இளமை மணம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 6, 2025
பார்வையிட்டோர்: 1,322 
 
 

(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

டென்னிஸ் கோர்ட்டில் மஞ்சன்நிறப் பந்து அங்குமிங்குமாகத் தாவுவதை ஜன்னல் வழியே பார்த்தபடி அமர்ந்திருந்தாள் கஸ்தூரி. இன்று அந்த கிளப் வாசக சாலைக்கு வழக்கமாக வரும் சிலர்கூட வரவில்லை. இந்த வாரம் பரீட்சைகள்முடிந்துவிட்டால் கூட்டம் ஜகழுக்கும். நினைத்தபடி மணி பார்த்தவள், ‘ம் இன்னும் பத்து நிமிஷமிருக்கு’ என்றபடி எழுந்து சோம்பல் முறித்துக் கொண்டாள். மேஜையை ஒதுக்கினாள். வேலை என்று அதிகம் கிடையாதென்றாலும் உட்கார்ந்து கொண்டிருந்ததிலும் (உடல்) அலுப்புத் தட்டியிருந்தது. ஆனால், மனம். வழக்கத்தைவிட உற்சாகமாயிருந்ததை அவள் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். மனதின் ஓரத்தில் பயமும் தெரிந்தது – இத்தனைக் காலம் கழித்து இது தேவைதானா என்று. எது ? 

கல்யாணம். 

37 வயது கஸ்தூரிக்குக் கல்யாணம்.

நினைப்பே விநோதமான உணர்ச்சிகளை அவளுள் கிளப்பியது. பயம், வெட்சும், சந்தோஷம், தயக்கம், பதட்டம் என்று இனம் பிரித்தறிய முடியாத உணர்ச்சிகளின் பின்னல், ஒரு வாரமாக அவள் மனம் அவற்றைப் பிரித்து பிரித்து பின்னி ரசித்திருந்தது. 

“ம்ப்ச்… இந்த தேவசகாயம் அங்க்கிள் வேலை. யோசிக்கறதுக்கு முன்னயே ஆளை மடக்கிட்டார்” 

யோசிக்கத்தான் என்ன இருந்தது? 

தனிமை, ஆள் விழுங்கி ராட்ஸதன் போல அடிக்கடி அவளைப் பயமுறுத்தியதுதானே? துணை தேடி எத்தனை நாட்கள் ஏக்கமும், அழுகையுமாய்க் கழிந்திருந்தன? நினைத்ததைப் பேசு, படித்த துணுக்கை- ‘இதைக்கேளேன்’ எனப் பகிர்ந்து கொள்ள, வெளியே வாசலில் கூடவர, பரிமாறிக் கொண்டு சாப்பிட ராத்திரி திடீரென விழிப்பு தட்டும்போது கட்டிலில் துழாவி நெருங்கி ஒட்டிக் கொள்ள… துணை வேண்டும்தான். 

ஆனால், இந்த வயதில் இது அசட்டுத்தனமோ? நாளாக நாளாகத்தான் தனிமையின் கொடுமை அதிகமாயிருக்கிறது. 

‘எத்தனைக் குழந்தைங்க?’ என்ற கேள்வியிலும்,

கழுத்தைத் துழாவும் பார்வைகளிலும் அவள் தடுமாறிப் போகிறாள். 

ஆண்கள் – காய்ந்த மாட்டிற்கு புல் நீட்டும் நினைப்பில் தேவைக்கதிகமாகச் சிரித்துப் பேசி உராயும்போது கூசிப் போகிறாள். 

ஆனால், இளமையெல்லாம் வற்றிப்போன பருவத்தில் புது பந்தம் அவஸ்தையாகி விட்டால்…? அதுதான் பயம். 

இப்போது நினைத்த மாத்திரத்தில் நினைத்த இடத்திற்குக் கிளம்பலாம். ஆசைப்பட்டதை வாங்க யார் தயவும் தேவையில்லை. இரவு, கேஸட்டில் பழைய சினிமாப் பாட்டுக்களைக் கேட்டு, சன்னமாய் கூட சேர்ந்து பாடி, வழிய வழிய நல்லெண்ணெய் தடவி, அழுக்கு நைட்டியில் அலைந்து, ரொட்டி, கடலை, பழம், பாலில், செழித்து… அத்தனையும் போய்விடும்! தேனம்மா ஆயா ஹாஸ்டலில் வேளாவேளைக்குச் சமைத்து மேஜையில் வைப்பதை விழுங்கி வைப்பதோடு சரி. சமையல் என்று கஸ்தூரிக்கு என்ன தெரியும்? காப்பி. உருளைக்கிழங்கு கறி, பாயசம் – அவ்வளவுதான். ஒரு சாதம் கூட பதமாக வடிக்கத் தெரியாது. 

இதில் குடித்தனம் எப்படி இருக்கும். கண்றாவி! 

இதில் தான் சிக்கிக் கொள்ளவே கூடாது என அவளுக்குத் தோன்றியது. 

“இதெல்லாம் ஒரு வித்தையா? இருபது வயது பொண்ணுங்க சமைக்கலை? இப்பத்தான் வகை வகையா சமையல் புத்தகம் எல்லாம் கிடைக்குதேம்மா கஸ்தூரி வாங்கி ஜமாய்… தேவசகாயம் அங்கிள் சிரிக்கிறார். இருபது வயதில் ஆர்வம் இருக்கும். படித்து, சமைத்துத் தன் புருஷனை அமத்த வேண்டுமென்கிற ஆவலிருக்கும். மேசையில் பரிமாறப்பட்ட பதார்த்தம் சுவையாக இல்லாவிட்டாலும் கூட, “கொஞ்சம்காரம் ஜாஸ்திமா, மத்தபடி கிரேட்” எனப் புகழும் சின்னப் பயல்கள் புருவனாக வாய்த்திருப்பார்கள். 

இவளுக்குப் பொறுமையில்லை. அதற்குரிய வயசில்லை, 40 வயது ராஜனுக்கு மட்டும் எங்கே பொறுமையிருக்கும்? நட்டைக் கடாசிவிட்டுப் போவார். இனி அதெல்லாம் தாங்க ஆவி கிடையாது. 

அங்கிள் சொன்னார்: 

“அடி… நீ ஒண்ணு. பய காஞ்சுக் கிடக்கான். அவன் அம்மா போனதிலேர்ந்து ஆறு வருஷமா ஹோட்டல்லதான் சாப்பாடு. சொந்த வீடுங்கறதால, அதப் பெருக்கிக் கொள்ள ஒரு கிழவி உண்டு. பத்து வருஷமா எதிர்வீட்டுப் பொண்ணை லவ் பண்ணினாங் கெட்டது குடி. அவ ஐ.ஏ.எஸ்.ஸைக் கட்டிக்கிட்டுப் போன பிறகாவது பயலுக்குப் புத்தி வரவேண்டாம்? கிறுக்களாட்டம் வருஷங்களை ஓட்டியாச்சு. அம்மாக்காரிக்கு சீக்கே இவனாலதான். அவ போன பிறகுதான் பயலுக்குப் புத்தி வந்துச்சு… தனக்குன்னு இனி யாருமில்லேன்னு. நீ சொல்ற மாதிரி அவனுக்குந் தனியா இருக்கறது பழகிப் போச்சுன்னாலும் இப்ப குமைச்சல் ஜாஸ்தியாயிடுச்சு. 

அவன் அம்மாவுக்கு நா சொந்தம் பாரு – அதான் உரிமையா ‘மாமா… பொண்ணு பாருங்க’ன்னுட்டாள். உன்னை விட அவனுக்குப் பொருத்தம் யாரும்மா? இரண்டும் நல்ல குடும்பம். உங்கப்பாகூட வேலை பார்த்தவன்தான். அவரு எப்பேர்ப்பட்ட மனுஷன்? அஞ்சாவது பொண்ணைக் கரையேத்தாமல் போயிடுவோம்ன்ற பயம்தான் அவரைக் கொன்னுடுச்சு.” 


“எக்ஸ்யூஸ் மீ… பி நோ வி யார் லேட். கொஞ்சம் புக்ஸ் எடுத்துக்கலாமா?” 

கொஞ்சலாய்க் கேட்டபடி மூன்று இளம்பெண்கள் உள்ளே நுழைந்திருந்தனர். 

இருவர் ஜீன்ஸிலும் ஒருத்தி மிடியிலுமாக ‘சிக்’கென்றிருந்தனர். பளபளப்பான கருத்த தலைமுடி தோளை ஒட்டி வெட்டப்பட்டிருந்தது. கண்களிலும், உதடுகளிலும் தன்னம்பிக்கையும் இளமையும் ததும்பிக் கொண்டிருந்தன. 

“ம்… இஃப்யூகேன் ஹரி புன்னகைத்தாள் கஸ்தூரி. அவர்கள் தங்களுக்குள் கிசுகிசுப்பாய்ப் பேசியபடி புத்தகங்களள ஆராய்ந்தனர். தொடிக்கொரு முறை கிளுகிளுப்பாய்ச் சிரித்துக் கொண்டனர். அந்த மூவருள் டாக்டர் மகள் சுதாவை கஸ்தூரிக்குப் பரிட்சயம். 

மூவரும் கைகளை ஆட்டியபடி பேசினர். இளம் குருத்தாய் மெல்லிய கைகளும், பிஞ்சு விரல்களும் பார்க்கவே ரம்மியமாயிருந்தன. உதட்டில் அவர்கள் சாயம் ஏதும் தடவவில்லை. எனினும், அவை மிருதுவாய் உயிரோட்டத்துடன் பளபளத்தன. சிரிக்கும்போது ஆரோக்கியமான பற்கள் மின்னின. தொளதொளப்பாள சட்டைகளையும் மீறி அவர்கள் உடலின் செழுமை, கண்ணைப் பறித்தது. இளமை எத்தனை பெரிய வரம்! அவர்களோடு ஒரே அறையில் நிற்பதே கஸ்தூரிக்குச் கூச்சமாயிருந்தது. புதிய விலையுயர்ந்த வண்ண புத்தகத்தோடு, பழுப்பேறி, காதுகள் மடங்கிய அட்டை உரிந்து கிழிந்த பழம் புத்தகமாய் தான் நிற்பது போலத் தோன்ற, அவளுக்குத் திடீரென முகம் கழுவிக்கொண்டு ஒரு கப் டீ அருந்தினால் தேவலாம் போலிருந்தது. ”சுதா, நீங்க புக்ஸ் எடுத்து வைங்க, நாஒரு ரெண்டு நிமிஷத்துல வந்துரட்டுமா?” 

“ஷ்யூர் ஆண்ட்டி.” 

அவளுக்கு அந்த ‘ஆண்ட்டீ’ அவசியமில்லை என்று தோன்றினாலும் 17 – 18 வயது வித்யாசம். இடையில் கூப்பிட்டால் என்ன என்று சமாதானப்படுத்திக் கொண்டாள். 

கிளப் ரெஸ்ட்டாரெண்டை அடைந்தவள், முகத்தை நன்கு கழுவித் துடைத்துக் கொண்டாள். கௌண்ட்டரிலிருந்த ரேவதி, 

“வடை சூடாயிருக்கு. தரவா?” கேட்டாள். 

“ம் – ஒரு டீயும்.” 

கூட்டமில்லாததால் கௌண்ட்டரிலேயே சாய்த்து சாப்பிட்டு முடித்து, திடீரௌத் தோன்றியதில் கேட்டான். 

”ரேவதி, சீப்பு இருக்கா?” 

“ம்… உள்ளே வாங்களேன்.”

கொண்டையைப் பிரித்து, கோதி, சீலி பின்னிவிட்டாள். பாதி முதுகை எட்டும் கேசம் அவளது

“பவுடர் வேணுமா கஸ்தூரி”

“கொடேன்.” 

“நா இதெல்லாம் வெச்சிருந்தாலும் யூஸ் பண்டுதேயில்லை. ஒருவாரமா பிள்ளைக்குக் காய்ச்சல், அவரு அரை நாள்கூட லீவு போடலை. நான் சரியா தூங்கக்கூடயில்ளை. இவரானா பூரி, கிழங்கு போடலையான்னு தட்டை வீசிட்டுப் போறார். நிம்மதி, உங்கமாதிரி வாழறதுலதான் கஸ்தூரி! பவுடர் பூச்சில் முகம் பிரகாசமாயும் உள்ளே இறுக்கமாயும் உணர்த்தாள். 

“தாங்க்ஸ்… வரட்டா?” 

அவசரமாக லைப்ரரியை அடைந்தவள், பெண்கள் தீட்டிய புத்தகங்களைப் பதிவு செய்து, பின் ஜன்னல்களை மூட ஆரம்பித்தாள். காற்றின் குளுமையில் மழை வரும் போலிருந்தது. பெய்தால் நல்லது – பூமி காய்ந்து கிடக்கின்றது. 

டென்னிஸ் விளையாடி முடித்தவர்கள், பிரம்பு நாற்காலிகளில் சரிந்து அமர்ந்து பழரசம் பருகிக் கொண்டிருந்தனர், முக்கால்வாசி கால்கள் தெரியும் உடையில் ஆண்களைப் பார்த்து அவளுக்கு ஏனோ இன்று கிளர்ச்சியாய் இருந்தது. 

சுரள் சுருளாய் ரோமம் நிறைந்த கால்கள், ஆழ்ந்த குரலின் நாகரிகப் பேச்சும், தலையைக் குலுக்கிச் சிரிப்பதும்.. ஆண்கள் கவர்ச்சியாளவர்கள்தான். விளையாடி முடித்து டவலால் கழுத்தைத் துடைத்தபடி அவளிடம் லைப்ரரியில் வந்து நின்று பேசும்போது எழும் வியர்வை நெடிகூட கவர்ச்சியானதுதான். 

ஆணோடு பகிரும் வாழ்க்கை, நிச்சயம் சுவாரஸ்யமானதாய்த் தானிருக்க வேண்டும். 

‘சாம்பலாகி விட்டன’ என்று அவள் கருதியிருந்த உணர்வுக்கனல், சிறு ஊதல்களில் சிவந்து பொரிவது திருப்தி தந்தது 

ஆசை மேலிட்டது – அவள் ராஜனைக் கல்யாணம் செய்ய. அவர்களுக்கு ஒரு அழகான குழந்தைகூடப் பிறக்கலாம். போன வாரம் டாக்டரிடம் இது குறித்துப் பேசிய போது, ‘எல்டர்லி’ பிரைமின்னா சிரமம் இருக்கலாம். ஆனாலும் சிசேரியன்தான் இருக்குதே! என்று தைரியமூட்டியிருந்தார். சாவியை ஒப்படைத்து வெளியேவா, வாசலில் ஸ்கூட்டரில் ராஜன் காத்திருந்தார். 

உள்ளே ஆசை மங்கி எரிச்சல் வந்தது. 

”என்ன இங்கே’ யாராவது பார்த்தா…. நல்லாயிருக்காது.” 

“நாம ரெண்டு வாரத்துல கல்யாணம் பண்ணிக்கறதா இருக்கோம். ” – புன்னகைத்தான். 

”நான் இன்னும் சரியா முடிவு பண்ணலை”

“குழம்பியிருக்கீங்க.” 

“ம்ப்ச்” 

“உங்களுக்குப் பதட்டம் – ஏறுங்க. கொஞ்சம் தள்ளிப்போய்ப் பேசலாம்.” 

அவளுக்குக் கிளப் வாசலை விட்டுப்போனால் போதுமென்றிருக்க பின்னால் ஏறிக் கொண்டாள். இவர் யார் ஏதென்று கேள்வி வந்து, தாலி ஏறாமல்போனால் குசுகுகவென்று பேசுவார்கள். அதற்கு வேறு தனியாகக் குமைய வேணும். இன்னும் அவள் சரீரம் ஒடிசலாயிருந்ததில் அவன்மேல் படாது. உட்கார முடிந்தது. ஸ்கூட்டர் வளைந்து, விரைந்து இரண்டாம் நிமிடம் இலந்தைக்குளம் ஓரமாக நின்றது. மேடும் பள்ளமுமான செம்மண்ணில் விசாலமான வெட்டாந்தரை. சுற்றிலும் காய்ந்த பனைமரங்கள் வானத்தை அண்ணாந்து… பார்த்தவாறிருந்தன. விறைத்த இலைகளுடன் மழைக்காக இறைஞ்சி நின்றன அவை. இவளும்தான் இளமையெல்லாம் வறண்டு துணைக்காக ஏங்கிக் கிடந்தாள். துணை கிடைத்தபின்னும் பயம் இருந்தது… எதனால்! யௌவனத்தைத் தொலைத்துவிட்ட கலக்கம்தான். சில மாதங்களுக்கு முன் படித்த கலிதை ஆறுதலாய் மனதுள் எழுந்தது. 

‘வருஷங்கள். பலவானால் என்ன? குறிஞ்சியாய்ப் பூத்தால் சரி’ 

‘இந்த இலந்தைக்குளம் தான் சின்னவளா இருந்தப்போஎப்படி இருக்கும் தெரியுமா.. அலை அலையாய் சமுத்திரம் மாதிரி, அம்மா இந்தப் பக்கம் வரும்போதெல்லாம் தவறாமல் சொல்லுவார்கள். இப்போது அம்மா இருந்திருந்தால் அபிப்ராயம் கேட்டிருக்கலாம். தற்போது ஆலோசனை சொல்ல ஆளில்லை. அம்மா இருந்திருந்தால் வீடும். உத்யோகமுமாய் இருக்கும் ராஜனை பண்ணிக் கொள்ளத்தான் சொல்வார்கள். சந்தேகமில்லை.’ 

“ஏன் பயம் உங்களுக்கு” – ராஜன் கேட்டான். 

“இப்படியே பழகிருச்சு. ” 

“எனக்குப் பயங்கரமா அலுத்திருச்சு.” 

அவளுக்கு இயல்பாய் புன்னகை வந்தது. 

”நிச்சயம் இதைவிட சந்தோஷமாய் இருப்போம்.”

“அட்ஜெஸ்ட்மெண்ட் கஷ்டமங்க” 

“நமக்கு நல்ல முதிர்ச்சியிருக்கு. சின்னப் பசங்க மாதிரி சண்டையெல்லாம் வராது.” சிரித்தான். 

“அந்த முதிர்ச்சிதான் பயம்” 

”ஒண்ணு சொல்லட்டுமா?” சங்கோஜ சிரிப்புடன் கேட்டான். 

“ம்?”

“கிளப்பை விட்டு வெளிய வந்தப்ப சின்ன பொண்ணாட்டம்தான் இருந்தீங்க. எனக்குத்தான்…நரையெல்லாம் வந்தாச்சு.” 

கஸ்தூரிக்குள் நெகிழ்ச்சி பொங்கியது. ஒரு ஆணின் பாராட்டில் சிறு பெண் போல் நாணம் பெருகியதில் அவளுக்கு நிம்மதியாயிருந்தது. 

“இட்ஸ் நெவர்டு லேட் கஸ்தூரி.” 

முதன்முறையாக அவன் அவள் பெயரை உச்சரித்தான். அவள் பெயர் அவளுக்கே புதுமையாகப்பட்டது. இவளம், மனசைப் பொறுந்த விஷயமில்லையா?” : அவன் கரகரத்த குரல் அவள் பயங்களைத் துடைத்தது. அவள் நல்ல உயரம்தானென்றாலும் அவள் கண்கள் தாழ்ந்தே இருந்ததால் அவன் அகல தோள்களும், முடி பரவிய கைகளுமே அவள் பார்வையில் பட்டன. அந்தக் கைகள் தன்னைச் சுற்றிக் கொண்டால்… எண்ணுகையில் அடிவயிற்றில் குபீரிட்ட வெப்பம், அவளுக்கு நிம்மதி தந்தது. இளமை உனக்கு மீதமுண்டு என்று அவை உணர்த்தியதே பகலின் எரிச்சல்கள் இரவின் தாபத்தில் அழித்துவிடும் சாத்தியம் உனக்கும் உண்டு என்ற திருப்தி முளைத்தது. 

“எப்ப ஆரம்பிச்சாலும் ஆரம்பம் இனிமைதான்றீங்க?

ஆவலாய் தலையசைத்தாள்.

“சம்மதம்ங்கிறீங்க?” 

அவள் தோள்களின் விறைப்புத் தளர்ந்து சிரித்தாள். இருவரின் மூச்சும் சீராக வர ஆரம்பித்தது. 

”சீக்கிரமா தாள் ஒன்று குறிச்சிடலாம். ரொம்ப எளிமையா இருக்கணும்.” 

“கிளம்பலாம். மழை வரும்போல இருக்குதே.” 

“வாட்டும்!” புன்னகைத்தவள், ஆதுரத்துடன் காய்ந்த மண்ணை தோக்கினாள். 

இயல்பாய் ஸ்கூட்டரில் ஏறி அவன் தோளை மெல்லப் பற்றிக் கொண்டாள், ஸ்கூட்டர் குலுங்கி வேகம்கூட, கஸ்தூரி மிக இளமையாக உணர்ந்தாள், மழைத் துளிகளை ஆர்வமாய் உறிஞ்சிய மண், மணக்க ஆரம்பித்தது. 

– பல்லக்குப் பயணம், முதற் பதிப்பு: செப்டம்பர் 2005, ஜீயே பப்ளிகேஷன்ஸ், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *