எதிர்வீட்டு ஜன்னல்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 21, 2024
பார்வையிட்டோர்: 2,250
விஜய்யின் வீட்டுக்கு எதிரே உள்ள அடுக்குமாடி வீட்டு கட்டிடத்தில் அன்று அதிகாலை என்றுமில்லாத பரபரப்பு.
சென்னை வாழ்க்கையில் கண் எதிரே கொலையே விழுந்தாலும் அவரவர் அவரவர் கடமைகளை ஆற்ற அவரவர் ஸ்கூட்டரிலோ காரிலோ பறந்து விரைந்து கொண்டிருப்பர். சற்று சோம்பலாக ,நிதானித்தால் வாழ்க்கை கை நழுவி போய்விடும்!
எதிர்வீட்டு அசாதாரணமான மௌனம், விசும்பல்கள், மெல்லிய அழுகுரல்கள், அதுவரை அரசல் புரசலாக அறிந்த மரணச்செய்தியை மெல்ல வெட்ட வெளிச்சமாக்கியது விடிந்த காலைப்பொழுது.
அங்கே ஒரு மரணம். நாற்பது வயது மனிதர், தன் கருப்புக்காரை தினமும் புனிதக்கடமையாக துடைக்கும் “ஒர்க் பிரம் ஹோம்” (“வீட்டிலிருந்தே அலுவலக வேலை”) ஐ.டி. மனிதர். ஏதோ உடல் பிரச்னை என்று ஆஸ்பத்திரி சென்ற மனிதர் அங்கேயே ஐஸ்பாக்சில் அடைக்கலமானார்.
பொதுவாக சென்னை அடுக்கு மாடி கட்டிட வாழ்க்கை , அடுத்த வீட்டு மனிதர்களை பற்றி அறிந்து கொள்ளாமலேயே வாழ்ந்து மறையும் காகித நட்புச்சங்கிலிகள் நிறைந்த உலகம். .
பிறகுதான் தெரிந்தது மனிதர் இறந்து இரண்டு நாட்களாக ஆஸ்பத்திரி மார்ச்சுவரியில் வைக்கப்பட்டு , இன்று அவர் அமெரிக்க வாரிசுகள் வருகிறார்கள் என்பதால் ஐஸ்பாக்சில் வீட்டுக்கு கொண்டுவரப்பட்டார் என்று.
அவர் பாலக்காட்டு பக்கமாம். சற்று நேரத்தில் தெரு முழுவதும் விதவிதமான கார்களில் வளைகுடா மற்றும் அமெரிக்க நாடுகளில் வெற்றிகரமாக பணி புரிந்து உயர்நிலை வாழ்க்கையை அடைந்த மலையாளித்தமிழர்கள் அடையாறிலிருந்தும், ஈ. சி. ஆர் ரிலிருந்தும் வந்திறங்கினர்.
ஒவ்வொரு நாள் காலையும் விஜய் வாக்கிங் செல்லும்போது இறந்த அந்த ஐ.டி மனிதர் தன் காரை அழகு மிளிர துடைத்துக்கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டே ” குட் மார்னிங்” சொல்லிவிட்டு செல்வான். இருவருக்கும் ஒருவர் பெயர் மற்றவருக்கு தெரியாது, அதுதான் நகர வாழ்க்கை.
விஜய்க்கும் அது போலவே ஒரு ஹோண்டா கார் வாங்கவேண்டும் என்று வெகுநாள் ஆசை. அவன் பட்ஜெட்டிற்கு ஒரு செகண்ட் ஹாண்ட் காராவது வாங்க ஆசை!
விஜய்யின் மனைவி அப்போது வெளியூரில் இருந்ததால், எதிர் வீட்டு மரணச்செய்தி அறிந்தவுடன் ஓடோடிச்சென்று மலையாள மனிதர்களிடையே புகுந்து, மீளா தூக்கத்திலிருந்த கணவரையே பார்த்துக்கொண்டு ஆழ்ந்த துக்கத்தில் இருந்த ,கண்ணீர் சுரப்பிகள் வறண்ட, அவர்தம் மனைவிக்கு மௌனமாக அனுதாபங்களை தெரிவித்துவிட்டு ஐஸ்பாக்ஸ் மனிதருக்கும் இறுதி அஞ்சலி செலுத்தி விட்டு அங்கிருந்த மலையாளி மனிதர்களுக்கு வேண்டிய அவசர உதவிகளை அளித்து விட்டு இறுதிச்சடங்குகள் முடிந்து பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட இறுதி ஊர்வலத்தேருக்கு பிரியாவிடை கொடுத்துவிட்டு குளித்து விட்டு அவனுடைய சொந்த வாழ்க்கைக்குள் மீண்டும் நுழைந்தான் விஜய்.
வாரங்கள் மாதங்களாயின.அந்த ஹோண்டா கார் அதே இடத்தில் தினசரி தெருப்புழுதி ஏறி ஏறி ஓனருக்காக ஏங்கி ஏங்கி நின்று கொண்டிருந்தது.
ஒருநாள் அலுவலகம் விட்டு வீடு திரு ம்பிய விஜய், அலுவலகம் விட்டு வீடு திரும்பிய விதவை மனுஷியை அவர் வீட்டு வாசலில் இடை மறித்து, சில சம்பிரதாய சிக்கன உரையாடல்களுக்குபிறகு, அந்த ஹோண்டா காரை விலைக்குத்தரமுடியுமா என்று வினவினான் விஜய்.
கணவரின் இறுதி ஊர்வலத்தன்று விஜய் செய்த உதவிகட்கு நன்றி தெரிவித்துவிட்டு அந்த விதவைப்பெண் காரை விஜய்க்கு விற்க இயலாது என்று வருத்தம் தெரிவித்தார்.
சற்று ஏமாற்றத்துடன் விஜய் ஏன் என்று வினவ அவர் “உங்களுக்கு நான் காரை விற்றேன் என்றால், என் வீட்டு ஜன்னல் வழியே தினமும் உங்கள் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் என் காரை நான் பார்க்க நேரிடும். நானும் என் கணவரும் அந்தக் காரில் பயணம் செய்த அனுபவங்கள், தேன் நிலவு நாட்கள், போக்குவரத்து நெரிசலில் அவரின் பொறுமையிழந்த முன்கோபத்தை நான் அவர் கன்னத்தில் இட்ட முத்தத்தால் ஆசுவாசப்படுத்தியது எல்லாம் என் கண் முன் நிற்கும் காலாகாலத்திற்கும்!
கண் காணாத இடத்திற்கு என் கணவர் சென்றதைப்போல் கண் காணாத இடத்திற்கு என் காரையும் விற்கப்போகிறேன்” என்று சொல்லி அவள் வீட்டிற்குள் நுழைந்தாள்.
விஜய்யும் அந்த வித்தியாசமான விளக்கத்தை புரிந்து கொண்டு அவளைப் பாராட்டிவிட்டு விடைபெற்றுக்கொண்டான்.