இராவணாகாரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 6, 2025
பார்வையிட்டோர்: 54 
 
 

(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

திருவல்லிக்கேணிப் பகுதி முழுதும் ஒரே பரபரப்பாய் இருந்தது. ஆங்காங்கு மக்கள் மூவர் நால்வராகக் கூடிநின்று பேசிக்கொண்டிருந்தனர். “என்ன ஆகுமோ? ஏது ஆகுமோ?” என்ற அச்சம் சிலர் முகங்களில் காணப்பட்டது. 

“தம்பியப்பா வருகிறாராமே?” 

“சும்மாவா வருகிறார்? துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டல்லவா வருகிறாராம்.” 

“இந்தச் சத்தியாக்கிரகிகளுக்கு இவருடைய சங்கதி தெரி யாது போலிருக்கு.” 

“இவர்கள் இந்தக் கள்ளுக்கடைக்கு ஏன் மறியல் செய்ய வந்தார்கள்? வேறெங்காயினும் போவது தானே?” 

“இங்கு மட்டும் என்ன? எல்லா மதுபானக் கடைகளிலுந் தான் மறியல் செய்கிறார்கள்; காந்தி மகாத்மா கட்டளைப் படி.”
 
“மற்ற இடங்களில் எதுவானாலும், என்னவானாலும் நடக்கலாம். இந்தக் கிருஷ்ணாம்பேட்டை இருக்கிறதே? இது இராவணன் தர்பார் நடக்கிற இடம் ஆச்சே! இதன் கிட்டே வரலாமா?” 

”சத்தியாக்கிரகிகளுக்கு எல்லா இடமும் சமந்தான்.” 

“காந்தி ஆசாமிகள் யாருக்காகவும் எதற்காகவும் தங்கள் கடமையைச் செய்யாமல் விட மாட்டார்கள். ” 

“சாமிநாதப்பிள்ளை கடை வஸ்தாதுகள், சிலம்பம் ஆடுகிற கோதாவைக் காவலாகக்கொண்டதாச்சே ! இந்த இடத்தில் இவர்கள் அடியெடுத்து வைக்கலாமா?” 

“சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தையே கிடுகிடுக்க வைக்கிற காந்தித் தொண்டர்களா, இந்த ஆப்காரி காண்டிராக்டரின் உருட்டல் மிரட்டல்களுக்குப் பயந்து போய் விடுவார்கள் ?” 

“என்னமோ ஐயா! இந்தச் சத்தியாக்கிரகிகளுக்குப் போதாத காலந்தான் இந்தக் கள்ளுக்கடையை மறியல் செய்ய வந்திருக்கிறார்கள் என்று எண்ணுகிறேன்”. 

”பாவம்! யார் பெற்ற பிள்ளைகளோ?” 

கும்பல் கும்பலாகக் கூடியிருந்தவர்கள் தங்களுக்குத் தோன்றியவாறெல்லாம் பேசிக்கொண்டிருந்தனர். 

காந்தியடிகள் வகுத்துக் கொடுத்த நிர்மாண வேலைத்திட்டப் படி 1931-ம் ஆண்டில் பாரதம் முழுதும் மதுபானக்கடை மறியலும், விதேசித்துணிக்கடை மறியலும் மும்மரமாக நடந்து கொண்டிருந்தன. நம் தமிழகத்திலும் இது எதிரொலி செய்து கொண்டிருந்தது. 

காந்தி மகாத்மா தலைமையில் நடைபெற்று வந்த இச் சுதந்திரப் போராட்டம் இந்தியாவின் மற்றப் பகுதிகளில் தீவிரமாக நடை பெற்று வந்தது போலவே அவற்றுக்கு ஒரு படி மேலாகவே தமிழ் நாடு முழுவதிலும் தீவிரமாக நடந்து வந்தது. கள்ளுச் சாராயக் கடை டை மறியலையும், அன்னியத் துணிக்கடை மறியலையும் திறமையாகவும் தைரியமாகவும் நடத்திப் பல்லாயிரக் கணக்கான பேர் தடியடி பட்டும் ரத்தம் சிந்தியும் சிறை சென்று கொண்டிருந்தனர். 

இச்சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பின்பற்றித் தான் சத்தியாக்கிரகத் தொண்டர்கள் சிலர் கிருஷ்ணாம்பேட்டை சாமிநாதப்பிள்ளை கள்ளுக்கடையை மறியல் செய்ய வந்தனர். இங்கு தொண்டர்கள் வந்து கள்ளுக்கடையை மறியல் செய்யப் போகின்றார்கள் என்ற செய்தி எப்படியோ காட்டுத் தீப்போல் முன்னதாகவே பரவி விட்டிருந்ததால், அன்று பொழுது புலரு வதற்கு முன்னிருந்தே மக்கள் திரள் திரளாக வந்து கூடலாயினர். போலீஸாரும் தங்கள் கடமையை ஆற்றுவதற்காக ஏராளமாக வந்து இருந்தனர், “இரகுபதி இராகவ இராஜாராம்; பதிதபாவன சீதாராம்” என்று பாடிக் கொண்டே சத்தியாக்கிரகத் தொண்டர்கள் உதயவனம் முகாமிலிருந்து வந்து கொண்டிருந்தனர். “வீரசுதந்திரம் வேண்டி நின்றார். பின்னர் வேறொன்று கொள்வாரோ?”, “என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்? என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்” 

“ஜெய பேரிகை கொட்டடா”, ” கத்தி இன்றி ரத்தம் இன்றி யுத்தம் ஒன்று வருகுது”, என்பன போன்ற பாடல்களைப் பாடிக் கொண்டே வந்து சாமிநாதப்பிள்ளையின் கள்ளுக் கடையை அவர்கள் முற்றுகையிடலாயினர். 

கள்ளுக்கடை வாயிலின் முன் வரிசைக்கு இருவர் மூவராக அத்தொண்டர்கள் நின்று, கள் குடிக்க வருவோரைப் பார்த்துப் பணிவாக, “ஐயா! கள்ளு குடிக்கப் போகாதீர்கள். அது உங்களுக்குப் போதையுண்டு பண்ணி உடம்பைக் கெடுக்கும். அது மட்டுமல்ல, இந்தக் கள்ளுக்குடி உங்கள் குடியை அடியோடு அழித்துவிடும். கடைக்குள் நுழையாமல் தயவுசெய்து திரும்பிப் போய்விடுங்கள்” என்று கைகூப்பி வணக்கஞ் செய்து பணிவாகக் கேட்டுக் கொள்ளலாயினர். குடிக்க வந்தவர் சிலர் அத்தொண்டர்களுடைய வேண்டுகோளைச் செவியுற்றுத் திரும்பிப் போகலாயினர். சிலர், “யாரடா இவன்கள்? குடித்துக் கெட்டுப் போனால் உங்களுக்கு என்ன வந்தது? உங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டு போங்கடா!” என்று மூர்க்கத்தனமாகச் சொல்லிவிட்டுக் கடைக்குள் றுழையலாயினர். அப்படி நுழைபவர்களைத் தடுக்கச் சில தொண்டர்கள் அவர்களைக் கும்பிடுவது போல் தரையில் குறுக்கே விழுந்து வழி மறிக்கலாயினர். இது கண்ட சில குடியர்கள் அவர்களுடைய வழி மறிப்பு வேண்டுதலை மீற மனமில்லாமல் திரும்பிப் போகலாயினர். சிலர் சத்தியாகிரகிகளை லட்சியம் செய்யாமல் அவர்களைத் தாண்டிக் கொண்டும், மிதித்துக் கொண்டும் கடைக்குள் நுழையலாயினர். 

இக்காட்சியை உள்ளிருந்து கவனித்துக் கொண்டிருந்த கள்ளுக்கடை தலைமை குமாஸ்தா கைலாசப் பிள்ளை, “யாரடா இங்கே? சண்டித்தனம் செய்யும் இந்தக் காந்திப் பசங்களை இழுத்துக் கொண்டு போய் வெளியே தள்ளுங்கடா! கடைக்கு வருகிறவர்களை வழி மறிக்கிறான்கள்” என்று கோபத்தோடு கொக்கரிக்கலானார். இது கேட்டுக் கள்ளுக்கடை அடியாட்களும் குடிகாரர்கள் சிலரும், “ஆய் !…யார்றா நீங்க? மருவாதையா போறீங்களா? இல்லே; உங்க லூட்டியை அறுத்து எறிஞ்சுடட்டுமா?” என்று கத்திக்கொண்டு வெளிவர முயன்றனர். 

இதுவரை நிலைமையைக் கவனித்துக் கொண்டிருந்த போலீஸ் காரர்கள் நிலைமை கட்டுமீறிப் போய்விடக் கூடாது என்று எண்ணி, “ஏய்! நீங்க சும்மா இருங்கய்யா” என்று உள்ளிருப் பவர்களைப் பார்த்து அதட்டிவிட்டுச் சத்தியாக்கிரகிகளை நோக்கி, “தொண்டர்களே! உங்களுக்கு இரண்டு நிமிஷம் அவகாசம் தருகிறோம். இதற்குள் நீங்கள் இவ்விடத்தைவிட்டுக் கலைந்துபோய் விடுங்கள். கள்ளுக் கடைக்கு வருபவர்களை வழி மறித்து நிறுத்த முயல்வது சட்டப்படி பெருங்குற்றமாகும், இதை நாங்கள் அனுமதிக்க முடியாது. மரியாதையாகப் போய் விடுங்கள்” என்று உத்திரவிடலாயினர். 

சத்தியாக்கிரகிகள் இதைச் செவியேற்கவே இல்லை. மறியல் செய்வதிலேயே கண்ணுங் கருத்துமாயிருந்தனர். கள்ளுக்கடை தலைமைக் குமாஸ்தாவிற்குக் கோபம் மிகுந்தது. அவருடைய மதுரை வீரன் மீசை துடிக்கலாயிற்று. அவர் போலீஸ்காரர் களைப் பார்த்து, என்னய்யா, கான்ஸ்டபிள்களே! நீங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள், இந்தப் பிச்சைக் கார நாய்களை இழுத்து வெளியே போடாமல் ‘” என்று முழக்க மிட்டார். போலீஸ்காரர்களும் பொறுமையிழந்து விட்டனர். கடை குமாஸ்தாவின் மரியாதையற்ற பேச்சு அவர்களுக்கு உணர்ச்சியை உண்டு பண்ணியது. சப்-இன்ஸ்பெக்டர் தன் கை யில் உள்ள குறுந்தடியை ஒருவிதமாக ஆட்டிக் கண் சைகையால் கான்ஸ்டபிள்களுக்குக் குறிப்புக் காட்டினார். உடனே கான்ஸ் டபிள்கள், தொண்டர்கள் இருக்குமிடத்திற்குப் பாய்ந்து, ”ஊம் போங்கள், கடைக்குமுன் நிற்காதீர்கள். வழியை மறிக் காதீர்கள் என்று உரத்த குரலில் கூறியவாறு மறியல் செய்து கொண்டிருந்த சத்தியாக்கிரகிகளைத் தாங்கள் வைத்திருந்த குண்டாந்தடிகளால் முரட்டுத்தனமாகத் தள்ளிவிடலாயினர். தரையில் விழுந்திருந்தவர்களையும் தூக்கி நிறுத்தித் தள்ளிவிட லாயினர்; ஆனால், போலீஸாரின் இந்தக் கெடுபிடிகளுக்குச் சத்தியாக்கிரகத் தொண்டர்கள் சிறிதும் அஞ்சவில்லை. அவர்கள் மறுபடியும் வந்துநின்று அமைதியாக மறியல் செய்யலாயினர். இது கண்டு ஒரு கணம் திகைத்துப்போன போலீஸார் அடுத்து தங்கள் குண்டாந்தடியைச் சுழற்றி அவர்களை விரட்டலாயினர். இதனால், சத்தியாக்கிரகிகள். சிலருக்குத் தடியடி விழலாயிற்று; சிலர் காயமுற்றனர். 

இது போன்ற துவந்துவ யுத்தம் வேடிக்கை பார்க்க வந்த பொது மக்களையும் ஆவேச உணர்ச்சி கொள்ள வைத்தது. இதற்குள் சிலர், சத்தியாக்கிரகத் தொண்டர்கள்வந்து கள்ளுக் கடையை மறியல் செய்வதையும், அதனால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையையும் கள்ளுக்கடை முதலாளியான சாமிநாதப் பிள்ளைக்குத் தகவல் சொல்லலாயினர். சிலர் முதலாளியின் தம்பியிடமும் முறையிட்டனர். முதலாளியோ இந்நிலைமையை எப்படிச் சமாளிப்பது என்று யோசிக்கலானார். “தம்பியப்பா எனச் செல்லமாக அழைக்கப்படும் முதலாளி யின் தம்பியான சௌந்தரராஜப் பிள்ளை மட்டும் சத்தியாக் கிரகிகள் தங்கள் கடையை மறியல் செய்ய வந்திருக்கும் செய்தி கேட்டுக் கோபத்தால் குதிக்கலானார். “யாரடா அது? நம்ம கடையை வந்து மறியல் செய்வது? அவ்வளவு நெஞ்சுத் தைரியமுடையவர்களும் இருக்கிறார்களா? அவர்களுக்கு நம்ம சங்கதி தெரியாது போலிருக்கு. இதோ வருகிறேன் என்று சொல்லு” என்று முழங்கிக் கொண்டே பெரிய மலை போன்ற தம் உடம்பைத் தூக்கிக் கொண்டு வேகமாகப் புறப்படலானார். அடுத்த கணம் அவர் கையில் துப்பாக்கி இடம் பெற்றது: அவருடன் அவருடைய பரிவாரங்களும் கிளம்பலாயினர்: அக்கம் பக்கத்து மக்களும், “தம்பியப்பா கோபத்துடன் கிளம்பி விட்டாரே! என்ன விபரீதம் நடக்கப் போகிறதோ?” என்ற அச்சத்துடன் அவர்கள் பின்னால் நடந்தார்கள். 

சாமிநாதப் பிள்ளையின் வீட்டிற்கும், கள்ளுக் கடைக்கும் மூன்று பர்லாங்கு தூரம்கூட இருக்காது. அவர் இருக்கும் தெருவிற்கு அடுத்த திருப்பத்தில்தான் கள்ளுக்கடை இருந்தது. கடையை அடுத்தாற் போலவே 10 கஜ தூரத்தில் ஐஸ்ஹவுஸ் போலீஸ் ஸ்டேஷன் இருந்தது. ஆனால், அது திருவல்லிக்கேணி பகுதிக்கு மட்டுமே உரியது. கிருஷ்ணாம்பேட்டை பகுதிக்குப் பொறுப்பான போலீஸ் ஸ்டேஷன் இராயப்பேட்டை நெடுஞ் சாலையில் இருந்தது. 

இந்தக் கள்ளுக்கடை மறியலால் ஏற்படும் நிலைமையைச் சமாளிக்க இராயப்பேட்டை போலீஸார்தான் வந்திருந்தனர். ‘ஐஸ்ஹவுஸ் ‘ போலீஸ் ஸ்டேஷனைச்சேர்ந்த போலீஸார் இவர் களுக்கு உதவியாக இருந்தனர். இவர்களை மேற்பார்க்கவும் மறியல் நிலைமையைக் கண்காணிக்கவும் டிபுடி கமிஷனர் ஒருவர் வந்திருந்தார். இதுவன்றி இண்டலிஜன்ஸ்’ டிபார்ட்மெண்ட்டைச் சேர்ந்த சி. ஐ.டிக்கள் சிலரும் உத்தியோக உடுப்பின்றி கூட்டத் தோடு கூட்டமாக நின்று நடப்பதைக் கவனித்துக் கொண்டிருந்த னர். இந்தச் சி.ஐ.டிக்களில் ஒருவர் சத்தியாக்கிரகப் படைத் தளபதி ஒருவரைக் குறிப்பாகப் பார்த்துக்கொண்டிருந்தார். இதைத் தற்செயலாகக் கவனித்துவிட்ட அத்தளபதி அந்தச் சி.ஐ.டியை உற்றுப் பார்த்துவிட்டு, “யார் அனந்தனா? நீ இங்கேயாப்பா இருக்கே ? ஊரிலிருந்துவந்து எவ்வளவு நாளாச்சு? என்ன செய்துகொண்டு இருக்கே ? ” என்று உரத்தகுரலில் கேட்டார். தன்னை இன்னார் என்று காட்டிக்கொள்ளக் கூடாது என்று எச்சரிக்கையாய் இருந்த அந்தச் சி.ஐ.டி. தளபதியின் குரலைக்கேட்டுத் திடுக்கிட்டுப் போனார். பின் தன்னைச் சுதாரித் துக் கொண்டு “ ஓ ! பத்மநாப அண்ணனா? நான்…நான்…” என நிறுத்திப் பின், “ நீங்களும் இங்கே தான் இருக்கிறீங்களா? திருச்சூரிலிருந்து எப்போது வந்தீங்க? எங்கே இருக்கீங்க ? ‘ எனக் கேட்டார். “போனவாரம் தான் வந்தேன். சத்தியாக் கிரகப் படையில்சேர்ந்து மறியல் செய்வதற்காக குருவாயூர் தலைவர் கேளப்பன் என்னை அனுப்பியிருக்கிறார்…” எனச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே கூட்டம் நெருக்கியடித்துக் கொண்டு வந்து அவர்களை மோதித்தள்ளிப் பிரித்து விட்டது. 

கரிய பெரிய மலை அசைந்து வருவதுபோல் ஆடி அசைந்து வந்து கொண்டிருந்த தம்பியப்பா, கள்ளுக்கடையை நெருங்க நெருங்க மக்களிடையே பரபரப்பு அதிகமாகிக் கொண்டிருந்தது. அவர் வழி நெடுகிலும் மறியல்செய்ய வந்திருக்கும் சத்தியாக் கிரகத் தொண்டர்களைப் பற்றி வாய்க்கு வந்தவாறு வசைமாரி பொழிந்து கொண்டே வந்தார். இப்பேச்சு கேட்போர் சிலருக் குக் கேலியாகவும் இருந்தது; பயம் ஊட்டுவதாகவும் இருந்தது. அவர் கையில் வைத்திருந்த துப்பாக்கி பொதுவாக எல்லாருக் குமே அச்சத்தை ஊட்டியது. 

இதற்கிடையே சத்தியாக்கிரகத் தொண்டர்கள் போலீஸா ரின் கெடுபிடியையும், தடியடியையும் பொருட்படுத்தாமல் அணியணியாக வந்து மறியல் செய்துகொண்டு இருந்தனர். இதற்குள் ஏறக்குறைய 20 தொண்டர்கள் கைது ஆகி போலீஸ் வேனில் ஏற்றப்பட்டு இருந்தனர். இப்போது ஆறாவது தொண்டர் படை, தளபதி பத்மநாபன் தலைமையில் மறியல் செய்து கொண்டிருந்தது. இந்தச் சமயத்தில் கள்ளுக்கடைக்கு முன் இருந்தவர்கள் இடையே சலசலப்பு ஏற்படலாயிற்று. அதோ தம்பியப்பா வருகிறார். சின்ன முதலாளி வந்து விட்டார்” என்று சிலர் பதட்டக் குரலில் கூறினர். உடனே அங்கிருந்தோர் கிழக்கு திசையை நோக்கித் திரும்பிப் பார்த் தனர். தம்பியப்பா முன்வர அவருக்குப் பக்கத்திலும், பின்னாலும் பெருங்கூட்டம் வந்து கொண்டிருந்தது. 

இதைக் கண்டதும் போலீஸார் திடுக்கிடலாயினர். ஆனால் சத்தியாக்கிரகத் தொண்டர்கள் சிறிதும் பதட்டம் அடைய வில்லை. வழக்கம் போலவே அவர்கள் அமைதியாகக் கள்ளுக் கடைக்கு வருவோரிடம் வேண்டுகோள் விடுத்தவாறு மறியல் செய்து கொண்டிருந்தனர். “யாரடா அது ? அங்கே? எங்கள் கடையை விட்டுப் போகப் போகிறீர்களா? இல்லையா?’ என்று தம்பியப்பா போட்ட அதட்டல் குரல்கூட அவர்களை அசைத்திட வில்லை. தன்னுடைய வருகையும் அதட்டலும்கூட சத்தியாக் கிரகிகளைச் சிந்தை கலங்க வைக்கவில்லை என்று அறிந்ததும், தம்பியப்பாவின் ஆத்திரம் அதிகமாய் விட்டது. அவர் காற்றி னும் கடிய வேகமாகச் சத்தியாக்கிரகிகள் இருக்குமிடத்தை நோக்கித் தாவி வந்தார். இதற்குள் போலீஸ் அதிகாரிகள் அவருக்குக் குறுக்காக வந்து நின்று, ‘சல்யூட்’ அடித்து மரியாதை செய்தவாறு, நீங்கள் போங்கள் சார்! உங்களுக்குச் சிரமம் எதற்கு? நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் ” என்று சொன்னார்கள். 

“சரிதானய்யா! உங்கள் பவிசு தான் இதோ தெரிகிறதே ! கேவலம் இந்தக் காந்தி குல்லாக்காரன்கள் போலீஸ்காரர்களா கிய உங்களுடைய பௌருஷத்தைப் போக்கிவிட்டு உங்களைப் பிள்ளைப்பூச்சிகளாக்கி விட்டார்களே ! உங்களைக் கண்டால் துடை நடுங்கி ஓடி ஒளிய வேண்டியவர்கள் அவர்கள். ஆனால் இப்போது நீங்கள் சோற்றுக்கு இல்லாத இந்தக் காந்தி தொண் டர்களைப் பார்த்து நடுங்கிச் சாகிறீர்கள். சரிதான், போங்கள் வழிவிட்டு, நான் இவர்களைக் கவனித்துக் கொள்கிறேன். உங்க ளுடைய உதவியொன்றும் எனக்கு வேண்டியதில்லை”, என்று வீராப்பாகக் கூறிவிட்டு முன்னோக்கிப் போகலானார். போலீஸ் அதிகாரிகள் இவருடைய ஆணவப் பேச்சைக் கேட்டு அதிர்ந்து போய் நின்றனர். டிபுடி கமிஷனர் சிந்தனையுடன் அவ்விடத் தினின்றும் மெல்ல அகன்றார். கள்ளுக்கடை முன் குழுமியிருந்த மக்கள் கூட்டம் பயபக்தியுடன் தம்பியப்பாவுக்கு வழிவிட்டு ஒதுங்கி நிற்கலாயிற்று. 

சத்தியாக்கிரகிகளின் மறியலைக் கண்டு தயங்கி வெளியே நின்றிருந்த குடிகாரர்கள் சிலர் சின்ன முதலாளியின் வருகை யால் தைரியம் அடைந்து வேண்டுகோள் விடும் தொண்டர்களை விலக்கிக் கொண்டும், தரையில் படுத்திருக்கும் தொண்டர்களை மிதித்துக் கொண்டும் கள்ளுக்கடைக்குள் ‘ திமு திமு’வெனப் புகுந்தனர். இவர்களிடையே தம்பியப்பா துப்பாக்கியுடன் குறுக்கே பாய்ந்து, “டேய், வயிற்றுச் சோற்றுக்கு வக்கற்ற சோம்பேறிப் பசங்களே ! எங்கள் கடையை விட்டுப் போகிறீர் களா ? இல்லையா! உங்களைத் தொலைத்து விடுவேன் தொலைத்து, ஆமாம்; சொல்லிவிட்டேன். உங்கள் உயிர்மீது ஆசையிருந்தால் உடனே போய் விடுங்கள் ‘“ என்று ஓங்கிக் கூக்குரல் இட்டார். இது கேட்டு மக்கள் கூட்டமும் போலீஸும் கதிகலங்கி நின்ற னர்: சத்தியாக்கிரகிகள் மட்டும் சற்றும் அசைந்து கொடுக்க வில்லை. இது இன்னும் தம்பியப்பாவிற்கு அதிக ஆத்திரத்தை உண்டு பண்ணியது. ‘“ என்னடா நான் சொல்லுகிறேன். சிறிதும் சட்டை செய்யாமல் அப்படியே நிற்கிறீர்களே! நான் ஏதோ வாயால் சொல்லுகிறேன் என்று நினைக்கிறீர்களா? இன்னும் ஒரு நிமிஷத்திற்குள் நீங்கள் கடையைவிட்டுப் போகவில்லையானால் பறவைகளைச் சுட்டுத் தள்ளுவதைப் போல் ஈவிரக்கமில்லாமல் உங்கள் எல்லோரையும் சுட்டுத் தள்ளிவிடுவேன்” என்று உறுமினார். அத்துடன் நில்லாமல், தம் கையில் வைத்திருக்கும் துப்பாக்கியையும் தூக்கிப் பிடித்து அவர்களுக்கு நேரே குறி பார்ப்பது போல் நீட்டினார். 

அச்சமயம் மறியல் செய்யும் தொண்டர்களை மேற்பார்வை செய்தவாறு சமயோசிதம் போல் அவர்களுக்கு உத்தரவு பிறப்பித்துக் கொண்டிருந்த தளபதி பத்மனாபன் முன்வந்து, “பிள்ளைவாள்! எங்களைச் சுட்டுத் தள்ளப் போகிறேன் என்றுதானே சொல்லுகிறீர்கள்; காந்தி மகாத்மா கட்டளைப்படி தேசசேவை செய்ய வந்திருக்கும் எங்களுக்கு இந்தக் குண்டுப் பரிசு கிடைத்தால் அளவில்லா மகிழ்ச்சியுடன் அதை ஏற்றுக்கொள்வோம்” என்று கூறி, தம்பியப்பாவிற்கு முன் நின்று தம் மார்பை நிமிர்த்திக் காட்டினார். கூட்டத்தோடு கூட்டமாக நின்று நடப்பவற்றை எல்லாம் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த சி. ஐ. டி அனந்தனுக்குப் பத்மநாபனின் செயல் துணுக்கம் உண்டாக்கிற்று. நிலைமை எப்படித் திரும்புமோ என்ற கவலையுடன் அவன் பத்மநாபன் பக்கம் நெருங்கி நின்றான். பத்மநாபனின் அமைதியான வீரப்பேச்சு தம்பியப்பாவிற்கு அவரைக்கேலி செய்வது போல் தோன்றியது. ஆகவே, அவர் இராவணாவதாரம் கொள்ள லானார். அட! துப்பாக்கிக் குண்டுக்கு முன் மார்பைத் திறந்து காட்டும் சூரப்புலியைப் பாருங்கடா! இப்படிப் பகட்டிப் பேசினால் நான் பிரமித்துப் போய்ப் பின்வாங்கிவிடுவேன் என்பது உன் நினைப்போ? அதெல்லாம் இந்த ஐயாவிடம் நடக்காது. நான் எச்சரித்திருக்கிறபடி உன் ஆட்களுடன் உடனே இவ்விடத்தை விட்டு நீ போகவில்லையானால், உங்களெல்லோரையும் சுட்டுப் பொசுக்கி விட்டு மறுவேலை பார்ப்பேன். ஜாக்கிரதை!” என்று கூறிக்கொண்டே துப்பாக்கி முனையை அவர் மார்பின் மீது வைத்து அழுத்தினார். இது கண்டு அங்கு இருந்த எல்லோருமே (சத்தியாக்கிரகிகள் உட்படப்) பயந்துவிட்டார்கள். பத்பநாபனுக்குப் பக்கத்திலிருந்த அனந்தன் மட்டும் அச்சத்துக்கு இடங் கொடாது, திடீரெனப் பாய்ந்து தம்பியப்பாவின் கையிலிருந்த துப்பாக்கியைத் தட்டிவிட்டான். அத்துடன் நில்லாமல், அவன் கண்மூடிக் கண் திறப்பதற்குள் தன்னுடைய மேல் துண்டை யுருவியெடுத்துத் தம்பியப்பாவின் கழுத்தில் போட்டுக் கைகளோடு சேர்த்துப் பிடித்துக்கொண்டான். இதுகண்டு ஆஹா…ஹா என்ற பயப்பீதி ஒலி எல்லோரிடமிருந்தும் எழலாயிற்று. போலீ ஸார் உட்பட எல்லோரும் பிரமைபிடித்து நின்றுவிட்டனர். சில விநாடிகள் கழித்து ஒரு கான்ஸ்டபிள் மட்டும் தூரப்போய் விழுந்து கிடந்த துப்பாக்கியை ஓடிச்சென்று தூக்கிக்கொண்டான். 

இராவணன் போல் வணங்காமுடியான தம்பியப்பா இவ்வித மான நிலையைச் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. நிமிர்ந்து நின்று தன் விருப்பம்போல் எதையுஞ் செய்து அவர் பழக்கப்பட்டவர் அவருக்குத் தடையெதுவும் ஏற்பட்டு அனுபவமில்லை. அவர் பிறரைத் தட்டிக் கேட்டு ஆணையிட்டதைத் தவிர அவரை இதுவரை யாரும் தட்டிக்கேட்டு அறிந்தவரில்லை. இப்போது இங்கும் தன்னை யாரும் தட்டிக் கேட்கமாட்டார்கள் என்று கருதியிருந்த அவருக்கு ஸி. ஐ. டி அனந்தனின் தீரச்செயல் திடுக்காட்டத்தை யுண்டுபண்ணியது. அவர் தன் கையிலிருந்த துப்பாக்கியைத் தட்டிவிட்டதோடு, ஒருவன் தன்னையும் துணி போட்டுப் பிடித்துக் கொண்டதை உணர்ந்து பேரதிர்ச்சி கொண்டு நின்றுவிட்டார். இப்பிரமிப்பிலிருந்து தன்னை சுதாரித்துக் கொள் வதற்கு அவருக்குச் சில விநாடிகள் ஆயின. “யாரடா! அவன் என்னைப் பிடிக்கிறது? என்னைத் தொடுவதற்குக்கூட ஒருவனுக் குத் தைரியம் வந்துவிட்டதா?” என்று சொல்லிக்கொண்டே தன் தோள்களைக் குலுக்கி ஒரு உலுக்கு உலுக்கினார். இதனால் சி.ஐ.டி. அனந்தன் சிறிது நிலைகுலைந்துதான் போனான். தன் பிடி தளர்வதை உணர்ந்து திடுக்கிட்ட அவன் மிகச் சிரமத்துடன் சமாளித்துக் கொண்டு தன் பிடியை இறுக்கலானான். உதவியாக ஸி. ஐ. டி. சகாக்களும் போலீஸ்காரர்களும் வருவார் கள் என்று எதிர்பார்த்து அவன் ஏமாற்றத்தையே அடைந்தான். போலீஸார் அவனுக்கு உதவி புரியாதது மட்டுமல்லாமல் சிலர் உபதேசமும் செய்யலாயினர். 

“என்ன காரியம் செய்தாய், அனந்தன்?” 

”அவர் யார்? எப்பேர்ப்பட்ட செல்வாக்குடையவர் என உனக்குத் தெரியாதா? நம்ம இலாகா பெரிய அதிகாரிகள் கூட அவர் முன் கூழைக் கும்பிடு போடுவார்களே”. 

“அவரை விட்டு விடப்பா! வீணாக நீ ஏன் வம்பையும் ஆபத்தையும் விலைக்கு வாங்கிக்கொள்கிறாய்?” 

இது போன்ற பேச்சுக்கள் தான் அனந்தன் காதில் விழுந் தன. இது கேட்டு அவன் மனம் வேதனையடைந்தான். 

“இங்கு நேரவிருந்த ஆபத்தான நிலைமையைச் சமாளிக்க என் கடமையைச் செய்தேன். இது தவறா?” என்ற வார்த்தைகள் அனந்தனின் வாயிலிருந்து வந்தன. “S. I.க்கும், D.C.க்கும் தெரியாதா? ஏதாயினும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் அவர்கள் சொல்ல மாட்டார்களா? அதிகப் பிரசங்கித்தனமாக நீ இப்படி நடந்து கொண்டாயே?” 

ஹெட் கான்ஸ்டபிள் ஒருவர் கோபமாகச் சொன்னார். 

“டிப்டி கமிஷனர் என்ன சொல்கிறார்? கேளுங்கள்?” அனந்தன் சொன்னான். 

சில கான்ஸ்டபிள்கள் சுற்று முற்றும் பார்க்கலாயினர். 

“அவர் எங்கே இருக்கிறார்? அவர் போய் சிறிது நேரம் ஆயிற்றே!” என்றார் ஒரு கான்ஸ்டபிள். 

“ஏதோ தெரியாத்தனமாய் செய்தது செய்துட்டே. அவரை விட்டுட்டு அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளப்பா.” 

அனந்தனைப் போல உள்ள ஒரு சி. ஐ. டி சொன்னார். இதற் குள் இலாவகமாக கழுத்தை இறுக்கிப் பிடித்திருந்த துண்டை எடுத்துத் தோள்களைச் சேர்த்துப்பின் கட்டாகக் கட்டிப் பிடித்துக் கொண்ட அனந்தன் “ஊ ஹும்… நான் இவரை விட முடியாது. இவரை விட்டால் அடுத்த கணம் ஆபத்தான நிலைமை தான் ஏற்படும். பிடித்தது பிடித்து விட்டேன். இவரை ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று இன்ஸ்பெக்டரிடம் ஒப் படைத்து விடுகிறேன். அவர் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். எனக்கு அக்கறையில்லை”. 

அனந்தன் உறுதியான குரலில் சொன்னான். அவன் தம்பியப் பாவைப் பிடித்திருந்த பிடி அவனுடைய சொல்லைப் போலவே அழுத்தமாயிருந்தது. 

போலீஸாருக்கும் மற்றவர்களுக்கும் திகைப்பு அதிக மாயிற்று. 

மற்றவர்களைப் போலவே திகைத்துப் போய்ச் செயலற் றிருந்த பத்மனாபன் இச்சமயம் அனந்தனை நோக்கி ஏதோ சொல்ல வாயெடுத்தார். 

அதற்குள் அனந்தன் தம்பியப்பாவைப் பிடித்துத் தள்ளிக் கொண்டு போலீஸ் வேனை நோக்கிச் சென்றான். ஆஜானுபாகு வான தம்பியப்பா அவனுடைய பிடியிலிருந்து விடுபட எப்படி யெப்படியோ திமிறிப் பார்க்கலானார். அவருடைய ஜம்பம் ஒன்றும் சாயவில்லை. அவன் பிடி உடும்புப் பிடிபோல் இரும்புக் கணக்காய் இருந்தது. 

எங்கோ போய்விட்டு வந்த சப்-இன்ஸ்பெக்டர், அனந்தன் தம்பியப்பாவை மேல் துண்டினால் இரு கரங்களையும் பின் கட்டாக இறுக்கிக் கட்டித் தள்ளிக்கொண்டு போவதைப் பார்த்துவிட்டு, அனந்தன் ! என்ன காரியம் செய்துட்டே! நீ?” என வியப்பும், விதிர்ப்பும் மேலிடக் கூறினார். 

“என் கடமையைச் செய்தேன் சார்” எனச் சொல்லிக் கொண்டே திரும்பிப் பாராமல் போகலானான். ஒரு கான்ஸ்டபிள் அவன் காதருகே சென்று, “நீ பலே ஆளப்பா! உன் தைரியத்தைப் பாராட்டுகிறேன்” என்றான். 

“உங்க பாராட்டுக்கு நன்றி ஐயா ! எனக்குத் தைரிய முண்டாக்கியது சத்தியாக்கிரகப் படைத் தளபதியின் அஞ்சா நெஞ்சம்தான். கள்ளுக் கடைக்காரரின் குண்டுக் குறிக்கு ஆளாக இருந்த அவர் எங்கள் ஊர்க்காரர். மலையாளி” என்று அனந்தன் உற்சாகமாகச் சொன்னான். 

“ஓ! அப்படியா சங்கதி !” என்ற கான்ஸ்டபிள், “எது காரணமாக இருந்தாலும், நீ இப்பொழுது செய்துள்ளது அபாரச் செயல் ஆகும்” என்று கூறிவிட்டு நகர்ந்தான். 

கடைசியாக, அனந்தன் போலீஸ் வேனண்டை சென்று, “கொஞ்சங் கதவைத் திறவுங்கள், ஐயா!” என்று கூறினான். 

பிரமிப்புடன் வேடிக்கை பார்த்துக் கொண்டு, போலீஸ் வேனில் ஏற்றியிருந்த தொண்டர்களைக் காவல் புரிந்து கொண்டி ருந்த போலீஸார் அனந்தன் அதிகாரத் தோரணையோடு கதவைத் திறக்குமாறு கூறியதைக் கேட்டுச் சிறிதுந் தயங்காமல் கதவைத் திறந்து விட்டனர். உடனே அனந்தன் தம்பியப்பாவின் முதுகில் தட்டி, ”ஊம்; வண்டியில் ஏறுங்க” என்று சொல்லித் தோள் களைக் கட்டியிருந்த துணியை இறுக்கித் தூக்கித் தள்ளினான். எப்படியும் விடுபட முடியாத நிலையில் வேறு வழியின்றித் தம்பி யப்பா வண்டியில் ஏறினார். அனந்தனும் ஏறலானான். இச்சம யத்தில் சில போலீஸ்காரர்கள் ஓடிவந்து வேனில் ஏறிக் கொண் டனர். அனந்தன் கதவைச் சாத்திக் கொண்டு, ” 251! வேனை இராயப்பேட்டை ஸ்டேஷனுக்கு ஓட்டு ! இல்லை…இல்லை, போலீஸ் கமிஷனர் ஆபீஸுக்கு ஓட்டு என்று கூறினான். டிரைவர் கான்ஸ்டபிள் ; வேனில் இருந்த மற்றக் கான்ஸ்டபிள் களை ஒரு விதமாகப் பார்த்துவிட்டு வண்டியை வேகமாக ஓட்ட லானான். சத்தியாக்கிரகிகளான தங்களைச் சிறை செய்து செல் வதற்காக வந்த போலீஸாரில் ஒருவன், கள்ளுக்கடைச் சொந்தக் காரனொருவனையே கைது செய்து கொண்டு வந்த அதிசயத்தைக் கண்டு தொண்டர்கள் மகிழ்ச்சியாரவாரம் செய்யலாயினர். இந்த உற்சாகத்தில் அவர்கள் “பாரத மாதாகி ஜே! மகாத்மா காந்திக்கு ஜே! ” என ஜே கோஷம் போடலாயினர். 

இதுவரை மந்திரத்தால் கட்டுண்ட பாம்பைப் போல் உணர் வற்று, நடப்பதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த மக்கள் கூட்டம் போலீஸ்வேன் போனதும் பரபரப்படைந்து பலவிதமாகப் பேசிக் கொள்ளலாயினர். 

தங்கள் சின்ன எஜமானையே ஒரு சி ஐ.டி. கட்டிப் பிடித்து விட்டானே என்ற பயப்பிரமையால் செயலற்று இருந்த கள்ளுக் கடையாட்களும், குடிகாரர்களும் ஆளுக்கு ஒருவிதமாகப் பேசி ஆர்ப்பரிக்கலாயினர். கடைத் தலைமைக் குமாஸ்தா ஒரு சி.ஐ.டி. தம்பியப்பாவைப் பிடித்துக் கொண்டு போன செய்தியை முதலாளியிடம் போய்ச் சொல்ல சிப்பந்திகள் சிலரை ஏவினார். சிலர் வெளியே வந்து ‘ஆய்…ஊய்…’ என்று கூவி விகாரமாகக் கை கால்களை ஆட்டலாயினர். எஞ்சியிருந்த போலீஸார், பிரமை பிடித்துப் போய் நின்றிருந்த சத்தியாக்கிரகத் தொண்டர்களைப் பார்த்து, “இத்தோடு உங்கள் மறியலை முடித்துக் கொண்டு போங்கய்யா ! இனியும் இருந்தால் ஏதேனும் விபரீத மாகப் போகிறது” என்று மெல்லக் கூறி விட்டுக் கூட்டத்தை நோக்கி, ‘சரி… சரி ! போங்க கலைந்து” என்று அதட்டிக் கொண்டே போயினர். கூட்டம் மெல்லக் கலையலாயிற்று. அனந்தனின் துணிச்சலான செய்கையைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்த பத்மநாபன், கைது ஆகக் காத்திருந்த தொண்டர் களை நோக்கி, “சரி; வாருங்கள் நாம் முகாமுக்குப் போவோம் ’’ என்று சொல்லிக் கொண்டு அவ்விடத்தை விட்டு மேற்கே நடக்க லானார். அவர் வாய், ‘அனந்தனுக்கு ஒன்றும் நேராமல் இருக்க வேண்டும். ஆண்டவனே!’ என்று முணு முணுக்கலாயிற்று. 

– காந்தி வழிக் கதைகள் (சிறந்த தமிழ் எழுத்தாளர்கள் புனைந்த காந்தி வழி காட்டும் ஐம்பது சிறு கதைகளின் தொகுப்பு), தொகுப்பாசிரியர்: கே.ஆர்.கல்யாணராமன் “மகரம்”, முதற் பதிப்பு: மார்ச் 1969, தமிழ் நாடு காந்தி நினைவு நிதி, மதுரை-13.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *