உற்றிடத்துதவும் உணர்வு




(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மெய்யறிவு படைத்தவர்கள்கூட இடுக்கண் வந்த காலத்தில் உணர்விழந்து போவதுண்டு. மிகச் சிலரே அப்போதும் உய்த்துணர்வு தவறா திருப்பர்.
பொருட் செல்வத்துடன் அறிவுச் செல்வமும் நிரம்பப் பெற்ற பெருந்தகை ஒருவர் இருந்தார் அவர் அஞ்சா நெஞ்சுடையவர் என்று பேர் வாங்கி யிருந்தார். ஓராளுக்கு ஓராளாகத் தன்னை வந்து எதிர்க்கும் எவனுக்குந் தாம் அஞ்சுவதில்லை என்று அவர் அடிக்கடி கூறுவார்.
ஒருநாள் அவர் காட்டுவழியில் பெட்டி வண்டியேறிச் சென்று கொண்டிருந்தார். அப் போது சட்டென ஒரு திருடன் வண்டியை நிறுத்திப் பலகணி வழியாக அவர் மார்புமீது கைத் துப்பாக் கியை நீட்டிய வண்ணம், “எங்கே தனி மனித னுக்கு அஞ்சாத நும் தறுகண்மை? இப்போது பணிந்து பணத்தைக் கொடுக்கிறீரா ? உம்மைச் சுட்டு விடட்டுமா ?” என்று உறுக்கினான்.
செல்வர் அமைதி இழவாமல் பணப்பையை எடுப்பவர்போல் சட்டைப் பையில் கையை இட்டுக்கொண்டே, “ஆம்; நான் சொல்லியதில் தவறொன்றுமில்லை. இப்போதும் நீ ஓராளாக வந் திருந்தால் யான் அஞ்சேன். உன்னுடன் அதோ உன் தோழனும் நிற்கின்றானே!” என்றார்.
” இஃதென்ன இந்த நல்ல நேரத்தில் நமது திருட்டில் பங்கு கொள்ளவந்த சனியன்!” என் றெண்ணித் திரும்பிப் பார்த்தான் திருடன். அந்தத் தறுவாய்க்கே காத்திருந்தார் செல்வர். பணப்பையை எடுப்பவர்போற் கையிட்டபோது, அவர் கையிற் பற்றியது பணப்பையை யன்று. மருந்து நிறைத்து முன்னெச்சரிக்கையாக வைத்திருந்த கைத் துப்பாக்கியைத்தான். திருடன் திரும்பியதும் அவர் அவனைச் சுட்டு வீழ்த்தினார்.
வலிமையால் அவரை வெல்ல எண்ணிய திரு டன், அவர் அறிவுக்குத் தோற்று அழிவுற்றான்.
– கதை இன்பம் (சிறு கதைகள்), மலர்-க, முதற் பதிப்பு: 1945, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், திருநெல்வேலி.