உயிரும் அது கொண்ட உடலும்




சம்பவம் 1
மேகம் இருட்டத் தொடங்கியிருந்தது. ஏற்கனவே சூரியன் கீழே விழுந்துவிட்டிருந்தது. இன்னும் பத்துப் பதினைந்து நிமிடத்தில் இருள் நிறைந்துவிடும். வேகமாக நடையைக் கட்டினேன். நெஞ்சில் திக் திக். அவசர அவசரமாக எடுத்துவைக்கும் கால்கள் கடுக்கவும் நடுங்கவும் தொடங்கின.

லைப்ரரிக்குள் நுழைந்தால் வெளியே என்ன நடக்கிறது என்றே தெரிவதில்லை. புத்தகங்களை எடுத்துப் படிக்க ஆரம்பித்துவிட்டால் லைப்ரரி ஸ்டாஃப் விளக்கை அனைக்கும்போதுதான் சுயநினைவே வரும். விருவிருவென புத்தகங்களையும் நோட்டுகளையும் எடுத்து அடுக்கிப் பையில் போட்டுக்கொண்டு வேகமாக சாலையைக் கடந்து ஓடினேன்.
இருட்டியபின் வருவது அப்பாவுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. வயதுக்கு வந்த பெண் என்ற நெருப்பை மடியில் கட்டிவைத்திருக்கிறாராம். எனக்கென்ன பயம்? இருட்டில் வருவது எனக்கு ஒன்றும் பயமில்லையே என்று பயத்தோடு எனக்குள் சொல்லிக்கொண்டு அந்த இருட்டில் நடந்தேன்.
மனசுக்கும் பல சிந்தனைகள். எப்படியாவது இந்தக் கடைசி செமஸ்தரிலும் டீன் லிஸ்ட் போடவேண்டும். எடுத்தால் மொத்தம் எட்டு செமஸ்டரில் ஆறு முறை டீன் லிஸ்டட் நான் தான். எப்படியாவது அஸ்லிசாவை முந்தவேண்டும்.
மொத்தம் ஏழு பரீட்சைகள். எல்லாமே அத்துப்படிதான். இருந்தாலும் நான் இன்னும் படிக்கவேண்டும். இன்சினியரிங் என்றால் எனக்கு அவ்வளவு பிரியம். எவ்வளவோ கஷ்டங்களைத் தாண்டி போராடி இதோ படிப்பின் கடைசிப் பகுதிக்கு வந்துவிட்டேன். இந்த பரீட்சை முடிந்ததும் வேலை; வேலையில் நுழைந்து நான்கைந்து மாதங்கள் கழித்து வீட்டில் இளவரசுவைப் பற்றிச் சொல்லிவிட வேண்டியதுதான். எனக்காக இளவரசு நான்கு வருடங்கள் காத்துக்கிடக்கிறான். என் செல்லக் குறும்பன்…
வரிசைக் கடை வராந்தாவில் நடந்து சின்ன படிக்கட்டுகளில் கீழிறங்கி இடது பக்கம் திரும்பினேன். சின்னதாய் பாதை. இதில் போனால் கொஞ்சம் சீக்கிரம் பஸ் ஸ்டாப்புக்குப் போய்விடலாம். நான் நடந்தேன். எனக்கு முன்னமே நான்கைந்து நாய்கள் போகிற வருகிற எல்லாரையும் பார்த்து என்ன காரணத்துக்காகவோ குரைத்துக்கொண்டிருந்தன. இந்தப் பாதையில் வந்தால் நாய்கள் தொல்லை!
இரவின் குளிர் என் உடல் நடுக்கத்தை மேலும் அதிகரிக்கவைத்தது. கடவுளே கடவுளே கடவுளே என்று ஏதோ ஒரு நம்பிக்கையில் பாதுகாப்புக்காக உச்சரித்தபடி நடந்தேன். நாய்க்கு இல்லையென்றாலும் பேய்க்குக் கடவுள் பெயர் உபயோகப்படும். வேகமாக நடந்தேன்.
இருட்டிவிட்டால் அந்தப் பாதையில் ஆள் நடமாட்டம் குறைந்துவிடும். தனியாகப் போவதை நினைத்தால் கொஞ்சம் அடிவயிறு கலங்கும். தோளில் மாட்டியிருந்த பை கணத்துத் தோள்பட்டையெல்லாம் பயங்கர வலி. கூடவே பசி.
திடீரென யாரோ பேசும் ஓசை கேட்டது. அப்படியே நின்றுவிட்டேன். உள்ளங்கைகள் வியர்த்து ஈரமாகிவிட்டன. உற்று கவனித்தேன். எனக்கு முன்னே நான்குபேர் பேசிக்கொண்டே நடந்தனர். ஹ்ம்ம்.. ஒரு கணம் இருதயம் நின்றேவிட்டது!
எப்படியோ… கொஞ்சம் தூரத்தில் இருந்தாலும் துணைக்கு என்று நினைத்துக் கொண்டேன். ஆண்களைப் பார்த்தால் நாய்கள் அதிகம் குறைப்பதில்லை. அவர்கள் தாண்டி போய்விட்டால் நாய்களிடம் தனியாக மாட்டிக்கொள்ள வேண்டிவரும். அதனால் கொஞ்சம் வேகமாக நடந்து முன்னே நடந்துகொண்டிருந்தவர்களை கொஞ்சம் நெருங்கினேன். அவர்களில் ஒருவன் திரும்பி என்னைப் பார்த்தான். பிறகு மீண்டும் ஏதோ ஜாலியாகக் கதையடித்துக்கொண்டு நடந்துகொண்டிருந்தார்கள். அவர்களை பாதுகாப்பாக வைத்து நாய்களைத் தாண்டி வந்தேன்.
ஆ! காலை எதிலேயே முட்டிக்கொண்டேன். குனிந்து பார்த்தேன். கல். இருக்கிற வேதனையில் இது வேறு! மீண்டும் நிமிர்ந்து நடக்கத் தொடங்கினேன். எனக்கு முன்னே நடந்துகொண்டிருந்த நான்கு பேர் காணாமல் போயிருந்தனர். எனக்கு திக்கென்றது. எங்கே போனார்கள்?
ஒரு சில நொடிகள் திகைத்துப்போனேன். சரி, நான் நிற்கக் கூடாது. வேகமாக நடக்க நினைத்து முதல் அடியை எடுத்துவைத்தபோது பின்னால் ஆள் நடந்துவரும் சலசலப்பு கேட்டது. கம்பனிக்கு ஆள் கிடைத்த தைரியத்தில் மீண்டும் நடக்கலாம் என எத்தனித்தேன். பின்னாலிருந்து கைகள் என் கண்களையும் வாயையும் இறுக்கமாக மூடி மார்போடு அழுத்திக்கொண்டது.
என் உடலில் அப்போது துளியளவும் தெம்பில்லை. பயத்தில் எல்லாமே காணாமல் போயிருந்தது. கால்களை உதற ஆரம்பித்தேன். இன்னும் இரு கைகள் என் கால்களை இருக்கமாக கட்டிக்கொண்டன. இன்னும் இரண்டு பேர் முன்னே வந்து நின்றபோது நான் கிட்டத்தட்ட மூர்ச்சையாகியிருந்தேன்.
எங்கோ இழுத்துக்கொண்டு சத்தமில்லாமல் நகர்ந்துகொண்டிருந்தனர். என்னால் மூச்சுகூட விடமுடியாத அளவுக்கு இருக்கமாக முகத்தை அழுத்தியிருந்தான் ஒருவன். அந்த ஒற்றையடிப் பாதையை விட்டு விலகி புதர்களுக்கிடையே என்னைத் தூக்கியெரிந்தார்கள். உடம்பெல்லாம் முள் குத்த கத்தக்கூட சக்தியில்லாமல் கிடந்தேன். கண்களில் என்னையறியாமல் நீர்.
அவர்களில் சுருட்டை முடியுடன் குள்ளமாக இருந்த ஒருத்தன் காலால் என் வயிற்றை ஓங்கி எத்தினான். மீண்டும் எத்தினான். மீண்டும், மீண்டும்…
என்னால் எழமுடியவில்லை. வயிற்றைக் கிள்ளிக்கொண்டிருந்த பசி காணாமல் போயிருந்தது. வாயில் எச்சிலோ ரத்தமோ ஒழுக ஆரம்பித்தது. சக்தியில்லாமல் அந்த முள் தரையில் முரண்டுகொண்டிருந்தேன். பேச முடியாமல் போனது. ஒருவன் குனிந்து என் முகத்தைப் பார்த்தான். என்னுடைய பையில் என்ன இருக்கிறது என்று ஒருவன் குடைந்து கொண்டிருந்தான்.
அந்த சுருட்டைத் தலையன் என் முகத்தில் மாறி மாறி அறைந்ததில் சரியாக காது கேளாமல் சூனிய ஒலி பரவியது. ஆவேசமாய் என் சட்டையைக் கிழித்தெறிந்தான். இன்னொருவன் என் பெல்ட்டைக் கத்தியால் அறுத்துக்கொண்டிருந்தான். இன்னொருவன் என் முழங்கையைக் அழுந்தக் கடித்துக் கடித்து சிரித்துக் கொண்டிருந்தான். இரவு நேரப் பணிக்காற்று நேரடியாக என் உடலைச் சீண்டியபடி இருந்தது. ஒருவன் என் மேல் ஏறினான். நுரையீரலில் அழுத்தம் ஏற்பட்டு கண்கள் பிதுங்கின. பின்பு மெல்ல கண்கள் இருட்டத்தொடங்கின.
அந்தப் புதர் முழுக்க கூட்டம் நிறம்பி வழிந்துகொண்டிருந்தது. மூன்று போலீஸ் வண்டிகளும் ஒரு ஆம்புலஸ்ஸும் தலையில் விளக்கைச் சுழலவிட்டுக்கொண்டிருந்தன. இளம்பெண் ஒருத்தி கொடூரமான முறையில் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டாள் என்று நிருபர்கள் நோட்டில் எழுதிக்கொண்டிருந்தனர். அப்பெண்ணிற்கு வேண்டியவர்கள் யாரும் இன்னும் வந்திருக்கவில்லை. பிணம் இன்னும் அனாதையாகத்தான் கிடந்தது.
அக்கூட்டத்தில் இருந்த ஒருவன் “சே! சின்னப் பொண்ணு! இப்படி உயிர உட்டுடுச்சே. மனசு ரொம்ப கஷ்டமா இருக்குப்பா” என்றான். பக்கத்தில் இருந்தவன் “ஹ்ம்ம்… எல்லாம் முடிஞ்சு போச்சு. இந்தப் பொண்ணு என்னென்ன கனவுகளோட இருந்துச்சோ? யாரெல்லாம் இந்தப் பொண்ண நம்பி இருக்காங்களோ?” என்றான் கண்களில் வரும் நீரைத் துடைத்தபடி. “மிருகங்கள்! இதச் செஞ்சவனுங்கள நடுத்தெருவுல வெச்சி எரிச்சிக் கொல்லனும்!” என்றான் முதலில் பேசியவன் வெறியோடு.
சம்பவம் 2
இங்கே நான் தனியாகத்தான் இருக்கிறேன். எதற்காக இங்கே கொண்டுவரப்பட்டேன் என்று தெரியவில்லை. சாப்பாட்டுக்குப் பஞ்சமே இல்லை. அவ்வளவு சாப்பாடு. நான் ஒருவன் சாப்பிடுவதற்காகவே! முன்பு இருந்ததைக் காட்டிலும் பெரிய இடம். ஆடலாம் பாடலாம் ஓடலாம் தாவலாம்… எல்லா வசதிகளும் உண்டு. ஆனால் என் மனம் என் மனைவி குழந்தைகளையே சுற்றிச்சுற்றி வந்துகொண்டிருக்கிறது.
எவ்வளவோ கத்திப் பார்த்தேன்; முரண்டு பிடித்தேன். யாருக்கும் பச்சோதாபம் இல்லை. வலுக்கட்டாயமாக என் குடும்பத்தினரிடமிருந்து என்னைப் பிரித்துக் கொண்டு வந்து விட்டார்கள்.
என் மனைவி பிள்ளை பெற்று ஒரு மாதம் கூட முழுசாக முடியவில்லை. என் பிள்ளையின் முகத்தை இன்னும் ஆசைத் தீர பார்த்து ரசித்து முடிக்கவில்லை. என்னை நம்பி இருந்தவர்கள் இப்போது என்ன செய்கிறார்களோ ஏது செய்கிறார்களோ… மனம் இருப்புகொள்ளவில்லை.
என் குடும்பத்தார் கண் முன்னாலேயே என்னை குண்டுக்கட்டாக தூக்கி லாரியில் ஏற்றி அடைத்தபோது என் மனைவியின் கண்களில் இருந்ததே ஒரு பயம்… என்னை நிரந்தரமாக இழந்துவிட்டதாக நினைத்துப் பொங்கியெழுந்த பயம் கலந்த அந்தப் பார்வை என் கண்முன் வந்து வந்து போனபடி இருக்கிறது.
எனக்கு என்னவோ என்னை ஆபத்து நெருங்கி வருவதை உணர முடிந்தது. அது என்ன என்று என்னால் யூகிக்க முடியவில்லை. ஆனால், ஏதோ ஒரு அசம்பாவிதம் என்னை நெருங்கிக்கொண்டிருக்கிறது.
இங்கிருந்து தப்பித்து ஓடிவிடலாம் என்று தீர்மானித்தேன். ஆனால் எப்படி? சுற்றிலும் வேலி போட்டு மூடப்பட்டிருந்தது. சில முறை முட்டிமோதிப் பார்த்துவிட்டேன். பயனில்லை. இரும்புக் கதவு ஒன்று இருக்கிறது. அதில் எப்போதும் பூட்டியபடி ஒரு பூட்டு தொங்கும். எகிறி குதிக்கிற அளவுக்கு தோதாக இல்லை வேலியின் உயரம். சிறை பிடிக்கப்பட்டவன் போல் ஆனேன். உதவிக்கு யாரும் வந்தால் தேவலை என்று கத்திக்கத்தித் தொண்டை வற்றிப்போனதுதான் மிச்சம்.
நாட்கள் ஒன்று இரண்டு என்று ஆரம்பித்து கணக்கே மறந்து போனது. நாட்கள் போகப்போக எனக்குள் இருந்த பயம் கொஞ்சம் கொஞ்சமாக வெறியாகிக் கொண்டிருந்தது. பச்சோதாபத்தை எதிர்பார்த்துப் பயனில்லை. வன்முறைக்குத் தயாரானேன்.
தினமும் அந்த இரும்புக் கதவைத் திறந்து யாராவது உள்ளே வந்தவண்ணம் இருப்பார்கள். கதவு திறக்கும் நேரம் வருபவனை இடித்துத் தள்ளிவிட்டு வெளியே ஓடிவிட்டால் பிறகு விடுதலைதான். எப்படியாவது மோப்பம் பிடித்தாவது என் இடத்தைத் தேடிப் பிடித்துவிடுவேன்.
இப்போதெல்லாம் ஆட்கள் அடிக்கடி வந்துபோக இருந்தார்கள். வருவோர் போவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடியபடி இருந்தது. எதற்காகவோ அவர்கள் தயாராகிக் கொண்டிருந்தார்கள். எண்ணிக்கை அதிகம் இருக்கும்போது ஓடினால் சுலபமாக மாட்டிக்கொள்வேன். அதனால் சரியான நேரத்துக்காகச் சாப்பிடாமல் கண்ணிமைக்காமல் காத்துக்கிடந்தேன். நான் கவனத்தை ஈர்காதவரை என்னை யாரும் பொருட்டாகப் பார்க்கமாட்டார்கள். நான் அமைதியாகவே இருந்தேன்.
இன்னொரு நாள் போனது. இன்னொரு நாள். இன்னும் ஒரு நாள்… போய்க்கொண்டே இருந்தது. இரவு நேரம் இரும்புக்கதவு பூட்டியிருக்கும். அதனால் இரவில் ஒன்றுமே செய்யமுடியாது. பகல் வரும்வரை காத்திருப்பேன். இன்று என்ன நடந்தாலும் சரி! இன்று ஓடவேண்டும். தினமும் இங்கே எதையெதையோ கொண்டுவருகிறார்கள்; செய்கிறார்கள்; கூச்சல் போடுகிறார்கள்… நான் இன்று ஓடிப்போகப்போகிறேன். அங்கே என் மனைவியும் குழந்தையும் என்ன செய்கிறார்களோ?
காலை. முதல் ஆசாமி இரும்புக்கதவைத் திறந்து உள்ளே நுழைய எத்தனித்தான். இதை விட்டால் வேறு சந்தர்ப்பம் இல்லை. என் ஒவ்வொரு தசையிலும் தேக்கி வைத்திருந்த சக்தியைப் பயன்படுத்தி ஓடினேன். ஒரே பாய்ச்சலில் அவன் கீழே விழுந்தான். நான் திறந்திருந்த இரும்புக் கதவின் வழி வெளியே ஓட்டமெடுத்தேன்.
விழுந்தவன் பலமாகக் கத்தினான். சுற்றிமுற்றி இருந்தவர்கள் என் தப்பித்தலை அறிந்து உடனடியாக என்னைத் துரத்த ஆரம்பித்தார்கள். இருந்த எல்லா சந்துபொந்துகளிலும் ஓடினேன். நிறைய வீடுகள்; சின்னச்சின்னத் தெருக்கள்; கண்களில் பட்ட இடமெங்கும் தாவித்தாவி ஓடினேன். என்னை சுற்றி வளைக்க ஆட்கள் இங்கும் அங்கும் ஓடுவது தெரிந்தது. மரண பயம் என்னை யோசிக்க விடாமல் தடுத்தது. கால்கள் அங்குமிங்கும் இடிபட்டு இரத்தத்தை சொட்டிக்கொண்டிருந்தன. புது இடம். எங்கு சுற்றினாலும் ஒரே இடத்துக்கு மீண்டும் மீண்டும் வருவதுபோல் இருந்தது.
இரண்டு பேர் என்னைக் கண்டுபிடித்துப் பின்னாலிருந்து துரத்திக்கொண்டு ஓடினார்கள். அவர்களை விட நான் வேகமாக ஓடிக்கொண்டிருந்தேன். மூச்சு வாங்கியது. திரும்பி ஒருமுறை துரத்தியவர்களைப் பார்த்தேன். அவர்கள் அங்கேயே நின்று மூச்சுவாங்கிக்கொண்டிருந்தனர். மீண்டும் முன்னே திரும்புவதற்குள் முன்னே நின்றிருந்த இரண்டு பேரில் ஒருவன் லாவகமாக என் கழுத்தை இருக்கமாக அணைத்தபடி பிடித்துக்கொண்டான். இன்னொருவன் உதறிக்கொண்டிருந்த என் கால்களைப் பிடித்துக்கொண்டான். இருவரும் குண்டுக்கட்டாக என்னைத் தூக்கிக்கொண்டுபோய் மீண்டும் அதே வேலிக்குள் போட்டனர்.
ஓடுவதற்கு முன்பு ஒருவனை முட்டினேனே, அவன் என்னை பயங்கர கோபத்தோடு நெருங்கிவந்தான். கையில் முரட்டுக் கயிறு. என் கழுத்தைச் சுற்று இருக்கமாகக் கட்டிவிட்டு கயிற்றின் அடுத்த முனையை வேலியில் கட்டிவிட்டு என் இடுப்பில் ஓங்கி ஓர் உதை விட்டுப் பழிதீர்த்துக்கொண்டான். வலிதாங்க முடியாமல் நான் கத்திக்கொண்டிருந்தேன். ஏனென்று தெரியவில்லை. அப்போது என்னை சிலர் பாவமாகப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
அன்றைய இரவு என்னால் சரியாகத் தூங்கமுடியவில்லை. இனி வாழ்க்கை பூராவும் இங்கே தானா என்று நினைக்க மனம் கனத்தது. நாளைய நாளில் நான் நிச்சயம் இங்கிருந்து ஓடிப்போவேன் எனும் நம்பிக்கையில் கால்களைக் குறுக்கலாக வைத்துத் தூங்க முயன்றேன்.
மருநாள் காலை. அன்றைய நாள் கொஞ்சம் வினோதமானதாக எனக்குப் பட்டது. ஏதோ ஒன்று சரியில்லை என்று உள்ளுணர்வு பயமுறுத்திக்கொண்டிருந்தது. என்றும் இல்லாத அளவு இன்று ஆட்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ஏதேதோ ஓசை எழுந்தது. ஆட்கள் ஒரு இடத்தில் நிற்காமல் ஆடிக்கொண்டிருந்தனர். எப்போதும் பார்ப்பதைவிட அன்று எல்லாமே வழக்கத்துக்கு மாறாக நடந்துகொண்டிருந்தது. என்னால் எங்கும் நகரமுடியவில்லை. கழுத்தில் கட்டப்பட்டக் கயிறு என்னை எங்கேயும் நகரவிடவில்லை.
நேரம் போனது. எங்கிருந்தோ வந்த இரண்டு பேர் என்னை நோக்கி வருவது தெரிந்தது. நான் எழுந்து நின்று உஷாரானேன். வேலியில் கட்டியிருந்த கயிற்று முடிச்சியை ஒருத்தன் அவிழ்து என்னை இழுத்துக்கொண்டு நடந்தான். இன்னொருவன் பின்னாலேயே காவலுக்கு வந்துகொண்டிருந்தான். எங்கேயோ கொண்டு போய் ஓரிடத்தில் நிறுத்தினான். எனக்கு ஒன்றுமே புறியவில்லை. பயத்தில் இங்கும் அங்கும் பார்த்துகொண்டிருந்தேன். சுற்றியிருந்தவர்களின் கண்களின் பரிதாபம் தெரிந்தது.
கழித்தில் பூமாலை ஒன்றைப் போட்டான் ஒருவன். பின்பு முகத்தின் தண்ணீரைத் தெளித்தான். நீர்த்துளி பட்டதும் வெடவெடத்து முகத்தை உதறினேன். சுற்றியிருந்தவர்களில் சிலர் உரக்கச் சத்தம் போட்டது காதில் கேட்டது. எனக்கு உடல் முழுக்க பயம் நிறம்பியது. அங்கிருந்து உதறி வெளியே ஓடிவிட முயன்றேன். முடியவில்லை.
ஒரு பெரிய இரும்புக் கத்தி என் தலைக்கு மேலே தூக்கப்பட்டது. பிறகு அது என் தலையை நோக்கி வேகமாகப் பாய்ந்தது. கத்தி வெட்டு பட்டு நான் வலி தாங்கமுடியாமல் துடித்துக்கொண்டிருந்தேன். முடிந்தவரை கெஞ்சிக் கத்தினேன். கத்தி என் கழுத்தில் இயங்கிக்கொண்டிருந்தது. ஒரு சில நொடிகளில் கால்கள் தளர்வடைந்தன. கத்த முயன்றும் ஓசை வரவில்லை. கண்கள் சொருகின.
அங்கே நின்றிருந்த சிலர் ஊற்றிய ரத்தத்தைப் பொருட்படுத்தாமல் தலையை முழுமையாக உடலிலிருந்து பிரித்து எடுத்தனர். இரண்டு கொம்புகளில் ஒன்றைப் பிடித்து தலையைத் தூக்கி பக்கத்திலிருந்த தட்டில் வைத்தான். “யேம்பா… அதான் வெட்டியாச்சுல்ல. வந்து தோல உறி. அன்னதானத்துக்கு மணியாவுது” என்றான் கையில் கத்தியை வைத்திருந்தவன். இன்னும் இரண்டு மூன்று பேர் அதிலே சேர்ந்துகொண்டனர்.
அந்தக் கூட்டத்தில் நின்றுகொண்டிருந்த ஒருவன் “சே… ரொம்ப பாவமா இருக்குங்க. கழுத்த வெட்டும்போது எப்படி துடிச்சது பாத்தீங்களா?” என்றார். பக்கத்தில் நின்றிருந்த இன்னொருவன் “இதெல்லாம் பாத்தா முடியுங்களா? கொன்னா பாவம் தின்னா போச்சு” என்று யதார்த்தமாகச் சொல்லிக்கொண்டிருந்தான். “இருந்தாலும் அதுக்கும் வாழ்க்கைன்னு ஒன்னு இல்லையா?” என்றான் முதலில் பேசியவன். அந்த இன்னொருவன் “அட என்னங்க நீங்க? இதக் கொன்னாதானே படையல் போடமுடியும், பந்தியப் போடமுடியும்?” என்று சிரித்துக்கொண்டான்.
அந்த ஆட்டின் கண்கள் பாதி செருகிய நிலையில் இருந்தது. அதன் உடலை ருசிபார்க்க கூட்டம் தயாராகிக்கொண்டிருந்தது.
சம்பவம் 3
இப்போதெல்லாம் முன்னைப்போல சுறுசுறுப்பாக ஓடியாட முடியவில்லை. சீக்கிரமே மூச்சு வாங்கிவிடுகிறது. இது முதல் முறை என்பதால் எதற்கெடுத்தாலும் பயம்தான்.
முன்பு குறைவாகச் சாப்பிட்டாலும் பரவாயில்லை என்றிருப்பேன். ஒன்றிரண்டு வேளை சாப்பாடு கிடைக்காமல் போனால்கூட சக்தியோடு இருப்பேன். இப்போது நான் சாப்பிட்டால்தான் என் வயிற்றில் வளர்ந்துகொண்டிருக்கும் என் செல்லத்துக்கு சாப்பாடே. அதனால் முடிந்தவரை வேளாவேளைக்குச் சாப்பிட்டுவிடுவேன்.
நான் கர்பமான விஷயம் யாருக்கும் தெரியாது. எனக்கே சில நாட்களுக்கு முன்னர்தான் தெரியவந்தது. என் வாழ்க்கைக்குப் புது அர்த்தம் கிடைத்ததுபோல உணர்வு அடிக்கடி வந்தபடி இருந்தது. எனக்கு எப்போதுமிருக்கும் தாழ்வு மனப்பான்மை இப்போதெல்லாம் இல்லை. என் வாழ்க்கையின் இலக்கை நோக்கி நகர்ந்துகொண்டிருப்பது போன்ற உணர்வு.
இப்போது நான் இருக்கும் வீடு என் குழந்தைக்கு ஏற்றதாக இருக்காது என்று எனக்கு உறுத்திக்கொண்டே இருந்தது. வேறு வீடு பார்க்கலாம் என்றால் நேரமே கிடைப்பதில்லை. ஆனாலும் வீட்டைக் கண்டிப்பாகப் பார்த்தாக வேண்டும். எப்படியும் பார்த்துவிடுவேன். அடடே! இப்போதெல்லாம் எனக்கு தன்னம்பிக்கையெல்லாம் கூட வருகிறது.
முன்பு ஒரு முறை சீனி எடுக்கப்போயிருந்தபோது எதிர்த்த வீட்டு மேல் மாடியில் நல்ல இடம் ஒன்று இருந்ததாகப் பட்டது. இப்போது அது இன்னும் காலியாக இருக்குமோ இல்லையோ? ஒரு முறை போய் பார்த்துவிட்டு வந்தால் தேவலை. தோதானால் அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிடலாம். இன்னும் கிடைக்காத புதுவீட்டை எண்ணி இப்போதே பூரிப்பாய் இருந்தது.
ஆனால், இங்கே இருக்கும் பாதுகாப்பு அங்கே கிடைக்குமா என்பதுதான் சந்தேகம். ஏற்கனவே அந்த இடத்தைப் புறக்கணிக்க காரணம் அங்கே தனியாக இருக்கும் எனக்குப் போதிய பாதுகாப்பு கிடைக்காது என்ற பயத்தில்தான். சின்னதாய் இருந்தாலும் பாதுகாப்பாய் இருக்கிறது இந்த வீடு. ஆனால், இது என் குழந்தையை வளர்த்தெடுக்கப் போதாது.
வெயில் முழுமையாக இறங்கிவிட்டிருந்தது. நான் வீட்டைவிட்டு வெளியே வந்தேன். யாரும் இல்லை. இருட்டோடு இருட்டாக படிவழியாக இறங்கி தெருவுக்கு வந்தேன். அவ்வப்போது வண்டிகள் போய்க்கொண்டிருந்தன. சமயம் பார்த்து தெருவைத் தாண்டினேன். இப்போதுவரை ஒன்றும் சிக்கலில்லாமல் இருந்தது. வயிற்றில் தான் ஏதோ சிக்கலாக இருக்கிறதென்று நினைக்கிறேன். அடிக்கடி வயிற்றில் கடமுட கடமுட சத்தம் கேட்டு மெல்லிய வலியைக் கொடுத்துக்கொண்டிருந்தது.
வலியைப் பொருட்படுத்தவில்லை. வேகமாக ஓடி படிக்கட்டுகளுக்குக் கீழே இருளில் மறைந்துகொண்டேன். கொஞ்ச நேரம் அங்கேயே காத்திருந்தேன். என் அவதானிப்புப்படி எந்த ஆபத்தும் கிடையாது. என் யூகம் தப்பாய்ப் போனது. இங்கே எந்த ஒரு ஆபத்தும் இல்லை. நான் தான் முட்டாள்தனமாக பயந்துகொண்டு அங்கேயே இருந்துவிட்டேன்.
கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு மேல் மாடிக்கு ஏறினேன். எந்த ஒரு அசைவும் இல்லை. நான் முன்பு பார்த்த இடம் இதுவா என்று தெரியவில்லை. ஆனால் இந்த இடமும் நன்றாகத்தான் இருக்கிறது.
ஏதோ வாசம் மூக்கைச் சுண்டியது. கருவாடு! பகலில் காயப்போட்டிருந்திருப்பார்கள் போலிருக்கிறது. அதன் வாசம் இன்னும் அப்படியே காற்றில் சுழன்றுகொண்டிருந்தது. எனக்குக் குதூகலம்தான். இன்னும் என்னென்ன இருக்கிறதோ? இந்தப் புது இடம் எனக்கு உற்சாகத்தைக் கொடுத்தது. இனிமேல் இங்கேயே இருந்துவிடலாம் என்று முடிவுசெய்துவிட்டேன்.
புது இடம்… ஒவ்வொரு இடமாகச் சுற்றிப் பார்க்கவேண்டும். நாளை முதல் பார்த்துக்கொள்ளலாம் என்று நிம்மதியான ஒரு பெருமூச்சு விட்டபடி அப்படியே தூங்கிப்போனேன்.
கருவாட்டு வாசனை காட்டமாக இருந்தது. கண்விழித்துத் துள்ளிகுதித்து எழுந்தேன். நன்றாக விடிந்திருந்தது. காயப்போட்டிருந்த கருவாடு கண்களுக்குத் தென்பட்டது. நல்ல பசி. ஓடிப்போய் ஒன்றை எடுத்து வந்துவிடலாம் என உள்ளங்கை அறித்துக்கொண்டிருந்தது.
போகலாமா வேண்டாமா?
சுற்றும் முற்றும் பார்த்தேன். யாரும் இல்லை. சந்தடியில்லாமல் சுவருக்கு ஓரமாய் ஒட்டியடி நிழலோடு நிழலாக பதுங்கினேன். ஆபத்து ஒன்றும் இருப்பதாய் தெரியவில்லை. இதுதான் நேரம். காயப்போட்டிருந்த கருவாட்டுக் குவியலுக்கு இடையே புகுந்து ஓடினேன். வேகமாக ஓட முடியவில்லை. மூச்சிரைத்தது. குவியலுக்கிடையே நின்று மூச்சு வாங்கிக்கொண்டிருந்தேன்.
திடீரென நெஞ்சை அடைப்பது போன்ற சத்தம்! தலையை எக்கிப் பார்த்தேன். யாரோ கூச்சலிட்டுக்கொண்டிந்தார்கள். எனக்கு நிலை தடுமாறியது. சுதாகரித்துச் சுயநினைவுக்கு வருவதற்குள் திபுதிபுவென்று நான்கைந்து பேர் ஓடி வந்திருந்தனர். எல்லாருடைய கையிலும் ஏதாவது ஒன்று பயமுறுத்திக்கொண்டு இருந்தது. ஒருத்தன் கையில் துடைப்பக்கட்டை. இன்னொருத்தன் நீண்ட மூங்கில், மற்றொருவன் சுத்தியல்…
எனக்குக் கருவாடும் வேண்டாம், ஒன்னும் வேண்டாம் என்று பிடித்திருந்த கருவாட்டைக் கீழே போட்டுவிட்டு ஓட நினைத்தேன். எந்தப் பக்கம் ஓடுவது? புதிய இடம். எதாவது சந்து பொந்து கண்ணில் படுகிறதா என்று தேடுவதற்குள் துடைப்பக்கட்டை முகத்தை நோக்கி பாய்ந்தது. தட்டுத்தடுமாறி எந்தப் பக்கமாவது ஓடுவிடுவோம் என்று ஓடினேன்.
சுற்றி நின்று வளைத்துக்கொண்டார்கள். கொஞ்ச தூரத்தில் இருந்த சுவரை நோக்கி வேகமாக ஓடினேன். வயிறு வலியெடுக்க ஆரம்பித்திருந்தது. கத்தியபடி ஓடினேன். மூங்கிலைக் கொண்டு என் தலையைக் குறிவைத்து ஓங்கிக்கொண்டிருந்தான் அவன். அது எந்தநேரமும் என் தலையைத் தனியாகப் பிடுங்கியெடுக்கலாம்.
செறுப்பு, செங்கல் என எல்லாமே பறந்து வந்துகொண்டிருந்தன. என்னால் ஓட முடியவில்லை. இருந்தாலும் என் குழந்தைக்காக உயிரை இன்னும் கையில் பிடித்துக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தேன். அபயம்தான் கிடைக்கவில்லை.
ஆ! அதோ ஒரு பொந்து! அதை நோக்கி ஓடினேன். சரியான இடம். அப்படியே உள்ளே நுழைந்துகொண்டேன். மறுபக்கம் துவாரம் இல்லை. அதனால் இப்போதைக்கு இங்கேயே பதுங்கியிருப்பதுதான் பாதுகாப்பு என்று பட்டது.
ஆனால்… மூங்கிலை வைத்திருந்தவன் நேராக வந்துகொண்டிருந்தான். அவனால் ஒன்றும் செய்யமுடியாது என்று எனக்கு நானே நம்பிக்கை கொடுத்துக்கொண்டிருந்தேன்.
மூங்கிலின் நுனிப்பகுதியை நான் புகுந்திருந்த பொந்துக்குள் விட்டுத் திணித்து இடித்தான். என் கால்கள் மூங்கிலின் நுனி பட்டு காயமானது. இன்னும் வேகமாக இடித்தான். பொந்தின் மறுபுறம் போகவே முடியாதா என்று சுரண்டிச் சுரண்டிப் பார்த்தேன். வழியில்லை.
மூங்கில் இன்னும் வேகமாக உள்ளே நுழைந்தது. வயிற்றைக் கிழித்துவிட்டு வெளியே சென்றது. தரையில் ரத்தமும் என் குழந்தையும் நனைந்தன. மீண்டும் மூங்கில் உள்ளே நுழைந்தது. தாடை எலும்பு நசுங்கியது. வலியோடு போராடிக்கொண்டிருந்தேன். இன்னும் ஒரு முறை மூங்கிலின் நுனி உள்ளே நுழைந்தது. கடைசியாகக் கண்களை மூடிக்கொண்டேன்.
சுற்றி நின்றுகொண்டிருந்தவர்களுக்கு மூச்சு வாங்கியது. நெற்றியெல்லாம் வியர்வை. “தூ! என்னா ஓட்டம்? மாட்னியா?” என்று பொந்தைப் பார்த்து ஒருத்தன் சொன்னான். “என்னமோ நீ அடிச்ச மாதிரி பீத்திக்கிற?” என்றான் கையில் மூங்கிலை வைத்திருந்தவன். அதன் நுனிப்பகுதியை எடுத்து மற்றவர்கள் பார்க்கும்படி காட்டினான். “ஹ்ம்ம்! போய்க் கழுவு. சனியன்! கருவாட்டையெல்லாம் நாசம் பன்னி வெச்சிடுச்சு” என்று கிழவி அலுத்துக்கொண்டாள்.
எலியின் வால் அந்தப் பொந்தின் வாயிலிருந்து வெளியில் நீண்டுக்கிடந்தது. கருவாட்டுக்குக் காவலுக்கு உட்கார்ந்திருந்த சிறுமிதான் கடைசியில் அந்த எலியின் சதையைக் கைபடாமல் அள்ளித் தூக்கி தெருவோரக் கால்வாயில் வீசிவிட்டு ரத்தத்தை தண்ணீர் ஊற்றிக் கழுவினாள். மற்றவர்கள் அவரவர் வேலையைப் பார்க்கக் கிளம்பிவிட்டிருந்தனர்.
– தினக்குரல் நாளிதழ் ஞாயிறு 02/03/2014.