கண்கள் இரண்டும் …
கதையாசிரியர்: ரா.நீலமேகம்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
இணைய வெளியீடு: November 10, 2026 முதற்பதிப்பு: 2026
பார்வைகள்: 165

“தினமும் தவறாம வரான்னு சொல்றியா? ஏதாவது தப்பான ஆளைப்பாத்துட்டு கன்ஃப்யூஸ் ஆயிட்டியா? அப்படி எதுக்கு வந்து உங்கிட்ட நிக்கிறான்? என்ன கேட்டான்? ஏதாச்சும் பேசினானா?” என்று வந்தனாவைக் கேட்டான் பாவேஷ்.
“நான் கிட்டத்தட்ட ஒரு வாரமா அவனைப் பாக்கறேன்னு நினைக்கிறேன். முதல் நாள் நான் அவனை ஆஃபீஸ் கிட்ட இருக்கிற சிக்னலில் நின்னுட்டு இருந்தபோது எனக்கு பின்னாடி அவன் வண்டியை நிறுத்தி கண்ணாடி வழியா என்னையே பாத்துட்டு இருந்தான். நான் அதை பெரிசா எடுத்துக்கலை. அதுக்கப்புறம் ரெண்டு நாள் கழிச்சு நம்ம வீட்டுலேர்ந்து கிளம்பி மெயின் ரோடு சிக்னலில் எதிர்த்த சைட்ல நின்னுட்டு என்னையே பாத்தான். தொடர்ந்து ரெண்டு மூணு நாள் நான் ஆஃபீஸ் டைம் முடிஞ்சு திரும்பி வர்ற வழியில பழம், காய்கறிகள் வாங்க நிப்பேனே நாராயண் சூப்பர் மார்க்கெட்,அங்கே கரெக்டா வந்து நிக்கிறான். அவனும் பழங்கள் வாங்கினான். அப்போதான் முதல் தடவையா என்னைப் பாத்து” ஹலோ மேடம், ” என்றான். ரெண்டு மூணு தடவை பாத்த மூஞ்சியா இருக்கேன்னு நானும் “ஹலோ” ன்னு சொல்லிட்டு வேகமா வெளியே வந்துட்டேன். இப்போ என்னடான்னா ஆஃபீஸ் போய் சேரும்போது அங்கே நிக்கிறான். திரும்பி வரும்போது நம்ம தெரு முனையில் நிக்கறான். என்னைப் பார்த்து ஸ்மைல் பண்றான். நான் ஒண்ணும் ரெஸ்பான்ஸ் செய்யாம ஸ்பீடா வந்துட்டேன். அவனை அடுத்த தடவை பாத்தா நேராகவே கேட்டுடப் போறேன்.” என்று பொறிந்து தள்ளினாள் வந்தனா.
“சரி, சரி டென்ஷன் ஆகாமல் வண்டியை ஓட்டிட்டு போ. ஆஃபீஸ் போய் சேர்ந்தப்புறம் ஃபோன் செய். நான் இன்னும் ரெண்டு நாளைக்கு ஆஃபீஸ் ஸேல்ஸ் சம்மந்தமா வெளியூர் போறேன். நான் வரும் வரைக்கும் பொறுமையா இரு. வந்தவுடனே முதல் வேலையா அவனைப் பாத்து உண்டு இல்லையான்னு பண்ணிடறேன். ஓ கே..அது வரைக்கும் அவன் கேட்டால் கூட எந்த பதிலும் கொடுக்காமல் போய்ட்டே இரு. சண்டை போடக் கிளம்பிடாதே.முடிஞ்ச வரைக்கும் உன் ஃப்ரெண்ட் வேணி இருக்காளே, அவளோட சேர்ந்தே வா.” என்று கூறி விட்டு பாவேஷ் அலுவலகத்திற்கு கிளம்பினான்.
கல்வேலி நகரத்தின் ஒரு பகுதியில் பாவேஷ்,வந்தனா தம்பதிகள் வசிக்கின்றனர். பாவேஷ் சாலைகள் அமைக்க உதவியாக இருக்கும் இயந்திரங்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் விற்பனைப்பகுதி மேலாளராக இருக்கிறான். அது தொடர்பாக வெளியூர்களுக்கு அடிக்கடி சென்று வருவான்.
வந்தனா கல்வேலியில் இருக்கும் மென்பொருள் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறாள்.இருவருக்கும் அலுவலக வேலைகள் தொடர்பான கடின நாட்கள், பணிச்சுமை நேரங்கள் இருப்பது மிகவும் சாதாரணமான ஒன்று என்பதை இருவரும் நன்றாகப் புரிந்து வைத்திருந்ததால், குடும்ப வாழ்க்கையில் குழப்பம் இல்லாமல் போயிற்று. இருவருக்கும் திருமணம் ஆகி மூன்று வருடங்கள் ஆகின்றன. முப்பத்தி மூன்று வயதுக்கு மேல் செய்து கொண்ட தாமதமான திருமணம்தான். இருந்தாலும் குழந்தை பெற்றுக் கொள்வதை இருவரும் ஒரே நிலை மனதுடன் இன்னும் சற்று தாமதப் படுத்திக் கொண்டனர். ” லெட் அஸ் ஃபர்கெட் தட் அட்லீஸ்ட் ஃபார் ஃபோர் இயர்ஸ். நாலு வருஷத்துக்கு அப்புறம் யோசிக்கலாம். நீ என்ன நினைக்கறே பாவேஷ்?” என்று கல்யாணம் நிச்சயம் ஆனவுடனேயே வந்தனா கேட்டாள். ” எஸ், ஐ அக்ரீ” என்று பாவேஷ் அன்றே சம்மதம் தெரிவித்து விட்டான். இந்த மூன்று வருடங்களில் எந்த உரசல்கள், பூசல்கள் இல்லாமல் இருந்து வருகின்றனர்.ஏதாவது மாற்றுக் கருத்து இருப்பினும் இருவரும் உட்கார்ந்து ஒருவருக்கொருவர் பேசி சரியான முறையில் தீர்த்துக் கொள்வார்கள்.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ஒரு கெட்ட நேரத்தை இந்த தம்பதிகள் சந்திக்க நேர்ந்தது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை எப்போதும் ஏதாவது ஒரு சுற்றுலா செல்வது வந்தனா, பாவேஷ் தம்பதிகளுக்கு வழக்கம். சரியாக திட்டமிட்டு முன்னதாகவே தங்குமிடம், கார் இவைகளை ஏற்பாடு செய்து விடுவான் பாவேஷ். ஊர்கள் சுற்றிப் பார்க்க அவன் வண்டியை எடுக்க மாட்டான். காரணம் கேட்டால் வந்தனாவிடம் ” வெளியூருக்கு போறோமா, காரை எங்க பார்க் பண்றது, இந்த மாதிரி கவலை எல்லாம் பட்டா டென்ஷனா இருக்கும். ட்ராவல் புக் பண்ணிட்டா அவங்க பாத்துக்குவாங்க. நம்ம ட்ரிப் நல்லா என்ஜாய் பண்ண முடியும் இல்லையா?” என்று கூறுவான்.
அப்படி சுற்றுலா சென்று திரும்பும் போது இவர்கள் வந்த வண்டி பெரிய விபத்துக்குள்ளாகி பாவேஷ், வந்தனா இருவரும் பிழைத்ததே கடவுள் அருளால் என்று அனைவரும் சொல்லும்படி ஆகி விட்டது. பாவேஷுக்கு உடல் முழுவதும் அடி. அதையும் விட மோசமான நிலையில் வந்தனா இருந்தாள். மிகவும் அதிர்ச்சி அளித்த செய்தி என்னவென்றால், வந்தனாவின் கண்களில் கண்ணாடித்துகள்கள் புகுந்து பார்வையை சிதைக்கும் நிலைக்கு சென்று விட்டது. பெரிய பிரபலமான மருத்துவமனையில் இருக்கும் கண் மருத்துவ நிபுணர்கள் எவ்வளவோ முயற்சித்தும் மிகக் குறைவான பலனே கிடைத்தது எனலாம். சிறிது நாட்களில் வந்தனாவின் பார்க்கும் சக்தி பூஜ்யம் என்று கூறுமளவிற்கு ஆனது. வீட்டில் ஒரே சோகமயமாக பொழுது ஓடியது.
கண் பார்வை இழந்த தன் மனைவியை தினமும் பார்த்துப்பார்த்து மனதில் குமுறியபடி இருந்தான் பாவேஷ். அவள் அறியாமல் பலமுறை தனிமையில் அழுதபடி இருந்தான்.அந்த நேரத்தில் எழுபது சதவீதம் குணமாகி விட்ட பாவேஷ் தனக்கு மிகவும் நெருங்கிய சில மருத்துவ நண்பர்களுக்கு தொடர்பு கொண்டு ஏதாவது வழியில் உதவி செய்ய கேட்க, அவர்கள் மூலமாக இரண்டு மாதம் முன்பு கண்கள் தானமாகப் பெற முடிந்தது. அதிர்ஷ்ட வசமாக அக்கண்கள் நல்ல நிலையில் இருந்தாலும் வந்தனாவுக்கு பொருந்தியதாலும் உடனடியாக தேவையான நடவடிக்கைகளை செய்து அதைப் பொருத்தினர் மருத்துவர்கள்.
அதன் பின்னர் ஒரு மாதம் கழித்து பாவேஷும், வந்தனாவும் குணமாகி எப்போதும் போல் தினசரி நடவடிக்கைகளை செய்து வந்தனர். இரண்டு பேர்கள் பணிபுரியும் நிறுவனத்தாரும், இவர்களுடன் பணிபுரியும் நண்பர்களும், இவர்களுடைய கடினமான நேரங்களில் உறுதுணையாக இருந்தார்கள்.ஒரு மாத காலத்தில் பாவேஷ் தினமும் அலுவலகம் அல்லது வெளியூர் செல்லும் பணி இவைகளை செய்ய ஆரம்பித்து விட்டான். ஆனால் வந்தனா தன் பணிகளை வீட்டில் இருந்தே செய்து வந்தாள். அவள் பூரண குணமடையும் வரை வீட்டிலிருந்தே பணிபுரியும்படி அவள் நிறுவனத்தின் தலைமை அனுமதி அளித்திருந்தது.
இப்போது கிட்டத்தட்ட ஒரு மாதமாக வந்தனா அலுவலகத்திற்கு தன் வண்டியில் சென்று வருகிறாள். ஆனால் இதுவரை இல்லாத ஒரு பிரச்னை இப்போது அவளுக்கு ஏற்பட்டுள்ளது. மூன்று வாரங்கள் முன்பு ஒரு நாள் ஒரு இளைஞன், சற்றேறக்குறைய இருபத்தி இரண்டு அல்லது இருபத்தி மூன்று வயது இருக்கும், அவன் வந்தனா அலுவலகத்திற்குள் நுழைவதற்கு முன் அவள் வண்டியை நிறுத்தி அவளைப் பார்த்து விட்டு உடனே போய் விட்டான். இவள் ஏதோ கேட்பதற்குள் அவன் கிளம்பி விட்டான். அதன் பின் ஒரு நாள் மாலை, பிறகு அவள் வீட்டிலிருந்து கிளம்பி முக்கிய சாலையில் திரும்பும் போது இப்படியாக அவளை நேருக்கு நேர் பார்த்துக் கொண்டே இருந்தான்.
பிறகு ஒரு நாள் அவளை அருகில் பழங்கள் வாங்கும் கடையில், பிறகு சிக்னலில் இப்படி பார்த்த போது ‘ஹலோ மேடம் ‘ என்று பேச்சும் கொடுத்தான். வந்தனா ” ஹலோ” என்று கூறி விட்டு விரைவாக வெளியேறினாள். ஆனால் அவன் பின் தொடரவில்லை. இது போல் அடிக்கடி இன்று வரை நடப்பதால் வந்தனா பாவேஷிடம் சொல்லி இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று கோபத்துடன் கேட்கிறாள்.
இன்றும் வந்தனா அந்த இளைஞனைப் பார்த்தாள். வேண்டுமென்றே வந்தனா அலுவலகத்திற்கு சற்று முன்னால் ஒரு மரத்தடியில் நின்றாள். அவள் நினைத்தது போலவே அந்த இளைஞன் இவள் அருகே வந்து அவன் வண்டியை நிறுத்தி விட்டு வந்தனாவைப் பார்த்து ” ஹலோ, மேடம், இங்கே பாருங்களேன்” என்று கூறிவிட்டு அவளருகே வந்தான்.
சட்டென்று மிகுந்த கோபத்துடன் அவனைப் பார்த்து ” ஹலோ எல்லாம் இருக்கட்டும். நீ இந்த மாதிரி செய்றது எனக்கு பிடிக்கலை. உனக்கு என்ன வேணும்னு என் பின்னாடி சுத்தறே? மரியாதையா இதை உனக்கு நான் சொல்றேன். இனிமேல் உன்னை நான் இங்கே பாக்கக்கூடாது. தினமும் காலையும் மாலையும் இதே வேலையா இருக்கியே, உனக்கு வேற எந்த வேலையைமே இல்லாமல் ஊர் சுத்திட்டு இருக்கிறதுதான் பிழைப்பா? இதே போல் நீ தொடர்ந்தா நிச்சயம் போலீஸ் புகார் கொடுத்துடுவேன்”. என்று பொறிந்து தள்ளி விட்டாள்.
அவன் ஏதும் சொல்லாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். வந்தனா பேசி முடித்து வண்டியை கிளப்ப ஆரம்பித்த போது ” மேடம் என் பெயர் ப்ரணவ். உங்க கிட்ட ஒரு பதினஞ்சு நிமிஷம் பேசணும். அது உங்களுக்கு என்னிக்கு வசதியா இருக்கும்னு சொல்லுங்க. நான் சொன்னதுக்கப்புறம் நீங்க என்ன வேணுமோ திட்டிக்கோங்க. எனக்கு கவலை இல்லை” என்றான்.
“இவ்வளவு சொன்னப்புறமும் நீ இந்த மாதிரி பேசிட்டு இருக்கியே, நீயெல்லாம் யாருடா? சரி, உனக்கு எங்கிட்ட பேசணும் இல்லையா, இப்போ எனக்கு ஆபீஸுக்கு டைம் ஆயிடுச்சு. ரெண்டு நாள் கழிச்சு என் வீட்டுக்கு வா. உனக்குதான் என் வீடு தெரியுமே, நீதான் எல்லாத்தையும் நோட் பண்ணிட்டுதானே என்னை ஃபாலோ பண்றே? நானும் பாத்துட்டுதான் இருக்கேன். இந்த சனிக்கிழமை எனக்கு லீவு. வீட்டுக்கு வந்து என்ன பேசணுமோ அதைப் பேசு. ஆனால் ஒண்ணு, என் ஹஸ்பெண்ட்டும் இருப்பாரு. ஞாபகம் வச்சுக்கோ.” என்று அலட்சியமாக கூறினாள் வந்தனா.
“ஓ, சார் இருப்பாரா?” என்று கேட்டான் ப்ரணவ்.
“ஏன் பயமா இருக்கா உனக்கு ” என்றாள் வந்தனா.
உடனே ப்ரணவ்” அதெல்லாம் இல்லை. அவர் இருந்தால் நல்லதுதான். சரி, நான் கமிங் சாட்டர்டே காலை பத்து மணிக்கு உங்க வீட்டுக்கு வரேன். நீங்க இப்போ ஆஃபீஸ் போங்க. ரொம்ப தேங்க்ஸ் மேடம், இந்த மூணு நிமிஷம் ஒதுக்கினதுக்கு.”என்று கூறி தன் வண்டியில் ஏறிச் சென்றான்.
வந்தனா ‘என்ன ஆளு இவன், பைத்தியம் பிடிச்சவன் மாதிரி இருக்கான் ‘ என்று முணுமுணுத்துக் கொண்டே அலுவலகத்திற்குள் சென்றாள்.
அடுத்த இரண்டு நாட்கள் வந்தனா அலுவலகம் செல்லும்போது ப்ரணவ் என்று வந்தவனைக் காணவில்லை.வந்தனா நிம்மதி அடைந்தாள்.
அந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று மாலை பாவேஷ் திரும்பி வந்தான். அன்று இரவு உணவின் போது வந்தனா மூன்று நாட்கள் முன்பு நடந்ததை விளக்கமாகக் கூறினாள். பாவேஷ் அதைக் காதில் வாங்கிக் கொண்டு பின்னர் அவளிடம் ” அவன் நாளைக்கு வரட்டும். நீ உணர்ச்சி வசப்பட்டு உடனே கொந்தளித்து ஏதும் பேச ஆரம்பிச்சுடாதே. நான் பாத்துக்கிறேன். முதல்ல அவன் உங்கிட்ட என்ன சொல்ல நினைக்கிறானோ அதைச் சொல்லட்டும். அதுக்கப்புறம் நான் எப்படி ஹேண்டில் பண்ணணுமோ பண்ணிக்கறேன். நீ கொஞ்சம் அமைதியா இரு. ஓகே. ” என்றான்.
” ஓகே டியர், நான் பேசவே மாட்டேன்” என்று சொன்னாள் வந்தனா.
சனிக்கிழமை காலையில் சீக்கிரமே எழுந்து விட்டாள் வந்தனா. காஃபி சாப்பிட்டு விட்டு சிறிது உடற்பயிற்சிகள் செய்து முடித்து காலை உணவு தயாரித்து வைத்தாள். அவளுக்கு முன்னரே எழுந்து நடைப்பயிற்சி சென்றிருந்த பாவேஷ் வீட்டுக்குள் வந்தான். ” அட, என்ன இவ்வளவு சீக்கிரமா டிஃபன் ரெடி பண்ணிட்டே, ஆச்சரியம்தான். ஏன் எங்கேயாவது ஷாப்பிங் ப்ளானா? அது சரி, அந்த பையன், அவன் பேர், ம்ம்..ப்ரணவ்னு சொன்னான் இல்லே, எத்தனை மணிக்கு வரேன்னு சொல்லிருக்கான்?” என்று கேட்டான்.
” ஒண்ணும் பெரிய காரணம் இல்லை. சீக்கிரமே எழுந்துட்டேன். சரி டிஃபன் ரெடி பண்ணிடலாமே அப்டின்னுதான். அப்புறம் அவன், அதான் அந்த ப்ரவீண் பத்து மணிக்கு வரேன்னு சொல்லிருக்கான். அவன் எங்கே வரப்போறான், சரி நான் போய் குளிச்சிட்டு வரேன். நீயும் ரெடியாகி வா ப்ரேக் ஃபாஸ்ட் சாப்பிட ” என்று கூறி குளிக்கப் போனாள்.
இருவரும் காலை உணவை சாப்பிட்டு விட்டு அன்றைக்கு என்னென்ன வீட்டு வேலைகளை முடிக்கலாம் என்று ஒரு குறிப்பு தயார் செய்து கொண்டிருந்தனர். பிறகு அன்றைய நாளிதழில் வந்திருந்த செய்திகள் பற்றி பேசிக் கொண்டிருந்தனர். நேரம் நகர்ந்து காலை பத்து மணியை நெருங்கியது. பத்து மணி ஐந்து நிமிடம் இருக்கும்போது அழைப்பு மணி ஒலித்தது. பாவேஷ்
சென்று கதவைத் திறந்தான். அங்கே ஒரு பையுடன் ப்ரணவ் நின்று கொண்டிருந்தான்.
” குட் மார்னிங் சார், நீங்க பாவேஷ் சார்னு நினைக்கிறேன். நான் ப்ரணவ். உங்களோடு, மேடம் வந்தனா அவங்களோட பத்து நிமிஷம் பேசறதுக்கு வரேன்னு சொல்லியிருந்தேன். இன்னிக்கு காலைல பத்து மணிக்கு வரச் சொன்னாங்க அவங்க. இஸ் இட் ஓகே டு கம் இன் சார்?” என்று கேட்டான் ப்ரணவ்.
பாவேஷ் ” எஸ் ப்ரணவ். குட் மார்னிங். ஷி டோல்ட் மீ. கம் இன்ஸைட். பேசலாம்” என்று கூறி அவனை வரவேற்று உள்ளே அழைத்துப் போய் உட்காரச் சொன்னான்.
அந்த நேரத்தில் வந்தனாவும் வந்து எதிர் திசையில் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள். பாவேஷும் உட்கார்ந்தவுடன், ப்ரணவ் ” குட் மார்னிங் மேடம், இந்த பையில் கொஞ்சம் பழங்கள் இருக்கு. ஃபர்ஸ்ட் டைம் உங்க வீட்டுக்கு வரேங்கறதால வாங்கிட்டு வந்தேன். எங்க அம்மா எங்கிட்ட சொல்வாங்க, எந்த வீட்டுல போய் யாரையாவது முதல் தடவை சந்திக்க போறப்ப அவசியம் பழங்கள் வாங்கிட்டு போகணும் அப்டீம்பாங்க. அதனாலதான் வாங்கி வந்தேன். “என்று இருவரையும் பாத்து சொன்னான்.
” சரி ப்ரணவ். தேங்க்ஸ். உனக்கு ஏதாவது வேணுமா, வாட்டர், காஃபி?” என்று கேட்டான் பாவேஷ்.
” இல்லை சார் வேண்டாம். நான் உங்க வீக் எண்ட் ஹாலிடேய வீணடிக்க விரும்பலை. அதனால் பேசணும்னு நினைச்சதை பேசிடறேன். இதை ஒரு ரெக்வெஸ்ட்னு நினைச்சுக்கங்க மேடம். ” என்றான் ப்ரணவ்.
“புரிஞ்சா சரி, சீக்கிரம் ஆகட்டும்” என்ற வந்தனாவை பாவேஷ் ” ப்ளீஸ், ப்ரணவ் பேசட்டும்” என்று கூறி அமைதிப் படுத்தினான்.
” சார், அவங்க கோபத்தில நியாயம் இருக்கு சார். திடீர்னு ஒவ்வொரு நாளும் ஒரு அறிமுகமில்லாத ஆண் ஒரு கல்யாணமான பொண்ணு முன்னாடி போய் நின்னுட்டு இருந்தா யாருக்குதான் கோபம் வராது? இன் ஃபேக்ட் அவங்க ரொம்ப பொறுமையானவங்கன்னு நினைக்கிறேன். சரி சார், இப்போ நான் சொல்ல வந்ததை சொல்லிடறேன். கல்வேலி நகரத்திலேர்ந்து இருநூற்று ஐம்பது கிலோமீட்டர் தூரத்தில இருக்கற வேம்புக்காட்டூர்தான் என் சொந்த ஊர். என் படிப்பை முடிச்சுட்டு வேலை தேடிட்டு இருந்தேன். நான் பள்ளிப் படிப்பு படிக்கும்போதே என் தந்தை ஒரு விபத்தின் காரணமா இறந்துட்டார். என் அம்மா தங்கம்மாள்தான் எனக்கு முழு ஸப்போர்ட். அவங்க சத்துமாவு, இட்லி, தோசை மாவு இதெல்லாம் தயாரிச்சு வியாபாரம் பண்ணி வர்ற வருமானத்தில் வீட்டுச் செலவு, என் படிப்பு செலவு இதெல்லாத்தையும் கவனிச்சு வந்தாங்க. இடையிடையே பள்ளி குழந்தைகளுக்கு கணக்கு, ஆங்கிலம் ட்யூஷன் எடுத்து சம்பாதிப்பாங்க. அவங்களுக்கு ஏதாவது ஒரு வழில நானும் உதவணும்னு நினைச்சு காலேஜ் படிக்கிற சமயத்துல வண்டி லைசென்ஸ் எடுத்து தெரிஞ்சவங்க மூலமா ஒரு செகண்ட் ஹேண்ட் வண்டி தவணை முறைல வாங்கி நான் டெலிவரி பாய் வேலை செஞ்சுட்டிருந்தேன். என் அம்மாவுக்கு ஒரே கோபம். ஏண்டா படிப்பை விட்டுட்டியான்னு கேட்டுட்டே இருந்தாங்க. படிக்கிற நேரம் போக மீதி நேரத்துலதான் இதை செய்யறேன்னு சொல்லி அவங்களை சமாதானப்படுத்த நான் ரொம்ப கஷ்டப்பட வேண்டியதாப் போச்சு. அவங்க இதை முழுசா நம்பாம என் காலேஜ் ஃப்ரெண்ட்ஸ், புரொஃபஸர் இவங்க கிட்ட எல்லாம் கேட்டு உறுதிப்படுத்தினப்புறம்தான் நிம்மதி ஆனாங்க. நான் மனசுக்குள்ள சிரிச்சிட்டே அதை செஞ்சிட்டு இருந்ததில கொஞ்சம் அவங்களுக்கு கூடுதலா பண உதவி செய்ய முடிஞ்சது. அவங்களும் அதை உணர்ந்தாங்க. என் படிப்பை எல்லாம் ராத்திரி முழிச்சு ரெண்டு மணி வரை படிப்பேன். காலைல ஏழு மணிக்கு டெலிவரி, அதுக்கப்புறம் காலேஜ், திரும்ப நாலரை மணிலேர்ந்து ஒன்பது மணி வரை வேலை இப்படி செஞ்சு ஒரு வழியா நல்லபடியா படிப்பை முடிச்சுட்டேன். வேம்புக்காட்டூர் நகரத்திலேயே சின்ன சின்ன வேலைகள் கிடைச்சது. அதையெல்லாம் செஞ்சிட்டு இருந்தபோது ஒரு கம்பெனியில் நல்ல வேலைக்கு தேர்வாயிட்டேன். ஆறு மாசம் ட்ரெயினிங் அப்புறம் வெளிநாட்டில் ரெண்டு வருஷம் ஒர்க் பண்ணணும் அப்படிங்கற கண்டிஷன். ஆனால் நல்ல சம்பளம். அம்மாகிட்ட சொன்னப்ப ஒரு நிமிஷம் கூட யோசிக்கலை. உடனே சேந்துடச் சொன்னாங்க. உங்களை விட்டுட்டு எப்படி போறதுன்னு கேட்டதுக்கு, எனக்கு ஒண்ணும் ஆகாது. நீ தைரியாமப் போய் சேர்ந்து நல்ல எதிர்காலத்தை உன் வாழ்க்கைல அமைச்சுக்கன்னுட்டாங்க. நானும் சேர்ந்து ட்ரெயினிங் முடிச்சு ஃபாரின் போய்ட்டேன். போறதுக்கு முதல் வாரத்தில் என் மனசே சரியில்லை. அவங்களுக்கும் கஷ்டமாத்தான் இருந்தது. இருந்தாலும் எனக்கு தைரியம் சொல்லிட்டு இருந்தாங்க. என் மாமா பையன் அங்கே பக்கத்து தெருவில் இருக்கறவன்ட்ட அம்மாவைப் பாத்துக்க சொல்லி அவனுக்கு மாசம் ஏதாவது பணம் கொடுத்துடறேன்னு சொன்னேன். அவனும் உடனே சம்மதிச்சு அம்மாகிட்ட அதை சொல்லிட்டு கிளம்பினேன் சார்.
முதல் வருஷம் நல்லாதான் போச்சு மேடம். அம்மாவும் அடிக்கடி வீடியோ கால்ல பேசுவாங்க. அம்மாவைப் பார்க்கணும்னு நினைச்சு ஒரு வருஷம் முடிஞ்ச கையோட பத்து நாள் லீவுல வந்துட்டு போனேன். அம்மாவும் ‘ இப்போ எல்லாம் ரொம்ப வேலையை இழுத்து விட்டுக்கறதில்லே கண்ணா.
கடன் தொல்லை கிடையாது. நல்ல ரெஸ்ட் கிடைக்குது. நீ சந்தோஷமா இருக்கறதைப் பாக்கறதுலயே எனக்கு தெம்பு முழுசா வந்துடுச்சு ‘ ன்னு சொல்லி வழியனுப்பினாங்க மேடம். என்ன கெட்ட காலமோ தெரியலே, ரெண்டு மாசம் முன்னாடி ராத்திரி சாப்பிட்டு படுத்திருக்காங்க. விடிகாலைல திடீர்னு ஏற்பட்ட மாரடைப்பால் இறந்துட்டாங்க. காலைல என் கஸின் வந்து பாத்து கதறியழுது எல்லாரையும் கூப்பிட்டு சொல்லிட்டான். எனக்கும் ஃபோன்ல சொன்னப்போ ஒரு நொடி பூமியே இருண்டு போன மாதிரி ஆயிடுச்சு எனக்கு. கம்பெனில சொன்னவுடனே லீவு கொடுத்துட்டாங்க. ஆனால் எதிர்பார்த்த மாதிரி என்னால் வர முடியல. போர் சூழல்னால எல்லா ஃப்ளைட்டும் கேன்சல் ஆயிடுச்சு. அதுக்கப்புறம் வேறு ஊருக்கு போய் அங்கே ஒரு நாளைக்கு ஒரு ஃப்ளைட்தான் அதுவும் உலகம் முழுக்க சுத்தி போகும். ஒரு கரெக்டான டைம் எல்லாம் சொல்ல முடியாதுன்னுட்டாங்க. வேற வழியில்லாமல் அதுல ஏறி இங்கே வந்து சேர நாலு நாளுக்கு மேல் ஆயிடுச்சு. அதுக்குள்ள என் மாமா, கஸின் இவங்க அம்மாவுக்கு காரியம் செஞ்சுட்டாங்க. எனக்கு என் லைஃப் மேலயே ஒரு வெறுப்பு வந்துடுச்சு சார். மேடம். அவங்களை கிரிமேட் செஞ்ச இடத்தில போய் தினம் காலைல வெறிச்சுப் பாத்திட்டு வருவேன்.
அதற்கப்புறம் ஒரு நாள் டாக்டரைப் பார்த்து விவரமெல்லாம் தெரிஞ்சுகிட்டபோது அம்மா கண் தானம் செய்ய எப்பவோ எழுதிக் கொடுத்திருக்காங்கன்னு தெரிஞ்சது. அது யாருக்கு தரப்பட்டதுன்னு விசாரிக்க, யாரும் சரியான விவரங்கள் தரலை. அப்புறம் நேரடியா அந்த சம்மந்தப்பட்ட டாக்டரை பெரும்பாடு பட்டு சந்திச்சு என் நிலைமையை சொன்னேன். அவருதான் உங்களோட பேரு, ஆஃபீஸ் அட்ரஸ் கொடுத்தாங்க. எனக்கு எங்க அம்மாவை கடைசியா பாக்கத்தான் முடியலையே, அவங்க விட்டுப் போன கண்களைப் பார்த்தால் மன ஆறுதல் கிடைக்கும்னு இங்கே மேடத்தை பாக்க வந்தேன். என்னையும் அறியாமல் அந்த கண்களைப் பாக்கும் போது மேடம் என் கண்ணுக்கு தெரியாமல் என் அம்மாதான் கண்ணுல தெரிஞ்சாங்க. எனக்கு பேச்சே எழலை. தினமும் அந்த கண்களைப் பாக்கணும்னு தோணினதால இப்படி உங்க பின்னாடி வந்தேன். அந்த சூப்பர் மார்க்கெட்டில் இதைச் சொல்ல வந்தேன். நீங்க கோபமா வெளியே போய்ட்டீங்க.மூணு நாள் முன்னாடி சொல்ல வந்தேன். நீங்க கோபத்துடன் ஏதேதோ பேசிட்டு ஆஃபீஸ்க்கு லேட் ஆயிடுச்சுன்னு போய்ட்டீங்க. தப்பு என் பக்கம்தான். ஆனால் அம்மா கண்களை பார்த்தவுடனே என் அம்மா உயிரோடு இருக்கற மாதிரி ஒரு உணர்வு வந்துடுச்சு.அதான் திரும்பத் திரும்ப பார்க்கறதை தொடர்ந்தேன். என்னை மன்னிச்சுக்கங்க.
என்னைப் பொறுத்தவரை நீங்க எனக்கு என் அம்மா ரூபத்தில் இருக்கீங்க. அதனால் ஒரே ஒரு ரெக்வஸ்ட் மேடம், சார், எனக்கு என் அம்மாவைப் பார்க்கணும்னு மனசுல தோணிச்சுன்னா இந்த ஊருக்கு வந்து உங்களை, உங்க கண்களை ஒரு அஞ்சு நிமிஷம் பாக்க எனக்கு அனுமதி தந்தா போதும். அதுக்கு மேல உங்களை தொந்தரவு செய்ய மாட்டேன். என்னால வேற ஏதும் நினைக்க முடியலே மேடம். இப்போதைக்கு என் அம்மாவா நீங்கதான் இருக்கீங்க இந்த வீட்ல. இதை மறுக்காதீங்க மேடம், இல்லை என் அம்மா ” என்று கூறிய ப்ரணவ் குலுங்கி அழுதான்.
அவன் மட்டுமா அழுதான், அங்கே உட்கார்ந்திருந்த வந்தனா, அவனைக் கண்டபடி கடிந்து கொண்ட வந்தனா அழுதபடி ஓடி வந்து ப்ரணவைக் கட்டிப் பிடித்து” அழாதேப்பா, நீ எப்போதெல்லாம் என்னைப் பாக்க நினைக்கறியோ அப்போதெல்லாம் வரலாம். கவலைப்படாதே. நான் உன்னை பெற்றெடுக்காத அம்மா. நீ இனிமே அழக்கூடாது ” என்று அழுத குரலில் பேசிக் கொண்டிருந்தாள்.
கண்களில் வழிந்த நீரை துடைத்தபடி அவர்கள் அருகே வந்த பாவேஷ், ” ப்ரணவ், இன்னிலேர்ந்து நீ தனி இல்லேப்பா. என் குடும்பத்தில் ஒருத்தன். எங்களோட பையன் போல உரிமையோடு இருக்கலாம். உங்க அம்மா உன்னையே பாத்துட்டு இருக்கணும் தான் இறந்தா கூட அப்படீன்னு நினைச்சுதான் இந்த கண் தானம் செஞ்சு அது வந்தனாவுக்கு கிடைச்சிருக்கு. இனிமேல் நீ அழவே வேண்டாம்.” என்றான்.
ப்ரணவ் இப்போது அழுகையை நிறுத்தி விட்டு, வந்தனா கண்களை, தங்கம்மாள் கண்களை பாசத்துடன் துடைத்தான். கண்களில் முத்தமிட்டான். ” அம்மா” என்று கூறியபடி வந்தனாவைக் கட்டிக் கொண்டான்.
விடுமுறை முடியும் வரையில் ப்ரணவ் இங்கேயே தங்கட்டும் என்று வந்தனா, பாவேஷ் இருவரும் முடிவெடுத்து அவனிடம் கூற, ப்ரணவ் ” எனக்கும் என் உணர்வுகளுக்கும் இவ்வளவு மதிப்பு தந்த உங்க ரெண்டு பேருக்கும் நன்றி. நான் இன்னும் ரெண்டு நாள் இங்கே இருக்கேன். அப்புறம் ஊருக்கு போயிட்டு வெளிநாடு போய்டுவேன். இந்த வருஷம் முடிஞ்சவுடன் நேரா இங்கேதான் வருவேன். வாராவாரம் வீடியோ கால் வந்துடுங்க மேடம் ” என்றான் ப்ரணவ்.
“மேடம் இல்லை, அம்மா” என்று திருத்தினாள் வந்தனா.
![]() |
பெயர்: நீலமேகம். வயது 71. பூர்வீகம்: திருவாரூர் மாவட்டம், கீழமணலி என்ற கிராமம். தந்தை: ராமஸ்வாமி அய்யங்கார். கிராமத்து கணக்கராக இருந்தவர். தாயார்: ஜானகி படிப்பு: பி.எஸ்சி (இயற்பியல்), திருச்சி தேசியக் கல்லூரி. வேலை தேடி மும்பைக்கு சென்று இருபத்தைந்து ஆண்டுகள் பல தனியார் கப்பல் துறை அலுவலகங்களில் பணிசெய்து கோயம்புத்தூர் இடமாற்றம். உலகின் முதல் பெரிய கப்பல் பணியகமான, 'மெர்ஸ்க் லைன்' (Maersk Line) கோவை அலுவலகத்தில் பொது மேலாளராக…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
ஆத்தா…. நான் பாஸ் பண்ணீட்டேன்..!
வளர்கவி
November 10, 2026
மலரும் சுமைதானடி
இரஜகை நிலவன்
November 10, 2026
உந்தன் நிழலாய் நானடி தோழி…
காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன்
November 10, 2026
