என் சுபாவம்




(1939ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
என்னுடைய மாமனாரின் பழக்கங்களுக்கும் என் பழக்கங்களுக்கும் விரோதம். அதனால் இருவருக்கும் எப்பொழுது பார்த்தாலும் தகறா ரென்று நினைக்க வேண்டாம். விரோதம் என்பது மாமனார் – மருமகன் உறவிற்கு சம்பந்தப்பட்டதென்றும் நினைக்கவேண்டாம். அது இருவருடைய சுபாவங்களைப் பொருத்தது வேறொன்றுமில்லை.
திருவல்லிக்கேணியிலிருந்து மாம்பலத்துக்கு என்ன பஸ் சார்ஜ் என்று என் மாமனார் கேட்பார். அவர் உள்ளூராயிருந்தால் கேட்கவே மாட்டார்; இதெல்லாம் அவருக்கு மனப்பாடமாயிருக்கும் அவர் வெளியூர். ஏதோ கேஸ் விஷயமாக சென்னை வந்தவர் என்னுடன் தங்கியிருக்கிறார்.
‘என்ன இரண்டனா இருக்கும்’ என்பேன் நான்.
‘எவ்வளவு என்று நிச்சயமாகத் தெரியாதா?’ என்பார். ‘தெரியாது!’ என்பேன்.
‘திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் புறப்படுவது 8.20 க்கா 8.25-க்கா?’ என்று கேட்பார்.
‘தெரியவில்லை’ என்பேன்.
அவர் ஆச்சரியத்துடன் என் முகத்தைப் பார்ப்பார்- இப்படியும் உலகத்தில் ஒரு மாப்பிள்ளை உண்டா என்றல்ல இதெல்லாம் தெரியாமலா கலாட்சேபம் செய்கிறாய் என்ற அர்த்தத்துடன்.
ஆமாம் இதெல்லாம் தெரியாமல் அவரால் ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது. எல்லாம் கணக்காகத் தெரிய வேண்டும். எனக்கு அக்கரை கிடையாது; தெரித்து கொண்டாலும் மனதில் நிற்காது.
மாம்பலம் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்துகொண்டு கண்டக்டரைக் கேட்டால் சார்ஜ் சொல்லுகிறான். அதற்காக ‘ஊருக்கு முன்னால்’ நமது மூளையை ஏன் குழப்பிக்கொள்ள வேண்டும் என்பது என் கொள்கை. அவர் அப்படியல்ல. என்ன சார்ஜ் என்று தெரிந்தால்தான் அவருக்கு மேலே யோசனை ஓடும். திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் 8.20-க்கா 8.25- க்கா கிளம்புகிறது என்று தெரிவது எனக்கு அனாவசியம். ஏனென்றால், நான் 8 மணிக்கே ஸ்டேஷனில் போய் ஆஜராகி விடுறேன். என் மாமனார் ஐந்து நிமிஷத்துக்கு முன்பு தான் ஸ்டேஷனில் நுழைவார்.
அப்படி அதற்கு முன்பு அவர் பல ஜோலிகள் கொண்டவர் என்ப தல்ல; எனக்குப் பல ஜோலிகள் இருந்தாலும் தான் என் வழக்கப் படி தான் செய்வேன். அவர் வழக்கம் அது. பத்து மணிக்கு ஆபிஸென்றால் 9.45 வரையில் அவர் சும்மாவாவது சாய்ந்து கொண்டிருப்பாரே தவிர கிளம்பமாட்டார். ஏனென்றால் ஆபிஸூக்கு போக 15 நிமிஷம் என்று அவர் பட்ஜட் போட்டு வைத்திருக்கிறார்.
ஒரு தரம் அவர் சென்னைக்கு வந்துவிட்டுப் போன பிறகு எழுதிய கடிதம் இது.
ஆசீர்வாதம்.
நேற்றிரவு நான் அங்கே வீட்டைவிட்டு புறப்பட்ட பொழுது 8.05 என்று நீ மணி பார்த்து சொன்னது பிசகு. அப்பொழுது 7.45 தான் ஆயிருக்க வேண்டும். ஏனெளில் நான் மௌண்ரோட்டில் பார்த்தபோது மணி 8 தான் 8.10க்கே பிளாட்பாரத்தில் நுழைத்துவிட்டேன். வண்டி 8.25க்குத்தான் புறப்பட்டது. சௌக்கியமாக ‘பெர்த்’ ஒன்று கிடைத்தது. ஜங்ஷனில் காப்பி சாப்பிட்டேன்…
இந்த மாதிரி கடிதம் பூராவும் விவரங்கள்! அவர்! டயரியில் ஒரு நாள் நடந்த ஒரு சம்பவம் கூட விட்டுப் போகாது. கடைசியில் வரவு செலவுக் கணக்கு – பைசா முதல்.
என் உயிர் போவதாயிருந்தாலும் கூட நான் அந்த மாதிரி ஒரு நிமிஷங் கூட நடந்துகொள்ள முடியாது. நல்ல வேளையாக – என்னுடைய அதிருஷ்டம்தான் – பெண், தகப்பனார் சுபாவம் கொள்ளவில்லை பிழைத்தேன்.
எனக்கு வாழ்க்கையில் திட்டமே கிடையாது. அதனால் தானோ என்னவோ நான் வாழ்க்கைப் பந்தயத்தில் பின் தங்கியே போய் விடுகிறேன். எதிலும் எனக்கு ஒரு தீர்மானம் கிடையாது.
இரவு எட்டு மணிக்குக் கும்பகோணம் போக வேண்டியிருக்கும். மாலை ஆறுமணி வரை அதைப்பற்றி நினைவே இருக்காது. நிச்சயமும் இருக்காது. ஏழு மணிக்கு அரை வயிறு சாப்பிட்டு விட்டு ரயிலுக்குப் போவேன்.
பிரயாணத்தில் மட்டும் எனக்கு மிகவும் தீர்மானமான ஆசை. ரயிலோ பஸ்ஸோ – ஏறி உட்கார்த்து விட்டால் உலகத்தையே மறந்துவிடுவேன். அந்த இடம் ஸ்வர்க்க ஸ்தானமாக மாறிவிடும்.
‘உலகத்தையே மறந்துவிடுவேன் என்றா சொன்னேன். அது அவ்வளவு சரியில்லை. வாழ்க்கையின் தொல்லைகளை மறந்து விடுவேன். வாழ்க்கைப் புழுதியை கால்படியில் தட்டிவிட்டு கற்பனை விமானத்தில் ஏறிவிடுவேன்.
என் சுபாவம் இப்படியாகிவிட்டது. சுபாவமாவது தன்னை ஒருவன் சீர்திருத்திக்கொள்ள முடியாவிட்டால் என்ன பயன் என்று கேட்கலாம். செய்து கொள்கிறேன். என் சுபாவத்திலிருக்கும் பிசகை எடுத்துக் காட்டுங்கள்.
– பாரததேவி 10.08.1939