உயிருக்குப்பின்
(2019ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“நாங்களும் போப்போறம்” என்றவனை ஆச்சரியத்துடன் பார்த்தாள் அவள்.
“பேயா உனக்கென்ன விசரே…அங்கால நடக்கிறது தெரியுமே? ஏமாத்திப்போட்டு கொண்டே யாழ்ப்பாணத்துக்க விடுறாங்களாம்.”
“ம்…. இவர் போய்ப்பாத்தவர்.” என்றவன், “சும்மா எல்லாந் தங்களுக்குத்தான் தெரியுமெண்டு கதைக்கிறான்.” என்று முடித்தான்.
“உனக்கு இனிமேச்சொல்லேலாது இன்னும் இவங்கள் வெல்லுவங்கள் எண்டு பாக்கிறியோ”
“நான் அப்பிடி பாக்கேல்ல எல்லாரோடயும் ஒத்தது எங்களுக்கும் நடக்கட்டும்.”
“இன்னும் எத்தின நாளைக்கடா கஞ்சிக் கொட்டில், கஞ்சிய நம்பி வாழுறது. எந்த நிமிசம் என்ன நடக்குமெண்டு தெரியா…” இப்படி இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே ‘கிறீச்’சென்ற சத்தத்துடன் எறிகணையொன்று இவர்களை கடக்க இருவரும் பதுங்குகுழிக்குள் பாய்ந்தார்கள். ‘விசுக் விசுக்’கென ரவைகள் பாய்ந்தன. தொடர்ந்து கூச்சல் கேட்டது.
“என்னடா கிட்டவே” என்றவாறே தலையை தூக்கினான் ஒருவன்.
“அண்ணை புண்ணியங் கிடைக்கும். உதுக்கயே கிடவுங்க தலையத் தூக்காதையுங்க. மருந்தில்ல. ஆஸ்பத்திரியுமில்ல தெரியுந்தானே காயப்படாம கிடவுங்க” பக்கத்திலிருந்த பங்கரிலிருந்து சசி கத்தினாள்.
“அக்கா சசியக்கா… சிவராசண்ணைக்கு ரவுண்ஸ் கொழுவீட்டுது”
“எங்கினைக்க”
“தெரியேல்ல கொண்டோடுறாங்கள்”
உயிர்கள் போய்க் கொண்டிருந்தாலும், யாரும் அதை பொருட்படுத்தாமல் திரிந்தனர். பட்டால் சாவு படாதவரை விடுப்பு பார்த்தல்.
இரண்டு மூன்று நாட் களாக மழை வேறு வானத்தை பொத்துக் கொண்டு பெய்தது. இருபுறமும் நீர் தேங்கிநின்று, அதன் நடுவேயிருந்த பொக்கணை வீதி மிதப்பது போலத் தோற்றம் காட்டியது. சண்டை வேகமாக நெருங்கிக் கொண்டிருந்தது. இயற்கைக் கடன்களைக்கூட செய்ய முடியவில்லை. இரவு முழுதும் பெய்த மழையில் பதுங்கு குழிகளும் மலசல கூடக்குழிகளும் இரண்டறக் கலந்து விட்டன.
பொக்கணைப் பிள்ளையார் கோவில் கடந்து சிறு வயல் வெளியிருந்தது. ஒரு மண்வெட்டி யும் கையில் ஒரு யூ.எஸ்.ஏ. பேணியில் தண்ணீரும் கொண்டு போனால். ஒரு பொளி மண்ணை வெட்டிவிட்டு அதில் மலங்கழித்துவிட்டு மண்ணை மூடிவிட்டு கொண்டு போன தண்ணீரில் கழுவிவிட்டு வருவதே வழக்கமாயிற்று. இதற்காக மறைப்புகள் எதுவும் இல்லை என்பதுடன் ஆண்பெண் சமத்துவமும் நிலவியது இப்படியே கடற்கரையிலும் நடந்தது.
“தட்டிக்குமேல தட்டி கட்டி மறைச்சு வளத்த பெண்புரசுகள் இப்ப வெட்டவெளியில… விட்டிட்டுப் போயிராலாமடா…” கமலாக்கா பெடியள அருட்டினா.
சசி தன் பதுங்குழியை விட்டு வெளியே வந்தாள். இனி அவள் கஞ்சிக் கொட்டிலுக்குப் போகவேண்டும். “இனி விறகும் நனைஞ்சிருக்கும் சங்கீதாவும் வர யில்ல என்ன செய்யப் போறனோ” என்ற அச்சம் சசியை வேகமாக நடக்க வைத்தது.
அந்த வயல் வெளியைக் கடந்து மேடேறினாள். நெருக்கமான குடில்களின் ஊடே நடந்து வலையர்மடம் செல்லும் மண்வீதியை தொட்டவள்,திரும்பி வலையர்மடம் நோக்கி நடந்தாள்.
கஞ்சிக் கொட்டிலில் எடுத்துப் போட்டிருந்த விறகு தூவானம் பட்டு நனைந்திருந்தது. எல்லாமே பனை வட்டுக்கள். பக்கத்தில் நெருப்பெடுத்து அடுப்பை மூட்டி கஞ்சிக்கான அண்டாவை வைத்து நீரை வார்த்தாள். அருகி லிருந்து சுமனும், நிசாவும் ஓடி வந்தனர். லிருந்து சுமனும், நிசாவும் ஓடி வந்தனர். தத்தம் கைகளில் கொண்டு வந்த விறகு சுள்ளிகளை அவளிடம் நீட்டி
“இந்தாங்க சசியக்கா இன்னும் பொறுக்கிக் கொண்டு வாறம்.” என்றனர்.
“வேண்டாம் வேண்டாம், போய் பங்கருக்க இருங்க ஆர் உங்கள வெளியால வரச் சொன்னது?”என்று சசி அதட்டிய போதே அவர்களுக்கு மேலாக எறிகணையொன்று கீசிக் கொண்டு சென்றது.
“டேய் படு, படு என்னடா தலைய நிமித்திக் கொண்டு நிக்கிறாய்?” இரவாழிச்சுக் கத்தினாள் ஒருத்தி.
“அது அங்கால கடல் பக்கம் அடிக்கிறானெணை”அந்த இளைஞன் அசைந்து கொடுக்க வில்லை. தொடர்ந்து மேலும் சில எறிகணைகள் கடலில் விழுந்தன. ஒவ்வொரு எறிகணை விழவும் கடல்நீர் அரைப்பனை உயரத்துக்கு நேராக எழுந்து சிதறாமல் மீண்டும் அப்படியே கடலில் இறங்கும் காட்சி மிக அற்புதமானது. வேடிக்கை பார்ப்போர் பரவசமடைவர்.
“சுக் எப்பிடி எழும்புது பார்”
“ம்… இப்ப எழும்பின னெண்டா வாடா பங்கருக்க*தாய் கத்தினாள். இவ்வளவு ஈடாட்டத் துக்கும் நடுவில் கஞ்சி தயாராகி விட்டது சிறுவர்கள் பெரியவர்கள் என பாத்திரங்களுடன் வரிசை போட்டார்கள். போராளிகளின் கஞ்சிக் கொட்டில்கள் ஒவ்வொரு வீதிகளிலும் இருந்தன… மக்கள் பட்டினியால் சாகாமல் ஒருவேளை கஞ்சி குடிக்க முடிந்தது.இதற்குள் வேறொரு போராளியும் துணைக்கு வந்துவிடவே கஞ்சி விநியோகத்தை முடித்தாள் சசி. வயிற்றைப் புரட்டி யது. அவளுக்கு கஞ்சி மீத மில்லை. அதனால் எதுவும் உண்ணவில்லை.
அரசியற்றுறைப் போராளிகள் பகலில் கஞ்சிக் கொட்டில்களில் கஞ்சி வைத்துப் பரிமாறவும் மாலை ஆறமணியா னால் இரவில் கரையோர சென்றிக்கும் செல்ல வேண்டி யிருந்தது. அவளுக்கு இன்று கடற்கரை பாதுகாப்பில் இரவுச் சென்றி. ரைபிளை எடுத்துக்கொண்டு காவலரணுக்கு சென்ற போது கொஞ்சம் நேரமாகி விட்டது. மதன் அதட்டினான்.
“ஆடி அசைஞ்சு வாங்க இப்ப நேரமென்ன” அவள் எதுவும் பேசவில்லை. பகல் முழுதும் அந்தப் பகுதி எறிகணையில் அதிர்ந்து கொண்டிருந்தது. கடல் வழியாக ராணுவம் வரவாய்ப்பில்லை. மக்கள் அந்த வழியாக தப்பியோடுவது நடந்து கொண்டிருந்தது. படகுக் காரர்கள் பெருந் தொகைப் பணத்தைப் பெற்றுக் கொண்டு மக்களை இந்தியாவிற்கோ பெரும்பாலும் யாழ்ப்பாணத்திற்கோ கொண்டு சென்று கரையேற்றினர்.
ஆனந்தபுரம் பச்சைப்புல் வெளி, இரணைப்பாலை பகுதிகளில் சண்டை அமந்தறையாக நடந்து 30 கொண்டிருந்தது. காடுகளற்ற அந்த பொக்கணை வெளியில் பனைகளும் ஓலைகளை இழந்திருந்தன. திடீர் திடீரென பாய்ந்து வரும் எறிகணை களும் இப்போது பழக்கப்பட்டு விட்டன. வெடித்துவிட்டதுதானே என் தலையைத் தூக்கினால் “பீஸ்” (எறிகணைச்சிதறல்) கொண்டு போய் விடும். உடலையோ அல்லது உயிரையோ.
மழை மேகங்கள் மறுபடி அழுகி ஒழுகத் தொடங்கிவிட்டன. பனங் குத்திகளின் இடைவெளிகளில் கசிந்த நீர் முதுகை நனைத்தது. திரும்பிய பக்கமெல்லாம் இருள் நீக்கமற நிறைந்திருந்தது. திடீரென வெளியே பரபரப்பு தெரிந்தது. மக்கள் சளசளத்தவாறே சாரி சாரியாக ஓடிக் கொண்டிருந்தனர்.
சசி பக்கத்து பங்கரை நோக்கி குரலிட்டாள்.
“அண்ணை அண்ணை என்ணண்ணை சத்தம். சனம் ஓடுது போல” பதிலில்லை.
“இரு நான் போய் பாத்துக் கொண்டுவாறன்” சங்கேத மொழி யில் பக்கத்து காவலரணை நோக்கி கூச்சலிட்டவாறே ஓடிய சசி தரப்பால் கூரைக்கு இறுக்கிய கூனியில் தடக்குப்பட்டு குப்புறக் | கவிழ்ந்தாள். இதற்குள் அருகில் விழுந்த கொத்துக் குண்டொன்று சடசடவென வெடிக்கவாரம்பித்தது.
ஓடிக்கொண்டிருந்த மக்களிடையே கூச்சல் எழுந்தாலும் அவர்கள் ஓடிக் கொண்டேயிருந்தார்கள்.
“ஓடு….ஓடு.”
“ஓடாத காயப்படுவாய் பங்கருக்க வா”
“பங்கரெல்லாம் பத்தியெரியுது அதுக்க கிடவாம் வெளியால வாங்க”
சசிக்கு முன்னிருந்த காவலரண்கள் கைவிடப் பட்டிருந்தன. தாங்கள் மட்டுமே இருப்பதை உணர்ந்தவள் திரும்பவும் தனது காவலரணுக்கு ஓடினாள். அங்கே தன்னுடன் இருந்த போராளியை காணவில்லை. மீனா… மீனா…அவள் அந்த குடிலில் தடவிப்பார்த்தபோது கையில் எதுவோ பிசு பிசுவென்று.. அவள் கையை உதறிக் கொண்டாள் கையில் ஒரு தசைத்துண்டு… நாக்குலர்ந்து அண்ணத்தில் ஒட்டிக்கொள்ள மேலும் தடவ சிதைந்த உடல் அவளை ஓடு ஓடு என உள்மனம் விரட்டியது.
ஓடினாள். கூடாரங்கள், பதுங்கு குழிகள், அதன் முளைக்கட்டைகள் கயறுகள் எனக்கடந்து “படீர்” அவள் விழுந்த குழியை மண்ணும் கரிப்புகையும் மூடின. எழுந்து ஓட ஒரு உடல் தன் அசைவை நிறுத்தும் இறுதிக்கணத்தில்.,
“என்ர பிள்ள என்ர…. ”அவளருகே அந்த இருளிலும் நெளிந்து கொண்டிருந்தது ஒருவயது மதிக்கத்தக்க குழந்தை. ரைபிளை தோளில் போட்டவள் குழந்தையை கையிலெடுத் தாள். ரவைகள் கீசிக் கொண்டிருந்தன. வலையர் மடம் கடந்து ஒரு பத்துமீட்டர் போயிருப்பாள் போராளியுடன். எதுவோ அவள்முன் வெடித்தது. அவள் தூக்கி வீசப்பட்டாள்… ஓரிரு நிமிடத்தில் அவள் நிமிர்ந்தாலும், அருகே என்ன முனகல் ஒரு போராளி கிடந்து முனகினான்.
சசி அவனை நெருங்கினாள். அவனை உலுப்பினாள்.
“ஆமி கிட்ட வந்திட்டான். எழும்பு ஓடு ஓடு” அவன் அவளுடைய சட்டையை பற்றிக்கொண்டான்.
“ஏலாது… ஏலாது என்ர ரெண்டு காலும்….”
“அவள் செய்வதறியாது திகைத்தாள்அவனை தூக்கிச் சென்றாலும் மருத்துவமனை கிடையாது.
“அக்கா…நான் பிடிபடக்கூடாது. ரைபிள் வச்சிருக் கிறாய் என்னை சுட்டுப்போட்டுப்போ…கும்பிட்டன், சுடு” மூச்சிரைக்க அவன் கெஞ்சினான்.
“நான் மாட்டன் மாட்டன்” வேகமாக எழுந்தாள். அவன் பெருங் குரலெடுத்து அலறினான்.
“சுடக்கா… உன்னை கும்பிட்டன் சுடக்கா.. சுடூ…”
அப்போதுதான் நினைவு வந்தவளாக தான் கொண்டு வந்த குழந்தை தன்னிடமில்லையென்பதை அறிந்தாள். “என்ர பிள்ளை என்ர பிள்ளை…” மணலில் பிறாண்டி பிறாண்டி உருண்டு தேடினாள். “பிள்ளை பிள்ளை” என்றவளின் காலடியில் மரக்குத்திபோல தட்டுப்பட்டதை திகைத்துப் பார்த்தாள். விறைத்திருந்த குழந்தையின் சடலம். அவளிடமிருந்து ஒரு நிம்மதிப் பெருமூச்சு எழுந்தது.
நிதானமாக ரைபிளை எடுத்தாள். சேப்டியை தட்டி ஓட்டோவில் விட்டாள். சேம்பரில் ரவையை ஏற்றினாள். அவனை நோக்கி ரைபிளை நீட்டியபடி அவன் முகத்தை தேடினாள் இருளில் தெளிவில்லை. விரல் ரிகரைத் தட்டியது இருபத்தெட்டு ரவைகளும் அவனுடலை நோக்கிப்பாய்ந்தன. ரைபிளை தூக்கி வீசிவிட்டு ஓடிக் கொண்டிருந்த சனத்துடன் கலந்தாள். ஆங்காங்கே கிடந்த உடல்கள் எவரையும் எதுவும் செய்யவில்லை. உடல்சோர அவள் தன் விடுதியை அடைந்தாள் அதுவும் காலியாகியிருந்தது…
ஜீவநதி 12 ஆவது ஆண்டு மலர் மாசி 2019.
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: March 3, 2026
பார்வையிட்டோர்: 151