ஊரு ரெண்டு பட்டால்




“தொழிலாளர்கள் ஒற்றுமை ஓங்குக!”
“வேலை கொடு வேலை கொடு! நிர்வாகமே வேலை கொடு!”
“போராடுவோம் போராடுவோம், இறுதிவரை போராடுவோம்!”

-என கோஷங்கள் அதிர்ந்தன. அந்த தொழிற்சாலையின் பிரதான வாயிலில் நூறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கொட்டாகை போட்டு அமர்ந்திருந்தனர்.காலை பத்து மணிக்கு நிர்வாக இயக்குனரின் சொகுசு கார் உள்ளே வந்ததும் ஹச் ஆர் என்று எல்லோராலும் அழைக்கப்படும் தொழிலாளர் மேலாண்மை அதிகாரி ஓடி வந்து தலைவர், செயலாளர், மற்றும் பொருளாளர் என மூவரையும் அழைத்துக் கொண்டு நிர்வாக இயக்குனர் அலுவலக அறையில் அமர வைத்தார்.தொழில் வளாகத்திற்குள் இருக்கும் ராஜ கணபதி கோயிலில் வழிபட்டுவிட்டு பிரசாதங்களை வாங்கிக் கொண்டு தன் இருக்கையில் வந்து அமர்ந்தார் நி.இயக்குனர்.
“உங்களுக்கு எல்லா சலுகையும் சரியாக கிடைக்கும் போது, என்ன திடீர் போராட்டம்”-சற்று அதட்டலாக வந்து விழுந்தது நி.இயின் வார்த்தைகள்.
“நாங்க மேல் சாதிக்காரங்க. காலனிகாரங்களோடு சமமா எங்கள பாக்காதீங்க”-தலைவர்.
“………………………..”
“கேண்டீன்ல எங்களுக்குனு தனியா இடம் ஒதுக்கனும்.அவங்களோட சமமா உட்காந்து சாப்பிட முடியாது”-செயலாளர்.
“………………………”
“நைட் ஷிப்டுல எங்க ரெஸ்டு ரூம்ல அவிங்க வந்து படுக்கிறாங்கே.எங்களுக்கு அது பிடிக்கல”-பொருளாளர்.
“……………………….”
“நாங்க கம்பெனிக்காக எங்க பூர்வீக நெலத்த குடுத்திருக்கோம்.காலனிகாரங்க எங்ககிட்ட கூலியா வேல செஞ்சவங்கதான்.எங்களுக்கு சமமா அவுங்களுக்கும் வேல தர்ரீங்க….!”-என்றெல்லாம் சொல்லிவிட்டு நி.இயக்குனரின் இருக்கையின் பின் சுவற்றில் தொங்கும் ராகவேந்திர அய்யங்காரின் புகைப்படத்தை பார்த்தார் தலைவர்.
“கேட்டுக்கோங்க! கம்பனிக்குள்ள வந்துட்டா எல்லோரும் சமம்தான். சாதி வேற்றும பாக்க முடியாது.தகுதி அடிப்படையிலதான் உயர்வு தாழ்வு இருக்கும். விருப்பம் இருந்தா வேல செய்யுங்க இல்லேன்னா இன்னைக்கே உங்களுக்கு செட்டில் மெண்ட் தர்றேன். வாங்கிட்டு போயிடுங்க!”-நி.இ.
“அவனுங்க சுத்தமில்லாதவனுங்க;அசிங்கமானவனுங்க!”-என்று மூன்று பேரும் உரத்து சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியே வந்தனர்.
“போராடுவோம்! போராடுவோம்!இறுதிவரை போராடுவோம்”-முன்பைவிட சற்று உக்கிரமாக முழக்கம் கேட்டது.
“அண்ணே, இப்படியே போனா நம்மள வேலயவிட்டு அனுப்பிடுவாங்க.நம்ம பொண்டாட்டி பிள்ளைங்க தெருவுலதான் நிக்கும்”
“……………………….”
“அண்ணே, இதுக்கு ஒரு ஐடியா வச்சிருக்கேன் அதுபடி செய்யலாமா?”-கூட்டத்தில் ஒருவன் கூறிவிட்டு,தலைவர், செயலாளர், பொருளாளர்களின் காதுகளில் ஓதினான்.
“யாருக்கும் தெரியாம செஞ்சிரு.முள்ள முள்ளாலதான் எடுக்கனும்.-மூவரும் ஒரே குரலில் சொன்னார்கள்.
“நாமெல்லாம் வெளியே இருக்கிறோம். அவிங்க மட்டும் உள்ளே வேல பாக்குறாங்கே!” கறுவிக் கொண்டார்கள்.
இரவு கட்சிதமாக முடிக்கப்பட்ட அந்த செயல்.அந்த நிறுவனத்தில் பணியாற்றும் அத்தனை பேர்களின் கட்செவிகளுக்கும் ‘ஒலி ஒளி’காட்சியாக அனுப்பப்பட்டது.
மறுநாள் காலை அந்த துண்டுக் காட்சிகளால் தொழிற்சாலைக்குள் கலவரம் நடந்தது. டேபிள்கள், சேர்கள் உடைக்கப்பட்டன.இயந்திரங்களும் அடித்து நொறுக்கப்பட்டன.காலனிகாரர்களின் மனசும் உடைந்து நொறுங்கிப் போனது.
தொழிற்சாலையின் தரையை துடைக்க பயன்படும் சோப்பு திரவத்தை ஒரு ஆணுறையில் நிரப்பி தொழிலாளர்களின் ரெஸ்டு ரூமில் போட்டு அதை வீடியோ காட்சியாக எடுத்து வைரலாக்கி இருந்தார்கள். இது போன்ற மோசமான செய்கை உள்ள காலனிகாரர்களை எங்களுடன் சமமாக பார்க்காதீர்கள் என்ற கோஷம் அதில் இருந்தது.
அந்த தொழிற்சாலை மூடப்பட்டு ஒரு வாரம் ஆகியிருந்தது. உள்ளூர் தொழிலாளர்கள் அனைவரையும் பணி நீக்கம் செய்திருந்தார்கள்.ஒரு வாரத்திற்கு பின் எப்போதும் போலவே தொழிற்சாலை ஓடிக் கொண்டிருந்தது.எல்லோரும் ஆச்சரியமாக பார்த்தார்கள். பணி நேரத்தை அதிகமாக்கி, ஊதியத்தை குறைத்து, எந்தவித சலுகைகளுமின்றி இருபத்திநான்கு மணி நேரமும் ஓடிக் கொண்டிருந்தது தொழிற்ச்சாலை…
வட மாநில தொழிலாளர்களை வைத்து!
– டிசம்பர் 2023 புதியகோடாங்கி இதழில் பிரசுரமானது.