எங்க ஊர் மாப்பிள்ளைக்கு மரியாதை
கதையாசிரியர்: முத்தமிழ்ப்பித்தன்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: December 14, 2025
பார்வையிட்டோர்: 2,422

முல்லைப்பாடி கிராமத்திற்கு வடக்கே உள்ள குழுவாச்சியம்மன் கோவிலை நோக்கி செல்லும் சிறிய மண் பாதையில், ஜெயந்தனும் அவனது உறவினர் கன்னியப்பனும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தனர்.
அவர்களுக்குப் பின்னால் அவர்களைத் துரத்தியபடி,”குச்சி வாத்தியார அவமானப்படுத்த நினைச்ச உங்க ரெண்டு பேருக்கும் இன்னைக்கு தர்ம அடிதான்!” என்ற ஆவேசமான கூக்குரலுடன் 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அந்த இருவரின் பின்னால் ஓடிக்கொண்டிருக்க, அவர்களை தொடர்ந்து முப்பதுக்கும் மேற்பட்ட அவ்வூர் பொதுமக்கள் ஓடிக் கொண்டிருந்தார்கள்.
குழுவாச்சியம்மன் கோயிலுக்கு சாமி கும்பிட வந்த சிலர், இரண்டு பேர்களை ஏன் இத்தனை பேர் துரத்திக் கொண்டு வருகிறார்கள் என்பதற்கான காரணம் புரியாமல் திகைத்தபடியும் பயத்தை மனதில் புதைத்தபடியும் நின்று கொண்டிருந்தார்கள்.
முசிறிக்கு அருகேயுள்ள முல்லைப்பாடி என்ற அமைதியான கிராமத்தில் இருக்கும் நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராகவும், அந்தப் பள்ளியின் அடையாளமாகவும் திகழ்பவர் , ஆசிரியர் அமிர்தலிங்கம். ஐம்பத்தாறு வயதைக் கடந்திருந்தாலும், அவர் பணியாற்றும் போது, முப்பது வயதுக்குரிய இளைஞனின் துடிப்பும் துள்ளலும் இன்னும் அவரிடம் நல்ல விதமாய் நடமாடிக் கொண்டிருந்தது. .
அமிர்தலிங்கம் வாத்தியார் மாணவர்களை தண்டிக்கும் முறை வித்தியாசமானதும் தனித்தன்மை வாய்ந்ததுமாக இருந்தது.
வகுப்பறையில் ஒரு மாணவன் வீட்டுப்பாடம் செய்யாமல் வந்தாலோ, அல்லது தவறு ஏதேனும் செய்தாலோ, அதற்கான தண்டனை தனித்துவமாக இருக்கும்.
“டேய் சந்திரன்! எத்தனை தடவை சொல்றது? கணக்கைப் போட்டு முடிச்சிட்டு வரணும்னு தெரியாதா?”
சந்திரன் தலை கவிழ்ந்து நிற்க, வாத்தியார் அவனை நிமிர்ந்து பார்க்கச் சொன்னார்.
“சரி. உனக்கு புரியிற மாதிரி சொல்லிக் கொடுக்காதது ஏன் தப்புதான் என்று சொல்லியபடி அவர் அவனுக்கு முன்பாக 10 தோப்புக்கரணங்களை போட ஆரம்பிப்பார். சில மாணவர்கள் அவரை தடுக்க முயன்றாலும் அதனை அவர் பொருட்படுத்த மாட்டார்.
“ஐயா ஏன் எனக்காக நீங்க போடுறீங்க? நான் இனிமேல் ஒழுங்கா உங்க பாடத்தை கவனிச்சு இனி ஒழுங்கா கணக்கு போட்டுட்டு வரேன். என்ன மன்னிச்சிடுங்க ஐயா!”என்று அவன் கெஞ்சியும் அவர் கேட்கவில்லை. அவர் பத்து தோப்புக்கரணங்களை போட்டு முடித்த பிறகுதான் நிறுத்தினார். மறுநாள் முதல் சந்திரன் பாடங்களை ஒழுங்காக கவனிக்க ஆரம்பித்தான். அதேபோல் வீட்டு பாடங்களையும் ஒழுங்காக செய்துவர ஆரம்பித்தான்.
சில சமயம், மாணவன் தவறு செய்து விட்டால், அவர் அந்த குச்சியினால் தனக்குத்தானே அந்த குச்சியை எடுத்து தனது உள்ளங்கையிலும் சில நேரங்களில் உள்ளங் காலிலும் பளிச்சு பளிச்சென்று தானாகவே அடித்துக் கொள்வார். அப்போது மாணவர்கள் அவரை கண் கலங்கியபடி பார்த்துக் கொண்டிருப்பார்கள். இப்படித்தான் அவரது தண்டனை முறை இருந்தது. . அப்போது அவரின் கண்கள் வலியால் கலக்கமடையும். அதைப் பார்த்து மற்ற மாணவர்களும் கண் கலங்கியபடி பார்த்துக் கொண்டிருப்பார்கள். இறுதியில் ஆசிரியர் குச்சி வாத்தியாருக்கு வெற்றி கிடைத்தது அவர் நினைத்தபடி அனைத்து மாணவர்களும் பொறுப்புடன் பாடங்களை கவனிக்க ஆரம்பித்தார்கள். வீட்டு பாடங்களையும் ஒழுங்காக செய்து வர ஆரம்பித்தார்கள். இதன் காரணமாக அந்த ஊர் மக்கள் அனைவரும் அவரை குச்சி வாத்தியார் என்று அழைக்க ஆரம்பித்தனர்.
குச்சி வாத்தியார் அவரது 30 ஆண்டுகால ஆசிரியர் பணியில் ஒருபோதும் மாணவனை அவர் அடித்ததில்லை.
ஒரு சனிக்கிழமை மாலை. பள்ளி முடிந்து அமிர்தலிங்கம் வாசல் திண்ணையில் அமர்ந்து, மாணவர்களின் விடைத்தாள்களை திருத்திக் கொண்டிருந்தார். அப்போது, அந்த ஊர் மாப்பிள்ளையான ஜெயந்தன் என்பவர் தயங்கித் தயங்கி வந்தார்.
“வாங்க ஜெயந்தன்! என்ன இந்த நேரத்துல?” என்று வாத்தியார் அன்புடன் விசாரித்தார்.
ஜெயந்தன் தரையில் அமர்ந்து, “வாத்தியாரே… ஒரு சின்ன உதவி வேணும். ஒரு பத்து நிமிஷம் பேசணும்,” என்றார் கூச்சத்துடன்.
“சொல்லுப்பா… என்ன சங்கதி?”
“அது… நேத்து ராத்திரி நண்பர்கள் கிட்ட கடன் வாங்கி கொஞ்சம் மது அருந்திட்டேன். இன்னைக்கு அவங்க கிட்ட பணம் கொடுக்கணும். கையில காசு பத்தலை. இன்னைக்குக் சாயங்காலம் ஒரு 2000 ரூபாய் பணம் வேணும். ஒரு வாரம் கழிச்சுத் திருப்பிக் கொடுத்துடுறேன்,” என்று இழுத்தார் ஜெயந்தன்.
அவர் தயக்கத்துடன் பேசியபோதே, பணம் கேட்பதின் நோக்கம் தவறானது என்பதை வாத்தியார் புரிந்து கொண்டார்.
அமிர்தலிங்கத்தின் முகம் லேசாக மாறியது. அவர் திருத்திய விடை தாள்களை எல்லாம் பத்திரமாக
எடுத்து ஓர் ஓரமாக வைத்தார்.
“ஜெயந்தன்… நீங்க . எங்க ஊரு மாப்பிள. அதனாலதான் நான் உங்ககிட்ட மரியாதையா பேசிகிட்டு இருக்கேன். உழைச்சுச் சம்பாதிச்ச காசை இப்படி வீணாக்கி, உடம்ப கெடுத்துக்கிறதை நான் பார்த்திட்டு சும்மா இருக்க முடியாது. நீங்க வேற எதுக்காகவாவது கேட்டிருந்தா, யோசிக்காம கொடுத்திருப்பேன். ஆனா… இப்ப நான் உங்களுக்கு பணத்தை கொடுக்க முடியாது. ,” என்று உறுதியாக மறுத்தார்.
ஜெயந்தனின் முகம் கறுத்தது. “என்ன வாத்தியார் இப்படிச் சொல்றீங்க? நான் திருப்பிக் கொடுத்துடுவேன்ல…”
“உங்கள மாதிரியான ஆளுங்கள பத்தி எனக்கு தெரியாதாக்கும். குடிகாரன் பேச்சு பொழுது விடிஞ்சா போச்சு!”
ஜெயந்தன் குச்சி வாத்தியார் சொல்வதை காதில் வாங்கிக் கொள்ளாமல் அலட்சியமாக அவன் அங்கேயே நின்று கொண்டிருந்தான்.
“ஐயா நீங்க இப்ப கொஞ்சம் வேலையா இருக்கீங்க. இன்னும் கொஞ்சம் நேரம் கழிச்சு வரட்டுங்களா?”என்று கேட்டபடி ஜெயந்தன் அங்கேயே நின்றான்.
குச்சி வாத்தியாருக்கு கோபம் வந்தது.
“நீ எதுக்கு பணம் கேட்கிறேன் என்று எனக்கு நல்ல புரியுது., இது நல்ல காரியம் இல்லை. நீ போப்பா. முதல்ல இந்தப் பழக்கத்தை விடு.”
ஜெயந்தன் கொஞ்சமும் அசையாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தான்.
“என்னப்பா! போறியா? இல்ல குச்சியை எடுக்கவா?”
ஜெயந்தன் அவமானத்துடனும் கோபத்துடனும் அங்கிருந்து கிளம்பினார்.
‘எனக்கே மறுப்பா? ஊர்ல எல்லாரும் மதிக்கிற வாத்தியாரை எப்படியாவது அவமானப்படுத்தணும்,’ என்று மனதுக்குள் சபதம் எடுத்துக்கொண்டார்.
இரண்டு நாட்களுக்குப் பின்_ மதியம், பள்ளி வளாகமே பரபரப்பானது. ஒரு கர்ஜனையுடன் பள்ளிக்குள் நுழைந்த காவல்துறை வாகனத்தை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். சத்தம் கேட்டு, அனைவரும் வெளியே வர, ஒரு கம்பீரமான காவல்துறை ஆய்வாளர் வாகனத்திலிருந்து இறங்கி, இரண்டு காவலர்களுடன் பள்ளி தலைமையாசிரியர் அறையை நோக்கி நடந்தார்.
ஆய்வாளர், அமிர்தலிங்கம் வாத்தியாரைப் பார்த்ததும் ஒரு கணம் உறைந்து நின்றார்.
“நீங்கதான் அமிர்தலிங்கம் வாத்தியாரா?” ஆய்வாளர் கம்பீரமான குரலில் கேட்டார்.
“ஆமாம் . நான்தான் அமிர்தலிங்கம். சொல்லுங்க,” என்று சொல்லிவிட்டு அமிர்தலிங்கம் அமைதியாக நின்றார்.
“உங்க மேல ஒரு புகார் வந்திருக்கு. ஒரு மாணவனைக் குச்சியால் அடிச்சு தலையில காயம் ஏற்படுத்தியிருக்கீங்க. அடிபட்ட அந்தப் பையனையும், அவனோட அப்பாவையும் அதுக்கு சாட்சியாய் இருந்த இன்னொரு பையனையும் அவங்க அப்பாவையும் உடனே வரச் சொல்லுங்க, விசாரிக்கணும்,” என்று உத்தரவிட்டார் ஆய்வாளர்.
அடுத்த அரை மணி நேரத்தில், சிலர் அந்த நான்கு பேர்களையும் அழைத்து வந்தனர். பையன்களின் பெற்றோர்கள் இருவரையும், பலத்த அடிபட்ட நிலையில் பார்த்த ஆய்வாளர் கோபப்பட்டார்.
“ஏன் இவங்க ரெண்டு பேருக்கும் இத்தனை காயம்? என்ன நடந்துச்சு?”
அங்கிருந்த பொதுமக்கள் சிலர் ஆய்வாளரிடம் குழுவாச்சி அம்மன் கோவிலில் நடந்ததை தெரிவித்தார்கள்.
“ ஐயா இந்த ஜெயந்தனும் அவனோட சொந்தக்காரனும் திட்டம் போட்டு அவருக்கு கெட்ட பேரு வரணும் என்பதற்காக, குச்சி வாத்தியார மேல போயி பொய் புகார் கொடுத்திருக்காங்க ஐயா. அதைக் கேள்விப்பட்ட உடனே எங்களுக்கு ரொம்ப கோவம். அதனாலதான் நாங்க அவங்க ரெண்டு பேரையும் துரத்திகிட்டு போயி அடிச்சு போட்டங்க. தயவுசெய்து எங்களை மன்னிச்சுக்கோங்க. இனிமேல் நாங்க அப்படி நடந்துக்க மாட்டோம். ஏதோ உணர்ச்சி வசப்பட்டு அடிச்சிட்டோம்”
“இப்படி அவசரப்பட்டு நீங்களே ஒரு முடிவு பண்ணி ஏதாவது பண்ணுனா, நாங்க எல்லாம் எதுக்கு இருக்கோம்? ஏதாவது ஒன்னு கிடக்க ஒன்னு ஆயிடுச்சுன்னா என்ன பண்ண முடியும் ?”
ஆய்வாளர் அங்கே நின்று கொண்டிருந்த இரண்டு சிறுவர்களையும் பார்த்தார்.
அடிபட்டதாக புகார் கொடுத்த அந்த சிறுவன் ஆய்வாளரை பார்த்து கண்கலங்கியபடி சொன்னான்,
“ஐயா குச்சி வாத்தியார் எங்கள அடிக்கவே இல்லைங்க ஐயா. அப்பா தான் அப்படி பொய் சொல்ல சொன்னாரு” என்றான்.
உடனே ஆய்வாளர் பேச ஆரம்பித்தார்.
“தம்பி குச்சி வாத்தியாரை பத்தி இந்த ஊர்ல இருக்கிற எல்லாருக்கும் நல்லா தெரியும். . ஆனாலும் நீங்க என்ன சொல்றீங்கன்னு தெரிஞ்சுக்கத்தான் நான் வந்தேன்.” என்றார் ஆய்வாளர்.
அப்போது ஜெயந்தனும் கன்னியப்பனும் ஆய்வாளர் முன் கலங்கியபடி வந்து நின்றனர். உடனே ஜெயந்தன் குச்சி வாத்தியார் காலில் விழுந்தபடி
“ஐயா என்னை மன்னிச்சுடுங்க. தெரியாம பண்ணிட்டேன். இனிமே இப்படி பண்ண மாட்டேன் ஐயா” என்று கெஞ்சி கதறினான். அடுத்தபடியாக அவன் ஆய்வாளர் காலிலும் விழுந்து அதேபோல் கதறி அழுதார். ஆய்வாளர் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டார்.
ஆய்வாளர் கண்களில் நீர் தளும்ப வாத்தியார் அமிர்தலிங்கத்தின் காலடியில் விழுந்து வணங்கினார்.
“ஐயா… நான் உங்களுடைய மாணவன். நான் இன்னைக்கு நல்ல நிலைமையில இருக்கிறதுக்கு நீங்கள் தான் ஐயா காரணம். . நீங்கதான் என்ன ஒரு நல்ல மனுஷனா ஆக்கினீங்க. நான்தான் ஆய்வாளர் பாஸ்கரன்!” என்று சொல்ல
அமிர்தலிங்கம் வாத்தியார் ஆய்வாளரைத் தழுவி, “நீ நல்லா இருக்கணும் பாஸ்கரா,” என்று வாழ்த்தினார்.
தலைமை ஆசிரியர் அறையில் காவல்துறை ஆய்வாளரும் , அவருக்கு பக்கத்தில் அமிர்தலிங்கம் வாத்தியாரும் நாற்காலிகளில் அமர்ந்திருந்தனர்.
அவர்களுக்கு எதிரே ஜெயந்தன் பயத்துடன் நடுங்கியபடி நின்று கொண்டிருந்தார்.
“ஐயா இவர் செஞ்ச காரியம் மன்னிக்க முடியாத அயோக்கியத்தனம். நல்லாசிரியர் விருது வாங்கின உங்களை அவமானப்படுத்தணும்னு திட்டம் போட்டிருக்கார். இவரை ஒரு ஆறு மாசம் சிறையில வைக்கட்டுமா?” என்று வாத்தியாரிடம் கேட்டார் ஆய்வாளர் பாஸ்கரன்.
அமிர்தலிங்கம் மெல்லிய புன்னகையுடன், “வேண்டாம் பாஸ்கரன். சிறைத் தண்டனை எல்லாம் தேவையில்லை. ஏற்கனவே இந்த ஊர் பொதுமக்கள் இவருக்கு நல்லா அடி கொடுத்து இருக்காங்க. இவரை இப்ப பாக்கவே ரொம்ப பாவமா இருக்கு. . ஆய்வாளர் தம்பி. பாவம், இந்த ஜெயந்தன். இவர் ஏதோ ஒரு ஆத்திரத்துல தெரியாம செய்துட்டார். அவங்க ரெண்டு பேரோட உடம்பும் இப்ப ரொம்ப மோசமா இருக்கு. அத போய் முதல்ல சரிப்படுத்த சொல்லுங்க. வேற தண்டனை எல்லாம் வேண்டாம்,” என்று குச்சி வாத்தியார் கனிவுடன் சொல்ல கூட்டம் முடிவடைந்தது. ஆய்வாளர் முதல் வந்திருந்த அனைவரும் பள்ளியை விட்டு மெல்ல வெளியேறினர்.
பள்ளிக்கூடம் முடிந்த பிறகும் ஜெயந்தனும் அவனது மகனும் தலைமையாசிரியர் அறைக்கு முன்பாக அவருக்கு நன்றி தெரிவித்து விட்டு செல்வதற்காக நின்று கொண்டிருந்தார்கள். நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக இருக்கும் குச்சி வாத்தியார் எனப்படும் அமிர்தலிங்கம் ஆசிரியர், அவர்கள் இருவரையும் உள்ளே அழைத்தார். அவர்கள் இருவரையும் பார்த்து அவர்களுக்கு ஒரு மாதம் கெடு விதித்தார். அதன் பிறகு அவரை வந்து பார்க்கச் சொல்லிவிட்டு அவர் தனது வேலையை பார்க்க ஆரம்பிக்க, ஜெயந்தனும் அவரது மகனும் தங்கள் வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர் .
அடுத்த 35 நாட்களுக்குப் பிறகு, ஒரு மாலைப் பொழுதில் ஜெயந்தன் அந்த நடுநிலைப் பள்ளியில் தோட்டங்களுக்கு தண்ணீர் ஊற்றும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தான். அப்போது தோட்டத்தில் புதிதாய் பூத்திருந்த சில ரோஜா பூக்கள் அவனைப் பார்த்து கண் சிமிட்டி கொண்டிருந்தன.
![]() |
எழுத்தாளர் பற்றிய குறிப்புகள்: பெயர்: கா. ஆசைத்தம்பி,M.A.,M.Sc.,M.Ed.,M.Phil., புனைப்பெயர்: முத்தமிழ்ப் பித்தன் இதுவரை வெளியிட்டுள்ள நூல்கள்: 1. English for Indian Pupils (2003) 2.மாண்புமிகு மாணவர்கள் (2019) (தொகுப்பு நூல்) 3.எண்பதுக்கு எண்பது (2022) (தொகுப்பு நூல்) 4.இசையின் எதிரொலிகள் சிறுகதைகள்(2025) இதுவரை (15.12.25) மின் இதழ்களில் வெளி வந்துள்ள எனது சிறுகதைகள்: 1. மாமோய் (மயிர்) 2. கருப்பு நிறத்தில் ஒரு மின்னல் (மயிர்) 3. ஆலமரத்தடியில் ஒரு அழகி (மயிர்) 4.…மேலும் படிக்க... |
