எட்டாமிடத்தில் சனி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 12, 2025
பார்வையிட்டோர்: 335 
 
 

(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“டக் டக்….. டக் டக்…..”

என் காலணியோசைதான். மருத்துவமனைப் படிக்கட்டுகளில் ஏறினேன்.

எதிரே விசாரிப்பு அறை.

அறைக்குள் நங்கை ஒருத்தி இருந்தாள்.

அவளைப் பார்த்தேன்.

அவளும் என்னைப் பார்த்தாள்.

பார்த்துவிட்டுக் குங்குமக் கன்னத்தில் குழிவிழச் சிரித்தாள்.

நங்கையைப் பார்த்து நானும் சிரித்தேன்.

சிரித்தபடி அருகில் சென்று “வணக்கம்” என்றேன்.

“வணக்கம்” என்றாள்.

என் மனைவி பெயரைச் சொல்லி, “குழந்தை பிறந்து விட்டதா?” என்று அவளிடம் கேட்டேன்.

குறிப்பேட்டுப் பக்கங்களைப் புரட்டிப் பார்த்து விட்டுப் புன்னகைத்தாள்.

நான் ஆவலாக அவள் வாயைப் பார்த்தேன்.

“உங்கள் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது”

“அப்படியா?”

“ஆமாம்”

எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. “பார்க்கப் போகலாமா?”

“ஓ… தாராளமாக”

நான் என் மனைவி இருக்கும் வார்டைக் கேட்டுத் தெரிந்து கொண்டு விரைந்தேன்.

என் மனைவி வெள்ளைக் கம்பளியைப் போர்த்திக் கொண்டு படுத்திருந்தாள்.

அவள் காலடியில் சிறு தொட்டில். அதில் துணியால் சுற்றப்பட்டுப் புத்தம் புதுமலர் கிடந்தது.

தொட்டியில் கிடந்த என் மகனைப் பார்த்தேன்.

ரோஜா மலர்போல் இருந்த அவன் கன்னத்தில் குருதிக்கொப்பளித்து வரும்போல் இருந்தது. உடம்பு பழுத்த தக்காளிப் பழம்போல் சிவப்பு. கடித்துத் தின்னலாம் போங்கள். அப்படிக் கிடந்தான்.

என் மனைவியைப் பார்த்தேன்.

அவள் என்னைப் பார்த்து “அத்தான், பயலைப் பார்த்தீங்களா, உங்களைப் போலவே சிவப்பா, அழகா இருக்கான்” என்று சொல்லியபடி புன்னகைத்தாள்.

அந்தப் புன்னகை அவள் உடம்பு வலியை மட்டுப் படுத்திவிட்டு வெளிவந்ததைப் போல் இருந்தது.

எனக்காகத்தான் அப்படிச் சிரித்திருக்கிறாள். “ஆமாம், பயல் நல்லாத்தான் இருக்கிறான். வாய் கூட உன் வாயைப்போல் இருக்கிறது” என்றேன். அவள் மீண்டும் சிரித்தாள்.

“இந்தா, கோழிக்குஞ்சு ரசம் வச்சுக் கொண்டாந்திருக்கேன். எடுத்துக் கொஞ்சம் சோற்றைக் கரைத்துக் குடி” என்றேன்.

எழுந்தாள்.

சிரமப்பட்டுத்தான் எழுந்தாள்.

எழுந்து சொன்னபடியே செய்தாள்,

வியப்பாக இருக்கிறதா? கணவன் பேச்சைக் கேட்க இந்தக் காலத்தில் கணவன் சொல்லைத் தட்டாத மனைவியும் உண்டு என்று.

உண்டு. பத்தில் ஐந்து பழுதில்லை.

என் மனைவி நான் சொல்வதைத் தட்டமாட்டாள்.

பிறகு அங்கிருந்து வந்தேன்.

மகிழ்ச்சியோடுதான். ஆனால்,

விசாரிப்பு அறைக்குத் திரும்பியபோதுதான் நான்காவது பிள்ளைக்கு நூறு வெள்ளி கட்டவேண்டும் எனும் நினைப்பு வந்தது.

குடும்பக் கட்டுத் திட்டத்தை மீறியதற்காகத் தண்டப்பணம் நூறு வெள்ளி.

மனி தனுக்குத்தான் இன்பத்தோடு துன்பமும் கலந்திருக்கிறதே!

பெருமூச்சு விட்டேன்.

ம்… என்ன செய்வது?

விரிமுல்லை மஞ்சத்தில் குடும்பக்கட்டுத் திட்டத்தைக் கடைபிடிக்க முடியவில்லையே!

கடைபிடிக்கலாம் என்றாலும்?

கன்னியின் கடைப்பார்வை…

அப்போது வராத நினைவு இப்போது வந்தது.

வந்து என்ன செய்ய முடியும்?

நூறு வெள்ளி கட்டியே தீர வேண்டும்.

கடன் வாங்கிக் கட்டிவிடலாம் எனும் ஆறுதலில் வீட்டிற்கு விரைந்தேன்.

மறு நாள்.

தாயையும், சேயையும் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்துவிட்டேன்.

பணத்தைக் கடன் வாங்கிக் கட்டிவிட்டுத்தான்.

சின்னப் பயல்.

அறிவில் சின்னப்பயல் என்று சொல்வதாக நினைத்து விட வேண்டாம். உருவத்தில்தான் சின்னப்பயல்.

சிட்டுப்போல இருந்தான்.

வேறு யாருமில்லை,

என் மகன் தான்.

அவனைப் பார்த்தேன்.

தொட்டேன்.

கன்னத்தில் மெல்ல ஒன்று கொடுத்தேன். அடி யில்லை; முத்தம்!

அது படித்தேனைச் சுவைப்பதைவிடப் பன்மடங்கு இன்பமாக இருந்தது.

பூங்காற்றில் மிதந்து வந்த இன்பமோ? சொல்லத் தெரியவில்லையே !

அத்தனைக்கும் காரணம் அவன் அப்படியிருந்தான். அந்த இன்பத்தைக் கலைக்க அப்போது பக்கத்து வீட்டுப் பாட்டி அங்கு வந்துவிட்டாள்.

அவள் வாயில் பல்லில்லை.

நாக்கு இருந்தது.

அதிலும் நரம்பில்லை.

அதனால்தானோ என்னவோ இன்தேறல் (பிராந்தி) அதுஇது என்று அளந்தாள்.

என் மனைவிக்கு வாங்கிக்கொடுக்குமாறு பரிந்துரைத்தாள்.

எனக்கு ‘சீச்சீ’ என்றிருந்தது.

பிராந்தியா?

ஆறறிவில் ஓர் அறிவை அழித்துவிடும் அதை நினைத்தாலே எனக்கு வாந்தி வந்துவிடும். அறிவு, உடல், உள்ளம், பொருள் இத்தனைக்கும் உலைவைக்கும் அதை வாங்கிக் கொடுக்க என் மனம் இடந்தரவில்லை.

கிழவியும் விடவில்லை. என் மனத்தை மாற்றி விடுவது போல் பேசினாள்.

நான் மருத்துவரிடம் ஓடினேன்.

மருத்துவர், “பச்சப் பிள்ளைக்காரிக்கு இன்தேறல் கொடுக்கக்கூடாது; பால் வற்றிப் போகும்; உடம்புக்கும் நல்லதில்லை” என்றார்

எப்படி பாட்டியின் அளப்பு?

தெரியாவிட்டாலும் வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்கிறாளா?

இல்லை,

எல்லாம் தெரிந்ததைப்போல் கொட்டித் தீர்த்து விட்டாள்.

அடேயப்பா பாட்டிக்கு எப்படித்தான் இந்தப் பட்டறிவு வந்ததோ?

ம்… வெற்றுவேட்டுக் கிழவி.

மருத்துவர் பிள்ளை பெற்ற உடம்பு வலிக்கு மாத்திரை கொடுத்தார்.

வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தேன்.

கொடுத்தேன்.

மருத்துவர் சொன்னதைச் சொன்னேன்,

கற்பூரப் புத்தியுள்ள என் மனைவி உடனே உணர்ந்து விட்டாள். பிராந்தியே வேண்டாம் என்று நறுக்குத் தெறித்தாற்போல் சொல்லிவிட்டாள்.

பிறகு பிள்ளையிடம் கொஞ்ச நேரம் இருந்தேன்.

பெயர் வைக்கும் நினைவு வந்துவிட்டது.

பிள்ளையைப் பெற்று விடுவதைவிடப் பெயர் வைப்பது பெரும்பாடாக இருந்தது.

“என்ன பெயர் வைக்கலாம்?” என் மனைவியிடம் கேட்டேன்.

அவள் தன் தந்தையின் பெயரை வைக்கச் சொன்னாள்.

அவள் தந்தையின் பெயர், அதாவது என் மாமனாரின் பெயர்.

அதை நினைத்தாலே எனக்குச் சிரிப்பு வந்தது. என் மனைவிக்கு அது நல்ல பெயராம்!

எனக்கு ‘காத்தமுத்து’ என்றால் சிரிப்பு வந்துவிடும். பெயர் தேர்ந்தெடுப்பதில் என் மூளையே குழம்பியது. இன்னும் கணிகரைவேறு பார்க்கவில்லை.

கணிகர் (சோதிடர்) என்ன சொல்லித் தொலைக்கப் போகிறாரோ? தலையெழுத்து “கா”னாவில் இருக்கட்டும், “தீ”னாவில் இருக்கட்டும், என்று சொன்னாலும் சொல்லுவார்.

விரைந்து ஓடினேன். கணிகர் வீட்டிற்குத்தான்.

பூணூலால் முதுகை சொரிந்து கொண்டிருந்தார் கணிகர். என்னைக் கண்டதும், “வாருங்கோ, என்ன விசேடம்?” என்று கேட்டார்.

நான் பணிவோடும், சிரித்த முகத்தோடும், “என் மனைவிக்குப் பிள்ளை பிறந்திருக்கிறது” என்றேன்.

“இனிப்பான சேதிதான் கொண்டு வந்திருக்கேள். இப்படி இருங்கோ” என்றார்.

நான் அங்கு கிடந்த விசிப்பலகையில் அமர்ந்தேன். “எப்போ பிறந்துச்சு?”

“நேத்துக் காலையில் ஆறு முப்பதுக்கு”

அவர் ஒரு புத்தகத்தைப் புரட்டினார்.

பஞ்சாங்கத்தைப் பார்த்துவிட்டு, “பிள்ளை ஆணாக இருக்கணுமே” என்று என்னைப் பார்த்துப் பல்தெரியச் சொன்னார்.

எனக்கு எப்படி இருக்கும்? வியப்பாக இருந்தது. வெள்ளெழுத்துக் கண்ணாடிக்குள் சுண்டைக்காய்போல் தெரிந்த அவர் விழிகளை நோக்கியபடி “ஆமாம்” என்றேன்.

“நன்னா சிவப்பா இருப்பானே. பயல் பகலில் தூங்கி விட்டு இரவில்தான் ‘வீல்வீல்’ என்று கத்துவான், சரியோ”

எனக்கு மேலும் வியப்பு.

“ஆமாம்” என்றேன்.

கணிகர் கன்னங்களில் சுருக்கம் விழ சிரித்துக்கொண்டார்.

நான் மகிழ்ச்சியால் உள்ளம் பூரித்துப்போய் இருந்தேன்.

கணிகர் ஒரு வெள்ளைத்தாளை எடுத்து அதில் கட்டம் போட்டார்.

கட்டம் போட்டதும் ராகு, சுக்கிரன், கேது, சனி இப்படித்தான் எழுதினார்.

நான் அவர் எழுதியதைக் கவனித்துவிட்டு, பக்கத்தில் கிடந்த கைரேகைப் புத்தகத்தைப் பார்த்தேன். அதில் உள்ள கைவரைக்கும் என் கையில் உள்ள வரைக்கும் ஏதாகிலும் ஒற்றுமை உண்டா என்று கவனித்தேன்.

கணிகர் வெள்ளெழுத்துக் கண்ணாடியை எடுத்தபடி என்னைப் பார்த்தார்.

அவர் முகம் மாறிவிட்டிருந்தது.

முகத்தில் துக்கஇழைகள் கோடிட்டிருந்தன. நான் அவர் முகத்தைப் பார்த்தேன்.

என் முகமும் வாடிவிட்டதுபோல் நானே உணர்ந்தேன்.

“சொல்லுறேணு வருத்தப்படாதேள்” என்றார் கணிகர்.

என் உள்ளத்தில் இருந்த மகிழ்ச்சி அப்போதே பஞ்சாய்ப் பறந்துவிட்டது.

இருந்தாலும்,

“சொல்லுங்க” என்று சமாளித்தேன்.

“வாய்விட்டுச் சொல்லுறதுக்கு என்னமோ மாதிரி இருக்கு. இருந்தாலும் பரவாயில்லே. காதைக் கொஞ்சம் நீட்டுங்கோ” என்றார்.

நான் அவர் அருகில் சென்றேன்.

காதருகில் வந்து அவர் சொல்லியதும் என் தலையே சுற்றியது.

மலைத்துவிட்டேன்.

அவரிடம் மீண்டும் அதைப்பற்றிக்கேட்க மனமில்லை. அவ்வளவு வேதனையாக இருந்தது அது.

கணிகர் (சோதிடர்) சொல்லியது என் நெஞ்சில் ஒரு தீத்துண்டம் விழுந்ததைப்போல் இருந்தது.

அதை என்னால் நினைத்துப் பார்க்கக்கூட முடிய வில்லை.

“கடவுளே!”

“என்னையேன் இப்படியெல்லாம் சோதிக்கிறே? அழகான பிள்ளையைக் கொடுத்து எங்களுக்கு இப்படியொரு நிலையை ஏன் கொடுத்தே?”

“கடவுளே”

மனத்திற்குள் பிதற்றிக் கொண்டேன்

என் நிலை கணிகருக்குப் புரிந்துவிட்டது.

அவர் எனக்கு ஆறுதல் கூறினார்.

அவர் சொல்லிய சொற்கள் என் மனத்திற்குச் சற்று ஆறுதல் அளித்தன.

என் மனத்திற்குச் சரியென்றும் பட்டது. கண்ணீரைத் துடைத்துக் கொண்டேன். துடைத்துக்கொண்டதும் “நீங்கள் சொல்லுவதைப் போல் செய்துவிடுகிறேன்” என்று சொல்லிவிட்டு நேராக வீட்டுக்குச் சென்றேன்.

தொட்டியில் கிடக்கும் பத்தரைமாற்றுத் தங்கக் கட்டியைப் பார்த்தேன்.

என்னையறியாமலே கண்கள் கலங்கின.

கண்ணீரைத் துடைத்துக் கொண்டு என் மனைவியைப் பார்த்தேன்.

நான் கண்ணீரைத் துடைத்ததைப் பார்க்காத என் மனைவி என் முகவாட்டத்தைப் பார்த்து விட்டாள்.

அதனால்தான், “ஏன், சோர்ந்துபோய் இருக்கிறீங்க? முகம் ஒருவகையா இருக்கிறதே” என்றாள்.

“ஒன்றுமில்லை” என்றேன்.

“சோதிடர் என்ன சொன்னார்?”

”சொன்னார்…”

“சும்மா சொல்லுங்க”

நான் மெல்ல அவள் அருகில்சென்று அமர்ந்தேன்.

அமர்ந்ததும், “பயலுக்கு”

அதற்குமேல் சொல்ல என் மனம் இடந்தரவில்லை.

அவள் பாம்பை மிதித்தவள்போல் “பயலுக்கு என்னங்க?” என்று கேட்டாள்.

என்னால் கணிகர் சொல்லியதை வாய்விட்டுச் சொல்ல முடியவில்லை.

மறைக்கவும் முடியவில்லை.

மறைப்பதும் சரியில்லை.

மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு, “பயல் சாதகத்தில் சனி எட்டில் இருக்கிறதாம். அவனுக்கும், தாய் தந்தையருக்கும், குடும்பத்திற்கும் நல்லதில்லையாம். யாருக்கிட்டேயாகிலும் தத்துக் கொடுத்துவிடுவது நல்லதாம்” என்று கொட்டித்தீர்த்தேன்.

நான் சொல்லி வாய் மூடுவதற்குள் அவள் தீயை மிதித்துவிட்டதுபோல் பதறினாள். அவள் மேனி நடுங்கியது. தீ கால்களில் சுட்டு உடம்பெல்லாம் சூடேறிக் கண்கள் வழி வெந்நீராய்க் கொட்டியது.

“அத்தான்” என்னைக் கட்டிப்பிடித்துக்கொண்டாள்.

“இதைத் தவிர்க்க வழியில்லையா அத்தான்?”

“இல்லையாம். அது மட்டுமில்லே பிள்ளையைத் தத்துக் கொடுக்கலேனா தாய் தந்தையரை இழந்து கல்வி பயிலுவதற்குக்கூட வழியில்லாம தவிப்பானாம்” என்று சூட்டோடு சூடாகச் சொல்லிவிட்டேன்.

அதுவும் எப்படியோ சொல்லிவிட்டேன்.

பெற்ற மனம் துடித்தது. உடல் புழுப்போல் நெளிந்தது.

மறுநாள்.

நான் சின்னதுரை வீட்டிற்குச் சென்றேன்.

அவரிடந்தான் நூறு வெள்ளி கடன் வாங்கியிருந்தேன்.

அதுவும் பிள்ளைக்காக மருத்துவமனையில் கட்டுவதற்கு.

சின்னதுரையிடம் கணிகர் (சோதிடர்) சொல்லியதைச் சொன்னேன்.

அவருக்குச் சிறிது கவலைதான்.

இருந்தாலும் உள்ளுக்குள் மகிழ்ச்சி.

எருதின் நோவு காக்கைக்குத் தெரியுமா?

நான் துன்புறுவது அவருக்குத் தெரிய வழியில்லை தான்.

அவர் மகிழ்ச்சிக்குக் காரணம் இருந்தது. இல்லா விட்டால் மகிழ்ச்சியடைவாரா ?

அவருக்குத் திருமணமாகி ஐந்தாண்டு ஆகியும் குழந்தையே இல்லை. அவர் மகிழ்ச்சிக்குக் காரணம் அதுதான்.

நான் தத்துக்கொடுப்பது பற்றி அவரிடம் சொன்னேன்.

அவர் தானே எடுத்து வளர்ப்பதாகச் சொன்னார். நானும் சரி என்றேன்.

அவர் பிள்ளைக்காகப்பணம் கொடுக்க முன் வந்தார். சில நாட்களுக்கு முன்புகூட யாராகிலும் பிள்ளை கொடுத்தால் காசு கொடுத்து வாங்கிக் கொள்ளலாம் என்று மறைமுகமாகச் சொல்லிவைத்திருந்தார். இப்போது எனக்கே தருவதாகச் சொன்னார்.

நான் பிள்ளைக்குப் பணம் வாங்க விரும்பவில்லை! அது பிள்ளையை விற்பதாகப் பொருள்படும் என்று சொல்லிவிட்டேன்.

ஆனால்,

மருத்துவமனையில் கட்டக் கடனாக வாங்கிக் கட்டிய நூறு வெள்ளி?

அது அவரிடம் வாங்கிய பணந்தானே அதை அவர் திருப்பித்தர வேண்டாம் என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டார்.

என்னால் அதை மறுக்கவும் முடியவில்லை.

சரி என்றேன்.

ஒரு கிழமை ஓடியது.

அன்று வெள்ளிக்கிழமை.

அந்த வெள்ளிக்கிழமை அன்றுதான் என் மகனைச் சின்னதுரைக்குத் தத்துக் கொடுக்க வேண்டிய நாள்.

வழக்கறிஞரிடம் சென்றோம்.

என் பிள்ளை கைமாறியது.

ஆம், சட்டப்படி என்மகன் சின்னதுரைக்குப் பிள்ளை யாகிவிட்டான். எங்களுக்கும் பிள்ளைக்கும் எத்தொடர்பும் இல்லை.

ஆனால்,

பெற்ற பாசம், அன்பு!

பெற்ற தாய்க்குப் பிள்ளை பெற்ற உடம்புவலி தீர்வதற்குள் பிள்ளை பிறர் பிள்ளையாகிவிட்டதை நினைக்காமல் இருக்கமுடியுமா? எங்கள் பிள்ளை அவர்கள் அரவணைப்பில், அன்பில், செல்லப் பிள்ளையாக பணக்கார வீட் டுப் பிள்ளையாக வளர்ந்தாலும் எங்கள் மனம் கேட்குமா?

கேட்கவில்லை.

அழுதேன், துடித்தேன்.

என் மனைவி ஆறாத்துயரில் ஆழ்ந்துவிட்டாள். உணவு, உறக்கம் இழந்தாள். உடல் மெலிந்தாள். கடலெனக் கண்ணீர் விட்டாள்!

நாட்கள் ஓடிக்கொண்டுதான் இருந்தன.

ஆனால்,

எங்கள் செல்வத்தின் நினைவு மட்டும் இருந்து கொண்டே இருந்தது.

மறக்கப் பார்த்தேன் முடியவில்லை.

என் மனைவியோ அதே நினைவாகத்தான் இருந்தாள்.

ஒருநாள்,

“அத்தான் நம் மகனை அழைத்துக்கொண்டு வாருங்கள்” என்றாள் என் மனைவி.

“எப்படி முடியும்?”

“ஏனத்தான் அவர்களிடமிருந்து நாம் மீண்டும் தத்தெடுத்துக் கொள்ளலாமே” என்றாள்.

அவள் சொல்வதில் உண்மை இருந்தது.

ஆனால் கொடுப்பார்களா?

“முதலில் நாமும் விரும்பினோம், அவர்களும் விரும்பினார்கள். இப்போதோ நாம் பிள்ளையை வாங்கிக் கொள்ள ஆசைப்படுகிறோம் அவர்கள் கொடுக்கமாட்டார்களே” என்றேன்.

அவள் பேசவில்லை.

கண்ணீர்தான் வடிந்தது!

சற்று நேரங்கழித்து. “பிள்ளையைப் பார்க்காமல் இருக்க முடியவில்லையத்தான்” என்றாள்.

எனக்கும் பார்க்க வேண்டும் எனும் ஆவல் இல்லாமல் இல்லை.

இருந்தது.

பிள்ளையை அவள் கண்ணில் காட்டாமல் இருக்கவும் என் மனம் கேட்கவில்லை.

அழைத்துச் சென்றேன்.

என் மனைவி பிள்ளையைப் பார்த்தாள்.

தூக்கி அரவணைத்தாள். கொஞ்சினாள். குலவினாள். வீடு திரும்ப மனமில்லாமல் அங்கே நீண்ட நேரத்தையும் கழித்து விட்டாள்.

நானும் பிள்ளையைத் தூக்கினேன்.

கொஞ்சினேன். குலவினேன். அன்பு முத்தங்கள் பல சொரிந்தேன். என் தாடி பிள்ளையின் கன்னத்தில் குத்திவிட்டது போலும். அழுதான். அவன் அழுவதை என்னால் பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை.

என் மனைவியோ துடித்தாள். அழுகையை நிறுத்த முயன்றாள்.

பிள்ளை அழுவது தாடி குத்தியதாலா; இல்லை என்னைத் தத்துக் கொடுத்து விட்டீர்களே என்பதாலா? தெரியவில்லை.

பிள்ளை அழுகையை நிறுத்தியது.

நான் என் மனைவியை வீட்டிற்கு அழைத்து வந்தேன்.

வீட்டில் வந்தும் அவள் கண்ணீரோடுதான் படுத்திருந்தாள்.

படுத்தவள் எழுந்திருக்கவில்லை. படுத்தே கிடந்தாள்.

ஆம்,

காய்ச்சல் வந்துவிட்டது.

மருத்துவரிடம் அழைத்துச் சென்றேன்.

மருத்துவர் மருந்து கொடுத்தார்.

மன நோய்க்கு மருந்து என்ன செய்ய?

அவர் கொடுத்த மருந்து வேலை செய்யவில்லை.

நான் மருத்துவராக மாறினேன்.

ஆம்,

ஆறுதல் எனும் மருந்து கொடுத்துப் பார்த்தேன்.

“பிள்ளை எங்கு இருந்தால்தான் என்ன அவன் நல்லா இருக்கிறான். இன்னும் சொல்லப் போனால் அவன் பணக்காரனாக இருக்கிறான்” என்றெல்லாம் சொல்லிப் பார்த்தேன்.

அது செவிடன் காதில் ஊதிய சங்காகி விட்டது.

“பிள்ளை எங்கிருந்தாலும் தாயிடம் இருப்பதைப் போல் இருக்காது” என்று என் வாயை அடைத்துவிட்டாள்.

நானும் சளைக்கவில்லை.

ஆறுதல் எனும் மருந்தைத் தொடர்ந்து கொடுத்தேன்.

ஊகூம்,பலிக்கவில்லை.

அவள் மேனிதான் மெலிந்து கொண்டே வந்தது.

எல்லாம் பிள்ளையின் கவலைதான்.

ஆறுதல் கூறிய எனக்கும் பிள்ளைக் கவலை இல்லாமல் இல்லை.

இருந்தது. ஆறுதல் யார் கூறுவார்?

என்றாலும் பிள்ளை பணக்காரர் வீட்டில் வளர்கிறது. நல்லா படிப்பான், அப்படி இப்படி என்று ஓர் அசட்டு மகிழ்ச்சியை வரவழைத்துக் கொண்டேன.

நாள் ஓடியது.

ஒரு நாள் மாலை.

பிள்ளையைத் தத்தெடுத்த சின்னதுரையும், அவர் மனைவியும் எங்கள் வீட்டிற்கு வந்தனர்.

தட்டில் தேங்காய், பழம், கற்கண்டு எல்லாம் இருந்தன. மற்றொரு தட்டில் வேட்டி, சேலை இருந்தன.

பார்த்தேன்.

என் மனைவியும்தான் பார்த்தாள். எனக்கு வியப்பாக இருந்தது.

“பிள்ளைக்குப் பெயர் வைக்கப்போகிறார்கள். அதனால்தான் இவையெல்லாம் கொண்டு வந்திருக்கின்றனர்” என்று எண்ணிக்கொண்டிருந்தேன்.

சின்னதுரை என்னிடம் தட்டை நீட்டினார்.

நான் ஒரு தட்டை வாங்கி என் மனைவியிடம் கொடுத்துவிட்டு மற்றொரு தட்டை வாங்கிக்கொண்டேன்.

கற்கண்டுக்குப் பக்கத்தில் சலவைத்தாள் கட்டு ஒன்று இருந்தது என் பார்வையில் அப்போதுதான் பட்டது.

அது என் பார்வையில்பட்ட பிறகுதான் பிள்ளைக்குப் பெயரிடவில்லை. எங்களுக்குக் காசு கொடுக்க வந்திருக்கின்றனர் என்று என் மனத்தில் பட்டது.

நான் தட்டைத் திருப்பி அவர்களிடம் நீட்டினேன். அவர்கள் என்னை வெறிக்கப் பார்த்தனர்.

நான், “இதெல்லாம் சரியில்லீங்க” என்றேன்.

“ஏன் சரியில்லை என்கிறீர்கள்:” என்றார் சின்ன துரை.

“பிள்ளையை நாங்கள் விற்கவில்லை” என்றேன்.

“நீங்கள் தப்பாகப் புரிந்து இருக்கிறீர்கள். நாங்கள் பிள்ளைக்காகக் காசு கொடுக்க வரவில்லை. பிள்ளை இவ்வளவுதான் பெறும் என்று மதிக்க முடியாது. எங்களுக்கு அவன் கிடைதததே நாங்கள் முற்பிறவியில் செய்த தவம் என்று எண்ணியிருக்கிறோம். அப்படி நினைத்திருக்கும் அவனை எங்களால் எப்படி விலைபேச முடியும். மதிப்பிட முடியாது வந்த மாணிக்கத்திற்கு உங்களால்தான் விலை மதிக்க முடியுமா?” என்று என்னைக் கேட்டார் சின்னதுரை.

நான் வியப்புற்றேன்.

பிள்ளையை மதிப்பிட முடியாது என்பவர்கள் ஏன் பணம் கொடுக்கவேண்டும்?

என் மனத்தில் இப்படியொரு கேள்வி எழுந்தது. என் மனைவியைப் பார்த்தேன்.

அவள் புரியாமல் விழிப்பது அவள் முகத்தோற்றத் தில் தெரிந்தது.

நான் மீண்டும் சின்னதுரையையும், அவர் மனைவி யையும் பார்த்தேன்.

சின்னதுரை என்னைப் பார்த்துச் சிரித்தார்.

நான், “அப்படி என்றால் இதெல்லாம் எதற்கு?” என்று கேட்டேன்.

“பையன் பிறந்தநாள் எண்ணையும், மருத்துவ மனையில் பதிவான எண்ணையும், பிறந்த சான்றிதழ் எண்ணையும் வைத்து ‘டோட்டோ’ எடுத்தேன், அதில் முதற்பரிசு ஓர் இலட்சம் விழுந்திருக்கிறது. அந்தப் பரிசுப் பணத்திலிருந்துதான் உங்களுக்கு ஆயிரம் வெள்ளி கொண்டு வந்திருக்கிறேன்” என்றார் சின்னதுரை.

நான் அதைச் செவிமடுத்ததும் அதிர்ச்சியுற்றேன்.

இவ்வளவு அதிர்ட்டம் உள்ளவனையா தத்துக் கொடுத்தோம். ச்சே எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்று என் மனத்தில் உரைத்தது.

என் மனைவியைப் பார்த்தேன்.

அவள் கல்லாகச் சமைந்து நின்றாள்.

சின்னதுரையையும் அவர் மனைவியையும் பார்த்தேன்.

அவர்கள் முகத்தில் முல்லைமலர் குலுங்கியது. என் மனைவி முகத்தில் அது இல்லை.

இவற்றைப் பார்த்து என் மனம் என் அறிவைப் பழித்தது.

– குங்குமக் கன்னத்தில் (சிறு கதைகள்), முதற் பதிப்பு: 1977, மறைமலை பதிப்பகம் வெளியீடு, சிங்கப்பூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *