இல்லத்துக் கொத்தடிமை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: December 15, 2024
பார்வையிட்டோர்: 4,272 
 
 

“வர வர எனக்கு இந்தக் கொத்தடிமை வாழ்க்கை வெறுத்தே போச்சும்மா! அதனாலதான் விவாகரத்து வாங்கி விடுதலையாயர்லாம்னு பாக்கறேன்” என்றாள் மேனகா.

“உங்குளுக்கு பாரமா, வாழாவெட்டியா அங்க வந்து உக்காந்துக்குவேன்னு நீ ஒண்ணும் கவலைப்பட வேண்டாம். டிகிரி முடிச்சுட்டு இத்தனை காலம் இங்க கொத்தடிமை வேலைதான செஞ்சுட்டிருந்தேன்! வெளிய போயி வேலை தேடுனா, என்னோட டிகிரிக்கு ஏத்த வேலை கெடைக்குலீன்னாலும், கடை கண்ணிகள்ல சேல்ஸ் உமன் வேலையோ, ஹோட்டல்கள்ல சமையல் வேலையோ கெடைக்காமயா போயிரும்? அப்புடியே இல்லீன்னாலும், எங்காவது ஓடிப்போயிக் கூலி வேலையாவது செஞ்சு பொழைச்சுக்கலாம்னு இருக்குது. அதைப் பத்தி ஃபோன்ல பேசுனா செரியாகாது. நேர்ல பேசலாம்னுதான் உன்னை வர வெச்சேன்” எனவும் சொன்னாள்.

“எலிக்கு பயந்து ஊட்டைத் தீ வெக்கற கதையால்ல இருக்குது நீ பேசறது? ஏதாச்சுக் கொடுமை பண்றவரா இருந்தா வேண்ணா நீ சொல்றது செரிங்கலாம். மாப்பளை அப்புடியா? குடி, சீரேட்டு, ஆன்லைன் சூதாட்டம், அடிக்கறது, கள்ளக் காதலுன்னு எதுவும் கெடையாது. அதுந்து பேசக்கூட செய்யாத மனுசனாச்சே! மேனகா, மேனாகான்னு உம் மேல உசுரா இருக்கறவராச்சே…! எங்க மாப்பளையும் என்னையாட்டத்தான்னு உங்கப்பாவும் சொல்லுவாரே…!” என்றாள் அம்மா.

“அப்பாவாட்டம் பொண்டாட்டிதாசனா மட்டும் இருந்தாப் பிரச்சனை இல்லியே! இவுரு வாழப்பழச் சோம்பேறி, பொண்டாட்டிதாசன், ஆணாதிக்கவாதின்னு மூணும் கலந்த கலவையாச்சே…! அதனாலதான் அவுருகிட்ட இத்தனை வருசமாப் படாத பாடு பட்டுட்டிருக்கறன்…”


காதலிக்கும் கணவன் அமைவதெல்லாம் சாத்தான் கொடுத்த வரம். பாம்பென்று தாண்டவும் முடியாது; பழுதென்று மிதிக்கவும் முடியாது.

சாய்ராமுக்கோ மேனகா மீது அபரிமிதமான காதல். வீட்டில் இருக்கிற நேரமெல்லாம் மேனகா, மேனகா என்று அழைத்துக்கொண்டே இருப்பான். அவனோடு வெளியே எங்கு சென்றாலும் அப்படியே. அவளுடன் பேசுகிறபோது வாக்கியத்துக்கு வாக்கியம் மேனகா, மேனகா என்று மந்திரம் போல் உச்சரித்துக்கொண்டே இருப்பான். அந்த வகையில் தினமும் 1008 தடவையாவது அவளின் நாமத்தை ஜெபித்துவிடுவான்.

வீட்டில் உள்ளபோது 5 – 10 நிமிடங்களுக்கு ஒரு முறையாவது அவளை அழைத்து, தேவையற்ற காரியங்களைப் பற்றி ஏதாவது கேட்பான். அல்லது அவள் இருக்கும் இடத்துக்கு வந்து அவனது அலுவலக காரியங்கள், அரசியல்

தில்லாலங்கிடிகள், நடிக – நடிகையர் அந்தரங்கம், சமூக ஊடகப் பித்தலாட்டங்கள், சிந்தனைப் பேத்திகளின் லோலாயப் பேச்சுகள், சீர்திருத்தப் போராளிகளின் பாலியல் களியாட்டங்கள் முதலான, இவளுக்கு விருப்பமோ பயனோ இல்லாத, சலிப்பூட்டும் வெட்டி நாயங்களைக் கால் மணி – அரை மணி நேரம் பேசிக்கொண்டிருப்பான். வெளியிடங்களுக்குச் சென்றால் ஐந்து நிமிடம் அவளை விட்டுப் பிரிந்திருக்க மாட்டான். அவளை அழைக்கவோ, அவளைத் தேடி வரவோ செய்வான்.

“உங்கூட்டுக்கார்ரு எப்பவுமே உன்னோட சீலையப் புடிச்சுட்டே திரியறாரே…! உங்கப்பாவை மிஞ்சுவாராட்டிருக்குது!?” அயல்வாசிகளும், உறவினர்களும் கேலி செய்வார்கள்.

அப்பா, அம்மாவுக்குக் கட்டுப்பட்டவர். அவளிடம் கேட்காமல் எதையும் செய்ய மாட்டார்; அவள் சொல்வதை மீற மாட்டார். இவர்களின் வீடு மதுரை என்பது ஊரறிந்தது. கொஞ்சம், பொண்டாட்டி ஆராதகரும் கூட. ஆனாலும், அவர் இப்படி அம்மாவின் சீலையைப் பிடித்துக்கொண்டே திரிகிற ரகம் அல்ல.

கேலி செய்கிறவர்களுக்கு பதிலாகவும், மற்றவர்களிடம் விளம்பரமாகவும், “எங்க வீட்டுக்கார்ருக்கு வெடியால எந்திரிக்கறதுலருந்து, ராத்திரி தூக்கற முட்டும் நான் இல்லாம ஒண்ணுமே நடக்காது” என மேனகா பெருமை பீற்றிக்கொள்வாள்.

பொண்டாட்டிதாசன் என உற்றார் உறவினர்களும், ஹென்பெக்ட் என சுற்றமும் நட்பும் கேலி செய்வதில் சாய்ராமுக்கும் லேசான வெட்கம் கலந்த பெருமைதான்.

சாய்ராம், போக்குவரத்துத் துறையில் தொழில்நுட்ப உதவியாளன். மேனகா, தாவரவியல் இளங்கலை அறிவியல் படித்துவிட்டு இல்லக் கொத்தடிமையாக இருக்கிறாள். தம்பதியருக்குத் திருமணம் முடிந்து 10 வருடங்கள் ஆயிற்று. சாய்ராம் சோம்பேறித்தனத்துக்கு மாறாக செய்த ஒரே ஒரு காரியத்தின் விளைவாக, முதல் திருமண நினைவு நாள் அனுஷ்டிக்கும்போதே கையில் கைக்குழந்தை. இப்போது அவளுக்கு 9 வயது; நான்காவது படித்துக்கொண்டிருக்கிறாள். மேற்படி சமாச்சாரத்தில் சாய்ராமுக்கு இன்னமும் சோம்பேறித்தனம் இல்லை; ஆர்வமும் குறையவில்லை என்றாலும், தேச நலனுக்காக குழந்தையை ஒன்றோடு நிறுத்திவிட்டார்கள்.

சாய்ராமுக்குக் கெட்ட பழக்கங்கள் ஏதும் இல்லைதான். ஆனால், அவனது குணசீலங்களை அன்றாடம் சமாளிப்பது மேனகாவுக்குப் பெருஞ்சோதனை.

காலைக் கடன்களை முடிப்பதற்குள் உயிரை வாங்கி விடுவான். தானாக எழுவது கிடையாது. அரை மணி நேரம் செல்லாக்குட்டி, புஜ்ஜிக்குட்டி என்று கொஞ்சியும், காப்பி வைத்துக் கொண்டு போய்க் கொடுத்து, ப்ளீஸ் மாமா,… எந்திரிங்க மாமா,… காப்பி ஆறுது மாமா என்று கெஞ்சியும் எழுப்பினால்தான் எழுவான். பல் விளக்காமல், படுக்கையில் அமர்ந்தபடியே பெட் காஃபி. பிறகு ஆண்ட்ராய்ட் அலைபேசியை நோண்டத் தொடங்கி வாட்ஸாப், ஃபேஸ்புக், இன்ஸ்டாக்ராம், ட்விட்டர் ஆகியவற்றை மேய்ந்துகொண்டிருப்பான். இழுத்து

எழ வைத்து நெட்டித் தள்ளிக் கொண்டுபோய் கழிப்பறையில் விட்டு வர வேண்டும். கழிப்புக் கிரீடை முடிந்ததும் குரல் கொடுப்பான். அண்டைக் குளியலறைக்குப் போய் பற்தூரிகை, பற்பசை எடுத்துத் தர வேண்டும். அப்போதுதான் பல் துலக்குவான். அதன் பிறகு குளியல் சோப்பு, டவல் ஆகியவற்றை எடுத்துக் கொடுத்து, குளிக்கும்போது முதுகு தேய்த்துவிடவும் வேண்டும்.

குளித்து முடித்த பின் வந்து, “மேனகா,… தலை ஈரம் நல்லாக் காஞ்சிருக்குதான்னு பாரு, மேனகா. இல்லாட்டி சளி புடிச்சுக்கும்” என்பான். சோதித்துப் பார்த்து, ஈரம் சரியாகப் போயிராவிட்டால் நன்றாகத் துடைத்துவிட வேண்டும். இவள் துவட்டிவிட வேண்டும் என்பதற்காகவே அரைகுறையாகத் துவட்டிக்கொண்டும் வருவான்.

உணவு மேஜையில் அனைத்தும் வைத்திருந்தாலும் பக்கத்திலிருந்து அவள்தான் பார்த்துப் பார்த்துப் பரிமாற வேண்டும். வட்டலுக்கு முன்பாகவே பாத்திரங்களில் மூடி வைத்திருக்கிற சட்னி – சாம்பார், குழம்பு – ரசம் – பொரியல் ஆகிய எதையும் அவனாக எடுக்க மாட்டான். இவள்தான் எடுத்துப் போட வேண்டும். சாப்பாடு மட்டும் போட்டு வைத்துவிட்டு சாப்பிட அழைத்திருக்கையில், அவளுக்கு எதிர்பாராமல் வேறு சிறிய வேலை ஏதும் வந்துவிட்டாலோ, அவனுக்கு அப்பளம் காய்ச்சிக்கொண்டிருந்தாலோ, “மேனகா,… என்ன கொளம்பு வெச்சிருக்கற?”, “மேனகா,… பொரியல் இல்லையா?”, “ரசம் வெக்கலியா மேனகா?” என்று குரல் கொடுப்பான். “இதோ வந்துட்டேன்” என ஓடோடிச் சென்று, வேண்டியதைப் பரிமாற வேண்டும்.

டம்ளரில் தண்ணீர் தீர்ந்துவிட்டால் கூட பக்கத்தில் இருக்கும் சொம்பிலிருந்து தண்ணீர் எடுத்து ஊற்றிக்கொள்ள மாட்டான். “தண்ணி தீந்துருச்சு பாரு; ஊத்தி வெய்யி!” என இவளையே பணிப்பான்.

ஊட்டி விடாத குறையாக காலைச் சிற்றுண்டியை அவனது வயிற்றுக்குள் தள்ளிவிட வேண்டியிருக்கும். அன்றைக்கு அவன் அணிய வேண்டிய பேன்ட் – சட்டையை அவள்தான் தீர்மானிக்கவும், பீரோவிலிருந்து எடுத்துக் கொடுக்கவும் வேண்டும். அலுவலகம் புறப்படும்போது சாப்பாட்டுக் கூடை, ஸ்கூட்டர் சாவி ஆகியவற்றை எடுத்துக் கொடுப்பதோடு, அவள்தான் ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தும் தரவேண்டும்.

சாயந்திரம் அவன் வீடு திரும்பும்போது மித அலங்காரங்களோடு வாசலில் நின்று புன்னகைத்து வரவேற்கத் தவறிவிடக் கூடாது. வெளியிலேயே கை – கால் அலம்பத் தண்ணீர், ஈரம் துடைக்க துண்டு ஆகியவற்றைக் கொடுக்க வேண்டும். படுக்கையறைக்குச் சென்று லுங்கியை எடுத்துத் தந்து, அவன் கழற்றிக் கொடுக்கிற சட்டையையும் பேன்ட்டையும் அங்குள்ள ஹேங்கரில் மாட்ட வேண்டும். கூடத்திற்கு வருவான். காஃபியா, டீயா என்று கேட்டு வைத்துக் கொடுக்க வேண்டும். “ஃபேனைப் போட்டுவிடு மேனகா”, “மேனகா,… ட்டீவி போட்டுவிடு”, “மேனகா,… சவுண்டு வெய்யி, மேனகா”, “மேனகா,… அந்தச் சேனல் வேண்டாம், மேனகா; இந்தச் சேனல் போடுவிடு, மேனகா” என்று கட்டளையிட்டுக்கொண்டிருப்பான். இவற்றையும் அவளே செய்து, ரிமோட்டை அவனது கையில் திணித்துவிட்டுத் தப்பிக்க வேண்டும்.

சாப்பிட்டு முடித்த பின் ஒன்பதரை – பத்து வரை ஓய்வு. தூங்கும் வரை அலைபேசியை நோண்டிக்கொண்டிருப்பான்.

படுக்கையை இவள்தான் விரித்து, தூசிதட்டி, சுருக்கம் நீக்கி வைக்க வேண்டும். கொஞ்ச நஞ்ச சுருக்கம், கோணல் மாணல் இருப்பினும், “ஏன் மேனகா,… தூசு தட்டுலயா? நேத்துப் படுத்ததுல அப்புடியே படுக்கறதா, மேனகா? எனக்கு டஸ்ட் அலர்ஜின்னு தெரியாதா? அப்பறம் தும்மல் வந்தா என்னாகறது, மேனகா?” என்பான், என்னவோ தும்மல் வந்தால் மூச்சே நின்றுவிடும் என்பது போல.

தாம்பத்தியத்திற்கு அவள்தான் சிக்னல் தர வேண்டும். அவனாக முன் கை எடுக்க மாட்டான். குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை இவள் சிக்னல் தராவிட்டால், “ஏன் மேனகா சிக்னல் தருல? உனக்கு நான் என்ன கொறை வெச்சேன், மேனகா? இல்ல,… உனக்கு நம்ம தாம்பத்தியத்துல திருப்தி இல்லியா, மேனகா? இல்லாட்டி,… நான் உனக்கு அலுத்துப் போயிட்டனா, மேனகா? சொல்லு, மேனகா…! இல்லன்னா, உனக்கு ஃபார்மல் செக்ஸ் அலுத்துப் போச்சா? வெறைட்டி ஆசைப்படறயா, மேனகா? கௌகேர்ள், மிஷினரி, டாகி ஸ்டைல்…. அந்த மாதிரி…” என்றும், இன்னும் அசிங்கமாகவும் பேசுவான்.

ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன் ஏதாவது ஒரு பில்லைத் தூக்கிப் போட்டிருப்பான். அதை அவள்தான் எடுத்துப் பாதுகாத்து வைத்திருக்க வேண்டும். திடீரென்று அந்த பில் எங்கே, இந்த பில்லை எடுத்துட்டு வா என்பான். தேடி எடுத்துத் தர வேண்டும்.

பில்லை எடுத்து வைக்கத் தவறியிருந்தால், “உனக்குப் பணத்தோட அருமை தெரியறதில்லடீ! உங்கப்பன் வீட்டுக் காசா? நான் பாடுபட்டு சம்பாரிச்சதுடீ! நான் ஆம்பளை. எத்தனையோ பிக்கல் புடுங்கல் இருக்கும். ஏதோ யோசனைல வேண்டாம்னு பில்லைக் கீள போட்டிருப்பேன். அதையப் பாத்து, பத்தரமா எடுத்து வெக்காம, குப்பைல கொண்டு போயிக் கொட்டுனா என்னடீ அர்த்தம்?” எனக் குரைப்பான். கோபமானால் மேனகா ஜெபம் மறந்துவிடும்.

அலுவலகப் பணிகளில் அவனுக்கு யார் உதவியும் தேவைப்படாது. தானே செய்வான். வெளியில் சிங்கம்; வீட்டில் கங்காருக் குட்டி.

அவர்களின் மகள், தன் கையே தனக்கு உதவி என்று சுயமாக செயல்படுபவள். அப்பாவின் கோமாளித்தனங்களை எள்ளி நகையாடுவாள்.

“செக்கண்ட் ஸ்டேன்டர்டுலருந்து என் வேலையெல்லாம் நானே செஞ்சுக்கறேன். நானே குளிச்சுக்கறேன், நானே ட்ரஸ் பண்ணிக்கறேன், நானே சாப்பாடு போட்டு சாப்பிட்டு, வட்டலைக் களுவியும் வெக்கறேன். அதே மாதிரி உங்க வேலைய நீங்களே செஞ்சுக்க மாட்டீங்களா? நீங்க என்ன இன்னும் சின்னப் பாப்பாவா?” என்பாள்.

“அப்பாவை இடுப்புல தூக்கி வெச்சுட்டு, காக்காவையோ நெலாவையோ காட்டி சோறு ஊட்டி விட்டுரும்மா…” என்று கேலியும் செய்வாள்.

சாய்ராம் அதைக் கேட்டு ஆனந்தமாகச் சிரித்துக்கொள்வானே தவிர கொஞ்சம் கூட வெட்கப்பட மாட்டான்.

“சின்னச் சின்னச் வேலைகளைக் கூட நீங்களே செய்ய மாட்டீங்ளா? இதுக்கெல்லாம் இன்னொரு ஆள் வேணுமா? எந்த வீட்டுலயாவது உங்க அளவுக்கு யாராவது இருக்கறாங்ளா?” என்று மேனகா கேட்டால்,

“மேனகா,… நீ வேலைக்குப் போயிக் கஷ்டப்படறது ஒண்ணும் இல்லயில்ல, மேனகா? வீட்டு வேலை மட்டும்தான செய்யற? இதையும் செஞ்சாக் கொறைஞ்சா போயிருவ, மேனகா? இதெல்லாம் காதல், மேனகா,… காதல்! ஒரு பொண்டாட்டி புருசனுக்குச் செய்ய வேண்டிய கடமை, மேனகா,… கடமை! அதைச் செய்ய முடியாம உனக்கு என்ன நோக்காடு? இத்தனை காலம் – வயிசான காலத்துல கூட – எங்கம்மா இதையெல்லாம் செய்யலியா, மேனகா?” என்று கேட்பான்.

தோழிகள், உறவுப் பெண்மணிகள் ஆகியோரிடம் இது குறித்து ஆவலாதிப்பட்டால், “உம் மேல அவுருக்கு அவ்வளவு லவ்வு இருக்கறதுனாலதான இது எல்லாத்தையும் நீயே செய்யணும்னு ஆசைப்படறாரு! இவ்வளவு லவ்வா இருக்கற ஒரு புருசன் கெடைச்சதுக்கு நீ குடுத்து வெச்சிருக்கணும்” என்றே பலரும் சொல்வார்கள்.

இவள் கழற்றிப் போட்டிருக்கும் சேலையைப் படுக்கையில் அவனே விரித்துப் போட்டுக்கொண்டு மோப்பம் பிடித்தபடி படுத்திருக்கும் சமயங்களில் இவளுக்குமே கூட அப்படித் தோன்றும். ஆனால், மறுகணமே அது வேறு இது வேறு என்பது புலப்படும்.

இவள் மீது காதலாக அவன் எப்போதும் நடந்துகொண்டதில்லை. உடம்பு சரியில்லாதபோது கூட, கடமைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வானே தவிர, பணிவிடைகள் செய்வது, பரிவு காட்டுவது, ஆறுதல் கூறுவது கிடையாது. தனது தேவைகளைப் பூர்த்தி செய்ய மட்டுமே மனைவி என்கிற ஆணாதிக்க நோக்கின் மொத்த உருவம் அவன்.

சில சந்தர்ப்பங்களில் அவள் அவனுக்கு முகச் சவரம் கூட செய்துவிட்டிருக்கிறாள். கொரானா காலங்களில் அவனுக்கு முடி கூட வெட்டிவிட்டிருக்கிறாள். அவ்வளவு சேவைகள் செய்தாலும் அவனிடம் நன்றி ஒரு துளியும் இல்லை.

அது மட்டுமல்ல; கோபம் வந்துவிட்டால் தனது கட்டுக்கடங்காத காதலை மறந்து சனியன், தண்டம், புண்ணாக்கு, மூதேவி, எருமை மாடு, கழுதை எனத் திட்டவும் செய்வான்.

உறவினர் வீட்டு விசேஷங்களுக்கு அவனைக் கூட்டிச் சென்றால் அவ்வளவுதான்! சொந்த – பந்தங்களிடம் பேசிக்கொண்டிருக்கவோ, விசேஷ காரியங்களில் உடன் நின்றுகொண்டிருக்கவோ முடியாது. நொடிக்கொரு தடவை மேனகா, மேனகா என்று கூப்பிட்டுக்கொண்டே இருப்பான். “என்னங்க…? என்ன வேணும்?” என்றபடி, அற்புத விளக்கு பூதம் போல ஓடி வந்து கை கட்டி நிற்க வேண்டும். அழைத்தது அனாவசியமானதும் அற்பமானதுமான காரணங்களுக்காக இருக்குமேயன்றி, காரியமாக எதுவும்

இராது. விசேஷ வீட்டாரின் கவனிப்பில் சிறிது குறை இருந்தாலும் அவளைத்தான் ஒரு பாட்டம் திட்டித் தீர்ப்பான்.


சாய்ராமுக்கு மூன்று அண்ணன்கள், ஒரு அக்கா. அவன் கடைக்குட்டி. அதனால் அவனது அம்மா அவனுக்கு அதிக செல்லம் கொடுத்து, தனது சேலைத் தலைப்பிலேயே முடிந்து வைத்து வளர்த்து, அவனை அம்மா பிள்ளையாக ஆக்கிவிட்டாள். திருமணமான பிறகு கூட அவனுக்கு பெட் காபி முதல் ராத்திரி படுக்கை விரித்துக் கொடுப்பது வரை அவனது அம்மாதான். அவற்றை மேனகா செய்தால் சாய்ராமுக்கும் பிடிக்காது; மாமியாரும் மல்லுக்கு வருவாள்.

“அவனுக்கு நான்தான் அம்மாங்கறத மறந்தறாத. இதெல்லாம் நான் செஞ்சாத்தான் அவனுக்குப் புடிக்கும். பெட்ரூம்ல மட்டும்தான் நீ அவனுக்குப் பொண்டாட்டி. அதுக்கு வெளிய அவனுக்கும், எனக்கும், இந்த வீட்டுக்கும் நீ ஒரு வேலைக்காரி; அவ்வளவுதான்!” என்று டிபிக்கல் மாமியாராக இவளை அடக்கி ஒடுக்கி வைத்திருந்தாள்.

இவர்களுக்குக் கால்கட்டு போடப்பட்ட இரண்டாவது ஆண்டில் அவளுக்குக் கால் பெருவிரல்கட்டு போட்ட பிறகுதான் அந்தச் செயல்கள் யாவும் இவளின் பொறுப்புக்கு வந்தன. ஆரம்பத்தில் அது இவளுக்கு மகிழ்ச்சியும் பெருமையும் தருவதாக இருந்தது. நீண்ட காலமாகத் தனக்கு வராமல் இருந்த உயர் பதவி கிடைத்துவிட்டது போன்ற பூரிப்பு. தனது ஜென்ம விரோதியான மாமியார் ஒழிந்துவிட்ட களிப்பு.

அப்போதெல்லாம் காலையில் சாய்ராமை செல்லம் கொஞ்சியும், கெஞ்சியும், சிருங்காரச் சேட்டைகள் செய்தும் கூட எழுப்புவது வழக்கம். பாத்ரூம் ரொமான்ஸ்கள், உணவை அவனுக்கு ஊட்டி விடுவது, அவன் சாப்பிடும்போது அவனிடம் தனக்கும் ஒரு வாய் ஊட்டிவிடச் சொல்லி ‘ஆ’ காட்டுவது என்று எல்லாமும் பிடித்துத்தான் இருந்தது.

ஆனால் போகப் போக, தானாக செய்யக் கூடிய சிற்சிறு காரியங்களையும் அவனாக செய்துகொள்ளாமல் இவளைச் செய்ய வைப்பது அலுப்பாகி, எரிச்சலாகி, கடுப்பாகி, இப்போது தாங்க முடியாத பாரமாகவே ஆகிவிட்டது. அது தவிர அவனது ஏச்சுகள், வசவுகள் ஆகியவற்றை சகித்துக்கொள்ளவும் முடிவதில்லை. அதனால்தான் விட்டு விடுதலையாகத் தீர்மானம்.

அது குறித்து பெற்றோரிடம் தெரிவித்துவிட்டுச் செய்யலாம் என்பதற்காகவே அம்மாவை அழைத்து வரச் சொல்லியிருந்தாள். ஐம்பது நிமிடப் பேருந்துப் பயண தூரம்தான் என்பதால் அவளும் அடுத்த இரண்டு மணி நேரத்துக்குள் இறக்குமதியாகிவிட்டாள்.

“விவாகரத்து – கிகாரத்துன்னு நீ சொல்லவுந்தான் சீரியலைக் கூட பாதில உட்டுட்டு அடிச்சுப் புடிச்சு வந்தேன். இருந்தாலும் உங்கப்பாகிட்ட அதைப் பத்தி ஒண்ணும் மூச்சுடுல. விவரம் தெரிஞ்சுட்டு அப்பறம் சொல்லிக்கலாம்னு,

‘ஒரு சின்னச் சோலி; மேனகா வீட்டுக்குப் போயிட்டு வந்தர்றன்’னு மட்டும்தான் ஃபோன்ல சொல்லீட்டு வந்திருக்கறன். விவாகரத்துப் பண்ற அளவுக்கு என்ன பிரச்சனை?” என்று அவள் கேட்கவும், மேனகா தனது பாடுகளைக் கொட்டித் தீர்த்தாள்.

“உன்னோட கஷ்டம், வருத்தம் புரியுது. ஆனா, விவாகரத்துப் பண்ற அளவுக்கு ஒண்ணும் மோசமில்ல. இது அம்மா கோண்டு. அம்மாவப் பாத்தா இடுப்புல தூக்கி வெச்சுக்கச் சொல்றது, நீதான் சோறு ஊட்டோணும், நீதான் குளிச்சுவிடோணும்னு அடம் புடிக்கறதுங்கற கொளந்தைகளாட்டத்தான். அப்பறம், ஆம்பளைகளுக்கே இருக்கற மண்டக் கனம். தேவையில்லாத சின்னச் சின்ன வேலைகளை செய்யறதை நிறுத்து. பெட் காப்பில ஆரம்பிச்சு, எதெது உனக்குப் புடிக்கிலயோ, அதையெல்லாம் செய்யாத. வார்த்தை பேசுனா நீயும் திருப்பிப் பேசு. பெட் ரூம்ல பட்டினி போடு. தானா வளிக்கு வந்துருவாரு” என அனுபவோபதேசம் செய்தாள்.

“ஏம்மா,… இதெல்லாம் செரிப்பட்டு வருமா? இதுலல்லாம் திருந்துவாருன்னா நெனைக்கற?”

“சாம, தான, பேத, தண்டம்னு இருக்குதல்ல! அப்புடித்தான், மொதல்ல சமாதானமாப் பேசிப் பாக்கணும். அது செரியாகலன்னா அடுத்தடுத்த கட்டத்துக்குப் போக வேண்டீதுதான். எதுலயுமே ஒத்துவர்லீன்னாத்தான் விவாகரத்துக்குப் போகோணும். உங்கப்பா கூட கல்யாணமான புதுசுல ரொம்ப மொரடராத்தான் இருந்தாரு. ஆரம்பத்துல அவுரு என்னைய எவ்வளவு கொடுமைப்படுத்தியிருக்கறாரு தெரியுமா? மாட்டை அடிக்கற மாற அடிப்பாரு. அப்பறம் நாந்தான் திருத்தி வளிக்குக் கொண்டுவந்தேன். அப்பறம்தான் அவரு, நான் கோடு போட்டாத் தாண்டாத அளவுக்குப் பொண்டாட்டிதாசனா ஆனாரு” என்று இன்னும் உபதேசித்து, மதிய உணவையும் சாப்பிட்டுவிட்டு விடைபெற்றாள்.


அடுத்த நாளிலிருந்து சரித்திரம் மாறியது.

காலைகளில் சாய்ராமை எழுப்பவில்லை. அதனால் ஒன்பது – பத்து மணி வரை தூங்கி, தாமதமாக அலுவலகம் சென்று, சில நாட்கள் மெமோ வாங்கினான். பிறகு அலைபேசியில் அவனே அலாரம் வைத்து நேரத்துக்கு எழுந்துகொண்டான்.

“பல்லு வெளக்கீட்டு வந்தாத்தான் காப்பி” எனக் கண்டிப்பாக சொல்லிவிட்டாள்.

பற்பசை, பற்தூரிகை எடுத்துத் தரக் கேட்டபோது, “ஏழு மலை, ஏழு கடல் தாண்டிப் போக வேண்டீதில்ல. பாத்ரூமு, டாய்லெட்டுக்குப் பக்கத்துலயேதான் இருக்குது. அங்கதான் பேஸ்ட்டும் ப்ரஸ்சும் இருக்குது. தேவைன்னா எடுத்துப் பல்லு வெளக்குங்க. இல்லாட்டிப் பல்லு வெளக்காமயே ஆஃபீஸ் போங்க” என்றாள்.

முதுகு தேய்க்க முதுகு தேய்ப்பான் ப்ரஷ் வாங்கிப் போடப்பட்டிருந்தது.

“உங்க பேன்ட் – சட்டையை நான் எங்கயோ மலங்காட்டுக்குள்ள கொண்டுப் போயி ஒளிச்சு வெக்குல. பீரோவுலதான் இருக்குது. உங்குளுக்கு வேணுங்கறதை நீங்களே எடுத்துக்கலாம். இல்லேன்னா, லுங்கி – பனியனோடவே ஆஃபீஸ் போறதுன்னாலும் சரி” என்றுவிட்டாள்.

சாப்பிடும்போது கணவனையும் மகளையும் ஒன்றாக இருத்தி, தேவையானவற்றைப் பரிமாறி, பக்கத்தில் பாத்திரம் பண்டங்களை வைக்கப்பட்டது. “எல்லாம் இதுல இருக்குது. வேணுங்கறதை எடது கைல எடுத்துப் போட்டு சாப்புடுங்க. எப்புடி எடுக்கறதுன்னு தெரியிலீன்னா, உங்க மக எப்புடி எடுக்கறான்னு பாத்து, அதே மாதிரி எடுத்துப் போட்டுக்கங்க” என்றுவிட்டு, “எனக்கு வேற வேலை இருக்குது” என்றோ, தலை வலி, இடுப்பு வலி என்றோ சொல்லிவிட்டுப் போய்விடுவாள்.

சாயந்திரம் வழக்கம் போல வரவேற்பு. ஆனால், “சட்டை, பேன்ட் நீங்களே ஹேங்கர்ல மாட்டிக்கலாம், இல்லன்னா, அதுக்கு ஒரு வேலைக்காரனை வெச்சுக்கங்க” என்ற அலட்சியம்.

காஃபியோ டீயோ கிடைக்கும். ஆனால், தொலைக்காட்சியை அவனேதான் போட்டுக்கொள்ள வேண்டும்.

“வேணும்கற சேனல் பார்க்கறக்கும், சவுண்டு கூட்டிக் கொறைக்கறக்கும் உங்களால முடியாதா? அதுக்கும் நானே வேணுமா? இருந்த எடத்துலருந்தே அதைப் பண்றக்குத்தான ரிமோட் இருக்குது? கொட்டிக்கறக்கு நான் ஆக்கி, அரிக்க வேண்டாமா? எட்டு மணியாச்சுன்னா சாப்படறக்கு ஆச்சா, ஆச்சான்னு கேக்க ஆரம்பிச்சுருவீங்களே…! எனக்கென்ன ஆயரம் கையா இருக்குது?”

இரண்டு வாரங்களாக இரவு சிக்னலும் இல்லை.

அவனுக்கு பயங்கரக் கடுப்பு. அன்று காலை ஏழு மணிக்கு எழுந்தவன், இதற்கு ஒரு முடிவு கட்டியே ஆகவேண்டும் என்று சமையற்கட்டை முற்றுகையிட்டான்.

மகளுக்கு தோசை சுட்டுக் கொடுத்துக்கொண்டிருந்தவளிடம், “ஏன்டீ,… எருமை! நீ என்னதான்டீ நெனைச்சுட்டிருக்கற? இத்தனை வருசமா ஒளுங்காத்தானடீ இருந்தே? இப்ப என்னடீ உனக்கு இவ்வளவு திமுரு, திண்ணக்கம்? ஒளுங்கு மரியாதையா பளைய மாறயே என்னைய எளுப்பறதுலருந்து, எனக்கு பெட் காப்பி குடுக்கறதுலருந்து, நைட்டு சிக்னல் வரைக்கும் நடந்துக்க. இல்லீன்னா நடக்கறதே வேற!” என மிரட்டினான்.

“இந்த உருட்டல் மெரட்டல் எல்லாம் எங்கிட்ட வேண்டாம். போயி வேலையப் பாருங்க!”

“நீ என்னடீ பெரிய இவளா? இல்ல, எவனாவது கள்ளப் புருசனை வெச்சிருக்கறயாடீ? அவன் குடுக்கற தைரியத்துலதான் இதையெல்லாம் பண்றயா? உன்னோட அரிப்புக்கு அவன் இருக்கறதுனாலதான் நைட்டு

எனக்கு சிக்னல் தர்றதில்லையா? அவன் கூடச் சேந்து என்னையும், என் மகளையும் கொன்னுபோட்டு, அவங்கூட ஓடிப் போலாம்னு ப்ளானா?”

கண்ணிமைக்கும் நேரத்தில் அவனது வாயில் சுடு சட்டுவம் பதிந்தது. உதடுகள் வெந்து பொசுங்கி, மீசை கருகிப் புகைந்தது. “அய்யோ,… அம்மா…!” என தீப்புண் வாயால் அலறியபடி பாத்ரூமை நோக்கி ஓடினான்.


மருத்துவமனைப் படுக்கையில், வாய், மூக்கு, தாடை யாவும் சேர்ந்து கட்டுப் போடப்பட்டுப் படுத்திருந்தான் சாய்ராம். வாய்ப் பகுதியருகே சிறு துளை போடப்பட்டு, குழாய் வழியே நீராகாரம் சென்றுகொண்டிருந்தது. அருகே ஸ்டூலில் அமர்ந்திருந்த மாமனார் பேசிக்கொண்டிருந்தார்.

“ஆனாட்டி நீங்க பொறந்ததுலருந்தே பொண்டாட்டிதாசன்ங்கறாப்புடி இருந்தீங்ளே மாப்ள! அப்பறம் என்னாச்சு? ஏன் இப்புடியெல்லாம்?”

அவனால் பேசவா முடியும்? ம்ம்,…ம்ம்… என முனகியவாறே, எல்லாம் கடவுள் செயல் என்பது போல சைகை காட்டினான்.

“அவுங்கம்மாவும் இப்புடித்தான் மாப்பள. சாதுன்னா சாது அப்புடி சாதுவா இருந்தா. நானப்பத் தண்ணியும் போடுவனுங்ளா,… மப்புல அடி – ஒதை நொக்கியெடுத்துருவேன். அஞ்சு வருசம் அதையத் தாங்கிட்டு, ரெண்டு புள்ளையும் பெத்துப் போட்டா. அப்பறம் ஒரு நாளு நான் குடுமியப் புடிச்சு மொத்தீட்டிருக்கீல, கவட்டைக்குள்ள கால்ல ‘ஒர்ர்ரே’ ஒரு எத்து எத்துனா பாருங்க,… சோலி முடிஞ்சுது! குடும்பக் கட்டுப்பாடு ஆப்பரேசன் பண்ண வேண்டிய தேவையே இல்லாமப் போயிருச்சு. ஹ்ம்ம்ம்,… அதுக்கப்பறம் நானெங்க அவளை அடிக்கறது? அவ என்னைய மிதிக்காம இருந்தாச் சேரின்னு, அவளுக்குக் கோயல் கட்டிக் கும்படாத கொறையா, பொண்டாட்டிதாசனா ஆயிட்டேன்…”

ஏய்யா,… இதை மொதல்லயே சொல்லக்குடாதா என்பதைச் சொல்ல முடியாமல் பரிதாபமாக அவரைப் பார்த்தான்.

அவரோ, “நீங்க என்னையாட்டங்கறது மொதல்லயே தெரியும், மாப்ள. மேனகா, அவுங்கம்மாளாட்டங்கறது இப்பத்தான் தெரியுது. புலிக்குப் பொறந்தது பூனையாகுல. இருந்தாலும், தாய் அளவுக்கு இல்ல. அவுங்காத்தாளோட அடி, என்னா அடீங்கறீங்க…! எத்துன எத்துல வெங்கலமே வெந்து உருகீருச்சுன்னா சாமானியமா?” என சிலாகித்துக்கொண்டிருந்தார்.

– மெட்ராஸ் பேப்பர், 15-01-23.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *