ஈதலிசை
வாணி, எங்க அம்மா,அப்பா ஊர்லேருந்து நாளை மறுநாள் இங்க வரப்போறதாக சொன்னாங்க, என சந்தோஷமாக கூறினான்,
சந்தோஷமாகத் தானே இருக்கும்,
பரத், வாணியை காதல் திருமணம் செய்து தனியாக குடித்தனம் வைத்த பின்னே அவர்களின் வருகை குறைந்து போனது, வாணி ஊரில் இல்லாத போது வருவார்கள், வாணி வந்தவுடன் கிளம்பி போய்விடுவார்கள், அவளிடம் அதிகம் பேச மாட்டார்கள், அது அவளைக் காயப் படுத்தும் என இவனும் பலமுறை சொல்லியும்,
அவர்கள் மனம் இன்னும் இவர்களின் திருமணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.
இப்பொழுது இவர்களின் பிள்ளை குருப்ராசாத் இரண்டாம் வகுப்பு படிக்கிறான்.
ஆனால் முதல் முறையாக வாணி இருக்கும் போதே வருவதுதான் இவர்களுக்கு புரியாத புதிராகவும், இன்ப அதிர்ச்சியுமாக உள்ளது.
என்னங்க! அத்தை வாராங்களே, நான் வேனா எங்க வீட்டுக்கு போகவா? என்றாள்,
ஏன் ,அவங்க ஒன்னுமே செல்லலை, நீ ஏன் போகனும், வரட்டும் பார்ப்போம்,என்றான்.
சரிங்க, நான் இன்றைக்கு ஆபிஸ் போகலை, வீட்டைச் சுத்தம் செய்யப் போகிறேன், நீங்க வரும் போது அத்தைக்கு பிடித்த காய்கறி ,மற்றும் பழங்கள் எல்லாம் வாங்கிட்டு வந்திடுங்க, மாமாவுக்கு வெற்றிலை, சீவல், வாசனை புகையிலை, ஜூனியர் விகடன், வாங்கிட்டு வாங்க, என்றாள்,
பராவாயில்லே, உனக்கு எல்லாம் ஞாபகம் இருக்கு,
வாங்க வாங்க மாமா,அத்தை,எப்படி இருக்கிங்க,என குசலம் விசாரித்தனர்.
வாணி அத்தையின் கையை பிடித்துக் கொண்டாள், தவறு செய்தா மன்னிச்சுடுங்க அத்தை, என்றாள்.
இல்லைம்மா, நீ என்ன பண்ணின, நாங்க தான் உங்களை பிரிஞ்சு இவ்வளவு நாள் இருந்துட்டோம்,
சரி அத்தை ,மாமா, நீங்க வாங்க சாப்பிடலாம்,எனக் கூறி அடுக்கலைக்குள் சென்றாள்.
அம்மா, யாழினி அக்கா எப்படி இருக்காங்க ? என்றான் பரத்.
அழுகை வந்தது, அம்மாவுக்கு ,நான் இப்போ வந்ததே, அவள் ஷயமாகத்தான்பா, என்றாள் பீடிகையாக,
என்னம்மா?
அவள் வீட்டுக்காரர் , மருத்துவமனையில் இருக்கார், அவர் செய்த பிஸினஸ்ல நிறைய நஷடமாம், பணம் யார் யார் கிட்டயோ வாங்கி இவர் முதல் போட்டதிலே, நஷட்டமாகி, எல்லோரும் நெருக்க, இவர் விஷம் குடித்து விட்டார், உடனே காண்பித்ததில் இப்பொழுது குணமாகி விட்டார், ஆனால் பணம் கொடுத்தவங்க,
இன்னும் அவரை தொடர்ந்து நெருக்கறதினாலே மீண்டும் ஏதாவது செய்து கொண்டு விடுவாரோ? என யாழினி பயந்துப் போய் இருக்கிறாள், என்றாள்.
நீதான்பா உங்க அக்கா வாழ்க்கைக்கு ஏதாவது உதவி செய்யனும்னு அவளும் எதிர்பாக்கிறா!
எவ்வளவு நஷ்டம் அம்மா!
பத்து லட்சம் பா, என சொல்லும் போதே எச்சில் விழுங்கினாள்.
என்னது? அவ்வளவு பணமா?
உன்னாலே முடிஞ்சதை செய்ப்பா! என மகளின் வாழ்க்கைக்காக கெஞ்சினாள்.
அம்மா அதெல்லாம் முடியாது, செலவு பண்ணி கல்யாணம் செய்து வைத்து 5 வருடம் கூட ஆகலை, அதற்குள் மறுபடியும் இவ்வளவு பெரிய தொகைன்னா எங்கே போறது? எனக் கூறினான்.
அத்தை,மாமா இருவரும் சாப்பிட்டு விட்டு அறைக்குச் சென்றார்கள்.
பரத், அத்தை சொன்னதையெல்லாம் நானும் கேட்டுக் கிட்டுத்தான் இருந்தேன்,அவங்க நம்மை நம்பி மட்டும்தான் இங்க வந்து கேட்கிறாங்க, நிச்சயமாக சகோதரன் ஏதாவது உதவுவான் என நம்பித்தான் யாழினியும் கேட்கச் சொல்லியிருப்பாள், அவங்களுக்கும் நம்மை விட்டா யாரு இருக்கா, நமக்கும் அவர்களை விட்டு வேற சொந்தம் பந்தம் யாரு இருக்கா?
அதோட, இப்ப நாம பணம் இல்லைன்னு உதவாம போனா நாளை தங்கை வாழ்க்கை பாதிக்காதா? அப்படி பாதிச்சுதுன்னா நாம மட்டும் சுகமா வாழ்ந்திட முடியுமா?
நாளை நமக்கு பணம் வந்தாலும் தங்கையின் தொலைந்த வாழ்க்கை மீட்க முடியமா? எனக் கேட்டாள்.
நீ சொல்றது சரி, அதுக்கு நம்மகிட்டே பணம் இருக்கனும், இல்லைன்னா மேலும் கடன்தான் வாங்கனும் என்றான்.
அதுக்கும் வட்டி, நம்ம வீட்டுக் கடன் இதையெல்லாம் எப்படி அடைக்கிறது. எனக் கவலைக் கொண்டான்.
தங்கையின் வாழ்க்கையா? பத்து லட்சம் பணமா? என மட்டும் சொல்லுங்க!
தங்கையின் வாழ்க்கை தான் என்றான்.
இது தான் பரத், இந்த பரத்தைத் தான் நான் காதலித்தேன்.
பிடிங்க! இதில் உள்ள நகைகள் அனைத்தும் மொத்தமாக 50 பவுன் இருக்கும், இதை அடகு வச்சாதானே வட்டிக் கட்டனும், விற்று தங்கையின் கடனை அடைத்து தங்கைக்கு மறு வாழ்வு அளியுங்கள், அதுதான் நாம எல்லோருக்கும் சந்தோஷம் தரக் கூடியது,மற்றும் சரியானது, எனக் கூறினாள்,
சேமிப்பில் மகிழ்ச்சி நமக்கு மட்டும்தாங்க! கொடுப்பதில்தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கும் அனைவருக்கும்.
அவள் கூறுவதை அருகிலிருந்து கேட்ட அத்தை , இந்த தெய்வத்தை இத்தனை நாளா , நான் புரிஞ்சுக்கலையே என வாரி உச்சி முகர்ந்து அனைத்துக் கொண்டாள்.
Dear Mr.Ayyasamy,still the girls like Vani does exist. but hard to get. way to go sir.