உண்மை எது?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 9, 2025
பார்வையிட்டோர்: 355 
 
 

(1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“இன்னைக்கி ஜானு பண்ணுகிற அநியாயம் பெருத்த அநியாயம். ஒரு துளிப் பால் உள்ளே போகலே அம்மா” என்று தாயிடம் முறையிட்டாள் பார்வதி. 

“என்றைக்குத்தான் உன் மகள் ஒழுங்காய்ச் சாப்பிட்டுவிட்டாள், இன்னைக்கி ஒன்றும் சாப்பிடவில்லையே என்று வருத்தப்படுவதற்கு?” என்றாள் குழந்தை ஜானுவின் பாட்டி. 

“என்றாலும் இன்றைக்கு வெகு மோசம். இத்தனை நாளும் பால் குடிக்காவிட்டாலும், பிஸ்கோத்தாவது ஒன்றிரண்டு தின்பாள். இன்றைக்கு அதுவும் சாப்பிட மாட்டேன் என்கிறாளே. பிஸ்கோத்தைக் கொடுத்தால் வீசி எறிகிறாள்.” 

“வயிற்றெரிச்சல் தீரக் காலுக்கடியில் போட்டுக் கொண்டு பாலையாவது நாலு சங்கு போட்டிறதுதானே?”

“அதுவும் போட்டிப் பார்த்தாச்சு. முன்பெல்லாம் அழுதுகொண்டாவது கொஞ்சநஞ்சம் இறக்குவாள். இப்பொழுது கொப்பளிக்கப் படித்திருக்கிறாள் புதிதாக!”

“நல்லா நாலு அறை அந்த வாயிலேயே போடுறது தானே?” 

“போட்டும் பார்த்தாச்சு. கூடக் கொஞ்சம் அழுகை தான் பலன்.” 

“நானும் எத்தனையோ குழந்தைகளை வளர்த்து விட்டேனம்மா. உன் வயித்திலே பிறந்த இந்தச் சீமைச் சித்திராங்கியைப்போல ஒரு குழந்தையும் கிடையாது” என்று தன் அநுபவத்தைக் கூறினாள் பாட்டி. 

“அடுத்த வீட்டு லக்ஷ்மியின் குழந்தையைப் பார். இப்படியா? ஒரு கிண்ணம் நிறையப் பாலுஞ் சாதமும் போட்டு வைக்கிறாள். சிவனே என்று சாப்பிடுகிறது. எந்த வீட்டிலும் இந்த அநியாயம் இல்லை!” 

“நல்லாச் சாப்பிடுறதனாலே தான் குழந்தை குதிராட்டமா ஓடியாடித் திரியுது. ஒன் குழந்தை அப்படி இருக்கா?” 

“இருக்கு! இதுதான். ஒரு நாளைக்கொரு நாள் கோலாய்க் குரங்காய்ப் போகிறதே! அவள் குழந்தையைப் பாரு, காலும் கையும் எவ்வளவு அழகா இருக்கிறது!” 

“சாப்பிடாவிட்டால் எங்கிருந்து அழகு வரும்? இப்படித்தான் காலுங்கையும் சூம்பிப்போய்க் கிடக்கும்.” 

”பாரம்மா, இந்த ரொட்டியைப் பாலில் நனைத்து எவ்வளவு நேரமாகிறது. ஒரு வாய் வாங்கியிருக்கிறாளா?” 

“அவள் அப்பாவிடமாவது கொண்டுபோய் விடு. அன்றைக்கு அவர் கொடுத்ததற்குச் சாப்பிட்டாளே?” 

ஜானகியின் தந்தை ரொட்டியை வாங்கிக் கரண்டி ஒன்றில் எடுத்து ஜானகியை அழைத்துக் கொடுத்தார். குழந்தை தனது சிறிய கையினால் ‘வேண்டாம்’ என்று அலைத்தது. பின்பு பார்வதி கொடுத்துப் பார்த்தாள். ‘ஒட்டக்கூத்தன் பாட்டிற்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்றதுபோல் கை அலைப்பது போதாதென்று தன் அழகிய தலையையும் ஆட்டியது. 

 “என்னடி இது நினைத்த மணியம்! இங்கே கொண்டுவா ஊட்டிவிட்டு வருகிறேன்” என்று குழந்தையையும் கிண்ணத்தையும் தூக்கிக்கொண்டு பாட்டி புறக்கடைக்குச் சென்றாள். 

“இன்றைக்கு ஒரு பருக்கையாவது சாப்பிட்டிருக்காயாடி? அதுதாண்டி தோலாத் துரும்பா இளைச்சுப் போறே. அடுத்த வீட்டு ஜானுவைப் பாரு. ஒன்னாட்டம் இப்படியா சாப்பிடப் பிடிவாதம் பண்றா? அதுதானே குந்தாணியாட்டமா அவள் ஓடியாடித் திரியுறா! நீ தேவாங்கு போலக் குந்தின இடத்தை விட்டு எந்திருக்காம இருக்கே” என்று அடுத்த வீட்டுப் புறக் கடையில் லக்ஷ்மி தன் குழந்தைக்கு நாயையும் கோழியையும் காட்டிச் சாதம் ஊட்டிக்கொண்டிருக்கும் சத்தம் கேட்டது!

– வாடா விளக்கு முதலிய கதைகள், முதற் பதிப்பு: 1944, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.

சு.குருசாமி சு.குருசாமி (Trichi. S.V. Guruswamy Sarma, திருச்சிராபுரம் சு.வை.குருசாமி சர்மா) என்பவர், தமிழில் முதல் சில புதினங்களில் ஒன்றான "பிரேம கலாவதீயம்" (1893) எழுதிய ஒரு முக்கியமான தமிழ் புதினம் மற்றும் சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவர் 1940களில் "வாடா விளக்கு" போன்ற சிறுகதைத் தொகுப்புகளையும், பல கதைகளைத் தொகுத்து வெளியிட்டதோடு, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உதவியவர். மாயூரம் முனிசீப் வேதநாயகம் பிள்ளை, பண்டித எஸ்.எம்.நடேச சாஸ்திரி, பி.ஆர்.ராஜமையர், சு.வை.குருசாமி சர்மா, அ.மாதவையா ஆகியோர் முதற் காலக்கட்டத் தமிழ்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *