கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 5, 2026
பார்வையிட்டோர்: 1,523 
 
 

(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சூரியன் மறையும் நேரம்!

அந்தக் கிராமத்துச்சிறுமிகள், கோயிலின் அருகே யுள்ள திறந்த வெளியில் விளையாடிக்கொண்டிருந்தனர். சிறிது தூரத்திலிருந்து ஒரு மரத்தடியில் நின்றபடி ஊர்மிளா அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

சிறுமிகள் விளையாடி முடிந்ததும், அந்த மரத்தடிக்கு வந்து பேச ஆரம்பித்தனர். அக்கிராமத்திற்குப் பெரிய நாயகி என்னும் சிறுமி புதிதாக வந்திருந்தாள். அந்தக் கிராமத்துச் சிறுமிகளுக்கு ஏழை, பணக்காரர் என்னும் வித்தியாசமே இல்லை. எல்லோரும் ஒன்று கூடிவிளையாடுவார்கள். பணக்கார வீட்டுச் சிறுமிகள் கொண்டு வரும் தின்பண்டங்களை ஏழைச் சிறுமிகளுக்கும் பங்கிட்டுத் தருவார்கள். மொத்தத்தில் குடிசையில் வாழும் குழந்தைகளும், மாடியில் உலாவும் குழந்தைகளும் ஒன்றாக, ஒற்றுமையாக வாழ்ந்தார்கள்.

பெரியநாயகி அன்றுதான் கிராமத்திலிருந்த தன் அத்தை வீட்டுக்கு வந்திருந்தாள். அதனால் அவளுக்கு மற்ற சிறுமிகளை ஒருத்தி அறிமுகப் படுத்தி வைத்தாள். ‘இவள் இன்மொழி! சின்ன பண்ணைக்காரர் மகள். இவள் செங்கமலம், சேரியிலிருப்பவள்’ – இப்படி அங்கிருந்தவர்களை யெல்லாம் அறிமுகப்படுத்தினாள்.

பெரிய நாயகி முகத்தைச் சுளித்தாள். “ஐயையே! சேரிப் பெண்களோடா நீங்கள் சேர்ந்து விளையாடுகிறீர்கள்! அவர்களைத் தொடுவதுகூடப் பாவம்” என்று கூறிக்கொண்டே முகத்தைச் சுளித்தாள்.

அந்தக் கிராமத்துச் சிறுமிகள் இதைப் போன்ற சொற்களைக் கேட்பது இதுதான் முதல் தடவை. அவர்களில் யாருக்குமே என்ன பதில் சொல்வ தென்று தெரியவில்லை. ஆனால், ஊர்மிளா மட்டும் அவர்களுக்குச் ‘சுடச்சுட’ பதில் சொல்ல வேண்டும் என்று விரும்பினாள். ஆனால், சொல்லவில்லை.

ஊர்மிளா மிக அழகான பெண். நல்ல ஆடைகளை அணிந்திருந்தாள். பெரிய பண்ணைக்காரரின் ஒரே செல்ல மகள். இவற்றை அறிந்ததும் பெரிய நாயகி அவளைச் சிநேகம் செய்து கொள்ள விரும்பினாள். “ஊர்மிளா, நீ எந்த வகுப்பில் படிக்கிறாய்?” என்று கேட்டாள். ஊர்மிளா பதில் சொல்லவில்லை, “நீயுமா இந்தச் சேரிப் பெண்களோடு விளை யாடுகிறாய்?” என்று மீண்டும் கேட்டாள். பதிலில்லை!

“என்ன ஊர்மிளா! நான் கேட்கிறேன். பேசாமலிருக்கிறாயே!” என்று கேட்டாள் பெரிய நாயகி. அப்போதும் ஊர்மிளா மௌனமாக இருந்தாள். ‘பண்ணைக்காரரின் பெண் என்னும் கர்வத்தில் ஊர்மிளா பேசவில்லை’ என்று நினைத்தாள், பெரிய நாயகி. உடனே அவளுக்குக் கோபம் வந்தது.

“ஏனடியம்மா! ஊமை மாதிரி வாயை மூடிக் கொண்டு நிற்கிறாய்? பேசினால் என்ன? வாயிலுள்ள முத்துக் கொட்டிவிடுமா?” என்று கேட்டாள்.

உடனே அவள் அருகில் இருந்த ஒருத்தி, பெரிய நாயகியின் காதில் ஏதோ சொன்னாள். உடனே பெரிய நாயகி அலட்சியமாக ஊர்மிளாவைப் பார்த்தாள்.

“ஓ! நீ ஊமையா! ஊமை ஊரைக் கெடுக்கும், பெருச்சாளி வீட்டைக் கெடுக்கும். என்ன ஊமை! அப்படி முறைத்துப் பார்க்கிறாயே!” என்றாள் பெரிய நாயகி.

இதுவரை பேசாமல் நின்ற ஊர்மிளாவின் கண்களில் நீர் பெருகியது. ‘மளமள’ வென்று கண்ணீர் சிந்தினாள்.

பெரிய நாயகி, “அடியம்மா, நீலிக்கு நினைத்தாலே கண்ணீர் என்பார்கள். அது உன் விஷயத்தில் உண்மைதான்” என்றாள்.

ஊர்மிளா அங்கிருந்து ஓடினாள். கண்களி லிருந்து பெருக்கெடுத்தோடும் கண்ணீரைத் துடைக்காமல் ஓடினாள். அவள் காதில் யாரோ ஓயாமல் ‘ஊமை ஊரைக் கெடுக்கும்’ என்று கத்துவது போலிருந்தது!

மரத்தடியி லிருந்த சிறுமிகள் பெரிய நாயகி பேசியதை நினைத்து வருந்தினர். ஆனால், பெரிய நாயகி ‘ஊமைப் பெண் பொல்லாதவள்’ என்று ஆரம்பித்து ஊமையைப் பற்றி இல்லாத கதைகளையெல்லாம் சொன்னாள். அவற்றைக் கேட்க விரும்பாமல் சேரிச் சிறுமிகள் எழுந்து போய்விட்டனர்.

***

ஊர்மிளா, அழகி, அன்புடையவள், மிகப் பெரிய பண்ணைக்காரரின் பெண். ஆனால்….அவள் ஊமை! உலகில் எத்தனையோ பேர் வீண் பேச்சுப் பேசிக் காலம் கழிக்கிறார்கள். அவர்களைப் போல் ஊர்மிளா செய்ய முடியாது! ‘சும்மா இருப்பதே சுகம்’ என்ற தத்துவத்தின் இலக்கணமாக அவள் பேச முடியாமல் சும்மா இருந்தாள்.

அவள் வாயைத் திறப்பாள். உதடுகள் அசை யும். ஒலியும் எழுப்பும். ஆனால், அது பொருள் உள்ளதாக இருக்காது. ஏதோ ஒரு சப்தமாக இருக் கும். ஊர்மிளா ஊமை! ஆதிகாலத்தில் மொழி தோன்றுவதற்கு முன் மக்கள் இப்படித்தானே, ஊமைகளாய் இருந்தனர். ஆனால், இன்றும் அதைப் போல பேச முடியாத ஊமைகள் ஏனோ தோன்றுகின் றனர். பிறர் ஏளனத்திற்கு ஆளாகின்றனர்.

ஊர்மிளாவைத் திட்டுங்கள், அழமாட்டாள். அவளை உதையுங்கள்; ஒரு துளி கண்ணீர்கூடச் சிந்தமாட்டாள். அவளிடமிருப்பவற்றைப் பறித்துக் கொண்டு பறந்து செல்லுங்கள்; பதைபதைக்க மாட் டாள். ஆனால்… ஆனால்… அவளை ‘ஊமை’ என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள். சொன்னால், பதை பதைப்பாள் ; அழுவாள் ; கண்ணீர் சிந்துவாள்.

பிறக்கும்போதே ஊமையாகப் பிறந்துவிட்டாள். இதற்கு அவள் என்ன செய்வாள்? இதை உணரா மல் சிலர் அவளைக் கேலி செய்தார்கள். சிலர் ஊமை என்று கூறி அவள் உள்ளக் கண்ணாடியை உடைத்துத் தூள் தூளாக்கி வந்தனர். அந்தச் சிலருக்குத் தலைமை வகிக்க வந்தாள் பெரிய நாயகி!

***

அந்தக் கிராமத்தில் ஏழை பணக்காரர் என்ற வித்தியாசம் இல்லாமல் சிறுமிகள் சேர்ந்து பழகி வந்தனர். இது கொஞ்ச காலத்துக்கு முன்னால். ஆனால் இப்போது…? பெரிய நாயகி வந்த பிறகு பணக்காரப் பெண்கள் ஏழைச் சிறுமிகளுடன் சேருவ தில்லை; அவர்களுக்கு எதுவும் கொடுப்பதுமில்லை.

ஒன்றுபட்ட ஊர் இரண்டானது. மாலையில் ஏழைச் சிறுமிகள் தனியே விளையாடினர். பணக்காரப் பெண்கள் தனியே விளையாடினர். ஊர்மிளா பணக்காரப் பெண்தான். ஆனால், அவள் மட்டும் ஏழைகளுடன் சேர்ந்து விளையாடினாள். தினமும் முறுக்கோ, சீடையோ கொண்டு வருவாள். எல்லா ஏழைச் சிறுமிகளுக்கும் தருவாள்.

பணக்காரச் சிறுமிகளும் தினமும் ஏதாவது கொண்டு வருவார்கள். ஆனால், பெரிய நாயகியைத் தவிர!

பெரியநாயகி பிறர் கொண்டுவருவதைத் தின்று கொழுத்து வந்தாள். அத்துடன், ஊர்மிளாவை ஊமையென்று கிண்டல் செய்யும்படி மற்றவர்களையும் தூண்டிவிட்டாள். ஏழைப் பெண்களிடம் எரிந்து விழக் கற்றுக் கொடுத்தாள்.

இதனால் தினமும் ஊர்மிளா கண்ணீர் விட்டாள். நடப்பதை வீட்டிலும் சொல்வதில்லை. சொல்லவும் முடியாது. சைகை மூலம் பேசவே அவள் வெட்கப் பட்டாள். வீ தியில், விளையாடுமிடத்தில், ஆற்றங் கரையில், அரசமரத்தடியில், எங்கும், ‘ஊமை ஊரைக் கெடுக்கும், பெருச்சாளி வீட்டைக் கெடுக்கும்’ என்ற பழமொழி கேட்கத் தொடங்கியது. ஊர்மிளா குமுறி னாள்; கண்ணீர் விட்டாள். அதைத் தவிர வேறொன்றும் செய்யவில்லை.

ஒரு நாள் மாலை.

கோயிலின் அருகில் இருந்த விளையாட்டு மைதானத்தில், ஒரு புறத்தில் ஏழைப் பெண்களும், மறு புறத்தில் பணக்காரப் பெண்களும் விளையாடிக் கொண்டிருந்தனர்.

பணக்காரப் பெண்கள் கூட்டத்திலிருந்த இன் மொழி திடீரென்று, “ஐயோ, என் மோதிரத்தைக் காணவில்லையே!” என்று கத்தினாள். உடனே விளையாட்டு நின்றது. எல்லோரும் மோதிரம் கீழே விழுந்து கிடக்கிறதா என்று தேடினர். எங்கும் கிடைக்கவில்லை.

“புது மோதிரம். நேற்றுத்தான் என் அப்பா பட்டணத்திலிருந்து வாங்கிக்கொண்டு வந்தார். காணவில்லை என்றால் அடிப்பாரே!” என்று அழுதாள், இன்மொழி.

பெரியநாயகி, இன்மொழியிடம், “நான் இங்கு வரும்போது அந்தச் சேரிக்கழுதை செங்கமலம், இங்கு குனிந்து எதையோ எடுத்துக் கொண்டு போனதைப் பார்த்தேன்” என்றாள்.

உடனே ஒருத்தி போய், செங்கமலத்தை அழைத்து வந்தாள். செங்கமலத்துடன் ஏழைச் சிறுமி களின் கூட்டமும் சேர்ந்து வந்தது. பெரிய நாயகி செங்கமலத்தின் மீது திருட்டுக் குற்றம் சாட்டி விசாரணை நடத்தினாள்.

“செங்கமலம், அந்த மோதிரம் எங்கே?”

“எந்த மோதிரம்?”

“அதுதான் இன்மொழியின் மோதிரம். இங்கிருந்து எடுத்துச் சென்றாயே!”

“நானா? இல்லவே இல்லை! நான் மோதிரத்தைப் பார்க்கவேயில்லை ”

“அப்படிச் சொல்லு! அப்போதுதானே உன்னை விட்டுவிடுவார்கள்! கழுதை! நீ வரும்போது இங்கே குனிந்தாயா?”

“ஆமாம், குனிந்தேன்.”

“குனிந்து எதை எடுத்தாய்? மோதிரத்தைத் தானே!”

“இல்லை! இல்லை! இங்கே ஒரு வேர்க்கடலை கிடந்தது. அதைத்தான் நான் எடுத்தேன். மோதிரத்தை நான் பார்க்கவே இல்லை.”

செங்கமலம் அழுதபடியே கூறினாள். பெரிய நாயகி சிரித்தபடியே, “இன்மொழி, மோதிரத்தைத் திருடிக்கொண்டு வேர்க்கடலை என்கிறாள். இவளை உதைத்தால்தான் உண்மையைக் கூறுவாள்” என்றாள்.

“ஆமாம், உதைக்கவேண்டும்” என்றனர் சில பணக்காரச் சிறுமிகள்.

“மரியாதையாகச் சொல்லு. எங்கே மோதிரம் ?'” என்று கேட்டுக்கொண்டே செங்கமலத்தின் கன்னத்தில் ஓர் அறை விட்டாள்.

செங்கமலம், “ஐயோ!” என்று அலறினாள்.

இதுவரை ஏழைப் பெண்களின் கூட்டத்தில் நின்று நடந்ததைக் கவனித்துக் கொண்டிருந்த ஊர்மிளா விற்கு மேலும் பொறுத்துக் கொண்டிருக்க முடிய வில்லை. செங்கமலம் மிகவும் நல்லவள் என்பதும், அவள் மோதிரத்தை எடுத்திருக்க மாட்டாள் என் பதும் ஊர்மிளாவுக்குத் தெரியும்.

அதனால் அவள் மேலும் அடிக்கச் சென்ற பெரிய நாயகியின் அருகிலே ஓடினாள். அவளைத் தடுத்து நிறுத்த முயன்றாள். உடனே பெரிய நாயகியின் கோபம் ஊர்மிளா மீது திரும்பியது. அந்தக் கோபத் ல், “ஓ! இந்தத் திருட்டில் உனக்குக்கூடச் சம்பந் தம் உண்டா? அது தானே திருடிக்குப் பரிந்து கொண்டு வருகிறாய் ! ஏய் ஊமை, மோதிரம் எங்கே? உன்னிடம் கொடுத்திருக்கிறாளா ?” என்று ஏளனமாகக் கேட்டாள்.

அவ்வளவுதான்! ஊர்மிளாவின் கோபம் எல்லையைக் கடந்து விட்டது.

உடனே பெரியநாயகியின் மீது பாய்ந்தாள். நாலு அறை கொடுத்து அவளைப் பிடித்துத் தள்ளினாள். பெரிய நாயகி தொப்பென்று சிறிது தூரத்தில் போய் விழுந்தாள். அப்போது அவள் பாவாடையில் ஒளித்து வைத்திருந்த ஏதோ ஒன்று கீழே விழுந்தது. அனைவரும் அதைப் பார்த்தனர்.

அது என்ன? வேறு எதுவுமில்லை; இன்மொழியின் தங்க மோதிரமேதான்!

குட்டு வெளிப்பட்டதும் பெரிய நாயகிக்கு அவ்விடத்தில் இருக்கவே பயமாயிருந்தது. உடனே அங்கிருந்து தலை தெறிக்க ஓடினாள்.

 

ஊர்மிளா பணக்காரச் சிறுமிகளைப் பார்த்தாள். ‘செங்கமலத்தின் மீது குற்றம் சாட்டினீர்களே; பார்த்தீர்களா நடந்ததை! இனியாவது இப்படிப் பட்ட ஏழைப் பெண்களுக்குத் ‘திருட்டுப் பட்டம் ‘ கட்டாதீர்கள்’ என்று ஊர்மிளா கூறவில்லை. ஆனால், அவளது பார்வை கூறியது; கண்கள் பேசின. அதுவே அவர்களுக்குப் போதுமானதாக இருந்தது. இன்மொழி செங்கமலத்திடம் மனமார மன்னிப்புக் கேட்டாள். மற்றவர்கள் ஊர்மிளாவை ஊமை என்றதற்காக வருந்தினர்; மன்னிப்புக் கேட்டுக் கொண்டனர். இரண்டு பட்ட ஊர் மீண்டும் ஒன்றானது. ஊர்மிளாவை ஊமை ஊர்மிளா என்று எவருமே கூப்பிடுவதில்லை. திரும்பவும் எல்லோரும் சேர்ந்து விளையாடினர். ஆனால், பெரிய நாயகி அன்றே கிராமத்தைவிட்டு, தன் ஊருக்குப் போய்ச் சேர்ந்தாள்.

பெருச்சாளி பெரியநாயகி வீட்டைக் கெடுக்க வில்லை; ஊரையே கெடுத்தாள்! ஆனால், ஊர்மிளா ஊரைக் கெடுக்கவில்லை; இரண்டுபட்ட ஊரை ஒன்றாக்கினாள்!

– அன்புத் தாத்தா (சிறுகதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 1957, பாரி நிலையம், சென்னை.

முனைவர் பூவண்ணன் பூவண்ணன் (வேள்ள தாமோதர கோபாலகிருஷ்ணன்; பிறப்பு: 5 செப்டம்பர் 1932 - இறப்பு: ஜனவரி 11, 2013) கவிஞர், எழுத்தாளர், நாடக ஆசிரியர். தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். சிறார்களுக்காக நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். தமிழ் இலக்கியம், சிறார் இலக்கியம் குறித்து ஆராய்ந்து வரலாற்று நூல்களைப் படைத்தார். தனது இலக்கியப் பணிகளுக்காகப் பல்வேறு விருதுகளைப் பெற்றார். பூவண்ணன் - Tamil Wiki நேர்காணல்: டாக்டர் பூவண்ணன் (2005) http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=1072 பூவண்ணன்,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *