உணர்ச்சி
(1960ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மங்களகரமான ஆவணித் திங்களின் இரவுகளில் ஒன்று மெல்ல நழுவிக் கொண்டிருந்தது. ஊரெங்கும் ஒரே ஆரவாரம், கொட்டு மேளங்கள் ஒலித்தன. புத்தம் புது மலர்கள் நறுமணம் கமழ்ந்தன. ஊதுபத்திகளும், சாம்பிராணிப் பொடியும் வாசனைப் புகைமூட்டத்தை எழுப்பியபடியே எரிந்து, புகைந்து, மறைந்துகொண்டிருந்தன. வீட்டுக்கு வீடு குமரிப் பெண்களின் குதூகலச் சிரிப்பில் இன்பம், ‘இதோ இருக்கிறேன்’ என்பது போலக் குரல் கொடுக்கிறது. ஊரே புதிய சோபையுடன் மிளிருகிறது. இரவு பகலாகிவிட்ட கோலம். அன்றைக்கு அந்த ஊரின் பத்து இல்லங்களில் திருமணங்கள் நிகழுகின்றன. கொண்டாட்டத்திற்கும், குதூகலத்திற்கும் கேட்கவா வேண்டும்!
கமலாவினாற் கண்ணோடுகண் மூடவே முடியவில்லை. வீடே ‘வெறிச்’ சென்று கிடக்கிறது. மங்கியெரியும் மண்ணென்ணெய்க் குப்பிவிளக்குக்கூடக் குறைத்தூக்கம் கொள்கிறது. கமலாவுக்குக் ‘காவலாக’ விடப்பட்ட அடுத்த வீட்டு ‘அம்பி’ப்பயல் அசாதாரணத் தூக்கத்தில் மூழ்கிக் குறட்டையொலி கிளப்புகிறான். கமலா படுக்கையில் கிடந்து புரளுகிறாள். இனந்தெரியாத என்னவோ ஒரு உணர்ச்சி அவளைக் கிள்ளியெடுக்கிறது. அவளை நித்திரை செய்யவொட்டாமற்றடுக்கிறது. அவள் உள்ளம் கனலாகக் காய்கிறது. ‘சே, என்ன வாழ்க்கை! அவள் வாய்திறந்து பேசுகிறாள். மெத்தைப் படுக்கை அவளுக்கு முள்ளாகக் குத்துகிறது. எழுந்து உட்கார்ந்து விடுகிறாள்! அவள் பார்வையில் ஒருவித வெறுப்பு, ஏக்கம், தாபம் எல்லாம் சுடர் விடுகின்றன. நெடியதோர் பெருமூச்சு வெளிவருகிறது. ‘இன்னும் அவர்களைக் காணவில்லையே’ என ‘முணு முணுக்கிறாள்.
அவர்கள் கமலாவின் பெற்றோர், பக்கத்திலே நிகழும் திருமண வீட்டுக்குச் சென்றிருந்தார்கள். அங்கேயுள்ள ஆரவாரங்களிலும், கேளிக்கைகளிலும் நேரத்திற்கு வீடு திரும்பவேண்டும் என்பதை மறந்துவிட்டார்கள். மனித சுபாவம்!
கமலாவின் சிந்தனையிலே என்னவெல்லாமோ தோன்றி மறைத்துகொண்டிருந்தன. முப்பது வயது கடந்தபின்பும் இல்லறம் நடத்த முடியாத நிலையிலிருக்கிறேனே என்று ஏங்கினாள். பருவ உணர்ச்சி கிளப்பும் தூண்டுதல்களினால் எத்தனை இரவுகளை அவள் தூக்கமில்லாமல் துயருடன் கழித்திருக்கிறாள் என்பதை எண்ணவே அவளுக்கு எரிச்சல், எரிச்சலாக வந்தது! பாவம், அவள் பெற்றோர்தான் என்ன செய்வார்கள். பேசிவருகிற ஒரு சம்பந்தமும் கைகூடுவதாகக் காணவில்லையே! இதுதான் விதியென்பதா?
“இன்றைக்கு மணமுடிக்கிறாளே பார்வதி, கமலாவிலும் ஐந்து வயது இளையவள். படித்ததும் என்னவோ ஆறோ ஏழோ வகுப்புத்தான். நல்ல மாப்பிள்ளை குதிர்ந்துவிட்டது அவளுக்கு. அதிட்டக்காரி. மாப்பிள்ளை பிரபலமான வர்த்தக நிலையமொன்றின் பிரதம ஏஜண்டு. அவள் எதிர்காலம் பிரகாசமானதாயிருக்கும்! ஆனால் கமலா என்ன, பார்வதியைப்போல ஆறாம் ஏழாம் வகுப்புடன் ஏட்டைக் கட்டிவிட்டவளா? ஆசிரிய கலாசாலை வரை சென்று பயிற்சி பெற்றுத் திரும்பிய ஆசிரியை. நல்ல அழகி. ஆனால் வாழ்க்கை என்பது அவளைப் பொறுத்தவரை ‘கண்ணாம்பூச்சி’ காட்டுகிறதே. இதயத்தின் ஏக்கம் அவளுடலையும் கருக்கியது. நெட்டுயிர்த்தாள்.
என்ன ஆனாலும் பார்வதி அதிட்டக்காரிதான்! இந்த இரவு அவளுக்கு கமலாவின் இரத்த நரம்புகள் விம்மிப்புடைத்தன. உணர்ச்சிக் குழாய்கள் கட்டு மீறிக் கனன்றன. உடலம் மெல்லென நடுங்குகிறது. இதெல்லாம் அவளுக்குப் பழக்கப்பட்டதுதான். எத்தனை இரவுகள் இப்படி ‘வேதனை’ அனுபவித்திருக்கிறாள். நினைவுத் தொடர் முற்றாக நின்றுவிடவில்லை. பார்வதிக்கு இது புது அனுபவமாக இருக்கலாம் ஆனால் கமலாவுக்கு ‘இப்படி’ நிகழ்வதானால் அவ்வளவு புது அனுபவமாக இராதுதான். ஆனாலும் ‘அந்த அது’ அவளுக்குக் கிடைப்பதாக இல்லையே!
எங்கோ ஒரு காதல் நவீனத்தில் படித்த சம்பவம் கமலாவின் மனத்திரையில் படமாக விரிந்தது. பார்வதியும் அவள் கணவனும் இந்த இரவிலே அந்த நவீனத்தில் வரும் காதலனும் காதலியும் போல் ஒரே அணைப்பில் இந்த உலகை மறந்து…. ஐயோ பாழ் மனமே! ஏன் இப்படி நிலைகெட்டுத் தவிக்கிறாய்? மனக் குரங்கின் தலைகீழ்த் தாவுதல்களால் கமலா அவதிப்படுகிறாள். கூடவே அந்த ‘மறக்கமுடியாத’ சம்பவம் மீண்டும் அவளுள்ளத்தில் நிழலிடுகிறது.
கமலா, அவள் இன்னும் பருவ வயதைக் கடக்கவில்லைத்தான். ஆனால் பருவப் பசிகிளப்பும் வேதனையை அவளைப்போல வேறுயாரும் அனுபவித்திருக்க முடியாது. ‘ஏன், பெண்ணாகப் பிறந்தேனோ’ என்று அவள் பலதடவைகளில் ஏங்கியிருக்கிறாள். அவள் வாழ்வில் குறுக்கிட்டவர்கள், பழகியவர்கள் அவளது வேதனையை வேண்டிய அளவுக்குக் கூட்டிச் சென்றார்களே தவிர அவளுக்கு வாழ்வளிக்கவில்லை. அறியாத இன்பத்தை அவளுக்கு அரைகுறையாக அறிமுகப்படுத்தியதுடன் அவள் நட்புக்கு முற்றுப்புள்ளியிட்டுக் கொண்டார்கள் சிலர். சிலருடைய தொடர்புக்குத் தானாகவே தடையிட்டுக் கொண்டாள் கமலா. விந்தை உலகமல்லவா இது!
கமலா காதலித்தவர்களிலே கமலாவைக் காதலித்தவர்களிலே சங்கரனும் ஒருவன், அவனோடு பழகியதைப் போலக் கமலா யாருடனும் அவ்வளவு நெருங்கியப் பழகியதே கிடையாது. சற்றுக் கண் மூடினால் ‘குழியில் வீழ்த்திவிடும்’ சதிகார உள்ளம் கொண்டவர்களல்லவா இன்றைய வாலிபர்கள். மற்றவர்களுடன் எல்லாம் கமலா பழகியது என்னவோ உண்மை யென்றாலும், அவள் நினைவிலே தீப்பற்றுமளவுக்குப் பழகியது கிடையாது, ‘சும்மா ஒரு மாதிரியான பழக்கம், ‘சரிவந்தால் விவாக பந்தத்தில் கட்டுப்படுத்தி விடலாமல்லவா? ஆனால் அந்தப் பழக்கம் எவருடனும் சிரஞ்சீவித்துவமான இணைப்பைப் பெற்றுக் கொடுக்கவில்லை கமலாவுக்கு. கமலா கன்னியாகத்தான் அன்றும் இருந்தாள், ஆனால், சங்கரன் அவளுடன் பழகியபோது, அவன் பிரேமை தவழும் விழிகளும், கொஞ்சல் வார்த்தைகளும், நெஞ்சத்தில் இன்பவெறியைக் கிளப்பும் காதல் கடிதங்களும் கமலாவின் இதயத்தை ஈர்த்தன. மையலில் அவளை வீழச் செய்தன. ‘ஏதோ வாழவேண்டும்’ என்ற ஆசையில் ‘காதலிப்பதைப்போல’ப் பலருக்குச் சாடை காட்டிக் கவர்ச்சி வலை விசி வந்தவளை ஒரு நாள், ஒரு சந்திப்பின்போது, பாடசாலையின் தனிமையில் அந்த அறையில் அவர்கள் இருவரும் நின்றபோது, நெஞ்சோடு நெஞ்சும், உதட்டோடு உதடும், விழியோடு விழியும், அழியாத ஆசைக் கனவுகளை நனவாக்கிக் கொண்டபோது, சில நிமிடங்கள் கமலா தன்னை மறந்திருந்தாள். அஃதெல்லாமிப்போது பொய்யாய்ப் பழங்கதையாய்க் கானல் நீராய்ப் போய்விட்டதே!
சங்கரன் இப்படி நடந்து கொள்வானென்று அவள் சிறிதும் எதிர்பார்க்கவில்லைத்தான். ஏனோ, நெஞ்சில் மறக்கமுடியாத எண்ணங்களை எழுதிவிட்ட அவளை மறந்து, அந்தப் பாடசாலையை மறந்து சங்கரன் எங்கோ சென்றான். எவளோ ஓருத்தியை மணந்துகொண்டான் என்பதுதான் கமலா அறிந்து கொண்ட உண்மை. அவளுக்கு ஆசை காட்டியவர் பலர் அப்படிப் போய்விட்டனர். ஆனால் சங்கரன், அவர்களில் யாரும் பெற்றிராத அனுபவத்தை அவளிடம் பெற்றிருந்த அவன் கூட உண்மையிலே கமலா ஏமாந்துபோனாள்!
ஆனால் அந்த அனுபவம் அவளை ‘இல்லறத்தில்’ நுழையத் தூண்டியதே தவிர, அதனை வெறுக்கக் கற்றுக் கொடுக்கவில்லை. இது தான் இயற்கையின் நியதியா ? ‘வாழ்வு’ அவளுக்கு கானல் நீராகவல்லவா இருக்கிறது. எங்கே அதைப்பற்றிப் பிடித்துவிடலாமோ என்ற ‘வெறி’யுடன் அவள் ஆசை வலை வீசுகிறாள். கவர்ச்சிச் சாடை காட்டுகின்றாள். முடியவில்லை. அவள் முயற்சிகள் எல்லாம் ‘சோடை’ போய் விடுகின்றனவே. என்ன உலகம்! என்ன வாழ்வு இது ? பருவம், உணர்ச்சி, வளர்ச்சி, எல்லாமே உலகிலே தம்பித்து விட்டாலென்ன, இவற்றால் இப்படியெத்தனை ‘கமலா’க்கள் கஷ்டப்படுகிறார்களோ ? வஞ்சக உலகம். கோழை மனிதர்கள். சுயநலப் பித்துப் பிடித்த இளைஞர்கள். அவர்கள் ஆசையெல்லாம் தமது இச்சையைப் பூர்த்திசெய்ய ஒரு பெண் கிடைத்துவிட்டால் போதுமென்பதுதான். பெண் அவளுக்கு இதயமும், அதன் ஆசைக்கனவுகளும், வாழவேண்டுமென்று இயல்பான விருப்பும் இல்லாமலா போய்விடும் ? ஏனோ இந்த வாலிபர்களுக்கு இந்த உண்மைகள் புலனாவதில்லை!
பெண், அவள் உணர்ச்சிகளின் கோவை. உணர்ச்சிகள் அவளை அரிக்கின்றன. ஆண்வண்டின் மென்மையான ஸ்பரிச சுகத்தால் பெண் மலர் தாய்மையுறுகிறதல்லவா? மலருக்கு அந்தச் சுகம் வேண்டும். கமலாவுக்கும் அது வேண்டாமா ? ஆனால் அவள் மலரைப்போல் ஒரு அஃறிணைப் பொருளல்ல. மனிதவர்க்கத்திலும், கல்வியறிந்த நாகரிகம் படிந்த உயர்திணைப் பெண்ணல்லவா? அவள் விழையும் சுகத்திற்கு, காதலுக்கு, ஸ்பரிச இன்பத்திற்கு ஒரு எல்லை, நெறி இருக்கவேண்டுமே! இல்லாவிட்டால் அவள் அந்த உணர்வின் துடிப்புக்களைத் தணித்துவிட இதுவரை ஆயிரமாயிரம் இன்ப லீலைகளில் மூழ்கியிருக்கமாட்டாளா?
நினைவு அலைகள் நெஞ்சில் மோதியடித்தன. ஏக்கத்தின் எல்லையைக் காட்டுவது போல மார்பகம் விம்மித் தணிகிறது. இன்பக் ‘கிளு கிளு’ப்பின் உணர்வால் உடல் உரோமாஞ்சலி செய்கிறது. எங்கும் ஒரே தவிப்பு. ஒரே உணர்ச்சி. அம்மா, தாள முடியாதே!
மெத்தையின் மேலொரு மெத்தையைப் போலக் கமலாவின் கட்டுக்குலையாத மேனி கட்டிலில் அங்குமிங்குமாகப் புரளுகிறது. தூரத்தில் திருமண ஊர்வலங்களின் ஆரம்பத்தைத் தெரிவிப்பதுபோல அதிர்வெடிகள் எதிரொலி கிளப்பி இரைகின்றன. கமலாவின் கண்கள் கனன்று, கனத்து ஒளிமங்குவனபோல இமைக்கதவுகளை இறுக்கிப் பிடிக்கின்றன. உடல் தளர்ந்துவிட்டது. அந்தப் பயங்கர ‘இராட்சத’ உணர்ச்சி எங்கோ மறைந்துவிட்டது. கமலா துயிலில் ‘துயரை’ மறந்து தூங்குகிறாள்!
– விவேகி, ஐப்பசி 1960.
– தெய்வ மகன் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 1963, தமிழ்க்குரல் பதிப்பகம், ஏழாலை வடக்கு, சுன்னாகம் (இலங்கை).
![]() |
நாவேந்தன் (14 திசம்பர் 1932 – 10 சூலை 2000) இலங்கையின் மூத்த படைப்பாளிகளில் ஒருவர். சிறுகதை ஆசிரியர், பத்திரிகையாளர், கட்டுரையாளர், கவிஞர், ஆய்வாளர், விமர்சகர், கல்வியியலாளர், தொழிற்சங்கவாதி எனப் பல்பரிமாணங்களைக் கொண்டிருந்தவர். இவரது "வாழ்வு" சிறுகதைத் தொகுதி இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசினையும் பெற்றது. நாவேந்தன் யாழ்ப்பாண மாவட்டம், புங்குடுதீவில் பிறந்தவர். இவரது இயற்பெயர் திருநாவுக்கரசு. பயிற்றப்பட்ட ஆசிரியராகி சட்டமுதற் தேர்வில் சித்திபெற்று முதலாந்தர அதிபராகப் பதவியில்…மேலும் படிக்க... |