ஒரு துளி கண்ணீர்…
கதையாசிரியர்: செல்வகிருத்திகா கௌரிநாதன்
கதைத்தொகுப்பு:
காதல் 
கதைப்பதிவு: March 17, 2026
பார்வையிட்டோர்: 172

கீழ் வானம் செவேல் என்றது..மதிய உறக்கத்தின் மிச்சம் இன்னும் கண்களில் ஒட்டி இருந்தது..
ஏதோ யோசனையில் மாடிப் படிக்கட்டுகளில் ஏறினேன்..இந்த படிக்கட்டுகளில் வழியும் நீரில் எத்தனையோ மழை நாட்களில் கப்பல் விட்டு விளையாடி இருக்கிறேன்.. எத்தனையோ நாட்கள் முதுகை வாகாய்ச் சாய்த்துக் கொண்டு பொன்னியின் செல்வனில் மூழ்கி இருக்கிறேன்.. வந்தியத்தேவனுடன் கடல் பயணம் செய்து சிலிர்த்து இருக்கிறேன்.. நரசிம்ம பல்லவனின் காதலை மறுத்த – இழந்த சிவகாமிக்காக மௌனமாய் வருந்தி இருக்கிறேன்..
எங்கோ பால்காரரின் மணிச்சத்தம் கேட்கிறது ..”பூவேய்ய்ய்” என்று பூ வைக்க உத்தரவிடும் பூக்காரரின் உத்தரவு(??) ஒலி காது மடல்களைத் தடவிச் செல்கிறது .எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து இவரது பூ விற்கும் குரலுக்கு நான் ரசிகை ..மாலை நேரத் தென்றல் சிலு சிலுவென்று மனதுக்குள்ளும் நுழைய மனு போட்டுச் செல்கிறது . மாலை நேர மல்லிகையும், முல்லை பூவும் தவழ்ந்து வரும் குழந்தை போல் மெதுவாய் மணம் பரப்பி மனதுக்குள் நுழைகின்றன.
மனதுக்குள் பழைய நினைவுகள் கனமாய் வந்து அமருகின்றன ..
தூரத்தில் மேற்குத்தொடர்ச்சி மலைத் தொடர் மேகக் கூட்டங்களுக்கு இடையில் தலை காட்டி மறைகிறது. சிறுவயது முதலே இந்த மலைத் தொடர்களின் மேல் எனக்கொரு ஈர்ப்பு உண்டு. அவை என் ரகசியத் தோழமைகள்.
மனம் வெகுவாக கனக்கின்ற நேரங்களில் என் வீட்டின் மொட்டை மாடிதான் என் சரணாலயம்..என் போதி மரம்..மௌனமாக அந்த மாலைத்தொடர்களை பார்த்த படி நிற்பேன் .மலை முகடை வருடிச் செல்லும் மேகங்கள் கணப் பொழுதில் என் மனதுக்குள் குடி பெயரும் .மலைச் சிகரங்கள் என் மனதுக்குள் கதை பேசும். “நான் பார்க்காத மழையா..நான் எதிர்த்து நில்லாத காற்றா..அனைத்தையும் தாங்கி நிமிர்ந்து நிற்பதால் தான் என்னை எல்லோரும் அண்ணாந்து பார்க்கிறார்கள்..துணிந்து நில்” மலை முகடு தழுவும் பஞ்சுப் பொதிகள் மனதை சுகமாய் வருடிச் செல்லும்.
“பொழுது அடையற நேரம்..இன்னும் மாடில என்ன பண்ணிட்டு இருக்கற?” அம்மாவின் குரலில் கீழே இறங்கும் நான் கால்களின் அடியில் மிதிப்பது தரை மட்டுமாய் இருக்காது.. என் மன பாரங்களும் மிதிபட்டு பொடியாகும். காடு விட்டு தன் கூடு தேடி செல்லும் பறவைகள் எனக்குள் என்றுமே கேள்விகளை விட்டுச் செல்லும்.. ‘தேடப் பல காடு அடைய ஒரு கூடு’ என்றோ என் ஆச்சி சொன்னது காதுக்குள் கேட்கிறது..என் கூடு எது? இன்னமும் விடை தெரியாத கேள்வி ஒன்று நெஞ்சினுள் மரங்கொத்தியாய் துளை இடுகிறது..
என் சிறுவயது பாட புத்தகங்கள் அடுக்கப் பட்டுள்ள அலமாரியை தடவிப் பார்க்கிறேன். இரட்டை ஜடை இட்டு பள்ளி சென்ற நாட்கள், கிண்டலும் கேலியும் நிறைந்த கல்லூரி நாட்களின் ‘நான்’ ஒரு நிமிடம் தெரிந்து மறைகிறேன் .
அந்த பை எங்கே? அது என்னுடைய புதையல்..என் பள்ளிக்கால, கல்லூரிக் கால நினைவுகளின் பொக்கிஷ குவியல்..ஈமெயில் என்ன..வாட்ஸாப் என்ன..அந்த நாட்களில், வெள்ளை தாள்களில் எழுதப்படும் கடிதங்களின் முன் எதுவும் நிற்க முடியாது..100 முறை, 1000 முறை படித்த கடிதங்கள் எல்லாம் என்னிடம் உண்டு. கல்லூரி விடுதியிலும் அம்மாவின் புடவை வாசத்தை என்னால் நுகர முடிந்திருக்கிறது.. கண்களில் நீர் வழிய வழிய விடை பெற்ற பள்ளிக்கால தோழிகளின் முகங்கள் என் விடுதி அறை எங்கும் மின்னி மறைந்திருக்கின்றன..எல்லாம் எதனால்? கடிதங்களால்.. என்னை மகிழ வைத்த,நெகிழ வாய்த்த, அறிவுரை சொன்ன, அதட்டலாய் கண்டித்த பொக்கிஷ குவியல்களை மெதுவாய் வருடுகிறேன்.. ‘என்னை சுகமாய் சுவாசிக்க வைத்த ஆக்சிஜன் ஊற்றுக்கள் நீங்கள்’ மௌனமாய் அவைகளோடு பேசுகிறேன்.
எங்கோ யாரோ என்னை பெயர் சொல்லி அழைக்கிறார்கள்.. இந்த அம்மாவாய்த்தான் இருக்கும்..
‘இதோ வரேன் மா’ கூவலாய் பதில் சொல்கிறேன்..
சில்லென ஒரு ஸ்பரிசம் கன்னம் தொடுகிறது..”அம்மா..தூங்கினது போதும்..எந்திரி மா” என் மகளின் குரலில் விழிகளைத் திறக்கிறேன்..இடம் பொருள் எல்லாம் புரிகிறது .
என் வீடும் ,மாடியும் ,மலையும் ,தென்றலும்,மேகமும் பறவையும் கனவா ??? மனம் நம்ப மறுத்து சிறு குழந்தையாய் சிணுங்குகிறது ..
என் புத்தகமும், புதையலும் கண் முன்னே தெரிந்து மறைகிறது..”அம்மாஆஆ” என் மகளின் பொறுமை கரைவதை உணர்கிறேன் .
‘இதோ வரேன் மா..’ அவளிடம் அவகாசம் வாங்கிக் கொண்டே எழுகிறேன்.
முகம் கழுவி , தலை திருத்தி நகரும் முன் கண்ணாடி பார்க்கிறேன் .விழியோரம் சுரந்து நிற்கும் ஒரு துளி கண்ணீர் சொல்கிறது சற்று முன் நான் கண்டது கனவல்ல.. நிஜமென்று …