உலகமெல்லாம் வியாபாரிகள்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 5, 2025
பார்வையிட்டோர்: 2,286 
 
 

(1978ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 7-8 | அத்தியாயம் 9-11

அத்தியாயம்-9

அடுத்தநாள் மீனா குழந்தையுடன் வந்திருந்தாள் தமக்கை யைக் கூட்டிப்போக. இவளையும் திடீர்த் திருமணத்திற்கு ஆயத்தம் செய்கிறார்கள் என்பதை மீனா எப்படி எடுத்துக் கொள்வாள்.தமக்கை மாதிரி கோழைத்தனமாக ஒப்புக்கொள்வாளா? அல்லது…

உஷா கேட்க நினைத்தாள். ஆனாலும் சகுந்தலாவுக்கு முன்னால் பிரச்சனையைத் தொடங்க விருப்பமில்லை. இரவிரவாகக் கதைத்து அலுத்துப் போய் இருந்தாள். அத்தோடு சகுந்தலா குற்றம் சாட்டுவாள் தாய் தகப்பனை மீறிக் கல்யாணம் செய்து என்ன சுகம் கண்டுவிட்டாய் என்று. 

தன் கல்யாண வீட்டுக்குரிய ஆயத்தங்களை மீனா இப்பொழுதே செய்ய யோசிக்கிறாள் என்பது தெரிந்தது அவளின் பேச்சிலிருந்து. தாய் தகப்பனுக்குச் சொல்லாமல் கொள்ளாமல் செய்யப்போகும் கல்யாணத்தைப் பற்றி மீனா துக்கப்பட வில்லையா? உஷாவும் சகுந்தலாவும் இதுபற்றி இரவில் கதைத்தாலும் நேரடியாக மீனாவைக் கேட்டுப் புண்படுத்த விருப்பமில்லை. உஷா வீட்டிலிருந்து தான் ‘றெஜிஸ்ரார் ஓவ்வீசுக்கு வெளிக்கிட்டுப் போகமுடியுமா என்று மீனா கேட் டாள்? தாராளமாகத் தன் உதவி கிடைக்கும்’ என்றாள் உஷா. வாழ்விழந்த பெண்களில் விழித்துக்கொண்டு கல்யாண ஆயத்தம் செய்வதை அம்மா எவ்வளவு வெறுப்பாள் என்று சகுந்தலாவுக்குத் தெரியும். அதுவும் இவ்வளவு கூத்துமாடிக் களைத்துக் கல்யாணத்தைக் குழப்பிப்போட்டு இருக்கும் உஷாவின் உதவியைக் கேட்டாலே தாய் பத்திரகாளி போல் கத்தினாலும் ஆச்சரியமில்லை. 

எதையும் யோசித்துப் பிரயோசனமில்லை. ஏதோ நடப்பது நடக்கட்டும் என்று முடிவு கட்டினாள் சகுந்தலா. தன்னால் ஏதும் முடிவுகட்டத் தெரியாதவர்கள்தான் சாத்திரத்திலும், விதியிலும் நம்பிக்கை வைப்பார்கள் என்று உஷா சொல்லலாம். விம்பிள்டனுக்கு வந்துகொண்டிருக்கும் வழியில் தான் சிதம்பரநாதன் ஆட்களுக்குக் கல்யாணம்பற்றிச் சொல்ல வேண்டும் என்று மீனா சொன்னாள். இரவு அவசரப்பட்டு நடுச்சாமத்தில் கார்த்திக்குப் போன் பண்ணியதை நினைத்துச் சங்கடப்பட்டாள் சகுந்தலா. தான் கார்த்தியுடன் கதைக்க வில்லை என்று காலையில் உஷாவுக்குச் சொன்னாள். 

மீனாவுடன் போய் கார்த்தியின் வீட்டில் சில்வியாவைச் சந் திக்க ஏதோ செய்தது மனம். ஏன் நான் எதற்கும் பயப்பட வேண்டும்; என்ன பிழை செய்துவிட்டேன்? என்று தன்னைத் தானே சமாதானம் செய்துகொண்டாள். 

மீனா குழந்தை கீதாஞ்சலியுடன் மகிழ்ச்சியாகக் கதைத்துக் கொண்டிருந்தாள். அருமைத் தங்கையின் எதிர்காலம் தன்னுடையதுபோல் இருண்டதாய் இல்லாமல் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டுமென மனம் பிரார்த்தித்தது. 

ஓவர்கோட்டுக்குள் ஒழிந்து கிடந்த உருவங்கள் அரைகுறை ஆடைகளுடன் தெருவை நிறைத்துக்கிடந்தன. 

ஒரு உயிர் மிச்சமில்லாமல் எல்லோரும் சந்தோஷமாய் இருப் பதுபோல் இருந்தது சிரித்த முகங்களைப் பார்த்தபோது. உலகத்தில் என்னைத்தவிர எல்லோரும் சந்தோஷமாகத் தானே இருக்கிறார்கள். எனக்கு மட்டும் என்ன குறை. சார்டட் எக்கவுண்டன் புருஷன், அழகிய குழந்தை. அருமை யான வீடு, அலங்காரமான தளபாடங்கள் இதைவிட சந்தோ ஷத்திற்கு வேறு என்ன தேவை? 

நட்டிய கதவுக்கு அப்பால் கார்த்தியின் சோர்ந்த முகம் தெரிந்தது. மீனாவையும், சகுந்தலாவையும் கண்டதும் வழக்கம் போல் சிரிப்பு வரவில்லை முகத்தில். பார்வை வரண்டு கிடந் தது. மீனா தான் இருந்த மகிழ்ச்சி பிரவாகத்தில் கார்த்தியின் சோர்வைக் கவனிக்கவில்லை. ஆனால் நேற்றுப் பின்னேரம் கண்ட கலகலவென்ற முகத்துக்கும் இன்று காணும் சோர்ந்த முகத்துக்கும் உள்ள வித்தியாசம் சட்டென்று விளங்கியது சகுந்தலாவுக்கு. என்ன நடந்தது, ஏதும் தகராறா போன கூட்டத்தில் தகப்பன் ஏதும் செய்திருப்பாரா? மீனாவுக்கு முன்னால் அதிகம் கதைக்கவும் விரும்பவில்லை. அவள் வீடும் அமைதியாகக் கிடந்தது. 

“எங்கே போய்விட்டான் சிதம்பரன்” மீனா கேட்டாள். 

”சிதம்பரனும், சலீமும் பற்றசியில் ஒரு இன எதிர்ப்புக் கூட் உத்துக்குப் போய் விட்டார்கள்” கேள்விக்கு மறுமொழி வந்தது அவனிடமிருந்து. 

“நீங்கள் போகவில்லையா” ஆச்சரியமாக இருக்கிறது மீனா கேட்டாள். “சுகமில்லை போகவில்லை” கார்த்தி ஏனோ தானோ என்று பதில் சொன்னான். 

“சில்வியா எங்கே” மீனா களங்கமில்லாமல் கேட்டாள். 

”போய்விட்டாள். வீட்டை விட்டுப் போய்விட்டாள். ஒரே யடியாகப் போய்விட்டாளோ தெரியாது? திரும்பிவரலாம் யார் கண்டார்கள்.” கஷ்டப்பட்டு அவன் வேடிக்கையாகச் சொல்ல முயலுகிறான் என்பது குரலில் தெரிந்தது. 

சகுந்தலாவுக்கு ஏதோ வயிற்றைக் குடைவது போல் இருந்தது. ஏதோ சொல்லியது மனதில் தான்தான் காரணமென்று அவனின் முகத்தைப் பார்க்கத் தைரியமில்லாமல் வேறு எங்கோ பார்த்தாள். “ஏன் வந்தேன் லண்டனுக்கு.” எழும்பி ஓடவேண்டும் போல் இருந்தது அவளுக்கு. 

”ஐயம் சொறி, கார்த்தி. என்ன நடந்தது சில்வியாவுக்கு? சின்ன விடயங்களுக்குச் சண்டைபிடிக்கிறவள் இல்லையே?” வருத்தம் தொனித்த குரலில் சொன்னாள் மீனா. 

“என்ன நடந்ததோ தெரியாது. பெரிய விடயத்தில் தான் சண்டை பிடித்துக்கொண்டு போய்விட்டாள். போவதற்காக ஒரு சாட்டுக்குச் சண்டை பிடித்தாளோ தெரியாது. எனக்கு அக்கறையுமில்லை. அதிருப்திப்பட்டு ஓடிக்கொண்டிருப்பவர் களுக்குப் பின்னால் எல்லாம் அலைந்து திரிந்து வாழ்க்கை யைச் செலவழிக்கத் தயாரில்லை. தமிழ்ப்படங்களில் வேண்டு மானால் ஓடிப்பிடித்து விளையாடட்டும். எனக்கு நேரமில்லை.” குரலில் கண்டிப்புடன் சொன்னான். சில்வியாவிலா கோபம் அல்லது…. 

“திரும்பி வரமாட்டாள் என்றா நினைக்கிறீர்கள்” மீனா அவ நம்பிக்கையுடன் கேட்டாள். 

“ஏன் அவளின் இடத்திற்கு அப்ளிக்கேஷன் போடப்போகிறீரோ” வழக்கம் போன்ற குறும்புத்தனம் குரலில் தெரிந்தது. 

“உங்களுக்கு ஒரே பகிடிதானா எல்லாரிட்டயும். அவள் தன்ர கல்யாணத்திற்கு சொல்ல வந்திருக்கிறாள்” முதற் தரம் வெடித்தாள் சகுந்தலா. 

”ஓ, சொறி மீனா. தகப்பனுக்குத் தகப்பனாய் நான் வந்து உம்மைத் தாரை வார்த்துக் கொடுக்கவா அன்ரனிக்கு’” மீனா விழுந்து விழுந்து சிரித்தாள் அவனின் குறும்புக்கு. 

“அப்பர் பேரின்பர் என்ன அமர்க்களம் செய்கிறாரோ தெரி யாது. அதற்கிடையில் காதும் காதும் வைத்தாற் போல் விஷயத்தை முடிக்கப் போகிறோம்” மீனா அவனைப்போல் வேடிக்கையாகச் சொன்னாள். 

“என்ன அமர்க்களம். யாரோ அப்பாவியை உன் தலையில் கட்ட கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறாராம்”. அவன் களங்க மில்லாமல் சொன்னான். மீனா திடுக்கிட்டுப் போய்ப் பார்த் தாள். 

“ஏதாகிலும் செய்வார் என்றுதான் யோசித்தன். உண்மையாகத்தான் செய்வார்போல் இருக்கிறது” மீனா பெருமூச்சுடன் சொன்னாள். 

“அம்மா காஸ் அடுப்பில் தலையைக் கொடுக்கிறேன் என்று ஆலாபரணம் வைக்கட்டும், அப்பா மார்பைப் பிடித்துக் கொண்டு அலறட்டும். நீர் மறுபேச்சுப் பேசாமல் மங்கள காரியத்துக்கு ஒப்புக் கொள்வீர்” 

சகுந்தலாவுக்குத் தெரியும் ஒவ்வொரு வார்த்தையும் தன்னைக் கிண்டல் செய்யத்தான் சொல்கிறான் என்று. ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது அவளுக்கு. 

“நான் சகுந்தலா இல்லை. அவர்கள் நாடகம் என்னிடம் பலிக்காது” மீனா கோபத்துடன் சொன்னாள். 

“எதற்கும் எங்களுக்குக் கல்யாணச் சாப்பாடு போட மறந்து விடாதேயும்” கார்த்திகேயன் சொன்னான். மீனா திரும்பி வரும்வரையும் முணு முணுத்துக்கொண்டே வந்தாள். 

சகுந்தலாவுக்குப் பயமாக இருந்தது வீட்டுக்குப் போய் ஏதும் நாடகம் நடக்கக்கூடாதே என்று. யாருக்கு வெற்றி, யாருக் குத் தோல்வி என்றில்லை பொருள். எந்தக் கூத்தையும் அவள் பார்க்கத் தயாராய் இல்லை. 

“மீனா அப்பாவுக்குத் தேவையில்லாதவர்கள் தேவையில்லாத கதைகளைக் கட்டிவிடுவார்கள் நம்பக்கூடாது.” சகுந்தலா சொன்னாள். தாய் தகப்பனிடம் கேட்டு அவர்களின் வாயால் உண்மை வெளிவரும் வரை தேவையில்லாத சண்டைகள் உண்டாவதை சகுந்தலா விரும்பவில்லை, 

சகுந்தலா எதிர்பார்த்ததுபோல் மீனா வீட்டுக்கு வந்ததும் வராததுமாக ஏதும் நடக்கவில்லை. தாய் வழக்கம் போல் தன் அருமையான சமையலில் ஈடுபட்டிருந்தாள். தகப்பன் தான் வழக்கம்போல் யாரையும் திட்டிக்கொண்டிருக்காமல் ஏதோ ரகசியம் பேசிக்கொண்டிருந்தார் தன் சினேகிதருடன். யார் கழுத்தையமுக்கத் திட்டம் போடுகிறார்? மீனா தமக்கையைப் பார்த்தாள். 

மீனாவின் கல்யாண விடயமாகவில்லை அவர்கள் ரகசியம் பேசிக்கொண்டிருத்தது. தமிழ்க்கலாச்சார சங்கம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். யாரை வெளியேற்றப் போகிறார்கள். இவர்களின் அரசியல் விவகாரத்தைப் பற்றிப் பேசாமல் விடுவது புத்திசாலித்தனம் என்றாள் மீனா. கார்த்திகேயனை வாய்க்கு வந்தபடி திட்டிக்கொண்டிருந்தவர் என்னவென்று இப்படி மௌனமாக இருக்கமுடியும். புலி பதுங்குவது பாயத்தானே? 

அடுத்தடுத்து இரண்டு மூன்று நாட்களாக எந்த விஷேசமுமில்லை. தாய் கூட வழக்கத்துக்கு மாறாக அமைதியாக இருந்தாள். 

சகுந்தலாவுக்கு மனதில் ஏதோ தைத்துக் கொண்டிருந்தது. ஏதோ மறைவாக நடப்பதாகத் தோன்றியது. மீனா வழக்கம் போல் வேலைக்குப்போய் வந்துகொண்டிருந்தாள். இனம் தரியாத பீதி மனதில் குடிபுகுந்திருந்தது சகுந்தலாவுக்கு. 

என் எல்லாரும் மௌனமாய் இருக்கிறார்கள். செய்கிறேன் வேலை பார் என்று திட்டிக்கொண்டிருந்தார் கார்த்தியை பற்றி. இப்போது கார்த்திகேயனைப்பற்றியும் பேச்சில்லை இவள் வெள்ளைக்காரனைச் செய்யப்போகிறாள் விடவா போகிறேன் மீனாவைப் பேசிக்கொண்டிருந்தார். ஒன்றிரண்டு நாட்களாக ஒரு கூச்சலுமில்லை. யாரைக் கேட்பது? 

உஷாவுடன் கதைப்பதானால் தாய் வீட்டில் இருக்கும் போது மனம்விட்டுக் கதைக்கமுடியாது பின்னேரங்களில். பகலில் உஷா வேலைக்குப் போய்விடுவாள். சிவனேசனிடமிருந்து கடிதம் வந்தது. தகப்பன், கெதியில் மீனாவின் விடயம் முடி வாகும் என்று போன் பண்ணியதாக எழுதியிருந்தான். தன் னில் நம்பிக்கையில்லை தாய் தகப்பனுக்கு என்று உடனே தெரிந்தது. மீனாவின் மனத்தைப் புத்திசொல்லி மாற்றக் கூப்பிட்ட சகுந்தலாவே மீனாவுடன் சேர்ந்து திரிவது அவர்களுக்கு சகுந்தலாவில் நம்பிக்கையில்லாமல் ஆக்கியிருக்கும். சிவனேசனுக்குச் சொன்னால் தனக்குச் சொல்லமாட்டான் என்று ஏன் நினைக்கிறார் தகப்பன்? சிவனேசனுக்குக்கூடச் சொல்லும் போது சகுந்தலாவுக்குச் சொல்லவேண்டாம் என்று சொல்லியிருப்பாரோ தகப்பன்? அப்படியானால் ஏன் எனக்கு எழுதி னான் சிவனேசன்? நீர் நின்று என்ன பிரயோசனம் உடனே திரும்பி வா என்று சொல்லாமல் சொல்கிறானா? 

அப்படிச் சொல்லக்கூடிய ஆள் இல்லை சிவனேசன். நீர் போனாற் போய்ச்சேரும் என்று எடுத்தெறிந்து பேசக்கூடிய வன். எல்லாம் குழம்பிப்போய் விட்டதாகப்பட்டது சகுந்தலா வுக்கு. சில்வியாவுக்கு என்ன நடந்தது? அவள் ஓடியதற்கு நான் வந்தது ஒரு காரணம் என்று சொல்லப் போகிறார்களா? மீனாவின் விடயம் என்னவாகவும் ஆகட்டும் திரும்பிப்போவம் என்று ஒரு கணம் நினைத்தாள். சொல்லாமற் கொள்ளாமல் மீனா ஓடிப் போனால் தாய் தகப்பன் படப்போகும் வேதனை தான் ஒன்றிண்டு நாட்கள் நிற்பதாற் குறைத்துவிட முடியுமா? மீனாதான் இந்தக் குழப்பத்துக்குக் காரணம். “சொல்லாமற் கொள்ளாமற் செய்து கொள்வதற்கென்ன? ஏன் ஊரைக் கூப் பிட்டு பறையடிக்கிறாய்? இப்போது பார் எவ்வளவு கரைச்சல் என்று” மீனாவைப் பேசினாள் சகுந்தலா. 

“உனக்குச் செய்த கொடுமை எல்லாவற்றையும் எனக்கும் செய்வார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. மீனா அலுப்புடன் சொன்னாள். 

“எனக்கு அவர்கள் கொடுமை செய்ததாக நினைக்காதே. நங்கள் ஏதோ நல்லகாரியம் செய்வதாகத்தான் நினைக்கி றார்கள். கார்த்திகேயனைப்போல் நூற்றுக்கணக்கானவர்கள் படிக்க வந்தாலும் எத்தனைபேர் உண்மையாகப் படித்து முன் ‘னுக்கு வந்திருக்கிறார்கள்? அதுதான் அவருக்குப் பயமாக இருந்திருக்கும். லண்டனுக்கு வருவதற்காக எத்தனையோ பொய் புரட்டுக்கள் செய்து வந்துவிட்டுப் படிக்காமல் ஏதோ வேலை செய்து பிழைக்கிறார்கள்தானே. அவர்களில் ஒருவனா கத்தான் கார்த்தியையும் நினைத்தார். இவனை நம்பி என்ன செய்யப்போகிறாய்? இரண்டு மூன்று பிள்ளைகள் பிறந்தவுடன் சோசியல் செக்கியூரிட்டியிலா காசு எடுத்துச் சீவிக்கப்போகி றாய் என்று என்னைப் பேசினார்? அவருக்கு இன்னும் கொஞ் சக் காலத்தில் விளங்கும் சிவனேசன் இந்த வேகத்தில் குடித் துக்கொண்டு போனால் எனக்கு என்ன நடக்கும் என்று. நல்ல காலம் ஏதோ படித்து கையில் ஒரு சேர்ட்டிபிக்கற் இருப்பது’ பெருமூச்சுடன் சொன்னாள் சகுந்தலா. இரண்டு மூன்று நாள் எரிந்த வெயில் குறைந்து மழைக்குணமாக இருந்தது. 

அன்று மீனா வேலைக்குப் போய்விட்ட பின் கீதாஞ்சலியை கூட்டிக்கொண்டு மார்க்கெட்டுக்குப் போனாள். வழியில் சலீமைக் கண்டாள். சிதம்பரநாதன் என்றால் துணிந்து கேட்கலாம் சில்வியா வந்துவிட்டாளா என்று? சலீமை அதிகம் பழக்க மில்லை ஆனாலும் சலீம் தானாக வந்து கதைத்தான். 

“இலங்கையிலிருந்து வந்த தமிழ்த்தலைவரின் கூட்டத்தைக் குழப்பியதற்கு நாங்கள்தான் காரணம் என்று உங்கள் தகப் பனார் பேசியதாகக் கேள்விப்பட்டன்’ சலீம் தானாக விடயத்துக்கு வந்தான். 

“எனது தகப்பனை ஏன் கேட்கக் கூடாது. என்னிட ம் ஏன் வருகிறீர்கள்” என்று சிரித்துச் சமாளித்துச் சொன்னாள் சகுந்தலா. 

”யார் யாருடைய கூட்டத்தைக் குழப்பினார்களோ தெரியாது. அப்படிச் செய்தவர்களைப் பிழை சொல்லப் போவது மில்லை. ஆனால் உங்கள் தகப்பன் தேவையில்லாமல் எங்களில் பழிபோடுவது சரியில்லை.” 

சலீமும் சூடாகப் பேசுவான் என்று எதிர்பார்க்கவில்லை. இதெல்லாம் எனக்கு வேண்டாம் என்பது போல் பார்வையைத் திருப்பிக் கொண்டாள். 

“எப்படி சிதம்பர நாதன் ஆட்கள்” நேரடியாகக் கேட்காமல் மறைமுகமாகக் கேட்டாள். கார்த்திகேயன் எப்படி என்று.

”எங்களைப் போன்ற ஆட்களுக்குச் சுகமென்ன பார்ஸலிலா வருகிறது பகிர்ந்தெடுக்க. ஏதோ இருக்கிறோம், உழைக்கிறோம். பிழைக்கிறோம், உயிரோட சீவிக்கிறம்” சலீம் சிரித்துக்கொண்டு சொன்னான். 

“கார்த்தியின் வாய் உங்கள் எல்லாரிடமும் பரவிக்கிடக்கு. எதற்கும் எடுத்தெறிந்து பேசப் பழகி வைத்திருக்கிறீர்கள்” பஸ் ஸ்ரொப்பை நோக்கி நடந்து கொண்டே சொன்னாள் சகுந்தலா. 

“ஆண்டாண்டு காலமாக எடுத்தார் கைப்பிள்ளையாக இருந்துவிட்டோம் இனியாவது பழகுவம் எங்கள் துணிவில் உயிர்வாழ” சிரித்துக் கொண்டே சொன்னான் சலீம். அவன் கலகலவென அளந்து கொட்டுவதிலிருந்து தெரிந்தது சில்வியாவைப் பற்றிக் கேட்டாலும் தன்னைப் பற்றி ஒன்றும் நினைக்க மாட்டான் என்று. நேரடியாகக் கேட்டாள். 

“காதலர்களின் ஊடல் என்ன நிலையில் இருக்கிறது” கூடுமானவரையில் குரலைச் சாதாரணமானதாக வைத்துக் கொண்டாள். 

ஒருகணம் அவள் என்ன கேட்கிறாள் என்று விளங்கவில்லை. சலீமைப் பொறுத்தவரையில் கார்த்திகேயனும், சில்வியாவும் காதலர்கள் இல்லை. பேப்பரில் கையெழுத்து வைக்காத தம்பதிகள். 

“சில்வியா வந்துவிட்டாளா என்று கேட்கிறேன்” என்றாள் சகுந்தலா. 

”ஓ, அதுவா, நான் நினைக்கவில்லை திரும்பி வருவாள் என்று. எங்கட தமிழ்ப் பெண்கள்தான் அம்மா வீட்டுக்கு எடுத்ததெற்கெல்லாம் ஓடி விளையாடுவார்கள். இங்கிலிஸ்ப் பெண்கள் இல்லை என்றால் இல்லைதான். இவ்வளவுக்கும் சில்வியா இன்னொருத்தனைக் கல்யாணம் செய்தாலும் ஆச்சரியமில்லை.” 

அட கடவுளே எப்படி எடுத்தெறிந்து வாழத் தெரிகிறது இந்த நவநாகரீக மனிதர்களுக்கு. 

“கார்த்திகேயன் அதைப்பற்றி ஒன்றும் துக்கப்பட வில்லையா?” மனதில் ஒருவிதமான நிம்மதி ஏனோ பிறந்தது. என் குரலில் ஏதும் விண்ணானப் தெரிகிறதா? 

”ஓகோகோ, கார்த்திகேயன், பேரின்பநாயகத்தார் போர்ப் படலம் உச்சக்கட்டத்தில் நடக்கிறது. இந்தக் காதல் விளையாட்டெல்லாம் பெரிசில்லை. அவளுக்கு நம்ப முடியாமல் இருந்தது கார்த்திகேயன் அப்படி இலகுவில் அந்தப் பெண்ணின் உறவை மறந்துவிடுவான் என்று. சில்வியா போன அடுத்த நாள் அவன் முகத்தில் இருந்த வேதனையும் பேச்சில் தொனித்த துக்கமும் ஞாபகம் வந்தது. சிலவேளை சலீம் சிதம்பரநாதனுக்குத் தன் துக்கத்தைக் காட்டிக்கொள்ளாமல் இருக்கலாம். இனி என்னதான் நடந்தாலும் கார்த்திகேயனுடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று சகுந்தலா முடிவு செய்தாள். மற்ற வர்கள் என்ன தன் தாய் தகப்பனே தன்னில் நம்பிக்கையில்லாமல் இருக்கிறார்கள்போல் இருக்கிறது. அமைதியாய் இருந்த தன் வாழ்வில் ஏதோ இருந்தாற்போல் இடியும் மின்னலும் அடிப்பதுபோல் இருந்தது எல்லாக் குழப்பங்களும் சேர்ந்து. 

அன்று வெள்ளிக்கிழமை. அம்மா வழக்கம்போல் காலையில் முழுகி வீடு துப்பரவாக்கித் தன் வெள்ளிக்கிழமையைத் தொடங்கினாள். மீனா வேலைக்குப்போய்க் கொஞ்ச நேரத் தில் 

தாயும் தகப்பனும் வெளிக்கிட்டுப் போனார்கள். கடைக்குப் போவதானால் கீதாஞ்சலியையும் கூட்டிக்கொண்டு போனார்கள். 

எங்கே போகிறார்கள்? காலையில் கோயிலுமில்லை, பூசையும் இல்லை விம்பிள்டனில். ஏன் மர்மமாக நடக்கிறார்கள்? மீனாவின் கல்யாண விடயமாக நல்லநாள் பார்த்து ஏதும் செய்யப்போகிறார்களோ? குழம்பிக்கொண்டு அதிக நேரம் இருக்கவில்லை. ஒன்றிரண்டு மணித்தியாலங்களில் யாரோ கதவைத் தட்டினார்கள். 

திறந்தால் சிதம்பரநாதன் நின்றான். “என்ன காணும் கொலிச்சுக்குப் போகவில்லையோ? படிப்பைக் கெடுத்துக் கொண்டு ஊர் சுற்றுமளவுக்கு உமது அரசியல் நெறி அளவு கடந்து போயிற்றோ? என்ன எதும் நோட்டீஸ் கொடுத்துக் கொண்டு திரிகிறீரா?” அவள் விடாமற் கேட்டாள். அவன் பரபரவென்று அங்குமிங்கும் பார்த்தான். 

“என்ன சிதம்பரம் கோழி எடுத்த கள்ளன்போல் முழிக் கிறாய். என்ன நடந்தது.” அவனின் பரபரப்பு அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. துறுதுறுவென்று கதைத்தாலும் சிதம்பரநாதனின் நிதானம் ஒருநாளும் இல்லாமற்போய் அவள் கண்டதில்லை. புவனேஸ்வரிக்கு என்னவுமா? குழந்தைகளுக்கு ஏதுமா? 

”மீனா எங்கே?” அவன் கேட்டான். 

“வேலைக்குப் போய்விட்டாள். ஏன்?” சகுந்தலாவின் குரலிலும் பரபரப்பு. 

“மாமாவும் மாமியும் ரெஜிஸ்ரார் ஒவ்வீசுக்குப் போவதைக் கண்டேன். மீனாவை ஏதும் பயமுறுத்தி யாரையும் செய் கிறார்களோ என்று யோசித்தேன்.’ 

சகுந்தலாவுக்கு நிம்மதியாக இருந்தது. காலை வெயிலில் கண் கூசியது. அவள் கண்களையிடுக்கிக் கொண்டு சிரித்தாள். ‘யாரும் சினேகிதர் பிள்ளைகளின் கல்யாணப் பதிவாக இருக்கும்.” அவள் குரலில் நிம்மதி. 

“சினேகிதர்கள் யாரும் இல்லை இவர்கள் இருவரும்தான் போனார்கள்.'” சிதம்பர நாதனின் குரலில் குழப்பம். அடியும் விளங்கவில்லை நுனியும் விளங்க சகுந்தலாவுக்கு. 

என்ன தாயும் தகப்பனும் இரண்டாந்தரம் கல்யாணம் செய்யப்போகிறார்களா? 

சட்டென்று சிவனேசனின் கடிதம் ஞாபகம் வந்தது. “மீனாவின் விடயம் கெதியில் முடியும்.” எப்படி? 

“ஆ! இப்போதுதான் விளங்குகிறது. மீனாவுக்குப் பேசிய பெடியனை எனக்குத் தெரியும். அவனின் சினேகிதன் சொன்னான். இந்தச் சனிக்கிழமை சிலவேளை பேரின்ப நாயகத்தார் வீட்டுக்கு வருவதாக” சிதம்பரநாதன் சொன்னான். 

சகுந்தலாவுக்கு இன்னும் விளங்கவில்லை. அவர்கள்நாளைக்கு வருவதாக இருந்தால் இன்றைக்கு ஏன் தாய் தகப்பன் கல்யாணப் பதிவு காரியாலயத்துக்குப் போய் நிற்கிறார்கள். 

“விளங்கவில்லையா சகுந்தலா அக்கா” சிதம்பரன் உற்சாகத்துடன் கேட்டான். இல்லை என்று தலையாட்டினாள் சகுந்தலா. 

“நாளைக்குப் பையனைக் கூப்பிட்டு விஷயம் சரிவந்தால் அதாவது மீனாவை எப்படியோ சரிவரப் பண்ணிவிட்டுக் கல்யாண எழுத்தை வைப்பதற்காக இருபத்திநாலு மணித் தியால நோட்டிஸ் கொடுக்கக் கல்யாணப் பதிவுக் காரியாலயத்திற்குப் போயிருக்கிறார்கள்.” அவன் விளக்கமாகச் சொன்னான். 

உண்மையாக அப்படியா? தனக்குச் செய்த ஒவ்வொரு காரியத்தையும் அதே அச்சில் செய்கிறார்களா? ஆத்திரத்தில் மனம் கொதித்தது. என்ன செய்வது? மீனா வரவிட்டு இரவைக்கு இந்த வீட்டில் பூகம்பம் நடக்கப் போகிறதா? 

மீனா அம்மா நடிக்கப்போகும் நாடகத்துக்கு விட்டுக் கொடுக்கப் போகிறாயா? 

“சிதம்பரன் என்ன செய்வது” தன்னிலும் வயது குறைவான சிதம்பரனிடம் பரிதாபமாகப் புத்திமதி கேட்டாள் சகுந்தலா. 

“என்ன செய்வதா? மீனாவைப் பொறுத்தது. மீனாவுக்குச் சொல்லுங்கள். அவள் விருப்பப்படி செய்யட்டும்.”

“கொலிச்சுக்குப் போகிறாயா?” அவள் பரிதாபமாகக் கேட் டாள். ‘ஏன்’ அவன் விளங்காமற் கேட்டான். 

“மீனாவுக்கு ஒருக்காப் போய்ச் சொல்லமுடியுமா, என்ன நடக்கிறது என்று” சகுந்தலா கேட்டாள் அவசரமாக. சிதம்பரன் சரி என்று சொல்லிவிட்டுப் போனான். 

இப்படியா மனிதர்கள் இருப்பார்கள். சொந்த மகளின் துக்கத்தையோ சந்தோஷத்தையோ பொருட்படுத்தாமல் ஏதோ வியாபாரமா பேசுகிறார்கள்? மூளை குழம்பிவிடும் போல் இருந்தது. மீனா எப்படிச் சகிக்கப்போகிறாள் இந்தக் கொடுமையை. எவ்வளவு குள்ளத்தனமான காரியம். ஆத்திரம் எல்லை மீறியது. மீனா எப்படியும் இந்தக் கொடுமையிலிருந்து தப்பவேண்டும். அதன் பிறகு யாரும் எக்கேடும் கெடட்டும். நான் இவ்வளவு காலமும் யாரும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்று இருந்ததுபோல் இருக்கிறேன். 

கோபத்தில் தன் பெட்டியை அடுக்கினாள். தாய் தகப்பனில் கேடு கெட்ட உலகத்திலேயே கோபம் வந்தது. பிள்ளையோ குட்டியோ கணவனோ மனைவியோ எல்லா உறவும் சுய நலத்தில்தானா அமைந்திருக்கிறது. ஒன்றையும் எதிர்பாராத அன்பு உலகத்தில் கிடையாதா? உறவே வெறும் வியாபாரமா? பின்னேரம் மீனா வந்தாள். முகம் வெறும் கற்சிலைபோல் இருந்தது. சிதம்பரன் எல்லாம் சொல்லி யிருக்கின்றான். 

தாய் தகப்பனிடம் எதுவும் கதைக்கவில்லை. தமக்கையிடம் முகம் கொடுக்கவில்லை. எந்தவிதத் துக்கத்திலும் கீதாஞ்சலியை அவளால் ஒதுக்க முடியவில்லை. ஓடிப்போய் மீனாவைக் கட்டிக்கொண்ட கீதாஞ்சலியைத் தூக்கிக்கொண்டு தன் அறைக்குப் போனாள் மீனா. 

அம்மா பின்னேரம் கோயிலுக்குப்போக ஆயத்தமானாள். ஏனோ சோர்ந்து போய் தகப்பனின் முகம் சரியாயில்லை இருந்தது. என்னவென்று நாளைய நாடகத்தை நடத்துவது என்று ஒத்திகை பார்க்கிறாராக்கும். 

கோயிலுக்கு வெளிக்கிடமுதல் குழந்தையை அலங்கரித்துக் கொண்டு சகுந்தலா கீழே வந்தாள். குழந்தை கீதாஞ்சலி பாட்டியுடன் செல்லமாகக் காரில் ஏறிக்கொண்டாள். “லண்டன் நன்றாகப் பிடித்துக்கொண்டது போல் இருக்கிறது” தகப்பன் மகளைப் பார்த்துச் சொன்னார். 

“அவளுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ எனக்குப் பிடிக்க வில்லை. கெதியில் நியூயோர்க் போக யோசிக்கிறேன்.” சகுந்தலாவைக் கூர்மையாகப் பார்த்தார் தகப்பன். 

“சகுந்தலா நீ சந்தோஷமாய் இருக்கிறாய் தானே?” தகப்பனின் இந்தக் கேள்விக்கு என்ன மறுமொழி சொல்வது என்று தெரியவில்லை. 

“உன்னைப்போல் மீனாவுக்கும் ஒரு நல்ல வாழ்வு கிடைக்க வேண்டுவென்றுதான் என் பிரார்த்தனை. அந்த முருகன் இதற்கெல்லாம் உதவிசெய்ய வேண்டும்.” அவர் குரல் அசாதாரணமாக இருந்தது. மீனாவை எப்படியும் தன் வழிக்குக் கொண்டுவர வேண்டுமென்ற திடம் மனதில் இருந்திருக்க வேண்டும். 

“சிவனேசன் சாடையாகக் குடிப்பழக்கம் என்று கேள்வி. லண்டனிலும் நியூயோக்கிலும் எத்தனை தமிழர் குடியாமல் இருக்கினம்? எல்லாம் உன்னைப் பொறுத்தது. கொஞ்சம் பொறுமையாக இருந்தால் காலமும் கடவுளும் உதவியாய் இருக்கும்.” 

சொல்லாமல் சொல்கிறார் என்விதி அவ்வளவுதான் என்று. சகுந்தலா ஒன்றும் பேசவில்லை. தகப்பன் கதவைச் சாத்திக் கொண்டு வெளிக்கிட்டதும் தங்கையின் அறைக்குள் போனாள். ஜன்னல் வழியாகத் தாய் தகப்பனைப் பார்த்துக் கொண்டு நின்றாள் மீனா. கன்னங்களில் நீர் புரண்டோடிக் கொண்டிருந்தது. 

“ஏன் இப்படிக் கொடூரமாக நடக்கிறார்கள். பெண்மை கற்பு என்றெல்லாம் பிதற்றிக்கொண்டு திரிபவர்கள் ஏன் ஒருத்தனில் மனதைப் பறிகொடுத்த ஒரு பெண்ணை வெறும் போலி நம்பிக்கைகளுக்காக இன்னொருத்தனிடம் ஒப்படைக் கத் துடிக்கின்றார்கள். கற்பு உடம்பிலா உள்ளத்திலா இருக் கிறது? ஒருவனை மனதால் நினைத்துக்கொண்டு இன் னொருத்தனுடன் உடம்பால் வாழச் சொல்கிறார்களே இதா பண்பு. இது கலாச்சாரமா” மீனா விக்கி விக்கியழுதாள். 

“மீனா உன் கேள்விகளுக்கு உஷாவாக சொன்னாள். இருந்தால் நன்றாகப் பதில் சொல்வாள். கற்பு என்பது ஆண்களால் பெண்களுக்காக மட்டும் படைக்கப்பட்ட குரூரமான கட்டுப் பாடு. தன் உடமை வேற்றான் பிள்ளைகளுக்குப் போகக் கூடாது என்ற வியாபார மனப்பான்மையில் உண்டாகிய விலங்கு. இப்படித்தான் உஷா சொன்னாள். ஆணும் பெண்ணும் ஒன்றாகப் படிக்கும் வேலைசெய்யும் இடங்களில் இந்தக் காலத்தில் கற்பின் மதிப்பு எப்படிக் கணிக்கப்படுகிறதோ தெரியாது. தகப்பனில்லாமல் குழந்தை வராத வரைக்கும் கற்பைப் பற்றி யாரும் கதைப்பதில்லை இப் போது. அதுவா இப்போது உமது கண்ணீருக்குக் காரணம்?” 

சகுந்தலா தங்கை அடுக்கி வைத்திருக்கும் பெட்டியை ‘வெறித்துப் பார்த்தாள். அறை அலங்கோலமாகக் கிடந்தது. 

தேவையானது மட்டும் கொண்டுபோகிறேன். அப்பா அம்மாவின் நகைகள் அந்தப் பெட்டியில் இருக்கிறது. கொடுத்து விடு. அன்ரனிக்குத் தந்தியடித்திருக்கிறேன். என்ன நடக்குமோ தெரியாது.” மீனாவின் குரலில் விரக்தி தொனித்தது. 

“கவலைப் படாதே மீனா. தாய் தகப்பனைத் துக்கப்படுத்து வதை யோசித்தால் உன் காதலைத் துக்கப்படுத்துவதையும் யோசிக்கவேண்டும். உலகத்தில் எல்லோரையும் சமாதானப் படுத்த முடியாது”. சகுந்தலாவுக்குத் தன்னையே நம்ப முடியாமஸ் இருந்தது இவ்வளவு துணிவுடன் தங்கையை உற்சாகப்படுத்துவது. 

”சகுந்தஸா கார்த்திகேயனை மறந்துவிட்டு சிவனேசனை செய்யும்போது உன் மனம் எப்படியிருந்தது?” திடீரென்று இந்தக் கேள்வியைக் கேட்டாள் மீனா. 

கார்த்திகேயனை மறந்துவிட்டாளா? யார் மறந்தார்கள்? எப்போ மறந்தாள் சகுந்தலா? 

“அதெல்லாம் எனக்கு ஞாபகமில்லை. அதைப்பற்றிக் கதைக்கவும் தயாராயில்லை. கெதியாய் வெளிக்கிடு.” தமக்கை துரிதப்படுத்தினாள். இருள் பரவிக்கொண்டிருந்தது. இடி முழக்கத்துடன் மழைபெய்யத் தொடங்கியிருந்தது. நல்லகாலம் அக்கம் பக்கத்து வீடுகளில் ஜன்னல் சீலை கள் போடப்பட்டுக் கிடந்தது. யாரும் அதிகம் கவனிக்க மாட்டார்கள். 

தமக்கையும் தங்கையும் அழுதார்கள். சகுந்தலாவால் நம்ப முடியாமல் இருந்தது. காலையும் மாலையும் கடவுள் பெயரால் பல கட்டுப்பாடுகளுடன் வளர்க்கப்பட்ட மீனா எல்லாக் கட்டுப்பாட்டையும் மீறி வீட்டை விட்டுப் போவதை. 

“மழையில் நனையாமல் உள்ளே போ சகுந்தலா” தங்கை பரிவுடன் சொன்னாள். தாங்கமுடியாத துயரம் வரும்போது மனிதர்கள் எந்தத் தடையையும் மீறிப் போராடுவார்கள் என்று கார்த்தி சொன்னது ஞாபகம் வந்தது. மீனாவின் கார் கண்ணில் இருந்து மறையும்வரை பார்த்துக்கொண்டு நின்றாள் சகுந்தலா. 

அத்தியாயம்-10

தாய் தகப்பன் வரவிட்டு என்னவென்று சொல்வது? எங்கே போய்விட்டாள் என்று சொல்வது? சகுந்தலாவுக்கே தெரியாது எங்கே போகிறாள் மீனா என்று? பெரும்பாலும் உஷா வீட்டுக் காக இருக்கலாம். அல்லது அன்ரனியின் தாய் தகப்பனிடமாக இருக்கலாம். பேரின்பநாயகத்தார் பிரேவேட் டிடக்டிவ் வைத்து ஆராயட்டும். சிவேனசனுக்குப் போன்பண்ணிச் சொல்லவேண்டும் தான் இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் நியூயோர்க் வருவதாக. ஏதோ செய்ய வந்து என்ன செய்து விட்டு இருக்கிறேன். வியப்பும் சிரிப்பும் வந்தது அவளுக்கு. என்னால் இவ்வளவும் செய்ய முடியும் என்ற வலிமை வந்த வுடன் மகளிர் என்ன இலட்சியத்தையும் செய்து முடிப்பார்கள் என்பது சகுந்தலா மீனாவை அனுப்பியதிலிருந்து தெரிந்தது. 

கொஞ்சநேரத்தில் டெலிபோன் மணி அடித்தது. தாய் போன் பண்ணினாள். யாரோ சினேகிதர் வீட்டுக்குப் போகிறார் களாம் கோயிலால் வரச் சிலவேளை பிந்துமாம். ஒருவிதத்தில் நல்லது. நடுச்சாமத்தில் வந்தால் நித்திரை கொள்வதாகப் படுத்திருக்கலாம். அவர்களுக்குத் தெரியப் போவதில்லை மீனா வீட்டை விட்டு ஓடிப்போன விடயம். 

எப்படி நாளைக்குச் சொல்வது? காலையிலேயே ஆட்கள் வந்து சேரப் போகிறார்களா? அதற்கு முதல் சொல்லி அம்மா அப்பா வைத் தவிக்கப் பண்ணுவதா? அம்மா என்ன செய்வாள் விருந்தினர்களுக்கு முன்னால் தன் மகள் வீட்டை விட்டு ஓடிப் போய்விட்டாள் என்று கேள்விப்பட்டதும்? 

மீனாவைத் தேடிக் கண்டுபிடிப்பார்களா? சகுந்தலா யோசித் துக் கொண்டிருக்கும்போது உஷாவின் ஞாபகம் வந்தது. போன் பண்ணிக் கேட்டால் என்ன? சிவனேசனுக்குக் காலை யில் போன்பண்ணிச் சொன்னால்போதும். பெரும்பாலும் வீட் டிலிருப்பார். சகுந்தலா யோசித்துக் கொண்டிருக்கும் போது டெலிபோன் மணி அடித்தது. மீனா அல்லது உஷாவாக இருக்கும். மீனா துணிந்து போன் பண்ணமாட்டாள் தற்செய லாகத் தாய் தகப்பன் திரும்பி வந்திருந்தாலும் என்ற பயத் தில். உஷாவா? போனை எடுத்தாள். 

“பொலிஸ் நியூஸ் இது. மீனா பேரின்பநாயகம் கார் விபத் தில் அகப்பட்டு நகர ஆஸ்பத்திரியில் இருக்கிறாள். நிலைமை சொல்ல முடியாது”. 

தலைசுற்றி கண்கள் இருண்டு கொண்டு வந்தன சகுந்தலா வுக்கு. என்ன செய்தியாம்? நா தடுமாற உடம்பு நடுங்க இன் னொருதரம் சொல்லச் சொன்னாள் பொலிஸ்காரனை. அவன் தெளிவாகச் சொன்னான். எந்த ஆஸ்பத்திரியில் மீனா அட் மிட் பண்ணப் பட்டிருக்கிறாள் என்று. ஓவென்று அலறவேண் டும்போல இருந்தது சகுந்தலாவுக்கு. இதற்கா தங்கையை இவ்வளவு துரிதப்படுத்தி அனுப்பி வைத்தாள்? மணக்கோலம் காண ஓடிப்போ என்று துரத்தியது பிணக்கோலம் காணவா? உண்மையாகவா அல்லது இதெல்லாம் கற்பனையா? என்ன செய்வது? யாரைக் கூப்பிடுவது, எங்கே போவது? ஒன்றும் தெரியவில்லை. சினேகிதர் வீட்டுக்குப் போவதாகச் சொன் னார்கள்; எந்தச் சினேகிதர் என்று சொல்லவில்லை தாய் தகப்பன். யாரைக் கூப்பிடுவது? புவனேஸ், சிதம்பரநாதன். கை, கால்கள் ஓடவில்லை அவளுக்கு. யாரும் உதவி செய்யுங் களேன். வீடு பயங்கரமான அமைதியில் சூழ்ந்து கிடந்தது. வெளியில் இடியும், மின்னலும், மழையும். எத்தனை மணியிருக்கும், பத்து, பதினொன்று, கைகள் டெலிபோன் நம்ப ரைச் சுழட்டின. ”சிதம்பரன் இருக்கிறானா.” அவள் அலறினாள். 

”சிதம்பரன் வேலைக்குப் போயிருக்கிறான்.’ ‘ஏன் சகுந்தலா ஏன் அழுகிறாய்?” கார்த்தியின் குரல் இதமாக இருந்தது அவளது வேதனைக்கு. அழுகையின் நடுவே அவள் சொல்லி முடித்தாள் மீனாவின் நிலையை. 

தனிமையைப் போல் கொடுமையானது ஒன்றுமில்லை. அதுவும் தாங்கமுடியாத துயரத்தில் அகப்பட்டிருக்கும் போது, அரை மணித்தியாலத்தில் கார்த்திகேயன் வந்து சேர்ந்தான். அவள் ஓவென்று அழுதாள். “சகுந்தலா ஏன் செத்தவீடு கொண்டாடுகிறீர்? சின்ன விபத்தாக இருக்கலாம், ஏன் தேவையில்லாமல் அழுகிறீர்.” அவன் அதட்டினான். அவள் அழுகை பரிதாபமாக இருந்தது. 

மழை விடுகிற பாடாயில்லை. மழை கொட்டு கொட்டென்று கொட்டியது. பாதையே சரியாகத் தெரியவில்லை. கவனமாகக் காரை ஓட்டினான் கார்த்திகேயன். மீனா ஆத்திரத் தில் அவசரத்தில் பாதையில் கவனமில்லாமல் காரை ஓட்டிக் கொண்டு போயிருக்கலாம். 

சகுந்தலாவின் அழுகை குறையவில்லை. விக்கலும் விம்மலுக்குமிடையில் நடந்தவற்றைச் சொன்னாள். தன்னால் தான் இதெல்லாம் வந்தது என்று தன்னைத் தானே நொந்துகொண்டாள். தனக்குத் தாய் தகப்பன் செய்த கொடுமைகளை மீனாவும் அனுபவிக்கக்கூடாது என்று தான் உதவிசெய்ய வெளிக் கிட்டதாகப் புலம்பினாள். அவள் அழட்டும், அலட்டட்டும், எதையாவது செய்யட்டும். அவன் அவள் ஓலத்தில் குறுக்கிடாமல் மௌனமாகக் கேட்டுக்கொண்டு காரோட்டினான். 

சகுந்தலாவின் மனம் சிதைந்துபோய் இருந்தது. உண்மை யில் மீனாவின் நிலை எப்படியிருக்கும்? அவன் மேலே ஒன்றும் யோசிக்கமுடியாமல் தவித்தான். 

“நான் ஒரு அபாக்கியசாலி, போற இடமெல்லாம், சந்திக்கிற ஆட்களுக்கெல்லாம் துரதிர்ஷ்டத்தைக் கொண்டு போகிறேன்” அவள் விம்மினாள். 

“சகுந்தலா தயவு செய்து விசர்க் கதைகள் கதையாதேயும். தற்செயலாக, சந்தர்ப்பவசத்தால் நடப்பதெற் கெல்லாம் தன்னைத் தானே நொந்துகொள்வது முட்டாள்தனம்.’ சகுந்தலா அழுத கண்ணும் சிந்திய மூக்குமாக இருப்பது பொறுக்கமுடியாமல் இருந்தது அவனுக்கு. ஆஸ்பத்திரிக்கு வந்ததும் அக்ஸிடென்ட் டிப்பார்ட்மெண்டுக்குப் போனார்கள். 

தலையிலும் நெஞ்சிலும் பெரிய காயமென்றும். சத்திர சிகிச்சைக்குக் கொண்டு போய் விட்டதாகவும் சொன்னார்கள். விழுந்தடித்துக் கொண்டு தியேட்டருக்குப் போனால் அப்போதுதான் சத்திரசிகிச்சைக்கு ஆயத்தம் செய்துகொண்டிருந் தார்கள். சத்திரசிகிச்சைப் பத்திரத்தில் கையெழுத்திட யாரும் இல்லையே என்று பார்த்துக்கொண்டிருந்தேன் என்றார் சேர்ஜன். மீனாவைக் காணவில்லை. இரத்தம் படிந்த முகம் உருக்குலைந்த உருவம்தான் தெரிந்தது. சகுந்தலா பைத்தி யம்போல் அழத் தொடங்கிவிட்டாள். “பிழைப்பாள் என்று நினைக்கிறீர்களா?’ விடாமல் கார்த்திகேயனைக் கேட்டாள். 

அவளின் நிலை பரிதாபமாக இருந்தது. ” எனக்குத் தெரியாது சகுந்தலா. டொக்டர்களிடம் விடவேண்டிய பொறுப்பு இது.” பொறுமையுடன் மறுமொழி சொன்னான் கார்த்தி, குறுகுறுப்பும் இனிமையும் தவழும் மீனாவின் முகம் எங்கே போய்விட்டது. சிதைந்த மாமிசத் துண்டுக ளாய் சிதறுப்பட்ட நிலையில் கோலம்….. பார்க்கவே சகிக்க முடியாதிருந்தது. பிழைப்பாளா? தன்னைத்தானே கேட்டுக் கொண்டான். 

“அப்பா அம்மா வந்திருப்பார்கள் போன் பண்ண வேண்டும்” அழுகையினூடே சொன்னாள் சகுந்தலா. இரவு நடுச்சாமத்தைத் தாண்டிக்கொண்டிருந்தது நேரம். போன் பண்ணினால் வீட்டில் இன்னும் யாரும் வரவில்லை. எங்கு போய்விட்டார்கள்? எரிச்சலும் அழுகையும் வந்தது அவளுக்கு. 

நேரம் ஆமைவேகத்தில் போய்க்கொண்டிருந்தது. சத்திர சிகிச்சை அறைக்கு அப்பால் உள்ள பெஞ்சில் உட்கார்த்திருந் தார்கள் சகுந்தலாவும், கார்த்தியும். ஆஸ்பத்திரி மெல்லிய வெளிச்சத்தில் மயான அமைதியில் ஆழ்ந்திருந்தது. எப் போதோ ஒரு சிலநேரங்களில் ஒன்றிரண்டு நேர்சுகள் விருந்தறையில் போய் வந்தார்களே தவிர மற்றப்படி சுடுகாட்டு அமைதி சகுந்தலா அழுது அழுது கண்கள் வீங்கிப் போய் இருந்தன. 

“ஒன்றிரண்டு நாட்களில் அமெரிக்கா போவதாக இருந்தேன்,” அவள் சொன்னாள். அவன் மறுமொழி சொல்ல வில்லை. 

“அங்கே என்னென்ன பிரச்சனைகள் காத்திருக்கிறதோ” அவள் அலுத்தபடி சொன்னாள். 

“பிரச்சினை வந்தபின் யோசிக்கலாம் ஏன் இப்போது மண்டையைப் போட்டுக் குழப்பிக்கொள்கிறாய் சகுந்தலா” பொறுமையுடன் மறுமொழி சொன்னான். 

“ஏன் துன்பம் துணையோடு சேர்ந்து வருகிறது” சகுந்தலா ளின் குரலும் முகமும் பைத்தியக்காரி போல் இருந்தது. அடுக் கடுக்காக வரும் பிரச்சனைகளால் பேதலித்துப்போய் இருக்கிறாளா? 

“சில்வியாவைப் போய் கூப்பிடவில்லையா?” அவனுக்குச் சினம் வந்தது அவள் கேள்வியைக் கேட்க. ‘இல்லை’ என்று தலையாட்டி விட்டுப் பேசாமல் இருந்தான். 

“கெதியால் கல்யாணம் முடித்தால் என்ன” சகுந்தலாவுக்கு என்ன மூளை குழம்பி விட்டதா? புதிரைப் பார்ப்பது போல் பார்த்தான் அவன். என்ன இழவுக் கதை எல்லாம் கதைக்கிறாள்? 

“நீங்கள் கலியாணம் முடிக்கும் வரைக்கும் நான் லண்டனுக்கு வருவது முடியாது. சிவனேசனுக்குச் சந்தேகம் எல்லாவற்றிலும். எங்கள் தொடர்பு இன்னும் இருப்பதாகச் சொல்லிச் சண்டைபிடிப்பார் வெறிவந்தால்” அவள் சொல்லிக் கொண்டேயிருந்தாள். இவ்வளவு காலமும் சொல்லமுடியாதவை யெல்லாம் துயாத்தின் எல்லையில் இருக்கும்போது தன்பாட்டுக்கு வந்து கொண்டிருந்தது. 

சிவனேசனுக்குச் சந்தேகமா? திடுக்கிட்டுப் போய்ப் பார்த்தான் கார்த்தி. என்ன நினைக்கிறான் மடைச்சாம்பிராணி. அசரீரியாக அத்திலாந்திக் கடலைத்தாண்டி அமெரிக்கா போய் அவர் மனைவியுடன் குலவுவதாக நினைக்கிறானா? ஆத்திரத்தில் பற்களை நறநறவென்று கடித்துக்கொண்டான். 

“உண்மையில் நீங்கள் எனக்குக் கடிதம் எழுதுகிறீர்கள் அல்லது போன் பண்ணுகிறீர்கள் என்று நினைக்கிறாரோ தெரியாது. ஆனால் என்னைக் கேவலமாகப் பேசவேண்டும் போல் வந்தால் இப்படி எத்தனையோ வேண்டாத பழியெல்லாம் சுமத்துகிறார். உங்களுக்கு விளங்கவில்லையா ஏன் ஐந்து வருடமாக லண்டனுக்கு வரவில்லை என்று? அவள் விரக்தியுடன் சொன்னாள். இனிக் காணக்கிடைக்கிறதோ தெரியாது. சொல்வதெல்லாவற்றையும் சொல்லவேண்டும் போல் இருந்தது அவனுக்கு. அவன் கேட்டுக் கொண்டிருந் தான். அவனுக்கு நம்பமுடியாமல் இருந்தது. சகுந்தலா சொன்னவைகளைக் கேட்டு, இப்படியும் கேவலமான மனிதர்கள் இருக்கிறார்களோ என மனம் எண்ணியது. 

பெண்கள் தங்கள் உடமை என நினைத்துக் கொண்டு கண்ட பாட்டுக்குக் கதைத்துக் கண்டபாட்டுக்கு நடத்தும் இந்தக் காட்டுமிராண்டிகளைச் சுட்டுத்தள்ளவேண்டும்போல் இருந்தது அவனுக்கு இதெல்லாம் தெரியாதா பேரின்பநாயகத்தாருக்கு. அல்லது தெரிந்தும் தெரியாமல் இருக்கிறாரா? இதெல்லாம் குடும்பத்தில் சாதாரண சண்டைகள் என்று நினைக்கிறாயா?

“வீட்டுக்கு போன் பண்ணட்டுமா?” அவள் கேட்டாள். தூரத்தில் உள்ள டெலிபோனில் போய் போன் பண்ணினாள். இப்போது தான் வந்தார்களாம். எங்கே போய் விட்டீர்கள் மீனாவும் சகுந்தலாவும் அம்மா கோபத்துடன் கேட்கிறா. கதகளி நாட்டியத்துக்குப் போய் இருக்கிறோம், கந்த வேண்டும்போல் வந்தது சகுந்தலாவுக்கு. அழுகையையும் ஆத்திரத்தையும் அடக்கிக் கொண்டு சொன்னாள் சகுந்தலா மீனாவின் விபத்தைப் பற்றி. 

தாய் பதறிவிட்டாள். அப்பா கோயிலில் நிற்கும் போது நெஞ்சை நோகிறது என்றார். டொக்டரிடம் போய்க் காட்டி விட்டு வந்தோம் பக்கத்திலுள்ள ஆஸ்பத்திரியில். தாய் அரைகுறையாகச் சொன்னாள். 

மீனா வீட்டைவிட்டு ஓடிய கதை யொன்றும் சொல்லவில்லை சகுந்தலா. விபத்து நடந்ததைத்தான் சொன்னாள். அப்பாவுக்கு எப்படி என்று கேட்டாள் சகுந்தலா. அவருடைய பிளட் பிரஷர் கூடிவிட்டதென டொக்டர் சொன்னதாகத் தாய் சொன்னாள். முடியுமான கெதியில் வரச்சொல்லிவிட்டுப் போனை வைத்தாள். 

“எங்கேயாம் உல்லாசப் பிரயாணம் போயிருந்தார்கள்” கோபத்துடன் கேட்டான் கார்த்தி. 

“ஏன் எரிந்து விழுகிறீர்கள். அப்பாவுக்கு பிளட்பிரஷர் என்று ஆஸ்பத்திரிக்குப் போய்விட்டு வந்தார்களாம்” சகுந்தலா சொன்னாள். “என்னை உங்களுடன் காண அவருடைய பிளட்பிரஷர் இன்னும் கூடப்போகிறது” சகுந்தலா பெருமூச்சுடன் சொன்னாள். சேர்ந்த முகமும் அழுத கண்களும் அவளில் பரிதாபத்தை யூட்டின. அழாதே சகுந்தலா என்று அணைத்துக்கொண்டு சொல்ல அவனுக்கு உரிமையில்லை. பேசாமல் பார்த்துக் கொண்டு இருந்தான். 

“நான் இருந்தால் உமது தகப்பன் ஏதும் பேசினாலும் பேசுவார். மீனா இந்த நிலையில் இருக்கும்போது நான் எந்தச் சண்டைக்கும் தயாரில்லை போகட்டுமா” அவன் கேட்டான். 

இதுவரை சொல்லாத நினைக்காத எதைச் சொல்லப் போகி றார்கள். நினைக்கப் போகிறார்கள். அவர்கள் வந்துசேர விட்டுப் போங்கள். தனியாக இருக்கப் பைத்தியம் பிடித்து விடும் போல் இருக்கிறது. அந்த ஜன்னலால் குதிக்க வேண்டும் போல் இருக்கிறது. ”மீனா ஒருவிதத்தில் அதிர்ஷ்டசாலி. என்னைப்போல் இப்படிக் கோழைமனம் இல்லாதவள்” ஏதேதோ பிதற்றினாள் சகுந்தலா. நேரம் ஓடிக்கொண்டி ருந்தது. சத்திரசிகிச்சை தொடங்கி இரண்டு மூன்று மணித் தியாலங்களாகி விட்டது. இன்னும் ஒன்றும் தெரியவில்லை. 

தாய் தகப்பன் என்ன தவழ்ந்தா வருகிறார்கள். விம்பிள்டனிலிருந்து வெஸ்ட்மினிஸ்டருக்கு வர எவ்வளவு நேரம் எடுக்கும். தகப்பலுக்குச் சுகமில்லாத படியால் யாரையும் உதவிக்குக் கூட்டிக்கொண்டு வருகிறார்களாக்கும்? சகுந்தலா வின் நினைவு எங்கோ ஓடிக்கொண்டிருந்தது. எங்கோ மணிக்கூடு நான்கு தரம் அடித்தது. ஆஸ்பத்திரியில் சத்தம்போடும் மணிக்கூடு வைப்பார்களா? 

கையுறைகள் கழற்றளில்லை. முகத்தில் இன்னும் முகமூடி மாற்றவில்லை. சத்திரசிகிச்சை நிபுணர் சகுந்தலா கார்த்திகேயனை நோக்கி வந்தார். அவரின் முகத்தைப் பார்த்ததும் கார்த்திக்கு விளங்கியது என்ன சொல்லப் போகிறார் என்று. நெஞ்சில் ஏதோ அமத்துவதுபோல் இருந்தது அவனுக்கு, 

அடிவயிறு பிசைவதுபோல், காதில் ஏதோ இரைவதுபோல், நிதானமும் தெளிவும் ஒரு நிமிடமும் குலையாத கார்த்தி கேயன் மனம் டொக்டர் சொல்லிக் கொண்டிருப்பவற்றைக் கேட்டு அலறியது. தங்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை யாம். விபத்தில் இழந்த இரத்தத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியில் என்னத்தின் இழப்பால் இறந்தால் என்ன? மீனா போய்விட்டாள்… “மீனா…” வானம் பிளக்க அலறிக்கொண்டு சாய்ந்தாள் சகுந்தலா. கொடிபோன்ற உடல் சரிந்து பூமியில் விழுந்தது. நினைவிழந்த சகுந்தலாவை வாரி எடுத்தான் கார்த்திகேயன். உலகமே சுழல்வது போல் இருந்தது அவனுக்கு அதிர்ச்சியில். யாரோ வரும் காலடிகள் கேட்டன. அரை குறை உணர்வுடன் நிமிர்ந்தான். அவன் அணைப்பில் சகுந்தலா. அவன் முன்னால் சிவனேசன் நின்று கொண்டிருந்தான். 

அத்தியாயம்-11

நிமிடங்கள், மணிகள், நேரங்கள் ஏன் இப்படி ஓடித் தொலைக் கின்றன என்று அவள் யோசிக்கமுதல் நாட்கள் மாதங்களாகி விட்டன. 

மீனாவின் உடல் எரிந்து அவளின் சாம்பல் தேம்ஸ் நதிக்கரை யில் கரைந்து இங்கிலிஸ்க் கால்வாயில் எங்கோ போய்ச் சேர்ந்துவிட்டது. பேரிழந்து பிணமாகி வெறும் சாம்பலாய், அவள் கரைந்ததைக் கண்ணீர் பொங்கப் பார்த்துக் கொண்டிருந்தாள் சகுந்தலா. 

“ஏன் இங்கிலாந்து வந்தேன். இப்போது என்ன பார்த்துக் கொண்டிருக்கிறேன்?” அவள் தனக்குத்தானே கேட்க நினைத்தாள். கேள்விகளும் மறுமொழிகளும் அவள் இதயத் தைத் தாண்டிவரத் தயங்கியோ என்னவோ இருதயத்தின் ஒரு மூலையில் குத்திக் கொண்டு வேதனைப் படுத்தின. 

சிவனேசனை மீனாவின் திடீர்க் கல்யாணத்துக்கு அழைத்தார் களாம்; அதுதான் மின்னாமல் முழங்காமல் வந்து நின்றா னாம் தகப்பன் சொன்னார் அழுது வடியும்போது. என்ன செய்து கொண்டிருந்தாய் கார்த்திகேயனின் அணைப்பில் என்று வெடித்து விழவில்லை. பார்வைகளால், செய்கைகளால் அணு அணுவாகச் சித்திரைவதைப் படுத்திக் கொண்டிருந்தாள். 

வீடு பெரும்பாலும் வெறும் அமைதியாய் இருந்தது. எல்லாம் விதி. ஒவ்வொன்றும் ஒவ்வொருவரினதும் தலை எழுத்து என்று மூக்கைச் சிந்திக்கொண்டிருந்தாள் அம்மா. அம்மாவுக்கு விதிக்கு மேலால் எதையும் விளங்காது. 

விதிகளையும் தலையெழுத்துக்களையும் நிர்ணயிப்பவர்கள் யாராம்? எங்கள் வெற்று நம்பிக்கைகளா? வீண்பிடிவாதங்களா? வரட்டு வெறிகளா? சகுந்தலாவால் எத்தனையோ விடயங்களை விளங்கிக்கொள்ள முடியாதிருந்தது. விளங்கிக் கொள்ள துணிவில்லாமல் போன அறியாமையை நொந்தழுதாள். 

தகப்பன் பேரின்பநாயகத்தார் கடவுளிலும், விதியிலும் பழி சொல்லித் துக்கம் கொண்டாடினார். மீனா தற்செயலாக தான் அடிபட்டுச் செத்தாள் என்று எல்லோரும் நினைத்திருந்தார்கள். ஏன் அவசரப்பட்டு வீட்டைவிட்டு ஓடிப்போனாள் என்பது கார்த்திகேயனையும், சகுந்தலாவையும் தவிர யாருக்கும் தெரியாது. மீனாவின் மரணச் சடங்குக்குக்கூட அன்ரனி வரவில்லை. தன் தாங்கமுடியாத இழப்பைச் சுமந்துகொண்டு ஹொங்கொங்கிலிருந்து வெறும் சாட்டுகளுக்குத் தான் வந்து யாரையும் திருப்திப்படுத்த தயாராயில்லை என்று சகுந்தலா வுக்கு எழுதியிருந்தான். மீனாவும் அன்ரனியும் அவர்களின் னிமையான- இளமையான–வாழ்க்கையை அனுபவிக்கத் துடிக்கும் உணர்ச்சி ததும்பிய முகபாவம் சகுந்தலாவுக்கு ஞாபகம் வரும்போதெல்லாம் பழைய தன் இளமை நினைவுகளும் வந்தலைந்து போவதுண்டு. 

கார்த்திகேயனைக் கண்டே எத்தனையோ மாதங்களாகி விட்டன. அவள் பார்வைக்கப்பால் மறைந்துவிட்டானா. வந்து கொஞ்சக் காலத்தில் திரும்பிய இடத்திலெல்லாம் அவனைக் கண்டதும் பழகியதும் கனவுபோல் இருந்தது. சிவனேசனின் கொடுமையான பார்வையின் கருத்துக்கள் கார்த்திகேயனின் நினைவுகளை ஞாபகம் வரப் பண்ணின. இப்படிப் பார்த்து, தன்னைப் பார்த்து, ஒருமாதிரி ஏளனமாகச் சிரிக்காமல் ஏன் தன்னிடம் கார்த்திகேயனைப் பற்றிக் கணவன் நேரே கேட்கக்கூடாது என்று கூடச் சிலவேளைகளில் நினைத்தாள். அந்த வேளையும் ஒருநாள் வந்தது. 

சொந்தக்காரரைப் பார்க்கப் பாரிசுக்குப் போக வேண்டும் என்று ஆயத்தம் செய்துகொண்டிருந்தான் சிவநேசன். நியூ யோர்க் போய்விட்டால் இனி எப்போது லண்டனுக்கு வருவது என்று தெரியாது. “லண்டன் அலுத்துப்போனால் நீரும் வரலாம்” என்றான் சிவனேசன். காதலர்களின் களிப்பிட மான பாரிசுக்கு கால்பட்டால் குற்றம் கைபட்டால் குற்றம் என்று பிழைப்பிடிக்கும் கணவருடன் எப்படிப் போவது என்று யோசித்தாலும் போகாவிட்டால் அதில் இன்னொரு சண்டை வரும் என்று நினைத்துக்கொண்டு போகச் சம்மதித்தாள். 

கார்த்திகேயனுடன் சகுந்தலாவைக் கண்ட சிவனேசன் என்ன சொல்வானோ எப்படி நடந்து கொள்வானோ என்று மன துக்குள் பயந்துகொண்டிருந்த பேரின்பநாயகத்தார் மருமகனின் தாராள மனப்பான்மை கண்டு சந்தோசப்பட்டார். இருக்கும் வீட்டை மீனாவுக்குக் கொடுப்பதாக வைத்திருந்த தாகவும். இனி என்ன அவள்விதி அப்படியாய்ப் போய்விட்டது எல்லாம் உங்களுக்குத்தான் என்று சிவனேசனுக்கு ஐஸ் வைத்தார். ஒருவிதத்தில் சகுந்தலாவை விட்டுவிட்டுப் போகாதே எதையும் தந்து உன்னைச் சமாளிக்கிறேன் என்பதுபோல் இருந்தது அவர் செய்கை என்று பட்டது சகுந்தலாவுக்கு. 

சிவனேசனும், சகுந்தலாவும் தாங்கள் நினைத்தபடி சந்தோச மாக இல்லை என்று தெரிந்து தாய் தகப்பன் செய்யும் வியாபார உடன்படிக்கைகள் அவள் மனத்தைச் சுக்குநூறாக்கின. தன் வாழ்க்கையை – தனக்கு முன்னாலேயே மூன்றாம் நபர் போல் தன்னை வைத்துக்கொண்டு நிர்ணயிப்பதாகப்பட்டது அவளுக்கு. என்ன சுயநலம்? 

இதைவிட – இந்தப் போலியான உறவுகளை உதறி விட்டு நிம்மதியாக இருக்கவேண்டும்போல் இருந்தது. இப்படி ஒவ்வொருவரும் ஒழித்து மறைத்துப் போலி நாடகம் போடாமல் என் உண்மையாக யோசித்து உண்மையாக வாழக்கூடாது? அப்படி ஒரு காலமும் அப்படி ஒரு சமுதாயமும் உருவாகாதா என்று யோசித்தது அவள் மனம். அப்படி ஒரு சமுதாயம் உருவாகும்வரை தன்னைப்போல் பெண்களின் சீவியம் இப்படி இரண்டும் கெட்டதாகவா இருக்கும்? 

பாரிசுக்குப் போகும் வழியில் சிவனேசன் கேட்டான் “கார்த்தியுடன் லண்டன் முழுக்கத் திரிந்ததாகக் கதை.” 

ஏன் எதற்கு இந்தப் பேச்சை எடுக்கிறான் என்று தெரிய வில்லை. ‘இதைச் சொல்லிச் சண்டைபிடிக்கத்தான் பாரி சுக்குக் கூட்டிக்கொண்டு போவதானால் சண்டையை இங்கிலாந்திலேயே வைத்திருக்கலாம்” என்று சொன்னாள் சகுந்தலா. 

“நான் சண்டை பிடிக்கக் கூட்டிக்கொண்டு வரவில்லை. அப்படி யோசிப்பவனாக இருந்திருந்தால் உம்மைக் கார்த்தி யுடன் கண்ட அடுத்த நாளே, உமது தங்கச்சியின் செத்த வீட்டுக்கும் நிற்காமல் போய் இருப்பேன்.” 

“அப்படி பெரிய மனது படைத்தவர் ஏன் இப்படி நடுக்கடலில் இந்தப் பேச்சை எடுக்கவேணும்” அவளுக்கு அழுகை வந்தது. கப்பலில் இருந்து கடலில் குதிக்கவேண்டும் போல் இருந்தது. கப்பல் இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் இடையில் போய்க் கொண்டிருந்தது. ஒருபக்கத்திலும் நிலத்தின் எந்த அடை யாளமும் இல்லாமல் வெறும் நீர்ப்பரப்பாய்த் தெரிந்தது. தன் வாழ்க்கையும் இப்படித்தானே என்று பெருமூச்சு விட்டாள். குழந்தை கப்பலில் அங்கும் இங்கும் ஓடி சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தாள். 

அமெரிக்கா போனதும் பழைய குருடி கதவைத் திறடி என்றி ருக்கப் போகிறது என்று நிச்சயமாகத் தெரிந்தது. லண்டனில் தாய் தகப்பனுக்கு முன்னால் எதுவும் பேசாமல் இருந்துவிட்டு டோவரில் கப்பல் ஏறியவுடன் நையாண்டியும் நகைச் சுவையு மாகத் தன்னைச் சீண்டி அழப்பண்ணி வேடிக்கை பார்க்கும் தன் கணவனை யோசித்துப் பார்க்க இதயம் வெடித்தது. இந்தக் கேவலமான சீவியத்தைவிட உஷாவைப்போல் விவாகரத்துச் செய்துகொண்டால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் என்று கூட யோசித்தாள். 

உஷாவைப்போல் ஏன் தனக்கும் துணிவு இல்லை என்பது இன்னும் வேதனையாக இருந்தது. பாரிஸில் அவனுடைய சொந்தக்காரர்களுக்கு முன் எப்படி நடத்துவானோ என்று மனம் அடித்துக் கொண்டது. அப்படிப் பயப்பட்டதுபோல் இல்லை. போயிறங்கியவுடன் எங்கெங்கே போவது யார் யாரைப் பார்ப்பது என்று அவசரஅவசரமாகச் செய்ய வேண்டியிருந்தது. 

அத்துடன் திரும்பிய இடமெல்லாம் கலைத்தன்மை வாய்ந்த பழம் நகரின் அழகு மனத்தின் துயரை மறக்கப்பண்ணியது. கட்டிட அமைப்பும் தெருக்களும் கடைவீதிகளும் லண்டனைப் போல நெருக்கியடித்துக் கொண்டிருந்தாலும் லண்டனில் இருப்பதை விட ஏதோ ஒரு கலைத்தன்மை கலந்துறைந்தது போல் இருந்தது பாரிஸ் நகரில். வந்து இரண்டு மூன்று நாட்கள் சுற்றிச் சுற்றிப் பார்த்தும் அலுக்கவில்லை. 

அன்று இரவு லண்டனுக்குத் திரும்புவதாகத் திட்டம். அதற்கு முன்னால் பாரிசுக்கு வெளியே உள்ள அமெரிக்கன் கம்பனி ஒன்றில் வேலைசெய்யும் தன் சினேகிதனைப் பார்த்துவிட்டு வருவதாகச் சிவனேசன் தன் உறவினரின் காரில் போய்விட் டான். கீதாஞ்சலி இரண்டு மூன்று நாள் அலைச்சலில் களைத்துப்போய் விட்டாள். லண்டனுக்குப் போகமுதல் வாங்க வேண்டிய ஒன்றிரண்டு சாமான்கள் வாங்கவேண்டி இருந்ததால் ஒருதரம் கடைத் தெருவுக்குப் போக நினைத்தாள். 

பிரான்சுப் பாஷை தெரியாதபடியால் போகும் பாதையைக் கவனமாகப் பார்த்துக்கொண்டு போயும் வரும்வழியைத் தவற விட்டதும் என்னசெய்வது என்று தெரியவில்லை. வீடு அதிகம் தூரமில்லை. ஆனால் திரும்பிய பக்கமெல்லாம் ஒரே மாதிரித் தெரிந்தபடியால் எந்தப் பக்கம் போவது என்று தெரிய வில்லை. யாரையும் கேட்கவும் மொழி தெரியவில்லை. ஆங்கிலச் சொல் கேட்டாலே பிரன்சுக்காரருக்குக் கோபத்தில் வலிவந்து விடும். ஆனால் ஒன்றிரெண்டு பேரைக் கேட்டும் சரியான மறுமொழி கிடைக்கவில்லை. அவசரத்தில் ஏன் மூளை மழுங்கிப் போகிறது என்று பலருக்குத் தெரியவில்லை. அன்று சகுந்தலாவுக்கும் தெரியவில்லை. கடைசியாகத் தான் தெரிந்தது சொந்தக்காரருக்குப் போன் பண்ணிக் கேட்கலாம் என்று. தான் எவ்வளவு முட்டாள்தனமாக நேரத்தை விரயமாக்கி நடந்துகொண்டேன் என்று தன்னைத் தானே நொந்துகொண்டாள். 

கைப் பையைத் திறந்து டெலிபோன் நம்பரை எடுத்துக் கொண்டு டெலிபோன் பூத் இருக்குமிடத்துக்குத் திரும்பிய போது “சகுந்தலா” என்று குரல் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும் பினாள். கார்த்திகேயனும் இன்னும் சில வாலிபர்களும் நின்று கொண்டிருந்தார்கள். எல்லோரும் இலங்கையர்போல் தெரிந்தது. லண்டனைவிட்டு இவ்வளவு தூரம் வந்தும் பாரிஸ் நகர மாலைநேரத்தில் அவனைக் காணுவது அவளால் நம்பமுடி யாமல் இருந்தது. அவனைக் கண்டு சில மாதங்களாகி விட்ட படியால் அவள் கண்களுக்கு அவன் மெலிந்து தெரிந்தான். புரட்டாதி மாதத்தின் ஆரம்பம் என்றபடியால் குளிர் காற்ற டித்தது. அவள் குளிருக்கு ஓவர்கோட்டைப் போட்டபடி கேட் டாள் “என்ன செய்கிறீர்கள் பாரிஸில்” அவன் முகத்தில் வழக்கம் போல் ஒரு குறும்புச்சிரிப்பு மறைந்தது. முன் ஒரு காலத்தில் என்றால் “உமக்குப் பின்னால் உலகமெல்லாம் ஓடிக் கொண்டிருக்கிறேன்” என்று சொல்லியிருப்பான். ஆனால் இப்போது அந்தவிதமாகச் சொல்ல அவனுக்கு விருப்பமில்லை. அதை அவள் ரசிக்கவும் மாட்டாள் என்று தெரிந்தது. 

“சினேகிதன் ஒருவனுக்கு கல்யாணம். அதற்கு வந்தோம்” என்றான். மற்றவர்களிடம் பின்னர் சந்திப்பதாகக் கூறி விட்டு அவள் பக்கம் திரும்பினான். “என்ன பாரிஸ் ஷொப் பிங்கா” என்றான் அவன். 

“எதையாவது வாங்குவதுதான் வாழ்க்கையின் லட்சியம் என்று நினைக்கிறீர்கள் போல கிடக்கு” அவள் பெருமூச்சுடன் சொன்னாள். வழி தவறி கனதூரம் நடந்ததால் நேரமாகி விட்டது. அவள் கைக்கடிகாரத்தைப் பார்த்தாள். 

”போகவேணுமா” என்றான். அவன் குரல் வித்தியாசமாய் இருந்தது. லண்டனுக்கு வந்த நாளில் தன்னைக் கிண்டலா கவும், எடுத்தெறிந்தும் நடத்திய கார்த்திகேயனின் குரல் போல் இல்லை. ஏழெட்டு வருடங்களுக்கு முன் பார்க்குகளில் கள்ளமாகச் சந்திக்கும்போது கேட்ட குரல்போல் இருந்தது. 

“இரவு புறப்படுகிறோம் லண்டனுக்கு” அவள் அவன் முகத்தைப் பார்க்காமல் சொன்னாள். 

“எப்போ நியூயோர்க் பிரயாணம்” அவன் அதைப்பற்றி ஏன் அக்கறைப்பட வேண்டும் என்று அவளுக்குத் தெரியவில்லை. நிமிர்ந்து பார்த்தாள். அவன் பார்வை மிகக்கூர்மையாக அவளில் பட்டு மறைந்தது. 

“என்ன பார்க்கிறீர்கள்” அவள் கேட்டாள். “சரியாக மெலிந்து விட்டீர்” அவன் குரலில் பரிதாபம் இருந்தது. 

மீனாவின் மரணத்தால் ஏற்பட்ட துக்கம் மட்டுமல்ல அவளின் சொந்த வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகளும்தான் அவளின் சோகமான தோற்றத்துக்குக் காரணம் என்று தெரி யும். அவள் மறுமொழி சொல்லவில்லை. 

“வழி தவறிப் போய்விட்டேன். எப்படி வருவது திரும்பி என்று போன் பண்ணிவிட்டு வாறன்” அவள் சொன்னாள். 

“எங்கே போகவேணும்” அவன் கேட்க அவள் இடத்தைச் சொன்னாள். 

“நான் கொண்டுபோய் விடுறன்” என்றான். அவள் போன் பண்ணித் தான் தொலைந்து போய்விட்டதையும் கூடிய சீக்கிரம் வீடு வருவது பற்றியும் சொன்னாள். 

“ஷொப்பிங் எல்லாம் முடிஞ்சுதா” அவன் கேட்க அவள் தலையாட்டினாள். 

“ஒரு பத்து நிமிடம் கதைக்க முடியுமா” எப்போதும் ஏதோ உலகம் அழியப்போகிறது என்பதுபோல் ஓடிக் கொண்டிருப் பவன் இன்று கொஞ்சம் கதைக்க நேரம் கிடைக்குமா என்று கேட்டது ஆச்சரியமாக இருந்தது. அவள் நிமிர்ந்து பார்த் தாள். 

“விருப்பமில்லை என்றால் வேண்டாம்” அவன் வெறும் குரலில் சொன்னான். குரலில் தன் ஏமாற்றத்தை மறைக்கத் தெண்டிப்பது தெரிந்தது. 

“என் விருப்பு வெறுப்பில் எல்லோருக்கும்தான் பெரிய அக்கறை” அவள் குரல் கரகரத்தது. 

“எல்லோரின் அக்கறைக்கும் விட்டுக்கொடுப்பதுதான் பெருந் தன்மை என்று பெண்களை நம்பப்பண்ணி வைத்திருக்கும் சமுதாயத்தில் நீர் மற்றவர்களின் அக்கறைகளுக்காகப் பயன் படுத்தப்படுவது தெரியாதா” அவன் கேட்டான். 

“சும்மா போங்கோ. பெரிய பெரிய ஏதோ கதைத்து என்ன கிழிச்சுப் போட்டியள்.” அவள் எடுத்தெறிந்து பேசினாள். 

இருவரும் பக்கத்தில் இருந்த பெஞ்சில் உட்கார்ந்தார்கள். லண்டனில் குரொய்டன் ரோட்டுக் கரையில் அழுது கொண்டு இருந்த சகுந்தலா ஞாபகம் வந்தது அவனுக்கு. இன்னும் சில மணித்தியாலங்களில் லண்டன்- பின்னர் நியூயோர்க் அதன்பின் எங்கே காணப்போகிறான். 

“சகுந்தலா ஒடுக்குமுறைகள், அநியாயங்கள் எங்கெல்லாம் இருக்கின்றனவோ அங்கெல்லாம் அதை எதிர்க்கும் வரை அநியாயங்கள் அழியாது. சொந்த விடயமாகட்டும், பொது விடயமாகட்டும் அநியாயங்களுக்கு எதிர்ப்புக்காட்டுவது பாவமில்லை”. 

அவன் சொல்லி முடிக்கவில்லை. அவள் முணுமுணுத்தாள், லண்டனில் முழங்குகிறது போதாதென்று பாரிசுக்கும் வந்திருக்கிறியள் போராட்டம் பற்றிக் கதைக்க.” 

“உண்மைதான், சினேகிதனின் கல்யாணத்துக்கு வந்தது என்று சொன்னது பொய். பாரிஸ்வாழ் தமிழ் இளைஞர்களின் கூட்டமொன்றுக்குத்தான் வந்தன்” அவன் சொல்லி முடிய அவள் நீர் வழியும் கண்களுடன் பார்த்தாள். 

“சும்மா விசர்க் கதைகள் கதைத்துப்போட்டு சுடுபட்டுச் சாகாதேங்கோ. கிழடுகள்தான் சும்மா வேலையில்லை எண்டு புலம்புதுகள் எண்டால் நீங்களும்……” அவள் முடிக்காமல் அழுதாள். 

“சகுந்தலா கிழடுகள் சும்மா புலம்பவில்லை, சுயநல விளம்பரத்துக்காகக் கோமாளிக் கூத்துக்கள் செய்கிறார்கள். தங்கள் பட்டங்களைக் காட்டிப் பாமரத் தமிழ் மக்களை ஏமாற்றுகிறார்கள். கடந்த காலங்களில் எத்தனை நாடகங் கள் நடத்தியும் தலைமைப் பதவிக்கும், பிரமுகர் தகுதிக்கும் தமிழ் மக்களை விற்ற இந்தப் போலித் தலைவர்கள் சும்மா புலம்பவில்லை. தங்கள் சுயநலத்திற்கு, ஒரு இனத்தின் எதிர்காலத்தைப் பற்றிய ஒரு முழுமையான திட்டமுமின்றி அப்பாவித் தமிழ் மக்களை ஏமாற்றுகிறார்கள். இதன் உண்மை சொரூபத்தைச் சாதாரண மக்களுக்கு எடுத்துச் சொல்ல யாராவது முன்வரவேணும். இது உமக்கு முட்டாள் தனமாகப் படலாம். தன் சொந்த வாழ்க்கையைச் சரியாகப் புரிந்துகொள்ளத் தெரியாத உமக்கு ஒரு பெரிய அரசியற் பிரச்சனை என்னவென்று விளங்கும்?” அவன் அலுத்துக் கொண்டான். 

அவள் கோபத்துடன் கண்களில் பொறி பறக்க எழும்பினாள். “உங்களுக்கென்ன? எதிலும் நம்பிக்கையில்லாதவர்கள். சொந்த வாழ்க்கையைப் புரிந்து சரிவர நடத்தத் தெரியாத வள் என்று நீங்கள் சொல்லத் தேவையில்லை…… கல்யாணம் என்ன காலில் போடும் சப்பாத்தா தேய்ந்தால் இன்னொன்று வாங்க” அவள் குமுறினாள். 

“தேய்ந்தால் எடுத்தெறிய ய வேணும். போட்டிருந்தால் பைத்தியம் என்று சொல்லிவிடுவார்கள்.” அவன் விட்டுக் கொடுக்காமல் சொன்னான். அவள் ஒன்றும் சொல்ல வில்லை. பாரிஸ் நகரம் மாலைப் பொழுதில் தன்னை மறைத்துக்கொள்ளத் தொடங்கியது. அவன் டாக்ஸிக்குக் கை காட்டினான். பாரிஸ் காதலர்களின் களிப்பிடமாம். கலைக்கும், காதலுக்கும் பிறப்பிடமோ என்னவோ அவளைப் பொறுத்தவரையில் அந்த இடமும் அந்த நிமிடமும் அவன் அருகில் இருப்பது என்னென்னவோ நினைவுகளைக் கிளறி விட்டது. 

தானே யோசிக்கப் பயப்படும் – பயப்படுவதாகப் பாசாங்கு பண்ணும் சில விடயங்களை அவன் எடுத்தெறிந்து பேசுவது அவள் இருதயத்தைக் குத்திப் பிளந்தது. அவனிடம் அவள் அதைவிட வேறுவிதமான கருத்தை எதிர்பார்க்க முடியாது.

வெறும் உணர்வுகளின் மயக்கமோ-இளமைத் துடிப்பின் தாக்கமோ ஏதோ ஒன்றின் சங்கமத்தில் அவர்களின் உறவு ஆரம்பித்த நாளிலிருந்து உறவுகளையும் வாழ்க்கை முறைகளையும் பார்க்கும்விதம் வேறுவிதமானது. அவனை அவளாற் புரிந்துகொள்ள புரிந்துகொள்ள முடியாது. இப்போது அவன் என்ன சொல்கிறான் என்றும் முழுக்க விளங்கிக்கொள்ளாமல் மூளை குழம்பிப்போய் இருந்தது. 

மற்றவர்களின் நம்பிக்கைகள். கௌரவங்கள். வாழ்க்கை ஒப்பந்தங்கள் என்று தன் வாழ்க்கையைப் பறிகொடுத்துவிட்டு அந்தக் கதி தங்கச்சிக்கும் வரக்கூடாது என்று பாடுபட்டதை அவன் அறியமாட்டானா. 

இருவரும் மௌனமாக இருந்தார்கள். ஒரு காலத்தில் இப்படிச் சந்திப்புகள் இனிமையாகவும் உணர்ச்சிக் குவியலாகவும் இருந்ததுண்டு. வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தின் கரையில் கலகலத்த அவன் குரல் காற்றோடு கலந்து அவள் காதில் கிசுகிசுப்பது போலிருந்தது. அதை நினைக்க அவள் கண் களில் நீர் புரண்டது. அதை அவன் பார்க்கக்கூடாது என்ப தற்காக முகத்தைத் திருப்பினாள். அவனுக்குத் தெரியும் அவள் அழுகிறாள் என்று. ”சகுந்தலா” என்றான். அவள் திரும்பிப் பார்க்கவில்லை. அவன் அவள் முகத்தைத் தொட்டுத் திருப்பினான். அவள் எதிர்பார்க்கவில்லை அவன் தன்னை தொடுவான் என்று. 

அவசரத்துடன் திரும்பினாள். அவள் கண்களை அவன் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான். 

“சகுந்தலா ஊருக்கு மறைத்து அழுவது சுகம். ஆனால் உனக்கு உன்னை ஏமாற்றுவது சுகமில்லை. எத்தனை காலம் இப்படி அழுவதாக யோசனை” அவன் கேட்டான். அவன் கேள்வியும் பரிவும் இன்னும் அழுகையைக் கூட்டி விட்டன. 

எத்தனை காலம் அழப்போகிறாளாம். அவர் கேட்கிறார். பதில் சொல்ல அவள் என்ன ‘சிங்கிளாயர் கால்குலேட்டரா வைத்திருக்கிறாள் கணக்குப் பார்த்துச் சொல்ல. 

கணவன் கடல் நடுவில் வைத்துச் சொன்னான் இவள் லண்டனில் கார்த்தியுடன் ‘திரிந்ததை’க் கேள்விப்பட்டதாக. திரிந்ததன் கருத்து நியூயோர்க் போனபின் எவ்வளவு திரிபு பட்டு அவள் இருதயத்தை இறுக்கப்போகிறது என்று இவனுக்கு எங்கே தெரியும்? “எங்களைப்போல பெண்கள் அழாமல் என்ன செய்வது” அவள் கேவினாள். 

”உங்களைப்போல பெண்கள் என்றால் என்ன கருத்தில் சால்கிறாய் என்று தெரியாது. பெண்களோ யாரோ தங்கள் வாழ்க்கைக்குத் தங்களின் வாழ்க்கை அமைப்புமுறைதான் காரணம் என்று ஏதோ விளங்காத உண்மைகளை நம்பிக் கொண்டு இருப்பதாற்தான் இந்த வினை. சகுந்தலா. தன் சுய உழைப்பைக் கொள்ளையடிக்கும் முதலாளியை எதிர்க் காத வரை எந்தத் தொழிலாளிக்கும் விடுதலை இல்லை. அதே நேரம் பெண்மை, கற்பு, கத்தரிக்காய் என்றெல்லாம் சொல்லி பெண்களை அடக்கும் ஆண்களை எதிர்க்காதவரை உம்மைப் போல பெண்களுக்கு விடுதலை கிடையாது. சகுந்தலா, அடக்கு முறைகளுக்குப் பல தர்மமான, பண்பான பெயர்கள் வைத்திருப்பதால் அதெல்லாம் நியாயம் என்று ஒத்துக் கொள்ளக்கூடாது. கல் என்றாலும் கணவன் புல் என்றாலும் புருஷன் என்று ஏன் சொன்னார்கள் தெரியுமா? பெண்கள் மனத்தில் ஆண்களின் கொடுமைகளுக்கெதிராக உண்டாகும் போராட்ட உணர்ச்சியை இல்லாமல் செய்யத் தான். 

பெண்மையைப் பற்றியும் பெண்களைப் பற்றியும் எழுதிய தெல்லாம் ஆண்கள். கடவுளைப் பற்றியும் கற்பைப் பற்றியும் எழுதியவர்களும் அவர்களே. அதனாற்தான் அவர்களின் கருத்துக்கள் தாங்கள் விரும்பிய பொருட்களை விரும்பிய இடத்தில் வைத்திருக்கப் பண்ணியிருக்கிறது.” அவன் பேசிக்கொண்டே போனான். அவளுக்குப் பொறுமையில்லை. 

‘”உங்கள் உபதேசத்தை ஏதோ ஒரு மண்டபத்தில் வைத்துக் கொள்ளுங்கள் எனக்கு வேண்டாம்.” அவள் கோபத்தில் கத்திவிட்டுத் தெருமுனையில் இறக்கிவிடச் சொன்னாள். 

“சில பெண்களுக்குத் தங்களைத் தாங்களே வருத்திக் கொள் வதில் ஒரு திருப்தி. தன் ஆத்மீக உணர்ச்சிகளைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டு மற்றவர்கள் கண்களுக்கு நல்ல பிள்ளைப் பட்டத்துக்கு நடிப்பதும் ஒரு வியாபாரம்தான். முதலாளியும், ஏகாதிபத்தியவாதியும் தங்கள் சுயதேவைக்கு மற்றவர்களின் உழைப்பையும் உரிமையையும் விலைக்கு வாங்குகிறார்கள். உன் போன்ற பெண்கள் ஊருக்கு வேடம் போட தியாகம், பெண்மை, கற்பு, குடும்பம் என்ற கௌரவ மான சொற்களுக்காகத் தங்களையே விற்றுக்கொள்கிறார்கள். தங்கள் தன்மானத்தை-சுய உணர்வை விற்றுக் கொள்கிறார்கள்.” அவன் அவளைப்போல் உணர்ச்சிவசப் பட்டுச் சொல்லாமல் தெளிவாகச் சொன்னான். அவள் மௌனமாகக் கேட்டுக்கொண்டு நடந்தாள். வீடு வந்ததும் சொன்னாள், “புத்திமதிக்கு நன்றி.’ அவள் குரலில் இருந்த கிண்டல் அவனுக்குச் சரியாகப் புரிந்திருந்தது. 

“போதனைக்குச் சம்பளம் கொடுத்தால் பெரிய பணக்கார ராகி விடுவீர்கள்” அவள் முணுமுணுத்தாள், அவன் மறு மொழி சொல்லவில்லை. அவளைப் பின்தொடராமல் தெரு முனையில் நின்றபடி அவள் போவதைப் பார்த்தபடி நின்றான். பாரிஸ் நகரத்தின் மாலை நேர இருளில் அவள் மறைந்து போவது ஒரு சோக சித்திரத்தை ஞாபகப் படுத்துவதுபோல் இருந்தது. வீட்டுக்குள் நுழையமுதல் அவள் திரும்பிப் பார்த்தாள். அவன் நின்றிருப்பது தெரிந் தது. ஒருசில வினாடிகள் நின்று பார்த்துவிட்டு உள்ளே போனாள். சிவனேசன் எப்போதோ வந்துவிட்டான். 

“பாரிஸ் ரோட்டில் எங்கோ தொலைந்துவிட்டீர் என்று பயந்து விட்டேன்” என்றான் சிவனேசன். வழக்கமாகப் பாய்ந்திருப்பான் “தெரியாத இடங்களுக்கு ஏன் போய்த் தொலைக்கவேண்டும்” என்று. இன்று கணவரின் குரலில் கிடைத்த அமைதியையும் அன்பையும் அவளால் நம்ப முடியாமல் இருந்தது. நான் ஒன்றும் தொலையவில்லை. ஆனால் தொலைந்துபோக விரும்பிய ஒன்றிலிருந்து விடுபட முடியாமல் திண்டாடினேன் என்று சொல்லவேண்டும்போல் இருந்தது. 

லண்டனுக்குத் திரும்பவேண்டிய நேரம்வர சாமான்களைக் கட்டுவதில மும்முரமாக ஈடுபட்டார்கள். பின்னேரம் கணவன் வாங்கிவந்த சாமான்களை அடுக்கும்போது அழகாகப் பார்ஸல் பண்ணப்பட்டிருந்த பெட்டி கண்ணில் பட்டது. திறந்து பார்த்தாள். மிகவும் விலையுயர்ந்த சேலைகள். அழகான-அவளுக்குப் பிடித்த நீலநிற சரிகைச் சேலைகள், சினேகிதனைப் பார்க்கப் போவதாகச் சொல்லிவிட்டுத் தன்னை அழைத்துச் செல்லாமல் போனது இதற்குத்தான் என்று அவள் மனம் சொல்லியது. 

கணவன் அவளில் அன்பு காட்டத் தொடங்கிவிட்டானா? அவளால் நம்பமுடியாமல் இருந்தது. இருவரும் கடைக்குப் போய் அவள் விருப்பமானவற்றை வாங்கலாம் என்று சொல்லிவிட்டு எங்கோ பார்த்திருந்த சிவனேசன் மாறத் தொடங்கிவிட்டானா? அவள் ரசனையைப் புரிந்து அவளுக்கு மனதுக்குப் பிடித்த மாதிரி நடக்க முயன்று விட்டானா? அவளால் நம்பமுடியாமல் இருந்தது. 

ஆனாலும் தன் வாழ்க்கையில் ஒரு சந்தோஷ மாற்றம் வருவதை அவள் இழக்கத் தயாராயில்லை. அவன் இந்த அன்பளிப்பு பற்றிப் பேசும் வரை ஒன்றும் தெரிந்ததுபோல் காட்டிக்கொள்ளக் கூடாது என்பதால் எல்லாவற்றையும் அடுக்கி வைத்தாள். 

நடு இரவில் கப்பல் புறப்பட்டது. பாரிஸ் நகர நினைவுகள் நிழலாடியது. பிரான்ஸ் நாட்டின் கரை கண்ணில் இருந்து மறையத் தொடங்க அங்கே பாரிஸ் நகரக் கட்டிடமொன்றில் நாளைக்குக் கூட்டம் வைக்கப்போகும் கார்த்திகேயனின் முகம் ஞாபகம் வந்தது. அவன் சொன்னதெல்லாம் ஞாபகம் வந்தது. தான் மெலிந்து சோர்ந்துபோய் இருப்பதைப் பார்த்துத் தன்னில் பரிதாபப்பட்டு புத்தி சொன்னது ஏதோ எத்தனையோ வருடங்களுக்கு முன் நடந்ததுபோல் இருந்தது. 

“உமது அப்பா என்ன சொன்னார்”. சிவனேசன் நினையாப் பிரகாரமாகக் கேட்டான். அவளுக்கு விளங்கவில்லை என்ன கேட்கிறான் என்று. “எதைப் பற்றி” அவள் கேட்டாள் விளங்காமல் 

“லண்டனில் உள்ள வீட்டை உமக்குத் தருவது பற்றிக் கதைத்தாரே, எப்போது எழுதுகிறாராம்” சிவனேசன் கேட்டான். உடனடியாக எழுதித் தருவதாக எதுவும் கதைத்ததாக ஞாபகம் இல்லை. அத்துடன் நியூயோர்க்கில் சீவிக்கும் இவர்களுக்கு ஏன் லண்டனில் வீடு. அவள் குழம்பிப்போய்க் கேட்டாள் “ஏன் அதைப் பற்றி அவசரம்.” 

“லண்டனில் ஒரு வியாபாரம் தொடங்க யோசிக்கிறன். கையில் காசிருந்தால் கெதியாகத் தொடங்கலாம்.” சகுந்தலாவுக்கு கடந்த சில நாட்களாக விளங்காததெல்லாம் உடனடியாக விளங்கியது. 

பாரிஸ் நகரத்துக்குக் கூட்டி வந்ததும், கார்த்தியின் கதை தெரியும் என்று மறைமுகமாகப் பயப்படுத்தியதும், அழகிய சேலைகள் வாங்கியதும் எல்லாம் இவற்றுக்குப் பிரதிபலனாக இவள் தகப்பனிடம் என்னென்ன வாங்கலாம் என்பதைத் திட்டம்போட்டுத்தானா? கார்த்திகேயன் சொன்னதுபோல் எந்தவித உறவுமே வியாபார அடிப்படையிலா? இவள் அவன் ஒப்பந்தங்கள் சரிவராது என்று சொன்னால் திரும்பவும்…… கணவன் கேட்ட கேள்விகளுக்கு அவள் மறுமொழி சொல்ல வில்லை. கணவனின் திட்டம் விளங்கியது. 

“அமெரிக்கா போகமுதல் இதெல்லாம் செய்து முடிய வேணும்” அவன் சொன்னான் அவசரத்துடன். “நீங்கள் போக முதலா” அவள் அமைதியாகக் கேட்டாள். அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது. அந்தக் குரலின் அமைதி அவளுக்குப் பிடித்திருந்தது. 

“ஏன் நீர் எப்போது வரப்போகிறீர்” கணவன் விளங்காமற் கேட்டான். 

“தெரியாது.தெரிந்தபின் சொல்வன்” அவள் குரலில் நிம்மதி. திரும்பிப் பார்த்தாள். கடலுக்கப்பால் கார்த்திகேயன். ஒருநாள் திரும்பி வருவான் தானே? அவள் நிம்மதி யாகப் பெருமூச்சு விட்டாள்.

(முடிந்தது)

– உலகமெல்லாம் வியாபாரிகள், முதற் பதிப்பு:  ஏப்ரல் 1991, நீலமலர், சென்னை.

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் இராஜேஸ்வரி பாலசுப்பிமணியம் கிழக்கு இலங்கையில் பிறந்து லண்டனில் கடந்த 45 வருடங்களாக வாழ்கிறேன். கல்வி: மானுட மருத்துவ வரலாற்றில் முதமாமணிப்பட்டம் (எம்.ஏ) திரைப்படத்துறையில் பி.ஏ ஹானர்ஸ் பட்டம்.இன்னும் பல பட்டங்களும் தகுதிகளும் எழுத்துக்கள்: 7 நாவல்கள், 6 சிறுகதைத் தொகுப்புக்கள், 2 மருத்தவ நூல்கள, 1 முரகக் கடவுள் வழிபாடு பற்றிய ஆராய்ச்சி. இலங்கையிலும் இந்தியாவிலும் பல விருதுகள் கிடைத்திருக்கின்றன. கோவை ஞானி ஐயாவின் உதவியுடன் பதினொருவருடங்கள் பெண்கள் சிறுகதைப்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *