குருசாமி (Trichi. S.V. Guruswamy Sarma, திருச்சிராபுரம் சு.வை.குருசாமி சர்மா) என்பவர், தமிழில் முதல் சில புதினங்களில் ஒன்றான "பிரேம கலாவதீயம்" (1893) எழுதிய ஒரு முக்கியமான தமிழ் புதினம் மற்றும் சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவர் 1940களில் "வாடா விளக்கு" போன்ற சிறுகதைத் தொகுப்புகளையும், பல கதைகளைத் தொகுத்து வெளியிட்டதோடு, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உதவியவர். மாயூரம் முனிசீப் வேதநாயகம் பிள்ளை, பண்டித எஸ்.எம்.நடேச சாஸ்திரி, பி.ஆர்.ராஜமையர், சு.வை.குருசாமி சர்மா, அ.மாதவையா ஆகியோர் முதற் காலக்கட்டத் தமிழ்…மேலும் படிக்க... |
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: December 9, 2025
பார்வையிட்டோர்: 70
