எரிந்து விட்ட இதயம்
கதையாசிரியர்: எஸ்.மதுரகவி
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: December 2, 2025
பார்வையிட்டோர்: 26

ஒரு மூத்த குடிமகனின் கதை
வசன கவிதை நடையில் விரியும் கதை
அந்த முதியவர் நினைவு இராஜ்யங்களில்
குடி போய் விட்டவர்.
அவரது உடல் வெகுவாகக் களைத்தமையால்
கட்டிலே அவரது நடப்பு உலகின் எல்லைக்
கோடாகி விட்டது.
அவர் ஓடோடி உழைத்த காலத்தில்
அவரது வருகைக்காகத் தவம் நோற்றவர்கள் ,
அவர் ஓடாகிப் போன காலத்தில்
அவரது மூச்சடங்கும் வேளைக்காக காத்திருக்கிறார்கள்.
அவர் உச்சிமோந்து வளர்த்த பிள்ளைகள் ,
அலட்சியத்தின் உச்சியில் அவரது அன்பினைத்
தூக்கி எறிந்தார்கள் .
அவரது மருமகள்களோ அவருடன் பழகும் விதத்தில்
தத்தம் கணவர்களின் பண்புகளையே பிறழாமல் கைக்கொண்டார்கள்.
அவர்கள் , அவரது உடலில் குடியிருக்கும்
வகை வகையான நோய்க்குடிமக்கள் ,தங்கள் பிள்ளைகளிடம்
இடம் பெயர்ந்து விடக் கூடாதே என்ற அச்சத்தில்
அவரது கொஞ்சுதலுக்குரிய பேரப் பிஞ்சுகளையும் அவருக்கு தூரத்துப்
பச்சையாக்கி வைத்தனர்.
அவருக்கு அமைக்கப்பட்ட அறையோடு ஒப்பிட்டால்
புறாக் கூண்டு சிறப்பு மிக்கதாகத் தோன்றும் .
இறந்த காலத்தில் தமது உழைப்புகளால்
இல்லத்தையும் புதல்வர்களையும் உயர்வுறச்
செய்த மனிதர் இவர்
இவரது உறுப்புகள் கட்டாய ஓய்வு பெற்ற போது
இறந்த காலத்தில் இவர் ஆற்றிய அசகாய பணிகளும் அதனால் விளைந்த
பயன்களும் பலன்களும் எவருக்கும் நினைவில் இல்லை.
அவரது புதல்வர்கள் , அவரது இதயத்தை அலட்சிய நெருப்புகளால்
அன்றாடம் தவணை முறையில் எரித்து வந்தனர்.
இவர்களிடமிருந்து என்றோ அவசரப்பட்டு விடை பெற்று விட்ட
தம்முடைய காதல் மனைவியின் வடிவத்தை நினைத்துப் பார்த்தவாறே அவர்
இந்தப் புறக்கணிப்பை வாடிக்கையாகக் கொண்ட சூழலிலிருந்து விடை பெற்றார். விடுதலை பெற்றார்.
அவரது உயிர் உடற் கூட்டிலிருந்து பிரியும் அந்த மரண அவஸ்தை தருணத்தில் அவரது மனதில் ஓடிய எண்ணம் –
அருமைப் புதல்வரகளே – என் இதயத்தை எப்போதோ எரித்து
விட்டடீர்கள் . எஞ்சியிருக்கும் உடலை சற்றே மரியாதை காட்டி எரித்து விடுங்கள் …
( குறிப்பு – ஒரு மூத்த குடிமகன் பற்றிய இந்த சொல் ஓவியத்தை அடியேன் 1985 ஆம் ஆண்டு எழுதினேன். அப்போதைய அவதானிப்பில் வரைந்தது.
பழைய கையெழுத்துப் பிரதி தொகுப்பிலிருந்ததை இப்பொழுது தட்டச்சு செய்துள்ளேன். இன்றைய காலகட்டத்தில் மூத்த குடிமக்கள் , பொருளாதார ரீதியாக வலிமை, அதிகாரம் , வசதி பெற்றிருந்த போதிலும் கவனிப்பு காட்டுதல் இல்லாமை , அவர்களுக்காக நேரம் செலவிடல் இல்லாமை ஆகிய நிலைகள் தொடர்வதாகத் தான் நான் அவதானிக்கிறேன். அதனால் தான் தங்கள் ஹோமில் இருந்தவர்கள் ஓல்டு ஏஜ் ஹோமுக்கு இடம் பெயர்கிறார்கள் . நன்றி )
![]() |
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க... |
