கணக்கு
நான் இந்தச் சிறு நகரத்துக்காலனியில் வாழ்கிறேன்.
‘பாப்பா, உன் அம்மா தவறிப்போனாங்கன்னு எனக்கு சேதி வந்துச்சி.. நானு என் ஆளுவள இட்டுகிட்டு மதியம் அங்கண போறேன். சவத்த கொண்டு சேக்கணும். அது என் கடமைல்ல.’ இடுகாட்டில் ஊழியம் பார்க்கும் அண்டை வீட்டுக்காரர் என்னிடம் சொல்லிச்செல்கிறார்.
’அம்மா அம்மா ’ ஓங்கிக்கத்தினேன். தெரு முழுவதும் அவ்வொலி கேட்டிருக்கலாம். சிலர் எட்டிப்பார்த்துக்கொண்டு நின்றார்கள். ஓரிருவர் பிரமை பிடித்தவள் போல் நிற்கும் என் முன்னே காட்சி தந்தார்கள்.

என் கண்கள் அருவியாய்ப் பெருகி நீரைச் சொரிந்தன.
அப்பாவுக்கு பெரிய கோவிலில் பரிசாரகர் உத்யோகம். ருத்திரம் சமுகம் சொல்லிக்கொண்டே லிங்கத்திற்கு அருகே நிற்கும் பித்தளை அண்டாவில் அபிஷேகத்துக்கு ஜலம் நிரப்புவதும் தான்.
அப்போதெல்லாம் பதினொன்று வகுப்புகள் மட்டும் உயர் நிலைப் பள்ளியில். உள்ளூர் அரசு பெண்கள் பள்ளியில்தான் நான் படித்தேன். கல்லூரி எதுவும் அருகில் இல்லை. போகவும் வசதி ஏது. கடைத்தெரு நடுவே இருந்த தட்டச்சுப்பள்ளியில் லோயர் ஹையர் டைப்ரைடிங் முடித்தேன். தமிழும் ஆங்கிலமும். ஒரு நான்காண்டுகள் தட்டச்சுப் பள்ளிக்குச் சென்று வந்திருப்பேன்.
பிரளய காலேஸ்வரர் சிவன் கோவில் மடைப்பள்ளியில் பரிசாரகராக வேலை பார்ப்பவர் என் அப்பா. என்னை அருகிருக்கும் நெய்வெலி நகர வேலைவாய்ப்பு அலுவலகத்திற்குக் கூட்டிச்சென்று என் பதிய வைத்தார். இன்று அப்படி எல்லாம் கூட ஒரு அலுவலகம் உண்டா என்று எல்லோரும் ஆச்சரியமாகப் பார்ப்பார்கள். என் பெயர் பதிந்து ஒரு ஆறு மாதங்கள் இருக்கலாம். எனக்கு ஒரு இண்டர்வ்யூ வந்தது. அம்மா துணைக்கு வர இண்டர்வியூவுக்குப் போய் வந்தேன். எனக்குச் சிபாரிசு செய்ய பெரிய மனிதர்கள் யாருமில்லை. அன்றைக்குக் காலமும் இத்தனைக்கு மோசமாய்ப் போய்விடவில்லை. உள்ளூர் தாலுக்கா அலுவலகத்திலேயே தட்டச்சராய்ப் பணி வந்தது. பப்ளிக் சர்வீஸ் கமிஷன் என்னும் பெரிய பரீட்சை எழுதியெல்லாம் இது நடக்கவில்லை. மக்கள் அன்பை முதலாக்கிய ஒரு புண்ணியவான் அரசாங்கத்தில் பெரும் பதவிக்கு வந்தார். என் போன்ற ஆயிரம் தட்டச்சர்களுக்கு ஏதோ ஒரு வரி உத்தரவு போட்டார். அரசு வேலையை நிரந்தரமாக்கினார். அந்த தெய்வத்தால் மட்டுமே அது சாத்தியமாயிற்று. வாழ்க்கையில் இப்படியெல்லாம் நடக்குமா என்று எண்ணிப்பார்க்கிறேன். அம்மாவும் அப்பாவும் மகிழ்ந்துபோனார்கள். நாங்கள் குடியிருந்த அக்கிரகாரமே மூக்கின் மேல் விரல் வைத்து என்னைப் பார்த்ததுவாய் ஒரு உணர்வு. அப்படியாய் இருந்தும் இருக்கலாம்.
எனக்கு ஒரு தம்பி . அவன் பதினொன்று வரைக்கும் உள்ளூரிலே படித்தான். கார் ஓட்டுவது அவனுக்குப்பிரியம். ஹெவி டிரைவிங் லைசன்ஸ் எடுத்தான். அரசுப் பேருந்து டிரைவர் ஆனான் அதுவும் அரசுத்துறையில். அதே நெய்வேலி வேலை வாய்ப்பு அலுவலகம்தான் அவனுக்கும் வழி காட்டியது. இத்தனை தூரத்துக்கு வெளிப்படையாய் அரசு வேலைக்கு லஞ்சம் ஊழல் எல்லாம் அன்று புழக்கத்துக்கு வந்துவிடவில்லை.
அவன் ஊரைவிட்டுப்போயாயிற்று. அவனுக்குத் திருமணமானது. நான் கேள்விப்பட்டேன். அவன் மனைவியை எனக்குத் தெரியாது. நான் திருமணத்திற்கு எப்படிப்போவது. என்னை அழைத்தார்களா, இல்லை அவர்களால் என்னை அழைக்கத்தான் முடியுமா. முடியாது. அவர்கள் மீது தவறில்லை.
மய்யமாய் இருக்கும் என் பிரச்சனைக்கு வந்துவிடுகிறேன்.
அலுவலகத்தில் என்னோடு தட்டச்சுப்பணி செய்யும் இன்னொருவர். அப்போது அவர் இன்னொருவர்தான். எங்கள் இருவருக்கும் ஒரே அலுவலகம். ஒரே அதிகாரி க்குக் கீழாய்ப்பணியாற்றினோம். தட்டச்சு மேசையில் நான் படிக்க அவர் அடிக்க அவர் படிக்க நான் அடிக்க நேர்ந்ததுண்டு. பணி வாழ்க்கை இப்படியாய்ப் போனதுதான்.
ஒரு நாள் கவிதை அச்சிடப்பட்ட பேப்பர் கட்டிங்க் ஒன்றை எடுத்துக்கொண்டு வந்தார். அன்று ஒரு சித்திரை முதல் நாள். புது வருடப்பிரப்பு. ‘சித்திரை பிறந்தது இத்தரை நிலம் வாழ ‘ என்று தொடங்கி இருபது வரிகள் சென்றது அக்கவிதை. உலகம் தெரிந்த நாளிதழ் ஒன்றிர்க்கு அனுப்பி இருக்கிறார். அது பிரசுரமாகி விட்டது.
‘ நீங்க கவித எல்லாம் எழுதுவீங்களா’
‘எழுதுவேன்’ வெளில சொல்றதுல்ல’
‘ஏன் சொல்லணும் ஒண்ணாவது அச்சில வரட்டும் சொல்லிக்கலாம்னு இருந்தேன்’
‘எனக்கு கவிதன்னா ரொம்ப இஷ்டம்’ நான்தான் சொன்னேன். எதற்காகப் பொய் சொன்னேன். எனக்குத் தெரியவில்லையே. அப்படித்தான் சுவாமி அந்த அது ஆரம்பிக்கிறது.
அடுத்த நாள் ஒரு நூறு பக்க நோட்டு நிறைய கவிதைகள் எழுதியதை அவரே என்னிடம் கொண்டு வந்து கொடுத்தார். மகிழ்ச்சியாய் வாங்கிக்கொண்டேன். இதில் என்ன மகிழ்ச்சியோ. அதுவுமே விளங்கவில்லை. வீட்டிற்கு அதைக்கொண்டு வந்தேன். இரவு முழுவதும் அந்தக்கவிதை நோட்டைப்புரட்டினேன். எல்லாம் காதல் கவிதைகளாக இருந்தன.
’தேனே மானே மருட்டும் விழியே
மயிலே நடை பயில் அன்னமே
கார்மேகமே நீலவான் நிலவே
வெண்ணிலவே சுகந்த மலரே’
என்று போய்க்கொண்டே இருந்தது. ஏதோ என்னையே சொல்வதுபோல் தோன்றிற்று. முட்டாள்தனம்தான். ஆனால் ஆசையாயும் இருந்தது. நிறைவாய் உணர்ந்தேனே.
ஒன்றுவிடாமல் கவிதை எல்லாம் படித்துவிட்டு, ஒரு நாள் அவரிடம் திருப்பிக்கொடுத்தேன்.
‘என்ன ஒண்ணுமே சொல்லாம குடுக்கிறீங்க’
‘என்ன சொல்லணும்’
‘உங்க ரியாக்ஷன் தெரியணும்’
நோட்டைக்கையில் வாங்கினேன். ’கவிதைகள் இனித்தன, கண்கள் பனித்தன, இவை காவியமாகட்டுமே’ எழுதினேன். என் இனிஷியலை இட்டேன். திரும்ப க்கொடுத்தேன். கண்களில் ஒத்திக்கொண்டு கவிதை நோட்டை வாங்கிக்கொண்டார்.
‘இனி அச்சுக்கு தரணும்’ என்றார். என்ன பிரயத்தனமோ டபுக்கென்று ஒரு நாள் அவை அச்சாகி வந்தன. முதல் பிரதியை எனக்குக் கொடுத்தார். ’கண்கள் பனித்தன’ கவிதைப் புத்தகம். அன்றோடு நான் முடிந்து போனேன். ஆம் அதுதான் உண்மை. ஏன் எப்படி என்றெல்லாம் என்னைக் கேட்காதீர்கள்.
என் பெற்றோர் இல்லாமலே எங்கள் திருமணம் நடந்தது. அம்மாவும் அப்பாவும் நடைபிணமாகிப்போனார்கள். அப்பாவால் பழையபடியெல்லாம் வாழ முடியுமா. அப்பா அந்தப் பெரிய கோவில் பரிசாரகர். அக்கிரகாரத்தில் கோவில் வீடு. சிவப்பு வெல்ளைப்பட்டை அடித்த நெடிய சுவர். வீட்டு வாயிலில் துளசி மாடம். பிரளயகாலேசுவரருக்கும் ஆமோதனம்பாளுக்கும் அப்பாதான் பொங்கல் சமைத்துத் தருகிறார். அது எங்கள் தாத்தா பார்த்த மடைப்பள்ளி உத்யோகம்.
நான். நானேதான். இப்போது ஊர் ஒதுக்கப்பட்டோர் காலனியில் வாழ்கிறேன். எனக்கு ஒரு பெண் குழந்தை. அவளுக்கு எட்டுவயது. பள்ளி சென்று வருகிறாள். நானும் அவரும் குழந்தையும் என எங்கள் குடும்பம். என் மாமனாரும் மாமியாரும் இதே தெருதான். எப்போதேனும் வருவார்கள். குழந்தையை அவர்கள்தான் வளர்த்தார்கள். அவரும் நானும் அலுவலகம் போவதும் வருவதும் கறாராய்ச்செய்வோம். அலுவலகத்தில் ஆயிரம் பிடுங்கல்கள். சாதிச்சண்டை சங்கச்சண்டை, காசு பார்க்க போட்டி இத்யாதிகள். இதற்குள்ளாகப் பதவி உயர்வு இடமாற்றம் எல்லாம் உண்டு. கழுத்தில் தாலி ஏறிய அன்றே நான் அறிவேன். என் பிறந்தகுடும்பத்தோடு உறவு புகைந்து போனதுதான். இப்பொதெல்லாம் என்னவர் கவிதை எழுதுவதில்லை. அதற்கெல்லாம் என்னப்பா தேவை இப்போது.
’சரி நடப்புக்கு வரவேணுமல்லவா’. வந்துவிடுகிறேன். ஒரு பத்தாண்டுகள் ஆயிற்று. நான் என் அம்மாவோடு முகம் பார்த்துப் பேசி. அப்பாவைக்கடைத்தெருவில் பார்த்து இருக்கிறேன். அவரோடு பேசவாய்ப்பில்லை. பேச முடியுமா என்ன?
நானும் என் குழந்தையும்தான் வீட்டில் இருந்தோம். என் அம்மா இறந்து போனதாய்ச் செய்தி. அந்த இடுகாட்டு ஊழியர்தான் என்னிடம் சொல்லிவிட்டுச் சென்றார். இந்தத் தெருதானே அவர். வேறுயார் சேதி சொல்வார்கள். வீட்டைப்பூட்டினேன். குழந்தையைக் கூட்டிக்கொண்டேன். அம்மா சுமங்கலியாய்ப் போயிருக்கிறாள். இது ஒரு செய்தியா என்ன? இச் சேதியை மனம் ஏனோ சொல்லிக்கொண்டே இருந்தது. நான்தானே அம்மாவின் சவத்திற்கு குடம் தண்ணீர் எடுத்து வந்து கால் மாட்டிலிருந்து தலை வரை ஊற்றிக்குடத்தைக் கவிழ்க்க வேண்டும். பூ மாலை போட வேண்டும். பொட்டிடவேண்டும். எப்படிச்சாத்தியம். சாத்தியமே இல்லை.
அக்கிரகாரத்தெருவில் என் தாய் வீட்டு வாசலில் ஷாமியானா போட்டிருந்தார்கள். நான் தூரமாய் எங்கோ நிற்கிறேன். என் வீட்டு வாயிலில் நாற்காலிகள் போட்டுச் சிலர் அமர்ந்து கதைத்துக்கொண்டிருந்தார்கள். தாரை தப்பட்டை சங்கு செயகுண்டு ஒலி எல்லாம் இல்லை. இருக்காதுதான். என் தம்பி குடும்பம் ஊருக்கு வந்து ஆகவேண்டியதுகள் பார்த்துக்கொண்டிருக்கலாம். நான் தெருக் கோடியில் பிரமை பிடித்தவளாய் மலைத்து நிற்கிறேன். கண்ணுக்கு எதுவும் சரியாய்த்தெரியவில்லை. இப்படி இங்கு வந்ததே தவறா சொல்லிக்கொண்டேன். அப்பா வீட்டினுள் அம்மா சவத்தருகே அமர்ந்திருப்பார். அழுது அழுது தொண்டை என்னவோ ஆகியும் இருக்கலாம். உற்றார் உறவினர்கள் வந்துகொண்டும் போயிக்கொண்டும் இருந்தார்கள்.
என் அலுவலக ஜீப்பின் டிரைவர் வண்டியை ஓரங்கட்டிவிட்டு என்னிடம் வந்தான். என்னையும் என் குழந்தையையும் பார்த்தான் அவனுக்கு என் வரலாறு முழுவதுமாய்த் தெரியும். அவனே சவத்திற்கு ஒரு மாலை வாங்கி வந்தான்.
அம்மாவின் சவம் வீதிக்கு வந்தது . ஆசந்தியில் வைத்துக்கட்டினார்கள். வீட்டுப் புரோகிதர் ‘ வாய்க்கரிசி போடுகிறவர்கள் போடலாம்’ ஓங்கிச்சொன்னார். காட்டுக்கு வராத புருஷா, பொம்மனாட்டிகள் யாராயிருந்தாலும் வாய்க்கரிசி ஆத்து வாசல்லேயே போடுங்கோ’ மீண்டும் சொன்னார்.
ஜீப்பில் எங்களை ஏற்றிக்கொண்ட டிரைவர் ஜீப்பை வேகமாக ஓட்டிக்கொண்டு போய்ச் சவம் இருக்குமிடத்தில் ஷாமியானா கொட்டகை அருகே நிறுத்தினான்.
‘ஆபிசர் வராங்க. ஆபிசர் வராங்க.’ எச்சரிக்கை செய்தான். புரோகிதரிடம் சேதி சமத்தாய்ச் சொன்னான்.
டிரைவர் மாலைபொட்டலத்தைப்பிரித்து என் கையில் கொடுக்க நான் அழுகையை அடக்கிக்கொண்டு என் அம்மா சவத்திற்கு மாலையிட்டேன்.
‘வாய்க்கரிசி போடுங்கோ மேடம், எல்லாரும் போடலாம்’ புரோகிதர் சொல்லி முடித்தார். நான் வாய்க்கரிசி போட்டேன்.
அம்மா சவத்தை அப்பா மட்டும் சுற்றிவரவில்லை. அம்மாவுக்கு வாய்க்கரிசி போட்டார். ’மேல ஒருத்தன் இருக்கான் அவன் போடறுதுன்னா கணக்கு, அதுக்கு நீயோ நானோ என்ன பண்ண’ சொல்லிக்கொண்டே வீட்டின் உள்ளே சென்றார்.
‘நீனே எல்லா காரியத்தையும் பாத்துண்டு வாடா’ மகனுக்குக்கட்டளைதந்தார். அவருக்கும் வயது ஆகிவிட்டது. முடியாமலும் இருக்கலாம்.
என்னைப்பார்த்துத்தான் அப்படிச்சொன்னாரோ என் மனம் ரணமாகி என்னை இம்சித்தது. ஜீப் டிரைவர் ’வண்டியில் ஏறுங்க மேடம் ஜமா பந்தி இருக்கு சாவடிக்குப் போய் ஆவணும்’ சத்தமாய்ச்சொன்னான்.
என் தம்பி என்னையும் என் குழந்தையையும் தெரிந்தோ தெரியாமலோ முறைத்துப்பார்த்தான்.
‘ஆபிசர்ன்னு சொன்னா ஸ்வாமி கோவில்ல அப்பா கையால எவ்வளவோ பிரசாதம் வாங்கி சாப்டு இருப்பா அந்த சாப்ட வயிறு அவாள வரச்சொல்றது. ஆச்சு நமக்கு காரியம் கெடக்கு. ஆசந்தில சவத்த வச்சி இருக்கம். காட்டுக்கு வர்ரவா நாலு பேரு வாங்கோ, தர்ப புல்ல கையில வாங்கிகிங்கோ. அத இடுப்புல மறக்காம சொறுகிகணும். வாங்கோ வாங்கோ நடுவீதியில சவம் ரொம்ப நாழி கெடக்கப்படாது அபச்சாரம்’
புரோகிதர் குரல் கொடுத்தார்..
நான் டிரைவருக்கு நன்றி சொல்லிவிட்டு ஜீப்பிலிருந்து தெரு முனையில் இறங்கினேன். என் வீடு நோக்கி மெல்ல நடந்தேன்.
‘உங்க சாருதான் என்ன இங்க அனுப்பி வச்சாரு. அவுருக்கு நீங்க வீட்ட விட்டு கெளம்பினது, வந்து அக்கிரகார தெரு முனையில தருவி தருவி நின்னது தெரிஞ்சிருக்கு. சவத்துக்கு ஒரு மால வாங்கிக. வண்டி எடுத்துகினு போ. அம்மாவைம் கொழந்தையையும் இந்த ஆபிசு வண்டில ஏத்திக, இட்டுகினு போ. ஆகவேண்டியத கச்சிதமா முடிச்சிடு. சேதி சொன்னாரு. நானு ஆபிசிலேந்துதான் வறேன்.’
டிரைவரைப்பார்த்து இருகைகள் கூப்பி வணங்கினேன். அவர் கால்களில் விழுந்தால் கூட தேவலை.
‘யாரும்மா அந்த பாட்டி’
‘எனக்கு அஞ்சாம் வகுப்புல கணக்குப்பாடம் சொல்லிக்கொடுத்த டீச்சர்’ என் குழந்தைக்குப்பதில் சொன்னேன்.
’நல்லாவே உனக்கு கணக்குப்பாடம் சொல்லிக்குடுத்திருப்பா அதுக்குத்தான் என்னையும் கூட்டிண்டு போய் காமிச்சயா’
பேசமுடியாமல் திணறினேன். குழந்தையும் நானும் என் காலனி வீடு நோக்கி நடந்துகொண்டிருக்கிறோம்..