கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: April 12, 2026
பார்வையிட்டோர்: 359 
 
 

மீராவின் மனம் அலுவலகக்கோப்பில் ஈடுபடாமல், காலையில் அம்மாவிடம் நிகழ்ந்த வாக்குவாதத்திலேயே சுற்றி ச்சுற்றி வந்தது.

உனக்கென்ன இன்னும் வயசாகலன்னு நினைப்பா? கல்யாணம் பண்ணிக்காமயே காலத்த ஓட்டிடலான்னு இருக்கியா?  சொல்லு, இப்பவே முப்பதாயிடிச்சி, எதை எதையோ காரணம் சொல்லி,வர்ற நல்ல வரன் எல்லாமே தட்டிக் கழிக்கிற? எனக்கு இன்னிக்கு முடிவு தெரிஞ்சாகணும். ஊர்ல எல்லாம் என் காதுபடவே பேசறாங்க. உன் வருமானம் போயிடும்னு நான்தான் உன் கல்யாணத்துக்கு முட்டுக்கட்டையா இருக்கேனாம்,

வாயைத்தொறந்து சொல்லு? உம்மனசிலே என்னதான் ஓடுதுன்னு. இல்லாட்டி என்னை ஆளவிடு,. எனக்காக உன் வாழ்க்கையை தியாகம் பண்ணவேணாம், நான் நாலு வீட்ல பத்துப் பாத்திரம் தேய்ச்சாவது பிழைச்சிக்கிறேன்,

அம்மா அந்த வார்த்தையை சொல்லியதும், கண்களில் அனல் பறக்க முறைத்தாள் மீரா, என்ன சொன்ன?      

பத்து பாத்திரம் தேய்ச்சி பிழைக்கப்போறியா, ஏற்கனவே தேய்ச்சதுக்குத்தான் நான் கிடந்து அல்லாடறேன், அவளையும் மீறி மீரா கத்த,  அம்மா அவளருகில் வந்து உறுத்து விழித்தாள். நான் ஏற்கனவே பத்து பாத்திரம் தேய்ச்சதுக்கும், நீ இப்ப அல்லாடறதுக்கும் என்ன இருக்கு, ? உரக்க அதட்டினாள்.

மீரா, சட்டென சுதாகரித்தாள். வந்து, நான் என்ன சொல்லவரேன்னா, வந்து,,, அம்மா ப்ளீஸ், எனக்கு ஆபிஸ்ல நிறைய வேலையிருக்கு, என்னை ஆளவிடு, என்று கெஞ்ச, அம்மா அவளின் இருகைகளையும் பற்றிக்கொண்டாள்.

இல்ல நீ ஏதோ சொல்ல வந்த, அதை சொல்லிட்டுதான் நீ ஆபிஸ் போகணும்.  நான் இன்னைக்கு உன்ன விடறதா இல்ல,

அம்மா, ப்ளீஸ், புரிஞ்சிக்க, ஈவ்னிங் வந்து நான் சொல்றேன்,

உன்னை நம்பமுடியாதுடி, அம்மா அடமாய் நிற்க,

மீரா அம்மாவை பார்த்து கசப்பாய் புன்னகைத்தாள்,  சரி உன்கிட்ட எல்லாத்தையும் சொல்றேன், அத்தோட என்னோட முடிவையும் சொல்றேன், சாயந்திரம் வரை பொறுமையா இரு.

என்ன சொல்லப்போறியோன்னு சாயங்காலம் வரை நான் கிடந்து அவஸ்தைப் படணுமா? இப்பவே சொன்னா என்ன? பரிதாபமாய் கேட்ட அம்மாவைப் பார்த்து இரக்கம்தான் கவிழ்ந்தது. மீராவிற்கு.

ஒண்ணும் பயப்படாதம்மா, நான் ஆபிஸ் போய்ட்டு சாயந்தரம் வரேன் பேசலாம், ஓகே பை பை.

சொல்லிவிட்டு தப்பிவந்தவள்தான். இப்பொழுது வீட்டிற்கு போனதும் அம்மா விடமாட்டாள். என்ன சொல்லப்போகிறேன்?, குழப்பத்துடன் நெற்றிப்பொட்டை தேய்க்க அவள்முன் வந்து நின்றான் பியூன் சிகாமணி.

மேடம் கோபின்னு ஒருத்தர் உங்களைப் பார்க்கணும்னு சொல்லி வெளிய வெயிட் பண்றாரு,

யாரு கோபியா?  வினவிக்கொண்டே எழுந்தாள் மீரா. ஒருவேளைஅந்த கோபியா? மனம் டக்கென சில ஆண்டுகளை கடந்து  முன் சென்றது. 


அம்மா என்னை அமுதாம்மா வரச்சொன்னாங்க, வீட்ல ஒட்டடை தட்டணுமாம் கூடமாட ஒத்தாசைக்கி வரச்சொன்னாங்க, நான் போய்வரேன்,

எல்லாம் நான் போய் பண்ணிக்கிறேன். உனக்கு எதுக்கு இந்த வேலை, என் தலைல தான் பத்து பாத்திரம் தேச்சி பொழைக்கணும்னு, இருக்கு,  நீயாவது நல்லா  படிச்சி நல்ல வேலைக்கு போகணும்னு தான நான் இவ்ளோ கஷ்டமும் படறேன்.

அம்மா சொல்வதை காதில் ஏற்றாமல் சிட்டாகப் பறந்தாள், மீரா, எல்லாம் கோபியைப் பார்க்கும் ஆவல்தான். காதல் என்று சொல்லத் தெரியாத வயதுதான், ஆனால் அவன் கண்கள்,  என்ன ஒரு அழகு கண்கள் கூட சிரிக்க முடியுமா? அது எப்படி அவ்வளவு அழகாக சிரிக்கமுடியும். அதுவும் அந்த வசீகர முகம்.ஏதோ ஓர் ஈர்ப்பு அவளுள் இருந்தது உண்மைதான். 


ஆனால் இப்பொழுது. அதற்குமேல் யோசிக்கமுடியாமல் வெளியில் வந்து  பார்த்தாள் மீரா. அதே கோபிதான். உடன் நெற்றி சுருங்கியது. இவன் இங்கே எப்படி? அவளது முகத்தை படித்த கோபி அவள் அருகில் வந்தான். எப்படி இருக்க மீரா? என்றான். அவளிடமிருந்து எந்த பதிலும் வராமல் போக, சற்று அவஸ்தையாய் உணர்ந்தான்.பின் சுதாகரித்து, ப்ளீஸ்  உன்கிட்ட பேசணும்? என்றவனை முழுவதுமாய் பார்த்தாள்.

கண்களில் அன்று ரசித்த  சிரிப்பு  மறைந்து சோர்வு தங்கியிருந்தது, முக வசீகரம் குறைந்து சற்று வயது முதிர்ச்சி தெரிந்தது. பார்க்க சற்று பாவமாக தெரிய, சரி வாங்க, பக்கத்துல சின்ன பூங்கா இருக்கு அங்க போகலாம். என்று சொல்லிவிட்டு நடந்தாள். 

மத்தியான வெயில் முரட்டுத்தனமாய் வியாபித்து இருக்க ஆள் அரவமற்ற அந்த பூங்காவில், ஒற்றைக் காகம் ஒன்று யாரையோ அழைத்துக் கொண்டிருந்தது, மரநிழலில் இருந்த சின்ன திட்டில் இடைவெளி விட்டு அமர்ந்தார்கள்.

சொல்லுங்க, என்ன விஷயமா வந்திருக்கீங்க?

உன்னைத் தேடி கண்டுபிடிக்கவே இவ்வளவு காலமாயிட்டுது,  நீ கல்யாணம் முடிஞ்சி நல்ல வாழ்க்கைல செட்டில் ஆயிருந்தேன்னா உன்னைச் சந்திக்காமலேயே வந்த வழி திரும்பியிருப்பேன். நீயானா அப்படியே இருக்க, அதான்  உனக்கு சில விஷயங்களை சொல்லிட்டுப் போகலாம்னு .வந்திருக்கேன், அதை சொன்னா என்மனபாரம் கொஞ்சம் குறையும், சொல்லலாமா? அனுமதி கேட்க மீரா மௌனமாய் தலைகுனிந்து அமர்ந்திருக்க, அதையே சம்மதமாய் ஏற்று சொல்லத்தொடங்கினான். அவன் சொல்லச்சொல்ல  காட்சிகள் விரிந்தன,


ஏண்டி, ஊர் உலகத்துல இல்லாத நீ மட்டும்தான் பிள்ளை பெத்தியா? பெரிசா சுமந்தேன் பெத்தேன்னு பீத்திக்கிற?. அங்கங்க நாலஞ்சு பிள்ளைகள்  பெத்தவளுங்க.எல்லாம் விறைப்பா திரியறாளுங்க,  நீ ஒத்த பிள்ளைய பெத்துட்டு என்னா பேச்சு பேசற?

ஏன் பெண்களை இப்படி  மட்டமா பேசறீங்க? உங்கள பெத்ததும் ஒரு பெண்தானே?   

அவளையும் சேர்த்துதான் சொல்றேன்,

நீங்களாம் கடவுள் கிட்ட வரமா கேட்டு வாங்கி வந்தீங்க, என் புருஷன் கஷ்டப்பட்டு சுமக்க வேணாம், நாங்களே பிள்ளையை சுமக்கறோம்னு சொல்லியா பெத்தீங்க, இயற்கையே அப்படி படைச்சிருக்கு, பெரிசா வந்திட்டா, நக்கலாக பேசிக்கொண்டே செல்லும் கணவன் கதிரேசனை, சற்றே எரிச்சலுற பார்த்தாள் அமுதா.

உங்க அம்மாவையே மதிக்கல நீங்க, என்னய மட்டுமா பொருட்படுத்துவீங்க, இதைபத்தி உங்க கிட்ட பேசினதே தப்புதான், நான் பேச வந்ததை விட்டுட்டு வேற எதையோ பேசிக்கிட்டு இருக்கேன்.

நேத்து நான் அந்த மீராவை வீட்ல ஒட்டடை அடிக்க வரச்சொன்னேன். நானும் நேத்து வீட்ல இல்ல, அவளும் வந்து செஞ்ச மாதிரி தெரியல, ஆனா எதிர்த்த வீட்டு மீனா, சொல்றா, மீரா உங்க வீட்ல இருந்து நேத்து சாயந்திரம்  வெளிய போனா  அவளோட. முகமே பேயறைஞ்ச மாதிரி இருந்துச்சி, என்னடினு நான் கேட்க கேட்க நிக்காம ஓடிட்டான்னு சொல்றா, நீங்க ஏதாவது அவளைத் திட்டினீங்களா?

அதான் வெச்சிருக்கியே ஸ்பை, அந்த வீணாப்போன மீனா அவகிட்டயே நான்  என்ன பண்ணேன்னு கேட்கறதுதான? வந்துட்டா என்கிட்ட, உள்ள போயி பாரு உன் நகைநட்டு ஏதாச்சும் காணாமபோச்சான்னு. களவாடிட்டுதான் திருட்டுமுழி முழிச்சுகிட்டு போயிருப்பாளாயிருக்கும் அந்த மீரா.

அருகே யிருந்து அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த கோபிக்கு அப்பாவின் மேல் முதன்முறையாக கோபம் ஏற்பட்டது. மீரா எவ்வளவு நல்ல பெண். தேவையில்லாம அப்பா இப்படி திருட்டுப்பட்டம் கட்றாரே.

அம்மாவும் அத்தோடு பேச்சை முடித்துக்கொண்டு நகர்ந்தாள்.


அன்று  அவனது வீட்டில் நிகழ்ந்த அனைத்தையும் சொல்லி முடித்து மீராவை ஏறிட்டான் கோபி. எனக்கு  தெரியாத ஒரு தவறு எங்க வீட்ல உனக்கு நடந்திருக்கு, அம்மா சொல்லித்தான் தெரியும்,

அவன் சொல்ல வருவதை யூகித்த மீரா பதில் பேசாது தலைகுனிந்து அமர்ந்திருந்தாள். அந்த நாள் அவளுள் காட்சிகளாய் விரிந்நது 


துரித கதியில் ஒட்டடை தட்டிக் கொண்டிருந்தாள் மீரா, மனம் முழுவதும் கேள்வி, கோபி எங்க ஆளையே காணோம்? இந்த சிடுமூஞ்சி ஐயா தான் இருக்காரு, அமுதாம் மாவையும் காணோம்? யோசிக்கையில் அறையிலிருந்து அழைப்பு வந்தது.

ஏய் மீரா இங்க சித்த வாயேன்.

இந்த சிடுமூஞ்சி எதுக்கு நம்பள கூப்பிடறாரு,யோசித்துக் கொண்டே அறைக்குள் நுழைந்தாள்.

இங்க கொஞ்சம் வேலை இருக்கு. வெளிக்கதவை அடைச்சிட்டு வா, நாய் ஏதாவது  உள்ள வந்திடப்போகுது.

கதிரேசன் சொல்லியவாறே செய்து முடித்துவிட்டு அறைக்குள் நுழைந்தாள் மீரா. என்ன செய்யணும் சொல்லுங்க என்றாள்.

அதோ  அந்த பரண் மேல ஒரு முக்கியமான பொருள் இருக்கு அதை எடுக்கணும், உன்னால முடியுமா.

இதோ ஒரு நிமிசம், அந்த ஸ்டூல் போட்டு ஏறி எடுத்து தரேன் என்றவளை, தலையாட்டி மறுத்தான் கதிரேசன், ஸ்டூலும் வேணாம் ஒரு மண்ணும் வேணாம், இந்தா இப்படி வா, நான் பிடிச்சி உன்னை தூக்கறேன் அப்படியே எம்பி எடு, பார்க்கலாம்,

மீராவிற்கு சிரிப்பு வந்தது.என்னை உங்களால தூக்க முடியாது. அவ்ளோ கனம் நான். 

அப்டியா சொல்ற? நான் எப்படி தூக்கறேன் பாரு.  சொல்லிக்கொண்டே அவளை அலேக்காக தூக்கினான் கதிரேசன், தலைக்கு மேலே அவளை உயர்த்திப்பிடித்து சிரித்தான், பார்த்தியா எப்படி தூக்கினேன்னு, இப்ப பாரு உன்னை எப்படி கீழே இறக்கிறேன்னு, சொல்லிக்கொண்டே அவளை மெதுவாக தம்மீது  சரித்தவாறு கீழே இறக்கினான்,

மீரா விற்கு இது பிடிக்கவில்லை, இல்ல என்னை விடுங்க. எனக்குஒரு மாதிரியா இருக்கு,

அப்படித்தான் ஒரு மாதிரி இருக்கும், அப்புறம் நல்லா இருக்கும், சொல்லிக்கொண்டே அவளை இறுக்கமாய் அணைத்து, கட்டிலில் பரத்தினான்.பலவந்தமாய் திமிறிய அவளது கைகால்களை முரட்டுத்தனமாய் கட்டுப்படுத்தினான். அடுத்தடுத்த அவனது நடவடிக்கைகள் அவளுள் அதீத வலியை ஏற்படுத்தியது, உடலை அசைக்க முடியாத மரணவலி, இதுவரை அனுபவித்தராத வலி, பலம் கொண்ட மட்டும் அவனை உதறித் தள்ள பார்த்தாள், ம்ஹீம் அசைக்கவே முடியவில்லை,

ச்சீ நாயே சும்மா இரு ஒரு அஞ்சி நிமிசம்தான். அவளை அதட்டிவாறே காரியத்தில் கண்ணாக இருந்தான்.கதிரேசன்.

வலிக்குது என்னை விடுங்க,  கண்களில் கண்ணீர் கபகப என்று இறங்க, மன்றாடினாள் மீரா.

அடுத்து வந்த சில நிமிடங்களில் அவனது முரட்டுத்தனம் குறைந்து இலகுவாகி அவளை விட்டு எழுந்தான், ஆனால் மீராவால் எழுந்திருக்க முடியாத வலி, இரு தொடைகளிலும் பிசுபிசுவென்று ஏதோ ஒட்டியது.

மெதுவாக கை ஊன்றி எழுந்து கலைந்த ஆடைகளை சரி செய்தாள்.அழுகை விசும்பலாக வெடித்தது.

இங்க பாரு முதல்ல இப்படித்தான் வலிக்கும், பொறவு உனக்கே இது பிடிக்கும், அப்படி பிடிச்சதுன்னா டெய்லி வா, இல்லாட்டி இதை மறந்திடு, அப்படி இல்லாம இதை  எல்லார்கிட்டயும் போய் சொல்லபோறேன்னு போனேன்னு வையி, எங்க வீட்ல இருக்கிற நகையைத் திருடிட்டன்னு சொல்லி உன்னையும் உன் அம்மாளையும் தூக்கி ஜெயில்ல போட்டிருவேன். இந்த ஊரு போலீஸு என் கூட்டாளிதான், பார்த்து நடந்துக்க, அவன் விடுத்த எச்சரிக்கை அவளுள் அதிக பயத்தை ஏற்படுத்த, தனக்கு என்ன நடந்தது என்று கூட புரிந்து கொள்ள முடியாமல், வீட்டை நோக்கி நடந்தாள் மீரா.


பூங்காவில். மத்தியான வெயில்  கொஞசம் மட்டுப்பட ஆரம்பிக்க, மீராவின் உள்மனவெப்பமோ  கிளர்ந்து எழ ஆரம்பித்துவிட்டது., அவளின் மனவோட்டத்தை புரிந்தவனாய் கோபி பேசத் துவங்கினான். 

நீ அதற்கு பிறகு எங்க வீட்டுப் பககமே வரல, அதனால அம்மாவிற்கு ஏதோ சந்தேகம் தட்டியிருக்கும் போல அதான் உன்னை வீட்ல வந்து பார்த்து உங்ககிட்டயிருந்து எல்லாத்தையும் கேட்டு தெரிஞ்சிகிட்டாங்க. இது வரைக்கும் நடந்தது எல்லாம் உனக்கு தெரியும், அதற்கு மேல நடந்தது எதுவும் உனக்கு தெரிய வாய்ப்பில்லை, அதை உனக்கு தெரியப்படுத்ததான் உன்னை தேடினேன். அது தெரிஞ்சா உனக்கு நியாயம் ஒண்ணும் கிடைக்கப்போறதில்ல, இருந்தாலும் மனபாரம் கொஞசம் மட்டுப்படலாம்னு நினைக்கிறேன்.

உன்கிட்ட பேசிட்டு வந்த  உடனே அப்பா கிட்ட வந்து அம்மா கேட்டாங்க, அப்பா மழுப்பலாகவே பதில் சொன்னார்.

வயசுப்பையனை வெச்சுக்கிட்டு பேசற பேச்சா இது, உனக்கு அறிவில்ல? 

இப்பதான் வயசுப்பையன் இருக்கான்னு தோணித்தா உங்களுக்கு,  அந்த பொண்ணுக்கு என்ன வயசிருக்கும், பதிமூணு தான் இருக்கும். அந்த குழந்தையைப் போய் ச்சீ, நீயெல்லாம் ஒரு மனுசனா, இல்ல மிருகமா, நமக்கு ஒரு பொண்ணு இருந்தா அந்த வயசிலதான இருந்திருக்கும். உன் மகளையும் இப்படித்தான் பண்ணியிருப்பியா?

கதிரேசன் பற்களை கடித்தபடி, உறுமினான், ஏ நாயே போனா போகுதுன்னு பார்த்தா, நீ பாட்டுக்கு நீட்டி முழங்குற, கைகளை அவளது கன்னத்தை நோக்கி நீட்டினான், அவன் கைகளை வலுவாக உதறித் தள்ளினாள் அமுதா. 

இந்நேரம், உன்னை ஜெயில்ல தள்ளியிருக்கணும். அங்க, அடி உதை பட்டிருக்கணும். அப்பதான் உன் கொழுப்பு  அடங்கி யிருக்கும். அந்த. மீரா கிட்ட எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். அந்தப் பொண்ணுக்கு எதுவுமே புரியல, ஆனா பயம் மட்டும் எக்கச் செக்கமாய் இருக்குது, எங்கயும் வரமாட்டேன் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன், நீங்களும் சொல்லாதீங்க, முக்கியமா எங்கம்மாகிட்ட சொல்லாதீங்கன்னு கையைப் புடிச்சி அழுவுறா, அந்த பொண்ணுக்காகத் தான் உன்னை விட்டேன், மத்த பொம்பளை மாதிரி என்னை நினைக்காத, ஆம்படையான் என்ன தப்பு செஞ்சாலும், அதை அப்படியே துடைச்சிப் போட்டுட்டு, அவனோடவே வாழற வம்சம் நான் இல்ல, இந்த சமுதாயம் சீர்கெடறதுக்கு அடிப்படையே உன்ன மாதிரி பல ஆண்களாலும், அவனுங்களுக்கு முட்டு குடுக்குற சில பெண்களாலேயுந்தான்.

அந்த பொண்ணுக்கு இப்ப புரியாது, புரியற வயசு வந்ததும் உன் தலைய அவளே கீணிப்போட்டுடுவா, உன் ஆம்பளைத் திமிர பச்சை மண்ணுகிட்டயா காட்டுற, உன் பிள்ள எதிர்க்கவே எல்லாத்தையும் பேசறன்னா, நாளைக்கு அவனும் உன்ன மாதிரி பொறம்போக்கா போய்டக்கூடாது. கட்டின பொண்டாட்டியத் தவிர எந்தப் பொண்ணையும் தப்பான பார்வைகூட அவன் பார்க்ககூடாது.

பத்ரகாளியாய் மாறி கத்திக் கொண்டிருக்கும் அமுதாவின் அவதாரத்தை இப்போதுதான் முதன்முறையாகப் பார்க்கிறான், கதிரேசன். கொஞ்சம் பயமும் உள்ளூர ஏற்பட்டது, சரி ஒரு ரெண்டு நாளைக்கு கத்துவா, கத்திட்டுப் போகட்டும், எங்க போவா கழுதை?

கதிரேசனின் மனவோட்டத்தை அவனது முகபாவனையைக் கொண்டு கணக்கிட்டாள். அமுதா.

உனக்கு சட்டம் தண்டனை தரலன்னா என்ன? நான் தரேன், நான் செத்தாலும் என்னைப் பார்க்க வராத, நீ செத்தாலும் சத்தியமா நான் வரமாட்டேன், மீறி நான் இருக்கிற இடத்துக்கு வந்து தொந்தரவு பண்ணின, உன்னோட அசிங்கத்தை எல்லார்கிட்டயும் சொல்லிடுவேன். ஜாக்கிரதை, எச்சரித்து விட்டு, கோபியை அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினாள் அமுதா.


கோபி சொல்லி முடித்தபின் இருவருக்குள்ளும் அழுத்தமான அமைதி நிலவியது. அதற்குள் மாலை தேரம் வந்தபடியால் சொற்பமான ஆட்களும், பூங்காவில் நடைப்பயிற்சியில் இறங்கினர்.

கனத்த மௌனத்தை கலைத்தாள்,மீரா.

இந்த விஷயம் எனக்கு புதுசுதான். அமுதாம்மா இந்த அளவுக்கு துணிச்ச லானவங்களான்னு நினைக்கும் போது எனக்கு ஆச்சர்யமாயிருக்கு. அதுவும் அவங்க என்னைப் பத்தி சொன்னது முழுக்க உண்மைதான், எனக்கு அந்த வயசில எதுவும் புரியல, ஆனா புரிஞ்ச வயசு வந்ததும் உங்க அப்பா தலையை வெட்டணும்னு துடிச்சேன், உங்கப்பாவ மட்டும் இல்ல அவனை மாதிரி இருக்கிற எல்லா ஆம்பளைங்களையும் கட்டந்துண்டமா வெட்டிப் போடணும் என்கிற வெறி எனக்குள்ள இருக்கு, அந்த காலத்துல நடந்த தப்பு நாலு சுவத்துக்குள்ள. முடங்கிப் போச்சி, எந்த மீடியாவும் அப்ப இல்ல, ஆனா இப்ப நடக்கிற எல்லாத்தப்பும் மீடியா மூலமாக. வெளிய தெரிய ஆரம்பிச்சிடிச்சி, மத்தபடி தப்பு எல்லாம் குறைஞ்சிடிச்சா என்ன? இன்னும் அதிகமாய்தான் போய்ட்டு இருக்கு, மூணு வயசு குழந்தைக்கு பாலியல் பலாத்காரம்,. எவ்வளவு கொடுமை பாருங்க. என்றுதான் தணியும் இந்த வெறி.

இவளது ஓங்கிய குரல் கேட்டு பூங்காவில் இருந்த ஒரு சிலர் திரும்பிப் பார்ப்பதை உணர்ந்த மீரா, குரலைத் தாழ்த்தினாள்

அமுதாம்மா இப்ப எப்படி இருக்காங்க,

நல்லா இருக்காங்க, நான் ஸ்கூல்ல கத்துகிட்ட பாடத்தைவிட அம்மாகிட்ட கத்துகிட்ட பாடம்தான் அதிகம்,  நம்ம குடும்பத்தால பாதிக்கப்பட்டவள் இப்ப எப்படி இருக்கா, அவ கல்யாணம் பண்ணி வாழ்க்கையில மனநிறைவா இருக்காளான்னு பார்த்துட்டுதான் நான் கல்யாணம் பண்ணிப்பேன்னு அம்மா கிட்ட சொன்னேன். அம்மாவோட வைராக்கியத்துல பாதியாவது எனக்கு இருக்காதா?

 பல நாள் தேடுதல் வேட்டையில இன்னைக்கு தான் உன்னை சந்திக்க முடிஞ்சுது.

நாங்க பிரிஞ்சி வந்த ஆரம்ப நாட்களிலேயே, அது தண்டனைன்னு அப்பாவிற்கு புரிய ஆரம்பிச்சிட்டுது. மன்னிப்பு கேட்டு எத்தனையோ தூது அனுப்புனாரு, அம்மா எதுக்குமே செவிசாய்க்கல. இவங்க எல்லாம் குடும்பம் இல்லாம நிக்கணும், சொந்தம் மொத்தமும் காறித் துப்பணும். இவனுங்க படற பாட்டை பார்க்கிற மத்தவங்களுக்கு இது ஒரு எச்சரிக்கையா இருக்கணும்னு திடமா இருந்தாங்க, அப்பாவே அப்புறம் சொந்தகாரங்க கிட்டயும் சொல்லியிருக்காராம், அமுதா மேல எந்த தப்பும் இல்ல, என் சின்ன சபல புத்தி, அதுக்கான ஆயுள் தண்டனையை தான் இப்ப அனுபவிக்கிறேன்னு.

ரெண்டு வருசத்துக்கு முன்னாடிதான் அவர் இறந்தாரு, அம்மா போகவேயல்ல, அவங்க வாழ்க்கையில எந்த சந்தோஷமும் அடையல, அவங்க ஆசைப்படறது ஒண்ணுதான். நான் வாழ்க்கையில மகிழ்ச்சியாக இருக்கணும். அது மட்டும்தான், என்று சொல்லிய கோபி சற்றுத் தயக்கமாய்  மீராவை கேட்டான், நீ ஏன் இன்னமும் கல்யாணம் பண்ணலேன்னு கேட்க வரல்ல, உன்னோட தப்பு இதுல எதுவுமே இல்லியே அப்புறம் உனக்கு ஏன் இந்த தண்டனை, கூடவே உங்க அம்மாவுக்கும் சேர்த்து.

அதற்குள் பூங்காவில் கூட்டம் சேர ஆரம்பிக்க எழுந்து நிற்க ஆரம்பித்தாள் மீரா, வாங்க பேசிக்கிட்டே வெளில போயிடலாம், ரொம்ப நேரமா இங்கேயே இருக்கோம்.

இருவரும் வெளியில் வந்தார்கள்.

நான் சொன்னதுல ஏதாவது கோபமா மீரா, நீ பதிலே சொல்லல?

இல்லல்ல, புரியாத வயசில நடந்தது, அருவெறுப்பாக இருந்தது, புரிந்த போது கல்யாணம் பண்றதே இதுக்காகத்தானா, எனக்கு இது வேண்டாம்னு இருந்தேன், இப்ப வயசு  கொஞ்சம் பக்குவம் தந்திருக்கு, கல்யாணத்தைப் பத்தியும் யோசிக்க ஆரம்பிச்சிருக்கேன், சரியான நேரத்துல நீங்க வந்தீங்க, எனக்காக உங்க அம்மாவும் தண்டனை அனுபவிக்கிறாங்க, இதுக்கு மேலயும் அவங்களை வருத்தப்பட வைக்க நான் விரும்பல, என்னோட அம்மாவையும் சேர்த்துதான் சொல்றேன், இன்னைக்கு சாயந்திரம் என் முடிவைச் சொல்றேன்னு அம்மாகிட்ட சொன்னேன் அதுக்கு முன்னாடி உங்க கிட்ட சொல்றேன். கூடிய சீக்கிரம் கல்யாணப் பத்திரிகையோட அமுதாம்மாவைப் பார்க்க வரேன்னு சொல்லுங்க, கன்னங்குழிய மீரா சிரிக்க, அந்த குழியழகில் சிறு பதின்பருமத்திலே தான் ஈர்ககப் பட்டதை எண்ணி தனக்குள் கசப்பாக சிரித்துக் கொண்டான் கோபி.

ரொம்ப மகிழ்ச்சி மீரா, அம்மாகிட்ட போய் சொல்றேன், அவங்களும் ரொம்ப மகிழ்ச்சி யடைவாங்க.

உங்க கல்யாணப் பத்திரிகையை நான் எதிர்பார்க்கலாமா கோபி?

கண்டிப்பாக, கூடிய சீக்கரம் அம்மாவையும் அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வருகிறேன்,

அங்கு காயம்பட்ட இதயங்கள் வலிச்சுவடு தெரியாத படிக்கு அடுத்த கட்ட வாழ்க்கையின் நகர்விற்கு ஆயத்தம் செய்ய, புன்னகைத்துக் கொண்டே பரஸ்பரம் விடைபெற்றுக் கிளம்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *