உன் காலணிக்குள் நான்




(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கைத் தொலைபேசிகள் விற்கும் கடையில் ஏராளமான இளையர்கள். புதுரக கைத் தொலைபேசி ஒன்றை அந்தக் கடையில் பார்த்திருந்தான் கார்த்திக் ஒரு வாரம் முன்பே. காலையில் அப்பாவிடம் கேட்ட போது, கார்த்திக், ஒங்கிட்ட இருக்கறதே நல்ல மாடல் தான். புதுசு புதுசா வந்து கிட்டே தான் இருக்கும் மார்ட்கெட்ல. போன் எதுக்கு? பேசறதுக்கு தானே? அது லேட்டஸ்டா தான் இருக்கணுமா என்ன? இப்ப தானே நீ கேட்டன்னு புது கம்ப்யூட்டர் வாங்கினோம்”, என்று சொல்லிக் கொண்டே போய், “இருக்கற சாமானையே வாங்கற பழக்கம் நல்லதில்ல கார்த்திக், ஓகே? “, என்று முடித்தார்.
“இல்லை என்பதைச் சொல்ல எத்தனை பெரிய ‘லெக்சர்’ “, என்று மனதிற்குள் சலித்துக் கொண்டே நகர்ந்தவனிடம், அம்மா தன் பங்கிற்கு, “கார்த்திக், உனக்கு ஃப்ரீ டைம் இருக்கும் போது, வாரத்துல ஒரு நாளாவது ப்ரவீணுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கலாமில்ல? எத்தன தடவ சொல்லிட்டேன்”, என்றதும், எனக்கு நேரமில்லையேம்மா என்று ஒவ்வொரு முறையும் சொல்வதைப் போலச் சொல்லிவிட்டிருந்தான். யோசித்த போது, நேரம் என்பதைத் தான் தான் அவ்வப்போது தவற விட்டோமோ என்றும் தோன்றியது.
அத்தை மகன் ப்ரவீணுக்கு இன்னும் இரண்டு மாதங்களில் தொடக்கப் பள்ளி இறுதியாண்டுத் தேர்வு. தான் சொல்லிக்
கொடுத்தால் தன்னைப் போலவே அவனும் மதிப்பெண் பெற்று அடுத்த வருடம் இராஃபிள்ஸ் கல்விக் கூடத்தில் படிப்பான் என்று எல்லோருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கை. பெரியவர்கள் எல்லோருக்கும் எப்படித் தான் ஒரே மாதிரித் தோன்றுகிறதோ என்று ஆச்சரியப் பட்டான்.
அத்தைக்கும் மனதிற்குள் அப்படி ஒரு அபிப்பிராயம் இருக்கலாம். ஆனால், அவர் மட்டும் தான் வற்புறுத்தியதேயில்லை அவனை. ப்ரவீண் தன்னை விடச் சிறப்பாகவே செய்துவிடக் கூடும் என்ற அடிப்படை சாத்தியக் கூறு கூட ஒருவருக்கும் தோன்றாமல் போனது தான் வேடிக்கை. யோசித்துக் கொண்டே வந்தவன், ‘ஒருவேளை அப்பா சொல்வது போல் அதெற்கெல்லாம் எனக்குப் பொறுமை தான் இல்லையோ?’, என்று கேட்டுக் கொண்டான் தனக்குள்.
வழக்கமாய் உடன் சுற்றும் இர்ஃபான் இல்லாதது, பிய்ந்த செருப்பை எறிந்து விட்டுப் புதிய செருப்பை மாட்டிக் கொண்டாற் போல அவனுக்கு மிகவும் விசித்திரமாயும் அசௌகரியமாயும் இருந்தது அவனுக்கு. காய்ச்சலாம். காலையிலேயே குறுந்தகவல் அனுப்பியிருந்தான். வேறு வகுப்பில் படித்தாலும், தமிழ்ப் பாடத்தின் போது சந்திப்பது வழக்கம். அன்று தமிழ்ப் பாடவகுப்பிலும் சுரத்தேயில்லாமல் தான் இருந்தான்.
‘ஜங்ஷன் எய்ட்’டிலிருந்து வெளியேறினான். இலக்கின்றி நேரத்தைப் போக்கவே இஷ்டம் போலச் சுற்றியதில் கால்கள் கெஞ்சின. ‘லேண்டர்ட் ஃபெஸ்டிவல் இன்னும் சில தினங்களில் வரவிருந்தது. ஆங்காங்கே கடைகளில் தோங்கிக் கொண்டிருந்த விதவிதமான அலங்கார வண்ண விளக்குகள், வாங்காதவரையும் அருகில் சென்று பார்க்கவைத்தன.
ஏ அப்பா, என்ன கூட்டம் ! ‘எட்டில் பேய்கள் சஞ்சாரம்` என்று சமீபத்தில் சஞ்சிகளைகள் சொன்ன செய்திகள் பொய்யோ ? ! பேயாவது பிசாசாவது, அம்மக்கள் கூட்டத்தைப் பார்த்தால், அதெல்லாம் பயந்து ஓடியே போய் விடும். ஒருவேளை, பகலில் அவை வெளியில் வராதோ என்னவோ.
ஒரு மாறுதலுக்கென்று வாரத்தில் ஒரு நாள் மட்டும் பேரங்காடியில் சுற்றி விட்டுத் திரும்புவதை இரண்டு வருடங்களுக்கும் மேலாகச் செய்து வந்தனர். மற்ற நாட்களில் புறப் பாடம் மற்றும் வீட்டுப் பாடம் என்று நேரம் சரியாக இருக்கும். அன்றோ வீட்டுப் பாடமும் இல்லை. இருந்தாலும் செய்யும் மனநிலை கார்த்திக்கிற்கு இருக்கவில்லை. எப்போதாவது அதுபோல மனமும் உடலும் உடலும் சேர்ந்து சலிப்படைந்து விடுவதுண்டு.
பேசாமல் வீட்டிற்குப் போய் படுத்து ஓய்வெடுக்கலாமா என்று ஒருபுறமும் யாருமில்லாத வீட்டுக் கதவைத் தானே திறந்து கொண்டு நுழைவதை நினைத்து வேண்டாமென்று மறுபுறமும் மனம் கடிகாரத்தின் பெண்டுலமாய் மாறி மாறி ஆடியது. மாலையில் அம்மா வர நேரமாகும்.
இயந்திரத் தனமாக விரைவு ரயில் நிலையத்தை நோக்கி நடந்தான். சாரிசாரியாக தன் பள்ளி மாணவர்கள் மட்டுமில்லாமல், காத்தோலிக்க உயர்நிலைப்பள்ளி மாணவர்களும் மாணவர்களும் வேறு சில பள்ளி மாணவர்களும், சளசளவென்று பேசிய படியே ரயிலைப் பிடிக்க விரைந்தனர்.
‘மஞ்சள் கோட்டுக்குப் பின்னால் நிற்கும் படி அறிவிப்பின் மூலம் பயணிகள் அடுத்தடுத்த நான்கு அதிகாரத்துவ மொழிகளிலும் கேட்டுக் கொள்ளப் பட்டனர். மின்படிக் கட்டுகள் இரயில் தண்டவாள மேடையை அடையவும் ‘செம்பவாங்க் நோக்கிச் செல்லும் இரயில் வரவும் சரியாக இருந்தது. அதைப் பார்த்ததும் ‘தோபாயோ வுக்குப் போக வேண்டியவனுக்கு எதிர் திசையிலிருக்கும் அத்தையின் நினைவு நொடியில் வந்தது. வீட்டில் தான் இருப்பார், பேசாமல் அங்கு போவோம் என்று சட்டென்று முடிவெடுத்து உள்ளே சென்று ஓரயிருக்கையில் அமர்ந்து கொண்டான். அதிக கூட்டமில்லை.
கதவுகள் மூட ஒரு நொடியிருக்கும்போது குடுகுடுவென்று உள்ளே நுழைந்தான் பேய் ஹுவேய். புறப்பாடத்தை முடித்து விட்டு வந்திருப்பான். வெயிலில் வந்த அவன் முகம் சிவந்து கிடந்தது. கார்த்திக் சிரித்ததும் பதிலுக்கு லேசாகச் சிரித்தான். எப்போதுமே தன் சொந்த உலகில் அமைதியாக இருப்பான் அவன். தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருப்பதில் தான் அவனுக்கு எத்தனை அசைக்க முடியாத நம்பிக்கை என்று கார்த்திக் பலமுறை நினைத்ததுண்டு. அதுவும் வருடக் கணக்கில். யாருமே அவனை சீண்டவோ அல்லது அவனிடம் அரட்டை அடிக்கவோ முடியாது. கேட்ட கேள்விக்கு ரத்தினச் சுருக்கமாக பதில் சொல்வான். எப்போதும் வரிசையில் போய்க் கொண்டிருக்கும் ஓர் எறும்பில் இருக்கும் பரபரப்புடனும் ஒழுங்குடனும் தான் இயங்குவான்.
குச்சிக் குச்சியாக நீட்டிக் கொண்டு, குட்டையாக வெட்டப் பட்ட கருங்கேசம். நடுத்தர உயரத்துடன் ஒல்லியாக இருந்த அவனின் உடல், வெயிலில் வாடிய வாட்டத்தை நிரந்தரமாகக் கொண்டிருந்தது. உயர்நிலை மூன்றில் படிக்கும் அவனுக்கு ஏன் அவ்வயதினருக்கேயுரிய உற்சாகமில்லை என்று பலமுறை நினைத்ததுண்டு. மற்றவர்களில் உரையாடல்களைக் கேட்டு ரகசியமாகச் சிரித்துக் கொள்வான். ஆனால், கலந்து கொள்ள மாட்டான். பேரங்காடிக்கோ கடைக்கோ கூப்பிட்டாலும் வரமாட்டான். யாரேனும் கூப்பிட்டு விடப் போகிறார்களே என்ற அசௌகரியத்துடனேயே இருப்பதைப் போலிருக்கும். பெரும்பாலும் கண்கள் தரையையோ அல்லது ஆகாசத்தையோ பார்த்த படியிருக்கும்.
ஏதோ ஆழ்ந்த யோசனையில் இருந்தாற் போலிருந்தது அவனின் முகம். பேச்சுக் கொடுத்துப் பார்ப்போமே என்று தோன்றியது. ஹாய், கோயிங்க் ஹோம்? “, என்றவனிடம், “யா”, என்று சொன்னவன் மீண்டும் யோசனையில் ஆழ்ந்தான். கார்த்திக் பேசும் மனநிலையில் இருந்தான். ஆனால், அவன் தன் தன் யோசனைக்குத் தொந்தரவாய்த் தன்னை நினைத்து விலகிப் போய், தள்ளி நின்று கொள்வானோ என்று தோன்றியது.
அவன் முகத்தையே சில நொடிகள் பார்த்தான். பேய் ஹுவேய் ஜன்னல் வழியாக வெற்றுப் பார்வை பார்த்த படி நின்றிருந்தான்.
இர்ஃபான் படித்த அதே தொடக்கப் பள்ளியில் தான் பேய் ஹுவேய் படித்தான். தொடக்கப் பள்ளி இறுதித் தேர்வில் பள்ளியின் முதல் மாணவனாய் வந்தவன் அவன். அதன் பெருமிதத்தின் சாயலே இருக்காது. சொல்லப் போனால், தன்னில் உள்ள எதையோ நினைத்துக் கொண்டு சூழலுடன் பொருந்தாதோ என்ற அச்சம் நிலவும் பார்வையும் உணர்வும் எப்போதும் கொண்டிருப்பதைப் போலிருக்கும்.
இர்ஃபான் அவனைப்பற்றி நிறைய சொல்லியிருக்கிறான். அவனின் சிக்கனம், எளிமை போன்றவற்றைப் பார்த்து கஞ்சம், அலட்சியம் என்று எடை போட்டவர்களில் தானும் ஒருவன் என்று பல முறை கார்த்திக்கிடம் சொன்னதுண்டு. எல்லாம் தொடக்கப் பள்ளி இறுதித் தேர்வு முடிவுகள் வரும் வரைதான். அதன் பிறகு பேய் ஹுவேய்யை இர்ஃபானும் மற்றவர்களும் பார்த்த பார்வை மாறி விட்டிருந்தது. ஆனால், பேய் ஹுவேய் மட்டும் துளியும் மாறாமல் ஒரே இலக்கை நோக்கி நடக்கும் துறவியின் நிதானத்தோடு இருந்தான். உயர்நிலைப் பள்ளிக்கு வந்த பிறகும் அவன் மாறவேயில்லை.
“யூ ஸ்டே இன் ‘யீஷுன் ஆர் ‘கத்திப்?”, என்று கேட்ட கார்த்திக்கைப் பார்த்து, சொல்லலாமா வேண்டாமா என்பது போலத் தயங்கிக் கொண்டே, “யீஷுன்”, என்றான். இதைச் சொல்ல ஏன் இவ்வளவு தயக்கம் என்று தோன்றியது. தான் பேசுவதை அவன் விரும்பவில்லையோ என்று எண்ணிய படி தன் வாயைக் கட்டுப் படுத்திக் கொண்டு பேசாமல் இருந்தான் கார்த்திக். பதிலுக்கு நீ எங்கேயிருக்கிறாய் என்றோ, இப்போது எங்கே போகிறாய் என்றோ அவன் கேட்டிருந்தால் தான் கார்த்திக் மயக்கம் போட்டிருப்பான்.
பள்ளி ஆசிரியர்களிடையே கடுமையான உழைப்பாளி என்ற நல்ல பெயர் இருந்தது அவனுக்கு. திரைப் படங்கள் பற்றிய ஆய்வுகள் எழுத அவன் சிரமப் படுவான் என்று இர்ஃபான் சொன்னதுண்டு. அவற்றிற்குச் செலவு செய்யக் கூடிய நிலையில் இல்லை அவனின் பொருளாதாரம் என்றும் அவன் வீட்டில் கணிப் பொறியில்லாததால் தான் அவன் பள்ளியிலேயே எல்லாவற்றையும் முடித்து வந்தான் என்றும் கூட சொல்வான்.
உயர்நிலை ஒன்றில் வாங்கிய சட்டை அவனுக்கு இன்னமும் சரியாயிருந்தது. மஞ்சளேறிப் போயிருந்தாலும் அதையே தொடர்து உடுத்தினான். வெள்ளைக் காலணி கூட மிகவும் பழையது தான். அவ்வளவு பழைய காலணியை நாம் அணிவோமா என்று கார்த்திக் தன்னையே கேட்டுக் கொண்டான். இருந்துமென்ன? அவ்வருட அரையாண்டுத் தேர்வில் கிட்டத் தட்ட ஆயிரம் மாணவர்களில் அவன் தான் இரண்டாம் இடம். எப்படியும் முதல் மூன்றிடத்தில் தொடர்ந்து இருந்து வந்தான். அவ்விதத்தில் அவன் மேல் பிரமிப்புண்டு பலருக்கு.
‘யூசூகாங்க்’ நிறுத்தம் வரும்போது, எதற்கும் இருக்கட்டுமென்று அத்தைக்குப் போன் செய்து பார்த்தான். போன் எடுக்கப் எடுக்கப் படவில்லை. வீட்டில் யாருமில்லை. அத்தையின் கைத்தொலைபேசிக்கு அழைத்தான். இரண்டாவது முறை முறை அடித்ததுமே,” சொல்லு கார்த்திக், என்ன விஷயம்?”, என்ற அத்தையிடம், “எங்க இருக்கீங்க அத்த?”, என்று கேட்டான்.
“இங்க ‘கத்திப்`ல இருக்கேன். எங்கூட்டாளி வீட்டுல லா,. இதோ கெளம்பிகிட்டேயிருக்கேன்”, என்று பதிலளித்தார். தொடர்ந்து, “நீ எங்க இருக்க?”, என்று கேட்டவரிடம், “நான் எம் ஆர் டீயில இருக்கேன். யூசூகாங்க் தாண்டியாச்சு. வீட்டுக்குப் போய் வெயிட் பண்ணவா? இல்ல, கத்திப்ல எறங்கிறட்டுமா?”, என்று கேட்டான்
“ம்,. சரி, எறங்கு. ஆமா, ஒனக்கு இன்னிக்கி ஸீnஏ இல்ல? இர்ஃபானும் ஒன்னோட இருக்கானா?”
“இல்ல, nnஏ கான்ஸல்ட். இர்ஃபான் இன்னிக்கி ஸ்கூலுக்கே வல்ல. காச்சலாம்”
“ம், அதான பாத்தேன். ஏதுடா அத்தை நெனப்பு வந்துடுச்சேன்னு பாத்தேன். கூட்டாளி கூட இல்லன்னதும் கையொடிஞ்சாப்ல ஆயிடுச்சாக்கும்? சரி, அஞ்சே நிமிஷத்துல வந்துடுவேன். அங்க ஒரு கடையில செடி பாத்து வச்சிருக்கேன். வாங்கணும், நாம ரெண்டு பேரும் ப்ரவீண் வரதுக்குள்ள போயிடலாம் வீட்டுக்கு, சரியா”, என்ற அத்தையிடம், “ஓகே, சீக்கிரமா வந்துடுங்க, அத்த”, என்று போனை அணைத்தான்.
‘கத்திப்’ நிறுத்தம் வந்ததும், பேய்ஹுவேய் வெளியில் பாய்ந்து ஓடிப் படிகளில் இறங்கினான். ‘யீஷுன் என்றானே? சரி, வேறு ஏதாவது வேலை இருக்கும். போகுமுன், வேண்டுமா வேண்டாமெவென்று யோசித்த படி கையாட்டி விட்டுத் தான் சென்றான். தானும் அங்கே இறங்குவதை அவன் அறிந்திருக்கவில்லை, இல்லையானால், நின்றிருப்பான் என்று நினைத்துக் கொண்டே மெதுவாகப் படிகளில் இறங்கினான். சொல்ல முடியாது, அப்போதும் கூட நின்றிருக்க மாட்டானோ என்னவோ. கொஞ்சம் புரியாத புதிர் தான் பேய் ஹுவேய். இறங்கிக் கடைசிப் படியை அடைவதற்குள் அவன் நிலையத்தை விட்டு விடுவிடுவென்று வெளியேறியிருந்தான், திரும்பியே பார்க்காமல்.
பயணச் சீட்டு கொடுக்கும் பொறியின் அருகில் நின்று கொண்டான் கார்த்திக். இருபுறமும் பார்த்துக் கொண்டான் அவ்வப்போது. அத்தை எந்தப் பக்கமாய் வருவாரென்று தெரியவில்லையே என்று யோசித்தான். உள்ளேயும் வெளியேயும் பயணிகள் போய்க் கொண்டும் வந்து கொண்டுமிருந்தார்கள். பெரும்பாலும் மாணவர்கள். தாகத்தால் தொண்டை வறண்டது. ஏதும் வாங்கிக் குடிக்க வேண்டுமென்றால், ரயில் நிலையத்தை விட்டு வெளியேற வேண்டும். அத்தை வந்துவிடட்டுமென்று நினைத்துக் கொண்டான்.
ஏழெட்டு நிமிடங்கள் ஆன பின், அத்தையைக் காணாததும், கார்த்திக் மீண்டும் தொலைபேசியைக் காற் சட்டையிலிருந்து எடுத்து அழுத்திக் கொண்டே பார்வையை ஓட்டினான். அத்தை பத்தடி தொலைவில் வேகுவேகென்று நடந்து வந்து காண்டிருந்தார். சட்டென்று போனை அணைத்து விட்டு, அவரோட சேர்ந்து நடந்து கொண்டே, “ஏதாச்சும் தண்ணி வாங்கிட்டு வரேன் அத்த. வெரி தர்ஸ்ட்டிலா. கொஞ்சம் இருங்க”, என்று சொல்லிவிட்டு வாசலில் இருந்த ‘ஸெவென் இலெவென்’ கடைக்குள் நுழைந்து இரண்டு ‘பெப்ஸி’யை எடுத்துக் கொண்டு, அனுமார் வால் போல நின்றிருந்த வரிசையில் நின்று கொண்டான், பணம் செலுத்த.
வரிசை மிகவும் மெதுவாக நகர்ந்தது. கையில் இருந்த பானத்தைப் பார்த்ததும் தாகம் இரட்டிப்பானது. வெளியில் நின்றிருந்த அத்தை பொறுமையின்றி அவனருகில் வந்து, “கார்த்திக், உன்னக் காக்க வச்சதுக்குப் பழிவாங்கறயா? எவ்ளோ நீள க்யூ? பேசாம வெளிக் கடையில வாங்கியிருக்கலாம்லா என்றார். “இதோ, நின்னது நின்னுட்டேன். இன்னும் ரெண்டு பேர் தானே, ‘பே பண்ணிட்டே வரேன்”, என்று சிரித்துக் கொண்டே சொன்னான்.
வெளியேறி அவென்யூ இரண்டைக் கடக்க மேம்பாலத்தில் ஏறினார்கள். இறங்கும் முன், எதிர்புறம் இருந்த அடுக்குமாடிக் கட்டிடத்தில் புத்தகக் கடைக்கும் மருந்துக் கடைக்கும் நடுவில் தெரிந்த மாடிப் படிகளுக்கருகில் நின்றிருந்தது பேய் ஹுவேய் மாதிரியிருந்தது. அவனருகில் ஒரு வண்டி. அதில் மடக்கி அடுக்கப்பட்ட ஏராளமான அட்டைப் பெட்டிகள். இவன் இங்கு என்ன செய்கிறான் என்று யோசித்துக் கொண்டே நடந்தவனைப் பார்த்து, “எங்க வேடிக்கை பாக்கற,ம்?”, என்று அத்தை கேட்டதும், “அது எங்க்ளாஸ் மேட் பேய் ஹுவேய்”, என்று கையை நீட்டிக் காட்டினான்.
“ஓ லோங்க் ஷூஷூவோட பையன் ! உங்கக் க்ளாஸ் தானா?”, என்று சொன்னதும் கார்த்திக் பேய் ஹுவேயைப் பற்றி அறிய ஆர்வம் கொண்டான்.
தொடர்ந்து பேய் ஹுவேயின் அப்பாவைப் பற்றிச் சொல்லிக் கொண்டே வந்தார் அத்தை. பிறவியிலேயே இடது கால் சற்று நீளம் குறைவு. நிற்கும் போது தெரியாது. ஆனால், விந்திவிந்தி நடப்பதால், அவர் நடக்கும்போது பார்ப்பவருக்குத் தான் கொஞ்சம் மனக் கஷ்டம் ஏற்படும்.
அவரோ தன் வேலையில் கருத்தாயிருப்பார். ஒரு கண் மட்டும் தான். கருவிழியேயில்லாத வலது கண் இடுங்கி, கண் இருந்த இடத்தில் ஏதோ அறுவை செய்த முடிச்சு போல இருக்கும். தன் ஒரே மகன் பிறந்த போது மனைவியை இழந்து விட்டு, அவனை வளர்ப்பதையே இலட்சியமாகக் கொண்டிருந்தவர், அடுத்த சில வருடங்களில் தனது சாப்பாட்டுக் கடை வேலையையும் ஆட் குறைப்பின் காரணமாக இழந்து விட்டிருந்தார்.
எறியப்பட்ட அட்டைப் பெட்டிகளை ஆங்காங்கே அடுக்கு மாடிக் கட்டடங்களின் கீழ்த் தளங்களுக்குச் சென்று சேகரிப்பார். அதற்கும் சில வேளைகளில் போட்டி வந்துவிடுமாம். சச்சரவுகளில் சிக்காமல் தன் வழியே போய் விடுவாராம் விட்டுக் கொடுத்து விட்டு. அதிகாலையிலேயே வெயில் வருமுன்னர் கிளம்பி விடுவார்.
பேய் ஹுவேய் பள்ளிக்குச் சென்றதும் தானும் கிளம்பி விடுவார். யீஷுனில் தொடங்கி அவருக்கென்று ஒரு வழியுண்டு. ஒவ்வொரு வட்டாரமாகச் வட்டாரமாகச் சேகரிப்பார். வந்து சேகரிப்பார். வந்து சேருமிடம் கத்திப் நிலையத்திற்கு எதிரில் இருக்கும் கடைத் தொகுதி. தினமும் மதியத்திற்குப் பிறகு, அதே அடுக்குமாடிக் கீழ்த் தளத்தில் படிக்கு அருகில் வெயில் படாதவாறு உட்கார்ந்து கொண்டு மகன் வரக் காத்திருப்பார் லோங்க் ஷூஷூ.
சேகரிப்பவற்றை வைத்துக் கொள்ளவென்று அவருக்கு ஒரு வண்டியிருந்தது. பழைய வண்டி. காலையில் கிளம்பும் போது அதற்குள் தனக்குப் பகலில் வேண்டிய தண்ணீரையும் மழைக்கு ஒரு பழைய குடையையும் வைத்துக் கொள்வார். இது தவிர குழந்தையைத் தள்ளிக் கொண்டு போகும் ஒரு பழைய வண்டி ஒன்றையும் வைத்துக் கொள்வார். வீடு திரும்பும்போது அதில் மகனின் பள்ளிப் பையை வைத்துக் கொண்டு தான் தள்ளிக் கொண்டு உடன் நடப்பார்.
மகனோ, யீஷுனில் இறங்கினால் வீடு பக்கமென்றாலும், முதல் நிறுத்தத்திலேயே இறங்கி, அப்பா இருக்குமிடம் வந்து, அட்டையால் நிறைந்து கனத்திருக்கும் வண்டியைத் தள்ளிக் கொண்டு அவருடன் போவான். சில வேளைகளில் அங்கே யிருக்கும் சாப்பாட்டுக் கடையிலேயே பகலுணவையும் முடித்துக் கொள்வர். அப்பாவை வீட்டில் விட்டுவிட்டு பேய் ஹுவேய் பெரும்பாலும் இணையம் வழி முடிக்க வேண்டிய பாடங்களை முடிக்க மீண்டும் பள்ளிக்குப் போய் வருவான்.
ப்ளாஸ்டிக், பழைய நாளிதழ்கள் மற்றும் அட்டை போன்ற மறுபயனீட்டுப் பொருள்களைக் காராங்குனிகளிடமிருந்து தினமும் மாலையில் ஒரு மறுபயனீட்டு நிறுவனம் வந்து வாங்கிக் கொண்டு போகும். அவர்கள் கொடுக்கும் காசு தான் லோங்க் ஷூஷூவின் ஷூஷூவின் தினசரி வருமானம். விடாத மழையென்றால், அவருக்கு அன்றைய வருமானம் போய் விடவும் கூடும். அவர்கள் ஒரே மகனைப் படிக்க வைக்க அவர் பட்ட பாட்டை அறிந்து பல தொண்டு நிறுவனங்கள் உதவித் தான் வந்தன. இருந்தாலும் தன் வேலையை மட்டும் விடுவதாயில்லை அவர்.
கடைகள் வழியாக நடந்த போது தான் அத்தைக்கு எல்லாக் கடைக் காரர்களும் சிநேகிதர்கள் என்று தெரிந்தது. எல்லோரும், சிரித்துக் கொண்டே ‘ஹாய், என்றும் ‘ஹலோ’, என்றும் சொல்லி அத்தையை கடைக்குள் வரவேற்றார்கள். மதிய உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்த கொண்டிருந்த சிலர், சேர்ந்து சிலர், சேர்ந்து சாப்பிட அழைத்தனர்.
பயனீட்டாளரைப் பார்ப்பதைப் போலில்லாமல் உற்ற நண்பரைப் பார்த்ததைப் போல ஒவ்வொருவர் முகத்திலும் மகிழ்ச்சி. வழியில் வந்த துப்புரவாளரிலிருந்து திருப்பத்தில், “லாய்,லாய் துரியான் லாய்”, என்று கூவிய ‘துரியான்’ வியாபாரி வரை. அத்தையும் எல்லோரிடம் சிரித்து முகமன் கூறிக் கொண்டே எங்கேயும் அதிகம் நிற்காமல் நடந்து கொண்டிருந்தார். கார்த்திக் அது வரை அறிந்திராத ‘அத்தை’யை அப்போது தான் பார்த்தான். சுபாவமாய் மிகவும் உற்சாகமானவர் என்றாலும், வெளியுலகில் சகட்டு மேனிக்கு எல்லோரிடமும் நட்பு பாராட்டும் அத்தை அவனுக்குப் புதிது.
“அத்த நீங்க பயங்கர பாப்புலர் போலிருக்கு”, என்று கலாய்த் தான் கார்த்திக். ஆமா, பின்ன இல்லையா? nn மெம்பரா இருக்கேனில்ல. வீடு மாறிப் போனப் பிற்பாடும், அப்பப்போ இங்கயெல்லாம் வருவேன்லா. எல்லாக் கடைக் காரங்களையும் நல்லாத் தெரியும். ‘சார்ஸ்’ போதுகூட கடையாட்கள் வந்து டெம்ப்ரேச்சர் பார்த்து, ஓகே ஸ்டிக்கர் ஒட்டிக்கணும்னு சொன்னாங்கல்ல. அப்போ கூட அங்க இருந்த நர்ஸுக்கு நாந்தான் எடுபிடி. எல்லாரையும் அப்பயே ரொம்பப் பழக்கம்”, என்று சொல்லிக் கொண்டே, “இதோ இதுதான், நாஞ்சொன்ன கடை. இரு, ரெடியா எடுத்து வச்சிருக்காரான்னு பாக்கறேன்”, என்று சொல்லிக் கொண்டே கடைக்குள் நுழைந்துவரிடம் சீனக் கிழவர் காத்திருந்தவரைப் போல் மூன்று பெரிய பைகளை நீட்டினார்.
“த்தோ ஷௌ ஷெங்க்? “, என்று தனக்குத் தெரிந்த சீனத்தில் அத்தை விலை கேட்க, கிழவர், துவா புளு ரிங்கே”, என்று மலாயில் சொல்லிக் கொண்டே இருபது வெள்ளியைப் பெற்றுக் கொண்டு மீண்டும் தான் உட்கார்ந்த இடத்தில் போய், தன் குருட்டு யோசனையை விட்ட இடத்தில் கால் நகம் வெட்டிய படி தொடர்ந்தார்.
“சொன்னேனில்ல, இவரோட பேத்தி தான். அதுக்கு தான் அந்தப் பையன் ஃப்ரீயாவே டியூஷன் சொல்லிக் கொடுக்கறான். ஃபீஸெல்லாம் மத்தவங்க கிட்டதான் வாங்குவான்”, என்று சொல்லிக் கொண்டே அத்தை வெளியேற கார்த்திக் பின் தொடர்ந்தான்.
கார்த்திக் திடீரென்று தன் மனம் கனத்ததைப் போலுணர்ந்தான். அந்த அட்டைப் பெட்டிகளையெல்லாம் விற்றால் கிடைக்கக் கூடியது எத்தனை என்று அவன் மனம் கணக்கிட்டது. தந்தைக்கும் மகனுக்கும் செலவுகளைச் சமாளிக்க அது எப்படிப் போதும்? வாரயிறுதிகளில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்குத் துணைப்பாடம் சொல்லிக் கொடுத்துச் சம்பாதிக்கிறானாம் பேய் ஹுவேய்.
பேய் ஹுவேய்யைப் பற்றி நினைக்க நினைக்க பெருமிதமாய் இருந்தது. தன்னை நினைத்து கொஞ்சம் அவமானத்தோடு குற்றவுணர்வும் கொண்டான். கணியின் வேகம் குறைந்து விட்டது என்ற காரணத்திற்காக நச்சரித்து அப்பாவிடம் புதிதாய் வாங்கியது மனதை முதல் முறையாய் உறுத்தியது.
வெயில் மறைந்து, மழையின் வருகையைச் சொல்லும் குளிர்ந்த காற்று வீசியது. “அத்த, நாமவேணா நடந்தே போவோமா”, என்றவனை ஒரு மாதிரிப் பார்த்தார் அத்தை. நெற்றியை தொட்டுப் பார்த்து,’ ஒடம்புக்கு ஒண்ணுமில்லயே,.. எதுக்குக் கேக்கறேன்னா, எப்பவும் டாக்ஸி பிடிக்கச்சொல்ற பிள்ள நடப்போம்னா,.,” என்று கேலி செய்த அத்தையைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே,” நிஜமா தான் சொல்றேன். நானே தூக்கிக்கறேன் எல்லாத்தையும், கொண்டாங்க”, என்றபடி மூன்று பைகளையும் வாங்கிக் கொண்டான்.
யீஷுன் ரிங்க் ரோட்டில் நடந்தவனின் பார்வை வெகு தூரத்தில் கட்டிடங்களுக்கிடையே மெதுவாக நடந்து கொண்டிருந்த பேய்ஹூவெய் மற்றும் அவனின் அப்பா கண்ணில் பட்டார்கள். அதே வழியாகத் தான் நடக்க வேண்டும். வேகமாக நடந்தால் சீக்கிரமே அவர்களை எட்டி விடலாம். நேருக்கு நேர் சந்திக்காமல் வேண்டுமானால் போகலாம். ஆனால், கார்த்திக்கைப் பார்த்தால், பாவம் பேய் ஹுவேய் சங்கடப் படலாம். தான் அவனுடைய அந்தரங்கத்தில் நுழைந்து விட்டதாய் உணரும் ஒரு தர்மசங்கடத்தை அவனுக்கு கொடுக்கக் கூடாது என்று முடிவு செய்தான்.
ஆறு வருடம் ஒரே பள்ளியில் படித்த இர்ஃபானுக்குக் கூடத் தெரியாத விஷயம். ஒரு வேளை தெரியுமோ? ஆனால், தெரிந்திருந்தால் தான் நிச்சயம் சொல்லியிருப்பானே.
அவன் மனம் மாறியது. ஓஸீபீஸி வங்கியின் அருகிலிருந்த பேருந்து நிறுத்ததை நோக்கி வேகமாக நடந்தான். “அத்த, அதோ ஃபீடர் பஸ் வருதே, அதுல போய்டுவோம், ம், சீக்ரம் வாங்க,” என்று சொல்லிக் கொண்டே ஒடிச் சென்று ஏறி விட்டான். “அதானே பார்த்தேன், திருந்திட்டியோன்னு பயந்துட்டேன்”, பின்னாலேயே ஏறிய அத்தை செயத கேலியைச் சிரித்துக் கொண்டே ஏற்றான்.
“அத்த, என்னோட பழைய கம்ப்யூட்டர் சும்மா தானே இருக்கு கெஸ்ட் ரூம்ல. பேசாம அத பேய் ஹுவேய்க்குக் கொடுத்துடலாமா. அதுக்கு நீங்க தான் சரியான ஆளு. ம்,. என்னோடதுன்னு தெரியக் கூடாது. அப்பறம், நா ப்ரவீணுக்கு வாரத்துல ஒரு நாள் பாடம் சொல்லித் தரேன். இன்னிக்கே ஆரம்பிக்கறேன், வந்திருப்பான்ல?”, என்றவனை ஆவென்று பார்த்து, “சாமி, ஒரே நாள்ள இவ்வளவு திருந்தினா தாங்காதுடா பூமி,” என்ற போது கார்த்திக் சிரிக்க வில்லை.
“ட்யூஷன் ஃபீஸ் கேப்பியே”, என்று கலாய்த்ததும், ‘வேண்டாம் என்று முதலில் சொல்ல நினைத்து சட்டென்று, “ம்,… அதுவும் பேய்ஹுவேய்க்கு தான். மாசா மாசம் அவனோட ஈஸிலிங்க் கார்ட ‘டாப் அப் பண்ணிக் கொடுத்துங்க அத்த. ஆனா, எதுவுமே யாருக்குமே தெரியக் கூடாது”, என்றான் தீர்மானத்துடன்.
“ஐயய்யோ,.. என்னோட ஒரே பிள்ளைய வெயில் நேரத்துல எங்க கூட்டிட்டுப் போன, எதப் பார்த்து பயந்தான்னு எங்கண்ண என்ன ஏசத் தான் போறாரு. இதையெல்லாம் கேட்டா, லீவு போட்டுட்டு, காடிய கௌப்பி கிட்டு இப்பவே வந்தாலும் வந்துடுவாரு”, என்று அத்தை படுசீரியஸாய் முகத்தை வைத்துக் கொண்டே ஜோக்கடித்தார்.
தன் தீர்மானங்களுக்குச் சீக்கிரமே செயல் வடிவம் கொடுத்துக் கிடைக்கப் போகும் ஆத்ம திருப்தியின் அடையாளங்களை உணரத் தொடங்கி விட்டிருந்தான் கார்த்திக்.
– பின் சீட் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 2005, நிலா புக்ஸ்.
![]() |
சூழலையும் சமூகத்தையும் துருவி ஆராய்ந்து எளிய நிகழ்வுகளை வாழ்வனுபவமாக சிருஷ்டிக்கும் இவரது ஆற்றலானது உலகளாவிய தமிழிலக்கியப் பெருந்திரையில் இவருக்கென்றொரு நிரந்தர இடத்தைப் பொறித்து வருகிறது. தனது வாழ்விடத்தின் நிகழ்வுகள், நிலப்பரப்பு, பண்பாடு, சமூகம் ஆகியவற்றை சிறுகதைகளாகவும் நெடும் புனைவுகளாகவும் எழுதி அவற்றை உலக அனுபவங்களாக்குவதே இவரது எழுத்தின் வெற்றி. சிங்கப்பூரைக் களமாகக் கொண்ட எளிய எதார்த்த நடைக்காக நன்கு அறியப் பெறும் இவரது சிறுகதைகள் பல்வேறு தொகுப்புகளிலும் இடம் பெற்றுள்ளன.…மேலும் படிக்க... |